முள்ளில் பூத்த மலரே – 32

முள்ளில் பூத்த மலரே 32

“இன்னிக்கு அப்பாவை நேர்ல பார்த்து பேச ஊருக்கு போகலாம்னு ப்ளான் செஞ்சிருந்தேன்ப்பா. ஆனா நேத்து ஆதுவை அப்படி பார்க்கவும் அவளைச் சரி செஞ்சிட்டு தான் அடுத்த வேலைனு முடிவு பண்ணிட்டேன். நீங்களும் இங்க இல்லை. உங்க மனசு பாப்பாவை நினைச்சு எவ்ளோ கஷ்டபடும்னு தெரியும்பா. உங்க இடத்துல இருந்து இந்தப் பிரச்சனைய சரி பண்ண வேண்டியது என்னுடைய கடமையும் தானே”

தனது தாய் தந்தையிடம் நள்ளிரவு நேரம் பேசி முடித்த மதுரன், அந்நேரம் உறங்கி கொண்டிருக்கும் நிலாவை தொந்தரவு செய்ய மனமில்லாது இந்திய நேரத்திற்கு காலை ஐந்து மணியளவில் அவளுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

மதுரனிடம் நடந்த நிகழ்வுகளையும் ஆதுவின் நிலையையும் மலரும் மாணிக்கமும் உரைத்திருக்க, அவர்களுக்கு வெகுவாய் ஆறுதலையும் தேறுதலையும் அளித்துப் பேசினான் மதுரன்.

அவர்களிடம் காண்பிக்கவியலா அவனின் மனதின் வேதனையை நிலாவிடம் அவன் உரைத்திருக்க, அதற்கான தனது ஆறுதல் மொழியாக, தான் சிந்தித்திருந்ததை இவ்வாறாக உரைத்திருந்தாள் நிலா.

மதுரன் நிலாவிடம் தனது குடும்பத்தின் கதையினையும், தனது குடும்பத்தவர்கள் அவனுக்கு எந்தளவு முக்கியமென்றும் அவர்களின் மீதான இவனின் பாசத்தையும், அவர்களுக்கு இவன் செய்ய வேண்டிய கடமைகள் என நிரம்பவுமே அவர்களைப் பற்றி இவன் அவளிடம் பேசியிருந்ததால், அப்பொழுதே அவ்வீட்டில் மதுரனும் நிலாவும் வெவ்வேறாய் அக்குடும்பத்தினர் உணராத வண்ணம் தன் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென முடிவெடுத்திருந்தாள் பொன்னிலா. அதன் பொருட்டுத் தான் இவ்வாறாய் அவளால் அவனின் நிலையில் இருந்து அக்குடும்பத்தினருக்காக யோசிக்க முடிந்திருந்தது.

நிலாவின் இப்பேச்சில் மதுரனின் மனது சற்றாய் சமன்பட, “தேங்க்ஸ் எ லாட் பொன்னும்மா! அம்மா ஆதுவப் பத்தி சொல்ல சொல்ல அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு மனசு. இந்த நேரத்துல போய் இப்படி அப்பா அம்மாவை தனியா விட்டுட்டு வந்துட்டேனேனு கில்டி ஃபீல் ஆகிட்டு வேற. உன்னோட இந்த வார்த்தைகள் நிஜமாவே மனசுக்கு அவ்ளோ ஆறுதல் கொடுக்குது” அவன் மனம் நெகிழ்ந்து கூற,

“நமக்குள்ள என்னப்பா தேங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு!” என்றவள் ஆதினிக்காக அவள் சிந்திந்து வைத்திருந்த தீர்வை கூற,

“ஹ்ம்ம் நீ அப்பா அம்மாகிட்ட முதல்ல பேசு. அவங்க ஒத்துக்கலைனா சொல்லு நானும் பேசுறேன்” என்றவன்,

“ஆமா உங்க அப்பா அதுக்குள்ள உனக்கு வேற மாப்பிள்ளைலாம் பாத்திட மாட்டாங்க தானே! இந்தக் கல்யாணம் வேண்டாம்னு எங்கப்பாகிட்ட சொன்னாங்களே அதை முதல்ல உன்கிட்ட சொன்னாங்களா?”

