முள்ளில் பூத்த மலரே – 3

அகிலனின் குடும்பம் அந்த குடியிருப்புக்குள் குடித்தனம் ஆரம்பித்து இரு வாரங்கள் ஓடியிருந்தது.

தனது இரு சக்கர வாகனத்தில் தான் தினமும் அலுவலத்திற்கு செல்வான் அகிலன். அவ்வாறு தினமும் காலை தனது வண்டியை எடுக்கும் சமயங்களில் ஆதினியின் தந்தையும் தனது பணிக்கு செல்வதற்காக மகிழுந்தை எடுக்க வருவார்.  அச்சமயங்களில் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து தங்களது நிகழ்வுகளை பேசிக் கொள்வர்.

ஒரு நாள் அகிலன் தனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ்சிற்கு விட்டிருக்க, தனது அலுவலக தோழனின் வண்டியில் அன்று அலுவலகத்திற்கு பயணம் செய்தான்.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராய் வேலை செய்து கொண்டிருந்தான் அகிலன். 

அந்த அலுவலகத்தில் வாடிக்கையாருக்கு(clients)  ஏற்றவாறு தனித்தனி தொகுதியாய் பணியிடமும் அறையும் அமைத்திருந்தனர்.

அன்று அகிலன் மதிய உணவை தனது அலுவலக தோழமைகளுடன் உண்டுவிட்டு அவர்களுடன் அரட்டை பேசிக் கொண்டே தனது பணியிடத்திற்குச் சென்ற போது அவளைக் கண்டான்.

“இந்த பொண்ணு இங்கயா வேலை செய்யுது? இத்தனை நாளா எப்படி பார்க்காம போனோம்? அதுவும் என் ப்ளாக்லயேவா வேலை பார்க்குது?”  ஆதினியை பார்த்ததும் பலவாறாய் அவனின் மூளை சிந்திக்க,

“முன்னாடி பார்த்திருந்தாலும் கவனிச்சிருக்க மாட்டோம் போல!  அன்னிக்கு வீட்டுல பார்த்தனால கவனிச்சிருக்கோம்” என தனக்குத்தானே பேசிக் கொண்டு மின் தூக்கியினுள் செல்ல, அவளும் அதனுள் நுழைந்தாள்.

அவனது மற்றைய தோழமைகள் முதல் மாடியில் இறங்கி கொள்ள,  இவளும் அவனும் மட்டுமே மேல் தளத்திற்கு மின் தூக்கியில் சென்றனர்.

அடுத்து மின் தூக்கி நின்ற இடத்தில் ஆதினி இறங்க, தனது கைபேசியை பார்த்துக் கொண்டு வந்தவன் அவள் பின்னேயே வெளி வந்து விட்டான்.

அவன் வெளி வந்த பின்னேயே, தான் தவறான தளத்தில் இறங்கி விட்டதை உணர்ந்தவன், மின் தூக்கி பொத்தானை அழுத்தி விட்டு காத்திருந்த சமயம், கதவினருகே தனது அணுகல்(Access)  அட்டையை காண்பித்து திறக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள் ஆதினி.

அவளுக்கு ஏதோ பிரச்சனை போலும், உதவலாம் என எண்ணியவன் அவளருகே சென்று, “எனி ப்ராப்ளம்?” எனக் கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “லன்ச் போகும் போது அக்சஸ் கொடுத்து தான் வெளிய வந்தேன். ஆனா இப்ப அக்சஸ் கார்ட் வர்க் ஆக மாட்டேங்குது. டோர் ஓபன் ஆக மாட்டேங்குது” எனக் கூற,   அவளது அட்டையை கையில் வாங்கி இவனும் முயற்சித்து பார்த்த நேரம், சுற்றும் முற்றும் பார்த்த ஆதினி,

“அச்சோ” என கண்களை சுருக்கி தலையில் கை வைத்து அசடு வழிந்தாள்.

