முள்ளில் பூத்த மலரே – 17
அடுத்த வந்த நாட்கள் அனைவருக்கும் பரபரப்பாய் சென்று கொண்டிருந்தது.
காலை வேளையில் மலரும் ஆயாவும் சமையல் வேலையில் ஈடுபட, மாணிக்கம், மது மற்றும் ஆதுவை குளிக்க வைத்துச் சீருடை அணிய வைத்து பள்ளிக்கு செல்ல தயார் செய்து கொண்டிருப்பான்.
பின்பு இவர்களை அவனது புல்லட் வண்டியிலேயே பள்ளிக்கு அழைத்துச் செல்வான். பள்ளி வளாகத்தில் இருவரும் இவனுக்கு முத்தமிட்டுவிட்டே இறங்கி பள்ளிக்குள் செல்வர். அதனை வாடிக்கையான நிகழ்வாய் பழக்கப்படுத்தி வைத்திருந்தான். மது ஆதினியின் தோழமைகள் அனைவரையும் தெரிந்து வைத்திருந்தான். மாலை பள்ளி முடிந்து இவர்களை வீட்டிற்கு அழைத்து வரும் நேரம் அவர்களின் தோழமைகளிடம் பேசி விட்டே புறப்பட்டு வருவான். பிள்ளைகளுடனான மாணிக்கத்தின் இணக்கம் நாளுக்கு நாள் அதிகரித்திருந்தது.
பிள்ளைகளைக் காலை மாலை தானே பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்பதற்காகவே பள்ளி சவாரியை வேண்டாமெனக் கூறி விட்டான். அதை ஈடு செய்யும் விதமாய் மதிய வேளையில் நிறையச் சவாரி ஏற்று நெருந்தூர பயணத்திற்கும் சென்று வந்தான். கடுமையாக உழைக்கவும் செய்தான்.
இவர்களின் திருமணத்தைப் பதிவு செய்துவிட்டு, அதை வைத்து பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயரை மாற்றினான். வீட்டு ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவனாய் இவன் பெயரை மாற்றினான்.
மனதால் மலருடன் வெகுவாய் நெருங்கியிருந்தான் மாணிக்கம். தன் கணவன், தன் மனைவி என்ற ஆழ்ந்த அழுத்தமான உணர்வும் உறவும் இருவரையும் பிணைக்கத் துவங்கியிருந்தது.
அடுத்த மூன்று மாதத்தில் மலரிடம் கூறியது போல் அவளின் தாய் தந்தையரிடம் பேசி சென்னைக்கு அழைத்து வந்திருந்தான்.
அவர்கள் சென்னை வந்த பிறகு அந்த வீடே கலகலவென மாறியிருந்தது. சொந்த பந்தங்களுடன் கூடிய இனிமையான நாட்களாய் நகர்ந்தது.
மலரின் தாய், இப்பிள்ளைகளை இரவில் தங்களுடன் படுக்க வைத்துக் கொண்டார். ஆதினி மதுரனை தனியாய் படுத்துறங்கவும் பழக்கபடுத்த ஆரம்பித்தார். ஐந்தாறு மாதங்கள் இவர்களுடன் தங்கியிருந்தே ஊருக்கு சென்றனர்.
மலர் மாணிக்கம் மனதின் இணக்கம் மெய் தீண்டலுடன் கூடிய தாம்பத்தியமாய் மாறியிருந்தது.
திருமணமாகி எட்டு மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் இரவில் கலக்கமான முகத்துடன் மலர் படுக்கையறைக்குள் வருவதைப் பார்த்த மாணிக்கம், “என்னாச்சு பேபிமா?” என வினவினான்.
