முள்ளில் பூத்த மலரே – 23

முள்ளில் பூத்த மலரே 23

ஆதினியும் அகிலனும் அவனின் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

“இதுவும் ஒரு மாதிரி நல்லா தாங்க இருக்கு! அப்பாவோட புல்லட் மாதிரியும் இல்லாம, அண்ணாவோட யமாஹா மாதிரியும் இல்லாம இந்த வண்டி ஒரு மாதிரி கம்ஃபெர்ட்டபிளா தாங்க இருக்கு” இரு புறமாய்க் கால் போட்டு அகிலனின் தோளில் கை போட்டு வண்டியில் சென்று கொண்டிருந்த ஆதினி அவன் முகத்தைக் கண்ணாடியில் நோக்கியவாறே கூறினாள்.

அவளின் பேச்சில் மெலிதாய் சிரித்தவன், “ஆமா இப்படித் தான் சின்னபிள்ளதனமா சர்ப்ரைஸ் கொடுத்துப்பீங்களா நீயும் உன் அண்ணனும்? ரொம்ப மொக்கையா இருக்கு!” முகத்தைச் சுளித்து அகிலன் கூற,

அவன் கூறியது புரிந்தாலும், வேண்டுமென்றே, “ஹான் என்ன சொன்னீங்க? கேட்கல” புரியாத பாவனையை முகத்தில் தேக்கி அவள் கேட்க,

அதைப் புரிந்து கொண்டவனோ நமட்டு சிரிப்புடன், “இப்படித் தள்ளி உட்கார்ந்திருந்தா எப்படிக் கேட்கும்? என் இடுப்பை கட்டி பிடிச்சி இன்னும் நல்லா ஒட்டி உட்கார்ந்தா நல்லா கேட்குமே” கேலியாய் கூறவும்,

“ஆசை தோசை அப்பளம் வடை! பப்ளிக்காலாம் நான் கட்டிக்க மாட்டேன்ப்பா” எனப் பலவித முகப் பாவனையுடன் கூறினாள் ஆதினி.

வாய்விட்டு சிரித்தவன், “கேடி! இது மட்டும் எப்படிக் கேட்டுச்சாம்? உன் பாசமலர் அண்ணனை குறை சொல்லி பேசினா காது கேட்காதோ” எனப் பின்னோக்கி கை நீட்டி அவள் தலையில் குட்ட போக, அதில் அவனது கையில் வண்டி இங்கும் அங்குமாய்ச் சற்று அலைப்பாய,

அவன் குட்ட வந்த சிறு மணித்துளியில் வண்டியை எங்கேனும் இடித்து விடுவானோ என மனம் பதற பயந்தவள் அவனை ஒட்டி உட்கார்ந்து, “வண்டி ஓட்டும் போது என்னப்பா விளையாட்டு இது? ரோட்டை பார்த்து ஓட்டுங்க” எனக் கோபமாய் உரைத்தாள்.

அவனை ஒட்டி அமர்ந்தவளின் கைகள் அவனின் வயிற்றிலிருக்க,  அக்கைகளிலிருந்த நடுக்கத்தை உணர்ந்தவன், “கண்ணுமா இதுக்குலாமா பயப்படுவ!” என்றவன், மறுநொடி “சாரி இனி நீ இருக்கும் போது பார்த்து ஓட்டுறேன்” என்றான்.

“நான் இருக்கும் போது மட்டுமில்ல, நீங்க தனியா போனாலும் சேஃபா போங்கப்பா! வண்டி ஓட்டும் போதெல்லாம் நான் உங்க பின்னாடி உட்கார்த்திருக்கிறதா நினைச்சிக்கோங்க! அப்ப தான் ஒழுங்கா ஓட்டுவீங்க” சற்று கோபமாகவும் அக்கறையாகவுமே அவள் கூற,

அவளின் வார்த்தையில் அதை உணர்ந்தவனோ “சரி ஓகேடா கண்ணுமா” பயந்திருந்தவளை மேலும் பதட்டமடையச் செய்ய மனமில்லாமல் உடனே சரணடைந்தான்.

