முள்ளில் பூத்த மலரே – 27

முள்ளில் பூத்த மலரே 27

“நேத்து அப்பா உங்க ஃபோட்டோவை எனக்கு வாட்ஸப்ல அனுப்பியிருந்த நேரம் தான் நீங்க என்னைப் பொன்னும்மானு கூப்பிட்டீங்க. எனக்கு ஏற்கனவே உங்க ஃபோட்டோவை பார்த்ததுல அதிர்ச்சினா, நீங்க இப்படிப் பேர் சொன்னதுல பேரதிர்ச்சி. அதைத் தாண்டி உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குனும் புரிஞ்சிது. உங்க வீட்டுல உங்களுக்காகப் பார்த்த பொண்ணு நான் தான்னு நீங்க என்கிட்ட கார்ல கேட்ட கேள்வில கன்பர்ம் செஞ்சிக்கிட்டீங்கனும் புரிஞ்சிது. இதெல்லாம் யோசிச்ச பிறகு தான் உங்களைத் தனியா மீட் பண்ணி சில விஷயங்கள் பேசனும்னு முடிவு செஞ்சேன். இது வரை என்னைப் பொண்ணு பார்க்க வந்தவங்கலாம் நான் சொன்ன விஷயத்தைக் கேட்டு இந்தப் பொண்ணு வேண்டாம்னு போனவங்க தான். ஆனா எனக்கு என் உண்மையைத் தெரிஞ்சிக்கிட்டு என்னைய விரும்பி கல்யாணம் செஞ்சிக்கிற பையன் தான் வேணும்னு என் கடந்தகாலக் கதையைச் சொல்லிட்டு தான் இருக்கேன். இந்த விஷயமெல்லாம் என்னோட பெத்தவங்களுக்குக் கூடத் தெரியாது. மாப்பிள்ளைங்க கிட்ட தனியா பேசும் போது தான் நான் என்னமோ சொல்லி கல்யாணத்தை நிறுத்திடுறேனு நினைச்ச அப்பா இந்தத் தடவை பொண்ணு பார்க்க வர்றவர் கிட்ட தனியா பேசலாம் விடவே மாட்டேன்னு சொல்லிருந்தாங்க. நல்ல வேளை கடவுளா பார்த்து இப்படி உங்களைச் சந்திக்கிற மாதிரி அமைச்சுக் கொடுத்திருக்கார்” சற்று பெரியதாய் பீடிகையுடன் அவள் பேச,

“அப்படி என்ன விஷயமா இருக்கும்?” மனதில் எண்ணிக் கொண்டே அவள் கூற இருப்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதை திடப்படுத்திக் கொண்டான் மதுரன்.

“நான் ஆர்க்கிடெக்ட் படிச்சிட்டு இப்ப சொந்தமா பிஸ்னஸ் செஞ்சிட்டு இருக்கேன். சமையலறை டிசைன் செய்றது தான் எங்க கம்பனியோட முக்கிய வேலையே. என் கூட இன்னும் நாலு பேரு சேர்ந்து வேலை செய்றாங்க. என்னோட கம்பெனி பேரு நிலா ஆர்க்கிடெச்சுரல் டிசைன். நான் இந்தக் கம்பெனி ஸ்டார்ட் செய்றதுக்கு முன்னாடி காலேஜ் முடிஞ்சதும் ஹைத்ராபாத்ல மூனு வருஷம் ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். அப்ப தான் அவனைப் பார்த்தேன்” உணர்வற்ற குரலில் கூறியிருந்தாள் அவள்.

தனக்கென்று சொந்த தொழிலை அமைத்துத் தன்னிச்சையாய்ச் செயல்படும் பெண்ணென அவள் மீது பெருமிதம் உண்டானாலும், அவளின் வாழ்வில் காதல் என்கின்ற பெயரில் ஏதே டிராஜடி நடந்திருக்கிறது எனப் புரிந்தது மதுரனுக்கு.