அவனருகில் அமர்ந்தவள், “நான் உங்களுக்கு எதுவும் குறை வச்சிருக்கேனாப்பா? இல்ல எதுவும் குறையா உங்களுக்குத் தோணிருக்கா?” குழப்பமான முகப் பாவனையில் அவள் கேட்க,
“ஏன்டா பேபிமா இப்படிக் கேட்குற? யாரும் எதுவும் சொன்னாங்களா?” அவளின் கலக்கத்திலும் குழப்பத்திலும் கலங்கிய இவன் இவ்வாறு கேட்க,
“இல்லங்க, ஆயா ஒன்னு கேட்டாங்க இன்னிக்கு… இதைப் பத்தி நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிருக்கோம் தான். ஆனா இப்ப யோசிக்கும் போது உங்களைப் பத்தி யோசிக்காம சுயநலமா யோசிச்சிட்டேனோனு தோணுது” அவள் கூற,
“என்னமா விஷயம்? அதை முதல்ல சொல்லு? ஆயா என்ன கேட்டாங்க?”
“எப்ப பாப்பா அடுத்தப் பாப்பா பெத்துக்கப் போறனு கேட்டாங்க” அவன் முகம் நோக்கி அவள் கூற,
“இதுக்கா இந்த அலப்பறை” எனக் கூறி சிரிக்கவாரம்பித்தான் மாணிக்கம்.
“என்ன சிரிக்கிறீங்க? நான் எவ்ளோ கவலையா பேசிட்டு இருக்கேன்” முகத்தை உம்மென வைத்துக் கொண்டு அவள் கூற,
“சரி அதுக்கு நீ என்ன சொன்ன?” அவன் கேட்க,
“ஆதுவை பெத்த உடனேவே எனக்கு ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க. அதனால அடுத்து எனக்குக் குழந்தைலாம் பிறக்காது ஆயானு சொன்னேன்! நான் அப்படிச் சொன்னதும் அவங்க முகமே மாறிப் போச்சு! ஆயா உங்களை அவங்க மகனா பார்க்கிறாங்க! உங்களுக்குனு வாரிசு இல்லாமலேயே போய்டுச்சேன்ற மாதிரி ரொம்ப வருத்தப்பட்டுப் பேசினாங்க!” அவள் பேசிக் கொண்டே போக,
“சரி இதுல எதை நினைச்சு நீ கவலைப்படுற” அவளை நோக்கி கோபமாய்க் கேட்டிருந்தான் மாணிக்கம்.
“இல்லப்பா என்ன இருந்தாலும் உங்களுக்குனு ஒரு குழந்தை பிறக்கனும்னு உங்களுக்கு ஆசை இருந்திருக்கும்ல! அதை நான் கண்சிடர் பண்ணிருக்கனும்னு தோணுச்சு. அதான் மதுவும் ஆதுவும் இருக்காங்களே நமக்கு வேற பாப்பா எதுக்குனு நீங்க சொன்னதுக்கு உடனே ஓகே சொல்லிருக்கக் கூடாது. உங்களுக்காகனு யோசிச்சிருக்கனும்னு தோணுச்சு” அவனின் கோபத்தில் தயங்கி தயங்கியே அவள் கூற,
அவள் மீது பெருத்த கோபம் வந்தாலும், ஏற்கனவே கவலை கொண்டிருக்கும் அவளை மேலும் வருத்த மனமில்லாத மாணிக்கம், உட்கார்ந்த நிலையிலேயே இரு கைகளையும் நீட்டி கண் சிமிட்டி அவளை அழைக்க, அவன் கைகளுக்குள் பாந்தமாய் அடங்கியவளின் மனமோ அடங்காமல் ஏதேதோ சிந்திந்து கவலை கொண்டிருந்தது.
தன் கைவளைக்குள் அவளை வைத்துக் கொண்டு பேச தொடங்கினான் மாணிக்கம்.
