முள்ளில் பூத்த மலரே – 21
முள்ளில் பூத்த மலரே 21 :
ஆதினி அகிலனின் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முந்தைய அந்த இரவில், மாணிக்க மலர் பவன இல்லத்தில், தங்களது படுக்கையறையின் மெத்தையில் மலரின் மடியில் தலை வைத்து படுத்திருந்தார் மாணிக்கம்.
மனமெல்லாம் வேதனை சூழ்ந்திருந்தது அவருக்கு. கண்கள் அவ்வலியை பிரதிபலித்திருந்தது.
அவரின் தலையை மலர் கோத, “பொண்ணுங்களையே பெத்துக்கிட கூடாது பேபிமா” வெகு கலக்கமாய் மாணிக்கம் உரைக்க,
“ஹான்… அப்படி எங்கப்பா நினைச்சிருந்தா நான் உங்களுக்கு கிடைச்சிருப்பேனா?” என்றவர் கேட்க,
தொண்டை அடைக்கும் துக்கத்தை எவ்விதம் உள்வாங்குவதென புரியாது கண்ணீர் உகுக்க, அது அவரின் விழிகளிலிருந்து காதிற்கு பயணிக்க, அதை கண்ட மலரோ அதிர்ந்து பரிதவித்து,
“அய்யோ ஏன்ப்பா! பொண்ணா பிறந்துட்டா ஒரு நாள் கல்யாணமாகி வேற வீட்டுக்கு போக தானே வேணும். அதுக்கு ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க” என அவரை தேற்ற,
“அப்பாஆஆ… அப்பாஆஆஆனு என் கழுத்தை கட்டிகிட்டு பின்னாடியே சுத்துற பொண்ணு இனி என் கூட இருக்க மாட்டானு நினைக்கவே மனசு வலிக்குது பேபிமா! அவளுக்கு மாப்பிள்ளை அமையாத வரைக்கும், மாப்பிள்ளை அமையலையேனு கவலையா இருந்துச்சு… இப்ப நம்மளையெல்லாம் விட்டுட்டு மாப்பிள்ளையோட போய்டுவாளேனு கவலையா இருக்கு” என்றுரைத்து சற்று நேரம் அமைதியானவர்,
“ஆனா இது தானே நிதர்சனம்! ஏத்துக்கிட்டு தான் ஆகனும்” என கூறிக் கொண்டே எழுந்தமர்ந்தார்.
“எனக்கு அதை விட அகிலனை கட்டி வைக்கலாம்னு நீங்க சொன்னதுல இருந்து மனசு என்னமோ நெருடலாவே இருக்குப்பா! நீங்களும் மதுவும் அவ்ளோ விசாரிச்சிருந்தாலும் நம்ம பொண்ணுக்கு அங்க எதுவும் செட் ஆகாத மாதிரி இருந்துட கூடாதே! அவ மனசு கஷ்டபடுற மாதிரி யாரும் நடந்துக்க கூடாதேனு தான் எனக்கு கவலையாய் இருக்கு” மலர் தன் மனதிலுள்ள சங்கடத்தை கூற,
“அதெல்லாம் பொண்ணுகளுக்கு கல்யாணம்னு ஒன்னு ஆகிட்டா, அந்த குடும்பத்துக்குள்ள தன்னை புகுத்திக்கிட்டு, இருக்க சூழலை ஏத்துக்கிட்டு வாழுற பக்குவம் தானா வந்துடும்” மாணிக்கம் உரைக்க,
“அது வந்துடும்ங்க. ஆனா அப்படி ஒரு கெட்ட சூழல்ல நம்ம பொண்ணை நாமளே பிடிச்சி தள்ளிவிட்டுட்டு அட்ஜஸ்ட் பண்ணி வாழுனு சொல்ல கூடாதுல. அவளுக்கு ஏத்த சூழலா இருக்க குடும்பமா பார்த்து கட்டி வைக்கிறது தானே பெத்தவங்களா நம்மளோட கடமை! அதை சொன்னேன்! அகிலன் குடும்பம் அப்படி இருக்குமானு ஒரு பெரிய சந்தேகம் எனக்கு இருந்துட்டே இருக்கு” கவலை தொனியில் மலர் கூற,
“எதுனாலும் அகிலன் பார்த்துப்பான்மா. அவனுக்கு நம்ம பொண்ணு மேல காதல் அதிகம். அவனை நம்பி தான் நானும் மதுவும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டோம்” என்றவர் கூறவும்,
“எப்படியோ கடவுள் அருளால் நம்ம பொண்ணு சந்தோஷமா வாழ்ந்தா போதும் எனக்கு” என்று அத்துடன் இப்பேச்சை முடித்து கொண்டார்.
