முள்ளில் பூத்த மலரே – 20

முள்ளில் பூத்த மலரே 20

“கிளம்பிட்டியா ஆது” வீட்டின் முகப்பறையில் அமர்ந்து ஆதுவினறை நோக்கி குரல் கொடுத்தான் மதுரன்.

“இதோ வந்துட்டேன்” எனக் கூறி லெகின்ஸ் டாப் அணிந்து, நீள முடியை பின்னலிட்டு வந்திருந்தாள் ஆதினி.

தாய் தந்தையரிடம் போய் வருவதாய் கூறி சென்றனர் இருவரும்.

மதுரனின் யமாஹா இரு சக்கர வாகனத்தில் ஏறிய ஆது, “டேய் அண்ணா வேற வண்டி வாங்க கூடாது! உன் வண்டில பின்னாடி உட்காரவே பயமா இருக்கு! நீ சடன் ப்ரேக் போட்டா நான் சடன்னா தூக்கி போட படுவேன்.  எவன் தான் இந்த வண்டியோட பின் சீட்டை டிசைன் செஞ்சானோ! அப்பா புல்லட் இருக்கே…  அது வண்டி..  பின்னாடி உட்கார அவ்ளோ கம்ஃப்ர்ட்டபிளா இருக்கும்” வண்டியிலேறும் நேரமெல்லாம் கூறும் அதே வசனத்தை ஒரு எழுத்து மாறாது அப்படியே அவள் கூறவும் வாய் விட்டு  சிரித்தான் மதுரன்.

“சரி எங்க போய்ட்டு இருக்கோம்னு சொல்லு?” ஆதினி கேட்க,

“இன்னும் கொஞ்ச நேரத்துல நீயே பார்க்க தானே போற” என்றவன்  அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஐஸ்க்ரீம் பார்லரில் வண்டியை நிறுத்தினான்.

இது அவர்கள் வழமையாய் செல்லும் ஐஸ்க்ரீம் பார்லர். 

“ஹய்யா! இங்க வர தான் இவ்ளோ பில்டப் கொடுத்தியா? நான் கூட ஐஸ்க்ரீம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சேனு யோசிச்சிட்டு இருந்தேன்.  நீயே கூட்டிட்டு வந்துட்ட மை ஸ்வீட் அண்ணா” வண்டியிலிருந்து இறங்கியவள் அவன் கன்னம் கிள்ளி கொஞ்சி கொண்டிருந்தாள்.

அக்கடையினுள் நுழைந்து இவர்கள் வழமையாய் அமரும் இருக்கையை அவள் பார்க்க,  அங்கே ஏற்கனவே ஒரு ஆடவன் அமர்ந்திருப்பதை கண்டவள், “அண்ணா! சீட் போச்சே” என மதுரனின் காதினுள் முனக,

“நமக்கு தெரிஞ்சவர் தான் அவரு” எனக் கூறி கொண்டே அங்கமர்ந்திருந்தவனின் முன்னே சென்று மதுரன் கை குலுக்க, 

அங்கு அமர்ந்திருந்த அகிலனை கண்டு திகைத்து விழித்தாள் ஆதினி.

அன்றைய நாளிற்கு பிறகு அகிலனிடம் இவள் பேசாது இருந்ததால், அவன் மேல் இவளுக்கு கோபமென தவறாய் புரிந்து கொண்ட அகிலன், தனது மனதின் சங்கடத்தை நண்பனான மதுரனிடம் பகிர,  அவன் தன் தாய் உரைத்ததை கூற, இருப்பினும் ஆதினியிடம் சில முக்கியமான விஷயங்கள் நிச்சயத்திற்கு முன் பேச வேண்டுமென எண்ணிய அகிலன் மதுரனிடம் கூற,  இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தான் மதுரன்.

“டேய் அண்ணா! அம்மாக்கு தெரிஞ்சிது அவ்ளோ தான்!  கிளம்பு நீ முதல்ல”  அகிலனிடம் தன் பார்வையையும் செலுத்தாது மதுரனின் காதில் கூறிக் கொண்டே அவன் கை பற்றி அவள் இழுக்க,

“என் அறிவாளி தங்கச்சி! அம்மாக்கு தெரியாம உன்னை கூட்டிட்டு வருவேனா? நான் கூட இருக்கேன்றனால தான் ஒத்துக்கிட்டாங்க”  மதுரன் விளக்கி கூறவும்,

சரியென தலை அசைத்து மதுரன் அருகில் அமர்ந்து கொண்டாள் ஆதினி.

