முள்ளில் பூத்த மலரே – 31

முள்ளில் பூத்த மலரே 31 :

“என்னது அந்தப் பெரியவர் தான் ரவியா? அப்ப நேத்து அவர் சொன்னதுலாம் மலர் அத்தையையும் மதுரன் ஆதினி பத்தியுமா” என அதிர்ந்து நின்றான் அகிலன்.

ரவி என மாணிக்கம் கூறவும் மலருக்குமே பேரதிர்ச்சியாய் இருந்தது.

அச்சமயம் அங்கு வந்தாள் பொன்னிலா. மதுரனின் வெளிநாட்டுப் பயணத்தில் கவலையுற்றிருக்கும் மாணிக்கம் மலருக்கு ஆறுதலாய் இருக்கலாம் என எண்ணி இவள் வந்திருக்க அங்கிருந்த அனைவரையும் பார்த்து அதிர்ச்சிக்குள்ளானாள்.

அங்கிருந்த அனைவரினது முகத்தினிலும் படர்ந்திருந்த வேதனையே அங்கு ஏதோ சரியில்லை என அவளுக்கு உணர்த்தியது.

அவளை அமர சொல்லி விட்டு அகிலனின் பதிலுக்காய் மற்றவர்கள் அகிலனை நோக்கினர்.

மாணிக்கத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்திருந்தாள் ஆதினி.

“அய்யோ மாமா! அவர் தான் ரவினு எனக்குத் தெரியாது. நேத்து என்னோட ப்ராஜக்ட் சக்ஸஸ்புல்லா ஆன்போர்ட் ஆகிட்டுனு டீம்மெட்ஸ்லாம் அந்தப் பேக்கிரிக்கு பக்கத்துல இருந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு ட்ரீட்னு போனோம். ட்ரீட் முடிஞ்சி கடையை விட்டு வெளில வரும் போது தான் அவர் என்னை இடிச்சா மாதிரி வந்து கீழே விழுந்தாரு. நான் அவர் குடிச்சிட்டு வந்து இப்படி விழுறாருனு நினைச்சு அவரைத் திட்ட போகும் போது தான் அவர் எழுந்து நிக்கப் பிடிமானம் தேட கையைத் தடவும் போது தான் அவருக்குக் கண் தெரியலைனு புரிஞ்சிது”

“என்னது கண் தெரியலையா?” இந்தச் செய்தி அனைவருக்கும் கலவையான உணர்வை தந்தது. ஆனால் எவருமே மகிழ்வு கொள்ளவில்லை.

தனக்குத் தீங்கு இழைத்தவன் துன்புறுகையில் கவலை கொள்ளாது இருப்பினும் இன்புறுதல் ஆகாது. அவரின் பாவத்திற்கான தண்டனை அனுப்பவிக்கிறாரென எண்ணி கடந்து விட வேண்டும்.

அவன் மேலும் தொடர்ந்து கூறட்டுமென அனைவரும் அமைதி காத்தனர்.

“நான் அவர் கையைப் பிடிச்சி நிறுத்தி கண்ணு தெரியாம ஏன் சார் தனியா வந்தீங்கனு கேட்டேன். பக்கத்துல உள்ள ஐ ஹாஸ்ப்பிட்டல் போகனும். என்னைய கூட்டிட்டு போக முடியுமானு கேட்டாரு. அது நடக்குற தூரத்துல தான் இருந்தனால சரினு என் ஆபிஸ் ப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டு அவர் கையைப் பிடிச்சி கூட்டிட்டு போனேன்”

“தொந்தரவுக்கு மன்னிக்கனும்பா. ஏற்கனவே வழியில இரண்டு மூனு இடத்துல விழுந்து கால்ல அடிபட்டுடுச்சுனு அவர் காலை காமிச்சு சொல்லவும், குனிஞ்சு பார்த்தா கால்ல அங்கங்கே அடிபட்டு ரத்தம் வந்துட்டு இருந்துச்சு”

