முள்ளில் பூத்த மலரே – 24

முள்ளில் பூத்த மலரே 24

மதுரனும் அகிலனும் பால்கனியில் அமர்ந்து அவர்களது புதிய டிரஸ்ட்க்கான வேலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, மாணிக்கம் மற்றும் மலர், வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து ஆதினியிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

“மதுரனுக்கு ஒரு பொண்ணு வீட்டுல இருந்து ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்காங்க ஆதுமா! உன் கல்யாணம் முடியட்டும்னு தான் காத்துட்டு இருந்தோம்” மலர் கூறவும்,

“ஹய்யா அண்ணாக்கு பொண்ணு ரெடியா இருக்கா? சொல்லவே இல்ல” குதூகலகமாய் ஆதினி கேட்க,

“அதில்லைடா! உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே மதுரன் ஃபோட்டோவையும் ஜாதகத்தையும் புரோக்கர்ட்ட கொடுத்து வச்சிருந்தோம். உனக்கு நிச்சயம் நடக்கும் போதே அந்தப் பொண்ணு வீட்டுல அகிலனுக்கு கேட்டாங்க, நாங்க தான் உன் கல்யாணம் முடியட்டும்னு வெயிட் பண்ண சொன்னோம். இப்ப அப்பா அந்தக் குடும்பத்தைப் பத்தி தான் விசாரிச்சிட்டு இருக்காங்க. எல்லாம் ஓகே ஆனதும் அடுத்த மாசம் பொண்ணு பார்க்க போகலாம். நம்மளை பத்தி அவங்க எந்தளவுக்கு விசாரிச்சாங்கனு தெரியலை. பொண்ணு பார்த்துட்டுப் பிடிச்சி போச்சுனா நம்ம குடும்ப விவரத்தைலாம் விலாவாரியா பேசனும்னு இருக்கோம். அடுத்த மூனு மாசத்துல கல்யாணம் வச்சிக்கலாம்” மலர் கூறிக் கொண்டே போக,

தன்னுடைய அண்ணனுக்குத் திருமணம் நிகழப் போகிறது என்பதில் அவளின் உள்ளம் பேருவகைக் கொள்ள,
அந்நேரம் அங்கு வந்த மதுரனிடம் சென்ற ஆதினி, “அண்ணா உனக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்னு சொல்லு! உனக்குப் பிடிச்ச மாதிரி இந்தப் பொண்ணு இருக்கானு நான் பேசி பார்த்து சொல்றேன்” அவனின் கைப்பற்றி முகம் நோக்கி வெகு மகிழ்வாய் துள்ளலாய் அவள் வினவ,

இந்தப் பெண் பார்க்கும் படலம் பற்றி ஏதுமறியாத மதுரனோ, “எனக்குப் பொண்ணு பார்க்கிற அளவுக்கு வளர்ந்துட்டாளா என் குட்டி பாப்பா” என அவள் கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சியவன்,

“என்ன ஏற்கனவே ஏதோ பொண்ணு பார்த்து வச்சிருக்க மாதிரி சொல்ற நீ” ஏதும் விஷயம் இருக்குமோ என ஆதினியிடம் அவன் தூண்டில் போட,

அவள் தனது தாய் கூறியதனைத்தும் கூற, தனது அன்னையினருகில் சென்ற மதுரன், அவரருகே அமர்ந்து, “எனக்கு உன்னைப் போலவே ஒரு பொண்ணைப் பாருமா! உங்க இரண்டு பேரையும் நல்லா வச்சி பார்த்துக்கனும். உன்னைப் போலத் தைரியமா, வாழ்க்கைல எது வந்தாலும் எதிர்த்து போராடி, தான் இப்படி தான் வாழனும்னு தனக்குனு லட்சியம் வச்சிக்கிட்டுனு இருக்கிற பொண்ணா பாருமா” என்றவன் கூறவும்,