“எனக்குனு ஒரு வாழ்க்கையே இல்லனு வாழ்ந்திட்டு இருந்தவனுக்கு வாழ்க்கை மேல ஒரு பிடிப்பை உண்டாக்கினதே கண்ணம்மாவும் கண்ணாவும் தான். அவங்க தான் இந்த ஜென்மத்துல என்னோட வாரிசு. நீயே நான் உங்களுக்குக் குழந்தை பெத்து தரேன்னு சொல்லிருந்தாலும் நான் வேண்டாம்னு தான் சொல்லிருப்பேன். அந்தக் குழந்தைனால கண்ணாவும் கண்ணம்மாவும் ஒரு நிமிஷம் வருத்தப்பட்டாலும் அதை என்னால தாங்கிருக்க முடியாது. அப்படி ஒரு சூழலை எப்பவுமே நான் உருவாக்கிட கூடாதுனு ரொம்பவே தீர்க்கமா இருந்தேன் பேபிமா! அதனால இனி இந்த விஷயத்தை நினைச்சு மனசை குழப்பிக்கக் கூடாது. நமக்கு இரண்டு பிள்ளைங்க அது மதுரனும் ஆதினியும் தான்” எனக் கூறி அவள் முகத்தை நிமிர்த்திக் கண்ணோடு கண்ணாய் அவன் நோக்க,
சற்று எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்ட மலர், “ஏன்ப்பா என்னை முன்னாடியே பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கல” கண்ணில் துளிர்த்த நீருடன் கேட்டிருந்தாள்.
ஒரு கையை அவன் கழுத்தில் வைத்து மறுகையை அவன் இடையினில் வைத்து தலையை மார்பினில் வைத்து அணைத்து கொண்டவள், “உங்களுக்கே நான் கண்ணாவையும் கண்ணம்மாவையும் பெத்திருப்பேனே!” ஏக்கமாய் அவள் கூற,
“அதான் எல்லாத்துக்கும் காரணமிருக்கும்னு கடவுள் சொல்வாருனு சொல்வியே பேபிமா! அப்படி இதுக்கும் காரணம் இருக்கும்னு நம்புவோம்” அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்து அவன் கூற,
“உங்கள கல்யாணம் செய்றதுக்கு முன்னாடி என் வாழ்க்கையோட லட்சியங்கள் எல்லாம் என்னோட வேலையைச் சார்ந்ததும் பிள்ளைங்களோட எதிர்காலத்தைச் சாரந்ததுமா தான் இருந்திருக்குப்பா! அதைத் தவிர வேற ஆசைகள்னு எனக்கு எதுவுமே இருந்ததில்லை. ஆனா இப்போ…” அவனது மார்பில் தலை வைத்துக் கொண்டே அவள் பேசியிருக்க,
“ஆனா… இப்போ என்னாச்சு என் பேபிமாக்கு” மார்பில் சாய்ந்திருந்தவளை ஆட்டிக் கொண்டே அவன் கேட்க,
“அதையும் தாண்டி பல ஆசைகள் இப்ப மனசுல உருவாக்கிருக்கு. எப்பவும் உங்ககூடவே இருக்கனும். நிமிஷமும் உங்களைப் பிரிஞ்சி இருக்கக் கூடாது. உங்களுடனான என் வாழ்வு இன்னும் நீண்டுகிட்டே போகனும்! நமக்கு வயசாகி போனாலும் இப்படியே அன்பா அரவணைப்பா காதலிச்சிட்டே இருக்கனும்! இப்படிப் பல ஆசைகள் இப்ப மனசுல வருதுப்பா! உண்மையான காதல் உணர்வு எப்படி இருக்கும்னு நான் உணர்ந்தது உங்ககிட்ட தான்ப்பா! எப்பவும் என் கூடவே இருப்பீங்க தானே! என் ஆசையெல்லாம் நிறைவேத்துவீங்க தானே” ஏக்கமாய் அவள் கேட்க,
“நான் எந்தளவுக்கு உன்னை நேசிக்கிறேனு தெரியுமா பேபிமா?” அவளைத் தன் முகம் பார்க்குமாறு அமர்த்தி அவள் கண்களை நோக்கி அவன் கேட்க,
“எந்த நிலையிலும் மனசாலும் உடலாலும் என்னை என்னிக்குமே காயப்படுத்திட கூடாதுங்கிற அளவுக்குக் கவனமா நீங்க என்னைப் பார்த்துக்கிறதுலேயே தெரியும்ப்பா உங்களுக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு”
“அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?”
