முள்ளில் பூத்த மலரே – 19

அகிலனும் ஆதினியும் இரண்டாம் மாடியினை அடைந்த நேரம் இவ்வரிகள் காதினில் விழ, என்னாயிற்று என நிமிர்ந்து பார்க்க, அப்பொழுது தான் சுற்றத்தை உணர்ந்தனர்.

இரண்டாம் மாடியின் கடைசிப் படியில் இவர்கள் நின்றிருக்க, ஆதினியின் வீட்டு வாசலில் மலர் சில பெண்களுடன் கோபமாய் உரையாடிக் கொண்டிருக்க, மாணிக்கம் சற்று கவலையாய் அவளை நோக்கி கொண்டிருக்க, சுற்றத்தார் அனைவரும் தங்களின் வீட்டை விட்டு வெளி வந்து நின்று இவர்களின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“எல்லாருக்கும் கேட்கனும்னு தான் இங்க நின்னு பேசிட்டிருக்கேன்! என் புருஷன் செக்யூரிட்டிக்கிட்ட க்ளோஸா பேசினா இவங்களுக்கு என்ன வந்துச்சு? வாடகை வீட்டுல இருக்கிறவன்ட்ட பேச கூடாது.. வாட்ச்மேன்ட்ட பேச கூடாது.. நம்ம கௌரவம் குறைஞ்சிடுமாம்! எங்க எப்ப இருந்துமா இந்தக் கௌரவம்னு ஒன்னு வந்து உங்கட்ட ஒட்டிக்கிது? இந்த வாட்ச்மேன் இல்லைனா நைட் நீங்க நிம்மதியா தூங்க முடியுமா? நமக்காகத் தூங்காம முழிச்சு காவல் காக்கிறவர்கிட்ட பேசினா கௌரவக் குறைச்சல்னு எப்படி உங்களுக்குச் சொல்ல தோணுது? நம்ம எல்லாரும் வானத்துல இருந்தா குதிச்சோம்? எல்லாரும் அவங்கவங்க அப்பா அம்மாட்ட கேட்டு பாருங்க வாழ்க்கைல என்னிக்காவது ஒரு தடவை ஒரு நேரம் வாடகை வீட்டுல இருந்திருப்பாங்க! எல்லாரும் எப்பவுமே பணக்காரங்களாவே இருந்துடுறதில்லை! கௌரவங்கிறது குணத்துல வர்றது பணத்துல வர்றது இல்ல! நம்மளோட நல்ல குணத்தைப் பார்த்து நன்நடத்தை பார்த்து மக்கள் கொடுக்கிற மரியாதை தான் கௌரவம்! இனி யாராவது அறிவுரை சொல்றேன்ற பேர்ல வந்து என் புருஷனை பத்தி என்கிட்ட குறை சொன்னீங்கனா ஒரு வழி ஆக்கிடுவேன்! என் புருஷன் எல்லார்கிட்டயும் சரிசமமா தான் பேசுவாரு. உங்களுக்குப் பிடிக்கலைனா நீங்க அவர் கிட்ட பேசுறதை நிறுத்திக்கோங்க. இப்படிப் பொண்டாட்டி கிட்டயே வந்து புருஷனை பத்தி குறை சொல்லி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க! உங்களை அனுப்பின உங்க புருஷங்களுக்கும் இது கேட்கட்டும்னு தான் இங்க நின்னு பேசுறேன். அப்படிக் கேட்கலைனா நீங்களே போய்ச் சொல்லிடுங்க”

மலர் பேசி முடிக்கவும் மழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது.

அவரின் பேச்சிலேயே அங்கு என்ன நடந்திருக்கும் என யூகித்துப் புரிந்து கொண்டான் அகிலன்.

இது சில காலமாய் அந்தக் குடியிருப்பில் நிகழும் பிரச்சனை தான். சொந்த வீட்டினர் மட்டுமே அசோசியேஷன் மீட்டிங்கிற்கு அழைக்கப் பட்டனர். செக்யூரிட்டியை இவர்களின் அடிமை ஆட்களைப் போல் நடத்தினர்.

