முள்ளில் பூத்த மலரே – 22

மறுநாள் காலை கண் விழித்த ஆதினியை வெகு அருகே தெரிந்த அகிலனின் முகமே வரவேற்றது.

அவனின் கைகளுக்குள் அவன் முகம் நோக்கியவாறு படுத்திருந்தவளுக்குக் கண் விழித்ததும் அவனது தரிசனமே கிட்ட, தூங்கும் தன்னவனை இமை சிமிட்டாது ரசித்திருந்தாள்.

அன்பு அத்தனையையும் ரசிக்க மட்டுமே சொல்லுமாம். அகத்தில் உள்ளன்போடு காணும் காட்சிகள் யாவும் அழகானதாய் மட்டுமே புறக்கண்களுக்கும் தெரியும்.

தலை முடி கலைந்து, உறக்கத்தினால் வழிந்த எண்ணை பசை முகத்தையும் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் அவள்.

நேற்றைய அவனின் செயலில் அவளின் மனம் அவன்பால் முழுவதுமாய்ச் சாய்ந்து விட்டதை அறிந்தாள் அவளின் இந்தச் சைட் அடிக்கும் செயலில்.

அவனின் முன் நெற்றியில் முத்தமிட உந்திய மனத்தினையடக்கி, தன் எண்ணம் போகும் திசையை அதிர்வாய் அறிந்து நாணம் கொண்டவள், அதன்பின் அவனின் கைகளை மெதுவாய் நகர்த்தி மெத்தையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

அவள் வெளிவந்து அவனது முதுகு புறமாய் நின்று புடவை அணிந்து கிளம்பும் வரையுமே அவன் உறங்கி கொண்டிருக்க, கீழே செல்லலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டே அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அவனுடனான முதல் காலை வேளையான இந்நாளில் தன் கையால் தயாரித்த காபியை கொடுக்க எண்ணியவள் சமையலறைக்குச் செல்ல, “வாம்மா ஆதி! காபி குடிக்கிறியா?” எனக் கேட்டார் அவளின் அத்தை சத்யா.

சத்யா அவளை அனைவரும் அழைக்கும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆதி என்றே அழைத்தார்.

“இல்லத்த! நானே அவருக்குக் காபி போட்டுக் கொண்டு போறேன்” தயக்கமாய் அவள் கூறவும், சற்றாய் சிரித்துச் சரியென்று தலையசைத்து வழி விட்டு தள்ளி நின்று கொண்டார்.

ஆனால் அவள் அந்தக் காபியை போடுவதற்குள் இதை இங்கே வைக்காதே அதை அங்கே வையெனப் பாடமெடுத்தே அவர் அவளை ஒரு வழியாக்க, “எங்கம்மாக்கும் அவங்க சமையலறைல யாராவது உள்ள போயி ஒரு பொருளை இடம் மாத்தி வச்சாலும் அவ்ளோ கோபம் வரும் அத்தை” உங்களை உங்களின் செயலை நான் புரிந்து கொண்டேன் என்பதாய் அவள் இவ்வாறு பேச,

இதுவே இவ்விடத்தில் மீனுவோ அகிலனோ இருந்திருந்தால், தனது தாயை கேலி செய்தோ அல்லது வசை பாடியோ அவரையும் கோபமேற்றிவிட்டே அவ்விடத்தை விட்டு அகலுவர்.
இதை எண்ணியவருக்கோ ஆதினியின் இச்செயலும் அவளின் இந்தப் பேச்சும் வெகுவாய் மனதை கவர, “என் ராசாத்தி” என அவளுக்குத் திருஷ்டி கழிக்க,

இவளை காணவில்லையெனக் கீழே தேடி வந்த அகிலனும், செய்திதாளை புரட்டி கொண்டிருந்த தருமனும், “என்னடா அதிசயம் இது” என விழி பிதுங்கி விழுந்திடும் அளவுக்கு முழித்துப் பார்த்தனர்.

