முள்ளில் பூத்த மலரே – 30

முள்ளில் பூத்த மலரே 30

ஆதினி அவ்வாறு அழைத்துக் கூறவும் உடனே வருவதாய் உரைத்து காரை அவளின் இல்லத்திற்குச் செலுத்தினார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் அருகிலிருந்த மலர், அவரின் பதட்டத்தைப் பார்த்து விவரத்தை கேட்க, “ஒன்னுமில்லடா ஆதுக்கு! நம்மளை பாரக்கனும்னு போல இருக்குனு சொல்றா… பார்த்துட்டு போய்டுவோம்”

“இந்த நேரத்துலயா??” எனக் கேள்வியாய் நெற்றியை சுருக்கிய மலர்,

“எதுவும் கெட்ட கனவு கண்டாளா?” எனக் கேட்டார்.

“ஹ்ம்ம் இருக்கலாம்” மாணிக்கம் சற்று கவலையாய் கூற,

“சரி நீங்க பதட்டபடாம கவலைபடாம ஓட்டுங்க. எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம்” தன் வார்த்தையால் மாணிக்கத்திற்குத் தெம்பளித்தவர் பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் மனதினை தயார்படுத்திக் கொண்டார்.

ஆம் அங்கு ஏதோ பிரச்சனை என அவரின் உள்ளுணர்வு உரைத்தது.

ஆதினிக்குப் பிரச்சனை என்றால் மாணிக்கத்தின் மனம் வெகுவாய் துவண்டு போகும். எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் தத்தளிக்கும் என அறிந்திருந்தார் மலர்.

எனவே தான் அங்குச் சென்றதும் மகளின் கண்ணீர் கண்டு நொடிந்து போகாமல் பிரச்சனை என்னவெனக் கண்டுபிடிக்க வேண்டும் என எண்ணி கொண்டு தனது மனதினை திடப்படுத்திக் கொண்டார்.

அங்குச் சென்று அவர்கள் வரவேற்பொலியை அழுத்தி விட்டுக் காத்திருக்க, அரைகுறை உறக்கத்திலிருந்து வந்து கதவை திறந்தார் தர்மன்.

அவர் கதவை திறந்து இவர்களைப் பார்த்து திகைத்து நின்றார்.

அவர்களை உள்ளழைத்து, “என்ன இந்த நேரத்துல வந்திருக்கீங்க?” கேட்டார் தர்மன். மணி காலை ஐந்தரை மணியைக் காண்பித்தது.

உள்நுழைந்ததும் நேராய் சென்று ஆதினியின் அறை கதவை தட்டினார் மாணிக்கம்.

அதில் முழுதாய் உறக்கம் கலைந்து பதட்டமடைந்த தர்மன், “என்னாச்சு நேத்து போட்ட சண்டை இவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சா? இந்தப் பசங்க ரூம்குள்ள போய்த் திரும்பவும் சண்டை போட்டுகிட்டாங்களா?” எனப் பலவித எண்ணங்கள் சுழல மாணிக்கத்திடம் என்னவாயிற்று எனக் கேட்டார்.

மாணிக்கம் ஆக்ரோஷமாய்க் கதவை தட்டி, “ஆதுமா அப்பா வந்திருக்கேன்” எனக் கூறிய சத்தத்தில் அவ்வீட்டிலிருந்த மற்ற அனைவரும் உறக்கம் கலைந்தனர்.

ஆதினி இச்சத்தம் கேட்ட நொடி ஓடோடி வந்து கதவை திறந்து, “அப்பா” எனக் கதறிக் கொண்டே அவரின் கைகளுக்குள் அடைக்கலமாகி இருந்தாள்.

