முள்ளில் பூத்த மலரே – 2

ஐந்தரை மணியளவில் வந்த அந்த உள்ளூர் பேருந்திலேறிய பொன்மலர், காலை ஏழு மணியளவில் தனது வீட்டினை சென்றடைந்தாள்.

மரத் தூண்கள் முற்றத்தை தாங்கி நிற்க, பெரிய மாளிகையாய் அமைந்திருந்த அவ்வீட்டின் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார் அவளின் தந்தை பொன்னுசாமி.

நேராய் அவரிடம் சென்றவள், அப்பா எனக் கூறி அவர் மடியிலமர்ந்து மார்பில் சாய்ந்து கழுத்தை கட்டிக் கொண்டாள்.

அவளின் அரவம் கேட்டு வெளி வந்த அவளின் தாய் மணிமேகலை, “கழுத கழுத… வந்ததும் அவரை ஏன் பாடாய் படுதுற!  இறங்குடி… அவரே உடம்பு முடியாம இருக்காரு” என அவளை இழுத்து தரையில் அமர வைத்தார்.

“ஏன்மா பொன்னுமாவ திட்டுற!  என் செல்லகுட்டி வந்ததும் எனக்கு தெம்பு வந்துடுச்சு” தனது பொக்கை வாய் திறந்து சிரித்தவர், ” பிரயானம்லாம் சௌகரியமா இருந்துச்சாமா…. எதுவும் பிரச்சனையில்லையே” என ஆதுரமாய் அவள் தலை கோதி விசாரிக்க,

“பிரச்சனையே வந்தாலும் இவ அதை விரட்டி விட்டுட்டு வந்துடுவா… அப்படி தைரியமா தானே உங்க பொண்ணை வளர்த்திருக்கீங்க”  என மலருக்கு பதிலாய் அவளின் தாய் கூற, மென்மையாய் சிரித்துக் கொண்டாள் மலர்.

தாய் தந்தைக்காக வாங்கி வந்த பண்டமனைத்தும் தூக்கி கொடுத்தாள்.

பின் மூவருமாய் சேர்ந்து ஒரு மாதக் கதையை பேசிக் கொண்ட பின் குளித்து முடித்து உணவை உண்டபின் தன் தாயிடம் வந்தாள்.

“அப்பா உடம்பு  இப்ப எப்படி இருக்குமா? அந்த ஹார்ட் அட்டாக் வந்ததுலருந்து எனக்கு அப்பாவை இங்க இப்படி தனியா விட மனசே இல்லமா! எப்ப என்னாகுமோனு பயமா இருக்கு… என்னோட ஸ்கூல் டெலிஃபோன் நம்பர் இருக்குல்லமா…  எதுனாலும் அதுக்கு ஃபோன் பண்ணுமா… பக்கத்து வீட்டு ஃபோன்ல இல்ல டவுனுக்கு வந்துனாலும் யார்கிட்டயாவது சொல்லி எனக்கு தகவல் கொடுக்க சொல்லு. பொறவு எதுனாலும் கடுதாசி எழுதி போடு சரியா”  தந்தையின் நலனை எண்ணி கவலையில் அவள் கூற,

“ஹ்ம்ம் நீயே பார்க்கிறியே! நல்லா தானே இருக்காங்க….  ஒன்னும் பிரச்சனையில்லை! நாங்க ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு பெத்து வச்சிருக்க நீ சந்தோஷமா இருந்தாலே நாங்க சந்தோஷமாகிடுவோம்” என்றார் மணிமேகலை.

அந்த சனி ஞாயிரை அவர்களுடன் இன்பமாய் செலவழித்தாள்.