அப்பொழுது அங்கு வந்த மீனாளும், “டேய் அழுக்கு பையா! ஒரே நாள்ல உன் பொண்டாட்டி சிறந்த மருமகள்னு அவார்ட் வாங்கிட்டாங்களேடா!” அதே வியப்பின் மிகுதியில் அவள் உரைக்க,

“அதே தான்மா! மாமியாரும் மருமகளும் அடிச்சிப்பாங்க, நானும் இவனும் சேர்ந்து வெள்ளை கொடி காட்டனும்ல நினைச்சிட்டு இருந்தோம். அதுக்காகப் பல பயிற்சிலாம் எடுத்தோமே! இப்படி எங்களோட ராஜ தந்திரங்கள் எல்லாம் வீணாகி விட்டதே” பாவமான பாவனையுடன் கேலியாய் தர்மன் உரைத்திருக்க,

ஹா ஹா ஹாவெனச் சத்தமிட்டு சிரித்தாள் மீனாள்.

அவளின் சிரிப்பொலியில் திரும்பி பார்த்த சத்யா, “என்ன எல்லாருக்கும் இங்கேயே பார்வை! போங்க போய் உங்க வேலையைப் பாருங்க” என்றவர்,

“இவங்க கூடலாம் சேராதமா ஆதி! உன்னைய கெடுத்து விட்டுடுவாங்க” ஆதினியின் கை பற்றி அவர் கூறியதை கேட்டு,

“புருஷன் கூடயே பொண்டாட்டி சேரக் கூடாதுனு சொன்ன முற்போக்குவாதியான அம்மா நீயா தான்மா இருப்ப” வாய்க்குள் சிரிப்பை ஒழித்து வைத்து அவன் கூற, அவர் அவனை முறைக்க,

அனைவருக்குமாய்க் காபியை கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் ஆதினி.

“அழுக்கு பையா முதல்ல குளிச்சிட்டு வாடா! அப்புறம் காபியை குடி” என்ற மீனு, “அண்ணி காபி சூப்பர்” என நாக்கை சொட்டயிட்டு கூற,

“ஏன் என் காபியும் சேர்த்து நீயே குடிக்கவா” என அவளை முறைத்த அகிலன், “என் பொண்டாட்டி முதல் முதல்ல எனக்கே எனக்குனு காபி போட்டிருக்கா” என அவன் கூறி முடிக்கும் முன்பே,

“இல்லையே நீங்க வீட்டுக்கு வந்தப்பவே என் காபியை குடிச்சிருக்கீங்க தானே” வெள்ளந்தியாய் ஆதினி கேட்க,

“என்னாது வீட்டுக்கு வந்தானா?” என அனைவரும் கோரஸாய் கேட்க, அந்தக் கோராஸில் இணைந்து கொண்டான் மீனுவின் கணவன் பாலாஜியும்.

திருமணத்திற்கு முன்பே ஆதினியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறான் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் யோசித்துக் கேலியாய் ஆச்சரியமாய் எனப் பலவித பாவங்களுடன் வந்த கேள்வியே அது.

“என்ன மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு வீட்டுல செட்டில் ஆகிட்டீங்களா?” கேலியாய் பாலாஜி கேட்க,

சற்றாய் அகிலனை முறைத்த சத்யா, “அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்துருக்கு” எனத் தலையில் அடித்துக் கொண்டு சென்றார் சத்யா.

அவர் மெல்லமாய் முணங்கியது அனைவரின் காதிலும் விழ, “அப்பாஆஆ! கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்ன செஞ்சீங்க? அம்மா இப்படி முணங்கிட்டு போறாங்க” விளையாட்டாய் மீனு தர்மனிடம் கேட்க,

“அட நீ வேறமா! அவ அதெல்லாம் நினைச்சு சண்டைக்கு வந்துட போறா! போங்க எல்லாரும் போய் அவங்கவங்க வேலையைப் பாருங்க” அனைவரையும் அவ்விடத்தை விட்டு கலைத்து விட்டார்.