அவளின் முக பாவனையில், “ஏங்க என்னாச்சு?” என அவன் கேட்க,

“சாரி சாரி வெரி சாரி! வேற ஃப்ளோர் மாத்தி இறங்கிட்டேன்” என முகத்தை எங்கு போய் வைத்து கொள்வேன் என்ற பாவனையில் வைத்து அவள் கூற,

அவளின் நிலை கண்டு வாய்க்குள்ளேயே சிரித்தவன், “சரி வாங்க!”  எனக் கூறி மின் தூக்கி அருகே அவளை அழைத்து வந்தவன்,

“இதுல அசடு வழிய என்னயிருக்கு? நானும் ஃபோனை பார்த்திட்டே தப்பான ஃப்ளோருக்கு வந்துட்டேன்” அவளை இலகுவாக்கும் பொருட்டு ஆறுதல் உரைத்தான்.

“ஆமா நீங்க இந்த ஆபிஸ்க்கு புதுசா?” அவன் கேட்க,

“இல்லங்க இந்த ப்ராஜக்ட்க்கு புதுசு! ஃப்ர்ஸ்ட் ப்ளாக்ல தான் முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்தேன்.  இந்த ப்ளாக் பக்கமே வந்தது இல்லையா அதான் கன்ஃபூஸ் ஆகிட்டேன்” என்றவள் கூற, 

“ஓ கே” என்றவன் “ஐம் அகிலன்” என கூறி அவளுக்கு கை நீட்ட, “ஐம் ஆதினி” என கூறி அவனுடன் கை குலுக்கினாள்.

அதன்பின் ஆதினி மூன்றாம் தளத்தில் இறங்கிக் கொள்ள, அகிலன் நான்காம் தளத்தில் இறங்கி கொண்டான்.

அன்றைய மாலை பொழுதில் அகிலனின் அலுவலக தோழன் அலுவலகத்திலிருந்து கிளம்ப நேரமாகும் என கூறியதால், அலுவலக பேருந்தில் கிளம்பினான் அகிலன்.

தனது நிறுத்தத்தில் இறங்கிய அகிலனுடன் சில ஆண்களும் பெண்களும்.  அவரவர் வீட்டிற்கு செல்லும் திசை நோக்கி நடக்க தொடங்க, சற்று தொலைவு நடந்த பின்னரே முன்னே செல்லும் ஆதினியை கண்டான்.

“இவங்களும் நம்ம கூட இந்த பஸ்லயா வந்தாங்க? கவனிக்காம போய்ட்டோமே” என எண்ணியவன், சற்று விரைவாய் நடந்து அவளருகில் சென்று ஆதினி என அழைக்க,

திரும்பி பார்த்தவள், “ஹே நீங்களும் இந்த ஏரியா தானா?” என அவள் கேட்டதும் தான்,  அந்த குடியிருப்பில் தான் அவனும் வசிக்கிறான் என்பதை இது வரை அவன் அவளிடம் கூறவில்லை என்பது மூளையில் உரைத்தது.

அவளுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் பொருட்டு ஏதும் கூறாமல், “ஆமாம்” என தலையை மட்டும் அசைத்து அவளுடன் நடந்தான்.

இருவருமாய் பேசிக் கொண்டே மெதுவாய் நடந்து கொண்டிருந்தனர்.

“உங்க பேருஊஊஊஊஊ” எனக் கூறி தலையை தட்டி யோசித்தவள்,

“சாரி உங்க பேரை மறந்துட்டேன்” மன்னிப்பு கோரும் பாவனையில் அவள் அவனை பார்த்துக் கேட்க,

“இதுல என்னங்க இருக்கு! மறக்கிறது சகஜம் தானே” என்றவன் தன் பெயரை உரைத்தான்.

திடீரென்று ஒரு இடத்தில் முகத்தை எங்கும் திருப்பாது அவசர அவசரமாய் இவள் நடப்பதை பார்த்து, “என்னங்க என்னாச்சு? ஏன் திடீர்னு ஸ்பீடா நடக்குறீங்க” கேட்டுக் கொண்டே இவனும் அவளுடன் இணைந்து அவசரமாய் நடத்து கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்.

