முள்ளில் பூத்த மலரே – 26

முள்ளில் பூத்த மலரே 26

அந்தப் பெரியவரை மருத்துமனையில் அனுமதித்து விட்டு, அவரின் பணப்பையிலும்(பர்சிலும்) கைபேசியிலும் ஏதேனும் தொலைபேசி எண் சிக்குமா எனத் தேடி கண்டுபிடித்து அந்த எண்ணிற்கு அழைத்து விபரம் கூறி அவரின் மகனின் வருகைக்காகக் காத்திருந்தனர் மதுரனும் பொன்னிலாவும்.

“மைல்ட் ஹார்ட் அட்டாக் தான். சரியாகிடும்” எனக் கூறிய மருத்துவர் அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.

அப்பெரியவரை வண்டியில் அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை அவளின் மனம் நிலைக்கொள்ளாது தவித்ததைக் கண்டவனின் உள்ளம் அவளின்பால் ஏகமாய்ச் சாய்ந்தது.

“யாருக்காகவோ இப்படித் துடிக்கிறவ, நம்ம அப்பா அம்மாவை கண்டிப்பா நல்லபடியா தான் பார்த்துப்பா” மனதில் எண்ணி கொண்டான்.

அவளின் இந்த உதவும் குணமும், தைரியமும் வெகுவாய்க் கவர்ந்தது அவனை.

அதுவும் இவளை தான், இவர்கள் வரும் வாரயிறுதி நாளில் பெண் பார்க்க போகிறார்களெனத் தெரிந்ததில் அவளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவல் பெருகியது அவனுக்கு.

இருவரும் காத்திருப்போரின் அறையில் அமர்ந்திருந்தனர்.

“உங்களுக்குச் சொந்த ஊர் இது தானா? எங்க வேலை செய்றீங்க? உங்க வீடு எங்க இருக்கு?” அவனின் தொடர்ந்த கேள்விகளில் நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவள்,

“தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் சார். கேட்டதும் உதவினதுக்கு ரொம்ப நன்றி. அதுக்காக உங்களைப் பத்தி நானோ இல்ல என்னைப் பத்தி நீங்களோ தெரிஞ்சிக்கனும்னு எந்த அவசியமும் இல்ல” கூறி விட்டு தனது கைபேசியில் யாருக்கோ அவள் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்க,
அவளின் இப்பதிலை குறுநகையுடன் எதிர் கொண்டான் மதுரன்.

“அம்மா இப்படித் தானே முதல் முதல்ல அப்பாகிட்ட பேசினதா அம்மா சொல்லுவாங்க” அவனின் அன்னையின் நினைவு அவனை ஆட்கொள்ள,

“அய்யோ அம்மா தேடுவாங்களே” என்கின்ற எண்ணம் தோன்ற, அவனது அன்னைக்கு அழைத்து விஷயத்தைக் கூறி கைபேசியை வைத்தவன்,

மீண்டுமாய் பொன்னிலாவை நோக்கி, “சரி நீங்க உங்களைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம். நானும் என்னைய பத்தி எதுவும் உங்கட்ட சொல்ல போறதில்ல. ஆனா ஒரு விஷயம் சொல்லனும்” கூறவிட்டு அவன் இடைவெளி விட,

“என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தி அவள் அவனைப் பார்க்க,

“என் அம்மா பேரு பொன்மலர். அவங்களைத் தாத்தா பொன்னும்மானு கூப்பிடுவாங்க. உங்களையும் அப்படிக் கூப்பிடனும் ஆசை வருது” உரைத்தவன் அவள் ஏதும் பதிலுரைக்கும் முன்னமே அங்கிருந்து நகர்ந்து வரவேற்பறைக்குச் சென்றான்.

அங்குச் சென்றவனோ, “யாரிவன் எனக்குப் பேரு வைக்கிறதுக்குனு கண்டிப்பா கோபத்துல புசு புசுனு மூச்சு விட்டுட்டு உட்கார்ந்திருப்பா என் பொன்னும்மா” மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அந்த இரவு பொழுதின் ஏகாந்த நிலையில் அவளினால் இதழில் உரைந்திருந்த இளநகையுடன் அந்த வரவேற்பறையில் இருந்த சாளரத்தின் வழியாய் இவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனருகே வந்து நின்றவள், கோபமாய் அவனை முறைத்து, “என்கிட்ட இருந்து திட்டு வாங்காம எஸ்கேப் ஆகலாம்னு தானே இங்க வந்து நிக்கீங்க!” என்றவள்,

சில மணிதுளிகள் அவனின் கண்ணோடு கண்ணாய் பார்த்து, “உங்க கிட்ட தனியா கொஞ்சம் பேசனும். நாளைக்குப் பார்க்கலாம்! இடம் நேரம் எல்லாம் நாளைக்கு மெசேஜ் செய்றேன்! என் ஃப்ரண்ட் வந்திருக்கான் என்னைய கூட்டிட்டு போக. தேங்க்ஸ் அகைன் ஃபார் யுவர் ஹெல்ப்” என்றவள் அவ்விடத்தை விட்டு விரைந்து அகன்று சென்றாள்.