நிலா தனது தந்தையிடம் ஆதினியின் பிரச்சனை சரியான பிறகு பேச போவதாய் கூறியிருந்ததினால், எங்கே அதற்குள் அவளின் தந்தை அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விடுவாரோ என்றொரு அச்சத்தில் இவ்வாறாய் மதுரன் கேட்டிருக்க,

அவனின் கேள்வியில் வாய்விட்டு சிரித்தவள், “என் மது கண்ணாக்கு இப்டிலாம் கூட அவங்க லவ்வை சொல்ல முடியுமா?” கொஞ்சலாய் அவள் கேட்க,

“நான் எவ்ளோ பதட்டமா கேட்குறேன்! நீ கொஞ்சிட்டு இருக்க” அவனும் அதே கொஞ்சல் பாவனையில் கேட்க,

“இப்படி எனக்கு வேற மாப்பிள்ளை பாரத்து கட்டி வச்சிடுவாங்களோ, என்னைப் பிரிய நேரிடுமோனு என் மேலுள்ள காதல்னால பயந்து பயந்து கேட்குற உங்க கேள்விகளுக்குப் பதில் சொல்லனுங்கிறதை விட அதை ரசிக்கத் தானே ரொம்பவும் தோணுது” அவனையே நேரில் நின்று ரசிக்கும் பாவனையான குரலில் அவள் கூற,

அவளின் ரசனையில் இவன் கிறங்கி போக, “இப்ப இந்த நிமிஷம் உன் முன்னாடி வந்து நிக்கனும்னு மனசு கிடந்து தவிக்குதுடி!” ஆழ்ந்த காதலின் குரலில் அவன் கூற,

“ஐம் மிஸ்ஸிங் யூ பேட்லி ஆல்ரெடி. இதுல இப்படிலாம் நீங்க சொன்னீங்கனா ஃப்ளைட் பிடிச்சி நீங்க இருக்க இடத்துக்கே வந்துடுவேன் ஆமா” சற்று ஏக்கத்துடன் கூடிய கோபமாய் அவள் கூற,

ஹா ஹா ஹா வென வாய்விட்டு சிரித்தவன், “நீ செஞ்சாலும் செய்வமாஆஆஆ. நமக்குக் கல்யாணம் ஆன பிறகு தான் உன்னைய எங்கனாலும் கூட்டிட்டு போவேன். இனியும் உன்னைய பக்கத்துல வச்சிக்கிட்டு என்னால சும்மாலாம் இருக்க முடியாது”

அவனின் இக்கூற்றில் வாய்விட்டு சிரித்தவள், “சீக்கிரம் நம்ம வீட்டுப் பிரச்சனைலாம் சால்வ் பண்ணிட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம். ஐம் ஆல்வேஸ் ரெடி டு மேரி யூ. அண்ட் ஐம் ஈகர்லி வெயிட்டிங் ஃபார் தட் டே” உரைத்தவள்,

