முள்ளில் பூத்த மலரே – 34

முள்ளில் பூத்த மலரே 34

“உண்மைய சொல்லனும்னா There is no perfect work life balance அகிலன். இன்னிக்கு சில காரணங்களால் அதிக நேரம் ஆபிஸ்ல இருக்க வேண்டியது ஆகிட்டுனா… அடுத்த நாளோ இல்ல அதுக்கு அடுத்த நாளோ உங்க ரெகுலர் டைமிங்க விடச் சீக்கிரமா உங்க ஆபிஸ்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு போய் முன்னாடி நாள் எக்ஸ்டென்ட் செஞ்ச நேரத்தை மறுநாள் வீட்டுல செலவு செஞ்சி இப்படி பேலன்ஸ் செய்யப் பாருங்க. எப்பவுமே ஆபிஸ்ல வேலை இருந்துட்டேவும் இருக்காது தானே. கொஞ்சமா உங்களை ரிலாக்ஸ் செஞ்சிக்க டைம் கிடைச்சாலும் அதை உங்களுக்குக் கொஞ்சம் உங்க குடும்பத்துக்குக் கொஞ்சம்னு பிரிச்சிக்கோங்க. கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது உங்க குடும்பத்தோட சேர்ந்து சாப்பிட ப்ளான் பண்ணுங்க.

ஆபிஸ்ல இருந்து வெளில வந்த நொடி உங்க மைண்ட்ல இருக்க ஆபிஸ் வேலைலாம் அப்பாலே போ சாத்தானே மாதிரி எங்கேயாவது அப்பால தள்ளி வச்சிடுங்க. ஆபிஸ் முடிஞ்சதும் இருக்கிற நேரமெல்லாம் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்குமானதுனு மைண்ட்ல ஃபிக்ஸ் செஞ்சிக்கோங்க. இப்படிலாம் திட்டமிடுறது மூலமா உங்க வேலைல இருந்து மனசை கொஞ்ச கொஞ்சமா பிரிச்சி குடும்பத்துப் பக்கம் கொண்டு வரலாம்”

சிந்தாமணி அகிலனுக்கு அறிவுரை வழங்கியிருக்க, ஆதினி அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குமே இது வெகு உபயோகமான அறிவுரையாய் இருந்தது.

ஆதினியிடம் திரும்பிய சிந்தாமணி அவளது வேலை, அதிலிருக்கும் பிரச்சனைகள் எனக் கேள்வி கேட்டவர், பின்னர் அவளின் சிறு வயது நிகழ்வுகளைக் கேட்கலானார்.

“உங்களுக்கு ஸ்கூல் டேஸ்னு சொன்னதும் நியாபகம் வர்ற ஹேப்பி மொமண்ட் எது?” என்று அவர் கேட்க,

“என் அண்ணா கூடச் சைக்கிள்ல போறது மேடம். அவனோட சைக்கிள்ல என்னைய முன்னாடி உட்கார வச்சிட்டு கூட்டிட்டு போவான். எல்லாக் கதையும் பேசிட்டு போவோம்” என்றவள் கூறவும்,

“அண்ணாவ ரொம்பவும் பிடிக்குமோ?” மென்சிரிப்புடன் அவர் கேட்க,
அகிலனும் சிரிப்பாய் அவளைப் பார்த்திருந்தான்.

அவரின் கேள்வியில் கண்கள் மின்ன, “அவனுக்கு என்னைய ரொம்பப் பிடிக்கும். என்னைய அவனோட குட்டி பாப்பானு தான் சொல்லுவான். சின்ன வயசுலேயே எனக்காகத் தந்தை ஸ்தானத்தை ஏத்துக்கிட்டவன்” மதுரனின் மீதான அன்பின் மினுமினுப்பு முகத்தில் தெரிய அவள் பேச,