“என் கூடவே வந்து இருந்துடுங்களேன் அப்பா” ஞாயிறன்று மீண்டுமாய் சென்னைக்கு பயணிக்க புறப்படுகையில் தன் தந்தையிடம் கேட்க,

“அதான் அப்பா பத்தி உனக்கு தெரியுமே! அவியல மதிக்காத எடத்துல எப்படி இருப்பாங்க!” மணிமேகலை கூற,

“அதெல்லாம் இல்லமா! உன் அம்மா சும்மா சொல்றா…. மதிக்கலனாலும் என் பொண்ணுக்காக நான் வர மாட்டேனா என்ன”  அவளது முகம் தடவி அவர் கூற,

“அப்படி மதிக்காத இடத்துல உங்களை நான் வர வைப்பேனாப்பா! மெட்ராஸ்லயே தனியா எங்கயாவது உங்களுக்கு வீடு எடுத்து தரேன். நான் தினமும் உங்களை வந்து பார்த்துப்பேன்ல”  அவள் கூறவும்,

“எனக்குமே என் மக கூட இருக்கனும்னு ஆசை தான்.  அப்பா தான் இரண்டு வருஷம் உன்கூட இருந்தேனே! அடுத்து காலம் வரும் போது அப்பா அங்க வருவேன்! நீ கிளம்பு நேரமாகுது” என அவளை ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்தனர் அந்த பெற்றோர்.

ஆட்டோவில் ஏறியவளின் முகம் கவலையில் சுருங்கிப் போனது.  திரும்பி இவள் இவர்களை வந்து பார்க்க ஒரு மாதமாகும்.  பிரிவின் வேதனை தொண்டையை அடைத்தாலும் கண்ணில் நீர் வராமல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் மலர்.

மெட்ராஸ் வந்து சேர்ந்தவளின் திங்கட்கிழமை காலை பொழுது பரபரப்பாய் இருந்தது. டிவிஸ் XL வண்டியில் அவசரமாய் மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருந்தவள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினாள்.

தனது பணிக்கு செல்லும் நேரமாகிவிட்டதால், இரு சக்கர வாகனம் போக கிடைத்த இண்டு இடுக்கு இடைவெளியிலெல்லாம் வண்டியை செலுத்தி பாதையை அவள் கடந்துக் கொண்டிருந்த சமயம், வலது பக்கம் அடிதடி கூச்சல் சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தாள்.

அங்கு மாணிக்கம் ஒரு ஆட்டோ ஓட்டுனரை பொளீரென அறைந்திருந்தான். அவனை அறைந்ததிலேயே, அறை வாங்கிய ஆட்டோ ஓட்டுனரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இரு சக்கர வாகனயோட்டியானவன் சற்று பின் வாங்கினான்.  அவன் சட்டையை பிடித்து அருகிலிழுத்து தோளில் கை போட்ட மாணிக்கம், “ஏன்டா சண்டை போடுறவன், அவனவன் வண்டியை ஓரமா ஒதுக்கி நிறுத்தி சண்டை போடு! இப்ப உன்னால காலைல ஸ்கூல் போற பிள்ளைங்க, வேலைக்கு போற ஜனங்கனு எல்லாருக்குமே லேட் ஆகுதுல” என அவர்களுக்கு அவன் அறிவுரை வழங்க,

தூரமாய் நின்று இதை பார்த்திருந்த மலர் மனதில், “பெரிய பஞ்சாயத்து தலைவருனு நினைப்பு போல மனசுல! பிரச்சனைனு வந்துட்டா பஞ்சாயத்து செய்ய போய்டுவாரு போல”  எண்ணிக் கொண்டவள்  தனது வண்டியை ஓட்டிக் கொண்டு அந்த சிக்னலை தாண்டியுள்ள பள்ளியினுள் நுழைந்தாள்.

மாணிக்கத்தின் அறையிலும் பேச்சிலுமே அரண்டு போன இருவரும், “இதோ ஓரங்கட்டிடுறோம் அண்ணே” எனக் கூறி தத்தமது வாகனங்களை தள்ளிக் கொண்டு போக,  அந்நேரம் வந்து சேர்ந்தார் போக்குவரத்து காவலர்.

“சார் பிரச்சனைலாம் நாங்களே தீர்த்து வச்சிட்டோம்! நீங்க கிளம்புங்க” என காவலரிடம் கூறிய வாறே ஆட்டோவில் ஏறியவன், அந்த ஆட்டோவை ஓட்டிக் கொண்டு போனான்.  போக்குவரத்து நெரிசல் சீராகி வாகனங்கள் பறந்து சென்றது.


2019

புதிதாய் கட்டமைக்கப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு குடும்பமாய் வசிக்கவாரம்பித்தனர்.

