முள்ளில் பூத்த மலரே – 33

முள்ளில் பூத்த மலரே 33

அந்தச் சிகிச்சையகத்தில் அமர்ந்திருந்தனர் ஆதினி, அகிலன், மலர், மாணிக்கம் மற்றும் பொன்னிலா.

பொன்னிலாவிற்குப் பரிச்சயமான, அவளின் மனத்துயர் நேரங்களில் கவுன்சிலிங்கில் அவளை ஈடுபடுத்திய மருத்துவரான சிந்தாமணியையே ஆதினிக்கும் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தாள் பொன்னிலா.
அவரைக் காணவே குடும்பச் சகிதமாய் அனைவரும் வந்திருந்தனர்.

அனைவரும் ஒரு சேர மருத்துவரின் அறைக்குள் நுழைய, அனைவரையும் பார்த்து மென்னகை புரிந்தவர், ஆதினி மற்றும் அகிலனை மட்டும் உள்ளிருக்குமாறு கூறி அனைவரையும் வெளியே அனுப்பினார்.

ஏற்கனவே பொன்னிலா, ஆதினி அகிலனின் பிரச்சனையை மேலோட்டமாய்ச் சிந்தாமணியிடம் கூறியிருந்ததால் அவர் நேரடியாய் அகிலன் ஆதினியிடம் கேள்விகளைக் கேட்க தொடங்கினார்.

தங்களின் திருமண நாள் முதல் தற்போது வரை நிகழ்ந்ததைக் கூறிய அகிலன் தற்போதைய தனது அலுவலகச் சூழலை கூறத் தொடங்கினான்.

“நான் வேலை பார்த்திட்டு இருக்க ப்ராஜக்ட் ஆரம்ப நிலைல ரொம்பவே ப்ரஷரா இருந்துச்சு மேடம். என்னோட க்ளைண்ட் ரொம்பவே டென்ஷன் படுத்துற ஆளு. அவர்கிட்ட எந்தவித கெட்ட பெயரும் வாங்காம இந்த ப்ராஜக்ட்டை எங்க கம்பெனிக்கு ஆன்போர்ட் செய்ய வேண்டிய பொறுப்புல நான் இருந்தேன். அந்த க்ளைண்ட் சின்னச் சின்ன விஷயத்துக்கும் எங்க மேல தான் தப்புனு உடனே மேனேஜருக்குக் கம்பிளைண்ட் மெயில் போட்டுடுவாரு. இந்த ப்ராஜக்ட் வச்சி தான் ப்ரமோஷன் வாங்கனும்னு நினைச்சி உழைச்சிட்டு இருக்க எனக்கு இப்படி அவர் அனுப்புற ஒவ்வொரு கம்பிளைண்ட் மெயிலும் ப்ரஷர் கொடுத்துச்சு. இதுல என் மேல தப்பில்லைனு மேனேஜர்க்கு புரிய வைக்க வேண்டிய சூழல்ல நான் இருந்தேன். அதே போல அந்த க்ளைண்ட் கிட்ட என் மேல நம்பிக்கை உருவாக்க வேண்டிய நிலையிலும் நான் இருந்தேன். அப்ப இதெல்லாம் தான் என் மைண்ட்குள்ள எப்பவுமே ஓடிட்டு இருக்கும். அந்த நிலையில ஆபிஸ் டைம்ல இவகிட்ட நான் பேசினா என் டென்ஷனை இவகிட்ட கோபமா வெளிபடுத்திவேனோனு பயமா இருந்துச்சு மேடம். அதான் இவகிட்ட அப்ப நான் ஃபோன் செஞ்சி பேசிக்கலை. மெசேஜ் செஞ்சதோட விட்டுட்டேன். ஆனா அதுக்கு அவ ரிப்ளை செஞ்சாளா இல்லையான்றதையே வீட்டுக்கு வந்த பிறகு தான் பார்ப்பேன். அவ்ளோ ஆக்குபைடா என் மைண்ட்டை வச்சிருந்தது அந்த ப்ராஜக்ட்”

“ஒரு பத்து வருஷம் கழிச்சி இந்த மேனேஜர் இல்ல இந்த க்ளைண்ட் உங்களுக்கு என்னவா இருப்பாங்க?” அகிலனை நோக்கி சிந்தாமணி கேட்க,