அப்பொழுது தான் இச்சத்தத்தினால் முழித்த அகிலன் ஏதும் புரியாது மலங்க மலங்க விழித்து நோக்க, “அப்பா என்னைய இங்கிருந்து கூட்டிட்டு போய்டுங்க. இவர் எனக்கு வேண்டாம். இவர் என்னைய அடிச்சிடுவாருனு பயமா இருக்கு” எனச் சிறுபிள்ளையாய் கண்ணீர் சிந்தி கூற,

அவளின் கூற்றில் அதிர்ந்து உறக்கம் கலைந்து மெத்தையை விட்டு அவசரமாய் எழுந்த அகிலன், மாணிக்கத்தின் கைகளுக்குள் இருந்த ஆதினியின் அருகில் வந்து, “கண்ணுமா என்னாச்சு” அவளின் முதுகை தொட்டு அவன் கேட்க,

அவளின் உடல் பயத்தில் நடுங்க அதிர்ந்தடங்கியது.
அந்த நடுக்கத்தை அவளின் பயத்தை உணரவில்லை அகிலன்.
அவளின் நடுக்கத்தைத் தனது கைகளில் உணர்ந்த மாணிக்கத்தின் கண்கள் கோபத்தில் சிவக்க, அகிலனை நன்றாய் முறைத்தவர், நிமிடமும் யோசியாது, “வா மா நம்ம வீட்டுக்குப் போகலாம்” எனச் செல்ல,

“மாமா இருங்க” என அகிலனும்,

“இருங்கப்பா ஒரு நிமிஷம்! என்னாச்சுனு கேட்போம்” என மலரும் ஒரு சேர கூற,

சற்றாய் நின்றவர், அகிலனின் அருகில் வந்து, “கண்ணம்மாவை அடிச்சியா?” எனக் கேட்டார்.

அவரின் கேள்வியில் அவனின் தலை தாழ்ந்து முகம் குற்றயுணர்வை சுமக்க, அதற்கு ஆமென்று தானே பொருள். ஆக நிமிடமும் யோசியாது பளாரென அவனை அறைந்திருந்தார். மகள் மேல் கொண்ட பாசம் அவரின் கோபத்தினைத் தூண்ட அச்செயலை செய்திருந்தார் அவர்.

அங்கிருந்த அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, சத்யா தன்னிலை அடைந்து, “அதெப்படி நீங்க என் பையனை அடிக்கலாம்” என ஆங்காரமாய்க் கேட்க,

மாணிக்கம் முறைப்பாய் அவரை ஒரு பார்வை பார்த்ததில் அடங்கிப் போனார்.

“பொம்பளை பிள்ளைய அடிக்கிறவன் என்னயா மனுஷன்” கோபமாய்க் கத்தியவர், “என் பொண்ணு இல்லாம கொஞ்ச நாள் இருந்துப்பாரு. அப்ப தான் இத்தனை நாளா நீ இல்லாம அவ பட்ட கஷ்டம் உனக்குப் புரியும்” கோபமாய் உரைத்தார்.

ஆதினியிடம் அழுகையைத் தவிர வேறெந்த உணர்வும் வெளிபடவில்லை.
மாணிக்கம் அறைந்ததில் அப்பா என ஒரு வார்த்தை கதறியவள் அதன் பின் வேறெதுவும் பேசவில்லை. அவரின் கோப பார்வையை எதிர்த்து பேசும் திறனற்று இருந்தாள் அவள்.

மலர் மீண்டுமாய் மாணிக்கத்திடம் பொறுமை காக்க சொல்லி கூற, “இன்னும் நான் இங்க இருந்தேனா இவனை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது பேபிமா. வா முதல்ல இங்கிருந்து கிளம்புவோம்” என உரைத்து ஆதினியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து விரைவாய் சென்று விட்டார் மாணிக்கம்.