அவளால் அகிலனின் முன்பு இயல்பாய் இருக்க முடியவில்லை.  அவனின் முகத்தை காணவும் நாணம் தடுக்க,  அவனிடம் பேசவும் வழியறியாது அமைதியாய் அமர்ந்திருக்க,  அகிலன் அவளை மட்டுமே கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருக்க, தனக்கு அழைப்பு வந்ததாய் கூறி கைபேசி எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டான் மதுரன்.

அவன் சென்றது இவளை இன்னும் பதட்டமடைய செய்ய, “என் கிட்ட என்ன பயம் கண்ணுமா” என்றான் அகிலன்.

சட்டென நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளின் கண்கள்,  இத்தனை நாட்களாய் அவனிடம் கூறாமல், கூற முடியாமல் மனதில் அவனுக்காக தேக்கி வைத்திருந்த நேசத்தை சொல்லாமல் சொல்ல, அதை கண்டு கொண்ட அகிலனின் கண்களோ அவனின் காதலை எடுத்தியம்பியது.

அவளை இயல்பாக்கும் பொருட்டு அலுவல் நிகழ்வுகளை பேசலானான்.

அவள் அலுவல் செய்திகளை வெகு ஆர்வமாய் கூறி கொண்டிருக்க, ஆனால்  அவனோ தன் காதினுள் ரீங்காரமிடும் இளையராஜா இசையுடன், அவளின் இதழசைவையும், பேசும் போது அவளின் முகம் காட்டும் பாவனைகளையும், அவள் கண்களின் அசைவுகளையும், பூரித்திருக்கும் கன்னங்களையுமென அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தான்.  அவள் கூறிய விஷயங்கள் எதுவும் அவன் காதில் விழவில்லை.
தன்னவள், தனக்கானவள், தனக்காய் இப்பூமியில் பிறப்பெடுத்தவள் என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற, பூரிப்பின் விளிம்பில் காதல் பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் ஏனோ ஓர் ஆவல் தோன்ற,  அவனது அலைபேசியிலிருந்து அவளுடைய எண்ணிற்கு அழைப்பு விடுக்க,  மேஜை மீது வைத்திருந்த அவளது கைபேசி, “கண்ணை காட்டு போதும் நிழலாக கூட வாரேன்” என்ற பாட்டை பாடி அழைப்பை தெரிவித்த நொடி, பதட்டமாய் பட்டென கைபேசியை கையினில் எடுத்து அதை ஒலியற்ற நிலைக்கு மாற்றினாள். ஆனால் அவள் கையினில் எடுத்த நேரத்திற்குள் அவனின் பெயரை என்னதாய் அவள் சேமித்து வைத்திருக்கிறாளென கண்டு கொண்டான் அவன்.

அவன் கண்டு கொண்டதில், “அய்யோ அவன் தன்னை என்ன நினைப்பானோ” என மனம் படபடக்க, முகத்தில் வெட்கம் பரவ தனது பார்வையை அவனது முகத்தினிலிருந்து திருப்பி கொண்டாள்.

ஆனால் அவனோ குழம்பிய நிலையில், அதென்ன SR எனக் கேட்டான்.

அவன் அவளது கைபேசிக்கு அழைத்த நொடி “SR” என்ற பெயரே கைபேசியில் ஒளிர்ந்தது.

அப்பொழுது தான், “அட ஆமால ஷார்ட் ஃபாரம்ல தானே அந்த பெயரை சேவ் செஞ்சிருக்கோம்” என நியாபகம் வந்த நொடி, “சே இவர் கூட இருந்தா மூளை வேலை செய்றத நிறுத்திடுதே” என தனக்கு தானே பேசிக் கொண்டவள்,

“அதெல்லாம் சொல்ல முடியாது.  நீங்களே கண்டுபிடிச்சிக்கோங்க” அவனை குழப்பி விட்ட குதூகலத்தில் சிரித்துக் கொண்டே உரைத்தாள்.

அவளின் கண்களோ முழுவதுமாய் அவனை தான் முழுங்குவதாய் பார்த்து கொண்டிருந்தது.