ஆனால் இதை பற்றி அகிலனிடம் பேச வேண்டுமென மனதில் எண்ணிக் கொண்டார் மாணிக்கம்.
நிச்சயதார்த்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பே மாணிக்கம் குடும்பத்தினர் அந்த குடியிருப்பை விட்டு வந்து தங்களது சொந்த இல்லத்தையிலேயே குடி புகுந்தனர்.
அந்த குடியிருப்பிலுள்ள இல்லத்தை வாடகைக்கு விட்டிருந்தனர்.
அகிலன் குடும்பத்தினர் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த இல்லத்தில் கிரகபிரவேஷம் செய்து குடி புகுந்தனர்.
மாணிக்கம் இல்லத்திலிருந்து இந்த இல்லம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
அகிலனின் இல்லம் அவர்களது அலுவலகத்திற்கு சற்று அருகிலேயே இருந்தது.
நிச்சயத்திற்கு பிறகான நாட்களில் காதல் பறவைகளாய் தான் அகிலனும் ஆதினியும் வலம் வந்தனர்.
அலுவலகத்தில் ஒன்றாய் அமர்ந்து உணவை உண்பது, தினமும் கைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்புவது என தங்களது காதலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்திருந்தனர்.
அகிலனின் தங்கை மீனாளும் ஆதினியும் இந்த இடைப்பட்ட நேரத்தில் நல்ல நட்புறவாய் பழகினார்கள்.
திருமணத்திற்கு முந்தைய நாள் காலை மண்டபத்திற்கு அனைவரும் கிளம்பி கொண்டிருக்க, கையில் வைத்த மருதாணியுடன் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஆதினி.
மலர் அவளறைக்கு சென்று அனைத்து பொருட்களும் எடுத்து வைத்து விட்டாளாவென பார்க்க, எங்கோ வெறித்து நோக்கியபடி கண்ணீர் நீருடன், அதை துடைக்கவும் மனமற்று அமர்ந்திருந்தாள் ஆதினி.
அச்சமயம் மதுரனும் அவளறைக்கு வந்து பார்க்க, அவளழுவதை பார்த்து தன் தாயிடம் கண் சிமிட்டி என்னவென்று கேட்க, உதட்டை பிதுக்கிய அவரோ ஆதினியின் அருகினில் அமர்ந்து அவள் தோளை தொட, திடுக்கிட்டு தாயை நோக்கியவளோ அவரின் தோளில் சாய்ந்து தேம்பி அழவாரம்பித்தாள்.
“இது இனி என் ரூம் இல்லைல! நான் இல்லைனு இந்த ரூமை யாருக்காவது விட்டீங்கனா அவ்ளோ தான்” கூறிக் கொண்டே தேம்பி தேம்பி அழ,
மாணிக்கமும் அந்நேரம் வந்து சேர, “அட லூசே இந்த ரூமை வேணா உனக்கு எழுதி வைக்க சொல்லிடுறேன்” என மதுரன் அவளை கேலி செய்ய,
“போடா” என அவனிடம் சிணுங்கியவள், மாணிக்கத்தை கண்டதும், “அப்பா” என அவரை கட்டிபிடித்து அழவாரம்பித்தாள்.
