முள்ளில் பூத்த மலரே – 35

முள்ளில் பூத்த மலரே 35

இங்கு ஆதினி அகிலனின் வீட்டிற்கு வந்து அவளது அறைக்குள் சென்று உறங்கியிருந்த நொடி, அங்கு நிலா தனது வீட்டினை அடைந்திருந்தாள்.

தனது வருகையை அறிவிக்காது திடுமென வாசலில் வந்து நிற்கும் மகளைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்தவராய், “என்னடா பொன்னம்மா, சொல்லாம கொள்ளாமா வந்து நிக்கிற?” மகளின் கையில் இருந்த பையினை வாங்கிக் கொண்டவாறு கேட்டுக் கொண்டே, “கனி பொன்னம்மா வந்திருக்கா பாரு” எனத் தனது மனைவியை அழைத்தார்.

மத்தியில் முற்றம் வைத்து சுற்றி அறைகள் அமைப்பில் பழங்காலக் கட்டிடமாய் மிளிர்ந்த அவ்வீட்டின் வாசலிலிருந்த நீரினில் கை கால்களைக் கழுவி கொண்டு உள் நுழைந்தாள் நிலா.

அதன்பின் அனைவருமாய் ஒன்றாய் அமர்ந்து இரவுணவை உண்டனர்.

“சொல்லுமா! தொழில்ல ஏதும் பிரச்சனையா? என் பொண்ணு காரணமில்லாம இப்படிச் சொல்லாம வந்து நிக்க மாட்டாளே! நீ எங்ககிட்ட ஃபோன் செஞ்சி பேசியே இரண்டு மூன்று வாரம் ஆகிடுச்சேமா” அவளின் திடீர் வருகைக்கான காரணத்தை அவர் வினவ,

“இல்லப்பா பிஸ்னஸ்லாம் நல்லா தான் போய்ட்டு இருக்கு. இரண்டு கிச்சன் டிசைனிங் ப்ராஜகட் பேரலல்லா போய்ட்டு இருக்கு. நான் நம்ம வேலையாட்கள் கைட் பண்ணி செஞ்சிட்டு இருக்கேன். அதுல எதுவும் பிரச்சனை இல்ல” அவள் கூறவும்,

“அப்புறம் என்னமா? உன் கல்யாணத்தைப் பத்தி எதுவும் பேசனுமா?” அவர் கேட்கவும்,

“அப்பா” என ஆச்சரியமாய் அவரை அவள் பார்க்க,

“நான் கல்யாணம் வேண்டாம்னு மாப்பிள்ளையோட அப்பாகிட்ட சொன்னதை அவங்க உன் கிட்ட சொல்லிருப்பாங்கனு தெரியும். நீ தான் அதுக்குப் பிறகு எனக்கு ஃபோன் செய்யலையே. அதனாலே இந்தக் கல்யாணம் நான் வேண்டாம்னு சொன்னதுல உனக்கு விருப்பமா இல்ல கோபமானு குழப்பத்துல தான் நான் இருந்தேன். எதுனாலும் நீ வீட்டுக்கு வர்றப்ப நேர்ல பேசலாம்னு நினைச்சிருந்தேன்” தான் மனதில் எண்ணியிருந்ததை அவளின் தந்தை கூற,

“ஏன்ப்பா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க? மதுரனை உங்களுக்குப் பிடிக்கலையா? இல்ல அந்தக் குடும்பத்தைப் பிடிக்கலையா?” அவரின் முகம் நோக்கி அவள் கேட்க,

“இல்லம்மா நம்ம குடும்பக் கௌரவத்துக்கு ஒத்து வராதுமா! சொந்தகாரங்கலாம் வேற குடும்பம் கிடைக்கலையா உனக்குனு கேட்டு சண்டைக்கு வந்துட்டாங்கமா” என அமைதியாய் அவர் கூற,

“ஏன் அந்தக் குடும்பத்துல மாப்பிள்ளை எடுத்தா நம்ம குடும்பத்துக்கு என்ன கௌரவக் குறைச்சல் வந்துட போகுது?” சற்று கோபமாகவே அவள் கேட்க,