“ஏன் சார் தனியா வந்தீங்கனு நான் திரும்பவும் கேட்டேன். எனக்குத் துணையா யாருமில்லைபானு கண்ணு கலங்க சொன்னாரு. எல்லாம் நான் செஞ்ச பாவம். எந்தப் பையனுக்காக ஓடி ஓடி உழைச்சி சேர்த்து வச்சேனோ, அவன் அவனோட பொண்டாட்டி பேச்ச கேட்டுட்டு அது எல்லாத்தையும் என்கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டு என்னையும் வீட்டை விட்டு துரத்திட்டான். என் மனைவி இதெல்லாம் பார்க்க கூடாதுனு தான் என் மகனுக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இறந்துட்டா போலனு சொன்னாரு”

“இப்ப எங்க தங்கி இருக்கீங்கனு கேட்டேன். அவர் நண்பன் தான் அவரோட மொட்டை மாடில சின்னதா குடிசை மாதிரி போட்டுக் குடுத்திருக்கிறதா சொன்னாரு. ஆனா அவருக்கும் அவர் வீட்டுல மதிப்பில்லை போல இவரை வாடகை தர சொல்லி கேட்கிறாங்கனு சொன்னாரு”

“கண்ணு எப்படித் தெரியாம போச்சுனு கேட்டேன். இரண்டு வாரமா மங்கலா தெரிஞ்ச பார்வை நாலு நாளா சுத்தமா தெரியலையாம். எல்லாம் நான் செஞ்ச பாவம்னு திரும்பவும் சொல்லவும் அப்படி என்ன செஞ்சீங்கனு கேட்டேன்”

“பணத்துக்காக முதல் கல்யாணத்தை மறைச்சு இரண்டாவது கல்யாணம் செஞ்சேன். அவளுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைங்களையும் என் பிள்ளைங்களா நான் ஏத்துக்கலை. என் அப்பா இறந்து அவரோட சொத்துலாம் என் பேருக்கு வந்ததும் இரண்டாவது மனைவிக்கு டைவர்ஸ் கொடுத்துட்டேன். அப்பவே என் சொந்தகாரங்கலாம் என்னைய விட்டு போய்ட்டாங்கனு சொன்னாரு. அந்தப் பிள்ளைகளுக்கு அப்பாவா நான் எதையும் செஞ்சதில்லை. என் முதல் மனைவியோட மகனை தான் தூக்கி வச்சிட்டு ஆடினேன்னு சொன்னாரு”

“எனக்கு அப்ப கூட அது ஆதுவும் மதுவும்னு ஸ்டைரக் ஆகலை” எனத் தலையில் கை வைத்தவன், மீண்டுமாய்த் தொடர்ந்து,

“ஒரு மனுஷன் அவனோட கடைசிக் காலத்துல மகன் மருமக, மகள் மருமகன்னு அவங்களோட பூரணக் கவனிப்புல பேரன் பேத்தியோட இன்பமான வாழ்வை வாழ்ந்து இறந்து போறான்னா அவன் தான் வாழ்க்கைல எந்த அதர்ம செயலும் பாவமும் செய்யாம நல்லபடியா வாழ்ந்திருக்கான்னு அர்த்தம். தெய்வம் நின்னு தான்ப்பா கொல்லும்னு சொன்னாரு”

“இதையெல்லாம் நான் ஏன் உன்கிட்ட சொல்றேனா நீ இளம் வயசு பையனா தான் இருக்கனும். இதெல்லாம் உன் வாழ்க்கைக்குப் படிப்பினையா இருக்கும்னு தான் சொல்றேன்னு சொன்னாரு”

“இப்ப எப்படி உங்க செலவுக்குப் பணமெல்லாம் யாரு தர்றாங்கனு கேட்டேன். கொஞ்ச நாள் டியூஷன் எடுத்தாராம். இப்ப கண்ணு தெரியாம எடுக்கலையாம். காசிருந்தும் கூட இருந்து கவனிக்க ஆளில்லாம தான் ஹாஸ்பிட்டல் வராம இருந்திருக்காரு. இப்ப வேற வழியே இல்லாம தான் வந்தாராம்”