அவனை எண்ணும் நேரமெல்லாம், இப்பெயரை மனதோடு கூறி கொஞ்சிக் கொள்ளும் நிகழ்வுகளெல்லாம் அவள் நினைவலையில் ஊர்வலம் போக,  அவளையும் மீறி அவனை மட்டுமே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் ஆதினி.

அவனோ தனது பெயரை சுருக்கி பார்த்து, தமிழில் இருக்கின்ற செல்ல பெயரைலாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து என அந்த SRஐ கண்டுபிடிக்க முயற்சித்து இருக்க, 

அவன் செய்த அதே வேலையை இப்பொது அவள் செய்தாள்.  அவனின் கைபேசிக்கு இவள் அழைப்பு விடுத்தாள்.

“கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா” என்ற அழைப்பொலியுடன் அவனின் கைபேசி அதிர,  இப்போது அதிர்ந்து படபடத்து நாணங் கொள்வது அவனின் முறையாயிற்று.

அவனே தனது கைபேசியை எடுத்து அதில் மின்னிய பெயரை அவளிடம் காண்பிக்க, இல்லாள் என ஒளிர்ந்தது அங்கே.

அதை பார்த்தவளின் கண்களோ இன்பமாய் அதிர்ந்து விரிய, மனம் பூரிப்பில் நெகிழ, “என்ன நடந்தாலும் என்னைய தான் கல்யாணம் செஞ்சிப்பீங்கன்றதுல முடிவா இருக்கீங்களா அகிலன்” எனக் கேட்டாள்.

அவள் கேள்வியில் அதிர்ந்தவன், “என்ன கண்ணுமா இப்படி கேட்டுட்ட? சும்மா டைம் பாஸுக்கு உன்கிட்ட பேசுற மாதிரியா தோணுது உனக்கு” சற்று கோபமாய் கேட்க,

“அய்யோ அப்படி இல்லங்க.  நான் கேட்க வந்த அர்த்தம் வேற”  தவறாய் புரிந்துக் கொண்டானே என்ற பதைபதைப்புடன் கூறியவள்,

“மனசுல ஆசையை வளர்த்த பிறகு இது நடக்காம போய்ட்டா கஷ்டமாயிடுமேனு தான் அம்மா உங்ககிட்ட பேச கூடாதுனு சொல்லியிருந்தாங்க. ஆனாலும்” என்றவள் மனம் படபடக்க சற்று நிறுத்த,

“ஆனாலும்?” சுவாரசியமாய் அவள் முகத்தை பார்ததுக் கொண்டே அவன் கேட்க,

மேஜையில் கை வைத்திருந்தவள் தனது கையை நோக்கி கொண்டே, “ஆனாலும் என்னைய மீறி உங்ககிட்ட ஓடி போகும் மனசை கட்டுபடுத்த முடியலை.  எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கு.  இது காதலானுலாம் தெரியலை.  ஆனா உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.  எனக்காக நீங்க செய்ற குட்டி குட்டி விஷயத்தையும் மனசு ரொம்ப ரசிக்குது” என உரைத்தவள் சற்றாய் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்து,

“என்னை விட்டுட்டு போய்ட மாட்டீங்கல?  நம்ம கல்யாணத்துல எந்த பிரச்சனை வந்தாலும் எனக்காக நின்னு போராடுவீங்களா? நீங்க இல்லமா வாழ முடியாதுனுலாம் இல்ல.  ஆனா நீங்க வேணும்.  என் வாழ்க்கை முழுதும் வேணும்னு மனசு சொல்லுது” என்றவள் கூறிய நொடி,

இத்தனை நேரமாய் அவள் கூறிய சொற்களில் சந்தோஷத்தின் விளிம்பில் இருந்தவன், அவள் கடைசியாய் “நீங்க வேணும்” எனக் கூறியதை கேட்ட நொடி, “ஐ ப்ராமிஸ் யூ கண்ணுமா! இந்த ஜென்மத்துல என்னோட மனைவினா அது நீ மட்டும் தான்” என்றான். 

