முள்ளில் பூத்த மலரே – 28

முள்ளில் பூத்த மலரே 28

ஆதினி அகிலனுடன் பேசி முழுதாய் இருபது நாட்கள் கடந்திருந்தது.
முற்றிலுமாய் அலுவலகவாதியாய் மாறிய அகிலனை பார் என்ற ரீதியில் தான் அகிலன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

எந்நேரமும், உண்ணும் நேரமும் கூட அலுவல் விஷயமாய் எவருடனாவது கைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பான்.

வாரயிறுதி நாளன்றும் அலுவலகத்தில் அமர்ந்து கொள்வான். தாமதமாய் இல்லத்திற்கு வந்தும் லேப்டாப்பை எடுத்து வைத்து வேலை செய்ய ஆரம்பித்து விடுவான்.

அகிலனின் வேலை பளுவை அவள் புரிந்திருந்தாலும், அவன் மூன்று வேளையில் உண்கிறானா என்பதை மட்டும் அவனது அலுவல் தோழர்கள் மூலம் அறிந்து கொண்டு அவனுடன் பேசுவதை முற்றிலுமாய் நிறுத்தியிருந்தாள் ஆதினி. அவனாய் மனைவி என்ற ஒருத்தி இருப்பதை நினைவில் வைத்து பேச வரும் வரை, தானாய் சென்று அவனிடம் பேச போவதில்லை என முடிவெடுத்திருந்தாள். அன்றைய அந்தக் கோப பார்வைக்குப் பிறகு அவளுக்கு அவனுடன் பேச பயமும் தடுத்தது.

தன்னையே கவனித்துக் கொள்ள நேரமற்றவன் எங்கே தன் மனைவியைக் கவனிக்க? ஆக இருவரும் அவரவர் நிலையில் இருந்து கொள்ள இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய இடைவெளி உருவாகி கொண்டிருந்தது.

அந்த மெல்லிய இடைவெளி அன்றைய நிகழ்வால் சற்று ஆழமானதாய் மாறிப் போனது ஆதினிக்கு.

இந்தப் புது ப்ராஜக்ட்டிற்கு வந்ததிலிருந்து இடைவேளை நேரங்களில் தனது டீம் மக்களுடன் டீ அருந்துவதை வழங்கமாக்கி கொண்டிருந்தான் அகிலன்.

அவ்வாறாய் ஒரு நாள் அவன் கேண்டீனில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, அவனது அலுவல் தோழர்கள் பொதுவாய் கணவனை அடக்கும் மனைவிகளின் செயல்களைக் கூறிக் கொண்டிருக்க, அகிலன் அதை மறுத்து, தன் மனைவி அவ்வாறில்லை என உரைத்து, அவள் தனது தாயை புரிந்து கொண்டது முதல் தனக்காக அவளது சேமிப்புப் பணத்தை வழங்கியது வரை கூற, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சக பணியாளன் ஒருவன்,

“அப்ப அகிலன் நீங்க பணத்துக்காகத் தான் அவங்களை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்களா?” சற்று சீண்டலாய் விளையாட்டாய் தான் அவன் கேட்டிருந்தான்.

ஆனால் அச்சமயம் கேன்டீன் பக்கம் வந்த ஆதினியின் காதில் இவ்வார்த்தைகள் விழவும், அந்நேரம் அவள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை ஆயினும் அவளின் அடி மனதில் அவளை மீறி இவ்வார்த்தைகள் பதிந்து போக, பின்னாளில் இவர்களுக்கிடையில் மனகசப்பு உருவாவதற்கு இதுவும் காரணமாய் அமைந்தது.

தற்போது கேன்டீனில் இக்காட்சியைக் கண்டவளுக்கு, தன்னிடம் பேச நேரமில்லை ஆனால் இவ்வாறு கும்பலாய் சக பணியாள தோழமைகளுடன் சிரித்துப் பேசி டீ அருந்த மட்டும் நேரமிருக்கிறதா? என்ற கோபம் தான் எழுந்தது ஆதினிக்கு.

ஆதினி இப்பேச்சை கேட்டதையோ தன் மீது கோபம் கொண்டதையோ, எதையுமே அறியவில்லை அகிலன்.