நான்கடி கடந்தபின் மீண்டுமாய் அவள் மெல்லமாய் நடக்க, “உங்களை கிண்டல் பண்ற பசங்க யாரும் அந்த இடத்துல இருந்தாங்களா?  இருந்தா சொல்லுங்க அவங்களை ஒரு வழி பண்ணிடலாம்” என கேட்டு கொண்டே சுற்றும் முற்றுமாய் அவன் பார்க்க,

“அய்யோ இல்லங்க! நான் சொன்னா சிரிக்க கூடாது… கொஞ்சம் சின்னபிள்ளதனமா சில்லியா இருக்கும்” என முகத்தை சுருக்கி கொண்டு அவள் கூற, 

“சில்லியாஆஆஆஆ  இருக்குமாஆஆஆ…. என்னனு சொல்லுங்க கேட்போம்” சிரித்துக் கொண்ட ஆர்வமாய் அவளிடம் கேட்டான்.

“அந்த இடத்துக்கிட்ட கறிக்கடை இருக்கு.  கோழி ஆடுனு நான் க்ராஸ் செய்யும் போது கொன்னாங்கனா, அதோட அலறல் சத்தம் அன்னிக்கு முழுக்க எனக்கு மைண்ட்ல இருந்துட்டே இருக்கும்! தூங்க முடியாது”  அவளுரைக்க,

ஹா ஹா ஹா வென சிரித்தவன்,

“கோழியை கொல்ல பிடிக்காது! ஆனா கோழியையும், கோழி போட்ட முட்டையையும் சாப்பிட பிடிக்குமோ?” இவன் கேட்டதும்,

மின்னலாய் அவளின் தந்தை கூறியது மூளையில் உதிக்க, “நீங்க தான் அந்த ஜன்னலை எட்டி பார்த்த ஆளா?” என கோபமாய் அவள் கேட்க,

“அய்யோ சத்தியமாய் பார்க்கனும்னு பார்க்கலைங்க!  ஏதேச்சையா கண்ணுல படவும் தான் பார்த்தேன்! வெரி சாரி” அவள் தன்னை தவறாய் எண்ணிக் கொண்டாளோவென்று பதறி மன்னிப்பு கேட்க,

வாய்விட்டு சிரித்தவள், “இல்லங்க வீட்டுல யாரும் அதை தப்பா எடுத்துக்கலை! ஆனாலும் இனி அப்படி செய்யாதீங்க! ஏதேச்சையா பார்த்தாலும் அது தப்பு தான்! அதுவுமில்லாம தெரியாத பொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாத ஆளுகிட்ட சொல்லி சிரிக்கிறது அதைவிட தப்பு”  என்றவள் கூறும் போதே அவர்களின் குடியிருப்பு வந்துவிட,

“ஏங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருக்கோம்னு இவ்ளோ நேரம் சொல்லவேயில்லை” என அவள் கேட்க,

“உங்களுக்கு சர்ப்ரைஸ் செய்யலாம்னு பார்த்தேன் ஆனா நீங்க எனக்கு சர்ப்பரைஸ் கொடுத்துட்டீங்க”  அவள் கண்களை நோக்கி அவன் கூற,

“நான் என்ன சர்ப்பரைஸ் கொடுத்தேன்?” நெற்றி சுருக்கி கேள்வியாய் அவனை அவள் பார்க்க,

ஏதும் கூறாது ஒன்னுமில்லையென தலை அசைத்து சிரித்துக் கொண்டே, “நாளைக்கு பார்க்கலாம்ங்க” எனக் கூறி தனது வீட்டை நோக்கி சென்று விட்டான்.

வீட்டிற்கு சென்ற ஆதினி,  தனது தந்தையிடம் அகிலன் உடனான அன்றைய நாளின் நிகழ்வினை கூறிக் கொண்டிருக்க, அகிலனை பற்றி விசாரிக்க வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டார் அவர்.


மலரை பள்ளியில் பார்த்து ஒரு மாத காலம் கடந்திருக்க, மாணிக்கம் தனது இருப்பிடத்தை மாற்றியிருந்தான்.

சென்னையில் நண்பர்களுடன் இணைந்து தங்கியிருந்தவன், நாளுக்கு நாள் அவர்களின் தீய பழக்கங்கள் பிடிக்காமல் தனியாய் தங்குவதற்காக வாடகை வீட்டினை தேடிக் கொண்டிருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போல் தனி வீடாய், சுற்றிலும் தோட்டமாய் ஓர் வீடு அமைந்தது  அவனுக்கு.  அங்கேயே வீடு மாற்றம் செய்துக் கொண்டான்.