“என்னது நாளைக்கு மீட் பண்ணனுமா?” மதுரனுக்கு அதிர்வை தாண்டிய உணர்வு. அதிலிருந்து அவன் வெளி வரும் முன்பே அவள் வெளியே சென்றிருந்தாள்.

“ஒரு வேளை நான் தான் அவங்களைப் பொண்ணு பார்க்க வர போறேன்னு தெரிஞ்சிடுச்சா? நான் பொன்னும்மானு கூப்ட வரை அவங்களுக்கு இதைப் பத்தி தெரியாதே! அதுக்கப்புறம் தான் யாரோ அவங்க வீட்டுல சொல்லிருக்கனும். சரி நம்ம பொன்னும்மா நாளைக்கு என்ன சொல்லுதுனு பார்ப்போம்” மனதில் எண்ணிக் கொண்டவன் சன்னமாய்ச் சிரித்தான்.

அந்த முதியவரின் மகன் வந்ததும், அவரிடம் ஒப்படைத்து விட்டு, வீட்டிற்குக் கிளம்பி சென்றான் மதுரன்.

பொன்னிலாவை கண்டதாய் அவனது இல்லத்தில் எவரிடமும் பகிரவில்லை. அவள் என்ன கூற விழைகிறாளென அறிந்த பின் வீட்டினரிடம் கூறலாம் என எண்ணியிருந்தான்.

அன்றைய அதே இரவில் ஆதினி தனது இல்லத்தில் இரவுணவாய் அனைவருக்கும் தோசை வார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் மாமா, அத்தை மற்றும் அகிலன் உண்டப்பின் தனக்காய் அவள் தோசை ஊற்ற தெடங்கவும், அகிலன் தான் அவளுக்கு ஊற்றுவதாய் உரைத்துச் சமையலறையில் அடுப்பினருகே சென்று அவள் ஊற்றிய தோசையை அவன் எடுத்துக் கொண்டிருக்க, “மை ஸ்வீட் ரசகுல்லா” என அவனின் கன்னம் கிள்ளியவள் அவனளித்த தோசையை எடுத்துக் கொண்டு முகப்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே உண்டு கொண்டிருந்தாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சத்யா, “என்னிக்காவது உங்க பிள்ளை எனக்குத் தோசை ஊத்தி கொடுத்திருப்பானா? ஓவரா தான் பொண்டாட்டிய தாங்குறான்” தர்மனிடம் ரகசியம் பேசுவது போல் சற்று சத்தமாகவே முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு அவருரைக்க,

அது ஆதினியின் காதில் விழுந்தாலும், கேட்காதது போல் உண்டுவிட்டுக் கை கழுவ சென்றாள்.

அதன் பின் ஆதினி அடுப்படியை சுத்தம் செய்து கொண்டிருந்த நேரம் வந்த சத்யா, “எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க மாட்டேங்கிற நீ! இரண்டு பேரா ஒரு இடத்துல புழங்குனாலே வச்ச பொருள் அந்த அந்த இடத்துல இருக்காது. இதுல உன் புருஷன் வேற அப்பப்ப வந்து எதையாவது மாத்தி வச்சிட்டுப் போய்டுறான்” கடுகடுப்பாய் அவர் கூற, சிரிப்பு தான் வந்தது ஆதினிக்கு.

இது தாய் மகனுக்கு இடையேயான பொசசிவால் வந்த கடுகடுப்பாய் தான் தோன்றியது ஆதினிக்கு. அவரின் இக்கோபத்தை ரசித்தாள் ஆதினி.

