முள்ளில் பூத்த மலரே – 18

அந்த திங்கட்கிழமை காலை பொழுதில் அனைவரும் பரபரப்பாய் அவரவர் அலுவல் வேலைக்காய் கிளம்பி கொண்டிருந்தனர்.

அந்தக் குடியிருப்பில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் நோக்கி அகிலன் நடந்து வர, அங்கே தனது வண்டியை துடைத்து நின்று கொண்டிருந்த மாணிக்கம் அவன் வருவதைக் காணவும் கை அசைத்தார்.

அவனும் “குட் மார்னிங் அங்கிள்” எனக் கூறி அவர் அருகே வர,

“ஏன் இவன் முகம் இன்னிக்கு வாட்டமா இருக்கு? வீட்டுல கல்யாணத்தைப் பத்தி பேசி ஒத்துக்காம போய்ட்டாங்களா? அப்படி ஒத்துகாத வீட்டுல எப்படி நம்ம பொண்ணைக் கட்டி கொடுக்கிறது? இவனுக்காகனு ஒத்துக்கிட்டாலும் கஷ்டம் தானே! முதல்லயே மாமனார் மாமியார் கூடக் கசப்பு வந்ததா இருந்துடுமே” அகிலன் அருகில் வர எடுத்துக் கொண்ட அந்த நொடி நேரத்திற்குள் மாணிக்கத்தின் மனது காற்றை விட வேகமாய் இத்தகைய எண்ணங்களுக்குள் பயணிக்க,

அவரருகே வந்தவன், “அங்கிள், மலர் ஆன்டி வாங்கிக் கொடுத்த வண்டி இன்னும் வச்சிருக்கீங்களா? இது புது மாடல் புல்லட்டா இருக்கே! இப்ப வாங்கினதா தான் இருக்கனும்” கேள்வியாய் அவரை அவன் பார்க்க,

“ஆமா இது புது வண்டி தான். கண்ணாவும் கண்ணம்மாவும் சேர்ந்து காசு போட்டு வாங்கிக் கொடுத்தாங்க. பேபிமா வாங்கிக் கொடுத்த வண்டி எங்க வீட்டுல இருக்கு! அப்பப்ப துடைத்துச் சர்வீஸ் செஞ்சி வச்சிப்பேன்! இப்பவும் பார்க்க புத்தம் புதுசா தான் இருக்கும்! அப்படி மெயின்டெய்ன் செஞ்சி வச்சிருக்கேன்” கண்கள் மின்ன பெருமையாய் அவர் பேசிக் கொண்டே இருக்க,

எனக்காகப் பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

எனக்காகப் பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !

எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்

சரியாய் அச்சமயம் இப்பாடல் அலைபேசியின் ஒலியாய் படிக்க,

“யாரு? மலர் ஆன்ட்டிக்கா இந்த ரிங்டோன் அங்கிள்” முகம் கொள்ளா புன்னகையுடன் அகிலன் கேட்க,

சிரிப்பாய் ஆமெனத் தலையசைத்தவர், கைபேசியை எடுத்து பேசினார்.

“சொல்லுடா பேபிமா”

மறுபக்கம் மலர் ஏதோ கூறவும், அசட்டுதனமாய்ச் சிரித்து,

“மறந்துட்டேன்மா… இதோ வரேன்” என்றவர் கைபேசியை வைக்கவும்,

“எதுவும் மேல வச்சிட்டு வந்துட்டீங்களா அங்கிள்? இருங்க நான் போய் வாங்கிட்டு வரேன்” மாணிக்கத்தைப் பேசவும் கூட விடாது அவன் ஓடி செல்ல,

“அகி” என அவனை அழைத்த மாணிக்கம்,

“பால்கனி ஜன்னல் பக்கமா போய் நின்னா போதும்” என்றவர் பால்கனி ஜன்னல் தெரியும் இடம் நோக்கி நடந்தார்.

அவரின் குரல் கேட்டு அவர் நடந்து சென்ற பாதை நோக்கி இவனும் சென்றான்.