“அப்பாக்கு அம்மா மேல இருக்கப் பயத்தைப் பாரேன்” என அண்ணனும் தங்கையுமாய்க் காதுக்குள் பேசிக் கொண்டே அவரவர் அறைக்குள் நுழைய,

சமையலறை நோக்கி சென்றாள் ஆதினி.

“நம்ம வீட்டுல உங்க வீடு மாதிரி வீட்டு வேலைக்குலாம் ஆளு இல்லைமா! நம்ம தான் மாத்தி மாத்தி செஞ்சிக்கனும்” ஆதினியிடம் கூறிக் கொண்டே சத்யா காலை சமையலை செய்து கொண்டிருக்க,

“ஆது” என அறையிலிருந்து குரல் கொடுத்தான் அகிலன்.

அவள் சங்கடமாய்த் தனது அத்தையை நோக்கிவிட்டு அவர்களது அறைக்குள் நுழைய பின்னிருந்து அவளை அணைத்திருந்தான் அகிலன்.

“சூப்பர்ரா இருந்துச்சு காபி” எனக் கூறி அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன்,

அவளை மெத்தையில் அமர வைத்து, “உடம்பு இப்ப எப்படி இருக்கு? நம்ம டாக்டரை வேணா போய்ப் பார்ப்போமா?” எனக் கேட்டான்.

அவனின் அக்கறையில் கண்கள் காதலை தத்தெடுத்துக் கொள்ள, அவனைக் கைபிடித்து இழுத்து அருகில் அமர வைத்து எழுந்து நின்றவள், அவனின் முகம் பற்றி முன் நெற்றியில் முத்தமிட்டு, காலை தோன்றிய மனதின் ஆசையைத் தற்போது நிறைவேற்றினாள்.

அவளின் இச்செயலில் அழகாய் சிரித்தவன், “இந்த மாதிரி நேரத்துல ரொம்ப வலி இருக்குமே! மீனுலாம் சுருண்டு படுத்திருப்பா! அம்மாவும் சில நேரம் அப்படி அவதிபடுவாங்க! ஆனா உடல் நிலை பொறுத்து மாறும்னும் மீனு சொல்லுவா! உனக்கும் அப்படி வலிக்குமா?” அவளின் உடல்நிலையை அறிந்து கொள்ளும் ஆவலில் அக்கேள்வியிலேயே அவன் நிற்க,

அவனது இக்கேள்வியில் அவளது கண்களில் பொங்கும் காதலினளவு பெருகியிருக்க, இப்பொழுது அவன் முகத்தைப் பற்றி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

ஆழ்ந்த ரசித்த அம்முத்தத்தின் சிரிப்பு அவன் வதனத்தில் பொங்க, “மேடம் செம்ம மூட்ல இருக்கீங்க போல? ஆனா இந்த டைம்ல மூட் ஸ்விங்லாம் இருக்குமாமே? உனக்கு அப்படி ஆகுமா?” அதே அவளை அறிந்து கொள்ளும் ஆவலில் இக்கேள்வியை அவன் கேட்க,

மீண்டுமாய் அவன் முகத்தைப் பற்றி மறுகன்னத்தில் அழுந்த அவள் இதழ் பதித்த சமயம், அழகாய் தனது முகத்தை நகர்த்தி அவளிதழை தன்னிதழில் பொறுத்தியிருந்தான்.

நொடிகள் நிமிடங்களாய் கரைந்து கொண்டிருந்த சமயம், “ஆதி” என்ற அவளின் அத்தையில் சத்தமான அழைப்பில் அவளின் உடல் அதிர்ந்தடங்க அவனை விட்டு விலகினாள்.