தம்பதியர்களுக்குள் எந்நேரம் மனதாங்கல் வந்தாலும் உடனே இருவரும் அதைப் பேசி தீர்த்துவிட வேண்டும். அதுவே தவறான புரிதலை அகற்றவும், அந்த உறவை மேம்படுத்தவும் உதவியாய் இருக்கும்.

ஆனால் இங்கு அந்த உரையாடல்கள் இல்லாமல் தான் இடைவெளியை பெரிதுபடுத்திக் கொண்டிருந்தது.

அன்று மதுரனின் பிறந்தநாள்.

முந்தைய நாள் அலுவலகத்திற்குச் சென்ற அகிலன் மறுநாள் வரை வீட்டிற்கு வராமல் இருந்தான்.

காலை எழுந்த ஆதினிக்கு, வழமையாய் தமையனுடன் சேர்ந்து அவனுக்குப் பலவித அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுத்து கொண்டாடும் அந்த நாளின் முந்தைய நிகழ்வுகள் மனதில் ஊர்வலம் போக, வெகுவாய் மனம் கனத்தது.

அகிலனை ஏதும் அழைப்பு விடுத்திருக்கிறானா எனத் தனது கைபேசியை எடுத்து பார்த்தாள். இவளது குறுஞ்செய்தியையும் பார்க்கவில்லை, இவளது அழைப்பிற்கும் எந்தப் பதிலுமில்லை அவனிடமிருந்து. மதுரனுக்கு வாழ்த்துத் தெரிவிக்குமாறு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவித்து, மெத்தையில் சாய்ந்து கொண்டாள்.

தற்போது தனது குடும்பத்தின் இன்மையை எண்ணி மனம் கலங்கினாள்.

அவளின் வாழ்வில் என்றுமே தனிமையை உணரவிட்டதில்லை அவளின் குடும்பத்தினர். ஆனால் இங்கு வந்த இந்த மூன்று மாதங்களிலேயே மனதில் பெரும் வெறுமையை உணர துவங்கினாள் ஆதினி. அகிலன் அதற்குக் காரணமாகி போனான் அவனறிமாலேயே.

தான் இல்லாது இன்று மதுரனின் பிறந்தநாள் எவ்விதமாய்க் கொண்டாடப்படுமோ என எண்ணியவாறே அவனுக்கு அழைப்பு விடுக்கப் பைபேசியைக் கையிலெடுத்த சமயம், அவளது தந்தையிடமிருந்தே அவளுக்கு அழைப்பு வந்தது.

“கண்ணம்மா” ஆதுரமாய்க் கேட்ட அக்குரலில், இவளின் கண்களிலிருந்து நீர் பெருகினாலும், அதைத் தனக்குள்ளேயே அடக்கி பேசினாள் ஆதினி.

ஆயினும் அவளது குரலில் இருந்த பேதத்தை உணர்ந்த மாணிக்கம், “என்னடா கண்ணம்மா? உடம்பு சரியில்லையா?” எனக் கேட்டார்.

இவர் இவ்வாறு கேட்டதும், அவரருகில் அமர்ந்திருந்த மதுரன் மலர் இருவரும், “என்னாச்சு பாப்பாக்கு?” எனப் பதறிக் கொண்டு மாணிக்கத்திடம் கேட்டனர்.

அமைதியாய் இருக்குமாறு இவர்களிடத்தில் கையசைத்து கூறிய மாணிக்கம் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, “சொல்லுடா என்னாச்சு? அகிலன் அங்க இல்லையா?” இதற்கு மேல் தாங்கமாட்டாது அழுதிருந்தாள் ஆதினி.

“அவர் நேத்து ஆபிஸ் போனார். இன்னும் வரலை” அவள் அழுது கொண்டே உரைக்க,

“அட என் குட்டி பாப்பா! இதுக்குத் தான் அழுகையா? இதோ இப்பவே போய் உன் புருஷன் மண்டைய தட்டி கூட்டிட்டு வந்து விடுறேன். ஓகேவா?” என மதுரன் சிரித்துக் கொண்டே கூற,

அங்கு முகம் மலர்ந்திருந்தாள் ஆதினி.