அவளை இயல்பாக்கும் பொருட்டு, “ஆமா உங்க வீட்டுல யாரும் தியேட்டர்ல போய்ப் படம் பார்த்ததில்லையா?” எனக் கேட்டான் அகிலன்.

“இல்லங்க! அம்மாக்கு தியேட்டர் சவுண்ட் எபெஃக்ட்ல தலை வலி வரும். அப்பாக்கு தியேட்டர்ல படம் பார்க்க அவளோ பிடிக்கும். ஆனா அம்மா இல்லாம படம் பார்க்க பிடிக்காம தியேட்டர் போறதையே விட்டுட்டாங்க. நானும் அண்ணனும் தான் ஏதாவது ரொம்ப நல்ல படம், மனசுக்கு பிடிச்ச படம்னா போய்ப் பார்ப்போம். இப்ப நம்ம போற படம் வந்த புதுசுல தியேட்டருல பார்க்கனும்னு நான் ரொம்பவே ஆசைப்பட்ட படம். ஆனா அப்ப அண்ணாக்கு இருந்த வேலைனால போக முடியலை. தியேட்டர்ல பார்க்காதனால டிவில பார்க்கவும் மனசில்லாம பாக்காமலேயே இருந்தேன். அதான் அண்ணன் இப்ப அதே படம் ரீரிலீஸ் ஆகவும் எனக்கு டிக்கெட் புக் செஞ்சிருக்கான்” கதையாய் அவள் கூறிக் கொண்டு வர, அவர்களின் வண்டி சென்று நின்றது ஒரு திரையரங்கில்.

திரையரங்கிற்குள் சென்று ரசீதினை காண்பித்துவிட்டு அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தனர்.

சுற்றும் முற்றும் இருந்தவர்களைத் தலையைச் சற்றுத் திருப்பிப் பார்த்துக் கொண்டான் அகிலன்.

“என்ன பார்க்கிறீங்க?” அவள் கேட்டதற்கு,

“இல்ல நம்ம சேஃபான இடத்துல தான் இருக்கோமானு பார்த்தேன்” அவள் காதில் கிசுகிசுத்தான்.

“தியேட்டருல என்ன சேஃப்?” புரியாமல் அவள் கேட்க,

“அடியே மக்கு பொண்டாட்டி நம்மளை சுத்தியுள்ள ஆளுங்க எப்படினு பார்த்தேன். அவங்களால பிரச்சனை வருமானு ஒரு சேப்டிக்கு பார்த்து வச்சிக்கிறது நல்லது!” சொல்லி கொண்டிருந்த சமயம்,

திரையில் படத்தைக் காண்பிக்கத் தொடங்கவும், தல எனப் பல குரல்களும், விசில் சத்தமும், கை தட்டலும் அந்த அரங்கத்தை அதிர செய்தது.

ஆமா அவர்கள் அஜீத் நடித்திருந்த விஸ்வாசம் படித்திற்கே வந்திருந்தனர்.

அவர்களின் கூச்சல் மற்றும் சத்தத்தினுடன் தானும் இணைந்து கைதட்டிக் கொண்டிருந்தாள் ஆதினி.

அஜீத்தின் பெயரை திரையில் கண்டதும் ஆதினியின் முகத்தில் வந்து போன பரவசத்தைப் பார்த்தவன், “நீ என்ன அஜீத் ஃபேனா?” எனக் கேட்டான்.

“ஒரு படம் பிடிக்கனும்னா அந்த ஹீரோவோட ஃபேனா தான் இருக்கனுமா என்ன?”

அடுத்து அஜீத்தின் அறிமுகக் காட்சி வரவும், அடுத்தப் பரவச கைதட்டல் அவளிடமிருந்து வந்தது.