மகள் சற்றாய் கோபமாய் வினவுவதிலேயே அவளுக்கு இக்குடும்பத்தின் மீது பற்றுள்ளதை அறிந்துக் கொண்டவர், “இல்லமா, உன் மாமா தான் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சிட்டு வந்து பையனோட அப்பா அம்மா இரண்டு பேருக்குமே இது இரண்டாம் கல்யாணம், நாளபின்ன பையனும் நம்ம பொண்ணு வேண்டாம்னு சொல்லி இரண்டாம் கல்யாணம் செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்னு கேட்டாங்கமா?” தயங்கி தயங்கியே அவர் கூற,

“ஏன் அவங்களுக்கு இரண்டாவது கல்யாணம் நடந்துச்சுனு தெரியுமா? அவங்க வாழ்க்கைல என்ன நடந்துச்சுனு தெரியுமா? புருஷன் ஏற்கனவே கல்யாணமானவன்னு தெரிஞ்சும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு அவன் கூடவே வாழனும்னு சொல்றீங்களாப்பா? என் அப்பா என்னைய அப்படி வளர்க்கலையே பின்ன எப்படி மலர் அத்தை செஞ்சது மட்டும் என் அப்பாக்குத் தப்பா போச்சு” கோபமாய் ஆதங்கமாய் அவள் கேட்கவும்,

பேரதிர்ச்சிக்குள்ளானார்கள் அவளின் பெற்றோர்.

“என்னது அவங்க மறுமணம் செஞ்சிக்கிட்ட காரணம் இது தானா?” அதே அதிர்ச்சி பாவனையில் அவளின் தந்தை வினவ,

“ஆமாப்பா!” என்றவள், அவர்களின் அதிர்ச்சி பாவனையில் புருவத்தைச் சுருக்கி கேள்வியாய் நோக்கி,

“வேறென்ன நினைச்சீங்க? யாரும் அவங்களைப் பத்தி எதுவும் தப்பா சொன்னாங்களா உங்ககிட்ட? சரி அப்படியே சொன்னாலும் எப்படி நீங்க ஒழுங்கா விசாரிக்காம கல்யாணத்தை நிறுத்தலாம்? நான் மதுரனை ஒரே நாள் தான்ப்பா பார்த்தேன். மறுநாள் நான் என் பிரச்சனையைச் சொல்லும் போது உன்னை நான் நம்புறேனு என்னைப் பரிபூரணமா ஏத்துக்கிட்டவருப்பா அவரு. ஆனா நீங்க அவங்க அம்மா மேலயே பழியைப் போட்டுக் கல்யாணத்தை நிறுத்தியிருக்கீங்க” மனம் வெதும்பிட கண்ணில் நீர் வர பேரொலியாய் கத்தியவள் கூற,

“ஏன்ம்மா உனக்கு என்ன பிரச்சனை? எதை நீ மதுரன்கிட்ட சொன்ன?” தானறியாது தன் மகளுக்கு ஏதும் துன்பம் நேர்ந்திருக்குமோ எனத் தகப்பனாய் அஞ்சி நடுங்கி நிலாவிடம் அவர் கேட்டிருக்க,

அவளுக்கு நிகழ்ந்த முதல் காதலை அதன் ஏமாற்றத்தை, அதனிலிருந்து அவள் போராடி வெளிவந்த விதத்தை, வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடத்தை என அனைத்தையுமாய் விளக்கி கூறியவள், மலர் மாணிக்கத்தின் வாழ்வினை பற்றியும் தெளிவாய் எடுத்துரைத்தாள்.

மகளின் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தினை அறிந்து மனம் பதறி கலங்கிய பெற்றோர்கள், மலர் மாணிக்கத்தினை எண்ணி பெருமிதம் கொண்டனர். அதனினும் மதுரனை அவனின் குணத்தினை எண்ணி மகிழ்வுற்றனர்.