“அதெல்லாம் வேண்டாம் அண்ணா. அவரே வந்துடுவாரு. நான் உன்னை இன்னிக்கு பார்க்கனுமே” ஏக்கமாய் ஆதினி கேட்க,

“என் பாப்பா என்னைய பார்க்க யார்கிட்டயும் பர்மிஷன் கேட்க தேவையில்லையே! வாடானு சொன்னா வந்துட போறேன்” மதுரன் கூறவும்,

“ஆமா ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி இப்படித் தான் சொல்லுவ! அப்புறம் உன் பொன்னுமா இங்க விடமாட்டேங்கிறா அங்க விட மாட்டேங்கிறானு சொல்லுவ?” அவனைக் கேலி செய்து ஆதினி கூற,

“என்னடா பாப்பா! என்னைய வம்புக்கு இழுத்துட்டு இருக்க?” பொன்னிலாவின் குரல் கேட்கவும்,

அங்குப் பதறி போனாள் ஆதினி.
“அய்யய்யோ அண்ணி. நீங்க அங்கயா இருக்கீங்க? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” பதறி போய் அவள் கூற,

“அதுக்கு ஏன்மா இவ்ளோ பதறுற! நீ விளையாட்டுக்கு பேசுறனு எனக்குத் தெரியாதா?” என அவளை அமைதி படுத்தினாள் நிலா.

“எங்க அண்ணாக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்க வீட்டுக்கே வந்துட்டீங்களா? என்ன சர்ப்ரைஸ் ப்ளான் செஞ்சிருக்கீங்க?” என ஆதினி ஆர்வமாய்க் கேட்க,

“அது நான் அப்புறம் உனக்கு மட்டும் தனியா சொல்றேன்” என முடித்தாள் நிலா.
அதன்பின்பு மலரும் மாணிக்கமும் ஆதினியுடன் உரையாடி விட்டு கைபேசியை வைக்க,

ஆதினியின் மனம் புத்துணர்வு பெற்றது. வெகு இலகுவாய் நிம்மதியாய் உணர்ந்தாள். அகிலனுடனான கோபம் அப்படியே தான் இருந்தாலும், இந்த உற்சாகத்தின் காரணமாய்ச் சிரித்த முகத்துடனேயே அன்று வளைய வந்தாள்.

இங்கு மதுரனின் வீட்டிலிருந்த பொன்னிலா, “அத்தை, மதுரனை கொஞ்சம் வெளில கூட்டிட்டு போய்ட்டு வரேன். ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என அனுமதி கேட்டு கொண்டிருந்தாள்.

சரியென அவரும் அனுமதிக்க, பொன்னிலா தனது வண்டியிலேயே வருமாறு மதுரனை அழைத்துக் கொண்டிருக்க, மாணிக்கமோ அகிலனின் அலுவலகத்திற்குச் சென்று அவனைப் பார்த்துவிட்டு வருவதாய் உரைத்தார்.

“அப்பா, நான் முதல்ல போய் அகிலனை தான் பார்க்க போறேன். நான் பார்த்து பேசிட்டு ஃபோன் செய்றேன்” என மதுரன் கூற,

“அப்பாவும் பையனும் முதல்ல அமைதியா இருங்க. இந்நேரம் வரைக்கும் வீட்டுக்கு வராம ஆபிஸ்ல இருக்காருனா வேலை இருக்கும் தானே. முதல்ல ஃபோன் செஞ்சி பாருங்க” மலர் கூற,

மதுரனும் மாணிக்கமும் மாற்றி மாற்றி நான்கைந்து முறை அகிலனின் கைபேசிக்கு அழைப்பு விடுத்தும் எடுக்காமல் போக, “எதுக்கும் நான் ஒரு தடவை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்மா” ஏனோ மதுரனின் மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.

