முள்ளில் பூத்த மலரே – 29

முள்ளில் பூத்த மலரே 29

மறுநாள் காலை ஆதினி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டு படுத்திருந்தாள்.

அவள் காலை கண் விழித்த சமயம் அகிலன் அவளருகில் இல்லை. விடியற்காலையே அலுவலகம் புறப்பட்டுச் சென்று விட்டான்.

அவளது மாதவிடாய் நாளான அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து மீண்டுமாய்ப் படுத்துக் கொண்டாள். மெல்லிய வலியாய் ஆரம்பித்த வயிற்று வலி கொடும் வலியாய் மாறிக் கொண்டிருந்தது.

திருமணத்திற்குப் பிறகு உடலில் ஏற்பட்ட ரசாயன மாறுதல்களில் இவளுக்கு இத்தகைய நாட்களில் இயல்பை விட அதிகமான வலியை உணர்ந்தாள்.

திருமணத்திற்குப் பின்பான முதல் மாதவிடாயின் போது வலி தாங்க முடியாது இவள் கதறி அழவும், மருத்துவமனை அழைத்துச் சென்றவனிடம், இவ்வாறு நிகழ்வது இயல்பே என்றும் இவன் அவளை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டுமெனவும் மருத்துவர் கூறியிருக்க, அவளைத் தரையில் நடக்கவிடாது தாங்கினான். அவள் படுத்திருக்கும் இடத்திற்கே உணவு பழச்சாறு என அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்து, அவளுக்கு அதை ஊட்டியும் விட்டு என நன்றாகவே அவளைக் கவனித்துக் கொண்டான். சத்யாவும் இந்நாட்களில் அவளை எவ்வேலையும் வாங்காது இருந்தார்.

இவ்விதமாய்ச் சென்றிருந்த கடந்த மூன்று மாத மாதந்திர நாட்களை எண்ணி அழுகையிலேயே படுத்திருந்தாள் ஆதினி. முந்தைய நாள் அகிலனுடனான ஊடலும் அவளது கோபமும் அவளது மனதில் சற்றும் குறையாது உறைந்திருக்க, தனிமையும் வெறுமையும் அவளை ஆட்கொண்டது.

வெகு நேரமாய் வெளி வராது இருக்கும் மருமகளைத் தேடி அவளது படுக்கையறையின் கதவை தட்டினார் சத்யா.

“உள்ள வாங்க அத்தை” ஆதினி கூற, வலியில் தோய்ந்திருந்த அவளது குரலை கண்டு கொண்ட சத்யா அன்றைய நாள் அவளுக்குத் தேவையானதை அவளறைக்கே கொண்டு வந்து வழங்கி நன்றாகவே கவனித்துக் கொண்டார்.

அன்று மாலை வேளையில் அவளின் வலி சற்றாய் மட்டுபட, தனது தந்தைக்கு அழைத்து நிலாவின் தந்தை கூறியதை கேட்டாள். மதுரனின் திருமணம் குறித்துக் கவலைக் கொண்டது அவளின் மனது. நிலாவின் தந்தை கூறியதை ஏதும் கூறாது எல்லாம் சரியாகிவிடும் எனச் சமாதானம் கூறிய மாணிக்கம், அவளின் குரல் பேதத்திலேயே அவளின் வலியை கண்டு கொண்டவர், அவளை ஓய்வை எடுக்குமாறு கூறி ஓரிரு வார்த்தைகள் பேசி அழைப்பை வைத்து விட்டார்.

அன்று அவள் அலுவலகத்திற்குச் செல்லாது விடுப்பு எடுத்து ஓய்வு எடுத்தது எதுவும் அகிலனுக்குத் தெரியாது.

முந்தைய நாள் ஆதினியின் அழுகை அவனின் மனதை வதைத்திருந்தது. ஆகையால் காலை அலுவலகம் செல்லும் வேளையிலேயே தனது இத்தனை நாள் தவறை கூறி அதற்கான காரணத்தையும் மன்னிப்பையும் கூறி இன்னும் மூன்று நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அவள் உண்டாளா எனக் கேட்க அவ்வப்போது அன்றைய நாள் முழுவதும் குறுஞ்செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தான்.