“நீங்க தினமும் ஊட்டுற ஒரு வாய் சாப்பாடில்லாம எப்படிப்பா சாப்பிடுவேன்” அவள் அழுகை விம்முலுடன் கூற,
“அது தானா உன் கவலை! அகிலனை ஊட்ட சொல்றேன்” என்று அதற்கும் மதுரன் சிரித்துக் கொண்டே கேலியாய் கூற,
“அப்பா.. நான் இல்லைனாலும் எனக்கு இங்கிருக்க உரிமை அப்படியே தான் இருக்கனும் சொல்லிட்டேன். உங்களை கட்டி பிடிச்சு கொஞ்சலாம் எனக்கு தான் உரிமை இருக்கு” என அழுகையினூடே கூறியவள்,
“இனி எனக்கு மனசு சங்கடமா இருந்தா யாருகிட்ட போய் சொல்லி மடி சாஞ்சிக்குவேன்”
மாணிக்கத்திற்கும் துக்கம் தொண்டையை அடைக்க,
“அதுக்கு தானே உனக்கு ஒரு அடிமையை கட்டி வைக்கிறோம். அவன் உன் சொல் பேச்சு கேட்காம உனக்கு ஒத்துவராத மாதிரி எதுவும் செஞ்சா சொல்லு… அவனை ஒரு வழி பண்ணிடுறேன்” மதுரன் உரைக்கவும் அனைவரும் சிரித்தனர்.
மதுரனை வந்து அணைத்து கொண்டவள்,
“உன்ன மாதிரி ஒரு அண்ணா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்ணா. என்னிக்குமே இதே அன்போட என்கிட்ட இருப்பியாணா? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு என்னைய மறந்துட மாட்டியே” அவளின் கேள்வியில் இத்தனை நேரம் கிண்டல் செய்தவனின் மனமுமே கசிந்துருக,
“நீ என் பாப்பாடா! நான் எப்படி உன்னை மறப்பேன்” அவளை அணைத்து தொண்டை கமற உரைத்தவன்,
“இது உன் வீடு! நாங்க உன் மேல வச்சிருக்க அன்பு உரிமை எல்லாம் எப்பவும் மாறாது! தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காம கல்யாண பொண்ணா கல்யாண கனவோட ஹேப்பியா கிளம்பிவியாம்” என அவளின் கன்னம் கிள்ளி உரைத்து மண்டபத்திற்கு அழைத்து சென்றான்.
மாணிக்கத்தை மலர் தேற்றி கொண்டு மண்டபத்திற்கு அழைத்து சென்றார்.
அன்றைய இரவு வெகு விமர்சையாய் வரவேற்பு முடிந்ததும், மணமகள் அறையில் அமர்ந்திருந்தனர் மாணிக்கத்தின் குடும்பத்தினர். இன்பமாய் சிரித்து பேசி கொண்டிருந்தனர் அனைவரும்.
அச்சமயம் எவரோ உள் நுழையும் ஓசை கேட்டு அனைவரும் திரும்பி பார்க்க, “மாமா, அத்தை, குட்டிபொண்ணு, மதுப்பையா! எல்லாரும் எப்படி இருக்கீங்க?” உற்சாகமாய் குரல் கொடுத்து கொண்டே வந்தமர்ந்தான் அர்ஜுன்.
“அஜு அண்ணா எப்படி இருக்கீங்க? அண்ணி பாப்பாலாம் வரலையா?” என அவனுக்கு ஏத்த அதே உற்சாக மிகுதியில் கேட்டாள் ஆதினி.
வரவேற்பிற்காக அணிந்திருந்த ஆடையும் கல்யாண களையும், ஆதினியின் முகத்தை வெகு பொலிவாய் காண்பிக்க, “குட்டி பொண்ணு ரொம்ப அழகா இருக்கமா” என ஆதினிக்கு சுத்தி போட்ட அர்ஜுன், “பசங்களுக்கு பரீட்சை இருந்தனால கூட்டிட்டு வர முடியலைமா” என்றான்.
