முள்ளில் பூத்த மலரே – 16

அந்தச் சிவன் கோவிலில் வண்டியை நிறுத்தி பிள்ளைகளையும் மலரையும் இறக்கி விட்டு, வண்டியை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு வந்தான் மாணிக்கம்.

மலர் பூ விற்பவரிடம் சாமிக்கு பூ வாங்கிக் கொண்டிருக்க, அங்கு வந்த மாணிக்கம், மலருக்கும் ஆதினிக்கும் மலர் வாங்கித் தலையில் சூடி விட்டான்.

“கல்யாணம்லாம் நல்லபடியா முடிஞ்சிதா தம்பி” பூ விற்பவர் மாணிக்கத்திடம் கேட்க,

“ஆமாம் மா” என உரைத்து மலர் மற்றும் பிள்ளைகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து உள்ளழைத்துச் சென்றான்.

மாணிக்கம், தான் தினமும் சந்திக்கும் நபர்கள் முதல் நெருங்கிய தோழமைகள் வரை அனைவருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கியிருந்தான்.

கோவிலில் அனைவரின் பார்வையும் இவர்களின் மீதே இருந்தது.

இந்த அன்பிற்கினிய உறவுகளை வழங்கியதற்கு நன்றி எனக் கடவுளிடம் மாணிக்கம் நன்றியுரைத்திருக்க,

“நானும் மாணிக்கமும் மனமொத்த தம்பதியாய் வாழ்ந்து, நல்லா சம்பாதிச்சு மென்மேலும் உயர்ந்து எங்க பிள்ளைகளையும் நல்ல ஒழுக்கமுள்ள பண்புள்ள பிள்ளைகளாய் வளர்த்து இன்பமாய் வாழ அருள்புரிய வேண்டும் இறைவா!” என மனதார இறைவனிடம் பிரார்த்தித்திருந்தாள் மலர்.

நால்வருமாய் மூல ஸ்தானத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றுப் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொடிமரத்தின் முன்பு அமர்ந்தனர்.

இவர்கள் இருவரும் அமர்ந்திருக்க, பிள்ளைகள் இருவரும் ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்தனர்.

“ஆதுமாஆஆ… மது… ” எனச் சற்று சத்தமாய் அழைத்த மலர்,

அவர்களை அருகே அழைத்து, “விளையடுறது தப்பில்லை! ஆனா மத்தவங்களுக்குத் தொந்தரவா இருக்க மாதிரி என்னிக்குமே நடந்துக்கக் கூடாது. புரிஞ்சிதா?” சற்று கண்டிப்பாய் உரைத்தவள், இருவரையும் அருகில் இருத்திக் கொண்டாள்.

மாணிக்கம் அப்பிள்ளைகளுக்காய் பரிந்து வந்து, “சின்னப் பிள்ளைங்க தானே விளையாடிட்டு போகட்டும்! யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க பேபிமா” எனக் கூற,

“அவங்க ஓடியாடுறதுல வழில போற வரவங்களுக்கு டிஸ்டபர்ன்ஸ்சா இருக்கும்ப்பா. குழந்தைங்களை எல்லா இடத்துலயும் குழந்தையாவே இருக்க விடுங்கனு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லங்க. வெளில எங்கேயும் நம்ம பிள்ளைங்களைக் கூட்டிட்டு போனா.. அந்த இடத்துல எந்தச் சேட்டையும் செய்யாம அமைதியா இருக்கனும்னு தான் நான் நினைப்பேன். தலைவலியோட ஒருத்தங்க வந்திருக்காங்கனு வச்சிக்கோங்க, விளையாடுற ஆர்வத்துல இவங்க போடுற சத்தம் அவங்களுக்கு மேலும் தலைவலிய தான் கூட்டும். இப்படிப் பலவித மனிதர்கள் நம்மள சுத்தி இருக்கும் போது, எங்கே போனாலும் யாருக்கும் எந்தத் தொந்தரவு தராத அளவுக்கு நம்ம நடந்துக்கனும்னு பிள்ளைங்ககிட்ட சொல்லி கொடுத்து வளர்க்கிறது தான் என்னைப் பொறுத்த வரைக்கும் சரி! நம்ம பிள்ளைங்கள நான் அப்படித் தான் வளர்ப்பேன். இதுல உங்களுக்கு எதுவும் மாற்று கருத்து இருக்கா?” நீண்ட விளக்கம் அளித்து மாணிக்கத்தின் கருத்தை அவள் கேட்க,

இல்லை இல்லையெனத் தலையை அசைத்திருந்தான் அவன்.