“நானும் வரேன்” மாணிக்கம் அடமாய்க் கூற, சரியென இருவரும் அவன் அலுவலகம் சென்று காவலாளியிடம் அவனது பெயர் கூறி அவனது வருகைக்காகக் காத்திருந்தனர். அங்கு அவனது அலுவலக அறையின் வெளியிலிருந்த காவலாளி வந்து அவனைத் தேடி ஆட்கள் வந்திருப்பதாய் கூறவும் தான் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

அங்கு அவன் மட்டுமல்லாது மொத்த டீமுமே இருக்க, வந்திருப்பவர்கள் அவனது மாமனாரும் மச்சானும் என அறிந்தவர்கள் அவனைக் கேலி செய்ய ஆரம்பிக்க, அவனுக்கு வேலையில் இருந்த கடுப்பில் கோபம் வர, அவர்களுக்கு ஃபோன் செய்து அலுவலகத்தில் தான் இருப்பதாகவும், தற்போது அவர்களைப் பார்க்கும் நிலையில் இல்லை எனவும் கூறி அனுப்பி வைத்து விட்டான்.

அவன் அங்குத் தான் உள்ளான் என அறிந்ததில் மனம் சற்று நிம்மதியடைய அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

அகிலனை அவனது டீம் மெட்கள் தொடர்ந்து கேலி செய்ய, அவனது கோபமெல்லாம் ஆதினி மேல் பாய்ந்தது. இவள் கூறாமல் அவர்களுக்கு எப்படித் தான் வீட்டிற்குச் செல்லவில்லையெனத் தெரிந்திருக்குமென எண்ணி அவளை மனதிற்குள் கடிந்து கொண்டிருந்தான்.

எத்தகைய அமைதியான பொறுமையான சுபாவிகளாய் இருந்தாலும், இந்த மன அழுத்தமும், மன சோர்வும் அவர்களது இயல்புகளை மீறி நடந்து கொள்ள வைத்து விடும்.

அத்தகைய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருந்தான் அகிலன்.

மதுரனும் மாணிக்கமும் அகிலன் உரைத்ததை மலரிடம் உரைக்க, அவர் மனதிற்கு ஏதோ சரியில்லை என நெருடவாரம்பித்தது.

மதுரனை மதிய வேளையில் ஒரு ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றாள் நிலா. ஆதினியையும் அவ்விடத்திற்கு வருமாறு அழைத்திருந்தாள்.

அங்கு இருந்த முதியவர்களுக்கு இவனின் சார்பாய் அவள் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தாள். அங்கு நிகழ்வுகள் அனைத்தும் இன்பமாய் நிகழ்ந்தேற, மதுரனுக்குத் தமிழ் வார்த்தையான, “யாமிருக்கப் பயமேன்” என்ற வார்த்தை பொதிந்த பனியனை பிறந்தநாள் பரிசாய் வழங்கினாள் ஆதினி. நிலா அவனுக்கு மதுரநிலா எனப் பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தங்க சங்கிலியை பரிசாய் வழங்கியிருந்தாள்.

மாலை வேளையில் மாணிக்கம், மலர், நிலா, ஆதினி என அனைவருமாய்ச் சேர்ந்து மாணிக்கமலர் பவனத்திலேயே கேக் வெட்டி அவனது பிறந்தநாளை சிறப்பாய் கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து மதுரன் ஆதினியை அவளது இல்லத்திற்கு அழைத்துச் செல்வதாய் உரைத்துக் கிளம்பிய சமயம், மாணிக்கத்திற்குக் கைபேசியில் அழைத்து இத்திருமணத்தை நிறுத்துமாறு உரைத்திருந்தார் நிலாவின் தந்தை.

அனைவருக்கும் இது பேரதிர்வு செய்தியாய் இருக்க, அவரிடம் காரணமறிய பேசிக் கொண்டிருந்தார் மாணிக்கம்.

“அப்ப நீ இன்னிக்கு இங்க வரது உன் அப்பாக்கு தெரியாதா?” எனக் கேட்டார் மலர்.

“அப்பாகிட்ட இப்படி எல்லாத்தையும் நான் சொல்லிட்டு இருக்க மாட்டேன் அத்தை” எனச் சற்று தயங்கியவாறே பொன்னிலா கூறவும்,

“மத்த விஷயங்கள் சொல்லலைனாலும், இப்படி மாப்பிள்ளை வீட்டுக்கு போறேன்னு சொல்லாம இருக்கிறதுலாம் தப்புமா” சற்று கண்டிப்பாய் மலர் கூற,

“அம்மாக்கு தெரியும் அத்தை” அவள் கூற,

“எதுவா இருந்தாலும் இப்போதைக்கு நீ கிளம்பு. மது நீ ஆதுவ விட்டுட்டு மாப்பிள்ளைட்ட பேசிட்டு வா” எனக் கூறி அனைவரையும் அங்கிருந்து கிளப்பிவிட்ட மலர்,

அனைவரும் சென்றதும் நிலாவின் தந்தையுடன் உரையாடி முடித்து அமர்ந்திருந்த மாணிக்கத்திடம் வந்தார்.