இதற்கெல்லாம் மாணிக்கம் அவர்களோடு சண்டையிட, மாணிக்கத்திற்கு ஆதரவாய் ஒரு கும்பலும், அதற்கு எதிர்ப்பாய் ஒரு கும்பலும் உருவானது.

தற்போது அசோசியேஷன் பிரசிடெண்ட்டுக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், மலரின் மூலமாய் மாணிக்கத்தைத் தங்கள் வசம் வர வைக்கலாம் என எண்ணிய எதிரணி கும்பல் செய்த திட்டமே தற்போது அவர்களுக்கு ஆப்பாய் அமைந்திருக்கிறது.

மலரின் பேச்சில் அகிலனின் மனம் ஆரவாரமாய் ஆர்பரித்துத் துள்ளி குதிக்க, ஆதினியோ பயத்தில் நடுங்கி கொண்டிருந்தாள்.

இதை உணராத அகிலனோ, “ப்பாஆஆஆ என்னா பேச்சு! செம்ம! இன்னிக்கு காலைல நான் பார்த்த ஆன்ட்டிக்கும், இப்ப பார்க்கிற ஆன்ட்டிக்கும் என்னவொரு வேரியேஷன். செம்ம கெத்துப்பா உங்க அம்மா” என மலரை பார்த்துக் கொண்டே ஆதினியிடம் கூற,

அவளோ வலிந்து வரவழைக்கப்பட்ட தைரியத்துடன், ஆமெனக் கூறி சிரித்திருந்தாள்.

சட்டென ஆதினி பக்கம் திரும்பியவனோ அவளின் பயத்தைக் கண்டு நகைத்தவன், “அப்படித் தைரியசாலி அம்மாக்கு இப்படிப் பயந்தாங்கொள்ளி பொண்ணா” எனக் கிண்டல் செய்ய,

அதில் அவளுக்குக் கோபமேறி கண்கள் கலங்கவாரம்பிக்க, அதே சமயம் ஆதினியை பார்த்த மாணிக்கம், “மலர் உள்ள போ! பாப்பா வந்துட்டா பாரு” என மலரை உள் அனுப்பியவர் அகிலனை நோக்கி வர, அங்குச் சுற்றியிருந்த அனைவரும் கலைந்து சென்றனர்.

அவளின் கண்களைக் கண்ட அகிலனோ பதறி, “அச்சோ விளையாட்டா தான்டா சொன்னேன்” எனக் கூறிக் கொண்டிருந்த சமயம் மாணிக்கம் அருகில் வரவும், அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னை இயல்பாக்கி கொண்டவளை கண்டவனின் மனம் சற்றுச் சமன்பட்டது.

தன்னை அவளின் தந்தை ஏதும் கூறிவிடக் கூடாதெனத் தானே அவள் இவ்வாறு தன்னை இயல்பாய் காட்டி கொண்டாள் என்றொரு புரிதல் அவள் செயலில் இவனுக்குப் புரிபட மனம் மகிழ்ந்தது.

தன்னை இயல்பாய் காட்டி கொண்டாலும் இவன் மேலுள்ள கோபத்தை முறைப்பில் காண்பித்துக் கொண்டு தானிருந்தாள் ஆதினி.

“என்ன அங்கிள் ஆன்டியை வெறுப்பேத்திட்டாங்களா?” என அகிலன் கேட்க,

“என்னைய பத்தி அவகிட்ட போய்க் கம்பிளைண்ட் பண்ணா இப்படித் தான் அவ ரியாக்ட் பண்ணுவானு தெரியாம வந்து சிக்கிட்டாங்கப்பா” எனக் கூறி சத்தமாய் அவர் சிரிக்க, அகிலனும் ஆதினியுமே சிரித்திருந்தனர்.

அகிலன் சிரித்துக் கொண்டே மேலே நோக்க, அவனின் தாய் சத்யா உக்கிரமாய் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டவனின் மனதில் கிலி பிடிக்க, “அங்கிள் நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வரேன்” எனக் கூறி இரண்டு படிக்கட்டுகளாய் தாவி தனது இல்லத்திற்குச் சென்றான்.

