முள்ளில் பூத்த மலரே – 25

முள்ளில் பூத்த மலரே 25

ஆதினியும் அகிலனும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்வதால், காலை மாலை இரு வேளையும் இருவரும் ஒன்றாகவே பயணம் செய்வர். 

சில சமயங்களில் ஆதினிக்கோ இல்லை அகிலனுக்கோ மாலை வேலை பளுவால் குறித்த நேரத்திற்கு கிளம்ப முடியாது போனாலும் மற்றவர் அவருக்காக காத்திருந்து ஒன்றாகவே வீட்டிற்கு கிளம்பி வருவர்.

சில நேரங்கள் வீட்டிற்கு வந்துவிட்டு தங்களது மடிகணிணியில் விட்ட வேலையை தொடர்ந்து செய்வர்.

இவ்வாறாய் இருவரும் முடிந்தளவு இணை பிரியாது  ஒன்றாகவே வலம் வந்தனர். அதுவே ஆதினிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.  தந்தை தமையனின் அரவணைப்பை அகிலன் தனக்கு பரிபூரணமாய் வழங்குவதாய் உணர்ந்தாள்.

இரு மாதங்கள் கடந்து இனிமையான நாட்களாய் உருண்டோடி கொண்டிருந்த நேரம் ஒரு நாள் மாலை வேளையில் ஆதினியை மட்டும் தனியாய் கிளம்பி செல்லுமாறு கூறினான் அகிலன்.

அவனுக்கு அவனது மேனேஜருடன் மீட்டிங் இருப்பதாகவும் அது முடிய இரவு நேரமாகிவிடும் எனவும் கூறி அவளை வெளி பேருந்தில் செல்லுமாறு உரைத்து அனுப்பி வைத்தான்.

தற்போது அகிலனின் புதிய சொந்த வீடு அலுவலகத்திலிருந்து 5 கிமீ தொலைவில் தான் இருப்பதால், அவ்விடத்திறக்கு அலுவலக பேருந்து செல்லாது என்கின்ற காரணத்தினால் வெளி பேருந்தில் பயணிக்குமாறு உரைத்தான்.

அவனுடன் சிறு பிள்ளையாய் அடம்பிடித்து முகத்தை தொங்க போட்டு கொண்டு சுணங்கிய மனத்துடனேயே வீட்டினை  வந்தடைந்தாள் ஆதினி.

ஆதினி வீட்டின் பிரதான நுழைவாயிலை கடந்து நிலை கதவருகே வந்து தனது செருப்பை கழற்றிய சமயம், “என்ன மனுஷன்யா நீங்க?” கோபமாய் கத்திக் கொண்டிருந்தார் சத்யா.

அவரின் அதீத கோப குரலில் இங்கு பயந்து அதே இடத்தில் நின்று விட்டாள் ஆதினி.

ஆதினி, இங்கு வந்த நாள் முதல் இந்நாள் வரை சத்யாவும் தர்மனும் சண்டையிட்டு கண்டதேயில்லை.  சத்யாவை பார்த்து பயந்து, அவர் ஏது கூறினாலும் சரியென தலையாட்டும் தர்மனை தான் இதுவரை கண்டிருக்கிறாள் ஆதினி.  சத்யாவின் சிறு முறைப்பிலேயே அமைதியாகி விடுவார் தர்மன்.

ஆனால் இன்று சத்யா இந்தளவிற்கு கோபம் கொள்ளுமளவு தனது மாமனார் என்ன செய்தாரென எண்ணி அவ்விடத்திலேயே தேங்கி நின்று விட்டாள் ஆதினி.

“என்னைய ஏமாத்தி தானே கட்டிக்கிட்டு வந்தீங்க!  இப்ப என்ன நல்லவர் மாதிரி நடிக்கிறீங்க. ஒரு பொண்ணுக்கு எப்படி நல்ல கணவனா இருக்கனும்னு என் பையனை பார்த்து கத்துகோங்க. பணக்கார வீட்டுல இருந்து கட்டிகிட்டு வந்த பொண்ணு இங்க எந்த கஷ்டமும் பட்டுட கூடாதுனு அவ்ளோ தாங்குறான் அவளை. நான் கூட அவளை ஒரு வார்த்தை மனசு கஷ்டபடுற மாதிரி பேசிட கூடாதுனு அவனே இடையில புகுந்து என்கிட்ட திட்டு வாங்கிக்கிறான்”

“என்னைய கட்டிக்கிட்டு வந்து என்ன செஞ்சீங்க?” அவரின் குரலில் சிறு விசும்பல் வெளிப்பட்டது.