“ஏண்ணா கூட்டிட்டு வரலை! எல்லாரும் வரனும்னு உன்னை கேட்டு தானே இந்த தேதியை முடிவு செஞ்சோம்” அவர்கள் வராததில் இவள் குறைப்பட்டு உரைக்க,
“எனக்காக நீங்க தேதி மாத்த வேண்டாமேனு தான் நான் இதுவே இருக்கட்டும்னு சொன்னேன்” அர்ஜூன் கூற,
“ஏன் அர்ஜுன், எங்களுக்கு சொந்தம்னு இருக்கறது நீ தானேடா! நீயே இப்படி பண்ணலாமா? இல்ல நீ எங்களை சொந்தமா நினைக்கலையா?” மலர் கோபமாய் கேட்க,
“என்ன அத்தை இப்படி பேசுறீங்க? அப்படிலாம் இல்ல அத்தை” அவன் கூற,
“என்கிட்ட பேசாத நீ?” என மலர் முகத்தை தூக்கி வைத்து கொள்ள,
“மாமா.. சொல்லுங்க மாமா” பாவமாய் மாணிக்கத்தை பார்த்து தனக்கு உதவுமாறு அழைக்க,
“எனக்கு ஒன்னும் தெரியாது! நீயாச்சு உன் அத்தையாச்சு” என்பது போல் தோளை உலுக்கி கொண்டு அவர் நிற்க,
திரும்பி மதுரனை அர்ஜுன் பார்க்க, “அண்ணாவை மன்னிச்சிடலாம்மா! அவரோட பொண்ணு கல்யாணத்துக்கு இப்படி ஒத்தையா போய் நின்னு பழி வாங்கிடலாம்” அர்ஜுன் கூறவும்,
அவனின் சொல்லில் “அடேய்” என பதறிய அர்ஜுன், “இது தான் நீ ஹெல்ப் பண்ற லட்சணமாடா” என அவனின் தலையில் குட்டியவர்,
“எனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சி வச்சதே நீங்களும் மாமாவும் தானே அத்த! என் பிள்ளைகளுக்கு என் சைட்ல சொந்தம்னு இருக்கிறது நீங்க தானே! நீங்க இல்லாம என் பிள்ளைங்க கல்யாணம் கண்டிப்பா நடக்காது” காலம் நேரம் பாராது அர்ஜுன் வார்த்தையை விட, “அப்ப நாங்க மட்டும் எப்படி நீ இல்லாம உன் குடும்பம் இல்லாம கல்யாணம் செய்வோம்னு நினைச்ச?” என மீண்டும் கோபமாய் மலர் கூற,
“இல்ல அத்த! நம்ம பாப்பாக்கு ரொம்ப நாள் கழிச்சு ஒரு வரன் அமைஞ்சிருக்கு! என்னால இந்த கல்யாணம் டிலே ஆக வேண்டாமேனு நினைச்சேன்! மன்னிச்சிருங்க அத்த” மலரின் கரம் பற்றி கண்களை சுருக்கி வேண்டுதலாய் அவன் கூற,
“உன்னோட ஆசிர்வாதம் என் பொண்ணுக்கு கிடைச்சா, அது ஆயாவே வந்து ஆசிர்வதிச்சதுக்கு சமம் அர்ஜுன். ஆயா எனக்கு அம்மாவா தான் இருந்தாங்க! உன்னை வேற ஆளா நாங்க என்னிக்குமே பார்த்ததே இல்ல” மலர் உரைக்கவும்,
“உங்க மனசு எனக்கு தெரியாத அத்த” எனக் கூறியவன், “நான் முதல்ல மாப்பிள்ளைய பார்க்கனும்! என் குட்டி பொண்ண கட்டிக்க போறவன் எப்படி இருக்கானு பார்க்கனும்” எனக் கேட்க,
மாணிக்கமும் மதுரனும் அவனை அகிலனிடம் அழைத்து சென்றனர்.