ஆனால் அன்றைய நாள் முழுவதும் ஆதினி வாட்ஸ்சப் பார்க்கவில்லை.

அன்றிரவு தாமதமாய் வீட்டிற்கு வந்த அகிலன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதினியை பார்த்து, “என் கண்ணுமா இன்னும் என் மேல கோபமா இருக்கியா? அதான் என் மெசேஜ்க்கு ரிப்ளை செய்யலையா? நாளைக்கு ஒரு நாள் தான்டா கண்ணுமா. அதுக்கப்புறம் உன்னை சமாதானம் செய்றது மட்டும் தான் என் வேலையே கண்ணுமா” அவளின் தலையைக் கோதி கொண்டே பேசியவன், நெற்றியில் முத்தமிட்டு அவளை அணைத்தவாறே உறங்கி போனான்.

மறுநாள் காலை எழுந்த ஆதினிக்கு சற்று வலி தாங்க கூடிய அளவில் இருக்க, அலுவலகத்திற்குச் செல்லலாமா என எண்ணியவள் பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு விடுப்பெடுத்தாள்.

அன்றும் அவள் அகிலனை பார்க்கவில்லை. இரவு அவன் பேசியது எதுவும் தான் இவளுக்குத் தெரியாதே. அவனை எண்ணி காதல் மனம் கலங்க தான் செய்தது. அவன் மீது பெரும் கோபம் உண்டாகிய போதும், அவனின் அலுவல் பணியை எண்ணி அக்கோபத்தை மட்டுபடுத்தியவள், அவனாய் வந்து தன்னிடம் பேசும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். அவனின் அருகாமைக்காக வெகுவாய்த் தவித்தது அவளின் மனது. அவனின் நினைவுகளிலேயே சுழன்றிருந்தவள் அவ்வாறே உறங்கியும் போனாள்.

அவள் தனது கைபேசியிலிருந்த வாட்சப்பை இரு நாட்களாய் திறந்து கூடப் பார்க்கவில்லை. ஏதேனும் அழைப்பு வந்தால் பேசுவது அல்லது இவள் யாருக்கேனும் அழைத்துப் பேசுவது என அதைத் தவிற வேறெதையும் அவள் கைபேசியில் பார்க்கவில்லை.

அன்று மாலை வேளையில் வெளியே செல்வதற்காகக் கிளம்பிய ஆதினி, “அத்தை நான் அண்ணாவை பார்த்துட்டு வந்துடுறேன்” எனக் கூறிக் கொண்டு கிளம்ப,

“இரண்டு நாள் முன்னாடி தானே பிறந்தநாளுனு சொல்லி போய்ப் பார்த்துட்டு வந்த? அதுக்குள்ள இப்ப எதுக்குப் போற? இதுக்குத் தான் பொறந்த வீடு பக்கத்துலேயே இருக்கப் பொண்ணா பார்த்து கட்டி வைக்கக் கூடாதுன்றது. ஆ ஊ னா பிறந்த வீட்டுக்குப் போய்டுறது. நேத்து நீ லீவ் போட்டதைக் கூட என் பையன் கிட்ட சொல்லாம இருந்திருக்க? அவன் காலைல வந்து என்கிட்ட கேட்டு தான் தெரிஞ்சிக்கிட்டான். ஆனா உங்க வீட்டுல லீவ் போட்டதைச் சொல்லிருப்பியே! அப்படி என்ன என் பையன் தப்பு பண்ணிட்டானு அவன்ட்ட பேசாம இருக்க நீ” சத்யா பேசிக் கொண்டே போக,

எவ்வித விளக்கமும் அளிக்கும் தெம்போ நேரமோயின்றி இருந்தவள் அவரை அமைதியாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விட்டாள்.