சற்று யோசித்தவன், “பத்து வருஷமா இதே கம்பெனில நான் இருப்பேனானு தெரியாது. அப்படியே இருந்தாலும் இந்த ப்ராஜக்ட் இருக்குமானு தெரியாது. சோ இவங்க என் வாழ்க்கைல இருப்பாங்களாங்கிறதே சந்தேகம் தான்” சிந்தாமணியின் கேள்விக்குத் தீவிரமாய் அவன் பதிலிறுத்திருக்க,

“ஓகே அதே பத்து வருஷம் கழிச்சி ஆதினி உங்களுக்கு என்னவா இருப்பாங்க?” அவனின் கண்களைக் கூர்மையாய் நோக்கி அவர் கேட்க,

அந்தக் கேள்விக்கான பதில் அவன் மூளையில் தோன்றிய நொடி, ஒரே கேள்வியில் நச்சென மண்டையில் அடித்து வாழ்க்கை பாடத்தை அவர் உணர்த்திவிட்ட உணர்வு அவனைப் பீடிக்க, “அப்பவும் அவ என் மனைவியா தான் இருப்பா” தன் தவறை உணர்ந்த குரலில் அவன் உரைத்திருந்தான்.

“அவ்ளோ தான் அகிலன்! நம்ம வாழ்க்கைக்குத் எது தேவை? எது தேவையில்ல? யாருக்காக நாம எவ்ளோ நேரம் தினமும் செலவழிக்கனும்? செலவழிக்கக் கூடாதுங்கிறதை இப்படி நாம யோசிச்சாலே கண்டுபிடிச்சிடலாம்” என்றவர்,

“கண்டிப்பாகப் பணம் கொடுக்கிற அந்த வேலையும் அலுவலகமும் நமக்கு முக்கியம் தான். நம்ம கரியர் டெவலப்மெண்ட் அதை விட முக்கியம் தான். ஆனா அது எதுவுமே நம்மைக் குடும்பத்தைத் தாண்டி பர்ஸ்ட் ப்ராயரிட்டில வந்துட கூடாது. நமக்கு என்ன ஆனாலும் குடும்பம் தான் கூட இருந்து காப்பாத்தும் இந்த அலுவலகமோ மேனேஜரோ கூட இருந்து காப்பாத்த மாட்டாங்க. அதை எப்பவும் மைண்ட்ல வச்சி செயல்படுங்க. உங்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழல் வருதா உங்க மனைவிகிட்ட உட்கார்ந்து பேசுங்க” சிந்தாமணி கூறிய நொடி,

“அவர் என்கிட்ட இந்த ப்ராஜக்ட் ஆரம்பிக்கிற நேரத்துல சொன்னாரு மேடம்” ஏனோ அனைவரும் தொடர்ந்து அவன் மீதே பழி போட்டு பேசுவதைக் காண சகிக்காமல், அவன் பக்க ஞாயத்தை விளக்க முற்பட்டாள் ஆதினி.

“அவர் சொன்னார் மேடம்! ஆனா இப்படி மொத்தமா என்னைய அவாய்ட் பண்ற அளவுக்கு அவருக்கு வேலை இருக்கும்னு அப்ப நான் நினைக்கலை” அவள் கூற,

அவள் தனக்காகப் பேச துவங்கியதும் சற்றே அமைதியடைந்தவன், அவளின் அவாய்ட் என்ற பதத்தில் பதறி, “அய்யோ என்ன ஆதுமா.. அவாய்டு அது இதுனு பெரிய வார்த்தைலாம் சொல்ற. நான் செஞ்ச ஒரே தப்பு, இந்தப் பிசி டைம்ல உன்கிட்ட பேசினா உன்னைக் காயப்படுத்திடுவேனோனு பயந்து உன்கிட்ட பேசாம இருந்தது தான். அதுவுமே என் மனைவி எங்க போய்ட போறா.. ப்ராஜ்க்ட் முடிஞ்சதும் நிதானமா பேசிக்கலாம்ன்ற எண்ணத்துல செஞ்சது தான். ஆனா அது அவ்ளோ பெரிய தப்புனு இப்ப உணர்ந்துட்டேன்” அகிலன் பேசிக் கொண்டே போக,

“கூல் அகிலன்! அவங்களை கஷ்டபடுத்திட கூடாதுனு பயந்தேன்னு சொல்றீங்கல்ல,  அதை சரி செய்ய வழி நான் சொல்றேன்” எனக் கூறிய சிந்தாமணி,

“உங்க ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனை இல்ல க்ளைண்ட் அண்ட் மேனேஜர் கூட ஏதோ வாக்குவாதம் டென்ஷன்னு வந்துச்சுனு வச்சிக்கோங்க, ஃபர்ஸ்ட் அடுத்த ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் கழிச்சி இந்த பிரச்சனையை, பிரச்சனை நடந்த நாளை பத்தி யோசிக்கும் போது உங்க எண்ணம் என்னவா இருக்கும்னு யோசிங்க! ஃபார் எக்சாம்பிள் க்ளைண்ட்  கம்பிளைண்ட் மெயில் போட்டாருனு சொன்னீங்கல,  அன்னிக்கு உங்க உணர்வு எப்படி இருந்துச்சு?” எனக் கேட்டார்.