நாட்கள் செல்ல, அவ்வீடு மாறி இரு வாரங்களான நிலையில் ஒரு நாள் மாலை நேரம் அவ்வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்த சமயம், மலர் தனது வண்டியில் அவனின் வீட்டினை கடந்து சென்றாள்.

அவளது டிவிஸ் XLலில் அவள் வண்டியை ஓட்ட,  அவளின் பின்னால் ஒரு சிறுவனும் சிறுமியும் அமர்ந்திருந்தனர்.  இதை பார்த்த மாணிக்கம்,

“அந்த சண்டி ராணி மிஸ் வீடு இங்க தான் இருக்கா? இல்ல யாரும் சொந்தகாரங்களை இங்க பார்க்க வந்திருப்பாங்களா? அந்த பசங்க யாரு? ஜாய்ண்ட் ஃபேமிலியா தங்கியிருப்பாங்களோ? அவங்க அண்ணன் அக்கா பசங்க யாராவது இருக்கும்” பலவிதமான கேள்விகள் ஊர்வலம் போக, தானே அதற்கு விடையையும் கூறிக் கொண்டான்.

மறுநாள் பின் மாலை பொழுதில், அவனிருப்பிடத்தின் அருகே அமைந்திருந்த அந்த பழமையான சிவன் கோவிலின் வாயிலில் சற்று தள்ளி தனது ஆட்டோவை நிறுத்தி கொண்டு அதனுள் அமர்ந்திருந்தான்.

அந்நேரம் கோவிலின் உள்ளிருந்து வெளி வந்துக் கொண்டிருந்த பொன்மலரை கண்டான் மாணிக்கம்.

“ஹை சண்டிராணி மிஸ்” அவளை பார்த்ததும் அவனையும் அறியாது அவன் மனது இவ்வாறு துள்ளி குதிக்க,
“நல்லா சிரிச்ச முகம் இவங்களுக்கு! கோபமா பேசினாலும் சரி, முறைச்சாலும் சரி, அந்த முகத்துல இருக்க சிரிப்பு அப்படியே இருக்கு” என மலரின் முகத்தை பார்த்து இவன் மனதினுள் பேசிக் கொண்டிருக்க,  இவனை நோக்கி வந்தாள் மலர்.

“அய்யோ இந்தம்மா ஏன் என்னை பார்த்து வராங்க!  எதுவும் திட்ட போறாங்களா?” பெரிய பஞ்சாயத்துக்குலாம் பயப்படாத மாணிக்கத்தின் மனது தற்போது சற்று திகிலாய் மலரை பார்த்திருந்தது.

அவனருகில் வந்தவள், “சாரி!  உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டு பார்க்கிறப்பலாம் திட்டிட்டேன்” மனம் வருந்தி அவள் மன்னிப்பு கூற, 

அவளின் மன்னிப்பில் இன்பமாய் அதிர்ந்து ஆசுவாசமான மாணிக்கத்தின் மனது “அய்யோ என்னங்க நீங்க!  இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுகிட்டு! புது ஆளுங்களை எடுத்ததும் நம்பாம சந்தேகப்படுறது சரியான அணுகுமுறை தான். அதுக்கு நீங்க மன்னிப்புலாம் கேட்க வேண்டாம்”  உணர்ந்து அவன் கூற,

“புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்கஸ்” அவள் அங்கிருந்து அகல,

“மிஸ் உங்க வீடு இங்க தான் இருக்கா?” அவன் கேட்கவும்,

அவனை திரும்பி “எதுக்கு இந்த கேள்வி?” என்பது போல் பார்க்க,

“இல்லங்க! நான் இங்க வீடு மாத்தி வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது! உங்களை இந்த பக்கமா பார்த்தேன், உங்க கூட இரண்டு குழந்தைங்க இருந்தாங்க வண்டியில! அதான் தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்”

சத்தமாய் ஆரம்பித்து கடைசியாய் வாய்குள்ளேயே முனகிக்கொண்டான்.