அங்கு மேல் நோக்கி பார்த்து, “போடு பேபிமா” என இவர் கூறவும்,

சிரித்துக் கொண்டே மலர் எதையோ போட, சரியாய் அதைத் தனது கைகளில் பற்றிக் கொண்டார் மாணிக்கம்.

பால்கனியின் ஜன்னல் வழியாய் மலரின் முகத்தைப் பார்த்த அகிலனுக்கு இது புது வித மலராய் தோன்றியது.

சிரித்த முகமாய் இருந்தாலும், கண்ணில் தெரியும் கண்டிப்பு, ஸ்டிரிக்ட் ஆபிசராய் தான் அனைவருக்கும் மலரை காண்பித்தது.
ஆனால் இப்போது பார்த்த மலரின் கண்களில் தெரிந்த மின்னல், உதடுகளில் உறைந்திருந்த புன்னகை எனக் கண்டவன்,

“அங்கிள், நான் எப்ப ஆன்டிய பார்த்தாலும் செம்ம ஸ்டிரிக்ட் போலனு தான் நினைச்சிப்பேன். ஆனா இப்ப நான் பார்த்த ஆன்ட்டி அப்படியே வேற ஆளா தெரியுறாங்களே” அவன் கூறவும்,

“அப்படியா?” மாணிக்கம் கேட்க,

“ஆமா நீங்க அவங்க கூடவே இருக்கனால தெரியலை போல! தூரமா இருந்து பார்க்கிற எங்களுக்குத் தானே தெரியும்! கண்ணுல காதலோட கிண்டலான ஒரு சிரிப்போடனு அவங்க முகமே வித்தியாசமா அழகா இருக்க ஃபீல்” எனப் பேசிக் கொண்டே இருவரும் வண்டியினருகில் வந்திருக்க,

“நான் வண்டி சாவியை மறந்து வச்சிட்டு வந்தேன்! அதுக்குக் கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருந்தா அந்தச் சிரிப்போடேயே தான் தூக்கி போட்டா” என மாணிக்கம் விளக்கம் அளிக்க,

“ஹா ஹா ஹா.. சரி அங்கிள்! நான் ஆபிஸ் கிளம்புறேன்! நேரம் ஆகிட்டு” என்றவன் தனது வண்டி வரை சென்று விட்டு மீண்டுமாய் இவர் அருகில் வந்து,

“நான் இன்னும் அம்மாகிட்ட பேசலை அங்கிள்! கொஞ்சம் டைம் தாங்க” எனக் கெஞ்சலாய் அவன் கேட்க,

“நீ பேசிட்டு சொல்லுப்பா! ஒன்னும் அவசரமில்லை” கூறிவிட்டு தனது வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றார் மாணிக்கம்.

அலுவலகத்தில் இன்று எவ்வாறேனும் ஆதினியை பார்த்து அவளின் ஒப்புதலை நேரடியாய் பேசி தெரிந்து கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தான் அகிலன்.

அதன் எதிர்பதமாய் இன்று இவனைப் பார்க்கவே கூடாதென எண்ணியிருந்தாள் ஆதினி.

இன்று மட்டுமல்ல திருமணம் நிச்சயமாகும் வரை இவனை அலுவலகத்தில் சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென எண்ணியிருந்தாள். இதனால் ஏதேனும் பிரச்சனை வந்துவிடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே இவ்வாறு முடிவு செய்திருந்தாள்.

அன்றைய நாள் மாலை, அலுவலகப் பேருந்தில் ஏறி அமர்ந்த பின்னே, “ஹப்பாடா எப்படியோ இன்னிக்கு அவரைப் பார்க்காம இருந்தாச்சு” என மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டே ஆசுவாச மூச்சொன்றை அவள் விட,

சரியாய் அந்நேரம், “ஹாய் கண்ணுமா” எனக் கூறி அவளருகே வந்தமர்ந்தான் அகிலன்.