“இங்க ஒருத்தி பேசிட்டு இருக்கேன்… அவ பாட்டுக்குப் பதில் சொல்லாம போறா… என் மேல கொஞ்சம் கூட மதிப்பு மரியாதையே இல்லை! அவ வரட்டும், இனி இப்படிச் செய்யாத மாதிரி ஒரு வழி பண்றேன் இன்னிக்கு” சத்யா மனதிற்குள் கோபமாய்ப் பொரிந்து கொண்டிருந்தார்.

அகம் வேதனையில் திளைத்திருக்க, முகம் அவ்வேதனையைப் பிரதிபலிக்க, சோகமாய் அமர்ந்திருந்தான் மதுரன்.

நிலாவின் தந்தை இத்திருமணத்தை நிறுத்துவதற்காகக் கூறிய காரணத்தை மதுரனால் எள்ளளவும் ஏற்க இயலவில்லை. மனம் கொதிநிலையில் இருந்தது.

தனது அன்னையின் இரண்டாம் திருமணத்தைக் காரணமாய்க் கூறி இத்திருமணத்தை நிறுத்த கூறிய நிலாவின் தந்தையின் மேல் பெருத்த கோபம் வந்தது.

நிலாவை அவன் காதலித்திருக்காவிடில், நிமிடமும் யோசியாது இத்திருமணத்தை அவனே நிராகரித்திருப்பான்.

ஆனால் அவளின் இத்தனை கால வேதனைக்கு வடிகாலாய் கடவுளின் அருளாய் எண்ணி தன்னைக் காதலிக்கும் அவளை எங்ஙணம் துறப்பேன் என வெகுவாய் தத்தளித்துக் கொண்டிருந்தது அவனது மனம்.

ஒரு பக்கம் காதல் மனம் கண்ணீர் சிந்த மறுபக்கம் மகனாய் தாயின் துயரம் எண்ணி மனம் வலி கொண்டது.

எவ்வித முடிவும் எடுக்கவியலாமல் தடுமாறினான்.

மாணிக்கத்தையும் இதற்கு மேல் நிலாவின் தந்தையிடம் சென்று எதுவும் பேச வேண்டாமெனத் தடுத்து விட்டான்.
தனக்காகத் தனது தந்தை யாரிடமும் இறங்கி சென்று பேசுவதில் விருப்பமில்லை அவனுக்கு.

எந்த முடிவாக இருந்தாலும், அவன் வெளிநாட்டிற்குச் சென்று வந்த பிறகு எடுத்துக் கொள்ளலாமெனக் கூறி விட்டான்.

கடந்த இரு நாட்களில், தனது வெளிநாட்டுப் பயணத்தில் கவனம் செலுத்துவோமென எண்ணி அதற்கான ஆயத்த பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

இரு தினங்களாய் நிலாவை அவன் தெடர்பு கொள்ளவேயில்லை.

மறுநாள் விடியற்காலை வெளிநாட்டிற்கு அவன் பயணம் செய்ய வேண்டிய நிலையில், அன்று மனம் தாளாமல் நிலா தான் மதுரனை அழைத்து, அவனைப் பார்த்தேயாக வேண்டுமென அடம்பிடித்தாள். அதன் பொருட்டுத் தான் தற்போது மதுரன், நிலா தனது தோழிகளுடன் தங்கியிருக்கும் அவளது வீட்டிற்கு வந்து இவ்வாறு அமர்ந்திருந்தான்.

வந்த நேரத்திலிருந்து பேசாமல் வேதனையுடன் அமர்ந்திருப்பவனைக் காண இவளுக்குக் கண்ணீர் திரண்டோடியது.