“அந்த க்ளைண்ட் மேல ரொம்ப கோபம் வந்துச்சு.  இதை எப்படி மேனேஜர்கிட்ட சொல்லி புரிய வைப்பேன்னு நினைச்சு ரொம்பவே ஸ்டெரஸ்ஸா ஃபீல் செஞ்சேன்” என அவன் கூற,

“இப்ப அந்த பிரச்சனை முடிஞ்சு நாலஞ்சு வாரம் இருக்குமா? இப்ப இதை பத்தி யோசிக்கும் போது என்ன தோணுது?” அவர் கேட்க,

“அவ்ளோ டென்ஷன் ஆகாம இன்னும் கூலா ஹேண்டில் பண்ணிருக்கலாமோனு தோணுது” என்றான் அகிலன்.

“இன்னும் ஒரு வருஷம் கழிச்சி இதை பத்தி யோசிச்சீங்கனா அன்னிக்கு நடந்ததுலாம் ஒரு பிரச்சினையே இல்லனு தோணும்! சோ எப்பலாம் உங்க மைண்ட் ப்ரஷரா டென்ஷனா ஃபீல் செஞ்சி அப்செட் ஆகுதோ,  ஜஸ்ட் டேக் எ ப்ரேக்.  அந்த இடத்தை விட்டு வந்துடுங்க.  உங்க கேண்டீனுக்கோ இல்ல ஆபிஸ் விட்டு வெளியேவோ கூட வந்துடுங்க.  யார்கிட்ட பேசினா உங்க மனசு அமைதியடையுமோ அவங்க கிட்ட பேசுங்க.  கண்டிப்பாக இந்த பிரச்சனை பத்தி பேச கூடாது. ஜஸ்ட் ரிலாக்ஸ் யுவர்செஃல்ப் தென் ஒரு அரை மணி நேரம் கழிச்சி இந்த பிரச்சனையை எப்படி ஹேண்டில் பண்ணலாம்னு யோசிங்க.  அப்பவும் டென்ஷனாச்சுனா, இன்னும் பத்து வருஷம் கழிச்சி இந்த பிரச்சனை பத்தி யோசிக்கும் போது உங்க மைண்ட் இப்படி டென்ஷனாகி அப்செட் ஆகுமானு யோசிங்க.  அப்படி இல்லாத ஒரு விஷயத்துக்கு நாம ஏன் இப்ப அப்செட் ஆகனும் டென்ஷன் ஆகனும்னு நினைச்சு மைண்ட்டை உங்க கன்ட்ரோல்க்கு கொண்டு வாங்க.  தட்ஸ் இட்”

வெகுவாய் தெளிந்திருந்தான் அகிலன். கீற்றாய் புன்னகை அவன் இதழில்.

“தேங்க்ஸ் மேடம்” என்றானவன்.

“ஆதினிக்கு கவுன்சிலிங் கொடுக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்குத் தான் முதல்ல கொடுக்கனும் போல அகிலன்” எனக் கூறி சிரித்தவர், “நாளைக்கு வாங்க இன்னும் நிறைய பேசலாம்” எனக் கூறி அனுப்பியவர், மலர் மாணிக்கத்தினை அழைத்து ஆதினியின் சிறு வயது வாழ்வினை பற்றிக் கேட்டறிந்து கொண்டார் சிந்தாமணி.

அதன்பின் மறுநாள் வருவதாய் உரைத்து அன்றைய நாள் அனைவரும் அவரவர் இல்லத்திற்குக் கிளம்பி சென்றனர்.

அறையை விட்டு வெளி வந்த பின்பு தன்னைக் கண்ணெடுத்தும் காணாது செல்லும் தன் மனையாளையே ஏக்கமாய்ப் பார்த்துவிட்டுக் கிளம்பினான் அகிலன்.

