முள்ளில் பூத்த மலரே – 15

அந்த வாரயிறுதி நாளில் மலரும் மாணிக்கமும் பிள்ளைகளுடன் அவளின் ஊருக்கு சென்று அவளது பெற்றோர்களிடம் தங்களது திருமண முடிவினை கூறியிருந்தனர்.

மிகுந்த மகிழ்ச்சியில் திளைந்திருந்தனர் அவளின் பெற்றோர்.

அன்று ஆற்றில் குளிக்கலாமென முடிவு செய்து பிள்ளைகளுடன் மாணிக்கம் செல்ல, மலரும் தானும் உடன் வருவதாய்க் கூறி அவனுடன் சென்றாள்.

பிள்ளைகள் இருவரும் முன்னே விளையாடிக் கொண்டே நடந்து கொண்டிருக்க, பின்னே அவர்களைக் கண்காணித்துக் கொண்டே மாணிக்கமும் மலரும் நடந்து சென்றனர்.

“என்ன மேடம் என்கிட்ட பேசனும்?”

அவனின் மேடம் அழைப்பில் முறைத்து என்ன பேசனும் என்கின்ற கேள்வியில் திகைத்து கலவையாய் முகப் பாவனைகளைக் காட்டி அவள் அவனை முறைத்துப் பார்த்திருக்க,

“சாரி சாரி வாய் தவறி வந்துடுச்சு! மேடம்னு கூப்டே பழகிடுச்சா… அதுமில்லாம மலர்னு கூப்பிட்டா ஒரு மாதிரி மரியாதை குறைவா பேசுற மாதிரி தோணுது! உங்க மேல இருக்க மரியாதையை மலர்ன்ற உங்க பேரு மேலயும் வெச்சிருக்கேன்! அதனால தான் அப்படி! நான் வேணா பேபிமானு கூப்பிடவா… அது ஒரு மாதிரி அன்யோன்யமான உணர்வை கொடுக்குது” மலரிடம் தனது அழைப்பிற்கான விளக்கத்தையளித்து ஒப்புதல் வேண்டி நிற்க,

அவனின் கூற்றில் சிரித்தவள்,
“மேடம்னு கூப்பிடுறதுக்குப் பேபிமா நல்லா தான் இருக்கு” என்றவள்,

“அது சரி, நான் உங்க கிட்ட ஏதோ பேச தான் கூட வரேனு சொன்னேனு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” ஆச்சரியமாய் அவள் கேட்க,

“அது உங்க யோசனையான முகப் பாவனையிலேயே தெரிஞ்சிடுச்சு” என்றவன்,

“என்ன குழப்பம் பேபிமா?” என்றான்.

அவனின் பேபிமா அழைப்பில் குழந்தையாய் சிரித்து, தனக்கு ஏதோ குழப்பமென யூகித்து அதை நிவர்த்திச் செய்ய எண்ணி கேள்வி கேட்டு நின்றிருக்கும் அவனின் அக்கறையில் நெகிழ்ந்து அவனைப் பார்த்தவள்,

“ஏன் பத்திரிகை அடிக்கச் சொன்னீங்கப்பா?” எனக் கேட்டாள்.

“ஏன் அதனாலென்ன? உங்களுக்கு அதுல விருப்பம் இல்லையா?” அவன் அவளைக் கேட்க,

“இல்ல ஒரு மாதிரி சங்கடமா ஃபீல் ஆகுது” முகத்தில் அவ்வுணர்வை தேக்கி அவள் கூற,

“இந்தச் சங்கட உணர்வு வராம நாமளும் நார்மலான கணவன் மனைவியா வாழுறதுக்குத் தான் கல்யாண பத்திரிகை அடிக்கச் சொன்னேன்”