அவனருகில் அமர்ந்து அவன் கைகளைப் பற்றியவள், “நீங்க கவலைபடாம கிளம்புங்க. இந்த ஜென்மத்துல எனக்குக் கணவன்னா அது நீங்க மட்டும் தான். அப்பாகிட்ட நான் பேசுறேன். அவங்கள யாரோ ஏதோ சொல்லி குழப்பிருக்கனும்” பேசிக் கொண்டே போக,

“ஒரு பொண்ணு இரண்டாவது கல்யாணம் செய்றது அவ்ளோ பெரிய தப்பா நிலா. எங்கப்பாக்கு தான் இது இரண்டாம் கல்யாணம்னு நினைச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்களாம். எங்கம்மாக்கு இரண்டாம் கல்யாணம் இதுனு தெரியாதாம். இப்படி இரண்டாம் கல்யாணம் செஞ்ச குடும்பத்துல பொண்ண கட்டிக் கொடுத்தா அவங்க குடும்பக் கௌரவம் போய்டுமாம்” ஆற்றாமையில் பொங்கியவன்,

“ஆதுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து எத்தனை பேருக்கிட்ட இப்படி விளக்கம் கொடுத்துட்டு இருக்கோம் தெரியுமா!” மனம் வெதும்பியது அவனுக்கு,

“எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்ட பிறகு, இல்ல இது எங்க குடும்பத்துக்கு ஒத்துவராதுனு போனவங்க அதிகம். இதனால ஆதுக்கும் எனக்கும் கல்யாணமெல்லாம் வேண்டாம்னே அம்மா அப்பாகிட்ட சொல்லி சண்டை போட்டிருக்கோம். அவங்க கடந்து வந்த வாழ்க்கைல இதை விடப் பெரிய அவமானங்கள்லாம் கடந்து வந்தனால இதுலாம் அவங்களுக்குப் பெரிசா தெரியலை. ஆனா எங்களுக்கு, அவங்க வாழ்க்கையே எங்களுக்காகத் தான்னு வாழுற அவங்களை இப்படிப் பேசறவங்களைப் பார்க்கும் போது அப்படி ஆத்திரம் வருது. நம்மளை தவறா பேசுறவங்களைப் பத்தி ஏன் யோசிக்கிறீங்க? கண்டிப்பா நம்மளை பிடிச்சி ஏத்துக்கிட்டு வர்றவங்க கிட்ட மட்டும் தான் உங்களைக் கட்டிக் கொடுப்போம்னு எங்களை அமைதியாக்கிடுவாங்க அம்மாவும் அப்பாவும்.”

மனம் பாரமாய்க் கணக்க கண்களிலிருந்து வெளிவர தவித்த நீரை உள்ளிழுத்து அமர்ந்திருந்தான் மதுரன்.

ஆறுதலுக்காய் அவனின் தலையை அவள் ஆதுரமாய்க் கோத, அவளின் கைகளைப் பற்றியவன் அதனுள் தன் முகம் புதைத்து அழுதிருந்தான்.

எப்பொழும் சிரிப்பும் கும்மாளமுமாய் வளைய வருபவனை இப்படிப் பார்க்க நெஞ்சை அடைத்தது அவளுக்கு.

அவனின் முகத்தை நிமிர்த்தியவள், “ஆதுக்கு நீங்க ஆசைப்பட்ட மாதிரி நல்ல புருஷன் தான் அமைஞ்சிருக்காங்க. உங்களுக்கு நான் இருக்கேன். என் அப்பாகிட்ட பேசுறேன். இனி எங்க குடும்பத்துல இருந்து யாரும் நம்ம குடும்பத்தைப் பத்தி தப்பா பேச மாட்டாங்க” இதுக்கு ஒரு வழி செய்றேன் நான் என மனதில் எண்ணிக் கொண்டே அவனிடம் கூறியவள்,

“இனி நீங்க என்னிக்கும் இதை நினைச்சிலாம் கவலைபடக்கூடாது. யார் என்ன பேசினாலும் நம்ம குடும்பத்தைப் பத்தி நமக்குத் தெரியும். ஊர்னு இருந்தா நாலு பேர் நாலு விதமா பேச தான் செய்வாங்க. அதெல்லாம் காதுல வாங்கிக்காம நம்ம வாழ்க்கைய பார்த்துட்டு போய்டனும். இதுல எங்கப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன்”