“ஹய்யோ இவர் எங்கே இங்கே வந்தாரு” என யோசித்தவளின் மூளை மறுநொடி,

“என்னது கண்ணம்மாவாஆஆஆ” அவன் அருகில் அமர்ந்திருப்பதைக் கூட மறந்து,
அவன் கண்ணம்மா என அவளை அழைத்ததையே பெருங்குற்றமாய் எண்ணி கோபமாய்,

“ஹலோ என்னைய கண்ணம்மானு கூப்பிட யாரு உங்களுக்கு ரைட்ஸ் கொடுத்தது? என் அப்பா மட்டும் தான் என்னைய அப்படிக் கூப்பிடலாம்” அவனை நோக்கி திரும்பி கோப பார்வையில் அவள் உரைக்க,

இவனுக்கோ இவள் இவ்வாறு பேசியதே உரிமை ஒலியாய் கேட்க, மேலும் அவளின் கோப பார்வையும் பாவனையும் இவனை மேலும் அவளை ரசிக்கச் செய்ய, “உன் ஆயா உன்னை அப்படித் தானே கூப்பிடுவாங்க” என்றவன் கூறவும்,

“இதெப்படி இவனுக்குத் தெரியும்?” எனச் சிந்திந்து கொண்டே அவனை இவள் பார்க்க,

“அது கண்ணம்மா இல்லடா செல்லகுட்டி! கண்ணுமா… க… ண்.. ணு.. மா” அவளை வம்பிழுக்கும் நோக்கோடு பேச,

“என்னது கண்ணுமாவாஆஆஆஆ”
ஆஆஆ என விரிந்த வாயை மூடாது வியப்பாய் அவனை அவள் நோக்க,

தன் கை கொண்டு அவளின் தாடையைத் தட்டி வாயை மூடியவன், “ஆமா கண்ணுமா. உன்னைய கட்டிக்கப் போறவன் எப்படி எல்லாரை போலவும் உன்னைய கூப்பிடுறது? அதான் உனக்குனு நான் மட்டும் கூப்பிடுற மாதிரி ஒரு ஸ்பெஷல் நேம் யோசிச்சு இதை வச்சேன்” எப்படி இருக்கு இந்தப் பெயர் எனப் புருவம் உயர்த்திக் கண் சிமிட்டி கேட்க,

அவளின் மனதில் நம்தன நம்தன எனப் பாடல் ஆரவாரமாய் ஒலிக்கவாரம்பித்தது. இதயம் உற்சாகத்தில் துள்ளி குதித்து வாய் வழியாய் வெளி வந்திடும் போல் இருந்தது. ஏன் தான் இவ்வாறு மகிழ்வு கொள்கிறோமெனப் புரியாமல் திகைத்து, வைத்த கண் வாங்காமல் அவன் முகத்தை மட்டுமே பார்த்திருந்த ஆதினியை கலைத்தது அப்பேருந்தின் இயக்கவொலி.

அப்பேருந்தினை இயக்கிய ஓட்டுனர் அலுவலகத்தைத் தாண்டி பிரதான சாலைக்குள் பயணித்த நேரம் தான் தன்னிலை அடைந்தாள் ஆதினி.

இத்தனை நேரம் உணராத அவனின் அருகாமை தற்போது அவளைச் சிலிர்க்க செய்ய, நாணம் கொள்ளும் முகத்தினை மறைக்க, ஜன்னல் பக்கமாய் முகத்தினைத் திருப்பிக் கொண்டாள்.

இத்தனை நேரமாய் அவள் முகம் காட்டிய உணர்வுகளின் வர்ணஜால கலவையைக் கண்டவனுக்கு அவளின் உணர்வுகள் நன்றாகவே புரிந்தது. அதிலும் தற்போது தனதருகாமையால் சிவந்திருக்கும் அவளின் வதனம் அவனுக்கான அவளின் ஒப்புதலை தெரிவிக்க, கண் சிமிட்டாது அவளின் பக்கவாட்டுத் தோற்றத்தை பாரத்திருந்தான். இதற்கு மேல் அவளிடம் ஏதும் பேசவெனத் தோன்றவில்லை அவனுக்கு. ஆனால் இந்நாளை இந்நொடியை இவ்வாறு அவளைப் பார்த்துக் கொண்டே கடக்கவும் மனம் விரும்பாதிருக்க, “கண்ணுமா” மீண்டுமாய் அவளை அவன் கேட்க,