“சாரிடா பொன்னம்மா! உன் மாமா தான் விசாரிச்சிட்டு வந்தான். அவன்கிட்ட யாரோ, உன் மலர் அத்தை தான் அவங்க முதல் கணவருக்குத் துரோகம் செஞ்சிட்டு இரண்டாம் கல்யாணம் செஞ்சதா சொல்லிருக்காங்க. அதனால தான் நாங்க நிச்சயம் ஆனாலும் பரவாயில்லை இந்த வரன் வேண்டாம்னு முடிவு செஞ்சோம்” என்று தனது மகளின் தலையினை ஆதுரமாய்க் கோதி அவர் கூற,

தனது தந்தையின் கைகளைப் பற்றிய நிலா, “அந்த வீட்டுக்கு என் மூலமா வாரிசு பெத்து கொடுத்தா அதுவே பெரும் பாக்கியம் எனக்குனு நினைச்சிட்டு இருக்கேன்ப்பா. எனக்கும் மதுரனுக்கும் பிறக்கிற குழந்தையை மாணிக்கம் மாமா எவ்ளோ ஆசையா வளர்ப்பாங்கனு பார்க்க நான் அவ்ளோ ஆசையா இருக்கேன்ப்பா. அப்படி ஒரு அன்பால நிறைஞ்ச குடும்பம்ப்பா அது”

“நீ இவ்ளோ சொன்ன பிறகும் அப்பா இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவேனா பொன்னம்மா?” அவளின் தலையை ஆதுரமாய்க் கோதி அவர் கேட்க,

“அப்பா” எனக் கண்களில் நீரும் இதழ்களில் புன்சிரிப்புமாய்த் தனது தந்தையை அணைத்துக் கொண்டாள் நிலா.

தனது மனைவியை நோக்கி “உனக்குச் சம்மதமா?” எனக் கேள்வியுடன் பார்த்துக் கண் அசைக்க,

தன் மகளின் திருமணம் இத்தனை நாள் தள்ளி போனதிலும், நிச்சயமாகி நின்று போனதிலும் கலக்க முற்றிருந்த கனிக்கு, நிலாவின் இப்பேச்சு பெரும் நிம்மதியை அளித்திருக்க, கண்ணில் ஆனந்த கண்ணீருடன் தலையசைத்திருந்தார் கனி.

“அப்பா, இனி என்னிக்கும் அந்தக் குடும்பத்துல உளள்வங்களுக்கு மனசு கஷ்டம் வர்ற மாதிரி எதுவும் நம்ம குடும்பத்துலருந்து செய்யக் கூடாது சொல்லிட்டேன்” கண்டிப்பாய் நிலா கூற,

“பார்றா அதுக்குள்ள புகுந்து வீட்டுக்கு என்னமா சப்போர்ட் செய்யுது இந்தப் பொண்ணு” என அவளின் அன்னை தாடையில் கை வைத்து கேலியாய் கூற,
அனைவரும் ஆனந்தமாய்ச் சிரித்திருந்தனர்.

அன்றைய இரவு ஆதினியின் அண்மை அளித்த ஆசுவாசத்திலேயே நிம்மதியாய் உறங்கினான் அகிலன்.

விடிந்தும் விடியா புலராத அக்காலை பொழுதில் ஆதினிக்கு சற்றாய் உறக்கம் கலைய, தன்னை விட்டு சற்று தள்ளி படுத்து உறங்கி கொண்டிருக்கும் அகிலனை கண்டவள், அவன் கைகளை இழுத்து அதில் தன் தலையினை வைத்து அவன் முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இங்க தனியா தூங்க முடியாம, என் அருகாமை இல்லாம என்னைய மிஸ் பண்ணீங்களாப்பா?” உறக்கத்திலிருப்பவனிடம் பேசுவதாய் எண்ணி அவள் பேச,

“ஆமாம்டி என் கன்னுக்குட்டி” என அவளைத் தனது மார்பிற்குள் புதைத்து அணைத்துக் கொண்டான்.

அவன் உறங்குவதாய் எண்ணியவள், அவனின் இந்த அதிரடியில் சற்றாய் அதிர்ந்து பின் இயல்புக்கு திரும்பி வாகாய் அவனுள் புதைந்து கொண்டாள்.