“அந்த ஹாஸ்ப்பிட்டல் வரவும் அவரை அங்க நர்ஸ்கிட்ட உட்கார வச்சி நான் கிளம்புறேனு சொல்லி, உங்களை எதுவும் முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுடவானு கேட்டேன். அப்ப தான் அவரோட ப்ரண்ட் இவரைத் தேடி ஹாஸ்பிட்டல்க்கு வந்தாரு. அவருமே ரொம்ப வயசாகி தாங்கி தாங்கி நடந்து தான் வந்தாரு. நான் வரேனு சொன்னேன்ல அதுக்குள்ள ஏன் தனியா வந்தனு அவர் கிட்ட சண்டை போட்டுட்டு என் மருமக இவரை அவமானமா பேசிட்டாப்பா அதுக்குக் கோவிச்சிக்கிட்டு இப்படித் தனியா வந்துட்டான். உன்னோட உதவிக்கு ரொம்ப நன்றிப்பானு கையெடுத்து கும்பிட்டாரு. இப்படி ஒரு ப்ரண்ட் இருக்கும் போது அவர் ஏன் முதியோர் இல்லத்துல இருக்கனும்னு நானே மனசுக்குள்ள நினைச்சிட்டு கிளம்பி வந்துட்டேன்” முழுதாய் நிகழ்வுகளைக் கூறி முடித்தவன்,

“ஆமா ஆது நீ எப்ப அங்க வந்த? ரவியோட முகம் உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா?” அவன் ஆச்சரியமாய்க் கேட்க,

“நான் பார்த்து பார்த்து பயந்த முகத்தை எப்படி மறக்க முடியும்?” எங்கோ வெறித்து நோக்கி உரைத்தவள்,

“தூரத்துல முதல்ல உங்களைத் தான் பார்த்தேன். உங்ககிட்ட பேச உங்க பக்கத்துல வந்தேன். நீங்க ஹாஸ்பிட்டல்குள்ள போகவும் யாருக்கு என்னாச்சுனு பதறிட்டு வண்டியை நிறுத்திட்டு உங்க பின்னாடியே வந்தேன். நீங்க அவரை உட்கார வச்சிட்டு நர்ஸ்ஸை கூட்டிட்டு வர போகும் போது தான் அவர் முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு கூர்ந்து கவனிச்சேன். அது அவர்னு தெரிஞ்சதும் கை கால்லாம் நடுங்க ஆரம்பிச்சிட்டுது” அதற்கு மேல் ஏதும் கூறாமல் மாணிக்கத்தின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.

மாணிக்கமும் மலரும் இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் வாழ்வில் அவ்வப்போது வரும் இந்தச் சிறு சிறு இன்னல்கள் தாண்டி அவர்களின் வாழ்வு நன்றாய் தானே இருக்கிறது. அன்பு சூழ் உலகாய் தானே அவர்களின் வாழ்வு அமைந்திருக்கிறது. இவ்வாறாகத் தான் மாணிக்கம் மற்றும் மலரின் மனவோட்டம் அச்சமயம் இருந்தது.

“சரி அகி. இதைப் பத்தி இனி எதுவும் பேச வேண்டாம்” எனப் பெருமூச்சுடன் ரவியைப் பற்றிய பேச்சுக்கு மாணிக்கம் முற்றுபுள்ளி வைத்தார்.

“ஆனா மாமா இப்ப ஆதினி அகிலன் அண்ணன் மேல கோபமா இருக்கிறதுக்கும் ரவியை இவர் பார்த்ததுக்கும் என்ன சம்பந்தம்?” ஆதினி அகிலனின் முகம் பார்த்து பேசாது தவிர்ப்பதிலேயே ஏதோ சரியில்லை என உணர்ந்த பொன்னிலா, ஆதினியின் கோபத்திற்கான காரணம் அறிந்து சரி செய்யும் எண்ணத்தில் இக்கேள்வியினைக் கேட்டாள்.