முகத்தைத் திருப்பாது, “ஹ்ம்ம்”.. காத்து மட்டும் தான் வருது என்ற வகையில் அவள் ம் கொட்ட, சற்றாய் சிரித்தவன், “என் பக்கம் திரும்பி பாரேன் கண்ணுமா” அவன் கூற,

“ஹய்யோ எல்லாரும் நம்மளை தான் பார்த்துட்டு இருப்பாங்க” அதே காத்து தான் வருது பதத்தில் மெல்லமாய் அவள் கூறவும், இவன் சட்டெனத் திரும்பி பார்க்க, சிலர் இருக்கையைச் சாய்த்து உறங்கி கொண்டிருக்க, பலர் கைபேசியில் உரையாடிக் கொண்டு, பாட்டு கேட்டு கொண்டோ அல்லது படம் பார்த்துக் கொண்டோ இருந்தனர். அந்த அலுவலகத்தில் ஆண் பெண் ஒன்றாய் அமர்ந்திருப்பது வழக்கமான செயல் என்பதால் அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர்.

“யாரும் நம்மளை பார்க்கலை! நீ என்னைய பாரேன்” அவன் குரலில் இருந்த கெஞ்சலில், தானாய் அவளின் முகம் திரும்ப,

“என்னைய உனக்குப் பிடிச்சிருக்கா?” நேரடியாய் அவள் முகம் நோக்கி அவன் கேட்க,

இவளுக்குத் தான் வெட்கம், பதட்டம், பயம் எனக் கலவையான உணர்வுகள் தாக்க எவ்வாறு இதை எதிர் கொள்வதெனப் புரியாமல் அவனையே நோக்கியிருந்தாள்.

“இப்படி நீ என்னைப் பார்த்துட்டே இருக்கிறதே உன் மனசை புரிய வச்சாலும், உன் வாய் திறந்து சொன்னா மனசு சந்தோஷப்படும்” அவனும் அவளை மட்டுமே பார்த்திருந்து கூற,

சட்டென முகத்தைத் திருப்பியவளின் மனமோ, “அய்யோ என்ன செஞ்சு வச்சிருக்க நீ ஆது” எனக் கண்கள் சுருக்கி தன் நெற்றியில் அடித்துக் கொண்டு தனக்குத் தானே கூறி கொண்டாள்.

அவளின் செய்கையை ரசித்துச் சிரித்தவன், “ஐ லவ் யூ” என்றான்.

மீண்டுமொரு இன்ப அதிர்ச்சி தாக்க, கை கால்களெல்லாம் சில்லிட, மனம் உவகையில் பொங்க, அதைக் கட்டுபடுத்தும் வழியறியாது கையிலிருந்த பையினை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு உதட்டினை கடித்துக் கொண்டு அவன் கூறியதை உள் வாங்கியிருந்தாள் ஆதினி.

“உன் அம்மா அப்பா சம்மதம் சொன்னா தான் நீ என் காதலை ஏத்துப்பனு தெரியும். அதான் உன்னோட அப்பாகிட்டயே என்னோட விருப்பத்தைச் சொல்லி பேசினேன். இப்ப தான் உங்க வீட்டுல எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்களே! உன் மனசுல என்ன இருக்குனு சொல்லலாமே கண்ணுமா” எதையாவது சொல்லேன் என்பது போல் அவன் கேட்டிருக்க,

“அப்பா அம்மாக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும்” தன்னுடைய பையின் மீதே பார்வை பதித்தே அவள் கூறவும்,

“உன்னை உனக்காகத் தான், உன்னோட இயல்புக்காகத் தான் எனக்குப் பிடிக்கும் கண்ணுமா! அது மாதிரி அப்பா அம்மாக்காகனு இல்லாம என்னை எனக்காக என்னோட இயல்புக்காக உனக்குப் பிடிக்காதா” ஆசையாய் அவளைப் பார்த்துக் கொண்டே அவன் கேட்க,

சற்றாய் அவளின் மனம் சமன்பட்டிருக்க, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “ஆனா உங்களைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே” அவள் கூறவும்,

“அப்ப தெரிஞ்சிக்கலாம்! இரண்டு பேரும் பேசி பழகி தெரிஞ்சிப்போம்!” அவன் நேரடியாய் இவ்வாறு கேட்கவும்,

ஆஆஆ என மீண்டுமாய் அவள் வாயை பிளக்க,

அவள் தாடையைத் தட்டி வாயை மூடியவன், “இப்படி அடிக்கடி வாயை திறக்காத கண்ணுமா!” என்றான்.