“பார்ரா! மச்சான் அப்ப உன் தங்கச்சி மாதிரி பயந்தாங்கொள்ளியா உங்களைக் கட்டக்கிறவங்க இருக்கக் கூடாதுனு இன்டைரக்டா சொல்ற அதானே” கிண்டலாய் சிரித்துக் கொண்டே கேலியாய் அகிலன் கூற,

“ஹான்” எனக் கோபம் வந்த ஜெர்ரியை போல் முகத்தை வைத்துக் கொண்டு “அவர் சொல்றது உண்மையாணா” உர்ரென முகத்தை வைத்துக் கொண்டு போலி கோபத்துடன் மதுரனை அவள் முறைக்க,

“அடேய் ஏன்டா நல்லா இருக்க அண்ணன் தங்கச்சிகுள்ள குழப்பத்தை உண்டு பண்ற” மதுரன் அவனை முறைக்க,

“போதும் போதும் மூனு பேருமா மாத்தி மாத்தி முறைச்சி விளையாண்டுகிட்டது போதும்” மாணிக்கம் கூறவும் அனைவருமே சிரித்திருந்தனர்.

“நாங்க கிளம்புறோம் மாமா. ரொம்ப நேரமாகிட்டு! மச்சான் கல்யாணத்தைப் பத்தி இன்னொரு நாள் பொறுமையா உட்கார்ந்து பேசலாம்” எனக் கூறிய அகிலன், ஆதினியுடன் அனைவரிடத்திலும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

மாணிக்கம் இல்லத்திலிருந்து கிளம்பி தங்களது இல்லத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர் ஆதினியும் அகிலனும்.

இருவரின் மனமும் மற்றவரின் மீதான ஆழ்ந்த அன்பில் திளைத்திருக்க, ஏகாந்த மனநிலையிலேயே இருந்தனர். ஆழ்ந்த அமைதி அவர்களைச் சூழ்ந்திருந்தாலும், அந்த மோன மௌன நிலையை இருவருமே கலைக்க விரும்பாது இப்பயணத்தை, இந்த அருகாமையை, இந்த நிமிடத்தை இன்பமாய்ச் சுகித்திருந்தனர்.

அந்நிலையிலேயே வீட்டை அடைந்ததும் இருவரும் வீட்டிற்குள் பிரவேசித்த நொடி, “எங்கடா போனீங்க இரண்டு பேரும்” சற்று கோப ஆவேசமாய்க் கேட்டிருந்தார் சத்யா.

காலை திரையரங்கம் செல்வதாய் உரைத்து கிளம்பிய இருவரும் மதியம் வருவார்களெனக் கூறியதால், அவர்களுக்குமாய் உணவை சமைத்து வைத்து மூன்று மணி வரை காத்திருந்தவருக்கு, சற்றாய் பொறுமை பறந்தோட அவர்கள் இருவரையும் வசைபாடியபடியே தனது கைபேசியை எடுத்து அழைப்புவிடுக்கச் சென்ற நேரம் அவ்வழைப்பை துண்டித்தார் தர்மன்.

“சின்னஞ்சிறுசுங்க வெளில அப்படியே எங்கயாவது போகலாம்னு போய்ருப்பாங்க. நீ ஃபோன் செஞ்சு அவங்களைச் சங்கடபடுத்தாதே” எனக் கூறி சத்யாவின் கைபேசியைக் கைபற்றிக் கொண்டார்.

“நான் அவங்க எங்கயும் போகக் கூடாதுனா சொல்லிட்டு இருக்கேன். வர லேட்டாகும்னு நமக்கு ஒரு ஃபோன் செஞ்சு சொல்றதுல என்னவாகிட போகுது! நம்ம அவங்களுக்காகச் சமைச்சு வச்சதுலாம் வேஸ்ட் தானே” குடும்பத் தலைவியாய் அவர் தனது கோபத்திற்குக் காரணத்தை உரைக்க,

“அதான் மிச்ச மீதி ஆச்சுனா அதையே ராத்திரிக்கு எங்களுக்குக் கொடுத்து.. வச்சி செய்வியே! அப்படியே செய்ய வேண்டியது தானே” சற்று கேலியாய் தர்மன் உரைக்க,

அவரை நன்றாக முறைத்த சத்யா, “உங்களுக்கு வேளாவேளைக்கு வடிச்சி கொட்டுறேன்ல அதான் வாய் வாசப்படி வரைக்கும் நீளுது” என்றுரைத்தவர்,

“இரண்டு பேரும் வரட்டும்! இனி என்னிக்கும் என்கிட்ட சொல்லாம எங்கயும் போகாத மாதிரி ஒரு வழி ஆகிடுறேன் இன்னிக்கு” கோபமாய் உரைத்து அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தார் சத்யா.