“என்னங்க ஆச்சு?” மாணிக்கம் தோள் தொட்டு அவர் கேட்க,

“ஒன்னும் உருப்படியா சொல்ல மாட்டேங்கிறாரு. நம்ம இவன் ஆன்சைட் போறதை பத்தி சொல்லி கல்யாணத்தைத் தள்ளி போட தானே சொல்லியிருந்தோம். இவன் இன்னும் இரண்டு நாள்ல ஆன்சைட் போக வேண்டிய நேரத்துல இவர் ஏன் இப்படிக் குழப்பிட்டு இருக்காரு” சற்று கவலையாய் குழப்பமாய் இருந்தது இவரின் முகம்.

மாணிக்கத்தின் முகத்தினையே வெறித்துப் பார்த்த மலர், “அவர் கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுக்கான காரணத்தைச் சொல்லிருக்காரு. நீங்க தான் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறீங்க” என்றார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லடா பேபிமா! நான் நேர்ல பேசிட்டு வந்து உன்கிட்ட சொல்றேன். நீ போய்த் தூங்கு” மலருக்கு பால் ஆற்றி கொடுத்து தனது மடியில் படுக்க வைத்து தலையைக் கோதிக் கொண்டிருந்தார் மாணிக்கம்.

தனக்கொரு பிரச்சனை என்றால் தாங்கி கொண்டு வாழ முடிந்த மலரால் தங்களது பிள்ளைகளின் பிரச்சனையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.

இந்தச் செய்தி மலரை எந்தளவிற்குக் கவலை கொள்ளச் செய்யுமென உணர்ந்த மாணிக்கம், மலரிடம் ஏதுமுரைக்காது அவரை உறங்க வைப்பதிலேயே முனைப்பாய் இருந்தார்.

அங்கு ஆதினியை அழைத்துச் சென்ற மதுரன், அகிலனுக்குச் சில பல அறிவுரைகளைக் கூறிவிட்டே வந்தான்.
மதுரன் வரவேற்பறையில் பொதுவெளியில் வைத்து தான் அகிலனிடம் பேசியிருந்தான். மாப்பிள்ளையாய் அல்லாது தனது நண்பனுக்குக் கூறும் அறிவுரையாய் எண்ணியே பேசியிருந்தான் மதுரன்.

அப்பொழுது தான் அலுவலகத்திலிருந்து வந்து உண்டு விட்டு அமர்ந்த அகிலனுக்கு மதுரனது இந்த அறிவுரை பெருங்கோபத்தை உண்டு செய்தது. மேலும் தன்னிடம் கூறாது ஆதினி சென்றதில் அவள் மீதே அவன் கோபமாய் இருக்க,

“இப்ப என் பையன் என்ன செஞ்சிட்டானு உன் அண்ணன் இப்படி அறிவுரை சொல்லிட்டுப் போறான்? ஊர் உலகத்துல வேலைக்குனு போற பிள்ளைங்க வேலை நேரத்தில் ஃபோன் எடுக்காம பேசாம இருக்கிறது சகஜம் தான. அதுக்கென்னமோ குற்றம் செஞ்ச மாதிரி நடு வீட்டுல வச்சி பேசிட்டுப் போறான் உன் அண்ணன்” காட்டமாய் ஆதினியிடம் சத்யா பேசவாரம்பிக்க,

அகிலன் அவரைத் தடுப்பானென இவள் அகிலனை பார்க்க, அவனோ அமைதியாய் அமர்ந்திருந்தான்.

தர்மன் தான் சத்யாவிடம் அமைதியாய் இருக்குமாறு கூறினார்.

ஆதினியின் கண்களில் ஒரு துளி நீர் எட்டி பார்த்தது.

அகிலனுக்கும் அவள் மீது கோபமிருந்ததால் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றான்.