பொன்னிலாவை நிமிர்ந்து பார்த்த ஆதினி, “இவர் என்னை அடிக்க வரவும் இவருக்கும் ரவிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. ரவி அம்மாவை கொடுமைபடுத்தின மாதிரி என்னையும் கொடுமை படுத்த தான் கல்யாணம் செஞ்சிருக்காருனு மனசுல பல விதமான எண்ணங்கள் வந்து போச்சு. அது அப்படியே கனவா வரவும் பதறிட்டு முழிச்சேன். அந்தப் பயத்துல தான் உடனே அப்பாக்கு ஃபோன் செஞ்சேன்” என்றாள் ஆதினி.

“ஓ இவ்ளோ விஷயம் நடந்திருக்கா!” என மனதில் எண்ணிக் கொண்டாள் பொன்னிலா.

“இன்னமும் ரவி செஞ்ச கொடுமைலாம் நியாபகம் வச்சிருக்காளா இவ”  என ஆதினியை அதிர்ந்து நோக்கினர் மலரும் மாணிக்கமும்.

அகிலனின் நிலைமை தான் மோசமாய் இருந்தது.

“என்னைய அவ்ளோ கொடூரமானவன்னு நினைச்சிட்டியா கண்ணுமா! என் கூட இத்தனை நாள் வாழ்ந்ததுல என் காதலை நீ புரிஞ்சிக்கவே இல்லையா” கூர் வேல் கொண்டு இதயத்தை அறுத்த வலி அவனுக்கு.

இவ்வலியினைக் கண்களில் தேக்கி அவன் ஆதினியை பார்க்க, மலருக்கும் நிலாவிற்கும் அவனின் வலி நன்றாகவே புரிந்தது.

மாணிக்கத்திற்கு மகளின் வலியும் வேதனையும் தவிர வேறெதுவும் பிரதானமாய் மனதிற்குள்ளும் மண்டைக்குள்ளும் ஏறவில்லை.

“மாமா நான் ஆதுகிட்ட தனியா பேசனும்” அகிலன் கேட்க,

“நான் எதுவும் பேச விரும்பலைப்பா!”
ரவியை இவனுடன் சேர்த்து வைத்து இவள் யோசித்திருந்த கற்பனையான பயங்கள் எல்லாம் அவள் மனதிலிருந்து சற்றாய் விலகியிருந்தாலும், இத்தனை நாள் தன்னைத் தனியாகத் தவிக்கவிட்ட அவன் மீதான கோபமும் அவன் அடிக்க வந்ததினால் ஏற்பட்ட நடுக்கமும் அவளை விட்டு போவதாய் இல்லை.

ஆக அகிலன் அவ்வாறு கேட்கவும், “நான் யார்கிட்டயும் இப்ப பேச விரும்பலைபா” என்று கூறி விட்டு அவளறைக்குள் சென்றுவிட்டாள்.

அவன் கவலையாய் மாணிக்கத்தைப் பார்க்க, “அவளுக்குக் கொஞ்சம் டைம் கொடுடா அகி. எந்த நிலையிலும் அவளை வெறுத்துடாதடா” தந்தையாய் தன் மகளுக்காக அவன் கைப்பற்றி அவர் கூற,

“என்ன மாமா நீங்க?” அகிலன் சங்கடமாய் அவரை நோக்க,

“அவ உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கா… அதான் அவளால நீயா இப்படினு ஏத்துக்க முடியாத பரிதவிப்பு தான் இப்படிக் கோபமா பயமா வெளிபடுது. ரொம்ப நாள் அவளால உன்னைய விட்டுட்டு இருக்க முடியாது. கொஞ்ச நாள் பொறுத்துக்கோப்பா”

“அய்யோ மாமா அவ இல்லாம நான் மட்டும் எப்படிச் சந்தோஷமா வாழுவேன். நீங்க எதுவும் மனசை போட்டு குழப்பிக்காம இருங்க. அவளோட மேனேஜரை பார்த்து ஆபிஸ்க்கு ஒரு வாரம் லீவ் நானே சொல்றேன். சரி மாமா கிளம்புறேன்” என்றுரைத்து விட்டு கிளம்ப எத்தனிக்க,

“தேங்க்ஸ் தம்பி” என்றார் மலர்.