நேரம் செல்ல செல்ல சத்யாவின் கோபம் சற்று பயமாய் உறுமாறியது.

“ஏன்ங்க அவங்களுக்கு எதுவும் ஆகிருக்கப் போகுது! ஃபோன் செஞ்சு பாருங்க! நைட் ஏழாகுது இன்னுமா வராம இருப்பாங்க! எனக்கென்னமோ பயமா இருக்கு” தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த தர்மனிடம் அவர் உரைக்கவும்,

“அதெல்லாம் ஒன்னும் ஆகிருக்காதுமா! நீ மனசை போட்டு குழப்பிக்காத!” என்றவர் இருவரின் கைபேசிக்கும் அழைப்பு விடுத்தார். இரு கைபேசிகளும் தங்களது உயிரற்ற நிலையை இவருக்கு வாய்சொல்லாய் கைபேசியில் உரைத்திருக்க, இவருக்குச் சற்றுப் பதற்றம் கூடியது.

ஆயினும் சத்யாவை கலங்கடிக்க விரும்பாமல், தனது கைபேசியில் சிக்னல் இல்லையென ஏதோ அவர் கூறினாலும், தர்மனின் முகக் குறிப்பை வைத்து ஏதோ சரியில்லையென எண்ணி சத்யா பதைபதைத்திருந்த நொடி அகிலனின் வண்டி சத்தம் வாசலை எட்டியது.

அப்பொழுது தான் இருவருக்குமே சீரான மூச்சு வந்தது.

ஆகையால் தான் சத்யா அவர்கள் இருவரும் உள்நுழைந்ததும் இவ்வாறாய்க் கேட்டிருந்தார்.

அப்பொழுது தான், தாங்கள் அவ்வீட்டிற்குச் சென்றதை அகிலன் இவர்களிடம் உரைக்கவில்லை என்பதையே உணர்ந்தாள் ஆதினி. அவளின் பிறந்த வீட்டிற்குச் சென்றதை அகிலன் தர்மனிடம் கைபேசியில் உரைத்து விட்டதாய் எண்ணியிருந்தாள் அவள்.

சத்யாவின் கேள்வியில் ஆதினி நடுக்கமுற அதிர்வாய் அகிலனை பார்க்க, அவனோ அவரின் பேச்சை அசட்டை செய்தவனாய், “அம்மா ஆதினியோட அம்மா அப்பாவை போய்ப் பார்த்துட்டு வந்தோம்மா” கூறிக் கொண்டே அவர்களது அறையை நோக்கி செல்ல, ஆதினியோ நின்ற இடத்திலேயே இருந்தாள்.

இதென்ன பெரியவர்களை அவமதிக்கும் செயல் என ஆதினி மனதினில் எண்ணிக் கொண்டே அகிலனை பார்க்க, “வா ஆதுமா! ஏன் அங்கயே நிக்கிற” என அழைத்தான் அவன்.

அகிலனுக்கு இது வீட்டினில் வழமையாய் நிகழும் செயலாய் தான் தோன்றியது. சத்யா கோபமாய் இருக்கும் போது இவ்வாறு சத்தமாய்ப் பேசுவது அவரது இயல்பென அறிந்தவனுக்கு, ஆதினியை அவர் ஏதும் கேள்விகள் கேட்டு மனவருந்த செய்திட கூடாதேயென்ற பயம் ஆட்கொள்ள, அவரின் கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டே ஆதினியை அங்கிருந்து நகர்த்த பார்த்தான்.