அவளின் கன்னத்தைத் தடவியவாறே, “ஒரு நாள் நைட் கூட நான் ஆழமான உறக்கத்துக்குள்ள போகலை கண்ணுமா. ஏதேதோ கெட்ட கனவா வந்து முழிச்சிடுவேன். என் மனசும் மைண்ட்டும் அவ்ளோ டிஸ்டர்ப் ஆகியிருந்தது”

நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவள், “அதான் என் புடவையை எடுத்து வச்சி தூங்குனீங்களா?” எனக் கேட்டாள்.

ஆமென அமைதியாய் தலையசைத்தவன், “நீயில்லாம நிஜமா என்னால இருக்க முடியாதுடி. என்னனாலும் என் கூடவே இருந்து சண்டை போடுடி! என்னைய விட்டுட்டு மட்டும் போய்டாத கண்ணுமா” அவள் நெற்றியில் முத்தமிட்டு உரைக்க,

அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு மேலும் அவனுள் புதைந்தவள், “எனக்கு மட்டும் உங்களை விட்டு இருக்கனும்னு ஆசையா என்ன? எப்பவுமே உங்க நினைப்பு தான் எனக்கு. உங்களை நினைச்சு தான் தூக்கத்துல கூட என் கண்ணுல தண்ணீர் வந்துச்சு. ஆனா உங்க மேலுள்ள கோபம் முதல்ல என்னால அதை ஏத்துக்கிட முடியலை. அப்புறம் என்னோட தவறு புரியவும் உங்களை ரொம்பக் கஷ்டபடுத்திடேனேனு கஷ்டமா போச்சு” தனது அன்றைய நாளின் மனதின் உணர்வினை பகிர்ந்துக் கொண்டவள்,

“நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்” என்றாள்.

“என்ன முடிவு பண்ணிருக்காம் என் கன்னுக்குட்டி?” அகிலன் அவள் தாடையைப் பற்றித் தன் முகத்தினருகே அவள் முகத்தைக் கொண்டு வந்து கேட்க,

“இனி என்ன நடந்தாலும் தினமும் நம்ம இரண்டு பேரும் நைட் தூங்கும் போது அதெல்லாம் பேசி தீர்த்துட்டு தான் தூங்கனும். சண்டை போட்டாலும் நைட் சமாதானம் ஆகிடனும். பிரச்சனையை ரொம்ப நாளைக்குப் பேசி தீர்க்காம வளர்த்துட்டுப் போறது தான் பிரிவை கொண்டு வரும்னு அம்மா சொன்னாங்க. அதனால அன்னனிக்கே பேசி தீர்க்குறோம் சரியா” அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து அவள் கூற,

“ஓ தீர்த்துடலாமே” எனக் குறும்பாய் உரைத்தவன் அவள் இதழில் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் பிரிவின் வலியை இணைவின் செயலில் இன்பமாய்க் கடந்திருந்தனர்.

மறுநாள் காலை தனது அத்தையிடம் மன்னிப்பு வேண்டி பேசி கொண்டிருந்தாள் ஆதினி.

“சாரி அத்தை! அம்மா எப்பவுமே சொல்லுவாங்க, கோபம் வரும் போது நம்மளோட இயல்பான குணத்தை நாம தொலைச்சிடுவோம். அப்ப மட்டும் அமைதியை கடைப்பிடிச்சு கடந்துட்டா வாழ்க்கைல எப்பவும் சங்கடம் வராதுனு சொல்லுவாங்க. அன்னிக்கு வயிறு வலி தந்த எரிச்சல், அவரை நேர்லயே ரவியோட பார்த்த அதிர்ச்சி ஏமாற்றம், இதுல நீங்களும் அம்மாவை அப்படிச் சொல்லவும் கோபம் வந்துடுச்சு. அதான் அப்படிப் பேசிட்டேன். சாரி அத்தை” கண்களைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவள் கேட்க,