“என் அப்பா மாதிரி என்னைய அன்பா கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பீங்களா? என் அண்ணா மாதிரி என்கிட்ட பாசமா விட்டு கொடுத்து போவீங்களா?”  தனது ஆசைகளையெல்லாம் கேள்வியாய் அவள் கேட்டு கொண்டிருக்க,

“அந்தளவுக்கு நான் இருப்பேனானு எனக்கு தெரியலை.  ஆனா நமக்குள்ள சண்டை வந்தா மன்னிப்பு கேட்குற முதல் ஆளு நானா தான் இருப்பேன். என்னிக்குமே நமக்குள்ள ஈகோ வராம பார்த்துப்பேன். உன் மனசு கஷ்டபடாம பார்த்துப்பேன். இது எல்லாத்துக்கும் மேல”  என உரைத்து அவளின் கைகளை பற்றியவன்,

“என் ஆயுசு முழுக்க உன்னை காதலிச்சிட்டே இருப்பேன்” அவளின் விழி நோக்கி உரைத்தான்.

அவன் கூறியவற்றில் பரசவத்தின் உச்சத்தில் இருந்தாலும் அவன் மீது பார்வை பதித்துக் கொண்டே அவனது கரத்திலிருந்து தனது கைகளை உருவி கொண்டாள்.

சுற்றம் மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் இமை சிமிட்டாது விழிகளுக்குள் விழுங்கி கொண்டு அமைதியாய் அந்நொடியினை சுகித்திருந்தனர்.

“என்னடா அகி பேச வேண்டியதுலாம் பேசியாச்சா” என கேட்டு கொண்டே வந்தமர்ந்தான் மதுரன்.

ஆமா இல்லையென அவன் இருபுறமும் தலையாட்ட, “அடேய் ஒரு பக்கமா தலையாட்டுடா” என கூறவும்,

“சரி ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணுடா.  அப்படியே பேசிட்டே சாப்பிடுடுவோம்” என்று அகிலன் கூறவும்,

“அடப்பாவிங்களா! இன்னும் ஆர்டர் கூட கொடுக்காம என்னடா பண்ணீங்க”  என இருவரையும் முறைத்தவன்,

அங்கிருந்த வேலையாளை அழைத்து, “அண்ணா எப்பவும் கொடுக்கிறேதே கொடுங்கண்ணா” என்றான்.

“நீங்க எப்பவும் வர்ற இடமா இது!” அகிலன் கேட்க,

“ஆமாடா! இங்க கொடுக்கிற இளநீர் ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் ஆதுவுக்கு ரொம்ப பிடிக்கும்.  அதுமட்டுமில்லாம இங்கே எல்லா மில்க் ஷேக் அண்ட் ஐஸ்க்ரீம் செம்ம டேஸ்ட்டா இருக்கும்! அதனால நானும் ஆதுவும் அடிக்கடி வருவோம்” என்றான் மதுரன்.

ஆதினியை பார்த்த அகிலன், “என் ஃபேமிலியை பத்தி உன்கிட்ட சொல்லனும் க… ஆதுமா” கண்ணுமா என கூற வந்து மதுரன் இருப்பதால் ஆதுமா என்றான்.

“ஹ்ம்ம் சொல்லுங்க” என்றவள் கூறவும்,

“எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ்” என்றான்.

“ஓ சூப்பர்.  அப்ப ஆதர்ச தம்பதிகளாய் வாழ்ந்துட்டு இருப்பாங்கல” வெகு ஆர்வமாய் ஆசையாய் ஆதினி கேட்க,

மதுரனை ஒரு பார்வை பார்த்த அகிலன், எடுத்ததும் தனது தாய் தந்தையரை குறை கூற விரும்பாதவனாய், “அவங்க வீட்டுக்கு தெரியாம ஓடி வந்து கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க”  என்றான்.

இச்செய்தி அவளுக்கு உவப்பானதாய் இல்லாமல் போக, “ஓ அப்படியா?” குரல் சுருங்கி போய்  உரைத்தாள் அவள்.

“அம்மா வீடு பெரிய பணக்கார குடும்பம்.  அம்மாக்கு இரண்டு அண்ணன்ங்க இருக்காங்க. அப்பா விவசாயியா இருந்தாங்களாம்.  ஒரு தம்பி இருக்காரு. இரண்டு வீட்டுலயும் ஒத்துக்கலை.  அம்மா அப்பாவை தான் கட்டிப்பேனு அடம்பிடிக்க அப்பாவை கொலை பண்ண முயற்சி செஞ்சிருக்காங்க அம்மாவோட அண்ணன்ங்க”

“அய்யோ யூ மீன் கௌரவ கொலை” ஆதினி கேட்க,

“அது அம்மாவை கொன்னா தானே கௌரவ கொலை?  அப்பாவை கொல்ல முயற்சி செஞ்சா எப்படி அது கௌரவ கொலை ஆகும்” என அகிலன் அதுக்கு விளக்கமளித்ததை பார்த்து பல்லை கடித்த மதுரன்,

“அடேய்களா! எப்படி பார்த்தாலும் அது ஒரு கொலை முயற்சி.  அதுக்கு ஷாக்காகாம அது கௌரவ கொலையா, சாதாரண கொலையா, ஆணவ கொலையானு ஆராய்ச்சி பண்றீங்க பார்த்தீங்க! நல்ல செட்டு சேர்ந்தீங்கடா” எனத் தலையில் அடித்துக் கொண்டான்.