அந்நேரம் மதுரன் வரவும் அவனிடம் நடந்ததை ஆதினி உரைத்திருக்க, “அம்மாட்ட சொல்லுடா கண்ணா! இப்படிப் பேசினா அம்மாவை தானே எல்லாரும் தப்பா பேசுவாங்க! இன்னிக்கு எல்லார் வீட்டுலையும் அம்மாவை தான் அவலாக்கி பொறிச்சிட்டு இருப்பாங்க” வருத்தமாய் மாணிக்கம் உரைக்க,

“அம்மா பேசினது தப்பில்லையே! மத்தவங்க உங்களைக் குறையா பேசுறதை ஆமானு சொல்லி அம்மா கேட்டுட்டு இருந்தா தான்ப்பா தப்பு! பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க! அதுக்காக நாம அமைதியா போகக் கூடாது! பொறுத்து பொறுத்து பார்த்து இந்தப் பிரச்சனை முத்தின பிறகு, அம்மாகிட்டேயே நேரடியா உங்களைப் பத்தி குறை சொன்ன பிறகு தானே அம்மா பேசியிருக்காங்க! அதனால தப்பில்லைப்பா” அம்மாவுக்கு ஆதரவாய் பேசி அப்பாவை இவன் சமாதானம் செய்ய முயல,

“அப்படிச் சொல்லுடா என் தங்க கட்டி” கூறிக் கொண்டே முறுவலுடன் அனைவருக்குமாய் டீ எடுத்து வந்து கொடுத்தார் மலர்.

அங்கு அகிலனின் வீட்டிலோ நிலைமை தலைகீழாக இருந்தது.

“நானும் கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன்! ஓவரா தான் அந்தக் குடும்பத்தோட ஒட்டி உறவாடிட்டு இருக்க நீ! அப்பாவும் பையனும் வேற அடிக்கடி என்னமோ ரகசியம் பேசிக்கிறீங்க!” கோபமாய் முறைத்துக் கொண்டே அகிலனை சத்யா கேட்க,

“அம்மா முதல்ல நான் ரிப்ரெஷ் ஆகிட்டு வரேன்! அதுக்கப்புறம் டீ குடிச்சிட்டே பேசலாம்” அவரின் கோபம் மட்டுபடச் சற்று நேரத்திற்கு அந்த விஷயத்தை ஆறப்போட்டான்.

ரிப்ரெஷ் ஆகி வந்தவன் டீ குடித்துக் கொண்டே பேசினான்.

“அம்மா நான் அந்த மாணிக்கம் அங்கிள் பொண்ணைக் கல்யாணம் செஞ்சிக்க விரும்புறேன்!” அவன் கூறவும்,

“என்னது அந்த வீட்டு பொண்ணையா? இவ்ளோ நேரம் எல்லாரையும் திட்டிட்டு இருந்தாங்களே அவங்க பொண்ணையாடா கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுற? அம்மாவே இவ்ளோ சண்டைக்காரியா இருந்தா…. பொண்ணு எப்படி இருக்குமோ?” சத்யா குறையாய் கூறவும் கோபம் கொண்ட அகிலன்,

“அம்மா, அவங்க அங்க சண்டை போட்டதே நமக்காகத் தான். நீ என்னடானா அவங்களைக் குறை சொல்லிட்டு இருக்க?”

“நமக்காகவா.. என்னடா உளர்ற?”