“நீ பேசினது தப்புனா நான் பேசினதும் தப்பு தானே? நான் உங்கம்மாவை அப்படிச் சொல்லிருக்கக் கூடாது தான். ஆனா என் பையன்கிட்ட சொல்லாம நீ உன் வீட்டுக்குப் போனது எனக்குச் சுத்தமா பிடிக்கலை. அது மட்டும் இனி செய்யாத. அப்புறம் அவன் அடிக்கக் கை ஓங்கினது தப்பு தான். அதுக்காக உன் அப்பா என் பையனை அடிச்சதைலாம் என்னால ஏத்துக்க முடியாது” சத்யா பேசிக் கொண்டே போக,

“அத்தை அது அப்பா என் மேலுள்ள பாசத்துல அடிச்சிட்டாங்க. இனி அப்படி நடக்காம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு” அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை அவள் கூறிக் கொண்டிருக்க,

“சரிமா நான் ஒன்னும் கொடுமை படுத்துற மாமியார்லாம் கிடையாது. ஆனா என் பையனோட தன்மானத்துக்கோ இல்லை அவனை அவமரியாதையா நடத்துற போலயோ எதுவும் நடந்தா என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது. அது மட்டும் நடக்காம பார்த்துக்கோ” எனக் கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் சத்யா.

“சக்சஸ்” எனக் குதூகலமாய்க் கூறி அகிலனின் கையிலடித்து அவர்களின் அறையிலுள்ள மெத்தையில் சென்று அமர்ந்தாள் ஆதினி.

“ஹப்பாடா! எதுவும் திட்டிடுவாங்களோனு மனசு படபடனு அடிச்சிக்கிட்டே இருந்துச்சு” ஆசுவாச பெருமூச்சு விட்டவாறு அவள் கூற,
அவளின் பாவனையான பேச்சில் சிரித்த அகிலன், “நான் தான் இந்த மன்னிப்புலாம் ஒன்னும் கேட்க வேண்டாம்னு தானே சொன்னேன். நீயா போய்ப் பேசிட்டு பயந்து பயந்து வந்துட்டுனு சொல்ற”

“இல்லங்க என் மேலயும் தப்பு இருக்கு தானே. அத்தையும் நானும் ஒரே வீட்டுல ஆயுசுக்கும் வாழ போறோம் அதனால உங்க கிட்ட சொன்னது போல அவங்ககிட்டயும் வர்ற பிரச்சனை சண்டையையும் அப்பப்பவே பேசி தீர்த்துக்கிறது தான் நல்லது. அப்ப தான் நிம்மதியா வாழ முடியும்” என்றவள் கூற,

அவளின் இந்தத் தெளிவான சிந்தனையில் அவன் ஆச்சரியமாய்ப் பார்க்க, அவனின் கழுத்தை கட்டி கொண்டு லேசாய் எக்கி அவனது நெற்றியை முட்டியவள், “இந்த ஒரு பிரச்சனை எனக்குப் பல பாடங்களைக் கத்து கொடுத்துடுச்சு என் ஸ்வீட் ரசகுல்லா” என அவனது கன்னத்தைக் கடித்தாள்.

“ஹா ஹா ஹா.. நீ சொல்ற இந்த ரசகுல்லாவை நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? நாலஞ்சு மாசத்துல உன் மேல கிறுக்கா அலைய வச்சிட்டியே என் கன்னுக்குட்டி” என அவளின் மூக்கை அவன் கடிக்க,

“நானும் தான் உங்க மேல காதல் பித்துப் பிடிச்சி அலையுறேன்” நாணமாய் உரைத்து அவன் கழுத்தினில் முகத்தினைப் புதைத்துக் கொண்டாள் ஆதினி.

அவளை இறுக்கமாய் அணைத்து இன்ப வானில் உலவி கொண்டிருந்தான் அகிலன்.

இனி இவர்களின் வாழ்வின் சங்கடங்களே வராமல் இருக்க போவதில்லை.  ஆனால் வரும் அச்சங்கடங்களை இருவருமாய் இணைந்து கடந்து செல்லும் அனுபவங்களை வாழ்க்கை வழங்கியிருந்தது.

— தொடரும்