புரியாத பாவனையில் அவள் அவனைப் பார்க்க,

“அன்னிக்கு ரவி பேச்சை கேட்டு நம்மளை சேர்த்து வச்சி தப்பா பேசினவங்க கிட்ட தான் இந்தப் பத்திரிகையைக் கொடுக்கப் போறேன் பேபிமா! நாங்க இப்ப கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு அன்னிக்கு நீங்க அப்படிப் பேசினது தான் காரணம். இன்னும் நீங்க இப்படி ஊர் கதையெல்லாம் பேசி பல பேர் வாழ்க்கைல விளக்கேத்தனும்னு சொல்லி பத்திரிகை வைக்கலாம்னு தான்”

அவர்களை வெறுப்பேற்ற தான் இவன் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் எனத் தெளிவாய் புரிய,

மாணிக்கத்தின் இந்த நக்கல் பதிலில் வாய்விட்டு சிரித்திருந்தாள் மலர்.

“அவங்க அப்படிப் பேசினதை நம்ம உண்மையாக்கிட்டோம்னு இன்னும் அசிங்கமா பேசுவாங்களோனு கலக்கமா இருந்துச்சுங்க! ஆனா நீங்க செய்யப் போறதை நெனைச்சாலே சிரிப்பு வருது”

அவளின் சிரிப்பில் தானும் சேர்ந்து சிரித்தவன், “அது மட்டும் இல்ல பேபிமா! நமக்குக் கல்யாணம் இங்க ஊருல நடக்கப் போகுது! நம்ம கணவன் மனைவியாய் அந்த ஊருக்கு போகும் போது, நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு மக்கள் புரிஞ்சிக்கிறதுக்கு இந்தப் பத்திரிக்கை கொடுக்கிறது அவசியம் தான்! நம்ம இரண்டு பேரும் சேர்ந்து போய் எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்கிறோம்! இனி நீங்க யாருக்காகவும் யாரு பேச்சை கேட்டும் கலங்கவோ சங்கடப்படவோ வேண்டாம்! நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்”

அவனின் அன்பான அனுசரணையான பேச்சில் மென்மையாய்ச் சிரித்திருந்த மலரின் மனமோ வெகுவாய் ஆசுவாசமடைந்திருந்தது.

“என்கிட்ட வேற எதுவும் கேட்க தோணலையா உங்களுக்கு?” மாணிக்கம் கேட்க,

“இல்லையே! ஏன்? வேறென்ன கேட்கனும்?” கேள்வியாய் அவனை அவள் நோக்க,

“கல்யாணம்ங்கிறதுல இதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கே பேபிமா! அதுவும் மறுமணத்துல பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குமே!”

அவன் கூற வருவதின் பொருள் விளங்கவும் அவனை நோக்கியவள், “உங்க மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்குங்க! உங்களை மீறி கூட என்னைக் காயப்படுத்த மாட்டீங்க! சண்டை இல்லாம சண்டை போடாம கண்டிப்பா எந்தத் திருமண வாழ்வும் இருக்காது! ஆனா அந்தச் சண்டை கூடக் கண்டிப்பா என்னால தான் வருமே தவிர உங்களால வராதுனு முழுமையா நம்புறேன்! நானோ இல்ல பிள்ளைங்களோ உங்களை என்னிக்கும் காயப்படுத்திடாம இருக்கனுங்கிறது தான் என்னோட கவலை”

அவன் மீதான அவளின் நம்பிக்கை கண்டு ஆனந்தமாய் அதிர்ந்திருந்தான் மாணிக்கம்.

“நீங்க பிள்ளைங்களுக்காகனு இந்த முடிவை எடுக்கலையே! எனக்காக என் சந்தோஷத்துக்காகத் தானே எடுத்தீங்க! அப்புறம் எப்படி வேற கேள்வி வரும்” அவனின் முகம் நோக்கி அவள் கேட்க,

என்ன சொல்வதென்று தெரியாத திகைப்பின் நிலையில் இருந்தான் மாணிக்கம்.