“இரண்டு பேரும் இப்படி மாத்தி மாத்தி பேசி என்னைய வேற ஆளு போல ஃபீல் செய்ய வைக்காதீங்க. நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் தானே. அடிச்சிக்கப் பிடிச்சிக்கச் சண்டை போடனு நமக்கு உரிமையுள்ள உறவு தானே இது. என்னைய நீங்க என்னிக்குமே மாப்பிள்ளையா பார்க்காம இப்படிப் பழகுறது தான் எனக்கு வேணும்! என் ஆதுக்காக எவ்ளோ நாள் வேணும்னாலும் நான் காத்திருப்பேன்” என்றவன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

அதன் பின்பு பொன்னிலாவும் மதுரனின் பயணத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டு கிளம்பி செல்ல, ஆதினிக்கு உணவை கொடுத்து விட்டு அவளை நடுவில் படுக்க வைத்து இரு பக்கமும் மாணிக்கமும் மலரும் படுத்து கொண்டனர்.

மன அழற்சியில் ஆதினி உடனே உறங்கி விட, அவளின் தலையைக் கோதி கொண்டிருந்த மாணிக்கம் மலரை பார்க்க, அவரின் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில், “என்ன பேபிமா என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” எனக் கேட்டார்.

“ஷ்” எனத் தனது வாய் மீது கை வைத்து வரவேற்பறைக்கு வருமாறு செய்கை செய்து அங்குச் சென்று நின்றார் மலர்.

மாணிக்கம் வரவும் அவரை அணைத்து மார்பில் சாய்ந்து கொண்டார்.

“எனக்கு இன்னிக்கு நிறைய நேரம் நீங்க என் அப்பாவை ஞாபகப்படுத்திட்டீங்க” மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தி மாணிக்கத்தின் முகம் நோக்கி கூறிய மலர்,

“எப்ப பாப்பா உங்க மடியிலே உட்கார்ந்து கழுத்தக் கட்டிக்கிட்டாலும் என் அப்பாகிட்ட நான் இப்படி உட்காருர ஞாபகம் வரும். ஆனா இன்னிக்கு உங்க செயல்ல என் அப்பாவயே மிஞ்சிட்டீங்கப்பா!” மலரின் கூற்றில் மென்மையாய் சிரித்த மாணிக்கம்,

“என்னால தான் என் பிள்ளைங்க வாழ்க்கை இப்படியாச்சுனு இரண்டு நாளா அழுது புலம்பிட்டு இருந்த! இப்ப என்ன ஆச்சாம்” கேலியாய் மாணிக்கம் கேட்க,

“அந்தக் கவலை இருக்குது தான்ப்பா. ஆனா என்னாலனு நான் புலம்பினது தப்புன்னு புரிய வைக்கத் தான் கடவுள் ரவியை நம்ம மாப்பிள்ளை கண்ணுல காமிச்சாரு போல!”

மாணிக்கத்தை விட்டு தள்ளி வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து பெருமூச்செறிந்தவர், “யார் எப்படி இருந்தா என்ன? எனக்கு நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருந்தா போதும்ப்பா! அவங்க நல்வாழ்வு தானே நமக்கு வேணும்” என்றார் மலர்.

அவர் அருகில் அமர்ந்து கைகளைத் தட்டி கொடுத்து ஆமென ஆமோதித்தார் மாணிக்கம்.

“பாப்பாவை எப்படிப்பா சரி செய்றது? அவ மனசுல உள்ள பயத்தைப் போக வைக்கனும். இனி என்னிக்கும் அவ மாப்பிள்ளைய பார்த்துப் பயப்படக் கூடாது! பாவம் அந்தத் தம்பி முகத்துல அவ்ளோ வேதனை தெரிஞ்சிது” தனது மகள் மாப்பிள்ளை எண்ணி பரிதவிப்பாய் மலர் கூற,

“அதெல்லாம் சரி பண்ணிடலாம். அகிலன் சரி செஞ்சிடுவான்” மாணிக்கம் கூற,

“அதுக்கு அவ அகிலனை பக்கத்துல வர விடனுமே” மலர் கூற,

“ஹ்ம்ம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்” என்று மாணிக்கம் கூறவும்,