அவன் பின்னாலேயே ஆதினியும் அவர்களது அறையினுள் சென்றாள்.

“நான் உங்களுக்கு மெசேஜ் செஞ்சிட்டு தான் போனேன். நீங்க என் கால்ஸ் எதையும் எடுக்கலை” அழுகையில் தொண்டை கமற பேசவாரம்பித்தாள் ஆதினி,

அவளின் அழுகை குரலில் அவனின் கோபம் மொத்தமும் வடிந்து போனது.

“நீங்க என் முகத்தைப் பார்த்து பேசி ஒரு மாசம் மேல ஆகுது. நான் சாப்பிட்டேனே இல்லையானு கூட நீங்க கேட்கலை. என்னைய தனியா தவிக்க விட்டுட்டு ஆபிஸ் வேலையே கெதினு இருந்துட்டீங்க” அவளின் குற்றச்சாட்டலில் தன்னையே நொந்து கொண்டான்.

அவளுக்குத் தன்னிலையை உணர்த்திவிடும் நோக்கில் அவளருகே அவன் செல்ல, “நான் உங்ககிட்ட எந்தச் சமாதானமும் கேட்க விரும்பலை” அழுகையில் தேம்பி தேம்பியே கூறியவள்,

“ப்ளீஸ் என்கிட்ட கோபமா சண்டை போடுற மாதிரி மட்டும் பேசாதீங்க” விசும்பலாய் கூறியவள், எனக்குப் பயமா இருக்கு என்பதைத் தனது வாய்க்குள்ளேயே அவள் கூறியிருக்க,

அவளைத் தன் இறுகிய அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தான் அகிலன். “சாரிடா கண்ணுமா” அவளது உச்சந்தலையில் சிறு சிறு முத்தங்களாய் பதித்துப் பரிதவிப்பாய் அவன் உரைத்திருக்க,

அழுது கரையும் வரை அவனது அணைப்பில் இருந்தவள், அதன்பின் தன்னிலை அடைந்து அவன் அணைப்பிலிருந்து வெளி வந்து அவனிடம் ஏதும் பேசாது கட்டிலின் ஓரத்தில் உடலை குறுக்கி கொண்டு படுத்துவிட்டாள். அதன் பிறகு அவனை அவள் தொடவே விடவில்லை. அவளின் மனம் ஏதோவொரு அச்சத்தின் பிடியில் இருந்தது. அந்த அச்சத்தின் காரணத்தை அவளே அறியாது இருந்தாள். அவளின் பயத்தினை அகிலன் உணராது போனான். தன் மீதான கோபத்தில் இவ்வாறு அவள் அவனைத் தவிர்க்கிறாளென எண்ணிக் கொண்டான்.

மனம் நிறைந்த வேதனையுடன் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அகிலன், அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதும், தனது கைவளைக்குள் கொண்டு வந்தான்.

இத்தனை நாட்களாய் அவளைக் கவனியாது, தான் செய்த தவறு அவனுக்குப் புரிந்தது. அலுவலக வேலையின் அழுத்தத்தினால் இத்தனை நாட்களாய் தான் செய்த தவறுகள் அனைத்தையும் சிந்தித்துத் தன்னையே திட்டிக் கொண்டவன்,

“இன்னும் மூனு நாள் தான்டா கண்ணுமா. அந்த ப்ராஜக்ட் முழு ஆன்போர்ட்டிங் முடியுது. மூனு நாள் மட்டும் பொறுத்துக்கோடா. என்னால வீட்டுக்கு வர முடியாமானு கூடத் தெரியலை. இது முடிஞ்சதும் நான் நார்மல் ஆகிடுவேன். இனி என்னிக்கும் உன்கிட்ட நான் கோபமா பேச மாட்டேன்டா” இதை நீ நம்பச் சொல்ற என அவனின் மனசாட்சியே அவனிடம் கூற, “என் கண்ணுமாக்காக நான் இதைச் செய்வேன்” மனசாட்சியிடம் பேசிக் கொண்டவனோ, இந்த மூன்று நாட்களில் ஆதினியின் நிலை இன்னும் மோசமாய் மாறப் போவதை அறியாமல் உறங்கி போனான்.

— தொடரும்