அவன் அவளிடம் இவ்வாறு தயங்கி பயந்து பேசுவதிலேயே இவளுக்கு சற்றாய் சிரிப்பு வர,

“ஓவரா தான் பயமுறுத்திட்டோமோ?” என ஒரு மனம் யோசிக்க, “இல்ல இந்த பயம் இருக்கிறதும் நல்லது தான்” எண்ணிக் கொண்டே அவனை நேராய் நிமிர்ந்து பார்த்தவள்,

“ஆமா இங்க தான் வீடு” என்று மட்டும் உரைத்து விட்டு மீண்டுமாய் கிளம்ப போக,

“அப்ப வெயிட் பண்ணுங்க! நானே உங்களை வீட்டுல விட்டுடுறேன்! இங்க ஒரு சவாரி இறக்கி விட வந்தேன்” அவன் கூற,

“சனி பிரதோஷம் அதுவுமா சிவன் கோவில் வரை வந்துட்டு கோவிலுக்கு போகாம போகாதீங்க!” எனக் கூறி விட்டு அவள் நடையைக் கட்ட,

“நீ ஒன்னும் என்னைய கூட்டிட்டு போக தேவையில்லைனு எவ்ளோ டீசண்ட்டா சொல்லிடுச்சு இந்த பாப்பா! கொஞ்சம் ரோஷம் ஜாஸ்தி தான் இந்த பொண்ணுக்கு” மனதிற்குள்ளாக நினைத்தவன் அங்கேயே நிற்க,

இவள் கோவில் தாண்டி நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அவனை கடந்து சென்றாள்.

ஏனோ அவளின் பேச்சை மீறிச் செல்ல மனம் வராது கோவிலினுள் சென்றான்.

அங்கு கழுத்தினில் ருத்ராசட்த்தை மாலையாய் அணிந்து, பெரிய உச்சி கொண்டை வைத்து காவி உடுத்தி பண்டார வடிவில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்ததும், “மக்களை ஏமாத்துறதுக்குனே இப்படி வேஷம் போட்டு சுத்துறது” என மனதில் எண்ணிக் கொண்டே மாணிக்கம் அவரை கடக்கும் சமயம்,

மாணிக்கத்தை கை காட்டி அழைத்திருந்தார் அவர்.

வேற யாரையோ அழைக்கிறாரென திரும்பி திரும்பி பார்த்தவன், தன்னை தான் அழைக்கிறாரென உறுதி செய்து கொண்டு அவரருகில் சென்றான்.

“மனம் போல் இல்லறம் அமையாது சிக்கலாகி வாழ்க்கையே சின்னாபின்னமாகி வேதனையில் சுழலும் உனக்கு, விடியலாய் ஒருத்தி வருவா உன் வாழ்க்கைல!  அவளை, அவளை சார்த்தவர்களை உன்னவர்களாய் ஏத்துகிட்டு, அவள் சூழ்நிலையை அப்படியே ஏத்துக்கிட்டு வாழு! உனக்கு குழப்பம் வரும் போது இது உதவும்” எனக் கூறி அவன் கையில் சிறிய ருத்ராட்சங்கள் அடங்கிய மாலையை கொடுத்தார் அவர்.

அவர் கூறியதெல்லாம் பேத்தலென இவன் எண்ணினாலும் பெரியவரான அவரை அவமதிக்கும் எண்ணமில்லாது அவர் கொடுத்ததை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து அமர்ந்தவன், தனது வீட்டிலுள்ள சாமி படத்தினருகில் அதை வைத்துவிட்டான்.

மாணிக்கம் வாழ்வில் ஆண்டவன் தனது திருவிளையாடலை துவக்கி இருந்தான்.

ஒரு வாரம் கடந்த நிலையில், அந்த வாரயிறுதி நாளின் மாலை வேளையில், மாணிக்கத்தின் வீட்டினில் வேலை செய்யும் ஆயா அவசர அவசரமாய் வந்து அவனின் வீட்டு கதவை படபடவென வேகமாய் தட்டினார்.

கதவை திறந்து பார்த்தவன், “என்னாச்சு ஆயா? ஏன் பதட்டமா வந்திருக்கீங்க” எனக் கேட்க, 

அவனின் கைபிடித்து, “சீக்கிரம் என் கூட வா” என அவனை தன்னுடன் இழுத்து சென்றார்.

— தொடரும்