“ஏன் அதை உங்க வாயால நீங்க சொல்ல மாட்டீங்களா?” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் கேட்க,
அவளின் முகத் திருப்பலில் வாய்விட்டு சிரித்தவன், “என் பேபிமானா எனக்கு உயிர். என் அம்மாக்கு பிறகு எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுனு பார்த்து பார்த்துச் செய்றது என் பேபிமா தான். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நான் என் அம்மாவை நினைச்சு கூடப் பார்க்கவே இல்லை. அந்த அளவுக்கு என் பேபிமா என்னைக் கவனிச்சிக்கிறா! என் பேபிமாவை அவளோ பிடிக்கும் எனக்கு” அவன் கண்களில் காதல் மின்ன கூறவும்,
ஆசையாய் ஆசையாய் அவனைக் கட்டிக் கொண்டாள் அவனது பேபிமா.
அதன்பின் வந்த நாட்கள் முழுவதும் உழைப்பும் முயற்சியும் மட்டுமே நிரம்பியிருந்தது.
ஆட்டோ ஓட்டிக் கொண்டே மாணிக்கம், டிராவல்ஸ் வைப்பதற்கான கடை தேடுதலையும், வண்டி வாங்குவதற்கான லோன் வேலையிலும் ஈடுபட்டிருக்க, மலர் தனது ஆசிரியர் பணியைச் செயலாற்றிக் கொண்டே, அவளது லட்சிய பயணத்திற்கான பட்ட மேற்படிப்பை தொடர்ந்தாள்.
டிராவல்ஸ் நல்ல லாபத்தை அள்ளி வழங்க தொடங்கியபின் ஆட்டோவினை வாடகைக்கு விட்டவரிடமே வித்துவிட்டான்.
தொழில் தொடங்கி இரண்டு வருடம் கடந்திருந்த போது அவனது கடை அமைந்திருந்த மாவட்டத்தின் வணிகச் சங்க மாவட்ட செயலாளராய் தேர்ந்தெடுக்கப்பட்டான் மாணிக்கம்.
அன்று அவனுடைய முதல் மேடை பேச்சு. பார்வையாளர் இருப்பிடத்தில் அமர்ந்து அவனின் பேச்சையும் அவனையுமே சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் மலர்.
வெண்ணிற வேஷ்டி சட்டையும், படிய வாரிய சுருள் கேசமும், முறுக்கிய மீசையுமாய் ஆஜானுபாகுவாய் மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த அவனின் தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இம்மாதிரியான மேடை பேச்சுகளில் தனது சுய வரலாறையோ அல்லது மறைந்த அறிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டி அரசியல் பேசும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்த நிலையில், மாணிக்கம் வணிகர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு அவர்களது தொழிலில் முன்னேற வேண்டுமெனவும், சேமிப்பு என்பது வணிகர்களின் வாழ்வில் எந்தளவிற்கு முக்கியம் என்பதையும் விளக்கி பேசிக் கொண்டிருந்தான்.
“காலம் மாறிட்டே இருக்கு! நாம செய்ற தொழிலும் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறும் போது, நாமும் அந்த மாற்றத்துக்கு ஏத்த மாதிரி யோசிச்சு மக்களைக் கவரும் வகையில் என்னவெல்லாம் செய்யனுமோ செஞ்சு நமக்கு நடக்குற வியாபாரத்தைத் தக்க வச்சிக்கனும். அதே மாதிரி வியாபாரிகளுக்கு எப்பலாம் அதிக லாபம் வருதோ அப்பவெல்லாம் அதுல பாதிப் பணத்தைச் சேமிச்சு வையுங்க. இப்படி நீங்க சேமிச்சு வக்கிறீங்கறதே மறந்துட்டு வாழுங்க. அந்தச் சேமிப்பை தொடர்ந்து செஞ்சிட்டே இருங்க. ஏன்னா மாசம் சம்பளம் வாங்குறங்களுக்கு எந்த நிலையிலும் மாசமானா கையில காசு வந்துடும். ஆனா நமக்கு வியாபாரம் செஞ்சா தான் காசு. தொழில் எப்ப வேணாலும் நொடிஞ்சு போகலாம்! அப்பவும் நம்ம குடும்பத்தைக் காப்பாத்துற திராணியோட தான் நம்ம இருக்கனும். வருங்காலத்தைப் பற்றிய திட்டமிடல் எப்பவுமே நமக்கு இருக்கனும்” இவ்வாறாக அவன் பேசி முடித்த சமயம், மக்களின் ஆராவார கைதட்டல் அவ்விடத்தை அதிர செய்தது.