அவனின் தலையசைப்பில் சிரித்தவள், “எனக்குப் பயந்து தலை ஆட்டுறது போல இருக்கே” எனச் சிரித்துக் கொண்டே கூற,

“நீ இந்த மாதிரி கருத்தா பேசும் போது தானாவே பயம் வந்துடுது! இது உன் மேலுள்ள மரியாதைல வர்ற பயம்!”

“எதுனாலும் சரி…. அந்தப் பயம் இருக்கட்டும்” என்றவள் கேலியாய் கூற,

வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாணிக்கம்.

“அப்புறம் வீட்டு லோன் அடைக்க என்ன செஞ்சீங்க? உங்க சேமிப்பு முழுக்க அதுல போட்டுடீங்களா?” மனையாளாய் அவனின் செயலை பற்றிக் கேள்வி கேட்டிருந்தாள் மலர்.

“இல்ல மலர். ஊருல எனக்கிருந்த சொத்தை வித்துட்டேன்” அவன் கூறவும்,

சற்று அதிர்ந்தவள், “ஏன்ப்பா இப்படிச் செஞ்சீங்க!” எனக் கேட்டாள்.

“எனக்குனு தான் ஊருல யாருமில்லையே! அந்தச் சொத்து மட்டும் எதுக்குனு தான். அதுவுமில்லாம இது நீ ஆசை ஆசையாய் வாங்கின வீடு! என் முதல் பரிசா உன் ஆசையை நிறைவேத்தின மாதிரி இருக்கட்டுமேனு தான்” எவ்வாறு இதை எடுத்து கொள்வாளோ என்ற எண்ணத்தில் தயங்கி தயங்கியே அவன் கூற,

“இனி இப்படிச் செய்யாதீங்கப்பா! ஒரு இடம் வித்து இன்னொரு இடம் வாங்குறது என்னிக்குமே நல்ல ப்ளான் கிடையாது. அந்த நிலம் எப்ப நல்ல விலைக்குப் போகுதோ அப்ப நாம வித்திருந்தா நமக்கு லாபமா இருந்திருக்கும்ல. இப்ப இருக்கக் காலகட்டத்துல நிலம் வாங்கிப் போட்டோம்னா பின்னாடி அது நல்ல விலைக்குப் போகும்பா! எனக்காக ஆசை ஆசையா வாங்கியிருக்கீங்கனு புரியது. இனி எது செஞ்சாலும் இரண்டு பேரும் ப்ளான் பண்ணி செய்வோம் சரியா! நான் என்னுடைய கையிருப்புச் சேமிப்பை வச்சி தான் உங்களுக்கு வண்டி வாங்கினேன். உங்க ஆசைன்றத விட அது என் ஆசை. கல்யாணம் செஞ்சிக்கலாம்னு முடிவு செஞ்ச நாள்லருந்து என் கண்ணுல நம்ம எல்லாரும் இப்படிப் புல்லட்ல போற காட்சி படமா ஓடும். இதெல்லாம் காலம் உள்ள போதே நிறைவேத்திக்க வேண்டிய ஆசைகள். அதான் உடனே வாங்கிட்டேன்” என்றவள் கூறவும்,

“எல்லா விஷயங்களையும் யோசிச்சி திட்டம் போட்டு தான் செய்வியா பேபிமா?” கேள்வியாய் மாணிக்கம் கேட்க,

“ஆமாங்க! இது அப்பா அம்மா சொல்லி கொடுத்தது. வாழ்க்கைல என்னிக்குமே டக்குனு அகல கால் வச்சிட கூடாது! நமக்குனு சேமிப்பு எப்பவும் இருக்கனும்னு சொல்லுவாங்க. அதனால ஒவ்வொரு விஷயத்துக்கும் ரொம்ப யோசிப்பேன். நம்ம வாழ்க்கைகாக ஒரு ப்ளான் வச்சிருக்கேன்” என்றவள் தனது திட்டத்தினைக் கூற தொடங்கினாள்.