அர்ஜுனை ஆயாவின் பேரன் என அறிமுகம செய்து வைத்து அவனை பற்றிய விவரங்களை உரைத்தார் மாணிக்கம்.
“அர்ஜுன் பெங்களூர்ல ஃபேமிலியோட இருக்கான்! கல்யாணத்துக்கு பிறகு பெங்களூர்ல வேலை மாத்தலாகவும் அங்க செட்டில் ஆகிட்டான்” என மாணிக்கம் கூறவும் அனைவரும் ஒன்றாய் சில மணி நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு கிளம்ப,
“நான் அகிகிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்” எனக் கூறி அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டார் மாணிக்கம்.
“என்ன மாமா பேசனும் சொல்லுங்க” என்றான் அகிலன்.
அந்த மண்டபத்தின் மொட்டை மாடியில் இருவரும் நின்றிருக்க, அங்கு வீசிய சில்லென்ற காற்றை சுகித்துக் கொண்டே பேசவாரம்பித்தார் அவர்.
“கண்ணம்மா ரொம்ப அமைதியான பயந்த சுபாவமுள்ள பொண்ணு! மனசுல உள்ளதை வெளிப்படையா பேச மாட்டா! அவளோட முகத்தை பார்த்தே நாங்க கண்டுபிடிச்சு கேட்டா தான் சொல்லுவா! அவளால யாருக்கும் கஷ்டம் வரக் கூடாதுனு எதுவும் வெளிய சொல்லிக்கவே மாட்டா! அவளை நாங்க இது வரைக்கும் அதட்டி கூட பேசினது இல்ல. எல்லாத்தையுமே எப்பவுமே சரியா செஞ்சிடுவா! அப்படி எதுவும் தவறா செஞ்சாலும் எடுத்து சொன்னா புரிஞ்சிக்கிட்டு திருத்திப்பா! நாங்கனு இல்ல அவ படிச்ச ஸ்கூல்ல இருந்து இப்ப வேலை பார்க்கிற இடம் வரை எல்லாமே அவளுக்கேத்த மாதிரி அன்பா பண்பா பேசி சொல்லி கொடுக்கிறவங்களும், வேலை வாங்குறவங்களும் தான் அவளுக்கு அமைஞ்சாங்க!” கூறிக் கொண்டே அகிலன் முகம் அவர் பார்க்க,
“அவளை யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கனும்! முக்கியமா என் அம்மா எதுவும் அவளை ஹர்ட் செய்யாம நான் பார்த்துக்கனும் அதை தானே இப்படி சுத்தி வளைச்சு சொல்ல வரீங்க” மென்மையாய் சிரித்துக் கொண்டே மாணிக்கத்தை பார்த்து அகிலன் கேட்க,
அன்பின் பரிதவிப்பை கண்களில் தேக்கி அவனின் கரம் பற்றி நோக்கியவர்,
“அவ மனம் நொந்து அழுதா எங்க மனசு தாங்காதுடா அகி! ரொம்பவே பாசமா வளர்த்துட்டோம்! அதான் எல்லாரும் ரொம்ப பயப்படுறோம்! அவளுக்கு எங்களோட இந்த பயம் பத்திலாம் தெரியாது! நீ அவளை நல்லா பார்த்துப்பனு ரொம்ப நம்பிக்கையோட தான் இருக்கா” என அவர் பேசிக் கொண்டே போக,
அவரை பார்த்து சிரித்தவன், “பொண்ணு வீட்டுக்காரங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாள் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணி தான் கேள்விபட்டிருக்கேன் மாமா ஆனா மாப்பிள்ளைக்கு அட்வைஸ் செய்றவங்களை இப்ப தான் பார்க்கிறேன்!” என கேலியாய் உரைத்தவன்,
“என்கிட்ட எந்தவித தயக்கமில்லாம நீங்க இப்படி பேசுறதே மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு மாமா! கவலைப்படாதீங்க! அவ என் பொண்டாட்டி! அவளை நல்லா பார்த்துக்க வேண்டியது புருஷனா என்னுடைய கடமை! அதை நான் கண்டிப்பா தவறாம செய்வேன்”
தவறாமல் செய்வேன் என்றவனை தவறு செய்ய வைத்தது விதியின் செயலோ?