விழா முடிய மேடையிலிருந்து இறங்கி தனது மீசையை முறுக்கி கொண்டே “எப்பூடி” எனக் கேட்டுக் கொண்டே மலரின் அருகில் அவன் வர, செம்ம எனக் கூறி முகம் கொள்ளா புன்னகையுடன் அவனை எதிர் கொண்டாள்.
அவனின் கழுத்தில் போட்ட மாலையைக் கைகளில் வைத்துக் கொண்டு அந்தப் புல்லட் வண்டியில் பின்னே அமர்ந்து அவனிடையைப் பிடித்து அமர்ந்திருந்தவளுக்கு வாழ்வில் எதையோ சாதித்த உணர்வும், உவகையும் பொங்கி எழ, பேசிக் கொண்டே வந்தாள்.
“அசத்திட்டீங்கப்பா! நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்! எல்லாரோடைய பார்வையும் உங்க மேல தான்ப்பா இருந்துச்சு! வீட்டிக்குப் போனதும் திருஷ்டி சுத்தி போடனும்” அவள் கூறவும்,
“ஏன் பேபிமா சுத்தி மட்டும் தான் போடுவியா! வேற எதுவும் இல்லையா?” குறும்பாய் அவன் கேட்க,
“ஹ்ம்ம் ஆசை தான்!” பின்னிருந்து அவன் முதுகில் லேசாய் ஒரு அடி வைக்க இருவருமாய்ச் சேர்ந்து சிரித்தனர்.
இவர்கள் இருவரும் வீட்டை வந்து சேர்ந்து வாசலில் செருப்பை விட்டிருந்த நேரம், “பாப்பா இந்தா காபி” என ஆதினியிடம் காபியை கொடுத்த மதுரன், தரையைத் துடைக்கும் மாஃபை எடுத்து துடைத்துக் கொண்டிருந்தான்.
“என் செல்ல அண்ணா” அவன் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சி கொண்டவள் சோஃபாவில் அமர்ந்து டிவியைப் பார்த்திருந்தாள்.
மதுரன் ஏழாம் வகும்பு படித்துக் கொண்டிருக்க, அவள் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.
மலரும் மாணிக்கமும் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்த மதுரன், “அப்பா உங்க பொண்ணு ஓவரா தான் என்னைய வேலை வாங்கிட்டு இருக்கா! இன்னிக்கு அவ வீட்டை பெருக்கனும் நான் துடைக்கனும்னு தான் பேச்சு! வீட்டை பெருக்கினதும் டயர்ட் ஆகிட்டேனு என்கிட்ட காபி வாங்கிக் குடிச்சிட்டா”
மாணிக்கத்திடம் தனது புகாரினை அவன் தொடங்க, மாணிக்கத்தைக் கண்டதும் ஆதினி தாவி வந்து அணைத்துக் கொள்ள, அவளைத் தூக்கி வைத்து முத்தமிட்டான் மாணிக்கம்.
“சரி அவ வேலை வாங்கினா நீ ஏன்டா செய்ற? தங்கச்சி சொன்னானு வேலையும் செய்றது அப்புறம் என்கிட்ட புகாரும் வாசிக்கிறது” சிரித்துக் கொண்டே மாணிக்கம் கேட்க,
“என்ன செய்ய அண்ணனா பிறந்துட்டேனே” பெரிய மனுஷ தோரணையில் அவன் அலுத்து கொள்வதைப் பார்த்து இருவரும் சிரித்திருந்தனர்.
அப்போது கடைக்கு ஏதோ சமையல் சாமான் வாங்க சென்றிருந்த ஆயா வீட்டினுள் நுழைந்தார்.