ஆகச் சத்யாவிடம் வேண்டுமென்றே, “உங்க பையன் மேல தான் தப்பு! அம்மாவை ஒழுங்கா பார்த்துக்கத் தெரியுதா அவருக்கு? அவர் மேலுள்ள கோபத்தைத் தானே இப்படி வந்து என்கிட்ட காண்பிச்சிட்டு இருக்கீங்க” போலியாய் அவள் அகிலனை திட்டி சத்யாவை வம்பிழுக்க,

“என் பிள்ளையை நான் திட்டுவேன். நீ எப்படித் திட்டலாம்? அவன் என்னைய நல்லா தான் பார்த்துக்கிறான். சம்பாதிச்சு வீடு கட்டி கொடுத்து என்னைக் கௌரவமா வச்சிருக்கிறதே அவன் தான். அவனை எப்படி நீ குறை சொல்லலாம்” சத்யா சற்று ஆவேசமாய் ஆதினியிடம் கத்த, உடனே அங்கு வந்து விட்டனர் அகிலனும் தர்மனும்.

“உன் பொண்டாட்டிக்கு ஓவரா தான் வாய் நீளுது. உன்னைய பத்தி என்கிட்டயே குறை சொல்லுறா. இனி ஒரு தடவை அவ இப்படிப் பேசினா அவ்ளோ தான் சொல்லிட்டேன்” அவனிடம் தனது கோப முகத்தைக் காண்பித்து உரைத்து அவ்விடத்தை விட்டு சென்றார்.

ஆதினி சத்யாவின் கோபத்தில் சற்று மிரண்டாலும், அகிலனுக்கான சத்யாவின் அன்பை கண்டு மனதினுள் சிரித்திருந்தாள்.

“அம்மாகிட்ட என்ன சொன்ன?” சற்று கோபமாகவே அகிலன் ஆரம்பிக்கவும், “ரூம்க்குப் போய்ப் பேசுங்க” எனத் தர்மன் கூறவும், “பெரிசா ஒன்னுமில்ல மாமா” என நடந்ததை ஆதினி கூற, “நீ ஏன் அம்மாகிட்ட இப்படித் தேவையில்லாம விளையாண்டுட்டு இருக்க. உன் மனசு கஷ்டபடுற மாதிரி ஏதாவது சொல்லிட போறாங்க” கோபமாய் ஆரம்பித்து அக்கறையாய் அகிலன் கூறவும்,

“அத்தைக்கு உங்க மேல பாசம் அதிகம்ங்க. நீங்க எனக்குச் செய்ற மாதிரிலாம் அத்தைய கவனிச்சிக்கலைனு அவங்க மனசு கவலைபடுது. ஆனா அதை எல்லாம் அவங்க ஒன்னும் வக்கிரமாலாம் மனசுல வச்சிக்கலை. அப்பப்ப இப்படி வெளிய காமிச்சிட்டு போய்டுறாங்க. மாற வேண்டியது நீங்க தான். அவங்க இல்ல. உங்க அன்பை அவங்களுக்குப் புரிய வைங்க” கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அவள் செல்ல,

அகிலன் வாயடைத்து போய் நிற்க, “நீ வாழ்க்கைலயே உருப்படியா செஞ்ச காரியம் ஆதினியை கட்டிக்கிட்டது தான்டா” என்றுரைத்து அவனது தோளில் தட்டி கொடுத்து சென்றார் தர்மன்.

தனது அறைக்குச் சென்ற அகிலன், “ஆமா நேத்து அம்மா மனசுல ஏதோ கவலை இருக்குனு சொன்னியே! அது இது தானா?” எனக் கேட்க,

“இல்ல இது இப்ப நடந்தது உங்க மேல இருக்க ஃபால்ட். அது அந்த வலி மாமானால உருவானது. அவர் தான் சரி செய்யனும். ஆனா எதனால இந்த வலினு நீங்க தான் கண்டுபிடிச்சு சரி செய்யனும்” புதிராய் அவள் உரைக்க,

“அய்யோ குழப்பாம சொல்லு ஆதுமா” அகிலன் கேட்க,

அன்று நிகழ்ந்த சண்டையைக் கூறியவள், “மாமா அத்தையைக் கட்டிக்கிட்டு வந்த பிறகு ஒழுங்கா கவனிச்சிக்கலை போல, அதான் அவங்களுக்கு அடி மனசுல மாமா மேல ஒரு அவநம்பிக்கை, கோபம், ஆற்றாமைலாம் இருக்கு. அது அவங்களை இப்படிச் சண்டைகாரியா மாத்திருக்குனு தோணுச்சு. சத்தமா பேசுறவங்கலாம் கெட்டவங்களும் கிடையாது. அமைதியா அந்தப் பேச்சை கேட்டுட்டு இருக்கிறவங்கலாம் நல்லவங்களும் கிடையாது” ஆதினி கூறி முடிக்கவும், சற்று குழப்பமாய் அவன் அமர்ந்திருக்க,

அவனின் குழப்பத்தைக் கண்டவள், கட்டிலில் அவனருகில் அமர்ந்து, கைகளை நீட்டி கண்ணசைத்து அருகே அழைக்க, அவளின் கைகளுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டான்.