அவனின் இந்த பேச்சில் தான் மாணிக்கத்திற்கு மனம் தெளிந்தது.
அவனிடம் விடைபெற்று அவர் செல்ல, அங்கு ஆதினியோ உறக்கம் வராமல் உருண்டு புரண்டு படுத்திருந்தாள்.
“என்னடா கண்ணம்மா! தூக்கம் வரலையா?” என கேட்டு கொண்டே மாணிக்கம் அவளருகில் வந்தமர, மாணிக்கத்தின் சத்தத்தில் விழித்த மலர் எழுந்தமர, தனது தலையை தந்தையின் மடியில் வைத்து படுத்தாள் ஆதினி.
“ரொம்ப பயமா இருக்குப்பா!” மடியிலிருந்து தலையை அவர் முகம் நோக்கி திருப்பி அவள் கூற,
குனிந்து அவள் நெற்றியில் ஆதுரமாய் முத்தமிட்டவர், “எதுக்குடா பயம்! நீ புதுசா ஆபிஸ்க்கு போனப்ப உனக்கு அங்க யாரையுமே தெரியாது தானே! அங்க இருக்க வேலையும் தெரியாது தானே! ஆனா கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு அங்க இருக்க ஆளுங்களையும் பழக்கமாக்கிட்டுனு இருக்க பழக்கிட்டல! ஆனா இங்க உனக்காக அகிலன் அவனோட அம்மா அப்பானு எல்லாரும் இருக்காங்க! எல்லாருக்கும் உன்னைய நல்லாவே தெரியும்! இந்த கவலை உனக்கு தேவையில்லடா!” அவளுக்கு கூறுவது போல் மலருக்கும் சேர்த்தே உரைத்தார் மாணிக்கம்.
மணப்பெண்ணிற்குரிய அச்சமும் பூரிப்பும் ஒரு சேர ஆட்டுவித்தது ஆதினியை. முழுமையாய் இந்த இன்பத்தை அனுபவிக்க இயலாதவாறு ஏதோ ஓர் அச்சம் அவளின் மனதை சூழ்ந்திருந்தது.
மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் ஆதினி பச்சை வண்ண பட்டுடுத்தி அகிலனினருகில் அமர, அவள் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான் அகிலன்.
அனைத்து சாங்கிய சம்பிரதாயங்கள் முடிந்த பின் காலை உணவை உண்டுவிட்டு ஆதினியை தங்களது இல்லத்திற்கு அழைத்து சென்றனர் அகிலன் வீட்டினர்.
நாத்தனாராய் அல்லாது ஆதினியின் தோழியாய் உடனிருந்தாள் மீனாள்.
அகிலனின் இல்லத்தில் மாப்பிள்ளை பெண்ணிற்கு பால் பழம் வழங்கியவர்கள் திருமணத்தை பதிவு செய்யவென அழைத்து சென்றனர்.
அனைத்தும் முடிந்து அவர்கள் சற்று ஓய்வாய் அமரும் போது மாலை ஆறு மணியை கடந்திருந்தது.
அன்றைய இவர்களுக்கான இரவிற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, அகிலனின் அன்னையும் தந்தையும் ஆதினியின் வீட்டிலிருந்து வந்த சீர் சாமான்களை ஒதுங்க வைக்கும் வேலையில் படு பிசியாய் ஈடுபட்டிருந்தனர்.