அவர்கள் பேசிக் கொண்டே ஆற்றங்கரையை அடைந்திருக்க, மலர் ஆற்றுக்கருகே இருந்த படிக்கட்டுகளில் அமர, பிள்ளைகள் இருவரும் துணியைக் கழற்றி மலரிடம் கொடுத்து குதிப்பதற்குத் தயாராய் இருக்க, மாணிக்கம் தனது சட்டையைக் கழற்றி ஓரமாய் வைக்க,

“என் கிட்ட அந்தச் சட்டையைக் கொடுங்க. பிள்ளைங்க துணியோட சேர்த்து நானே தண்ணீர் படாம வச்சிக்கிறேன்” எனக் கூறி வாங்கிக் கொண்டவள், அவர்களின் மாற்று துணி வைத்திருந்த பையினையும் வாங்கிக் கொண்டாள்.

மாணிக்கத்தின் இரு பக்கமும் ஆதினியும் மதுரனும் அவன் கை பிடித்து ஆற்றுக்குள் இறங்க, ஆழமில்லா பகுதியாய் பார்த்து இவர்களை இறங்க வைத்தான்.

ஆதினி வெகுவாய் பயந்து இவனிடையைக் கட்டிக் கொண்டே நின்றிருக்க, இவன் மதுரனுக்கு நீச்சல் கற்று கொடுத்துக் கொண்டிருந்தான்.

தூரமாய் அமர்ந்திருந்து இதைப் பார்த்து கொண்டிருந்தவளின் மனமோ வெகு ரசனையாய் இக்காட்சியைக் கண்டு களித்திருந்தது.

மதுரன் தனியாய் நீச்சலடித்துப் பழகி கொண்டிருக்க, மலரை திரும்பி பார்த்த மாணிக்கம், கை அசைத்து அவளையும் உள் வருமாறு கூறினான்.

அவள் இல்லை வேண்டாமெனத் தலையசைக்க, பிள்ளைகள் இருவரையும் நடு ஆற்றில் இருந்த பாறையில் அமர வைத்தவன், மலரிடம் வந்தான்.

“அய்யோ நான் வரலை” அவள் கூற,

“நான் இருக்கேன்ல! அப்புறம் என்ன பயம்? நீங்க குளிக்கலாம் வேண்டாம். அதோ பசங்களை உட்கார வச்சிருக்கேன்ல, அந்தப் பாறைல உட்கார்ந்து தண்ணீருல கால் வையுங்க போதும்! அந்தச் சில்லு தண்ணி காலுக்குள்ள ஓடும் போது மனசுக்கு அவ்ளோ புத்துணர்வு கிடைக்கும்” கூறிக் கொண்டே அவளின் கையை அவன் பற்ற,

“இருங்க ஒரு நிமிஷம்” என்றவள், தான் அணிந்திருந்த புடவையின் முந்தியை இடையில் சுற்றி சொருகி, ஒரு பக்க புடவையைச் சற்றாய் தூக்கி இடையில் சொருகியவள் அவன் கையைப் பற்றினாள்.

அவளிடம் கொடுத்திருந்த பையை நனையாதவாறு தோளில் தூக்கி வைத்து பிடித்த மாணிக்கம், மறு கையால் அவளின் கரத்தை பற்றியிருந்தான்.

“பஞ்சு மாதிரி இருக்குங்க உங்க கை” ஆற்றில் நடந்து கொண்டே அவன் கூற,

“உங்க கை செம்ம ரஃப்பா இருக்குங்க! ஆட்டோ ஓட்டினா இப்படி ஆகுமா?” அவள் அவனின் கை ஸ்பரிசத்தை உணர்ந்து இவ்வாறாய் கேட்க,

“ஹா ஹாஹாஹா” வென வாய் விட்டு சிரித்தவன்,

“சின்ன வயசுல சம்பட்டியால இரும்பு கம்பி அடிக்கிற வேலை பார்த்திருக்கேன்! அப்பா இல்லாம அம்மா கஷ்டப்பட்டப்போ செஞ்ச வேலை அது! அப்படியே படிப்படியா முன்னேறி தான் மளிகை கடை வச்சது” அவன் கூறவும் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியும் வேதனையும் ஒரு சேர அது அவள் முகத்தில் பிரதிபலிக்க,