அகிலன் உரைத்த அவனது அலுவல் பணிச்சுமையை, அச்சுமையின் காரணமாய் ஏற்பட்ட அவன் மனதின் இறுக்கத்தை கேட்டதிலிருந்து, அந்நேரத்தில் அவனுக்கு துணையாய் ஆறுதலாய் தான் இல்லாது போய்விட்டோமேயென எண்ணி குற்றயுணர்விற்கு ஆளானாள் ஆதினி.
அதன் பொருட்டே அவனை காணாது சென்றிருந்தாள்.

தன் மீதான தவறுகளை ஆராய தொடங்கினாள் அவள். 

அவன் வீட்டை அடைந்ததும் அவனது தங்கை மீனாளிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன பிரச்சனைணா அங்க? அம்மா இரண்டு நாளா ஃபோன் செஞ்சு அழுறாங்க. அவங்க முன்னாடி உன்னைய யாராவது அடிச்சா அவங்க மனசு எப்படிக் கவலைபடாம இருக்கும்? அண்ணி வீட்டுல செஞ்சது சரியே இல்லைணா. சரி அவங்க அப்பா அடிச்சாங்கணா அண்ணி தடுத்திருக்கனுமா இல்லையா?” அண்ணின் மீதான பாசத்தில் மீனாள் ஆத்திரமாய்ப் பேசிக் கொண்டே போக,

“அவ மேல தப்பில்லைடா மீனு” என்றான் அகிலன்.

“என்ன தப்பில்லை?” கோபமாய் அவள் கேட்க,

“உன் புருஷன் உன்னைய அடிக்க வந்து, நம்ம வீட்டுல இருந்து யாரும் தட்டிக் கேட்கலைனா நீ என்ன நினைப்ப?” அவன் கேட்க,

“கண்டிப்பா தட்டி கேட்கனும்ணா! அந்த வகையில அண்ணியோட வீட்டுல இருந்து வந்து நம்ம அப்பா அம்மாகிட்ட சொல்லி உன்னைத் தட்டி கேட்க சொல்லிருக்கனும். இப்படி நேரா வந்து அடிச்சிருக்கக் கூடாது. என்ன இருந்தாலும் அவங்க அடிச்சது தப்பு, அதை என்னால கண்டிப்பா ஏத்துக்கவே முடியாது” மீனாள் எண்ணையில் பொரிந்த மீனாய் பொரிந்து கொண்டிருக்க,

அதே நேரம் இதே வார்த்தையைத் தனது மகளிடம் கூறிக் கொண்டிருந்தார் மலர்.

“என்ன தான் ரவியை பார்த்த பயம் இருந்தாலும் உன் முன்னாடி உன் புருஷனை அடிக்க விட்டு நீ அமைதியா இருந்தது தப்புமா! இதுக்கு இரண்டு காரணம் தான் இருக்க முடியும் ஆதுமா. ஒன்னு உனக்கு அகிலனை பிடிக்காம இருக்கனும் இல்ல அகிலனோட குடும்பத்தைப் பிடிக்காம இருக்கனும். உனக்கு அங்க யாரையும் பிடிக்கலையா இல்ல உனக்கு பிடிக்காத விஷயங்கள் அங்க நடக்குதா?” அமைதியாய் பொறுமையாய் அவர்கள் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து தனது மகளிடம் கேட்டிருந்தார் மலர்.

அகிலனை பிடிக்கவில்லையா என அவர் கேட்டதிலேயே சட்டென நிமிர்ந்து மலரை பார்த்த ஆதினி, “இல்லம்மா அந்த வீட்டுல எல்லாருமே நல்லவங்கமா. நான் தான் ரவிக்கும் இவங்களுக்கும் கனெக்ஷன் இருக்குனு நினைச்சு மனசை குழப்பிக்கிட்டுச் சந்தேகப்பட்டுட்டேன். அகிலனை விட எனக்குத் தான்மா அதிகக் கில்டி ஃபீல் ஆகுது. என் மேலயும் தப்பு இருக்குனு எனக்குப் புரியது. ஆனா இதை எப்படிச் சரி செய்றதுனு எனக்குத் தெரியலைமா. இனி அந்த வீட்டுக்கு போனா என் அத்தை மூஞ்சுல எப்படி முழிப்பேன்னு பயமாவும் இருக்குமா! அதான் இந்தக் கவுன்சிலிங்க்கு ஒத்துக்கிட்டேன். இது மூலமா என்னோட பயம்லாம் நீங்கி தெளிவு கிடைச்சாலே போதும்மா”

தனது மகள் தான் செய்தவற்றை எண்ணி பார்த்து ஆராயத் துவங்கி விட்டாளென அறிந்ததிலேயே சற்று நிம்மதி அடைந்தார் மலர்.