ரசனையாய்ப் பார்த்திருந்த சிந்தாமணி, “அப்ப அகிலன் உங்க பாடு கஷ்டம் தான். அப்பா அம்மா மட்டுமல்ல குடும்பமே அவங்களைக் குழந்தையா தான் பார்க்கிறாங்க. குமரி பொண்ணுனு சொல்லி ஒரு குழந்தைய தூக்கி உங்களுக்குக் கட்டி வச்சிட்டாங்கலே!” போலி ஆதங்கமாய்க் கேலியாய் அவர் கூற,

அவரின் கேலி புரியாது ஆதினி விழிக்க, அவரின் கேள்வியில் சற்றாய் வெட்கப்பட்டுச் சிரித்த அகிலன், “இந்தக் குட்டி பாப்பா தான் எனக்கு வேணும்னு நான் தான் ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன் மேடம்” அவளின் மீது காதல் பார்வை வீசி கூற,

அவனின் கூற்றில் சட்டென நிமிர்ந்து அவனை நோக்கியவளின் விழிகள் நிமிடமேனும் அவனது விழிகளை ஆசையாய் தழுவி நின்றது.

இருவரின் பார்வை பரிமாற்றத்தை பார்த்துச் சிரித்துக் கொண்ட சிந்தாமணி, “ஆதினி ஸ்கூல் டேஸ்ல நடந்த உங்களுக்கு நினைவில் இருக்கக் குட் மெமரீஸ் பேட் மெமரீஸ் ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்” அவர் கேட்கவும்,

“ஊருக்குப் போறது தான் குட் மெமரீஸ் மேடம். எப்ப ஊருக்கு போகனும்னாலும் மனசு அப்படியே ஹேப்பியாகிடும் மேடம். எனக்கு அந்த ஊரையே ரொம்பப் பிடிக்கும்” இதையும் கண்களில் உற்சாகம் மின்ன உரைத்தவள்,

“பேட் மெமரீஸ்” எனக் கூறி யோசிக்கும் போதே அவள் முகம் வேதனையைப் பிரதிபலித்தது.

“ரவி அம்மாவை அடிச்சது. நான் மறக்கனும்னு நினைச்சாலும் மறக்க முடியாம கஷ்டபடுற விஷயம் அது தான் மேடம். ரொம்பச் சின்னப் பொண்ணு நானு. கொஞ்சமா அதட்டி பேசினாலே பயந்துடுவேன். அம்மாவும் ரவியும் சண்டை போடும் போதெல்லாம் ரொம்பவுமே கோபமா ஆக்ரோஷமா பேசுறதை பார்த்து பயந்து நிறைய நாள் பாத்ரூம்க்குள்ள போய் ஒளிஞ்சிருக்கேன். ஆனா அவங்க எதுக்காகச் சண்டை போடுறாங்க என்ன ஏதுனு ஒன்னும் புரியாது. அப்படி ஒரு நாள் ரொம்ப லேட் நைட்ல, நான் அம்மாவை கட்டி பிடிச்சி தூங்கிட்டு இருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டு அம்மா போய்ப் பார்த்தாங்க. ரவி தான் வந்திருந்தாங்க. அம்மாகிட்ட கோபமா ஏதோ பேசினாங்க. அம்மாவும் ஆவேசமா ஏதோ பதில் சொன்னாங்க, அதுல ஆத்திரமடைஞ்ச ரவி அம்மாவை பிடிச்சி தள்ளி விட்டுட்டாங்க, அம்மா அங்கிருந்த இரும்பு டேபிள்ல முட்டி தலைலலாம் ஒரே ரத்தம்” இதைக் கூறும் போது அவளது உடல் வெளிப்படையாகவே நடுங்கியது,

நடுங்கிய குரலுடனேயே தொடர்ந்தாள். “நான் பெட்ரூம் கதவு கிட்ட மறஞ்சி நின்னு இவங்க பேசுறதை பார்த்துட்டு இருந்தேன். அண்ணா தூங்கிட்டு இருந்தான். அம்மாவ தள்ளி விட்டுட்டு அவங்க போய்ட்டாங்க. அம்மா மயக்கமாகிட்டாங்க. நான் போய் அம்மாவை தட்டி தட்டி கூப்பிட்டேன்… அவங்க முழிக்கலை” இதைக் கூறும் போதெல்லாம் முழு அழுகையின் தேம்பலுடன் கூறிக் கொண்டிருந்தாள் ஆதினி.