சொந்த இல்லமெனும் தங்களது நெடுநாளைய கனவினை நிறைவேற்றி பல குடும்பங்கள் இந்த குடியிருப்பில் அடியெடுத்து வைக்க, சில குடும்பங்கள் வாடகைக்கு வசிக்க வந்தனர்.

மூன்று பகுதிகளாய் பிரிக்கப்பட்டு, நான்கு மாடி கட்டிடமாய் அமைக்கபெற்ற அக்குடியிருப்பில் மொத்தமாய் அறுபது வீடுகள் இருந்தன.

அங்கு வாடகை விடுவதற்கென வீடு வாங்கியிருந்தனர் ஆதினியின் குடும்பம். ஆனால் அவர்களே அங்கு தங்கும் நிலை ஏற்பட,  குடும்பமாய் அக்குடியிருப்பின் ஓர் இல்லத்தில் வசித்தனர்.

அக்குடும்பம் அங்கு வசிக்கவாரம்பித்து ஒரு மாத காலமாகிருக்க,  அப்போது புதிதாய் வந்து சேர்ந்தனர் அகிலனின் குடும்பத்தினர்.

அக்குடியிருப்பின் வாசலில் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் பெரிய வாகனத்தில் வந்திறங்க, வேலையாட்கள் மூலம் மூன்றாம் மாடிக்கு  அவற்றை ஏற்றிக் கொண்டிருந்தான் அகிலன்.

சோஃபாவை வேலையாட்களுடன் அகிலனும் சேர்ந்து தூக்கி மாடிப்படி ஏறி வந்தான்.  இரண்டாம் தளத்தை அவன் கடக்கும் போது அவனின் கைகள் கடுக்க அவனறியாது அவன் கையிலிருந்து சோஃபா நழுவ முற்பட,  “ஹே பார்த்து பார்த்து” எனக் கூறி அச்சமயம் அவனுடன் கை கொடுத்து தூக்கி விட்டிருந்தார் ஆதினியின் தந்தை.

அவர் கை கொடுத்ததும் சோஃபாவை சற்றே மேலுயர்த்தி பிடித்தவன், “தேங்க்ஸ் அங்கிள்” சிநேக புன்னகை சிந்தி உரைத்தான்.

“போங்க போங்க” என வேலையாட்களிடம் கூறியவர், அவர்களுடன் மேல் சென்று அவ்வீட்டினில் அதை வைக்கும் வரை உடனிருந்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்” மீண்டுமாய் அவனுரைக்க,

“பரவாயில்லை தம்பி!  ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்க தானே அக்கம்பக்கத்துல இருக்கிறது”  எனக் கூறியவர் வேலையாட்களிடம் ஏதோ பேச,

“ரொம்ப தூசியா இருக்கு! துடைக்க துணி எதுவுமிருக்கானு பார்க்கிறேன்” எனக் கூறி வெளி வந்த அகிலன்,

அவன் வீட்டின் நேரெதிராய் கீழே இரண்டாம் மாடியில் தெரிந்த அந்த ஜன்னலை அன்னிச்சையாய் நோக்கினான்.

அங்கிருந்த பெண்ணின் செயல் அவன் கவனத்தை ஈர்த்தது. 

அதி தீவிரமான முக பாவனையை வைத்து கொண்டிருந்தவள், ஒரு கையில் தோசை கல் போன்ற ஒன்றை அடுப்பை விட்டு தூக்கி பிடித்துக் கொண்டு, மறுகையிலிருந்த கரண்டியால் அந்த கல்லிலிருந்த ஏதோ ஒன்றை திருப்பிப் போட முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

அவளின் தாய், “என்னமா செஞ்சிட்டிருக்க?” எனக் கூறிக் கொண்டே அவளருகில் வர,

துளியும் தன் கவனத்தை சிதற விடாது, கல்லில் வைத்த கண்ணை எங்கும் திசை திருப்பாது, “பிக்காம எப்படி ஆம்லெட்டை திருப்பி போடலாம்னு ப்ளான் பண்ணிட்டிருக்கேன்மா”  என்றாள்.

அவளுடைய ப்ளானிங்கென்ற வார்த்தையிலேயே அவளின் தாய் வாய்விட்டு சிரித்திருக்க,

“இதுக்கா இந்த அக்கப்போரு” எனக் கூறி சத்தமாய் சிரித்திருந்தான் அகிலன்.