அவனை பார்த்து இருவரும் சிரித்திருந்தனர்.

“அப்புறம் என்னாச்சு?” ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டே ஆதினி கேட்க,

“அப்பாவை உயிரோட காப்பாத்த ஊரைவிட்டு அப்பா கூடவே வந்துட்டாங்க அம்மா! சோ எங்களுக்கு சொந்தகாரங்கனு யாரும் கிடையாது.  இருந்தும் இல்லைனு சொல்லலாம்” இது தான் அப்பா அம்மா எனக்கு சொன்ன கதை  என அகிலன் கூறி முடிக்கவும்,

“உங்கம்மா கிட்ட சொன்னியா? உன் தங்கச்சிக்கு வந்த மேரேஜ் ப்ரோபோசல்லாம்  கெடுத்து விட்டது அவங்க அண்ணன்களும் அவங்க குடும்பமும் தான்னு” எனக் கேட்டான்.

இல்லையென அகிலன் தலையாட்ட, “என்னணா சொல்ற?”  எனக் கேட்டாள் ஆதினி.

“உன்னை கல்யாணம் செஞ்சிக்கனும்னு அகிலன் விருப்பப்படுறாருனு தெரிஞ்சதுமே அகிலனை பத்தி முழுசா விசாரிச்சிட்டோமா! அகிலனுக்கு தெரியாத பல குடும்ப ரகசியங்கள், அவங்களுக்கு இருக்க எதிரிகள்னு எல்லாம் எங்களுக்கு தெரிய வந்துச்சு” என்ற மதுரன்,

“அகி தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தப்போ, அந்த மாப்பிள்ளை வீட்டு காரங்கலாம் ஊர்ல இவங்களை பத்தி விசாரிச்சதுல, இவங்களை பத்தி தப்பா சொல்லி, வந்த மாப்பிள்ளை எல்லாத்தையும் தட்டி விட்டிருக்காங்க இவங்க அம்மாவோட அண்ணன் குடும்பத்தாளுங்க”  என்றான்.

“அம்மா இன்னும் அவங்க அண்ணன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க.  அதனால தான் சொல்ல மனசு வராம இருக்கேன். இனி ஒன்னும் இவங்க போய் அவங்க அண்ணன்கள பார்க்க போறது கிடையாது.  எதுக்கு தேவையில்லாம பிரச்சனை கிளப்பிக்கிட்டுனு விட்டுட்டேன்”  என்றான் அகிலன்.

மதுரனிடம் இதை பற்றி பின்பு விவரமாய் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டாள் ஆதினி.

வீட்டிற்கு வந்த அகிலன் தனது தாய் தந்தையரை அமர வைத்து ஆதினியின் குடும்பத்தை பற்றி கூறினான்.

“அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்காதுன்றனால தான் அந்த வீட்டுல அந்தஸ்துனுலாம் பார்க்காம உனக்கு கட்டிக் கொடுக்க ஒத்துக்கிட்டாங்களா?” என்றார் சத்யா.

“ம்மாஆஆ” என பல்லை கடித்தான் அகிலன்.

“என்ன பேச்சு இது சத்யா?” எனக் கண்டித்தார் தர்மன்.

“உன் பையன் தான் தவமா கிடந்து, அந்த பொண்ணை தான் கட்டிப்பேனு அந்த பொண்ணோட அப்பாகிட்ட பேசி ஒத்துக்க வச்சான்.  அவங்க நினைச்சா நம்மளை விட வசதியான ஆடம்பரமான இடத்துல அவங்க பொண்ணை கட்டிக் கொடுக்கலாம். ஆனா அவங்க குணத்தை தான் பார்க்கிறாங்க பணத்தை பார்க்கலை” தர்மன் கூறவும்,

“என்னடா இப்பவே அப்பாவும் பிள்ளையும் அந்த குடும்பத்துக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றீங்க!  அந்த பொண்ணு வந்ததும் என்னைய கண்டுக்காம விட்டுடுவீங்க போலயே” எனக் கேட்டு கொண்டே தனது வேலையை பார்க்க சத்யா சென்று விட,
தந்தை மகன் இருவரும் தலையிலடித்து கொண்டு ஒருவர் மற்றவரை பார்த்து கொண்டனர்.