ஆனால் ஆதினியோ குற்றவுணர்வில் தத்தளித்தாள். வீட்டிலுள்ளோரிடம் கூறாது, எந்நேரம் வீட்டிற்கு வருவோமென உரைக்காது பயணப்படுவது அவளின் பிறந்த வீட்டை பொருத்த வரை தவறான செயல். அதற்குத் தனது மாமா அத்தையிடம் மன்னிப்பு கோர வேண்டுமென எண்ணியே அவள் அவ்விடத்திலேயே நின்றிருக்க,

சத்யாவிற்கோ மருமகளுக்கு முன் மகன் தன்னை அவமதிப்பதாய் தோன்றியது.
“நான் இங்க ஒருத்தி கேள்வி கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போய்ட்டுருக்க?” சற்று ஆத்திரமாய்ச் சத்யா கேட்க,

அவன் சற்றே சலிப்பாய், “அம்மா அதான் எங்க போனோம்னு சொன்னேனே” மீண்டுமாய்க் கூற,

அவனின் இந்தச் சலிப்பான பதிலில் அவருக்குக் கோபம் அதிகமாக, “பொண்டாட்டியும் அவங்க குடும்பமும் தான் முக்கியம்னு என்னைய எடுத்தெறிஞ்சு பேசுறல” கண்களில் நீர் கட்ட அவர் பேசவாரம்பிக்கவும்,

இத்தனை நேரம் மனம் நடுங்க குற்றயுணர்வில் நின்றிருந்த ஆதினி சத்யாவின் கண்ணீரை கண்டதும், “அத்த வெரி சாரி அத்த! அவரு உங்ககிட்ட சொல்லிருப்பாருனு நினைச்சேன். இது நாங்க ப்ளானே செய்யாம திடீர்னு நடந்தது” எனக் காலை திரையரங்கம் சென்று முதல் தற்போது வீட்டிற்கு வந்தது வரை நிகழ்ந்தவைகள் அனைத்தையும் கூறி முடித்த ஆதினி,

“மன்னிச்சிடுங்க அத்த ப்ளீஸ்! நீங்க கவலைபடுறதை பார்த்தா மனசு கஷ்டமா இருக்கு! இனி இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன்” கண்களைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவரின் கைகளைப் பற்றிக்கொண்டு ஆதினி பேசிக் கொண்டிருக்க,

தர்மன் அகம் மகிழந்து ஆனந்தத்தில் திளைக்க, ஆதினியை காப்பதற்காகத் தனது தாயை மனம் நோக பேசிவிட்டோமே எனக் கலங்கிய அகிலனும் அவரிடம் சென்று மன்னிப்பு வேண்ட,

“சரி சரி இது தான் முதலும் கடைசியுமா இருக்கனும். உங்களுக்கு எதுவும் ஆகிட்டுச்சோனு தான் ரொம்பப் பயந்துட்டேன்” தனது பரிதவிப்பினை கூறி அவர்களை மன்னித்திருந்தார் சத்யா.

“ஏன் இப்படிப் பேசுறீங்க அத்தைட்ட? தப்பு நம்ம மேல வச்சிட்டு அவங்ககிட்ட அப்படிப் பேசுறது என்ன பழக்கம்? முதல்ல பெரியவங்க நம்ம மேல தப்பே சொன்னாலும், அவங்ககிட்ட அமைதியா எடுத்து சொல்லனுமே தவிர இப்படி அவங்க சொல்றதை காதுல கூட வாங்காம போகக் கூடாது” அவர்களது அறைக்குள் சென்றதும் ஆதினி அகிலனின் பேச்சை குறையாய் கூறிக் கொண்டிருக்க,