“நான் செய்றேனு சொன்னா இந்தக் கண்ணனும் கண்ணம்மாவும் கேட்காம இந்த வேலையைச் செஞ்சிட்டு இருக்காங்க” ஆயா இப்போது இவர்களைப் பற்றிக் கூற,
“நான் தான் ஆயா மதுகிட்டயும் ஆது கிட்டயும் சொன்னேன்! ஆயாக்கு வயசாகிட்டு அம்மாக்கும் படிக்கிற வேலைலாம் இருக்கு அதனால லீவ்ல வீட்டுல இருக்கும் போது ஆயாக்கு கூட மாட உதவி செய்யனும்! வீட்டு வேலை ஒன்னாவது செய்யனும்னு சொன்னேன்” மலர் கூற,
“ஏன் பாப்பா அப்படிச் சொன்ன? என் பேர பிள்ளைகளுக்குச் செய்றதுல என்ன இருக்கு” ஆயா கூற,
“இப்ப உங்க பேரனும் உங்க கூட வந்து தங்கியிருக்காங்க. அவங்களையும் நீங்க பார்கக்னும்ல. உங்க பேரனே இப்ப வேலை போய்ச் சம்பாதிக்கும் போது நீங்க இங்க வேலை செய்யனுங்கிற அவசியமே இல்ல தானே! ஆனா எங்களுக்காகத் தானே செய்றீங்க! அப்ப உங்க நலனையும் நாங்க பார்க்கனும் தானே” மலர் கூற,
கண்களில் பாசம் பொங்க மலரின் கன்னத்தைத் தடவி, “நீங்க எல்லாரும் எப்பவும் இப்படிச் சந்தோஷமா இருக்கனும்டா பாப்பா! அது தான் சாமிகிட்ட நான் வேண்டிக்கிறது” கூறினார் ஆயா.
அன்றைய நாளிற்குப் பிறகு மாணிக்கத்தைத் தொழிலதிபராய் பல விழாக்களில் விருந்தினராய் அழைத்தனர். அவனின் மேடை பேச்சு பலருக்கும் பிடித்திருந்தது. பேச்சாளுமை நிறைந்தவனாய் அறியப்பெற்றான் அவன்.
அடுத்த இரண்டு வருடத்தில், மலர் தனது PhDயை முடித்து அதற்கான பட்டமளிப்பு விழாவில் வெகு மகிழ்வாய் மாணிக்கம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டாள்.
அவர்களின் இல்லத்தை விரிவாக்கம் செய்து “மாணிக்க மலர் பவனம்” எனப் பெயரிட்டுக் கிரகபிரவேஷம் செய்தனர்.
அதன் பின் கல்லூரியில் பேராசிரியராய் பணியில் அமர்ந்தாள். இது தான் அவளின் வாழ்நாள் லட்சியமாய் இருந்தது.
காலச் சுழற்சியில் மலரின் தாய் தந்தையரும், ஆயாவும் இறைவனடி சேர்ந்தனர். அந்த மொத்த குடும்பத்தையும் இவர்களின் இறப்பு வெகுவாய்ப் பாதித்தது. அதிலிருந்து மீண்டு வர ஒவ்வொரு சமயமும் வெகுவாய் போராட வேண்டியதாய் இருந்தது.
அதன்பின் வீட்டு வேலைக்கு மட்டும் ஆட்கள் வைத்து விட்டு, சமையலை இவர்களே ஒருவர் மாற்றி ஒருவர் செய்வது போல் பழக்கி கொண்டனர்.
அது மதுரன் கல்லூரியில் பயின்றிருந்த முதல் வருடம்.
அந்த வருடத்தில் ஒரு வாரம் சுற்றுலா பயணமாய் வட மாநிலங்களுக்குச் செல்ல அவனின் கல்லூரி முடிவு செய்ய, அதற்காக அவனைப் பேருந்து ஏற்றிவிடவென வந்தார் மாணிக்கம்.
பேருந்தில் காலியான ஓர் இருப்பிடத்தினைப் பார்த்து தனது பையை வைத்து விட்டு கீழிறங்கி வந்த மதுரன், தனது நண்பர்களை அவரிடன் அறிமுகம் செய்து வைத்தான்.