“இருந்தாலும் மாப்பிள்ளைய நீங்க அடிச்சிருக்கக் கூடாது! வேற பையனா இருந்தா நீயாச்சு உன் பொண்ணாச்சுனு போய்ருப்பாங்க” மலர் கூறவும்,

சற்று கவலையாய், “ஹ்ம்ம் ஆமா” என ஆமோதித்தவர், “நம்ம கண்ணம்மாக்கு ஒரு பிரச்சனைனா என்னால பொறுமையா எதையுமே யோசிக்க முடியலை பேபிமா! அகிலன் நம்ம பாப்பாக்கு கிடைச்ச வரம் தான்” என்றவர் கூறவும்,

“ஆமா எனக்கு நீங்க கிடைச்ச மாதிரி” எனக் கூறி தோள் சாய்ந்து கொண்ட மலர்,

“ஆமா மது ஃபோன் செஞ்சானா? அங்க ரீச் ஆயிட்டானா” எனக் கேட்டு அவனுக்கு அழைப்பு விடுத்து பேசலானார்.

திருமணத்திற்குப் பிறகு ஆதினி இல்லாமல் அகிலன் தனதறையில் தனித்துறங்கும் முதல் நாள் இது.

இரவு எவ்வளவு தாமதமாய் வீடு வந்தாலும் அவளது அருகாமை தரும் இதமான மனநிலை இன்று அவளில்லாது வெறுமையை உணர்த்த, படுக்கையில் தன்னருகில் படுத்துறங்கும் அவளது படுக்கையைத் தடவிப் பார்த்தான்.

மனதின் வேதனை கண்களை நிறைக்க,

“கண்ணுமா நான் அப்படியா உன்னைக் கொடுமைபடுத்திடுவேன்னு நினைச்ச! என் மேல உள்ள நம்பிக்கை போகுற அளவுக்கா நான் நடந்துக்கிட்டேன். பக்கத்துல தானே இருக்க, என் வேலை முடிஞ்சதும் எல்லாம் சொல்லி சரி செஞ்சிடலாம்னு நினைச்சேனே!”

மனம் பொறுக்காமல் வாய் விட்டு புலம்பியவன்,

“எப்பவுமே பக்கத்துல இருக்கும் போது அருமை தெரியாதுனு சொல்றதை இன்னிக்கு எனக்குப் புரிய வச்சிட்ட கண்ணுமா! நீ இல்லாத ஒரு நாளும் நரகமா நகருது கண்ணுமா” மனம் வலிக்க நா தழுதழுக்கக் கூறியவன்,

“திரும்ப உன் கண்ணுல எனக்கான அந்தக் காதலை நான் பார்ப்பேன். உன்னைச் சரி செய்ய என்னலாம் செய்யனுமோ கண்டிப்பா செய்வேன் கண்ணுமா” உறுதி மொழி பூண்டவன்,

வெகு நேரம் அவள் அருகாமை இல்லாது உறக்கம் வராது தத்தளித்தவன், அவளது புடவையினை எடுத்து தன் மீது போட்டுக் கொண்ட பின்னேயே உறக்கத்தைத் தழுவினான்.

அங்கு மதுரனிடம் பேசிவிட்டு படுக்கையறை சென்ற மாணிக்கம் மலர், ஆதினியின் உறங்கும் விழியிலிருந்து விழி நீர் கசிவதை கண்டு திகைத்து அவளை அசைத்து பார்க்க,  அவளோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

ஆழ் நித்திரையிலும் அவள் மனதின் வேதனை இவ்வாறாய் வெளிபடுவதை எண்ணி கலங்கிய மாணிக்கமும் மலரும் இதற்கொரு தீர்வை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே அவளது இரு பக்கத்திலும் படுத்து கொண்டு அவளை தட்டி கொடுத்துக் கொண்டே உறங்கினர்.

அதே நேரம் பொன்னிலாவும் ஆதினியை எவ்வாறு சரி செய்வதென இரவு நெடுநேரம் சிந்திந்து அதற்கொரு உபாயம் கிட்டிய பின்னரே உறக்கம் கொண்டாள்.

— தொடரும்