“இதை நான் சொல்றதுக்கு முன்னாடி, நான் சொல்றதை நீங்க சரியா புரிஞ்சிக்கனும்ன்ற பயம் எனக்கு நிறையவே இருக்கு. ஏன்னா எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு” என்னை எங்கேயும் தப்பா நினைச்சிடாதீங்க என்பதாய் கெஞ்சுதலுடன் கூடிய யாசக பார்வையால் அவனை அவள் நோக்க,

அவளின் பரிதவிப்பை உணர்ந்தவனோ, தான் உண்டு கொண்டிருந்த பிரியாணியை எடுத்து அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விடக் கையை நீட்ட, அவனின் செயல் விளங்காது அவனைப் புரியாத பாவனைப் பார்த்தாலும் அவனளித்த உணவினை மறுக்காது வாயினில் அவள் பெற்றுக் கொள்ள, உணவின் ருசியைத் தாண்டி, உனக்கு நானிருக்கிறேன் என்ற சமாதானத்தையும் நம்பிக்கையையும் அவனின் கை வழியாய் உணர்வாய் அவளுக்குக் கடத்தியிருந்தான்.

சற்று நேரம் அவன் அவளைப் பேசவிடாது ஊட்டி கொண்டு மட்டுமே இருக்க, கண்ணில் நீருடன் உண்டு கொண்டிருந்தாள் பொன்னிலா.

மனதின் தவிப்படங்க சற்று ஆசுவாசமானவள் பேச்சை தொடங்கினாள்.

“ஒருவனுக்கு ஒருத்தினு மனசையும் உடம்பையும் ஒருத்தனுக்கே கொடுத்து ஆயுசுக்கும் அவன் கூட மட்டுமே வாழனும்னு கோட்பாடோட வாழ்ந்த பொண்ணு நான். அவனைக் காதலிக்கும் போது அவன் மட்டுமே என் வாழ்க்கைனு நினைச்சு தான் காதலிச்சேன். அவனும் அப்படித் தான் என் மேல உயிரா இருக்கானு நினைச்சேன். ஆனா அவன் என் மனசை காதலிக்காம உடம்பை தான் காதலிச்சிருக்கானு அவன் என் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சப்ப தான் தெரிஞ்சிது. அங்க கைல கிடைச்ச கண்ணாடி டம்ளரால அவன் மண்டையை உடைச்சிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் அவனை நான் பார்க்கவே இல்லை. ஆனா இப்படி ஒரு தவறானவனைக் காதலிச்சு ஏமாந்துட்டேனே, இனி ஒருத்தரை நான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் அது அவங்களை நான் ஏமாத்துறது போல ஆகுமேனு என் மனசு என்னை வதைச்சு கொன்னுது. உடம்பை விட மனசால கெட்டுப் போறது தான் ரொம்பவே தப்பான விஷயம்னு நினைக்கிற பொண்ணு நான். என் வாழ்க்கைலயே இப்படி நடந்துடுச்சேனு சகிச்ச முடியாம தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செய்ய முயற்சி செஞ்சேன். அப்ப என் கூட ரூம்ல இருந்த பொண்ணு என்னைய ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போய்க் காப்பாத்தினா. அவ தான் வாழ்க்கைனா என்னனு எனக்குப் புரிய வச்சா. இதை விட வாழ்க்கைல கஷ்டபடுறவங்கலாம் என்னை மீட் பண்ண வச்சா. கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அழிச்சிக்க நமக்கு உரிமையில்லனு புரிய வச்சா. ரொம்பக் கடவுளை வணங்க ஆரம்பிச்சேன். நிறைய ஏழை எளிய மக்களுக்கு உதவ ஆரம்பிச்சேன். என் திறமையை வளர்த்துக் கொள்ள ஆரம்பிச்சேன். மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். என் கவனமெல்லாம் என்னுடைய வேலையிலும் தனியாய் ஒரு தொழில் தொடங்குவதிலும் செலுத்த ஆரம்பிச்சேன். அப்படித் தான் இந்தப் புதுக் கம்பெனியை சென்னையில் தொடங்கினேன்!” சற்று அமைதியானவள்,

“இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க என்னைப் பத்தி” கலவரமான முகத்தினுடனே அவள் கேட்க,

“வாழ்க்கைல தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களை, வேதனைகளை, வாழ்க்கை மீதான அவ நம்பிக்கையைக் கடந்து வந்து போராடி சாதித்திருக்கும் ஒரு பொண்ணுனு தான் தோணுது. உங்களைக் கட்டிக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும்” பெருமிதமான பார்வையுடன் மதுரன் இதைக் கூறியிருக்க,

எத்தனை நாள் தவிப்பிது அவளுக்கு. தன்னைப் புரிந்து கொண்டு, தன்னை ஏற்றுக் கொண்டு ஒருவன் வருவானா? தனக்கென்று ஒரு இன்பமான வாழ்வு அமையுமா? என மனம் கலங்கி எத்தனை நாட்கள் கலங்கியிருக்கிறாள். மதுரனின் இந்தப் பதிலில், அவளின் அந்நேர உணர்வினை வடிக்க வார்த்தைகளே இல்லை. அவனைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் போல் தோன்றியது. அவளின் எண்ணம் உணர்ந்தனாய் அவளருகில் அமர்ந்தவன் அவளைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான். அழுது கரைந்தாள்.

இத்தனை நாட்களாய் தன் மனதை அழுத்தியிருந்த பாரம் தன்னை விட்டு விலகுவதாய் உணர்ந்தாள்.

தனது இந்தக் குற்றயுணர்விலிருந்து விடுதலையளிக்க வேண்டும் இறைவா எனக் கடவுளின் சன்னதியில் எத்தனை நாட்கள் அழுது கரைந்திருப்பாள். அதன் பலனாய் கடவுளின் அருளாசியினால் தான் தனக்கு இவன் கிடைத்துள்ளானென எண்ணி நெகிழ்ந்தாள்.

அவன் தோளில் இருந்து நிமிர்ந்து அவனின் கை பற்றிச் சிரிப்புடன் கூடிய கண்ணீரால் நோக்கியவள், “எப்படி என் மேல இப்படி ஒரு புரிதல் உங்களுக்கு” இமை சிமிட்டாது அவனின் பார்வையை ஏந்தி கொண்டு அவள் கேட்க,

“இங்க என்ன சொல்லுது?” தன் நெஞ்சில் கை வைத்து கேட்டவன், “பொன்னும்மா பொன்னும்மானு சொல்லுது” விடிவி கணேஷ் மாடுலேஷனில் அவன் உரைக்க, வாய்விட்டு சிரித்தவள்,

“சொல்லுங்க எப்படி இப்படி ஒரு புரிதல்?”

அவன் எப்படித் தான் சொன்னதை இத்தனை சரியாய் புரிந்து கொண்டு தனக்கு ஆறுதலையும் வழங்குகிறானென ஆச்சரியம் அவளுக்கு. இத்தனை நாட்களாய் தன்னைப் பெண் பார்க்க வந்த எவரும் அவ்வாறில்லையே என இவள் சிந்தித்திருந்த நேரம், “இதுல எங்கயுமே உன் மேல தப்பில்லை பொன்னும்மா” என்று கூறினான் மதுரன்.

“என்னைக் கல்யாணம் செஞ்சிக்க உங்களுக்குச் சம்மதமா?” எனக் கேட்டாள்.

“பூரணச் சம்மதம்! இனி நம்ம ஃலைப்ல நம்மளை பத்தி மட்டும் தான் பேசனும் யோசிக்கனும் சரியா” அவள் கைப்பற்றி ஆறுதலாய் அவன் கூற,

மன நிறைவின் சாயலாய் முகத்தில் உண்டான நிறைவான புன்னகையுடன் சரியெனத் தலையசைத்தாள் நிலா.

ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் மதுரனின் பெண் பார்க்கும் விழா நிறைவடைந்து மூன்று மாதத்தில் திருமணமென இரு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர். மதுரனும் நிலாவும் தங்களது காதலை கடலை போட்டு வளர்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த ஒரு மாதத்தில் ஆதினி வெகுவாய் சோர்ந்து போய்க் காணப்பட்டாள்.