“இப்ப எதுவும் யோசிக்காதீங்க. இந்த ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகு நம்ம பேசி அத்தையைச் சரி பண்ணிடலாம். நீங்க கவலைபடாம தூங்குங்க” அவனின் தலை கோதி நெற்றியில் முத்தமிட்டு அவளுரைக்க, அவள் தனக்களிக்கும் ஆசுவாசத்தில் மனம் நெகிழ்ந்தவன், அவளை அன்பாய் அணைத்து முத்தமிட்டவன் நிம்மதியான உறக்கத்தைத் தழுவினான்.

மறுநாள் மாலை வேளையில் பொன்னிலா அழைத்திருந்த இடத்திற்குச் சென்றான் மதுரன்.

தலப்பாக்கட்டி பிரியாணி உணவகம் அது.
அந்த உணவகத்தினுள் சென்று ஓரமாய் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த நிலாவை பார்த்துக் கையசைத்திருந்தான் மதுரன்.

நேற்று இரவு வேளையில் அவளது சோர்வான முகத்தினைக் கண்டவனுக்கு இன்று சுடிதாரில் மிதமான ஒப்பனையில் தலை நிறையப் பூ வைத்திருந்தவளை கண்டவனின் மனம் ஆனந்தம் கொண்டது. அவளது இந்த அலங்காரமும், அழகாய் தன்னைக் காண்பிக்க எடுத்திருக்கும் இந்த மெனக்கெடலும் தனக்காகத் தானே என ஏனோ அவனுள் தோன்ற, அவளுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறது என்று தானே இதற்கு அர்த்தம் என அவனின் மனம் எண்ணி பூரித்து மகிழ்ந்தது.

தான் அவளைப் பெண் பார்க்க போவது அறிந்து தான் இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளாளெனவும் புரிந்தது அவனுக்கு.

“பிரியாணி ரொம்பப் பிடிக்குமோ?” எனச் சிரிப்பாய் கேட்டுக் கொண்டே அவளெதிரில் அமர்ந்தான்.

அவனின் கேள்வியில் சிரித்தவள், “உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்” என்றாள்.

“எனக்குப் பிடிக்கும்னு எப்படித் தெரியும்?” ஆச்சரியமாய் அவன் கேட்க,

“யாருக்கு தான் பிரியாணி பிடிக்காது?” என்று கூறி அவனைப் பார்த்தவள்,
“ஆனா நேத்து நீங்க உங்கம்மாட்ட அந்த நேரத்துலயும் இன்னிக்கு பிரியாணி வேணும்னு மெனு சொல்லிட்டு இருந்தீங்கலே. அதைக் கேட்டேன்” என்றவள் கூறவும்,

வாய்விட்டு சிரித்தவன், “ஓஹோ, அப்ப நேத்து உங்களுக்கு உதவி செஞ்சதுக்கு எனக்குப் பிரியாணி ட்ரீட் கொடுக்க இங்க கூப்பிட்டீங்களா?” இச்சந்திப்பிற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் இதைக் கேட்க,

இத்தனை நேரம் இயல்பாய் இருந்த அவளின் முகத்தினில் அச்சத்தையும் கண்களில் அலுப்புறுதலையும் கண்டான்.

நேற்று அத்தனை தைரியமாய் இருந்த பெண்ணின் முகத்தில் தற்போது ஏனிந்த அச்சமென எண்ணியவனுக்கு, அவள் கூற இருப்பது ஏதோ பெரிய விஷயமெனத் தோன்றியது.

“இருந்தாலும் உங்களுக்குச் செம்ம தைரியம்ங்க! எப்படி அப்படி நேத்து யாருனே தெரியாத ஆளுகிட்டலாம் தைரியமா லிஃப்ட் கேட்டீங்க? எப்படியும் ஒரு உயிரை காப்பாத்தியே ஆகனும்ன்ற எண்ணம் தானே!” அவளை இயல்பாக்கும் பொருட்டு இவ்வாறாய் அவன் பேச்சை தொடர,

“இந்தத் தைரியமான பொண்ணு தான் ஒரு தடவை தற்கொலை செய்ய முயற்சி செஞ்சேன்” முகத்தில் இறுக்கம் படர கூறியிருந்தாள் பொன்னிலா.

— தொடரும்