தர்மன் அவரை ஏதோ கூறி சமாதானம் செய்வதும், அதை சத்யா ஏற்காமல் ஆக்ரோஷமாய் சண்டையிடுவதுமான குரல்கள் இவளுக்கு கேட்க,

சண்டை என்றாலே இவள் நடுங்குவாலே, அதுவும் அவர்கள் பெர்சனலாய் பேசிக்கொள்ளும் இச்சமயம் உள்ளே செல்ல வேண்டாமென எண்ணி பின்னுள்ள தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் மேஜையில் அமர்ந்து கொண்டாள்.

அங்கு வெகு தெளிவாய் இவர்களின் சண்டை பேச்சு கேட்டது அவளுக்கு.  மனம் நடுங்க கைகள் சில்லிட்டிட தான் அமர்ந்திருந்தாள் ஆதினி.

சத்யாவின் பேச்சின் மூலமாய் இவளுக்கு பல விஷயங்கள் புரிவதாய் தெரிந்தது.
சிறிது நேரத்தில் அகிலனின் வண்டி சத்தம் வீட்டின் வாசலில் கேட்கவும் சத்யாவும் தர்மனும் சட்டென அமைதியாகி அவரவர் வேலையை பார்க்க செல்வதும் வீட்டினுள் கேட்ட சத்தத்தில் புரிந்தது அவளுக்கு.

“என்ன அதுக்குள்ள வந்துட்டாரு” என எண்ணியவள், “அய்யோ உள்ளே போய் இவர் என்னைய தேட போராரு” என பதறிக் கொண்டு அவனது வண்டியினருகே போய் நின்றாள் ஆதினி.

வண்டியினை நுழைவாயிலை கடந்து உள்ளே நிறுத்தியிருந்தான் அகிலன்.

கையில் மடிகணிணி பையுடன் வந்து நின்ற மனைவியை கண்டவன் கோபமாய் முறைத்து, “ஃபோன் பண்ணா எடுக்க மாட்டியா? முதல் முறையா தனியா பஸ்ல போக சொன்னோமே வீட்டுக்கு போய் சேர்ந்தியோ இல்லயோனு பயந்து பதறியடிச்சு மீட்டிங்ல பாதிலேயே கிளம்பி வந்துட்டேன். உன் ஃபோன் எங்க முதல்ல?” வெகு காட்டமாய் கேட்டவன்,

அவள் கையிலுள்ள பையை பார்த்து, “இப்ப தான் வீட்டுக்கு வர்றீயா? அவ்ளோ லேட் ஆகிடுச்சா பஸ்ல?” தன் கோபத்தை கட்டுபடுத்தியவனாய் அவளை நோக்கி கேட்டான்.

அவனின் மனம் அவளுக்கு ஏதும் ஆகிவிட்டதோ என பதறிக் கொண்டு அவனை உடனே கிளம்ப செய்தது.

அவளை தற்போது நேரில் காணவும் தான் ஆசுவாசமானான் அவன்.

அவன் ஃபோன் என்றதும் தான், அப்படி ஒன்று இருக்கிறதே என ஞாபகம் வந்து தனது பையில் தேடவாரம்பித்தாள் ஆதினி.

அவள் தேடுவதில் அவன் அவளை மீண்டுமாய் முறைத்து பார்க்க, “இல்லங்க பஸ்ல ஏறும் போது ஃபோன் கீழே போட்டுட கூடாதுனு பைக்குள்ள போட்டேன் அப்படியே மறந்துட்டேன்” தேய்ந்து போன குரலில் சற்று நடுங்கியவாறே பயந்து கொண்டே அவள் கூற,

அவள் அவ்வாறு தன்னை கண்டு பயம் கொள்வதும் பிடிக்காமல்…  அவள் கைபற்றி வீட்டின் பின்கட்டிலுள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்று அமர வைத்தவன்,

“கண்ணுமா இப்படி நீ என்னைய பார்த்து பயப்படுறது எனக்கு அவ்ளோ ஹர்ட் ஆகுது.  நான் ஏன் கோபப்படுறேனு உனக்கு புரியுதா?” கண்ணில் அவளுக்கான அவனின் அந்த பதைபதைப்பை தேக்கி அவளை நோக்கியவன், அவளின் கையை எடுத்து தன் நெஞ்சின் மீது வைத்தான். அது அதீதமாய் துடித்து கொண்டிருந்தது.