“ஆமா மா.. வாடகை வீட்டுல இருக்கோம்னு இங்க எல்லாரும் நம்மளை ஒதுக்கி தானே வைக்கிறாங்க. இது வரைக்கும் யாராவது உன்கிட்ட வந்து நட்பா பேசிருப்பாங்களா?” அவன் கேட்க,

“இல்லடா பக்கத்து வீட்டுல நானே தேடி போய்ப் பேசியும் கண்டுக்கலைடா” அவன் தாய் கூற,

“அதுக்குத் தான் ஆண்டி எல்லார்கிட்டயும் சண்டை போட்டதே” என்றவன்,

“அதுவுமில்லாம மலர் ஆண்டி பொண்ணு ஆதினி ஒன்னும் அவங்களை மாதிரி கிடையாது. ரொம்பச் சாஃப்ட் பயந்த சுபாவமுள்ள பொண்ணு. ஆதினியை நான் கட்டிக்க விரும்புறது அந்த வீட்டுல எல்லாருக்கும் தெரியும்! நம்ம வீட்டுல அப்பாக்கும் மீனுக்கும் தெரியும்” சற்று தயங்கியவாறே அவன் கூற,

“அப்படியே போய்க் கல்யாணம் செஞ்சிக்க வேண்டியது தானே! இப்ப மட்டும் எதுக்கு என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க” மகன் தன்னிடம் மட்டுமாய் இதைக் கூறவில்லையே என்கின்ற ஆதங்கம் விளைவித்த கண்ணீருடன் கோபமாய் அவர் உரைக்க,

அவரின் கண்ணீரில் மனம் வலிக்க,
“நீ தானே அப்பாகிட்ட சண்டை போடும் போதெல்லாம் சொல்லுவ! உங்களைக் கட்டிக்கிட்டதுல லவ் மேரேஜ்ல இருந்த மரியாதையே போய்டுச்சு! இந்த வீட்டுல இனி லவ் மேரேஜை நான் ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லுவலமா! அதான் ஆதினி வீட்டுல கேட்டு ஒத்துக்காம போய்ட்டா அப்படியே விட்டுடலாம்… இல்ல ஒத்துக்கிட்டா உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்” தன் பக்க நியாயத்தை அவன் கூற,

“இப்ப நான் ஒத்துக்கலைனா என்ன செய்வ” கண்களைத் துடைத்துக் கொண்டு அவன் முகம் நோக்கி அவர் கேட்ட தருணம் அகிலனின் தந்தை தர்மன் உள் நுழைந்தார்.

இக்கேள்விக்கு என்ன பதில் கூறுவது எனத் தடுமாறிய நேரம் வந்த தந்தையைக் காணவும் மனம் ஆசுவாசம் கொள்ள, அவன் வணங்கும் தெய்வங்கள் அனைத்தும் இத்திருமணத்திற்காக இவனுக்கு உதவி புரிவதாய்த் தோன்றியது.

“அப்பா வாங்க அப்பா! முக்கியமான விஷயம் தான் பேசிட்டு இருக்கோம்! வாங்க” அவரையும் தங்களது பேச்சிற்குள் அழைத்தான்.

என்ன என்பது போல் அவர் இவனைப் பார்க்க, “ஆதினி வீட்டுல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கப்பா” இவன் முகப் பாவனையில் தனது தாய் ஒத்துக் கொள்ளவில்லை என்பதைக் காண்பிக்க,

அதைப் புரிந்து கொண்டவரோ, “என்னது ஒத்துக்கிட்டாங்களா? ஒத்துக்க மாட்டாங்கனு நினைச்சு தானே நான் பாத்துக்கலாம்னு இருந்தேன்! அவங்க ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன். நான் பார்த்து வைக்கிற பொண்ண தான் நீ கட்டிக்கனும். இப்படி நீ லவ் பண்ணிட்டு வர்ற பொண்ணைலாம் கட்டி வைக்க முடியாது” அவர் கோபமாய் உரைப்பது போல் பேச,

“ஏன் ஒத்துக்க முடியாது! என்னைய லவ் பண்ணி தானே கல்யாணம் செஞ்சீங்க. எங்க வீட்டுல லவ் மேரேஜ்ஜ ஒத்துக்க மாட்டோம்னு சொன்னதால தானே ஓடி போய்க் கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். இப்ப நீங்களும் அப்படியே சொன்னா என்ன அர்த்தம்? அப்படி ஒரு நிலைமை என் பிள்ளைக்கு நான் வர விட மாட்டேன். ஓடி வந்தவங்கிற அவ பெயர் என்னோட போகட்டும்” கோபமாய் ஆரம்பித்துத் தன் நிலை எண்ணி அழுகையில் அவர் முடிக்க,