“அய்யோ பேபிமா அது சின்ன வயசுல! அதுக்கு ஏன் இப்ப கலங்குறீங்க?” அவளின் முகம் பார்த்து அவன் கேட்க,

“எனக்குனு மட்டும் இல்ல மாணிக்கம்! உங்களுக்காகவும் சில லட்சியங்கள் நான் வச்சிருக்கேன்! அப்படி நான் நினைச்சு வச்சிருக்கிறதெல்லாம் தவறில்லைனு உங்க வாழ்க்கை வரலாறு சொல்றதா தோணுது”

பேசிக் கொண்டே அந்தப் பாறையை அவர்கள் அடைந்திருக்க, அந்தப் பாறையில் பையினை வைத்து, அவளின் இரு கைகளையும் பிடித்து அமர வைத்தான்.

அவளின் கணுக்கால் வரை சலசலவெனக் குளிர்ந்த நீர் பாய்ந்தோட,

“ஸ்ஸ்ஸ்” என அவளை மீறி கூறியிருந்தவள்,

“உண்மைய சொல்லனும்னா இப்படிலாம் வந்து உட்காரனும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா தனியா ஆத்துக்குள்ள வரதுக்குலாம் ரொம்பப் பயம்” அவள் பேசிக் கொண்டிருக்க,

“வேற என்ன ஆசையெல்லாம் மனசுக்குள்ள பூட்டி வச்சிருக்கீங்க? எல்லாத்தையும் சொல்லுங்க நிறைவேத்தி வச்சிடுறேன்” பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டே இவளுக்குப் பதிலுரைத்திருந்தான்.

சரியாய் அச்சமயம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த சாலையில் இருவர் சட்டையைப் பிடித்துக் கொண்டு சண்டை போட்டிருக்க, அதைப் பார்த்த மாணிக்கம், பிள்ளைகள் இருவரையும் மலரின் கட்டுபாட்டில் ஒப்படைத்து விட்டு, “இருங்க அங்க என்ன பிரச்சனைனு பார்த்துட்டு வரேன்” அவளின் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கரை நோக்கி அவன் செல்ல, ” ஏன்ங்க பார்த்துப் பத்திரம்” என இங்குக் கத்தியிருந்தாள் மலர்.

தனது நலத்தினில் அக்கறை கொண்டு அவள் கூறிய இவ்வார்த்தையில் அவளை நோக்கி திரும்பி பார்த்து, “ஒன்னுமில்லடா பேபிமா!பயப்படாதீங்க” எனக் கூறிக் கொண்டே சென்றான்.

தூரத்திலிருந்து பார்த்திருந்த மலருக்கோ, அவன் அவர்கள் இருவரையும் பிரித்து விட முயல, அதற்கு அவர்கள் இடமளிக்காமல் போக, இவன் அவர்கள் இருவரின் கன்னத்திலும் அடித்த காட்சியே காணக் கிடைத்தது.

அதன் பிறகு அவர்கள் இருவரிடமும் ஒற்றை விரல் காண்பித்துக் கோபமாய் ஏதோ இவன் பேசுவது தெரிந்தது. அவர்கள் இருவரும் பயந்து விலகி போவதும் இவளின் பார்வைக்குப் பட்டது.

அதன் பின் மீண்டுமாய் ஆற்றினுள் இறங்கி இவர்கள் அமர்ந்திருந்த பாறையினருகில் மாணிக்கம் வர, “என்ன பஞ்சாயத்துக்காரரே! பஞ்சாயத்துலாம் முடிஞ்சுதா?” சிரிப்பாய் மலர் கேட்க,

அவளின் சிரிப்பில் இணைந்து சிரித்தவன், “இந்தப் பேரு எப்ப வச்சீங்க?” என ஆர்வமாய்க் கேட்டான்.