அவனின் சிரிப்பு சத்தத்தில் அவனின் வீட்டிலிருந்து வெளி வந்த ஆதினியின் தந்தை, “என்னப்பா என்னாச்சு” என்று கேட்க,

அவன் அந்த சமயலறை ஜன்னலை காண்பித்து நடந்தவற்றை கூறி மீண்டுமாய் சிரிக்க, “என் பொண்ணு முட்டை ஆம்லெட் போடுறது உனக்கு அவ்ளோ சிரிப்பா இருக்கா” அவனை முறைத்து அவர் கேட்ட நொடி,

அதிர்ச்சியில் சட்டென சிரிப்பை நிறுத்தியவன் பேய் முழி முழித்து, “அய்யோ இவரோட பொண்ணா அது! சமாளிடா சமாளி” மனசோடு பேசிக் கொண்டவன்,

“அங்கிள் கீழே சாமான் எடுக்கனும்.  இதோ வந்துடுறேன்” என ஒரே ஓட்டமாய் ஓடியவன் படிக்கட்டில் தாவி செல்ல,

அவனின் ஓட்டத்தில் சிரித்தவர், “தம்பி லிஃப்ட் இருக்கு! அதுல போங்க”  என்று கூறியது அவனது செவியைத் தீண்டாது காற்றில் கரைந்தது.

அதன்பின் தன் வீட்டிற்குச் சென்று இக்கதையை அவர் தன் குடும்பத்தினரிடம் கூற,  அனைவருமாய் ஆதினியின் வீர சாகச செயலை கூறி கேலி செய்திருக்க, “யாருடா அந்த பையன்? வந்த நாளே என்னைய டேமேஜ் செஞ்சிருக்கான்! நான் பார்த்தே ஆகனும்!” என மனதில் எண்ணிக் கொண்டாள்.


அன்றைய மாலைப்பொழுதில் பள்ளியின் கடைசி மணியடித்து, குழ்நதைகள் தத்தமது பெற்றோருடன் வீட்டுக்கு புறப்பட்டு கொண்டிருக்க, அச்சமயம் வீட்டிற்கு கிளம்பவென வெளி வந்த மலர், “என்ன சுஜிமா! கிளம்பலையா இன்னும்” எனக் கேட்டு கொண்டே, பள்ளியினுள் மரத்திற்கு கீழமைத்திருந்த மேஜையில் அமர்ந்திருந்த சிறுமியிடம் போய் நின்றாள்.

“இல்ல மிஸ்! அப்பா இன்னும் வரலை” என அச்சிறுமி கூற, 

அங்கு குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ஆயா, “அவங்க அப்பா இன்னிக்கு வர லேட்டாகும்னு நம்ம ஆபிஸ் ஃபோன்ல சொன்னாங்களாம் மிஸ்! அதான் என்னைய பாப்பாவோட அப்பா வரவரைக்கும் கூட இருந்து பார்த்துக்க சொல்லி பிரின்சிபிள் சொன்னாரு மிஸ்” என்றவர் கூற,

தனது வகுப்பில் பயிலும் சிறுமியாதலால்,  அவளை அவ்வாறு விட்டு செல்ல மனமில்லாமல் அச்சிறுமி அருகினில் அமர்ந்து கொண்டாள் மலர்.

“சுஜி பாப்பா கிளம்புற வரைக்கும், மிஸ்ஸும் கூட இருப்பேனாம் சரியா!” எனக் கூறியவள் அச்சிறுமிக்கு தன் பையிலிருந்து ஒரு மிட்டாயை எடுத்துக் கொடுத்தாள்.

அச்சமயம் ஒரு ஆட்டோ அந்த பள்ளியின் நுழைவாயிலை வந்தடைந்தது.

ஆட்டோவின் சத்தத்தில் திரும்பி பார்த்த மலர், “இது அந்த பஞ்சாயத்துகாரர் தானே” என ஓட்டுனரை பார்த்து அவள் நினைக்க, “இது அந்த சண்டிராணி தானே” என மலரை பார்த்து எண்ணிக் கொண்டார் மாணிக்கம்.