“அம்மா! அது எப்பவோ யாரோ உங்க ஊர்காரங்க சொந்தகாரங்க பேசினது! நீங்க அதுக்கப்புறம் ஊரை விட்டே வந்து சென்னைலயே இவ்ளோ வருஷம் வாழவும் செஞ்சிட்டீங்க! இன்னும் ஏன்மா இதைச் சொல்லியே இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” தினமும் ஏதேனும் ஒரு பிரச்சனை இதன் நிமித்தமாய் ஆரம்பித்துச் சண்டையில் முடிவதை இவனும் இவனது தங்கச்சியும் சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்ததினால் வந்த ஆற்றாமை இது.

“இவரால தான் என் அண்ணன்ங்க எல்லாரும் என்னைய எதிரியா பார்த்தாங்க! இவர் தான் என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டாரு” தினமும் கூறும் அதே பல்லவியை அவர் பாடவாரம்பிக்க,

தினமும் கேட்டு சலித்த இந்த வசவு வார்த்தைகளில் எரிச்சல் மிகவுற, “அம்மாஆஆஆ உங்க கல்யாணம் எப்படியோ முடிஞ்சு போச்சு! இப்ப என் கல்யாணத்தைப் பத்தி பேசிட்டு இருக்கோம்” சற்று சத்தமாய் இவன் கூற,

“நீ கவலைப்படாதடா! அந்தப் பொண்ணு தான் நம்ம வீட்டு மருமகனு நான் முடிவு பண்ணிட்டேன். இவருக்குப் பிடிக்காட்டி போகுது” என அகிலனிடம் உரைத்தவர் அகிலனின் தந்தையிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார்.

சத்யா சென்றதும் எப்படி என் ராஜ தந்திரம் என்பது போல் தர்மன் இவனைப் பார்க்க, “இது உலகமகா நடிப்புடா சாமி” என வடிவேலு பாணியில் வாயசைத்து உரைத்தவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

“அம்மா எப்போ உங்களைத் திட்டுறதை நிறுத்துவாங்கப்பா? அப்படிக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படித் தினமும் சண்டை போட்டுகிறீங்களே?” அவன் தனது தந்தையிடம் கேட்க,

“நான் எங்கடா சண்டை போட்டேன். உங்கம்மா தான் தினமும் என்னைய திட்டிக்கிட்டு இருக்கா” என்றவர்,

“என் மேலயும் தப்பு இருக்குடா அகி! அவ திட்டுறது தான் உங்களுக்குத் தெரியுது! அவ மனசுல உள்ள கோபம், வலியை அவ அப்படிக் காமிக்குறா! நான் செஞ்ச தப்புக்கு அதை நான் அமைதியா ஏத்துகிறேன்!” என்று கவலையாய் உரைத்தவர் அவ்விடத்தை விட்டு அகன்றார்.

மகனின் திருமணப் பேச்சு இவ்விதமாய் எந்த இல்லத்திலாவது நிகழ்ந்திருக்குமா எனச் சிந்திந்து அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டான் அகிலன்.

நினைவு தெரிந்த நாளிலிருந்து இவர்களின் சண்டையைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் அகிலன்.

அகிலனுக்கும் மீனாளுக்கும் முதலில் இது சண்டையனவே புரிந்து கொள்ளும் வயதில்லை என்பதால் பெரிதாய் அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் இளமை பிராயத்தில் தான் தாய் தந்தையருக்குள் இருந்த பிணக்குப் புரிபடத் துவங்கியது. ஆயினும் அவர்களுக்கு அறிவுரை கூறுமளவு வளரவில்லை என்பதால் கண்டும் காணாமல் சென்றனர். அண்ணனும் தங்கையும் மட்டுமே தங்களுக்குள்ளாகவே இதைப் பற்றிப் பேசி சமாதானம் செய்து கொள்வர்.