“உங்களை முதன் முதலில் பார்த்த அன்னிக்கு” என அவள் கூற,

வாய்விட்டு சிரித்தவனுக்கோ இவன் அவளுக்கு வைத்த பெயர் நினைவிலாடியது.

அதை நினைத்து இவன் சத்தமாய்ச் சிரிக்க, “எதை நினைச்சு சிரிக்கிறீங்க?” இவள் கேட்க,

“நானும் உங்களுக்கு இப்படி ஒரு பேரு வச்சேன்! அதை நினைச்சு தான் சிரிச்சேன்” அவன் கூறவும்,

அந்தப் பெயரை அவள் கேட்க, தக்க சமயத்தில் கூறுவதாய் அவனுரைக்க, அவனை முறைத்துக் கொண்டே பாறையை விட்டு இறங்கியவளின் கண்களுக்கு அவன் புஜத்தில் சிறு கீரலும் மெலிதாய் ரத்த காயமும் தெரிய, சட்டென அவன் கை பற்றி “அடிப்பட்டிருக்குங்க” அவள் கூற,

“இவனுகளை விலக்கி விடும் போது அடிபட்டிருக்கும் போல” எனக் கூறிக் கொண்டே ஆற்று நீரை எடுத்து அந்தக் காயத்தின் மேல் ஊற்றினான்.

அவன் காயத்தில் நீரை ஊற்றவும், அவனுக்கு வலிக்குமோ என எண்ணி முகத்தைச் சுருக்கி ஸ்ஸ் என இவள் கூற, இவளின் முகத்தைப் பார்த்தவனுக்கோ சிரிப்பு வர, “கண்ணம்மாவை விட நீங்க சின்னப் பிள்ளைனு சொன்னது உண்மை தான் போலவே பேபிமா” இவன் கூற,

“அப்படிலாம் ஒன்னுமில்ல” என முகத்தை அவள் சுழிக்க, அவளின் சுழிப்பில் சிக்கி கொண்டது மாணிக்கத்தின் மனது.

அடுத்த வந்த நாட்கள் படு விரைவாகவே நகர்ந்தது.

இரு வாரங்களுக்குள் அவளின் ஊரிலுள்ள குல தெய்வ கோவிலில் திருமணம் என முடிவு செய்திருக்க, திருமணப் பத்திரிக்கையை அனைவருக்கும் வழங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர் மாணிக்கமும் மலரும்.

இத்திருமண நிகழ்வில் வெகுவாய்ச் சந்தோஷித்திருந்தது ஆதினியும் மதுரனும் தான். தங்களுக்கு மாணிக்கமே புது அப்பாவாய் கிடைப்பதில் மிகுந்த சந்தோஷம் அப்பிள்ளைகளுக்கு.

திருமணப் பத்திரிக்கை அழைப்பிதழில், தங்களின் வருகையை எதிர்நோக்கும் என்ற இடத்தில் இவர்கள் இருவரின் பெயரையும் தங்களது மகன் மகள் எனக் குறிப்பிட்டு அச்சடித்திருந்தனர்.

ஆதினிக்கு பட்டு பாவாடையும் சட்டையும், அதற்கேற்றார் போல் அணிவிக்கத் தங்க நகையும் எடுத்தனர்.

மதுரனுக்குக் குட்டி பட்டு வேஷ்டி சட்டையும், சிறிய தங்க செயினும் மோதிரமும் எடுத்தனர்.

மாணிக்கம் மலர் இருவரும் வெளிர் பச்சை வண்ணத்தில் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுத்தனர். மலருக்கான தங்க மாங்கல்யத்தை மாணிக்கமே தனது சொந்த பணத்தில் வாங்கிருந்தான்.