“உங்க கவலை எனக்குப் புரியுது. நம்ம கல்யாணத்துக்குப் பிறகு இப்படி ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்தாலும் அது இரண்டு குடும்பத்துக்கும் பிரச்சனையாகும்னு தானே இவ்ளோ குழம்புறீங்க. எங்கப்பாவை வாழ்நாள் முழுசுக்கும் இதைப் பத்தி பேச முடியாதபடி சரிகட்ட வேண்டியது என் பொறுப்பு. என்னை நம்புங்க. நீங்க எதைப் பத்தியும் கவலைபடாம ஊருக்கு போய்ட்டு வாங்க” லேசாய் அணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்ற தாய் வகை ஆறுதலை அவனின் முதுகை வருடி அளித்திருந்தாள்.

வெகுவாய் அமைதியடைத்திருந்தது அவனின் மனது. நிலாவின் கூற்றில் அனைத்தும் சரியாகிவிடும் என்றொரு நம்பிக்கை முளைத்து அவனுக்குள் புத்துணர்வை வழங்கியது.

“எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன் கூட மட்டும் தான் பொன்னும்மா. நம்ம இரண்டு பேருமா சேர்ந்து இந்தப் பிரச்சனையைச் சரி செய்வோம். நீ என்கூட இருந்தாலே போதும் எல்லாப் பிரச்சனையும் சரி செஞ்சிடலாம்னு நம்பிக்கை வருது. அம்மா அப்பாக்கு பிறகு நான் அதை ஃபீல் செய்றது உன்கிட்ட தான்” தன் மனதின் உணர்வுகளை அவளிடம் பகிர்ந்துக் கொண்டவன், அவளிடம் பிரியா விடை பெற்று தனது இல்லத்தை வந்தடைந்தான்.

மாணிக்க மலர் பவனத்திற்கு வந்த ஆதினியை கண்ட மலரும் மாணிக்கமும் அவளது வாட்டமான முகத்தைப் பார்த்து நலம் விசாரித்தனர்.

சோர்வினாலும் வலியினாலும் இவ்வாறு அவள் இருப்பதாய் எண்ணி, தனியாய் ஏன் வந்தாளெனக் கேட்டு கடிந்து கொண்டனர்.
“கண்ணம்மா, அப்பாக்கு ஃபோன் செஞ்சிருந்தா நானே வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல. இந்த வலில நீயே டூ வீலர் ஓட்டிட்டு வந்தியா?” மாணிக்கம் கவலையாய் அவளிடம் வினவ,

“பரவாயில்லைப்பா எல்லாத்தையும் பழகிக்கனும்ல. அவருக்கு ஆபிஸ்ல வர்க் பிரஷர் அதிகம். அவரை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு நான் தான் வண்டியிலேயே வந்தேன். அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா திட்டுவாரு தான்” அகிலனை தனது பெற்றோர்களிடம் விட்டு கொடுக்காது அவள் பேசினாலும், அகிலன் மீது ஏகமாய்க் கோபம் கொண்டது மாணிக்கத்தின் மனது.

அந்நேரம் வீட்டை வந்தடைந்தான் மதுரன்.

அவனைக் கண்டவள், அவனது பயணத்திற்கான ஏற்பாட்டை அறிந்து கொண்டவள், அவனது கையினில் மாணிக்கம் மலர் எனப் பொறிக்கப்பட்ட ஒரு பிரேஸ்லெட் அணிவித்தாள்.

“இது பிறந்தநாளுக்குக் கொடுக்கத் தான் ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சேன். என் கைக்கு வர லேட் ஆகிட்டு” என்றவள்,

“I will miss you Anna” எனக் கூறி அவனை அணைத்து கொண்டாள்.

அவளின் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க, அவளைத் தோளோடு சேர்த்து அணைத்தவன் நெற்றியில் முத்தமிட்டு,

“நம்ம தினமும் வீடியோ கால்ல பேசலாம்டா. நீ என்னை மிஸ் செய்யாத அளவுக்கு நான் பார்த்துக்கிறேன் ஓகேவா” மதுரன் உரைக்க அகமகிழ்ந்து போனாள்.