“அப்பாக்கு பொதுவாவே, எனக்குக் கல்யாணத்துல விருப்பமில்லைனு ஒரு எண்ணம். அதுக்குக் காரணம் நான் தான். நான் பிசினஸ்ல ஒரு பொசிஷன் வந்த பிறகு தான் மேரேஜ் செய்வேனு அவங்ககிட்ட சொல்லிருந்தேன். அதுவுமில்லாம வந்த வரன்லாம் நான் தான் ஏதோ பேசி அவங்களைக் கல்யாணம் வேணாம்னு சொல்ல வச்சேனு நினைச்சிட்டிருக்காங்க. அதனால அவங்கள பொறுத்தவரை இந்தக் கல்யாணமும் அவங்க விருப்பத்துக்காகத் தான் நான் ஒத்துக்கிட்டேன்னு நினைச்சிட்டு இருக்காங்க. அதனால மாமாகிட்ட பேசின பிறகு, இந்தக் கல்யாணத்தை வேண்டாம்னு சொல்லிட்டேன்னு எனக்கொரு மெசேஜ் மட்டும் அப்பா அனுப்பிருந்தாங்க. அடுத்து ஒரு மாப்பிள்ளையை அப்பா பார்த்து வச்சாலும் என் விருப்பமில்லாம என் கழுத்துல யாரையும் நான் தாலி கட்ட விட மாட்டேன். அதனால இதைப் பத்திலாம் நீங்க கவலைபடாம அங்க வேலையைப் பாருங்க. இங்க இருக்கப் பிரச்னைலாம் நீங்க இங்க வரதுக்கு முன்னாடி சரி செய்ய வேண்டியது என்னோட பொறுப்பு” என நிலா மதுரனுக்கு ஆறுதல் மொழியுரைத்தாள்.

அதன் பின் ஒரு மணி நேரமாய் இருவரும் பேசிய பின்பே இணைப்பை துண்டித்தனர்.

ஆதினியின் பிரச்சனையில் தனது திட்டத்தை அன்றே செயல்படுத்த துவங்கினாள் நிலா.

காலை பத்து மணியளவில் தனது அலுவலகம் சென்று பணியாளர்களுக்கு அன்று அவர்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர்களிடத்தில் உரைத்தவள், நேராய் தனது இரு சக்கர வாகனத்தில் அகிலனின் அலுவலகத்திற்குப் போய் நின்றாள்.

அங்கு அவனுக்கு அழைப்பு விடுத்து வெளியிலுள்ள ஒரு உணவகத்திற்கு வருமாறு அவனிடம் கூறி விட்டு அவனுக்காகக் காத்திருந்தாள்.

பொன்னிலா அழைத்ததும் ஆதினிக்கு ஏதும் பிரச்சனையோ எனப் பயந்தவன் அவளிடம் கேட்டு தெளிவுபடுத்திய பிறகே சற்றாய் நிம்மதியாகி அவள் கூறிய இடத்திற்கு வந்தான்.

“என்ன தங்கச்சி, உங்க கல்யாணத்துக்கு நான் எதுவும் உதவி செய்யனுமா? அதைப் பத்தி பேச தான் வர சொன்னியாமா” கேட்டுக் கொண்டே அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தான் அகிலன்.

இல்லையெனத் தலை அசைத்தவள், “ஆதுவப் பத்தி பேச வந்தேன் அண்ணா” என்றாள்.

“என்னைய பத்தி ஆது எதுவும் உன்கிட்ட சொன்னாளாமா?” அகிலன் கேட்கவும்,

“இல்லண்ணா பாப்பா வீட்டுக்கு வந்ததுல இருந்து உங்களைப் பத்தி குறையாலாம் யார்கிட்டயும் எதுவும் பேசலைணா. அன்னிக்குக் கனவு கண்டு பயந்து மாமாகிட்ட நீங்க அடிச்சிடுவீங்களோனு பயமா இருக்குனு சொன்னதோட சரி. வேறெதுவும் சொல்லலைனு அத்தை சொன்னாங்க. ஆனா இப்படி அவ யார்கிட்டயும் பேசாம மனசுலேயே வச்சி மறுகுறது அவளை இன்னுமே வலியில கொண்டு தள்ளும்னு தான் உங்ககிட்ட பேச வந்தேன் அண்ணா”