ஆதுவின் கைகளை ஆதுரமாய்ப் பிடித்துக் கொண்டான் அகிலன். அந்நிலையில் எத்தனையாய் தவித்திருப்பாள் இந்தக் குட்டி பெண்ணென இவனின் மனம் அவளின் அந்நாளைய பரிதவிப்பை எண்ணி வெகுவாய்க் கவலையுற்றது.

“அப்புறம் எப்படி அம்மா எழுந்திருச்சாங்க ஆதுமா?” அவன் கேட்க,

“நான் பயத்துல அழுதுட்டே போய் அண்ணாவை எழுப்பினேன். அவன் தான் வந்து தண்ணீர் தெளிச்சி அம்மாவோட தலையை அவன் மடியில தூக்கி வச்சிக்கிட்டான். அப்போ தான் அம்மா தலைல ரத்தம் பார்த்தோம். அண்ணா அழுதுக்கிட்டே ஆயா வீட்டுக்கு ஓடி போனான்” நெஞ்சம் பதற கைகள் நடுங்க கண்ணீர் குரலில் கூறிக் கொண்டிருந்தாள் ஆதினி.

“ஆயா தான் அம்மாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. ரெண்டு நாள் ஆயா தான் எங்களைப் பார்த்துக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம் ரவியைப் பார்த்தாலே எனக்குப் பயம் வர ஆரம்பிச்சிட்டு. என்னையும் அப்படி அடிச்சிடுவாங்க ரத்தம் வரும்னுலாம் பலவித எண்ணங்கள் தானா மனசுல உருவாகி சின்னச் சின்னச் சண்டைக்குக் கூட நடுக்கம் வர்ற ஆரம்பிச்சிட்டுது” அகிலனின் உள்ளம் அவள் சிறு வயதில் எதிர்கொண்ட இந்நிகழ்வினை எண்ணி வெகுவாய் கலங்கி போனது.

அவ்வப்போது அவனின் தாய் தந்தை வாய் சண்டை போட்டு ஆளொரு பக்கம் பேசாமல் இருப்பதை பார்ப்பதற்கே சிறு வயதில் மீனுவிற்கும் இவனுக்கும் வெகுவாய் மனம் கணத்து போகும்.  இதில் இவள் தன் முன்னேயே தனது தாயினை அடித்ததை பார்த்திருக்கிறாளென்றால் அந்த சிறு வயதில் இவளின் மனநிலை எத்தனையாய் பாதிப்படைந்திருக்கும் என உணர முடிந்திருந்தது அவனால்.

“இது இப்படி நடந்ததுலாம் உங்க மாணிக்கம் அப்பாக்கு தெரியுமா ஆதினி”

சற்றாய் தன்னைச் சமன் செய்து கொண்டவள், “தெரியலை! அம்மா அப்பாகிட்ட சொல்லிருக்கவும் வாய்ப்பிருக்கு” எனக் கூறியவள்,

“இது நடந்து கொஞ்ச நாள்ல தான் மாணிக்கம் அப்பா எங்க வாழ்க்கைல வந்தாங்க!”

“ரவியை டிவோர்ஸ் செஞ்சி அம்மா அப்பாக்கு கல்யாணமான பிறகு என்னிக்குமே ரவியை பத்தின பேச்சு வீட்டுல வந்ததில்லை.  அப்படியே ரவியை பத்தி எதுவும் பேச வேண்டியது இருந்தாலும் எங்க முன்னாடி பேச மாட்டாங்க.  நானும் அண்ணனும் இல்லாத நேரமா தான் பேசுவாங்க. ரவியை பார்த்தா நான் பயப்படுவேனு அப்பாக்கு தெரியும். அதனால ரவினு ஒருத்தன் எங்க வாழ்க்கைல இருந்ததை நாங்க மறக்கனும்னு தான் அப்பா அம்மா நினைச்சாங்க!” என்றவள் சற்று ஆசுவாசமாகி தொடர்ந்தாள்.