அகிலன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“இவர் எப்படி இப்ப இங்க வந்தாரு” எனச் சிந்தித்தவாறு அவன் அமர்ந்திருக்க,

“ஏன்டா அவர் அறையுறதுக்கு முன்னாடியே நான் கை தான் ஓங்கினேன், அவளை ஒன்னும் அடிக்கலனு சொல்ல வேண்டி தானே” மகனின் கன்னம் தடவி ஆதங்கமாய்ச் சத்யா கேட்டுக் கொண்டிருக்க,

“அப்படிக் கை ஓங்கினதுக்கு எனக்குக் கிடைச்ச தண்டனையா இதை ஏத்துக்கிறேன்மா. அவர் என்னைய அடிச்சதுல எனக்கு வருத்தம் இல்லைமா” அகிலன் கூறவும்,

“உனக்குக் கவலை இருக்காது. நீ தான் மாப்பிள்ளைன்ற கெத்து காமிக்காம உன் பொண்டாட்டி குடும்பத்துக்கு அடிமையாகி போய்ட்டியே. ஆனா எங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிச்சியா? இப்படி நீ மத்தவங்ககிட்ட அடி வாங்குறதுக்கா உன்னைப் பெத்து போட்டோம்” மனம் பொறுக்காமல் கண்ணீருடன் சத்யா உரைக்க,

“நேத்து அவளை அடிக்கக் கை ஓங்கின நான், அவளை அடிச்சிருந்தா…. அவங்களுக்கும் அப்படித் தானே தோணிருக்கும்மா. அவங்க மகளை நான் அடிக்கவா அவங்க எனக்குக் கட்டி கொடுத்தாங்க?” எதிர் கேள்வி அவன் கேட்கவும் வாயடைத்துப் போனார் சத்யா.

“என் மேல தான் தப்புமா! நான் போய்ப் பேசி என் பொண்டாட்டிய கூட்டிட்டு வரேன்” அகிலன் கூறவும் அவனைப் பெருமிதமாய்ப் பார்த்திருந்தார் தர்மன்.

“தப்புச் செய்றது மனித இயல்பு தான்யா. ஆனா தான் செஞ்ச தப்பை உணர்ந்து அதை ஏத்துக்கிட்டு அதுக்கான தண்டனையும் ஏத்துக்கிறதுக்குப் பெரிய மனசு வேணும்யா. என் பையன் தப்பு செஞ்சாலும் அதைச் சரி செஞ்சுக்கக் கூடிய பக்குவம் உள்ளவன்ற நம்பிக்கைய எனக்கு நீ கொடுத்திருக்க. போ போய் ஆதுகிட்ட பேசி சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா. அவங்க அப்பா அம்மாகிட்டயும் மன்னிப்பு கேளு” தர்மன் உரைக்கச் சரியெனத் தன்னறைக்குச் சென்றான் அகிலன்.

அகிலன் கூறுவதில் இருந்த உண்மை சத்யாவை சுட அமைதியாய் அமர்ந்து விட்டார் சத்யா. அவரின் மனதில் முந்தைய நாள் நிகழ்வுகள் நிழலாடியது.

மதுரனிடன் அந்தப் பரிசை வழங்கிவிட்டு ஆதினி அங்கிருந்து கிளம்ப முற்பட்ட சமயம், மதுரன் மாணிக்கம் இருவருமே அவளுடன் வருவதாய்க் கூறி கிளம்ப, யாரும் தன்னுடன் வர வேண்டாமென அடமாய் உரைத்து தனியாகவே அவ்விடத்திலிருந்து கிளம்பினாள் ஆதினி.

வீட்டை வந்தடைந்த ஆதினியின் கண்கள் கலங்கியிருந்தது. மூளையோ பல விதமான சிந்தனைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்க, மனமோ பெரும் பயத்தில் தவித்தது.

இத்தகைய மனநிலையில் வீட்டிற்குள் வந்தவளை நிற்க வைத்துக் கேள்வி கேட்டார் சத்யா.

“நான் மதியம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ” எனச் சத்யா ஒரே பிடியாய் நின்றார்.