அவளின் அறிவுரையில் கடுப்பானவனோ, “அய்யோ ஆது! நான் எப்பவுமே இப்படித் தான் அம்மாட்ட பேசுவேன். அவங்களும் நான் இப்படி மதிக்காம பேசுறேனுலாம் நினைச்சதில்லை. அவங்கட்ட ரொம்ப உரிமையா நடந்துகிறேனு தான் நினைச்சிப்பாங்க. அதனால நான் இப்படிச் சலிப்பா கடுப்பா பதில் சொன்னாலும், விடாம என்னைய கேள்வி கேட்டு கொல்லுவாங்க. இன்னிக்கு தான் அவங்க கண்ணுல தண்ணீர் வந்து நான் பார்த்தேன்! ஏன் இப்படித் திடீர்னு ஹர்ட் ஆயிட்டாங்கனு எனக்குப் புரியலை. அவங்க உன்னைய ஹர்ட் செஞ்சிட கூடாதேங்கிற எண்ணத்துல தான் அங்க நிக்காம பேசிட்டே வந்தேன்” எனக் கூறினான்.

“அதாங்க சொல்றேன்! என்னைய அத்தை ஹர்ட் செஞ்சிட கூடாதுனு நீங்க அவங்களை ஹர்ட் செஞ்சிட்டு இருக்கீங்க. முன்னாடி நீங்க எப்படிப் பேசிருந்தாலும் தப்பா தெரிஞ்சிருக்காது. ஆனா இப்ப எனக்காக அவங்ககிட்ட நீங்க சண்டை போடுறதா தான் தோணும். இனி அப்படிச் செய்யாதீங்க. நான் பார்த்த வரை அத்தை ஹார்ம்லெஸ்சா தான் தெரியுறாங்க. மனசுல உள்ளதை படபடனு நறுக் நறுக்குனு பேசினாலும் அடுத்த நிமிஷமே அவங்க சொன்னதை அவங்களே மறந்துட்டு நார்மலாகி வந்து பேசிடுறாங்க. அவங்ககிட்ட யாராலையும் ரொம்ப நேரம் கோபத்தை இழுத்து வச்சிட்டு இருக்க முடியாது” சத்யா பற்றிய தனது கூற்றை ஆதினி கூறிக் கொண்டேயிருக்க வியப்பின் விளிம்பில் இருந்தான் அகிலன்.

எத்தனையாய் தனது தாயை அவள் புரிந்து வைத்திருக்கிறாளென எண்ணி வந்த வியப்பது. இனி தனது தாயின் நிமித்தம் இவளை பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லையென அகிலனின் மனம் ஆசுவாசமடைந்தது.

மெத்தையில் அமர்ந்திருந்தவளை எழுப்பி நிறுத்தி, அவளது இடையைச் சுற்றி வளைத்து தனது கை வளைக்குள் அவளைக் கொண்டு வந்தவன், “நானும் என்னமோனு நினைச்சேன். செம்ம புத்திசாலி தான் என் பொண்டாட்டி. யூ நோ டு ஹேண்டில் ஆல் கைண்ட் ஆஃ பீபல்ஸ்னு இன்னிக்கு புரிஞ்சிக்கிட்டேன்டா என் கண்ணுமா” அவளின் நெற்றியில் முட்டியவன், “சரி வா சாப்பிட்டு வந்து நம்ம வேலையைத் தொடங்குவோம்” எனக் கூற,

“நம்ம வேலையா? அதென்ன வேலை?” எனக் கேள்வியாய் நிமிர்ந்து அவனை அவள் நோக்க,

“ஆமா ஆமா விடிய விடிய உட்கார்ந்து பேய்க்கு பேன் பார்க்கிற வேலைய தான் சொன்னேன்” கண்களில் கேலியுமாய் இதழில் குறுஞ்சிரிப்புமாய் அவளை நோக்கி அவன் கூறவும்,

அவனின் கேலியான பதிலில் தனது ஆள்காட்டி விரலால் மூளையைத் தட்டி அவள் யோசிக்கவும், அவளின் மூளை சரியான பதிலை அவளுக்கு எடுத்துரைக்க, தலையிலடித்துக் கொண்டு “பேட் பாய்” எனக் கூறியவள், நாணங் கொண்ட முகத்தை அவனது மார்பினில் புதைத்து மறைத்து கொண்டாள்.