இத்தனை ஆண்டுகளாகியும் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையின் மையபுள்ளியை அறிய முடியவில்லை இவர்களால்.

அன்னை தந்தையாய் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியதில் அவர்கள் இருவரும் எவ்வித குறையும் வைக்கவில்லை என்றாலும், தங்களது குடும்பம் ஆஸ்தி அந்தஸ்து என்ற உயர் நிலைக்கு வராமல் இருந்ததற்குக் காரணம் இவர்களின் இந்தப் பூசல் என்பதில் மிகுந்த கோபமுண்டு இவனுக்கு.

தாய் சற்று தந்தையை அனுசரித்து இத்தனை காலமாய் அவரின் தவறை சுட்டி காட்டாமல், மன்னித்திருந்தால் தந்தை அவரின் தொழிலில் முன்னேறியிருப்பார் என்றோர் எண்ணம் எப்பொழுதுமே அவனுக்கு உண்டு.

எத்தகைய தவறினை தனது தந்தை செய்தாரென அவனின் அன்னை தந்தை இருவருமே கூறியதில்லை. ஆனால் இத்தனை வருடங்களாகியும் மாறாத வடுவாய் தனது தாயின் மனதில் நிலைத்து நிற்பதினாலேயே அவரால் தந்தையை மன்னிக்க இயலவில்லை எனப் புரிந்து கொள்ள முடிந்தது அவனால். இதற்கோர் முற்றுபுள்ளி என்று வருமெனக் காத்திருந்தான் அகிலன்.

ஆதினியின் இல்லத்தை நினைத்தவனுக்கோ அவளின் நிலை இந்த இல்லத்தில் என்னதாய் இருக்குமென்ற பயம் தோன்றியது.

அனைவருமாய்ச் சேர்ந்து கையிலும் தோளிலும் தாங்கி வளர்க்கபட்ட பெண், தாய் தந்தையரின் அன்பான பண்பான காதலான இல்வாழ்வை கண்டு வளர்ந்த பெண் எவ்வாறு தன்னை இத்தகைய கரடு முரடான குடும்பத்திற்குள் புகுத்தி கொள்வாள் என்றொரு பயம் அவனைச் சூழ்ந்தது இப்போது.

தான் மட்டும் தான் இத்தகைய சூழலில், அவள் இன்பமாய் வாழ வழி செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றவும் அதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டான்.

ஆனால் அவளுக்கு அவ்வாறொரு நல் சூழலை தன் வீட்டிலவன் அமைத்து கொடுக்க முடியாமல் போனது தான் அவனின் விதியோ?

இங்கு ஆதினியின் வீட்டில் அனைவருக்கும் தேநீர் வழங்கி அமர்ந்த மலர், “இன்னிக்கு அகிலன் கூடத் தான் வந்தியா ஆதுமா” எனக் கேட்டார்.

அவரின் கேள்வியில் சற்று பதறியவள், “இல்லமா! ஆபிஸ் பஸ்ல அகிலன் வந்தாங்க… அப்படியே ஒன்னா பேசிட்டே வந்தோம்” என்றாள்.

“ஹ்ம்ம் இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்! நிச்சயம் செய்ற வரை அவங்ககிட்ட பேச்சு வச்சிக்காத” என்று மலர் உரைக்கவும்,

“ஹ்ம்ம்” எனச் சுருதியே இல்லாமல் அவள் ம் சொல்ல,

மாணிக்கமும் மதுரனும் மலர் கூறியதற்கு மறுப்பாய் ஏதோ கூற வர, “நான் நம்ம பொண்ணு நல்லதுக்குத் தான் சொல்றேன். அவ மனசுல ஆசைய வளர்த்துக்கிட்டு அது பின்னாடி இல்லனு ஆகிட்டா கஷ்டம் தானே! அதுக்கு முதல்லயே நாம தூரமா இருந்துட்டா நல்லது தானே” மலர் விளக்கமாய்க் கூறவும், அனைவரும் ஒத்துக் கொண்டனர்.