“அன்னிக்கு அகிலன் கூட ரவியைப் பார்த்ததும், இதெல்லாம் நியாபகம் வந்து இதே போல இவரும் என்னைய அடிச்சி கொடுமைபடுத்துவாரோனு நினைச்சி பயந்துட்டே தான் வீட்டுக்கு போனேன். அங்கே இவர் கை நீட்டவும், நான் நினைச்சது சரி தான்னு மனசு முடிவே பண்ணிடுச்சு! அப்படியே அந்தப் பயத்துலயே தூங்கினதுல ரவி போலவே இவர் என்னை ரத்தம் வர்ற அளவுக்கு அடிக்கிற மாதிரி கனவு வந்துச்சு. இதெல்லாம் சேர்ந்து என்னால நார்மலா இருக்க முடியலை. பயம் மட்டும் தான் அப்ப எனக்குள்ள இருந்துச்சு. அப்பாகிட்ட போய்டனும், அவங்க கைக்குள்ள போய் அடைஞ்சிக்கனும். இந்தப் பயத்தை எல்லாம் அப்பா போக்கிடுவாங்க. அவங்க கிட்ட போனா மட்டும் தான் இவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியும்னு அந்த ஒரு எண்ணம் மட்டும் தான் அப்ப என் மைண்ட்ல ஓடுச்சு” அன்றைய நாளின் தனது பயத்திற்கான காரணத்தையும், தந்தையை அழைத்ததற்கான காரணத்தையும் விளக்கி கூறினாள் ஆதினி.

“சின்னப் பசங்க முன்னாடி அப்பா அம்மா போடுற சண்டை எந்தளவுக்குப் பிள்ளைகளின் மனசை பாதிக்குதுனு பார்த்தீங்களா?” அகிலனிடம் கூறியவர்,

“எப்பவும் அம்மா அப்பாவோட சண்டையையே மட்டுமே பார்த்து வளர்ற பிள்ளைகளின் மனநிலை என்னவா இருக்கும்? அவங்க மனசுல அன்பும் சமாதானமுமா இருக்கும்? அவங்களும் இப்படிக் கோபம் சண்டைனு தானே வளருவாங்க! இந்த ரவி மாதிரி ஆளுங்கலாம் என்ன சொல்ல?”

“ஹ்ம்ம்ம்” சற்றாய் பெருமூச்செறிந்தவர்,

“இந்தப் பயத்தைப் போக்க உங்க முயற்சியும் பயிற்சியும் தான் ரொம்ப முக்கியம் ஆதினி! உங்க அம்மா இந்தச் சூழ்நிலையில் எல்லாம் எப்படித் தைரியமா எதிர்கொண்டாங்கனு நினைச்சு பாருங்க! அவங்க பொண்ணு நீங்க. உங்களுக்கு அந்தத் தைரியம் இல்லாமலா இருக்கும். கண்டிப்பா உங்களுக்குள்ள புதைஞ்சி இருக்கும். அதை வெளி கொண்டு வருவது உங்க கையில தான் இருக்கு” என்றவர்,

“எப்பலாம் உங்களுக்கு இப்படி மனசு நடுங்குமளவு பயம் வருதோ அப்பலாம் உங்க மனசை தட்டி ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல்னு சொல்லுங்க. இல்ல உங்களுக்குப் பிடிச்ச கடவுளோட மந்திரம் சொல்லி உங்க மனசை அமைதியடையச் செய்யுங்க. இது உங்க பயிற்சியினால மட்டும் தான் சாத்தியம். பயம் வந்ததும் பதறி நடுங்காம மனசுக்குத் தைரியத்தைக் கொடுத்தீங்கனா போதும்” என்றார்.
சரியெனத் தலையசைத்தாள் ஆதினி.