“துடிப்பு அதிகமா இருக்கிறது உணர முடியுதா கண்ணுமா!  இது வரைக்கும் நீ பஸ்ல போனதே இல்லனு எனக்கு தெரியும். ஆனா இரண்டு ஸ்டாப் தானே மேனேஜ் செய்துப்ப.. இதெல்லாம் நீ எப்ப கத்துக்கிறதுனு தான் அனுப்பினேன்.  ஆனா நீ ஃபோன் எடுக்காம போகவும் எவ்ளோ பயந்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்”  தனது கோபத்தின் பின்னிருக்கும் அவளுக்கான காதலை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என அவனின் நிலையை விளக்கி கூறி கொண்டிருந்தான் அகிலன்.

இப்பொழுது அவளது கண்கள் பயத்தினை விலக்கி அவனின் மீதான காதலை பொழிய, அவன் நெஞ்சில் வைத்திருந்த கையை எடுத்து அவனது கன்னத்தை தடவியவள், “புரியுதுப்பா! சாரி! இனி இப்படி கேர்லெஸ்ஸா இருக்க மாட்டேன்”  அமர்ந்த நிலையிலேயே அவனை சற்றாய் அணைத்து விடுத்தாள்.

இப்பொழுது தான் பெருத்த நிம்மதி உண்டாயிற்று அகிலனுக்கு.

“ஆமா மீட்டிங் எப்படி போச்சு?” என அவள் கேட்க,

“பசி வயித்தை கிள்ளுது ஆதுமா! முதல்ல போய் ரிஃபெரஷ் ஆகிட்டு சாப்பிடுவோம். அப்புறம் தூங்க போகும் போது கதை கதையா பேசுவோம்” என ஆதினியிடம் அவன் கூறிக் கொண்டிருக்க,
வண்டி சத்தம் கேட்டும் வீட்டினுள் இன்னமும் வரவில்லையே இருவரும் என அவர்களை தேடி வெளி வந்தனர் தர்மனும் சத்யாவும்.

பின் அனைவருமாய் அமர்ந்து இரவுணவை உண்டு களித்து உறங்க சென்றனர்.

படுக்கையறையில் மெத்தையில் அவன் மார்பில் தலை வைத்து அவனை அணைத்தவாறு படுத்திருந்தாள் ஆதினி. சற்றாய் சாய்ந்து அமர்ந்து அவளின் தலையை கோதி கொண்டிருந்தான் அகிலன்.

“மீட்டிங்ல நம்ம கம்பெனிக்கு வர்ற புது ப்ராஜக்டிற்கு என்னைய டீம் லீடா அறிவிச்சிருக்காங்க”  அகிலன் கூறவும்,

“வாவ் சூப்பர்ப்பா! ப்ரோமோஷன் தரப்போறாங்களா?” மகிழ்வாய் குதூகலித்து கேட்டிருந்தாள் ஆதினி.

“ஆமா ஆது. அந்த ப்ராஜக்ட் நல்லபடியா நம்ம கம்பெனிக்கு ஆன்போர்ட் ஆகிட்டா போதும். அதுக்கு அடுத்து புரமோஷன் கொடுத்துடுவாங்க.  இப்ப ஆக்டிங் லீட் தான் இந்த ப்ராஜக்ட்ல. இந்த ப்ராஜக்ட்க்கு டீம் ஃபார்ம் செஞ்சி க்ளைண்ட் கிட்ட பேசி ஃபுல் டிரான்சிசன்(Transition) வரைக்கும் ப்ளானிங் அண்ட் எக்சிக்யூசன் நான் தான் செய்யனும்” அமைதியாய் எவ்வித மகிழ்ச்சியோ ஆரவாரமோயின்றி கூறிக் கொண்டிருந்தான் அகிலன்.

“என்னப்பா இந்த வர்க் ஹெக்ட்டிக்கா இருக்கும்னு ஃபீல் செய்றீங்களா?” ஆதினி ஆதுரமாய் அவன் கன்னம் தடவி கேட்க,

தன் கன்னம் தடவிய அவளின் கையை பற்றி சின்னதாய் முத்தமிட்டு தன் கைக்குள்  பொதித்து கொண்டவன், இல்லையென தலையசைத்து அவளின் தலையின் மீது தன் தலையை சாய்த்து கொண்டான்.