அன்றிரவு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து வெகு மகிழ்வாய் கிண்டல் கேலியுமாய் பேசி சிரித்து உணவு உண்டிருந்தனர்.
ஆனால் ஆதினியை கண்ட அகிலனுக்கு அவள் ஏதோ சஞ்சலத்தில் இருப்பதாய் தோன்றியது.
அவளருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தவனோ என்னவென்று அவளின் காதில் கேட்க, ஒன்றுமில்லையென தலை அசைத்து குனிந்து கொண்டாள். வெட்கத்தில் தலை குனிகிறாளென எண்ணியவன் சிரித்துக் கொண்டான்.
அன்றைய அவர்களுக்கான இரவில் அவர்களினறையில் ஆதினி வெகு பதட்டமாய் அமர்ந்திருக்க, அவளருகில் அமர்ந்து அவளின் பதட்டத்தை ரசித்திருந்தான் அகிலன்.
இந்த இரவின் தேடலை எண்ணி அவள் பதட்டம் கொள்கிறாளென நினைத்து அவளின் முக பாவங்களை ரசித்து சிரித்திருத்தான்.
“ஏன் இந்த பதட்டம்! நீ ரிலாக்ஸ்டா ஃப்ரீயா இரு முதல்ல” அவளை தன்னை நோக்கி திருப்பி கூறியவன் அவளின் கரம் பற்ற, பயத்தில் வியர்வையில் குளித்து பிசுபிசுத்திருந்தது அவளது உள்ளங்கை.
“இப்படியாடா பயப்படுவ” அவளை இயல்பாக்கும் பொருட்டு ஆதூரமாய் அவன் தழுவி கொள்ள, அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
“ஏன் எதுக்கு உனக்கு இந்த பயம்? அதை முதல்ல சொல்லு” அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை நோக்கி அவன் கேட்க,
எச்சில் கூட்டி விழுங்கியவள், “இதை எப்படி கூறுவது?” என மனதிற்குள் எண்ணியது அவளின் முக உணர்வுகளாய் வெளிப்பட,
“என்னடா கண்ணுமா! என்னாச்சு? நான் உன்னை ரேப் பண்ணிடுவேன்னு நினைச்சு பயந்துட்டியா?” அவளை இயல்பாக்கும் பொருட்டு இவ்வாறாய் கேட்டு அவன் சிரிக்க,
இல்லையென தலை அசைத்தவள், “எனக்கு.. அது வந்து.. எனக்கு” என வார்த்தை தந்தியடிக்க,
“நீங்க இன்னிக்கு ரொம்ப ஆசையா இருந்திருப்பீங்க… ஆனா எனக்கு” தயங்கி தயங்கி கூற வந்ததை சொல்ல முடியாமல் கண்கள் கலங்க அவனை அவள் நோக்க,
“என்னடா கண்ணுமா! என்கிட்ட என்ன பயம் உனக்கு! இன்னிக்கு இதெல்லாம் நடக்க வேண்டாம்னு நீ நினைச்சீனா இன்னிக்கு எதுவும் வேண்டாம் சரியா!” அவளை தேற்றும் பொருட்டு அவன் கூற,
“எனக்கு பீரியட்ஸ் ஆகுற மாதிரி இருக்குப்பா! வயிறு ஒரு மாதிரி வலிக்குதுப்பா” அழுகையினூடே கூறி அவன் தோளில் சாய்ந்து கதற,
முதலில் அவள் கூறியது புரியாது விழித்தவன், புரிந்த பின் சற்று அதிர்ந்து திகைத்து பின் இயல்பாகி, அவளை அணைத்து தலையை கோத,
“நீங்க எவ்ளோ ஆசையோட இருந்திருப்பீங்க! ரொம்ப டிஸ்அப்பாய்ண்ட் பண்ணிட்டேன் தானே! சாரிப்பா” என அழுகையினுடன் கூடிய விம்மலுடனே அவள் கூற,
“உன் உடல்நிலை விட இதை தான் நான் முக்கியம் நினைச்சு உன் மேல கோபப்படுவேனு நினைச்சியா! அப்படி கோபப்பட்டா நான் மனுஷனே இல்ல, அரக்கன்” தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் சற்று கோபமாய் உரைத்தவன்,
“எனக்கும் அம்மா தங்கச்சிலாம் இருக்காங்க. இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க படுற கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும்! நீ எதுவும் நினைச்சு கஷ்டபடாம நிம்மதியா தூங்குடா” அவளின் நெற்றியில் இதழ் பதித்து உரைத்தான்.