இனி அவளின் வாழ்க்கைகான முடிவை அவளே தேர்ந்தெடுக்கட்டும் என எண்ணி கொண்டார்.

ஆனால் இந்தப் பயத்தைப் போக்க தாங்கள் என்ன செய்ய வேண்டுமென மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் மனதில் குறித்துக் கொண்டார்.

மறுநாள் மலரும் மாணிக்கமும் இக்கேள்வியினை மருத்துவரிடம் வினவ, “உங்க மேல தான் தப்பு!” என்றவர் கூறவும் இருவரும் குழப்பமாய் மற்றவரை திரும்பி பார்த்துக் கொள்ள,

அவர்களின் குழம்பிய முகத்தைப் பார்த்த சிந்தாமணி, “உங்க வாழ்க்கைல பிரச்சனைகளை நீங்க எதிர்கொள்ளும் போது, ஆதினி சின்ன பொண்ணா தானே இருந்திருப்பாங்க மலர்” எனக் கேட்க,

ஆமென தலையசைத்த மலர், “அஞ்சு வயசு தான் இருக்கும் அவளுக்கு” என்றார்.

“பிள்ளைங்களுக்கு எந்தவித மன கஷ்டமும் கொடுக்காம வளர்க்கனும்னு நினைக்கிறது தப்பில்லைங்க! ஆனா நீங்க உங்க வாழ்க்கைல சந்திச்ச எதிர்கொண்ட கஷ்டங்களை அவங்ககிட்ட சொல்லியாவது வளர்க்கனுமில்லயா. அப்ப தானே அவங்க வாழ்க்கையைத் தனியா ஃபேஸ் செய்யும் போது எப்ப என்ன முடிவு எடுக்கனும் எடுக்கக் கூடாதுனு அவங்களுக்குப் புரியும். நீங்க பொத்தி பொத்தி எந்தத் துன்பமும் துயரமும் அவங்களை அண்டாம பாதுகாத்து வளர்த்தது தான் இப்ப அவங்க வாழ்க்கைல ஒரு பிரச்சனைனு வரும் போது தெளிவா சிந்திக்க முடியாம பயந்து இவ்ளோ தடுமாறுறாங்க”

“ஆனா உங்க நல்ல மனசுக்கு ரொம்பவே நல்ல மாப்பிள்ளை உங்களுக்குக் கிடைச்சிருக்காங்க. ஆதினி மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காரு. கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் தானே ஆகுது. போகப் போக உங்க பொண்ணே உங்களுக்குப் பாடம் எடுக்குற அளவுக்கு முன்னேறிடுவாங்க. இந்தப் பயம் போக்க, நீங்க உங்க வாழ்க்கைல கடந்து வந்த கஷ்டங்களை அதை நீங்க துணிச்சலா எதிர்கொண்ட முறையை அவங்களுக்குக் கதையா சொல்லுங்க. ஒவ்வொரு இடத்துலயும் தன்னோட அம்மா இந்தச் சூழல்ல எப்படி யோசிச்சிருப்பாங்கனு யோசிச்சு உங்க பொண்ணு முடிவு எடுத்தாலே போதும். நான் நிலாவையும் ஆதினிகிட்ட பேச சொல்றேன்” என்று கூறினார்.

தானும் ஆதினியிடம் கேட்க  வேண்டியவற்றை மனதில் குறித்துக் கொண்டார் சிந்தாமணி.

அதன்பின் மலரும் நிலாவும் தங்களது வாழ்வின் தாங்கள் கடந்து வந்த அனுபவங்களை அவளுடன் தினமும் பகிர்ந்து கொண்டனர். அது ஆதினியின் மன வலிமையைக் கூட்டியது. ஆதினியின் மனம் தெளிவுற நன்றாய் உதவியது.

கவுன்சிலிங் தொடங்கிய நாளிலிருந்து ஆதினியின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்திருந்தான் அகிலன். 

அவள் யோசிக்கவும், தன்னை உணரவும் அவளுக்கு நேரம் வழங்க வேண்டுமென அவ்வாறு தவிர்ந்திருந்தான்.

அடுத்து வந்த கவுன்சிலிங் நாட்களில் ஆதினி தனது அடி மனதின் பயத்திற்கு அடிநாதமான அந்தச் சிறு வயது நிகழ்வை கூற, வெகுவாய் கலங்கி போனான் அகிலன்.

— தொடரும்