படத்தைப் பார்க்காது அவளின் முகத்தினைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் அகிலன்.

அவளை இத்தனை மகிழ்வாய், இத்தனை பரவசமாய், வாய் முழுவதும் சிரிப்பாய் இதற்கு முன் அவன் பார்த்ததே இல்லை.

“ஆனா நீ அஜீத் பேருக்கே இவ்ளோ பரவசமாகுறியே? அப்புறம் எப்படி ஃபேன் இல்லனு நான் நம்புறது?” அவன் கேட்க,

“அப்பாக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். அதனால எனக்கும் பிடிக்கும். அப்பா இங்க இருந்திருந்தா எப்படி ரியாக்ட் பண்ணிருப்பாங்கனு நினைச்சனால வந்த சந்தோஷமும் பூரிப்பும் இது” அமைதியாய் கூறி முடித்தவள், மீண்டும் படத்தின் காட்சியினுள் மூழ்கினாள்.

அவளின் அப்பாவின் மேல் எந்தளவிற்கு அவள் பாசம் வைத்திருந்தால், அவருக்குப் பிடித்ததெல்லாம் தனக்கும் பிடிக்குமென்று அவருடன் வாழ்ந்திருப்பாள் என அவனுக்குத் தோன்ற, “இப்படி ஒரு அப்பா பொண்ணை என் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்ல!” அகிலனின் மனம் சற்றாய் மாணிக்கத்தை எண்ணி பெருமிதமும் பொறாமையும் கொள்ளத் தவறவில்லை.

முதல் பாதிப் படம் முழுவதும் ரசித்துச் சிரித்துக் கை தட்டியென அவள் பார்த்திருக்க, இரண்டாம் பாதியில் அவள் தன்னைக் கலங்கடிக்கப் போவது தெரியாமல், திரையின் காட்சிகளுக்கேற்றதாய் மாறும் அவளின் முகப் பாவங்களை மட்டுமே பார்த்து ரசித்திருந்தான் அகிலன்.

இடைவேளை நேரம் அவளுக்குப் பிடித்த திண்பண்டங்களை வாங்கி வந்து கொடுத்து அமர்ந்ததும் படம் துவங்க, சற்று நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தவள் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.
கண்களில் அரும்பும் நீரையும் அறியாது திரையையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள் ஆதினி.

ஒரு காட்சியில் அஜீத்திடம் அவளின் மகள், “எனக்கு இந்த உலகத்துலேயே பிடிக்காதது என் அப்பாவை தான். என் அப்பா அம்மா பிரிஞ்சிட்டாங்க. நான் என்ன தப்பு பண்ணேன். என் அப்பா என்னைப் பார்க்க வரலாம்ல. பேரண்ட்ஸ் டேக்கும், ஸ்போர்ட்ஸ் டேக்கும் அம்மா மட்டும் தான் வருவாங்க. உனக்கு அப்பா இல்லையானு ஃப்ரண்ட்ஸ் கேட்குறப்ப எனக்கு அழுகை அழுகையா வரும்”

இந்த வார்த்தையைக் கேட்ட நொடி, அகிலனின் கைப்பற்றிய ஆதினி, “மாணிக்கம் அப்பா என் வாழ்க்கைல வராம போயிருந்தா இப்படித் தான் நானும் அப்பா இல்லாம கஷ்டப்பட்டுறுப்பேன்பா” நீர் வழிவதையும் அறியாது தன் மன உணர்வுகளை அகிலனிடம் உரைத்தவள்,

அலைகடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே

புதை மணலில் விழுந்தே
புதைந்திடவே இருந்தேன்
குறுநகையை எறிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும்
ஆடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்

கண்பட்டு நூல்விட்டுப் போகும்
என ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றைப் பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாகத் தோன்றும் இதே வினாடி

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாயவா

அதன் பின்பான இந்தப் பாடல் வரிகளிலும் அஜீத்தின் வேதனை முகத்திலும் தனது தந்தையின் சாயலை கண்டவள் அழுகையில் விசும்பவாரம்பித்தாள்.