சத்யாவிற்குத் தன் மருமகள் தன் மகனிடம் பேசாமல் இருந்து விட்டு, தனது பிறந்த குடும்பத்துடன் மட்டும் இணக்கமாய் இருப்பது பிடிக்கவில்லை. அவனிடம் கூறாது இப்படி அவள் பிறந்து வீட்டிற்குச் சென்றதும் பிடிக்கவில்லை. அவனுடன் பேசி பிரச்சனையைத் தீர்த்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போகட்டும் என எண்ணினார் அவர்.

“என்னாச்சு சத்யா. எதுக்கு அந்தப் பொண்ணுகிட்ட சண்டை போட்டுட்டு இருக்க?” தர்மன் கேட்க,

“அவ இஷ்டதுக்கு அண்ணாவ பார்க்கிறேன் அப்பாவ பார்க்கிறேன்னு போய்டுறா? அகிலன்ட்ட இதைப் பத்திலாம் சொல்றதே கிடையாது. அவன் வேலைல பிசியா இருந்தா இவளாவது ஃபோன் போட்டு பேசலாம்ல. அவன்கிட்ட சண்டை போட்டு பேசாமலே இருக்கா?” சத்யா உரைக்க,

“இது அவங்க இரண்டு பேருக்குள்ள இருக்கப் பிரச்சனை இதை அவங்க தான் பேசி தீர்க்கனும். நீ ஏன் உள்ளே நுழைற” சத்யாவை அவர் கடிந்து கொள்ள,

“உங்களுக்கு ஒன்னும் புரியாது. அமைதியா இருங்க. இப்படியே விட்டா என்னையோ இல்ல நம்ம பையனையோ அவ மதிக்கவே மாட்டா” சத்யா பேசிக் கொண்டே போக,

ஏற்கனவே வெகுவான மன அழுத்தத்தில் இருந்தவளை உள்ளே செல்ல விடாமல் அவர் கேள்வி கேட்டதில் ஆத்திரமடைந்த ஆதினி,
“அத்தை, என் அப்பா அம்மா வீட்டுக்கு போறதுக்கு நான் யார்கிட்ட பெர்மிஷன் கேட்கனும். உங்ககிட்ட கூட நான் இன்பர்மேஷன்னா தான் சொன்னேனே தவிரப் பெர்மிஷன் கேட்கலை” தானிருந்த மனநிலையில் என்ன பேசுகிறோம் என்ற உணர்வில்லாமல் ஆத்திரத்தில் பேசியிருந்தாள் ஆதினி.

அவளின் பதிலில் கோபமுற்ற சத்யா, “அதுக்குத் தான் என் மகன் கிட்ட அன்னிக்கே சொன்னேன். அம்மாவே பஜாரி மாதிரி அப்படிப் பேசுறாங்கனா பொண்ணு மட்டும் அடங்கியா போகும்னு” என அவர் மேலும் வார்த்தையை விட,

ஏற்கனவே வலியில் இருந்தவளுக்கு இவ்வார்த்தைகள் எரி தழலாய் நெஞ்சை சுட வயிற்றில் சுருக்கென வலியை கொடுத்தது. என்னதான் ஆதினி பயந்த சுபாவியாய் இருந்தாலும், தனது தாய் தந்தையரை தன் முன் எவரும் அவமரியாதையாய் பேச அனுமதித்ததில்லை. உடனே பதிலடி கொடுத்து விடுவாள். அந்நேரம் அவளுக்கு எங்கிருந்து அத்தகைய துணிவு வருமென்பதை அவளே அறியாள்.

ஆயினும் தற்போது தனது கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், “அநியாயத்தைத் தட்டி கேட்டுச் சத்தமா பேசினா பஜாரி பட்டம் கொடுப்பீங்கனா அதை முதல்ல உங்களுக்குத் தான் கொடுக்கனும் அத்தை. எங்கம்மாவை பத்தி இனி ஒரு நேரம் இப்படி என் முன்னாடி பேசாதீங்க அத்தை” அவள் கூறி முடிக்கும் போது,

“என்னா பேச்சு பேசுறா இந்த ஆதி பொண்ணு” எனச் சத்யா வாய் பிளந்து நின்றிருக்க,

அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்த அகிலன், “எங்கம்மாவை பார்த்தா பஜாரினு சொல்ற” அவளை அடிக்கக் கை ஓங்கியிருந்தான்.