அன்றைய இரவுணவை தயாரிக்க ஆதினி சென்று விட, மதுரன் அவளுக்கு உதவிடச் சென்றான்.

அவளுக்குச் சமையல் செய்யத் தேவையானவற்றை அரைத்தோ நறுக்கி கொடுத்தோ, ஏதேனும் ஒரு வகையில் ஆதினி சமையல் செய்யும் நேரம், மதுரனோ அல்லது மாணிக்கமோ அவளுக்கு உதவி புரிவர்.

அனைவரும் ஒரு பொழுதேனும் ஒன்றாய் அமர்ந்து உண்ண வேண்டுமென்பது அவ்வீட்டில் எழுதபடாத விதி. எத்தகைய தாமதமானாலும் அனைவரும் வரும் வரை காத்திருந்தே உண்பார்கள் நால்வரும்.

அன்றைய இரவும் அவ்வாறு அனைவரும் சேர்த்து பேசி கொண்டே உண்டு களித்தனர். பின் அனைவரும் உறங்க செல்ல, ஆதினி தனது கட்டிலில் படுத்துக் கொண்டே அப்பொழுது தான் தனது கைபேசியை எடுத்து பார்க்க, அகிலன் வரிசையாய் அவளுக்குப் புலனத்தில் அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தாள்.

அவனின் குறுஞ்செய்தி எனவும் மனம் துள்ளி குதித்து இறகில்லாமல் வானில் பறந்தது அவளுக்கு. வெகு ஆர்வமாய் அந்தப் புலனத்தைத் திறந்து பார்த்தாள். என்ன அனுப்பியிருப்பானோ என நொடி பொழுதில் மனம் பல மைல் தூரம் சென்று பலவிதமாய்ச் சிந்திந்து பூரித்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

இவள் அவன் மீது கோபத்திலுள்ளாலாளென எண்ணி மன்னிப்பு கேட்டு பலவிதமான ஸ்டிக்கர்ஸ்களை அனுப்பியிருந்தான்.

கையில் பூங்கொத்துடன் இவளிடம் இறைஞ்சி நிற்கும் இளைஞன் படம், என்னை மன்னிச்சிடேன் எனக் கெஞ்சும் பாவனையை முகத்தில் தாங்கி நிற்கும் குழந்தை முகம் கொண்ட படம், sorry என வடிவேலு கூறுவது போல் ஒரு படம் என அனுப்பி விட்டு,

அதன் கீழே, “இனி என்றும் என்னவள் கலங்குமளவு கிண்டல் செய்ய மாட்டேன் என உறுதிமொழி வழங்குகிறேன்” என இவ்வாறாகவே தூய தமிழில் அனுப்பி, அதன் கீழேயே, “Believe me Kannuma” என்றொரு வடிவேலு படத்தையும் அனுப்பிருந்தான்.

அனைத்தையும் பார்த்தவளோ, வயிற்றைப் பிடித்துக் கொண்டு பொங்கி சிரித்திருந்தாள். இன்ப வானில் உலவி கொண்டிருந்தது அவளது மனது.

அதன் பிறகு அவனது புலனத்தின் நிலைப்பாட்டை(status) சென்று பார்க்க, அங்கு அவன் போட்டிருந்த தொடர் வண்டி நிலைப்பாடுகள் அனைத்துமே ஆதினியை குறித்துப் போடப்பட்டிருந்த காதல் பாடல்களாய் இருந்தது.

கண்ணால் பேசும் பெண்ணே
எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே
எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறிச் செய்தேன்
எனை மன்னிப்பாயா

அவளின் கோபத்திற்கு மன்னிப்பு கேட்கும் பாடலாய் இப்பாடல் தோன்ற மென்னகை இதழோரம் வந்து ஒட்டிக் கொண்டது.

அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்
ஒண்ணாய் சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்

கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
கண்ண மூடி கண்ட கனவே
பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

அவளையே அவன் நேரில் வந்து கொஞ்சியதாய் தோன்றியது அவளுக்கு அடுத்த வந்த இந்தப் பாடலில். நாணம் முகத்தில் பரவச் செம்மையானது அவளின் முகம்.