அவளைத் தன் தோளில் சாய்த்து சற்றாய் அவன் தேற்ற, சற்று மட்டுபட்டவள், அடுத்து வந்த இந்த வசனத்தில் முழுவதுமாய் உடைந்து போனாள்.

“உன் கூட இருக்கும் போது பாசமா இருக்குமா. அவர் கூட இருக்கும் போது பாதுக்காப்பா இருக்குமா”

அவளின் குழந்தை பருவ நிகழ்வுகள் அவளின் மனக்கண்ணில் ஊர்வலம் போகவாரம்பித்தது. அங்கு எங்குக் காணினும் மாணிக்கமே வியாபித்திருந்தார்.

எத்தகைய வாழ்க்கையை, எத்தகைய உயர்வான உறவை அவர் தனக்கு வழங்கியிருக்கிறாரென எண்ணி மனம் பூரித்து நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தது அவளின் கண்கள்.

“இப்படி நீ அழுறதுக்குத் தான் படத்துக்கு வந்தியா?” அவளின் கண்ணீரை காண சகிக்காது சற்று கண்டிப்பாகவே அகிலன் கேட்கவே, அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

சிறுபிள்ளை பாசத்தில் தன் தாயிடம் அண்டும் செய்கையாய் அது தோன்ற, அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான். தாய்மையின் செய்கையே அதில் பிரதானமாய் வெளிபட, சற்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “தேங்க்யூ” என்றாள்.

புரியாது அவளை அவன் நோக்க, “உனக்காக அப்பா ப்ளேஸ்ல இனி நான் இருக்கேன்னு நீங்க சொல்லாம சொல்றது போல இருந்துச்சு” மென்மையாய் சிரித்தவன், “படத்தைப் பாருடா” என்றான்.

முழுவதுமாய் அழுது வடிந்தே அப்படத்தைப் பார்த்து முடித்தாள்.

வண்டியில் ஏறிய நொடியிலிருந்து மௌனம் மட்டுமே அவளை ஆட்கொண்டிருக்க, அவளின் மனவெளிகளில் மாணிக்கத்தினைப் பற்றிய சிந்தனைகளும் நினைவுகளுமே ஊர்வலம் போக, அதை உணர்ந்த அகிலனோ அவளைத் தொந்தரவு செய்யாது அமைதியாய் வண்டி ஓட்டினான்.

ஒரு பக்கமாய் அமர்ந்திருந்தவள், அவனது தோளில் கை வைத்து முதுகில் சற்றாய் சாய்ந்து கொண்டாள்.

அவன் வண்டி செல்லும் வழி தடங்களைக் கண்ணெடுத்தும் பாராது அவளொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டு வர, அவன் வண்டியினை நிறுத்திய பிறகே, அவர்கள் வந்திருப்பது அவளுடைய மாணிக்க மலர் பவன இல்லமெனக் கண்டாள்.

துவண்ட மனம் சட்டென்று மலர, சோர்ந்த முகம் சோகத்தை விரட்டியடித்துச் சந்தோஷத்தை பூசிக் கொள்ள, முகம் கொள்ளா புன்னகையுடன், பூரண ஆனந்தத்தின் நிறைவில் வண்டியிலிருந்து இறங்கியவள், அவனை இறங்கவும் விடாது கழுத்தில் கைகளை மாலையாய் கோர்த்துத் தாவி அணைத்துக் கொண்டாள்.

சட்டென நிகழ்ந்த அவளின் செய்கையில் சற்றாய் தடுமாறியவன், “நல்ல வேளை (கேட்) கேட்டுக்குள்ள வந்து வண்டியை நிறுத்தினேன்” சுற்றும் முற்றும் பார்த்து எவருமில்லையெனத் தெரிந்து ஆசுவாசமானவன் அவளைச் சற்றாய் அணைத்து விடுவித்தான்.