“ஆமா மா என் மேல தான் தப்பு. வேலை வேலைனு அவகிட்ட கொஞ்ச நாளா பேசவே இல்ல. ஆனா இந்த ப்ராஜக்ட் ஆரம்பிக்கும் போதே இப்படி என்னால அவகூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாதுனு சொல்லிருந்தேன். ஆனா அவகிட்ட பேச கூட முடியாம போகும்னு நினைக்கலை. ஆக்சுவலி என் பொண்டாட்டி தானே எங்க போய்ட போறா… ப்ராஜக்ட் வேலை முடிஞ்ச பிறகு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பேசிக்கலாம்னு நினைச்ச என்னோட மெத்தனம் தான் இப்ப இந்த நிலைல அவளைக் கொண்டு வந்து விட்டிருக்கு. அவளுக்கு என் மேலுள்ள காதல் நம்பிக்கை எல்லாமே இப்ப இழந்துட்டு நிக்கிறேன்” வெகுவான மனசோர்வுடன் முகத்தில் வேதனை படர அவனுரைக்க,

“இது தான் அண்ணா பெரும்பாலான ஆண்கள் செய்ற தப்பு. பொண்ணுங்களோட அன்பு கிடைக்கிற வரை அவங்க பின்னாடியே சுத்தி அவங்களுக்குப் பிடிச்சதுலாம் செய்வறங்க, அதே அந்தப் பொண்ணு தன்னோட காதலை சொன்ன பிறகு அந்தப் பொண்ணைக் கண்டுக்காம போய்டுவாங்க. அந்தப் பொண்ணோட அன்பை டேக் இட் ஃபார் க்ராண்டட்டா எடுத்துக்குவாங்க. நம்மளை மீறி அவ எங்க போய்ட போறாங்கிற அசால்ட்டு வந்துடுது”

“ஆனா உண்மை என்ன தெரியுமா அண்ணா… ஒரு பொண்ணு காதலை சொன்ன பிறகு முழுக்க முழுக்க அவ வாழ்க்கைல அந்த ஆண் மட்டும் தான் இருப்பான். அவளோட ஒவ்வொரு செயலையும் அவனுக்கான அந்த அன்பை காதலை வெளிபடுத்திட்டே இருப்பா. அதே மாதிரி அவனும் வெளிப்படுத்தனும்னு எதிர்பார்ப்பா… அவளோட உலகம் அவன் மட்டுமேனு சுருங்கி போய்டும். ஆனா இந்த நேரத்துல தான், அதான் காதலை சொல்லிட்டாள்ல நம்ம எதுக்குத் திரும்பத் திரும்ப நம்ம காதலை அவளுக்கு நிரூப்பிக்கனும்னு அந்த ஆண் அவளோட அன்பை கண்டுகாம போய்டுவான். அவனும் அந்தக் காதலை மனசுல வச்சிக்கிட்டு காமிக்காம போய்டுவான்”

“ஆண் பெண் இருவரும் காதல் சொன்னதும் அவங்களுக்குள்ள வர்ற பெரும்பாலான சண்டைகள் ஆண்களோட இந்த மனப்பான்மையினால தான்”
சற்று இடைவெளி விட்டு அகிலனை அவள் நோக்க,

“நான் இப்படிலாம் நினைக்கலை தங்கச்சி. எனக்கு ஆது வாழ்ந்துட்டிருந்த சூழல் நல்லாவே தெரியும். அவளைச் சுத்தி எப்பவுமே அன்பை மட்டுமே காமிக்கிற ஆளுங்க தான் இருந்தாங்க. அவ அதைக் கண்டிப்பா எதிர்ப்பார்ப்பானு எனக்குப் புரிஞ்சிருந்தது. அதான் இந்த ப்ராஜக்ட் வந்தப்ப கூட அவகிட்ட தெளிவா சொன்னேன். ஆனா எங்கேயோ எப்படியோ நானும் அவளைப் பின்னாடி பார்த்துக்கலாம்னு அவளை என் ப்ரயாரிட்டி லிஸ்ட்ல இரண்டு நாளைக்குனாலும் பின்னாடி தள்ளி வச்சிட்டேன். அதான் இப்படிப் பிரச்சனையாகி நிக்குது” தான் உணரந்ததை அவன் கூற,