“அப்புறம் ஏனப்பா சோகமா இருக்கீங்க? இந்த ப்ராஜக்ட் உங்களுக்கு பிடிக்கலையா?” அவனின் மார்பினில் தலை வைத்த நிலையிலேயே அவள் கேட்க,

“எனக்கு கிடைச்சிருக்க மிக பெரிய ஆப்பர்சூனிட்டிடா இது! இந்த ப்ராஜக்ட்ல இப்படி ஆரம்ப கட்டத்துலேயே வேலை பார்க்கிறதுல என்னோட திறமையை வெளிபடுத்த கிடைச்சிருக்க பெரிய வாய்ப்பு இதுனு ரொம்பவே சந்தோஷம் தான்! ஆனா?”

“ஆனா என்னப்பா?” அந்நிலையிலேயே இருந்து கொண்டு ஆதூரமாய் இவள் கேட்க,

“ஷிப்ட் இருக்குடா! யுஎஸ் க்ளைண்ட்டா, நைட் க்ளைண்ட்டையும் மேனேஜ் செய்துட்டு பகல்ல டீம் மேட்ஸ்கிட்டயும் வேலை வாங்குறது போல இருக்கு.  ப்ராஜக்ட் ஆன்போர்டு ஆகுற வரைக்கும் நேரங்காலம் பார்க்காம வேலை செய்ய வேண்டியதா இருக்கும். நீ என் கூட ஆபிஸ் வர முடியாது.  தனியா போய்ட்டு வர மாதிரி இருக்கும்.  உன் கூட ரொம்ப டைம் ஸ்பெண்ட் செய்ய முடியாது” கவலையாய் உரைத்தவன்,

“ஆனா இரண்டு மூனு மாசம் தான்டா, அதுக்கு பிறகு வர்க் ஸ்டேபிள் ஆயிட்டா நார்மல் ஃலைப்க்கு வந்துடலாம்.  இதுல உன்னையும் சேர்த்து கஷ்டபடுத்துற போல இருக்கேனு தான் என் கவலை”

அவன் மார்பினிலிருந்து எழுந்தமர்ந்து அவன் முகத்தினையே பார்த்தவள், “உங்களுக்கு ரொம்ப பிடிச்சு விருப்பப்பட்டு இதை செய்றீங்கனா எனக்காக யோசிச்சு கவலைபடாதீங்க.  நான் கவலைபடாம உங்களோட வேலைக்கு தொந்தரவு கொடுக்காம ஆதரவா இருப்பேன்! ஓகே வா!” என்றவள் அவன் கன்னம் கிள்ளி,

“இப்ப என் ரசகுல்லா கொஞ்சமே கொஞ்சமா சிரிக்குமாம், நான் அதை கடிச்சி வைப்பேனாம்”  எனக் கூற,

அவள் கூறிய தினுசிலேயே ரசித்து சிரித்தான் அகிலன். அவன் கன்னத்தை கடித்திருந்தாள் ஆதினி.

அவளை இழுத்து அணைத்தவன், “நீ என் பொக்கிஷம்டி” எனக் கூறி உச்சி முகர்ந்தவன், “எனக்காக என்னலாம் செஞ்சிருக்க நீ! அவ்ளோ காதலா என் மேல” எனக் கேட்டான்

“அப்படி என்ன நான் செஞ்சிட்டேனாம்.  அது என் கடமை தானே” என்றாள்.

“இல்லடா அது பெரிய விஷயம்.  உன் வீட்டுல கடன்னா என்னனு கூட தெரியாம தான் உன்னை வளர்த்திருப்பாங்க.  உன்னோட சம்பாத்தியத்தைலாம் சேமிப்பா தானே ஆக்கி வச்சிருந்தாங்க. ஆனா கல்யாணமாகி இங்க வந்ததும் அந்த சேமிப்பைலாம் வீட்டு லோன் அடைக்க கொடுத்ததுமில்லாம மீதி இருக்க கடனுக்கு மாசமாசம் உன் சம்பளத்தை தரேனு அடம் பிடிச்சு ஒத்துக்க வச்சிட்ட. உன்னை கல்யாணம் செஞ்சு கடன்காரியாக்கிட்டேனேனு நினைக்கும் போதெல்லாம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்.  இந்த புரமோஷன் கிடைச்சுதுனா… வர சம்பளத்துலயே கடனும் அடைச்சு உன் பணத்தை சேமிப்பா போட்டுடலாம்னு தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்”   அவளை மார்பில் சாய்த்து குழ்நதையை ஆட்டுவதை போல் ஆட்டிக் கொண்டே அவன் கூற,