இவள் காலை வேலைக்குக் கிளம்பும் நேரம் அகிலன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். அதன் பின்பு சில மணி நேரங்கள் கழித்து அலுவலகத்திற்குச் சென்றடைவான் அகிலன். அவள் மதிய உணவு உண்ண அவனை அழைக்கும் சமயம் க்ளைண்ட் மீட்டிங் அல்லது டீம் மீட்டிங் என ஏதாவது கூறி உணவு இடைவேளையிலும் அவளைக் காணாது இருந்தான். இரவு அவள் உறங்கும் நேரம் தான் அவன் வீட்டிற்கே வருவான்.

அகிலனை வெகுவாய் மிஸ் செய்தாள். அவனின் அண்மைக்காய் வெகுவாய் ஏங்கி தான் போனாள். இது எதையும் அறியாது தனது அலுவலகப் பணியிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி ஈடுபட்டிருந்தான் அகிலன்.

அவன் வேண்டாம் எனச் சொன்னாலும், அங்கு அடுக்கப்பட்டிருக்கும் வேலை அவனை உள்ளிழுத்துக் கொண்டது. செய்தே ஆக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டான். ஆகையால் தன்னால் முடிந்தளவு நல்லவிதமாய் இந்த ப்ராஜக்ட் இந்தக் கம்பெனிக்கு வருவதற்கு இரவு பகல் பாராது முழு உழைப்பை போட்டான்.

அவ்வாறு ஒரு நாள் இரவு அவன் வருகைக்காகக் காத்திருந்து உறங்காது ஆதினி விழித்திருக்க, அவள் அவ்வாறு முழித்திருந்ததைப் பார்த்தவனுக்குக் கோபமேற, “எனக்காக வெயிட் செய்யாத! தூங்குனு சொல்லிருக்கேனா இல்லையா?” அலுவலக டென்ஷனில் இங்குச் சற்று கடுமையாகவே அவளிடம் அவன் கத்த,

அவனின் இந்தக் கோப முகம் அவளுக்கு முற்றிலும் புதிது. அரண்டு போனாள் ஆதினி. எதற்காக அவனுக்காக அவள் காத்திருந்தாள் என்பதனையே மறந்து, பயத்தினால் ஏற்பட்ட நடுக்கத்துடன் தனது உடலினை குறுக்கி கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

அவளின் செயலை கண்டு தன்னையே நொந்து தனது தலையில் அடித்துக் கொண்டு தன்னிலை அடைந்தவன், “ஆதுமா சாரிடா!” எனக் கூறி அவளைத் தொட போன நேரம்,

அலுவலகத்திலிருந்து அவனது மேனேஜர் அவனை அழைக்க, அந்த அழைப்பை ஏற்றுப் பேச போனவன் இங்கு நடந்த நிகழ்வுகளை மறந்தே போனான். திரும்பி வந்து பார்க்கும் போது இவள் உறக்கத்திலிருக்க வழமைப்போல் அவளை அணைத்தவாறு உறங்கியும் போனான்.

இவ்வாறு அவ்வப்போது நிகழ்ந்த நிகழ்வுகளில் மனம் நொந்து போனாள் ஆதினி. அகிலனை குற்றமாய்ப் பேச மனமின்றி எவரிடத்திலும் தன் மனதின் இந்த வேதனையைப் பகிர்ந்துக் கொள்ளயியலாது தனக்குள்ளேயே மறுகி போனாள்.

இதற்கிடையில் மதுரன் ஒரு மாதத்தில் ஆன்சைட் செல்ல வேண்டிய உத்தரவை பிறப்பித்திருந்தார் அவனது மேனேஜர்.

ஆன்சைட்டா திருமணமா என மதுரனின் குடும்பம் சிந்தித்திருந்த நிலையில் இத்திருமணத்தை நிறுத்துமாறு பொன்னிலாவின் தந்தையிடமிருந்து மாணிக்கத்திற்கு அழைப்பு வந்திருந்தது.

— தொடரும்