“நீங்க செஞ்ச தப்பு உங்களுக்குப் புரியனும்னு எடுத்து சொல்ல தான்ணா வந்தேன். ஆனா நீங்களே உங்களை அனலைஸ் செஞ்சி தெளிவா தான் இருக்கீங்க”

“இப்ப இந்தப் பிரச்சனைக்கான தீர்வு என்ன? ஆதினியை எப்படிச் சமாதானம் செய்யப் போறீங்க?” அவன் கண்களை நோக்கி அவள் கேட்க,

பெருமூச்செறிந்தவன், “அவகிட்ட பேசுறதை தவிர என்கிட்ட வேற வழியில்லமா. ஆனா என்னைய அவ கிட்டயே விடாம இருக்கும் போது நான் எப்படி அவகிட்ட பேசுறது?” எங்கேயோ வெறித்து நோக்கியவாறே சோர்வாய் அவன் கூற,

“இன்னிக்கு போய் ஆதினிகிட்ட பேசுங்கணா. அதுக்கும் மேல ஒத்து வரலைனா சைக்காட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் கூட்டிட்டு போகலாம்னு ஒரு எண்ணம் இருக்குணா. நீங்க என்ன சொல்றீங்க?”

“அய்யோ இதுக்கு எதுக்கு கவுன்சிலிங்லாம். அவ்ளோ ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல இது. நம்ம இப்படிலாம் யோசிக்கிறது தெரிஞ்சா அவ மனசு இன்னும் பாதிச்சிடாது” பதறியவாறே அகிலன் கேட்க,

“என்னணா படிச்ச நீங்களே இப்படிப் பதறுறீங்க! ஆதுவோட பயத்துக்குக் காரணம் அவ அடி மனசுல உறஞ்சி போன ரவியோட செயல் தான். அதை அவ மனசுல இருந்து விரட்ட வேண்டாமா.. இல்லனா என்னிக்குனாலும் அவ இப்படி உங்ககிட்ட இன்செக்யூர்டா ஃபீல் ஆக வாய்ப்பிருக்குணா. நான் அத்தை மாமாகிட்ட கூட இன்னிக்கு பேசலாம்னு இருக்கேன்” எனக் கூறியவள் தொடர்ந்து இந்தக் கவுன்சிலிங் ஆதுவின் மனநிலைக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதனை எடுத்துரைத்து அவனிடம் ஒப்புதல் வாங்கியிருந்தாள்.

அன்று மாலை வேளை ஆதுவின் இல்லத்திற்கு சென்றான் அகிலன்.
அவனிடம் தேநீர் அருந்துமாறு வழங்கிவிட்டு மலர் அமர, “மாமா எங்க அத்தை?” அறைகளினுள் தேடுதலாய் பார்வையைச் செலுத்தியவாறே அகிலன் கேட்க,

“ஏதோ லேண்ட் விஷயமா ப்ரோகர்கிட்ட பேசனும்னு வெளிய போய்ருக்காங்க தம்பி” எனக் கூறி அவன் பார்வை போகும் திசையை நோக்கியவர், “பாப்பா அவ பெட்ரூம்ல இருக்க பால்கனில இருக்கா. நீங்க போய் பாருங்க தம்பி” என்றார்.

“ஆது எப்படி இருக்கா அத்தை?” அகிலன் கேட்க,

“இப்ப தான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தோம் தம்பி. நாலு நாளாகியும் வயிறு வலி சரியாகாம அப்படியே இருந்துச்சு. அதான் டாக்டர் பார்த்து மாத்திரை வாங்கிட்டு வந்தோம்”

அவளின் இந்த மாத மாதவிடாய் வயிறு வலி அவனிற்கு தெரியும் என்ற நினைப்பில் அவர் உரைத்துக் கொண்டிருக்க,

அவரின் வயிறு வலி என்ற பதத்திலேயே அவன் பதறி, “வயிறு வலியா” எனக் கேட்க வந்தவன், அவர் நான்கு நாட்களாய் இருப்பதாய் உரைத்ததில், “என்னது என் கூட இருக்கும் போதே வயிறு வலி இருந்துச்சா?” என மனதில் எண்ணிக் கொண்டே அக்கேள்வியினை வாய்க்குள்ளேயே முழுங்கினான்.