அனைவரின் முகத்திலும் சுற்றுலா செல்வதற்கான களிப்பும் பூரிப்பும் நிரம்பி வழிந்தது.
அறிமுகப் படலம் முடிந்ததும் இவர்கள் இருவரையும் தனித்து விட்டு அவர்கள் செல்ல, “என்னப்பா கவலையா தெரியுறீங்க?” மதுரன் கேட்க,
“கண்ணா! அப்பா இது வரைக்கும் அறிவுரைனு எதுவும் செஞ்சதில்லை. உங்க அம்மா தான் உங்களுக்கு நிறைய அறிவுரை சொல்லி வளர்த்தது. ஆனா இப்ப ஒன்னு சொல்லனும்னு எனக்குத் தோணுது” என்றவர் கூறவும்,
“என்னது சொல்லுங்கப்பா! என் கிட்ட ஏன் இவ்ளோ தயக்கம்” எனக் கேட்டான்.
“போற இடத்துல பசங்க, கொஞ்ச குடிச்சி பாரேனு கண்டிப்பா குடிக்க வைக்கப் பார்ப்பாங்க! அப்பாவும் இந்த வயசை கடந்து வந்தவன் தானே! நானும் தம் அடிப்போமே தண்ணி அடிப்போமேனு எல்லாத்தையும் செஞ்சி பார்த்தவன் தான்! என் அம்மாக்கு பிடிக்காதுனு சும்மா டிரை பண்ணி பார்த்ததோட விட்டுட்டேன்! இப்ப நீ போற இடத்துல உன் விருப்பம் தான்! எதுவாயிருந்தாலும் தப்புனு தோணுச்சுனா செய்யக் கூடாது! செஞ்சி பார்ப்போமேனு நினைக்கவும் கூடாது! அதுவும் தப்பு தான்” அவன் முகம் நோக்கி அவர் கூற,
முகத்தில் படர்ந்த இளநகையுடன் அவரை நோக்கியிருந்தவன், அவர் கைப்பற்றி, “ஐ ப்ராமிஸ் யூ அப்பா! நான் என் வாழ்நாள் முழுக்க இதை ட்ரை பண்ணி பார்க்கிறேனு கூடச் செய்ய மாட்டேன்! Smoking and drinking injurious to health! நான் ஒரு ப்ராமிஸ் செஞ்சா எந்த அளவுக்குக் கடைப்பிடிப்பேனு உங்களுக்கே தெரியும்” அவன் கூறி முடிக்கும் முன்,
“அதுலாம் நீ சொல்லவே தேவையில்ல! என் பிள்ளையைப் பத்தி எனக்குத் தெரியாதா?” கண்ணில் பெருமிதம் பொங்க அவர் கூற,
“that’s my அப்பா” என அவர் கன்னம் தட்ட,
“சந்தோஷமா குதூகலமா இந்தப் பயணம் உனக்கு இருக்கும்டா கண்ணா” வாழ்த்துதலாய் இதைக் கூறியவர் கை அசைத்து அனுப்பி வைத்தார்.
மதுரனும் ஆதினியும் வேலைக்கு சென்ற பின்னர் மாணிக்கம் மற்றும் மலரை ஓய்வெடுக்கப் பணித்தனர்.
பிள்ளைகளின் திருமணச் செலவு, அதன் பின்பான வாழ்வு என இருவருக்காகவும் நிறையப் பணம் இவர்கள் சேமித்து வைத்த காரணத்தினால் மலர் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ள, லாபமில்லாது சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் கடையை மூடினார் மாணிக்கம். ஆயினும் வீட்டினில் அவரால் சும்மா இருக்க முடியாத காரணத்தினால் நிலம்/வாகனங்கள் வாங்கி விற்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மலர் தனது மக்களின் திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.
அகிலன், தான் எதற்காக இந்தப் பூங்காவிற்கு வந்தோம் என்பதையே மறந்து மலர் மாணிக்கத்தின் கதையில் மூழ்கி போனான்.