மறுநாள் விடியற்காலை மலரும் மாணிக்கமும் கனத்த மனத்தினுடனேயே மதுரனுடன் விமான நிலையம் சென்றனர்.

விமான நிலையத்தில் தனது அன்னையின் கலங்கிய விழிகளைக் கண்டு அவரின் முகத்தினைத் தனது இரு கைகளாலும் தாங்கியவன்,

“நீங்க எதுக்கும் கலங்கி நான் பார்த்தது இல்லைமா. எங்களைப் பொறுத்த வரைக்கும் நீங்க ஒரு அயர்ன் லேடி. எந்தப் பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கலாம்னு உறுதியான மனதை கொண்டவங்க. நீங்க எனக்காகக் கலங்கினா என்னால அதைக் கண்டிப்பா தாங்க முடியாதுமா. நான் எதைச் சொல்றேனு புரியது தானே” மதுரன் அவரின் விழியில் வழிந்த நீரை தனது கைகளால் துடைத்துக் கொண்டே கவலையுற்ற குரலில் கேட்க,

ஆமெனத் தலையசைத்தார் மலர்.

“என்னால உங்க வாழ்க்கைலாம் பாதிக்கபடுதே கண்ணா” அவன் தோள் சாய்ந்து அவர் அழ,

“அம்மா இதைச் சரி செய்ய வேண்டியது என் பொறுப்பு. இனி இதை நினைச்சு நீங்க கவலைப்பட மாட்டீங்கனு எனக்குச் சத்தியம் பண்ணுங்க” அவர் கண்களில் வேதனையுடன் அவனைப் பார்க்க,

“நான் உங்களுக்கு ப்ராமிஸ் செய்றேன். நான் திரும்ப இந்தியா வரும் போது இந்தப் பிரச்சனைலாம் சால்வ் ஆகி என்னோட மேரேஜ் நல்ல படியா ஃபிக்ஸ் ஆகிருக்கும் சரியா” அவரின் கண்களைத் துடைத்துக் கொண்டே அவன் கூற,

“சரி நீ வேளா வேளைக்குச் சாப்பிடு. வேலையே கெதினு உடம்பை கெடுத்துக்காத. தினமும் ஃபோன் பண்ணு” மலர் கூற,

“நீங்களும் அப்பாவும் உடம்பை கவனிச்சிக்கோங்க. மேக்சிமம் ஒன் இயர் தான் அதுக்கு மேலலாம் என்னால தாக்கு பிடிக்க முடியாது நானே வந்துடுவேன். இந்த ஒரு வருஷத்துக்கு இடையில ஒரு தடவை வர்ற மாதிரி கண்டிப்பா பார்க்கிறேன்” என்றுரைத்தவன் மாணிக்கத்தை நோக்க,
நெகிழ்வாய் இந்நிகழ்வினை நோக்கி கொண்டிருந்தார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் கைகளை அவன் பற்ற, “உன்னோட சத்தியத்தைக் காப்பாத்த வேண்டியது அப்பாவோட பொறுப்புபா. அதுக்காக அப்பா எந்தவித உதவி உனக்கு செய்ய முடியும்னாலும் நீ சொல்லு” மாணிக்கம் பரிவுடன் ஆதரவாய் கூற,

“you are the best dad in the world Appa” நெகிழ்வாய் உரைத்து அணைத்திருந்தான் மதுரன்.

மதுரனை வழியனுப்பி விட்டு தங்களது காரில் இல்லத்தை நோக்கி மாணிக்கமும் மலரும் சென்று கொண்டிருந்த போது,

“அப்பா வந்து என்னைய கூட்டிட்டு போங்கப்பா! எனக்குப் பயமா இருக்கு” என மாணிக்கத்தின் கைபேசிக்கு அழைப்பு விடுத்து மிகுந்த பயத்துடன் கூறி அழுதிருந்தாள் ஆதினி.

— தொடரும்