அவள் ஏன் என்பது போல் அவனை நோக்க,

“இந்த ஏன்னுக்கான காரணத்தை நமக்குக் கல்யாணமான பிறகு சொல்றேன்” குறும்பாய் சிரித்து அவனுரைக்க,

“எதுவும் வில்லங்கமா யோசிச்சிருப்பாரோ?” எண்ணி கொண்டவளின் மனது பதட்டமடைய,

அதைக் கண்டு கொண்டவனோ, “அய்யய்யோ அதுக்குனு என்னைய பொறுக்கி ரேஞ்ச்க்கு யோசிக்காத கண்ணுமா! பேசிக்கலி ஐம் ஃப்ரம் எ டீஸன்ட் ஃபேமிலி” சட்டையை இழுத்துவிட்டுக் கண்களை உருட்டி அவன் கூறவும், வாய்விட்டு சிரித்து விட்டாள்.

“என் ஃபேமிலியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” அவள் கேட்க,

“எல்லாம் தெரியும்”

அவனின் பதிலில் ஆச்சரிய பார்வை பார்த்தவள், “எப்படி” கண்கள் வழியாய் அவள் கேட்க,

“உங்க அப்பா தான் சொன்னாங்க” என்றவன், “என் ஃபேமிலியை பத்தி உனக்குத் தெரியுமா?” எனக் கேட்டான்.

அவள் தெரியாதெனத் தலையசைத்து உதட்டை பிதுக்க, அவளின் முகப் பாவனையில் சிரித்தவன், “பாரு என்னைய பத்தி உனக்கு எதுவும் தெரியலை! அதான் பேசி பழகலாம்னு சொன்னேன்” என்றவன் அவளின் கைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டான்.

“நீ இன்னும் உனக்கு என்னைய பிடிக்குமா பிடிக்காதானு சொல்லவேயில்லையே” அதே கேள்வியில் வந்து நிற்க,

அவள் முகத்தை ஜன்னல் நோக்கி திருப்பிக் கொண்டு ஏதோ சொல்ல வர, அவளின் தாடை பற்றித் தன்னை நோக்கி காணுமாறு திருப்பியவன், “இப்ப சொல்லு” என்றான்.

அவனின் ஆர்வம் அவளுக்குப் புரிந்தாலும், இதைக் கூறும் நேரமும் காலமும் இதுவல்ல என உணர்ந்தவள், “நமக்கு நிச்சயமாகட்டும்! அப்புறம் சொல்றேனே” உங்களைப் பிடிக்கும் ஆனா இப்ப சொல்ல முடியாது என்ற பாவனையில் அவள் கூறவும்,

“ஹ்ம்ம் சீக்கிரம் வீட்டுல பேசி நிச்சயம் பண்ணுடா மடையா! அப்புறம் சொல்றேனு சொல்ற! ஹோகே! வீட்டுல பேசிடுவோம்” இதற்கு மேலும் இதைப் பற்றித் தனது தாயிடம் பேசுவதைத் தள்ளி போட கூடாதென மனதில் குறித்துக் கொண்டான்.

இருவருமாய்ப் பேசிக் கொண்டே தங்களது குடியிருப்பை அடைந்து படிக்கட்டு வழியாய் நடந்து இரண்டாவது மாடி ஏறிக்கொண்டிருந்த நேரம், “என் புருஷனை பத்தி இனி இங்க யாராவது குறை பேசுனீங்க! அவ்ளோ தான்” என்றொரு ஆங்கார குரல் இவர்களின் செவியைத் தீண்டியது.

— தொடரும்