“இன்னும் ஒரு வருஷம் ஆட்டோ ஓட்டுங்க போதும்! அதுல வர்ற காசுலாம் சேமிப்பா வைப்போம். என்னோட சம்பளம் நம்ம எல்லாரோட செலவுக்கும் வச்சிக்கலாம். அதுக்கப்புறம் அதை வாடகை விடலாம்! இந்தச் சேமிச்ச காசுல ஒரு டிராவல்ஸ் ஆரம்பிக்கலாம். உங்களுக்குத் தான் வண்டி மேல ஆர்வம் அதிகம்ல. உங்களுக்கு வண்டியை பத்தி இருக்கிற அறிவை பார்த்து நானே வியந்திருக்கேன். படிக்காமலேயே மெக்கானிக் லெவலுக்கு எவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சிருக்கு உங்களுக்குனு ஆச்சரியப்பட்டிருக்கேன். அதனால டிராவல்ஸ் நிறுவனம் வைப்போம். அதுல நம்ம வண்டி வாங்கிப் போட்டு லாபம் வர்ற வரைக்கும் என்னோட சம்பளமும், ஆட்டோ வாடகை விடுற காசும் நம்மளை காப்பாத்தும். அப்படியே நம்ம பிசினஸ் டெவல்ப் செஞ்சிடலாம்! என்ன சொல்றீங்க?” வெகு ஆர்வமாய்க் கண்ணில் கனவுகள் மின்ன அவள் கூறி முடிக்க,

“உனக்கு அது தான் விருப்பம்னா கண்டிப்பா செஞ்சிடலாம் பேபிமா”

அவள் ஆசை ஆசையாய் கூறியதை கண்டவனுக்கோ, அவளின் எண்ணங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூறவும் மனம் விழையவில்லை. வருவதைப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டான்.

சந்தோஷ மிகுதியில் அவன் கைபற்றியவள், “ரொம்பத் தேங்க்ஸ்ங்க! உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ! என்ன சொல்லுவீங்களோனு பயந்துட்டு இருந்தேன்” அவள் கூறவும்,

“என்னைப் பார்த்து எதுக்குப் பயம்? நான் வேண்டாம்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்ப பேபிமா?” அவன் கேட்கவும்,

“சரினு இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்னு விட்டிருப்பேன். ஆனா கொஞ்ச நாளோ இல்ல கொஞ்ச மாசமோ கழிச்சி இதோட சாதகப் பாதகங்கள்லாம் சொல்லி உங்களைத் திரும்பவும் இதைப் பத்தி யோசிக்கச் சொல்லிருப்பேன்” அவள் கூறவும்,

அவன் வாய்விட்டு சிரிக்க,

“ஏன் சிரிக்கிறீங்க? என்னைய சமாளிக்கிறது கஷ்டம்னு தோணுதா” அவள் கேட்க,

“ஹாஹாஹா! இல்ல பேபிமா! தெரியாத்தனமா ஒரு டீச்சர கல்யாணம் செஞ்சிக்கிட்டேனே! இப்ப வீட்டுலயும் பாடம் எடுத்து கொல்றாங்களேனு நினைச்சேன் சிரிச்சேன்” இன்னுமே அவன் சிரித்துக் கொண்டே கிண்டலாய் கூற,

அவனின் கேலி பேச்சில் பொய்யாய் முறைத்து அவன் புஜத்தில் இரண்டடி இவள் போட, இதுவரை இருவரின் பேச்சையும் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மதுவும் ஆதினியும், “அம்மா… அப்பாவை அடிக்காதமா” என அவன் மடியில் சென்று அமர்ந்துக் கொண்டனர்.

“பார்றா” என்ற வகைப் பார்வையோடு அவர்களைப் பார்த்து நொடித்துக் கொண்டாள்.

அவளின் நொடிப்பில் அவன் சிரிக்க, பிள்ளைகள் அவன் மடியில் அமர்ந்திருந்த காட்சியைப் பார்த்து ரசித்தவள், புகைப்படக் கடைக்குச் சென்று அனைவருமாய்ச் சேர்ந்து புகைப்படம் எடுத்த பின் தான் வீட்டிற்குச் செல்ல வேண்டுமென மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அப்பொழுது அங்கு அந்த ருத்ராக்ஷம் கொடுத்த சாமியாரை கண்ட மாணிக்கம், “வா மலர்! இவருகிட்ட ஆசிர்வாதம் வாங்கலாம்” எனக் கூப்பிட,

“ஆசிர்வாதம் வாங்கலாம்! அவர் வயசுல பெரியவர்ங்கிற முறைல வாங்கலாம்ங்க. ஆனா சாமியாரா நினைச்சு அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்குறதுல எனக்கு உடன்பாடில்லை” என்றாள்.