ஆதினி தனது அலுவலக விடுப்பை இரு வாரமாய் மாற்றியிருந்தாள்.

சிந்தாமணியைச் சந்திக்க வேண்டிய கவுன்சிலிங்கின் கடைசி நாளின் முந்தைய நாள், அனைவரும் மலரின் விருப்பமான அந்தச் சிவன் கோவிலிற்குச் சென்றனர்.

மாணிக்கம் காரை இயக்க மலர், பொன்னிலா, ஆதினி உடன் சென்றனர்.
அனைவரும் இறைவனை வணங்கி பிரகாரம் சுற்றி வந்து அமர்ந்தனர்.

“நிலாமா சீக்கிரம் உங்கப்பாகிட்ட பேசுமா. நீ இப்படி உங்கப்பாக்கு தெரியாம எங்க வீட்டுக்கு வர்றது போறதுலாம் தெரிஞ்சா அவங்க மனசு எவ்ளோ கஷ்டபடும்” நிலாவின் அப்பா நிலையிலிருந்து மலர் கூற,

“நாளைக்கு ஊருக்குப் போய்ப் பேசலாம்னு இருக்கேன் அத்தை. ஆனா எங்க அப்பா உங்களை மாதிரி இல்லை அத்தை. எப்ப என்னைய ஹாஸ்ட்டல்ல சேர்த்தாங்களோ அதோட என் விஷயத்துல எதுலயும் அவங்க தலையிட்டதே இல்ல அத்தை. இங்க நம்ம வீட்டுல எதுனாலும் உங்களுக்கும் மாமாக்கும் தெரியாம உங்க பர்மிஷன் இல்லாம நடக்காதுனு தெரியும். ஆனா எங்க வீட்டுல அவங்களை நான் தொந்தரவு செய்யாம இருந்தா போதும்னு தான் அப்பா நினைப்பாங்க. அதனாலயே எல்லாத்தையும் வீட்டுல சொல்ற பழக்கம்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு” நிலா கூறவும் அவளின் வளர்ப்பு விதம் நன்றாய் உணர முடிந்தது மலர் மாணிக்கத்தினால்.

மலர் கண் மூடி தியானத்தில் அமர, அச்சமயம் அங்கு வந்த அக்கோவிலின் அறநிலைய அதிகாரியிடம் பேசவென மாணிக்கம் எழுந்து செல்ல, ஆதினி நிலாவிடம் பேசினாள்.

“இப்படி அப்பா அம்மாகிட்ட எதுக்கும் பர்மிஷன் கேட்காம எல்லாமே உங்க விருப்பம்னு இருந்துட்டு எங்க வீட்டுக்கு வந்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்காதா அண்ணி”

ஆதுவின் கேள்வியில் முறுவலித்த நிலா, “பொண்ணுங்களுக்கு எப்பவுமே அவங்க பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒரே மாதிரி இருந்திடுறதில்ல பாப்பா. எந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் ஆனதும் பிரச்சனை வராம இருந்ததே கிடையாது. இரண்டு குடும்பத்துக்கும் இருக்கும் வித்தியாசமே நிறையப் பிரச்சனைகளை உண்டு பண்ணும். சண்டை சச்சரவு மனதாங்கல்கள் இல்லாம இருக்காது. ஆனா அதைப் பிரிவு அளவுக்குக் கொண்டு போகாம இதையெல்லாம் சரி செஞ்சு வாழனும். அதுக்காகச் சகிச்சிக்கிட்டு பொறுத்துக்கிட்டு வாழனும்னு சொல்லலை. ஏத்துக்கிட்டு வாழனும். அப்படி வாழறதுக்கு ஆதரமான இருக்கிறது கணவனோட அன்பு மட்டும் தான். கணவன் மனைவிக்குள்ள இருக்க வேறுபாடுகளைப் புரிஞ்சிக்கிட்டு விட்டு கொடுத்து வாழனும்னு பொதுவா சொல்வாங்கல. அப்படி ஒரு புரிதலும் காதலும் அவங்களுக்குள்ள வந்துட்டா கணவனுக்காக அவனோட குடும்பத்தையும் ஏத்துக்கிட்டு வாழலாம்னு மனநிலை வந்துடும் பொண்ணுக்கு. ஆனா இதுக்குக் கணவனும் அந்தக் கணவனோட குடும்பமும் அந்தப் பொண்ணுக்கு அவகாசமும் நாங்க இருக்கோம்ன்ற நம்பிக்கையும் கொடுக்கனும்”