அப்படத்தைக் காணும் நேரமெல்லாம் தந்தையைக் காண துடித்த மனத்தினை அடக்கியவள், தான் கூறாது இருப்பினும் அதனைக் கண்டறிந்து தன்னைத் தன் தந்தையிடமே கொண்டு வந்து சேர்த்த தன்னவனின் மீதெழுந்த அன்பின் மிகுதியால் இச்செயலை செய்திருந்தாள்.

அதற்குள் வண்டியின் சத்தத்தினைக் கேட்டு வெளி வந்திருந்த மலரோ, இவர்களது பூரிப்பான முகத்தைப் பார்த்தாலும், அழுதழுது வீங்கியிருந்த ஆதினியின் கண்களைப் பார்த்து, “என்னாச்சு ஆதுமா?” எனப் பதறிக் கொண்டு அருகில் வர,

அப்பா எங்கேயெனக் கேட்டவள், அவர் உள்ளிருக்கிறாரெனத் தெரியவும், ஓடோடி சென்று அவரை அணைத்து அழுதிருந்தாள்.

“என்னடா கண்ணம்மா? என்னாச்சு” என அவரும் மகளை அணைத்து ஆறுதல் படுத்தியவாரே கேள்வியைக் கேட்க,

“ஹப்பா சாமி! பார்த்தாலும் பார்த்தேன் இப்படி அப்பா பொண்ணு பாசத்தை நான் பார்த்ததே இல்லைப்பா” தாடையில் கை வைத்து ஜாடை காண்பித்து அகிலன் வேடிக்கையாய் பேச,

அதில் சிரித்த மலர், “என்ன? அப்பாவை உடனே பார்த்தே ஆகனும்னு ரகளைப் பண்ணிட்டாளா?” எனக் கேட்டார்.

திரையரங்கில் நிகழ்ந்தவற்றை அகிலன் கூறவும், அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது.

“ஆமா எங்க என் மச்சான்? இப்ப தானே புரியுது! ஏன் அவன் இவளை அந்தப் படத்துக்குக் கூட்டிட்டு போகாம என்னைய கூட்டி போக வச்சானு. எத்தன நாளா என்னைய இப்படிப் புலம்ப விடுறதுக்கு ப்ளான் பண்ணி இதைச் செஞ்சானோ!”

“ஒரு படம் பார்க்க கூட்டிட்டு போனதுக்கா இந்த அக்கப்போருனு ஆகிட்டு அத்தை” மீண்டும் கேலியாய் அகிலன் ஆதினியையும் மதுரனையும் சேர்த்து வாரிக் கொண்டிருக்க,

சற்றாய் சிணுங்கி கொண்டே அகிலனருகில் வந்து அவனது புஜத்தில் குத்தினாள் ஆதினி.

“அய்யோ அதே ஏன் கேட்குறீங்க தம்பி? இந்தப் படத்தை டிவில பார்த்துட்டு அவரும் அதே அக்கப்போர் தான் பண்ணாரு” அங்கலாய்பாய் மலர் கூற,

“போதும் போதும்! உங்களுக்கு எங்க அப்பா பொண்ணு பாசம் கேலியாய் இருக்கு என்ன? நீ வாடா கண்ணம்மா, அப்பா உனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தரேன். நம்ம மட்டும் பைக்ல போகலாம். இவங்க இரண்டு பேரையும் விட்டுட்டு தான் போறோம்” ஆதினியை மடியில் அமர்த்திப் போலி கோபத்துடன் மாணிக்கம் உரைத்திருக்க,

அகிலன் ஆதூரமாய் இக்காட்சியைப் பார்த்திருந்தான்.