“ஏன் மலர்? இவர் தான் அன்னிக்கு எனக்கு ருத்ராக்ஷம் கொடுத்தாரு. எனக்குக் குழப்பமா இருக்கும் போது, இவர் சொன்ன வார்த்தை தான் தெளிவு கொடுத்துச்சு” அவன் கூற,

“அது சரி தான்ங்க. ஆனா அதுக்குக் காரணம் இவரில்லை. இறைவன் உங்களுக்கு உணர்த்த விரும்பினதை இவர் மூலமா செஞ்சிருக்காரு. அவ்ளோ தான்! குடும்ப வாழ்வில் உழன்று எந்த விஷயத்துலயும் முழுக் கவனம் செலுத்த முடியாமல் வாழ்ந்துட்டிருக்க நேரத்துல, கடவுள் நம்ம வேண்டுதலுக்குச் செவி சாய்த்து நமக்கு ஏதாவது உணர்த்த விரும்பும் போது, அதை நாம் உணர்ற நிலையில இருக்க மாட்டோம். நம் மனம் அவர் உணர்த்துறதை புரிஞ்சிக்கிற அளவுக்கு ஒரு நிலையில் இருக்காது. அப்ப தான் இந்த மாதிரி ஆட்கள் மூலமா கடவுள் சில விஷயங்களைப் புரிய வைக்கிறார். ஆனா இதைப் புரிஞ்சிக்காத மக்கள் தெய்வமே அவதாரம் எடுத்ததாய் எண்ணி வணங்கி அவங்களைச் சாமியாராகிடுறாங்க. போலி சாமியார் உருவாகக் காரணம் மக்கள் மட்டும் தான்! ஆனா அதுக்காக இப்படி ஆட்களை அவமரியாதை செய்யவும் கூடாது. தூக்கி வச்சி கொண்டாடவும் வேண்டாம்! தூக்கி போட்டு மிதிக்கவும் வேண்டாம். அந்த நிலையில் தான் வச்சிக்கனும். அவர் சொல்லின் மூலமாய் நமக்குத் தெளிவு கிடைச்சதுனால எங்க பார்த்தாலும் ஒரு ஸ்மைல் பண்ணிட்டு இரண்டு வார்த்தை பேசிட்டு கடந்து போய்டனும்” அவள் பேசி கொண்டே இருக்க,

“செம்ம தெளிவு பேபிமா நீ” அவன் கூற,

“வாங்க அவர்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போவோம்” எனக் கூறியவள் அனைவரையும் அழைத்துச் சென்று அவரின் முன் போய் நிற்க,

ஒரு பார்வை இவர்களைப் பார்த்தவர் மென்னகை புரிந்து, “நீ நினைச்சதுலாம் நிறைவேறும் மா! உன் வாழ்க்கை இனி இன்பமானதாய் மட்டும் தான் இருக்கும்” என மலரை வாழ்த்தியவர்,

“இவங்க எல்லாரையும் உன் கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கனும்!” என மாணிக்கத்திடம் கூறி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அதன் பின்பு இந்தச் சாமியாரை அவர்கள் வாழ்நாளில் என்றைக்குமே பார்க்கவில்லை.

கோவிலிலிருந்து புகைபடக் கடைக்குச் சென்று நால்வருமாய் இணைந்து விதவிதமாய் நிழற்படம் எடுத்த பின்னரே வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டை அடைந்ததும் இவர்கள் அனைவரையும் நிற்க வைத்து திருஷ்டி சுற்றி போட்டார் ஆயா.

அன்றைய நாள் அனைவருடனும் இன்பமாய்க் கழிந்தது. மாணிக்கம் தங்கியிருந்த வாடகை வீட்டில் தான் ஆயா இன்னமும் தங்கியிருக்க, இரவு அங்குச் செல்வதாய்க் கூறி அவர் சென்று விட்டார்.

ஊரில் படுத்தது போல் இங்கேயும் மாணிக்கத்தின் இரு புறமும் மதுவும் ஆதுவும் படுத்திருக்க, அனைத்து வேலையும் முடித்து வந்து மலர் படுக்க,

“நான் அம்மாகிட்ட படுக்கிறேன்” எனக் கூறி மதுரன் மலரிடம் எழுந்து வர, அவனைத் தன் மார்பில் சாய்த்து தட்டி கொடுத்து தலையைக் கோதிவிட,

அவர்களை நோக்கி திரும்பி படுத்த மாணிக்கம், “கண்ணா சரியான அம்மா கோந்து” என்றான்.

“ஹான்… உங்க பொண்ணு அப்பா கோந்தா இருக்குல. அது மாதிரி என் பையன் அம்மா கோந்தா இருக்கான்” அவள் ராகமாய்க் கூறவும், ரசித்துச் சிரித்திருந்தான் மாணிக்கம்.