“ஆஹான் ரசகுல்லா போய் பேட் பாய் ஆகிட்டோ” மீண்டுமாய் அவளை அவன் வம்பிழுக்க, சற்றாய் எம்பி அவனது கன்னத்தை அவள் கடிக்கவும், ஆஆஆ வென அலறி தன் கைவளையிலிருந்து அவளை அவன் விடுவிக்க, “கிடைத்தது இடைவெளி” எனச் சிட்டாய் பறந்து சென்றாள் அவள்.

அடுத்த இரண்டு நாட்களில் பெங்களூர் சென்று அர்ஜுனின் வீட்டில் இவர்களுக்காக வைத்த விருந்தில் கலந்து கொண்டு நான்கு நாட்கள் பெங்களூரில் கழித்து விட்டு, அங்கிருந்து தேனிலவு பயணமாய் வயநாடு சென்று வந்தனர்.

இருவரின் கல்யாண விடுப்புகளும் முடிய, பள்ளிக்கு செல்ல அழும் குழந்தையின் மனநிலையில் அலுவலகத்திற்குச் சென்றனர் இருவரும்.

காலையில் சத்யாவுடன் சேர்ந்து சமையல் செய்து, அலுவலகத்திற்கு இவள் கிளம்பும் நேரம், இருவருக்குமாய்ச் சேர்த்து மதிய உணவை கட்டி கொடுப்பார் சத்யா.

இவர்கள் இருவரும் அலுவலகத்திற்குக் கிளம்பியவுடன், நூலகம் செல்வதாய்த் தர்மன் சென்று விடுவார். வேலையாள் வந்து வீட்டை கூட்டி பாத்திரம் கழுவும் வேலையைப் பார்க்க, இயந்திரத்தில் துணி துவைத்து காய வைத்து மடித்து வைக்கும் வேலையைக் கவனிப்பார்.

வேலையாள் வீட்டிற்கு வரும் சமயமெல்லாம், அகிலனை மனதிற்குள் மெச்சி கொள்வார். அவன் மனைவிக்காகவென அன்று கூறி இந்த வேலையாளை வைத்தாலும், அது வெகு உதவியாய் இருந்தது சத்யாவுக்குத் தான்.

இட்லி பொடி, மிளகாய் பொடி அரைப்பது, வாங்கிய மளிகை சாமான் காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுக்கி வைப்பதென, மாதம் ஒரு நாள் ஜன்னல், காற்றாடி, மேஜை எனத் துடைத்து வைப்பது என இம்மாதிரியான வேலைகளுக்கும் அந்த வேலையாள் வெகுவாய் உதவியாய் இருந்தார்.

தனக்காக வேலையாள் வைத்துக் கொள்ளக் கேட்டால், தான் ஒத்துக் கொள்ள மாட்டேனென எண்ணி மனைவிக்கெனக் கூறி வேலையாளை நியமித்தான என பல நாட்கள் சந்தேகம் வந்திருக்கிறது சத்யாவிற்கு.

மாலை வேளையில் தேநீர் போடும் வேலையைச் சத்யா செய்ய, இரவுணவை ஆதினி தயார் செய்வாள். அவளுக்கு உடல் சுகமில்லாத நாட்களில் சத்யாவே இரவுணவையும் கவனித்துக் கொள்வார்.

ஆதினிக்கும் சத்யாவிற்குமிடையே நல்லதொரு உறவு நிலை வளர்ந்திருந்தது. எவ்வித காழ்ப்புணர்ச்சியோ வன்மமோ இன்றி இருவருமே தூய்மையான பாசத்தை மற்றவர் மீது செலுத்தினர்.

திருமணமாகி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தன்னைப் புது ப்ராஜட்டிற்குப் பதவி உயர்வுடன் தேர்வு செய்திருப்பதாய் முகம் கொள்ளா புன்னகையுடன் ஆதினியிடம் வந்துரைத்தான் அகிலன்.

அந்த ப்ராஜக்ட் தான் அவனின் வாழ்க்கைக்கு ஆப்படிக்கப் போகிறதென அறியாது துள்ளி குதித்திருந்தான் அவன்.

— தொடரும்