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்தக் காதல் என்ன
ஒரு நடை வண்டியா
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணைக் கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல

மனம் அவனிடம் சென்று விடு, உன் காதலை உரைத்து விடு என அவளைத் தூண்டு ஏங்க செய்தது இந்தப் பாடல் வரிகள்.

ஹ்ம்ம்ம் எனப் பெரிதாய் பெருமூச்செறிந்தவள், அந்த மோன நிலையிலேயே கட்டுண்டிருந்தாள்.

அவன் இவளுக்காகச் செய்திருந்த அனைத்தும் இவளை கவர்ந்தீர்க்க தான் செய்தது. ஆனால் தாய் பேச கூடாதெனக் கட்டளையிட்டிருப்பதால் ஏதும் பதிலுரைக்காது தன்னைச் சமன்படுத்திக் கொண்டவள், புலனத்திலிருந்த அவனது புகைபடத்தைப் பார்த்து மனதிற்குள் ரசித்துக் கொண்டிருந்தாள்.

இதை அறியாத அகிலனோ அந்த நீல நிற குறியீட்டை கண்டு, அவள் இவனது குறுஞ்செய்தியை பார்த்தும் பதிலளிக்கவில்லையே எனக் கவலைக் கொண்டான். அவள் இவனது ஸ்டேடஸ்ஸை பார்த்ததையும் அறிந்திருந்தான். எவ்வாறு இவளை சமாதானம் செய்வதெனத் தனது அடுத்தத் திட்டத்தினை யோசிக்கவாரம்பித்தான்.

இருவரும் உறங்காது மற்றவரை எண்ணி கனவில் உலாவினர்.

தங்களது அறையின் பால்கனியில் நின்றிருந்த மாணிக்கத்திடம் வந்த மலர், “எனக்குப் பயமா இருக்குப்பா!” முகத்தில் கலக்கத்தைத் தேக்கி அவன் தோள் சாய்ந்து உரைக்க,

“மலருக்குப் பயம்லாம் வருமா?” எனக் கூறி சிரித்தார் மாணிக்கம்.

“ம்ப்ச் என்னைப் பத்தி தெரிஞ்சும் கிண்டல் செய்றீங்க பார்த்தீங்களா?” அவர் தோளில் ஒரு அடி வைத்து அவள் கூற,

“ஹ்ம்ம் எப்பவும் உன்னோட பயமெல்லாம பிள்ளைங்களோட வாழ்க்கை பத்தினதா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாடா! இப்ப யார் வாழ்க்கை பத்தி என்ன பயம்?”

“ஆதுவோட மாமியார் பத்தி தான் யோசனையா இருக்கு! அகிலன் நல்ல பையன தான்! ஆனா அவங்க சொந்த பந்தம் யாரும் இவங்க நல்லா இருககனும்னு நினைக்கலயே! அகிலன் அம்மா நம்ம ஆதுவை எப்படி ட்ரீட் பண்ணுவாங்களோனு நினைச்சு பயமா இருக்கு! இங்கே நம்ம அவளை ரொம்பவே பொத்தி வச்சி வளர்த்துட்டோமோனு இப்ப தோணுது. அவ ஹேண்டில் செஞ்சிப்பாளா? இல்லை நம்மளை தேடுவாளானு பயமா இருக்கு” கவலையாய் மலர் கூற,

“ஏன்மா இவ்ளோ யோசனை! சென்னைல தானே அவளும் இருக்கப் போறா! அவளுக்கு ஒரு பிரச்சனைனா என்னனு போய் நம்ம பார்த்துக்க மாட்டோமா என்ன? எல்லாம் நல்லபடியா நடக்கும்! நம்ம பொண்ணு சந்தோஷமா வாழுவா” மலரிடன் உரைப்பது போல் தனக்குமாய்ச் சேர்த்து ஆறுதல் உரைத்துக் கொண்டார் மாணிக்கம்.

— தொடரும்