“கணவனோட சரி பாதியாம் பொண்டாட்டி.  இரண்டு பேருக்கும் எல்லாத்துலயும் சம பங்கு உண்டு. புருஷன் கடன்காரன்னா பொண்டாட்டியும் கடன்காரி தான்.  அதை அடைக்க வேண்டிய பொறுப்பு பொண்டாட்டிக்கும் இருக்கு தானே.  இதை பெரிசா பேசாதீங்கப்பா”  என்றவள் அவனின் ஆட்டுதலில் நித்திரை அவளை இழுக்க கொட்டாவி விட்டாள்.

“தூக்கம் வருதாடா! சரி தூங்கு”

“உங்ககிட்ட அத்தையை பத்தி பேசனும்ங்க”  என்றவள் கூறவும்,

“ஏதும் திட்டிக்கிட்டி வச்சிட்டாங்களா அம்மா?” என அவன் பதறிக்கொண்டு கேட்க,

அவனின் பதறலில் மென்னகை புரிந்து காதலாய் பார்த்தவள், “நீங்கலாம் நினைக்கிற அளவுக்கு அத்தை ஒன்னும் சண்டைக்காரி இல்லப்பா!  அவங்க ரொம்ப பாவம்.  அவங்க அடி மனசுல ஏதோ வலி இருக்கு.  அதான் இப்படி அவங்களை மீறி கோபமாய் வருது! அந்த ஆதங்கத்தை சண்டையா போட்டு தீர்த்துக்குறாங்க” மீண்டுமாய் ஒரு கொட்டாவி விட்டு கொண்டே கூறியவள் கண்கள் சொருக நித்திரைக்குள் செல்ல,

அவளின் கூற்றில் குழம்பியவன், “அப்படி என்ன கவலை அம்மாக்கு ஆதுமா?” குழப்பமாய் அவளை கேட்க, அவளிடம் பதிலில்லாது போக, தன் கைகளுக்குள் பொதிந்திருந்தவளை நிமிர்த்தி முகத்தை பார்க்க,  அவளின் உறங்கிய விழிகளை பார்த்து மென்னகை புரிந்தவன், தன்னருகே அவளை சாய்த்து படுக்க வைத்து அவளை அணைத்துவாறு படுத்தவன்,  “அம்மாக்கு என்ன பிரச்சனை?” சிந்தித்து கொண்டே உறக்கத்திற்குள் ஆழ்ந்தான்.

மறுநாள் இரவு ஒன்பது மணியளவில் அலுவலகத்தில் இருந்து கிளம்பி கால் டாக்சியில் வந்து கொண்டிருந்தான் மதுரன்.

“இன்னிக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை அதிகம்மா… அதான் கிளம்ப லேட் ஆகிட்டு! வீட்டுக்கு தான்ம்மா வந்துட்டு இருக்கேன்” கைபேசியில் மலரிடம் மதுரன் கூற,

மறுபக்கம் மலர் ஏதோ கேட்க, “ஆமா கால் டேக்சில தான் வரேன். இன்னும் 20 நிமிஷத்துல வந்துடுவேன். சர்வீஸ் சென்டர்ல வண்டியை சர்வீஸ் செஞ்சிட்டு வீட்டுக்கு வந்து விட சொன்னேனே.. வந்தாங்களா?” எனக் கேட்க, மலர் ஆமென பதில் கூறவும் மகிழ்வான நிம்மதி பாவனை முகத்தில் பரவ,

“ஹப்பாடா… வண்டி இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியலைமா! எவ்ளோ டென்ஷன் டயர்ட்ல இருந்தாலும் வண்டில ஏறினதும் வரும் பாரும்மா ஒரு புத்துணர்ச்சி,  இன்னிக்கு அது ரொம்பவே மிஸ்ஸான ஃபீல்” தன்னுடைய யமாஹா வண்டியை மிஸ் செய்த உணர்வை தனது தாயிடம் பகிர்ந்து கொண்டிருந்த சமயம், மலர் அந்த பக்கம் ஏதோ கூறவும், இவன் இங்கு ஆர்வ மிகுதியில்,

“வீட்டுக்கு வந்து பார்க்கிற வரைக்கும்லாம் வெயிட் செய்ய முடியாது.  இப்ப உடனே வாட்ஸப் பண்ணுமா! பார்க்கிறேன்” என்றவன் கூறவும், மலர் இவனை அந்த பக்கம் கிண்டல் செய்ய,  இவனின் கண்களில் நாண சிரிப்பு குடிபுகுந்த நேரம், ஒரு பெண் நடு சாலையில் காரை மறித்து நின்றாள்.