சற்று நிமிடத்திலேயே அது அவளின் மாதாந்திர வலி என உணர்ந்தவன், இதைக் கூடக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறோமே என எண்ணி தன்னையே நொந்து கொண்டவன், அவளைப் பார்க்க செல்வதாய் உரைத்து உள் சென்றான்.

சாய்வு நாற்காலியில் நன்றாய் தலையைச் சாய்த்துக் கண் மூடி அமர்ந்திருந்தாள் ஆதினி.

சற்று நேரம் நின்று கொண்டு அவளின் வதனத்தையே பார்த்திருந்தவனுக்குத் தன் மீதே கோபம் மீதுற, அவளின் காலருகே தரையில் அமர்ந்து அவளின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான்.

அவனின் இந்தத் திடீர் செயலில் சட்டெனப் பயந்து பதறி கண் விழித்துப் பார்த்தவளின் உடல் மொத்தமும் நடுக்கமுற, தனது செய்கையில் அவள் பயந்ததை உணர்ந்தவன், அவளின் இடையைச் சுற்றி கையைப் போட்டு அவளின் வயிற்றுடன் தன் தலையை அழுத்த சற்றாய் இறுகி தளர்ந்தது அவளின் உடல்.

அவளையும் மீறி அவளின் கைகள் அவன் தலையைக் கோதியது.

“சாரிடா கண்ணுமா! இது பீரியட்ஸ் டைம்ன்றதை கூட மறந்துட்டு வேலை வேலைனு இருந்திருக்கேனே. ஏன்டா அந்த வலில இருக்கும் போது தான் உன்னை நான் அடிக்க வந்தேனா? எவ்ளோ ஹர்ட் ஆகிருப்ப நீ? உன்னைய எப்படிலாம் பார்த்துக்கனும்னு நினைச்சேன். ஆனா இப்ப நான் என்ன செஞ்சி வச்சிருக்கேன். என்னைய எனக்கே பிடிக்கலை” கண்களில் கண்ணீர் பெருகி அவளின் மடியினை நனைக்க, நா தழுதழுக்கக் கூறியிருந்தான்.

அவனின் கண்ணீரை தன்னுள் அவள் உணர்ந்த நொடி அவளது கண்களும் குளம் கட்ட, அவளது ஒரு சொட்டு நீர் அவன் தலையில் பட்டுத் தெறித்தது.

தனக்கான அவனது கண்ணீரில் அவனின் மீதான பயம் முற்றிலுமாய்த் தன்னை விட்டு நீங்க கண்டாள் ஆதினி.

ஆயினும் அவன் மீதான கோபம், நம்பிக்கையின்மை எங்கோ ஓர் மூலையில் அவளது அடிமனதில் புதைந்திருக்க, அவனிடம் ஏதும் கூறாது அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“நீ எனக்குக் கொடுக்கிற தண்டனையா நினைச்சு இப்ப உன்னை இங்க விட்டுட்டு போறேன். ஆனா நீ இல்லாம வாழ்க்கைனு ஒன்னு எனக்குக் கிடையாது ஆதுமா. அதை மட்டும் மறந்துடாத கண்ணுமா. லவ் யூ சோ மச்” எனக் கூறி அவளது முகத்தைப் பற்றி நான்கு விழிகளையும் விழி நீரினிடையே உறவாட விட்டவன், அவளின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு அங்கிருந்து சென்றான்.

— தொடரும்