மாணிக்கத்தின் ஆட்டோ வந்ததும் அவரின் வண்டியில் செல்லும் பிள்ளைகள் அவரை ஆட்டோவில் ஏறிக் கொள்ள, ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கடலை மிட்டாய், தேங்காய் பர்பி என வாங்கி வந்திருந்ததை கொடுத்தவன்,

“குட்டீஸ்களா சமத்தா சாப்பிட்டுட்டு இருங்க…  மாமா இப்ப வந்துடுறேன்” எனக் கூறி பள்ளியினுள் நடந்தான்.

இவன் தினமும் பள்ளிக்கு வரும் ஆட்டோ ஓட்டுனர் ஆதலால் பள்ளி காவலாளியும் ஏதும் தடை கூறவில்லை. 

ஆட்டோ வந்ததிலிருந்து மாணிக்கத்தின் செயல்களையே பார்த்துக் கொண்டிருந்த மலர், அவன் தன்னருகில் வந்ததும் முறைத்து பார்த்தாள்.

“நீங்க இங்க தான் டீச்சர்ரா வேலை பார்க்கிறீங்களா? அன்னிக்கு வீட்டுக்கு பத்திரமா போய்ட்டீங்க தானே! அந்த பொறுக்கி வந்து எதுவும் பிரச்சனை செய்யலையே” என அவளின் நலனை அவன் விசாரிக்க,

அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தவள், “யாரு சார் நீங்க எனக்கு? நான் நல்லா இருக்கேன் நல்லாயில்லை… உங்களுக்கு என்ன வந்துச்சு! உங்க வேலையை பார்த்துட்டு போங்க”  என உக்கிரமாய் அவள் கூற,

மாணிக்கத்தின் முகம் சுருங்கி விட்டது. அவ்விடத்தை விட்டு அகன்றவன் ஆட்டோவை எடுத்து கொண்டு சென்று விட்டான்.

அங்கிருந்த ஆயா அவளின் சத்தத்தில் பதறியடித்து அவளருகில் வந்தவர், “ஏன்மா அந்த தம்பியை விரட்டுற? ரொம்ப நல்ல தம்பிமா அது” அவர் கூறவும்,

அவனே தானாய் வந்து இவளிடம் பேசிய இரண்டு நிகழ்வுகளையும் இவள் அந்த ஆயாவிடம் கூற,  “என்னமா இந்த தம்பிய போய் தப்பா நினைச்சிட்டியே! அந்த இடத்துல நீ-னு இல்ல யாரா இருந்தாலும் இந்த தம்பி இப்படி தான் செய்திருக்கும். எனக்கு இரண்டு வருஷமா இந்த தம்பிய தெரியும்.  தினமும் இங்க பிள்ளைகளை விட்டுட்டு கூட்டிட்டு போகும்…  எனக்கு யாருமில்ல… இந்த ஸ்கூல்லயே தான் நான் தங்கி இருக்கேனு தெரிஞ்ச நாள்லருந்து அது ஊருக்கு போகும் போதெல்லாம் எனக்கு தேவையானது எதாவது பார்த்துச்சுனா அதை உடனே வாங்கிட்டு வந்து கொடுக்கும்” மாணிக்கத்தின் புராணத்தை அந்த ஆயா கூற,

இவள் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து(கிட்டதட்ட ஒரு வருடமாய்) இந்த ஆயாவை தெரியும் அவளுக்கு.  ஆனாலும் மனமோ, “இந்தாளு வச்ச ஆளாயிருக்குமோ இந்த பாட்டி? இப்படிலாம் பேசுனு அந்தாளு இந்த பாட்டிக்கிட்ட சொல்லிருப்பானோ” என யோசிக்க,

“அடியேய் நீ இங்க டீச்சரா வேலை பார்ககிறதே இப்ப தானே அவருக்கு தெரியும்! அதுவுமில்லாம வெயிட் பண்றேனு நீ தானே உட்கார்ந்து இருக்க…  அந்த பாட்டியா உன்னைய கையை பிடிச்சி உட்கார சொன்னாச்சு” என அவளின் மனம் அவன் சார்பாய் வாதிட்டிருக்க,

“ரொம்ப ஓவரா தான் சந்தேகப்படுறோமோ” என யோசித்தவள், “சரி அடுத்த தடவை பார்க்கும் போது ஒரு சாரி கேட்டுடலாம்” என முடிவு செய்துக் கொண்டாள்.

— தொடரும்