அவளை படுக்க வைத்து அருகில் அவன் படுத்திருக்க, அவனின் முகத்தையே ஏக்கமாய் அவள் பார்த்திருக்க, அவளின் தேவையை புரிந்து கொண்டவனோ சற்றாய் எழுந்து சாய்ந்தமர்ந்து இரு கரம் நீட்டி கண் சிமிட்டி அவளை அருகிலழைக்க, அவனின் கைவளைக்குள் தன்னை புகுத்து கொண்டாள் ஆதினி.
அவனின் மார்பில் தலை வைத்து இடையை கட்டி கொண்டு அவள் படுத்திருக்க, அவளின் தலையையும் முதுகையும் வருடி கொண்டிருந்தான் அவன்.
“எனக்கு பீரியட்ஸ் இர்ரெகுலர் ஆகும்ப்பா. இப்ப கூட ஒரு மாதிரி அன்னீசியா தான் இருக்கே தவிர பீரியட்ஸ் ஆகிட்டுனுலாம் இல்ல!”
நான் சொல்றது உங்களுக்கு புரியுதா என்பது போல் நிமிர்ந்து அவனை அவள் பார்க்க,
“ஹ்ம்ம் புரியுதுடா” என்றான்.
“நாளைக்கு நான் நார்மல் ஆகிட்டேன்னு சொன்னா, உங்களை நான் ஒதுக்கி வைக்க இன்னிக்கு இப்படி பொய் சொல்லிட்டதா நீங்க நினைக்க கூடாது” பரிதவித்த பார்வையுடன் அவனை நோக்கி அவள் கேட்டிருக்க,
“இல்லடா அப்படிலாம் நினைக்க மாட்டேன்! என் கண்ணுமாவ பத்தி எனக்கு தெரியாதா? அவ பொய் சொல்ல மாட்டா! பயந்தா கூட உண்மைய தான் பேசுவா” அவள் உச்சியில் இதழ் பதித்து அவன் கூற,
அவன் கூறியதில் ஏற்பட்ட ஆனந்தத்தில் அவன் கன்னத்தை தன் இதழால் தீண்டியிருந்தாள்.
இன்னமும் அவளின் கண்களில் நீர் திரண்டு கண்களுக்குள்ளேயே நின்றிருக்க, அவளிமைகளில் அவன் அழுத்தமாய் முத்தமிட, திரண்டிருந்த நீர் கரை கடந்து அவளது கன்னத்தை நனைக்க, அதை அவன் தன் இதழால் ஒற்றியெடுக்க உப்பு நீரின் உவர்ப்பை உணர்ந்தான் இம்முத்தத்தில்.
மனம் நிறைந்து ததும்ப அவனின் மார்பிலேயே பல முத்தங்களையிட்டு துயிலுற்றாள் ஆதினி.
உறங்கியவளை தனதருகே படுக்க வைத்து, அவளின் இடையை அணைத்து படுத்திருந்தவனுக்கோ வெகு நாளைய காத்திருப்பின் பொக்கிஷம் தனது கைகளில் தவழும் சந்தோஷம் நெஞ்சை நிறைத்தது. சுகமான நித்திரை அவனை ஆட்கொண்டது.
— தொடரும்