“எப்படிபா இந்த அம்மாவை சமாளிக்கிறீங்க?” வாய்விட்டே புலம்பினான் அகிலன்.

இது தான் சத்யாவின் சுபாவம். மனதிலுள்ளதை படபடவென பேசிவிடுவார். எதிரிலுள்ளோர் காயப்படுவார்களே என்றெல்லாம் எண்ணவே மாட்டார். அப்படி அவர்கள் காயப்பட்டதாய் தெரிந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டார். அதனாலேயே தர்மன் அவரை எங்கும் அழைத்து செல்ல மாட்டார்.

எவ்வாறு ஆதினி தனது தாயை சமாளிக்க போகிறாளோ என எண்ணும் போதே பயம் ஆட்கொண்டது அவனுக்கு.

கடவுள் தான் வழி காண்பிக்க வேண்டும் என மனதினுள் வேண்டிக் கொண்டான்.

அதன் பின்பு வந்த நாட்களில் பெண் பார்க்கும் படலம் இனிதாய் நிகழ்ந்தேற,  நிச்சய நாளில் தேதியை முடிவு செய்து கொள்ளலாம் என கூறி சென்றனர்.

புதிய வீட்டு வேலை மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என உரைத்த அகிலன், திருமணத்திற்கு பின் சொந்த இல்லத்தில் தான் ஆதினி குடியிருப்பாள் என்பதில் உறுதியாய் இருப்பதாய் உரைத்து நான்காவது மாதத்தில் திருமணம் வைத்து கொள்ளலாம் என கூறினான்.

புதுப்பிக்கபட்ட மாணிக்க மலர் பவன இல்லத்திலேயே நிச்சயம் வைத்து கொள்ளலாமென முடிவு செய்யப்பட்டது. திருமணத்தை சென்னையிலேயே மண்டபத்தில் நிகழ்த்தலாமென முடிவு செய்தனர்.

அந்த குடியிருப்பில் இவர்களின் திருமண நிகழ்வே பெரிய கதையாய் பரவியது.  வாடகை இருப்பவனிடம் பேசவே கூடாதென அங்கிருந்தோர் கூறியிருக்க இவர்கள் வீட்டு பெண்ணையே மணமுடித்து வைக்கிறார்களேயென ஆச்சரியமாக சிலரும்,  காழ்ப்புணர்ச்சியுடன் சிலரும், பொறாமையுடன் சிலரும், இவர்களின் பெருந்தன்மையை போற்றி சிலரும் என அந்த  குடியிருப்பு முழுவதும் இதுவே முக்கிய செய்தியாய் பரவியது.

அன்று மாணிக்கத்திடம் அலைபேசியில் பேசி முடித்து அமர்ந்த தர்மனிடம் வந்து நின்ற அகிலன், “மாமா என்ன சொன்னாங்கப்பா?” எனக் கேட்டான்.

“அகிலன் சொன்ன மாசத்துலே நாலு முகூர்த்த தேதி இருக்கு, அதுல பொண்ணுக்கு தோதுவா இருக்க தேதியில கல்யாணம் வச்சிக்கலாம்னு நான் சொன்னேன்.  அதுக்கு அவங்க,  “பொண்ணுக்கு தோதுவாவும் பாக்கனும் அதே நேரம் எங்க பக்கம் ஒரு சொந்தகாரங்க வெளியூர்ல இருக்காங்க.  அவங்க இங்க வந்து கல்யாணத்துல கலந்துக்க கூடிய தேதியாவும் பார்க்கனும்.  அதனால நான் பேசிட்டு சொல்றேனு சொன்னாரு” மாணிக்கம் கூறியதை தர்மன் உரைக்க,

“அவங்களுக்கு சொந்தகாரங்க யாருமில்லைனு தானே மாணிக்கம் மாமா சொன்னாங்க. அது யாரு அவ்ளோ முக்கியமான ஆளு” என சிந்தித்திருந்தான் அகிலன்.

— தொடரும்