“இவன் பிறந்த வளர்ந்தப்ப வீட்டு வேலைக்குலாம் ஆளு இல்லப்பா! என் பின்னாடியே புடவைய பிடிச்சிட்டு சுத்திட்டு இருப்பான். தவழுற நேரத்துல என் மேலயே தான் படுத்துத் தூங்குவான். நீங்க எப்படி ஆதுவ உங்க மேல போட்டு தூங்க வைக்கிறீங்கல, அது மாதிரி… இவன் என் மேல தான் படுத்துத் தூங்குவான். குட்டி குழந்தையா இருக்கும் போதே நான் தூங்கினா டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு பாத்ரூம் போய்ட்டு கழுவாம, என்னையும் கழுவரதுக்கு எழுப்பாம பக்கத்துல உட்கார்ந்து என் மூஞ்சை பார்த்திருப்பான்”

ஆசையாய் சிரித்துக் கொண்டே பிள்ளைகளின் சிறு வயது செயல்களைச் சேட்டைகளைக் கூறிக் கொண்டே மதுரனை அருகில் படுக்க வைத்து, மாணிக்கத்தின் கையில் தலை வைத்தவள் தொடர்ந்தாள்.

“அப்ப தான் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலாம்னு ரவிகிட்ட கேட்டேன். அவன் என்னமோ காசு வீணா போய்டும் அது இதுனு கதை சொல்லி அப்பா அம்மாவை வர வச்சிக்கோனு சொல்லிட்டான்”

“அப்பா அம்மா சென்னை வந்திருக்காங்களா முன்னாடி?” ஆச்சரியமாய் மாணிக்கம் கேட்க,

“ஆமா வந்திருக்காங்கப்பா! என்னால மதுவைத் தனியா சமாளிக்க முடியலைனு ஊருல இருந்து நான் இங்க வந்த ஒரு மாசத்துலேயே அம்மா அப்பாவை வர வச்சிட்டேன். ஆனா அவங்க எங்களுக்கு ஒத்தாசையாய் இருக்க வரைக்கும் ஒன்னும் சொல்லாம இருந்தவன், மது கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கவும் எத்தனை நாள் பொண்ணு வீட்டுல இருந்து சாப்பிடலாம் ப்ளான்னு கேட்டுட்டான்”

“பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவான் ராஸ்கல்? அப்புறம் என்னாச்சு?” கோபமாய் மாணிக்கம் கேட்க,

“அப்புறம் என்ன! என் அப்பா அம்மாவை நான் கூட வச்சிக்கிறதுல உனக்கென்னடா பிரச்சனைனு கையில கிடைச்ச தண்ணீர் ஜக்கை தூக்கி அவன் மூஞ்சில வீசிட்டேன்” அசால்ட்டாய் அவள் கூற,

அவள் கூறியதை கேட்டு படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தே விட்டான்.

பின் அவளின் செயலை எண்ணி சிரித்தவன், “சண்டி ராணி” என்றான்.

“என்னது சண்டிராணியா?” எனக் கேட்டவள்,

“ஹே இது தான் நீங்க எனக்கு வச்ச அந்தப் பேரா” என அவனை முறைத்து பார்த்து அவள் கேட்க,

“ஆமாண்டி என் சண்டிராணி” அவள் கன்னத்தைப் பிடித்தாட்டி கொஞ்சி கொண்டே அவன் கூற,
அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவள் தலையை மென்மையாய் கோதி கொண்டே, “அப்பா அம்மா கிட்ட நான் பேசுறேன் பேபிமா. அவங்களைக் கொஞ்ச நாள் நம்ம கூட இருக்கச் சொல்லி கேட்கிறேன்”

“அதெல்லாம் அவங்க வரமாட்டாங்கப்பா நான் நிறையத் தடவை கேட்டிருக்கேன்” மார்பிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து அவள் கூற,

அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “அவங்களைச் சென்னைக்கு வர வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

இவர்களின் பேச்சுச் சத்தத்தில் கண்ணம்மா உறக்கம் கலைந்து புரள, அவளைத் தன் மீது போட்டுக் கொண்டு தட்டி கொடுத்தவனின் மறு கை மலரின் தலையை வருடியிருக்க, மலரோ மதுரனை அணைத்துக் கொண்டு உறங்கி போனாள்.

இந்நொடியை இந்நிலையினை இன்பமாய் ரசித்தும் சுகித்தும் உறங்கி போனான் மாணிக்கம்.

இயல்பானதொரு இல்வாழ்வை தொடங்கியிருந்தனர் இருவரும்.

— தொடரும்