வண்டியின் ஓட்டுனர் காரை நிறுத்தவும், “இருமா நான் அப்புறம் கூப்பிடுறேன்” என கைபேசியை வைத்தவன்,

வெளியில் நோக்க,  காரை மறித்த அந்த பெண், “சார் அர்ஜன்ட்டா ஹாஸ்ப்பிட்டல் போகனும் சார். அந்த அங்கிளை காப்பாத்தனும் சார்! லிஃப்ட் கொடுங்க சார்.  ப்ளீஸ் சார்” சற்று தூரமாய் சாலையில் ஓரமாய் தரையில் மயங்கி படுத்திருந்த நிலையில் இருந்த ஒரு முதியவரை காண்பித்து அவள் பரிதவிப்பாய் பதைபதைப்புடன் கூற,

இப்பெண்ணையும் அம்முதியவரையும் ஆராயும் பாவனையில் பார்த்தவன், ஓட்டுனரிடம் காரிலேயே இருக்குமாறு உரைத்து விட்டு இறங்கி அம்முதியவரினருகில் சென்றான்.

அவனின் கண்கள் சுற்றி சுழன்று சூழலை ஆராய தவறவில்லை. அம்முதியவர் நிஜமாகவே மயக்க நிலையில் இருக்க, துரிதமாய் அவரை வண்டியில் ஏற்றி ஓட்டுரை அவசரமாய் செல்ல பணித்தான்.

அந்த பெண்ணும் முதியவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ள,  மதுரன் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஓட்டுனர் மருத்துவமனை நோக்கி வேகமாய் வண்டியை செலுத்த,  அந்த பெண் வண்டியிலேறியதும் மதுரனையும் அந்த ஓட்டுனரையும் அளவெடுக்கும் பார்வை பார்த்தவள், சற்றாய் நம்பகமாய் தெரியவும் விழிகளை வெளியில் சுழற்றினாள். ஆயினும் வண்டி எங்கு செல்கிறது என்கின்ற செய்தியை வாட்சப்பில் தனது அறை தோழிக்கு அனுப்பி கொண்டே இருந்தாள்.

அவள் பக்கம் பின்னோக்கி திரும்பிய மதுரன், “இவர் யாரு? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” எனக் கேட்டான்.

“இல்லங்க நான் என் டூ வீலர்ல ஆபிஸ்ல இருந்து வந்துட்டு இருந்தப்ப, இவர் ரோடுல மயங்கி சரிஞ்சாரு. முதல்ல குடிச்சிருக்காரோனு தோணுச்சு.  ஆனா அவர் பக்கமா போய் பாருனு மனசு சொல்லவும், என் வண்டியை ஓரம் கட்டிட்டு போய் பார்த்தா, மயங்கி விழுந்திருந்தாரு.  என் பேக்ல இருந்த தண்ணீர் எடுத்து வந்து அடிச்சிலாம் பார்த்தேன் முழிக்கலை.  அதான் ஹாஸ்ப்பிட்டல் கூட்டுட்டு போலாம்னு பத்து நிமிஷமா ஒவ்வொரு வண்டியா கேட்டா, ஒருத்தரும் நிறுத்தலை” விளக்கி அவள் கூறியதை ஆச்சரிய பாவத்துடன் கேட்டு கொண்டிருந்த மதுரன், “செம்ம தைரியமான நல்ல பொண்ணு தான்” மனதில் எண்ணி கொண்டிருக்க,

அச்சமயம் அவன் தனது தாயிடம் அனுப்பிவிக்க கூறிய வாட்சப் மெசேஜ் வந்ததற்கான ஒலியை கேட்டவன், அதை திறந்து பார்க்க, அங்கு அழகாய் தாவணியில் சிரித்து கொண்டிருந்தாள் தற்போது பின்னிருக்கையில் ஜீன்ஸ் குர்தியில் அமர்ந்திருந்த அதே பெண்.

ஆச்சரிய அதிர்ச்சியில் கண்களை விரித்தவன், “ஏங்க உங்க பேர் என்ன?” அப்பெண்ணை நோக்கி அவன் கேட்க,

“பொன்னிலா” என்றாள் அவள்.

— தொடரும்