எப்படி வாழ்வை வாழ வேண்டுமென்பதை இந்தக் குடும்பத்தைப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். எப்படி வாழ கூடாது என்பதைத் தனது குடும்பத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமென மனதில் எண்ணிக் கொண்டான் அகிலன்.
மாணிக்கத்தைக் கண்டிருந்த அவனின் விழியில் மரியாதை மின்னியது.
“கண்ணம்மாக்கு நாங்க அவளுக்கு 23 வயசாகும் போதே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம் அகி! எங்களைப் பத்தின எல்லா உண்மையும் சொல்லி தான் பார்த்தோம். முதல்ல எங்களுக்கு ஊருக்குள்ள இருக்க மதிப்பு மரியாதை, ஆதினியோட படிப்பு வேலைனு எல்லாத்தையும் பிடிச்சி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு வரவங்ககிட்ட மலருக்கு நான் இரண்டாம் தாரம்னு சொன்னாலே போதும். தெரிச்சி ஓடு போய்டுவாங்க. எங்களுக்கு எப்படிக் கல்யாணம் ஆச்சு என்ன நடந்துச்சுனு எதையும் விசாரிக்காம வேண்டாம்னு போய்டுவாங்க. ஆனாலும் இதெல்லாம் தெரிஞ்சு பிடிச்சி வர்றவனுக்குத் தான் கண்ணம்மாவை கட்டி கொடுப்போம்னு நாங்க ஒரே முடிவா இருந்தோம். அதனாலயே அவ கல்யாணம் தள்ளி போய்ட்டே இருந்துச்சு. இவளுக்குச் செய்யாம மதுரனுக்குச் செய்ய முடியாது. அவனுக்கு 28 வயசாகிடுச்சு. இதை நினைச்சு தான் பேபிமாக்கு இப்ப பெரிய கவலை” அவர் கூற,
“இப்படி ஒரு குடும்பத்துல சம்பந்தம் வைக்கப் பாக்கியம் பண்ணிருக்கனும் அங்கிள்” என்றான் அகிலன்.
“நீங்கலாம் லிவ்விங் ரோல் மாடல் அங்கிள்! இதைத் தெரிஞ்சிக்காம உங்க பொண்ணு வேண்டாம்னு போனவங்க தான் லூசர்ஸ் அங்கிள்” கூறிய அகிலன்,
“உங்க பொண்ண எனக்குக் கட்டி கொடுக்கிறதுல உங்களுக்குச் சம்மதம்னு உங்க கதையை நீங்க சொல்ல ஆரம்பிச்சதுலேயே புரிஞ்சிட்டு அங்கிள்! ஆனா என் குடும்பத்தைப் பத்தி நீங்க தெரிஞ்சிக்கனும் அங்கிள்” என அவன் சொல்ல ஆரம்பிக்க,
“எனக்குத் தெரியும் தம்பி! உங்க அப்பா அம்மா கல்யாணம் எப்படி நடந்துச்சு! இப்ப உங்க குடும்பத்துல யார் யார் எப்படி இருக்காங்கனு எல்லாம் எனக்குத் தெரியும் அகி! உனக்கு உன் குடும்பத்துக்கு யாரு யாரெல்லாம் எதிரினு உன்னை விட எனக்கு நல்லா தெரியும். எங்க வீட்டுப் பொண்ணை ஒரு இடத்துல கட்டிக் கொடுக்கிறோம்னா அவங்களைப் பத்தி அவங்களைச் சுத்தியுள்ளவங்களைப் பத்தி தெரிஞ்சுக்காமலா இருப்போம்”
மாணிக்கம் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றான் அகிலன்.
எல்லாம் தெரிந்துமா எனக்கு அவரின் பெண்ணைக் கட்டி வைக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறாரென எண்ணி வந்த இன்பமான அதிர்ச்சி அது.
விரைவாய் அவனின் வீட்டில் பேசி, பெண் பார்க்க அழைத்து வருமாறு உரைத்து சென்றார் மாணிக்கம்.
— தொடரும்