அவன் கை ஓங்கிய நொடி இவள் மயங்கி இருந்தாள்.

அதன்பிறகு தான், தான் செய்த தவறையே உணர்ந்தான் அகிலன்.

ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு, கோபம் கண்ணை மறைக்கும் என்கின்ற பழமொழிக்கெல்லாம் அவன் அர்த்தம் புரிந்து கொண்ட தருணமது.

அவளை மெத்தையில் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளிக்க, மயக்கத்திலிருந்து தெளிந்தவள் கண்ணில் கண்ணீர் பெருக தன்னறைக்குச் சென்று படுத்து கொண்டாள்.

அகிலனை சத்யாவும் தர்மனும் திட்டி தீர்த்தனர்.

அகிலனை தன்னைத் தொடவே விடவில்லை அவள். உண்ணவும் செல்லவில்லை. அவளை அவன் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் படுக்கையை விட்டு எழாது அப்படியே உறங்கி போனாள்.

தன் வாழ்நாளிலேயே தான் செய்த மிகப் பெரிய தவறிது என அப்பொழுதே உணர்ந்து கொண்டான் அகிலன்.

ஆதினியை எவ்வாறு சமாதானம் செய்வதெனத் தெரியாது அன்றைய இரவு வெகுவாய் தவித்துப் போனான் அகிலன். தான் செய்த காரியத்தை எண்ணி குற்றயுணர்வாகி மனம் பாரமாய் அழுத்தியது. உறங்கியிருந்த ஆதினியின் தலையைக் கோதி மன்னிப்பு கேட்டுக் கொண்டே தான் அன்றிரவு உறங்கி போனான் அகிலன்.

இந்நிகழ்வுகளை மாணிக்க மலர் பவனத்தில் தனது மாமா அத்தையிடம் அவன் உரைத்துக் கொண்டிருக்க,

மலருக்கு வெகுவான ஆச்சரியம், “ஆதினி இப்படிப் பேசினாளா?” திரும்பத் திரும்பக் கேட்டாரவர்.

அவன் ஆமெனக் கூறவும், “ஆதினிக்கு வேற ஏதோ பிரச்சனை இருக்கு. அவ மனசை வேற ஏதோ பெரிசா காயப்படுத்திருக்கு. அவ இப்படி மத்தவங்களைக் காயப்படுத்திப் பேசுற பொண்ணே கிடையாது. அவ மனசை ஏதோ பெரிசா காயப்படுத்திருக்கு. உங்களுக்குத் தெரியாம ஏதோ ஒன்னு அவ மனசுல புதைஞ்சிருக்கு தம்பி. அவ தூங்கி எழும்பட்டும் என்னனு கேட்போம்” என்றார் மலர்.

வீட்டிற்கு வந்ததும் அவளுக்குப் பால் குடிக்கக் கொடுத்து, தனது மடியில் சாய்த்துக் கொண்டு உறங்க வைத்தார் மாணிக்கம்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அகிலன் வரவும் அவனிடம் மன்னிப்பு கேட்டார் மாணிக்கம். “உன் மேல தப்பே இருந்தாலும் நான் அடிச்சிருக்கக் கூடாதுடா அகி” குற்றயுணர்வுடன் அவனின் கைப்பற்றி அவர் வேண்ட,

“அய்யோ நான் செஞ்ச தப்புக்கு நீங்க கொடுத்த தண்டனையா இதை ஏத்துக்கிறேன். நீங்க கவலைபடாதீங்க மாமா. ஆபிஸ் ஆபிஸ்னு அவள கவனிக்காமலே இருந்துட்டேனேனு இப்ப மனசு கிடந்து தவிக்குது” ரணமாய் அறுக்கும் மனதின் வேதனையுடன் உரைத்தான் அகிலன்.