அவனின் கைகளுக்குள் தானே அவள் இருந்தாள். அவளின் உடல் அதிர்வை அவன் உணர்ந்திருக்க, “ஏன் இந்தப் பயம்? அம்மா தானே கூப்பிட்டாங்க! இப்படிச் சட்டு சட்டுனு பயப்படுறது நரம்பை பாதிக்கும் ஆதுமா” என்றான்.

அவனின் பேச்சனைத்திலும் அவளின் நலனே பிரதானமாய் விளங்க, பெண்ணவளின் மனம் நெகிழ்ந்து கரைந்துருக, நொடியில் அவனை இறுக அணைத்து விடுவித்து ஓடியே சென்றாள்.

“இப்ப நான் என்ன கேட்டேன்? இவ என்ன செஞ்சிட்டு போறா? நிமிஷத்துல நம்மளை கிறுக்கா மாத்திடுவா போலையே” எனக்கூறி இன்பமாய் தலையை உலுக்கி கொண்டான் அகிலன்.

அன்றைய காலை மற்றும் மதிய சமையலை சத்யா, ஆதினி மற்றும் மீனாள் மூவருமாய் இணைந்து செய்தனர்.

ஆதினிக்கு உடல்நிலை நன்றாக இருந்த காரணத்தினால், அன்று மாலை கோவிலுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை மீனாளின் இல்லத்தில் மறுவீடு விருந்து என முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ஆதினியின் இந்த உடல் பிரச்சனையை அகிலனை தவிர வேறு எவருக்கும் உரைக்கவில்லை ஆதினி. அதைக் கூற வேண்டாமெனவும் கேட்டு கொண்டாளவள். அதில் ஏனோ பெருத்த பயமும் பதற்றமும் கொண்டாள்.

கோவில் சென்று வந்ததும் தனது தாய் தந்தையருக்கு அழைத்துப் பேசியவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

“கண்ணம்மா” என்ற மாணிக்கத்தின் அழைப்பில் கண்கள் உடைப்பெடுத்து ஆறாய் பெருக, தேம்பி விசும்பி எனப் பேசி வைத்தாள் அவள்.

அவள் அலைபேசியை வைத்த மறுநொடி, “எதுக்கு இந்த அழுகை? நான் என்ன உன்னை அவ்ளோ கொடுமைபடுத்தியா இங்க வச்சிருக்கேன்” அவள் இடையைச் சுற்றி கை போட்டு தனதருகே இழுத்து அவன் கேட்க,

அழுதழுது பேசவும் நா வறண்டு, இல்லையென அவள் தலையசைக்க, குனிந்திருந்த அவள் தலையை நிமிர்த்தி முகத்தைக் கண்டவன், நீரால் நிரம்பியிருந்த விழிகளில் அழுந்த முத்தமிட்டு அந்நீரை உள்வாங்கியவள், “இனி அழுதா! இது தான் செய்வேன்” என கூறி அவளை நோக்க,

அவனது மார்பினில்
சாய்ந்திருந்தவளின் மனமோ அவளது பிறந்த இல்லத்தையே சுற்றி வந்தது.

மறுநாள் அனைவருமாய் மீனாவின் இல்லத்திற்குக் கிளம்பி கொண்டிருந்த சமயம் வந்து நின்றாள் ஒரு பெண்.

“வீட்டு வேலைக்கு ஆள் கேட்டிருந்தீங்களாமே? நான் பக்கத்துல ரெண்டு வீடு தள்ளியிருக்க வீட்டுல தான் வேலை பார்க்கிறேன்” எனக் கூறிக் கொண்டு அந்தப் பெண் நிற்க,

அந்நேரம் வரவேற்பறையில் வீற்றிருந்த அவ்வீட்டினர் அனைவரும் ஒருவர் முகத்தை மற்றவர் மாற்றி மாற்றிப் பாரத்துக் கொண்டிருக்க, மாடியிலிருந்து கீழிறங்கிய அகிலன், “அம்மா நான் தான் என் ஃப்ரண்டு மூலமா வீட்டு வேலைக்கு ஆள் விசாரிக்கச் சொல்லிருந்தேன். அதுக்குத் தான் வந்திருக்காங்க” எனக் கூறவும்,

சத்யாவின் முகம் கோபத்தைக் கொப்பளித்தது.