“இன்னும் அவளைக் குழந்தையாய் மட்டுமே பாவித்து வழி நடத்தும் குடும்பம்! இவளை எப்படி எந்தக் கவலையும் அண்டாம நான் பார்த்துக்கப் போறேனோ?” மனதில் எண்ணிக் கொண்டே அவர்களை நோக்கி கொண்டிருக்க,

“வாங்க தம்பி நம்ம சாப்பிடுவோம். அப்பாவும் பொண்ணும் கொஞ்ச ஆரம்பிச்சிட்டாங்கனா ஊர் உலகத்தையே மறந்துடுவாங்க” அகிலனை உணவு மேஜைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து அவர் உணவு பரிமாற, அவர்களும் இவர்களுடன் வந்து இணைந்து கொண்டனர்.

மீண்டுமாய் மதுரன் எங்கேவென அகிலன் கேட்க, “மது ஆபிஸ் போய்ருக்கான்ப்பா” என்ற மலர், பின்பு தனது மகளிடம் அவளின் புகுந்த வீட்டை பற்றியும் அவளின் புதிய சொந்தங்களைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

இருவரும் உடனே கிளம்பி செல்வதாய் உரைக்க, அவர்கள் வீட்டிற்கு வந்தது மதியம் மூன்று மணியளவில் என்பதால், அதுவும் இரு சக்கர வாகனத்திலேயே அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்திருப்பதால் அவர்களை ஓய்வெடுக்குமாறு பணித்தார்.

ஓய்வெடுக்கவென அவளது அறையினுள் இவர்கள் இருவரும் உள் நுழைந்ததும், அகிலன் திரும்பி நின்று தாழ்ப்பாள் போட,

தான் கேட்காமலேயே தன்னைத் தனது தந்தையிடம் அழைத்து வந்த அகிலனின் செயலில் அவன் மீது பெருங்காதல் ஊற்றெடுக்க, அவனைப் பின்னிருந்து அணைத்திருந்தாள்.

“லவ் யூ மை ஸ்வீட் ரசகுல்லா” முதுகில் முத்தமிட்டு அவள் உரைத்த நொடி, சட்டென அவள் புறம் திரும்பியவன், “என்ன சொன்ன? என்ன சொன்ன?” எனக் கேட்க,

“கோல்டன் வேர்ட்ஸ் ஆர் நாட் ரிபீட்டட்” சிரிப்பாய் கண் சிமிட்டி உரைத்தவள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“இல்ல ஏதோ ரசகுல்லானு என் காதுல விழுந்துச்சு” என்றவன்,

“ஏன்டி ரசகுல்லானா எனக்குச் செல்ல பேரு வச்சிருக்க?” ரசிப்பான சிரிப்புடன் அவன் கேட்க,

சற்றாய் தலை நிமிர்த்தி அவன் கண்களை நோக்கியவள், அவனின் கன்னத்தைக் கடித்து வைத்தாள்.

ஆஆஆ என அவன் அலற, அவளுள் ஊற்றெடுத்த காதல் ஆறாய் பெருக்கெடுத்தோட அவனின் இதழை கடித்திருந்தாள்.

“அடியே ராட்சசி” வாய்க்குள் அலறியவன், “உன்னை இன்னிக்கு என்ன செய்றேன் பாரு” சூளுரைத்தவன் அவளின் செயலை தனதாக்க, அவளுள் மூழ்கியவனின் பணியில் ஈருடல் ஓருயிராய் கலந்தனர்.

மாலையில் மதுரன் வீட்டை வந்தடைந்த நேரம் இவர்கள் உறங்கி எழுந்து குளித்து முடித்துத் தங்களது இல்லத்திற்குச் செல்ல தயாராகியிருந்தனர்.

பின் அனைவருமாய் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திய பின், மதுரன் அகிலனிடம் தங்களது புது டிரஸ்ட் ஆரம்பிப்பது தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டான்.

அங்கிருந்து அவர்களது வீட்டுற்கு சென்ற அகிலன் ஆதினியிடம் சண்டையிடவெனக் காத்திருந்தார் சத்யா.

—  தொடரும்