தாய் மடி சேர்ந்த கன்றாய் நிம்மதியாய் உறங்கினாள் ஆதினி.

அன்று அவனை அலுவலகம் சென்று விட்டு மாலை வந்து ஆதினியை பார்க்க வருமாறு கூறி அனுப்பினார் மாணிக்கம்.

வெகு நேரம் உறங்கியவள் மாலை நேரமே கண் விழித்தாள்.

அவளுக்கு உணவை வழங்கி விட்டு அவள் உண்ணுவதைப் பார்த்திருந்தனர் மாணிக்கமும் மலரும்.

அவள் சாப்பிட்டு முடித்ததும், “நேத்து என்ன நடந்துச்சு ஆதுமா” மலர் கேட்க,

“ம்ப்ச் அவ இப்ப தானே எழுந்திருக்கா பேபிமா. உடனே உன் கேள்வியை ஆரம்பிக்கனுமா?” ஆதினி அருகில் அமர்ந்து அவர் கையைப் பற்றிக் கொண்டே மாணிக்கம் உரைக்க,

அவரை ஒரு பார்வை பார்த்து அடக்கிய மலர், “நீ சொல்லுடா ஆதுமா! நேத்து என்ன நடந்துச்சு?” மலர் கேட்க,

“அம்மா நான் அவரை… அவரை.. அவரை என் புருஷனோட பார்த்தேன்மா!” திக்கி திணறி பயத்துடன் கூறினாள் ஆதினி.

யாரை இவள் அகிலனுடன் பார்த்தாள் என இவர்கள் இருவரும் குழப்பமாய் நோக்க,

“எனக்கு அவரைப் பார்த்ததும் என்னன்னவோ ஞாபகம்லாம் வந்து அவ்ட் ஆஃப் கன்ட்ரோல் போய் நான் அத்தையை ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேன்மா! அத்தை கிட்ட சாரி கேட்கனும்மா” குற்றயுணர்வு மனதை வதைக்கக் கண்ணீருடன் அவள் பேச,

அந்நேரம் உள்நுழைந்தான் அகிலன்.
அவனைப் பார்த்ததும் அவளின் உடலில் நடுக்கம் பரவுவதைத் தனது கைகளில் உணர்ந்தார் மாணிக்கம். அகிலனை பார்க்கும் போதும் அவன் தொடும் போதும் அவள் உடலில் ஏற்படும் நடுக்கம், இதற்கு முன் ஒருவரிடத்தில் மட்டும் தான் அவளுக்கு அவ்வாறு நடுக்கம் ஏற்பட்டது என மாணிக்கத்திற்கு நினைவு வர, இது முந்தைய ஒரு நிகழ்வை ஞாபகப்படுத்த, யோசனை பாவம் அவர் முகத்தில் படர்ந்தது.

“யாரை என்கூடப் பார்த்த ஆதுமா!” அகிலன் உள் நுழையும் போதே அவள் கூறியதை கேட்டிருந்தானே ஆகையால் இக்கேள்வியைக் கேட்டான்.

அவள் அகிலன் மீது கொண்ட கோபத்திலும் பயத்திலும் அவனை நோக்காது அவனது கேள்விக்கும் பதிலளிக்காது அவனைத் தவிர்க்க,

“கண்ணம்மா அகிலனை யார் கூடப் பார்த்தானு எனக்குத் தெரிஞ்சிடுச்சு” என்ற மாணிக்கம்,

“உனக்கும் ரவிக்கும் என்ன தொடர்பு அகிலன்” எனச் சந்தேகப் பார்வை வீசி கேட்டார் மாணிக்கம்.

— தொடரும்