“ஏன் இத்தனை நாளா இல்லாம இப்ப புதுசா வீட்டு வேலைக்கு ஆளு! புதுசா பொண்டாட்டி வந்ததும் வேலைக்குலாம் ஆளு பார்க்கிற! இதே இத்தனை நாளா நான் செய்யும் போது இந்த யோசனை ஏன் வரலை” என இடம் பொருள் பாராது அந்தப் பெண்ணின் முன்னிலையிலேயே அகிலனிடம் கேட்டுக் கொண்டே தனது கணவரை அவர் முறைக்க,

“அய்யோ எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை” என்பது போல் தர்மன் பாவனைச் செய்ய,

சத்யா சரியாய் இக்கேள்வியினைக் கேட்கும் போது கீழிறங்கிய ஆதினியின் முகம் வெளிறிப் போனது.

“அம்மா அப்புறம் சொல்றேன்” எனப் பற்களைக் கடித்துக் கொண்டே தனது தாயின் காதில் உரைத்தவன்,

“இப்ப வெளில கிளம்பிட்டு இருக்கோம்! நாளைக்கு வாங்க டீடெய்ல்லா பேசலாம்” எனக் கூறி அப்பெண்ணை அனுப்பி வைத்தான்.

“சரி எல்லாரும் கிளம்பிட்டீங்களா? வாங்க போவோம்” என அகிலன் கூறியிருக்க,

“நில்லுடா நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு! அப்புறம் எல்லாரும் கிளம்பலாம்” என அவர் அக்கேள்விக்கான பதிலை அறியும் கோபத்திலேயே நிற்க,

“அம்மா! ஆதினி வேலைக்குப் போறனால எப்பவுமே உனக்குக் கூட இருந்து அவளால உதவ முடியாது. அப்படி அவ உதவி செய்யாம நீ மட்டுமா செஞ்சி கொடுத்து பின்னாடி நான் மட்டும் தான் வீட்டு வேலை செய்றேன், அவ செய்ய மாட்டேங்கிறான்ற மாதிரி சங்கடங்கள்லாம் வேலைக்கு ஆள் வச்சிக்கிட்டா நம்ம யாருக்கும் வராதுனு தோணுச்சு” மனதில் தோன்றியதை அவன் கூற,

இங்கு ஆதினி தான், சத்யா என்ன சொல்வாறோ என வயிற்றில் பயபந்துருள பார்த்திருந்தாள்.

பாலாஜி உட்பட மற்றவர் அனைவருக்கும் இது பழகிய நிகழ்வாதலால் அமைதியாய் சத்யாவை பார்த்து கொண்டிருந்தனர்.

சத்யா அகிலனிடம் சண்டை போடுவார், கோபம் கொள்வார், முகத்தைத் தூக்கி வைத்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, “நல்ல வேளை இந்த விஷயத்துல நீ உங்கப்பா மாதிரி இல்ல” எனக் கூறி கிளம்பவாரம்பித்தார்.

“அண்ணி கண்டிப்பா ஏதோ சொக்கு பொடி போட்டுட்டீஙக எங்கம்மாவுக்கு” ஆதினியின் காதில் அவள் கூற,

“அய்யய்யோ அப்படிலாம் எதுவும் நான் செய்யலை மீனு” எனப் பதறி ஆது கூறவும்,

“அய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன் அண்ணி” என்று கூறி சிரித்தாள்.

அன்றைய தினம் அவர்களது முழு நாளும் மீனுவின் இல்லத்தினில் கழிய, மறுநாள் அவர்களுக்கு, முக்கியமாய் ஆதினிக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான் மதுரன்.

— தொடரும்