“உனக்கு அகிலன் அண்ணாவும் அவங்க குடும்பமும் அதைத் தாராளமாவே கொடுத்திருக்காங்க. எனக்கு அத்தை மாமாவும் மதுரனும் அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்காங்க. அதனால இந்த மாதிரியான வேறுபாடுகளைத் தாண்டி சந்தோஷமா வாழ முடியுங்கிற நம்பிக்கை இருக்கு”

நிலாவின் இந்தத் தெளிவான பேச்சில் வியந்து போன ஆதினி, “எப்படி இப்படித் தெளிவா மெச்சூர்ட்டா யோசிக்கிறீங்க அண்ணி” என ஆச்சரியமாய்க் கேட்க,

“வீட்டை விட்டு வெளில தங்கி இருந்தாலே அது கொடுக்கும் அனுபவம் இருக்கே அது அலாதி. நம்மைச் சுத்தி இருக்க மக்களை வச்சே பல விஷயங்களைக் கத்துக்கலாம். அப்படி நான் காலேஜ்ல இருந்து இப்ப வரை வெளில தானே தங்கி இருக்கேன். என்னோட தோழிகள் ரூம்மெட்ஸ்னு எல்லோரோட வாழ்க்கையும் பார்த்து கேட்டு வந்த அனுபவ ஞானம் இது” எனக் கூறி அவள் சிரிக்க,

இவளும் பெருமிதமாய்த் தன் அண்ணியைப் பார்த்து சிரித்தாள்.

“சரி உங்க அப்பாவை எப்படிச் சரிகட்ட போறீங்க?”

“நான் போய்ப் பேசினாலே சரியாயிடுவாங்கனு நம்பிக்கிட்டு இருக்கேன். ஆனா அங்க போய்ப் பார்த்தா தான் தெரியும். ஹ்ம்ம் எது வந்தாலும் சமாளிப்போம்” என ஆதுவை பார்த்து மென்னகை புரிந்தாள் நிலா.

தியானத்திலிருந்த மலர், “என்னோட பிள்ளைங்க இரண்டு பேரும் நல்லபடியா வாழனும் இறைவா.  அவங்களோட நல்வாழ்வு தான் எங்க வாழ்வோட வெற்றியே! அவங்க சந்தோஷமா நிம்மதியா அவங்க இணையுடன் வாழ அருள் புரியனும் இறைவா” வழமை போல் மனதோடு இறைவனிடம் அவர் பேசிக் கொண்டிருக்க,

“இரண்டு பேரும் சீரும் சிறப்புமா சந்தோஷமா வாழுவீங்க”

இதை காதில் கேட்டதும் மலர் கண் விழித்து பார்க்க,

கொடி மரத்தினருகே ஒரு தம்பதியினர், பெரியவரின் கால்களில் விழுந்து வணங்க, அவர் இவ்வார்த்தைகளை ஆசியாய் கூறியிருந்தார்.

“இனி எல்லாம் சுகமே” என மலரின் மனம் இதில் வெகுவாய் மகிழ்ந்து நிம்மதியுற்றது.

சிந்தாமணியின் கடைசிக் கட்ட கவுன்சிலிங் பிறகு ஆது அகிலனுடன் அவளது புகுந்த வீட்டிற்குச் செல்ல, இங்கே நிலா அவளது ஊருக்கு பயணித்திருந்தாள்.

— தொடரும்