மலை மீது அமைந்திருந்த அவர்களின் குல தெய்வ கோவிலில் மலரின் பெற்றோர், ஆயா மற்றும் மாணக்கத்தின் நெருங்கிய நண்பர்கள் சிலரென அனைவரும் கூடியிருக்க, ஆதினியை மாணிக்கம் தனதருகில் இருத்தியிருக்க, மலரினருகில் மதுரன் நின்றிருக்க, அனைவரும் பூ மழை தூவ, மலரின் கழுத்தில் மங்கல நாணை பூட்டினான் மாணிக்கம். அவளின் நெற்றி வகிட்டில் குங்குமத்தை வைத்தவன், மதுரனை கையில் தூக்கியிருக்க, மலர் ஆதினியை கையினில் தூக்கியிருக்க அழகாய் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது.

அன்றைய நாளின் இரவில் பிள்ளைகளைத் தன்னுடன் வைத்து கொள்வதாய் மலரின் அன்னை கூறியும் ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய அறைக்கு இருவரையும் அழைத்துச் சென்றான் மாணிக்கம்.

மலர் அவ்வறைக்குள் நுழைந்த போது, இருவரும் அவனின் இரு புறமும் படுத்துக் கொண்டு ஒரு கையை அவனைச் சுற்றி போட்டு கொண்டும், ஒரு காலை அவன் மீது போட்டு கொண்டும் உறங்கி கொண்டிருந்தனர்.

பார்க்கவே வெகு பாந்தமாய்த் தோன்றிய அக்காட்சியை ரசித்துக் கொண்டே கதவருகே நின்று விட்டாள் மலர்.

கண் மூடி படுத்திருந்த மாணிக்கம் அரவம் கேட்டு முழித்துப் பார்க்க, கதவருகில் நின்றிருந்த மலரை கண்டு, கை நீட்டி தனதருகே அழைத்தான்.

படுக்கையருகே வந்தவள், அவன் முகத்தைப் பார்த்தவாறே சற்று தள்ளி படுத்துக் கொள்ள, அவளின் முகம் நோக்கி தன் முகத்தைத் திருப்பியவன், தலையசைத்து தனது விரிந்த கையைக் காண்பித்து அதில் படுக்குமாறு அழைத்தான்.

அவனருகே இருந்த ஆதினியை ஒட்டி படுத்தவள் அவனது கையினில் தலை வைத்து மார்பினில் கை வைத்து கொண்டாள்.

கனத்த மௌனம் அந்த அறையை நிறைத்தாலும், நிறைவான இதயம் இருவரின் இருப்பையும் இன்பமாய்ச் சுகித்திருந்தது.

ஆயா சென்னைக்குப் பயணப்பட, இவர்கள் இருவரும் ஒரு வாரம் அங்கேயே தங்கியிருந்து, திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்துச் சுற்றுலா தளங்களுக்கும் பிள்ளைகளுடன் சென்று வெகு இன்பமாய் அவ்விடுமுறையைக் கழித்தனர்.

திருமணமான நாளிலிருந்து இருவரின் பேச்சுகளும் வெகுவாய் குறைந்து, மனதின் நெருக்கம் அதிகரித்திருந்தது. பார்வையின் பாஷையிலேயே மனதின் எண்ணங்களையும் உணர்வுகளையும் இருவருமே கண்டறியும் வண்ணம் நெருங்கியிருந்தனர்.

அந்நெருக்கம் மலரை தன்னவளாய் மனத்தில் இருத்த, அவளை ஒருமையில் விளிக்கப் பழகி கொண்டான்.

வழமை போல் சென்னைக்கு இரவு நேர பேருந்தில் பயணப்பட்டனர்.

இம்முறை மூன்று இருக்கைகள் கொண்ட பேருந்தில் இவர்கள் பயணிக்க, ஜன்னலருகில் மதுரனை அமர வைத்து, அவனருகில் மலரும், அவளருகில் அவனும், மடியில் கண்ணம்மாவையும் அமர்த்திக் கொண்டான் மாணிக்கம்.

பேருந்து சென்ற சிறிது நேரத்தில் மாணிக்கத்தின் கையைப் பிடித்துத் தோளில் தலை சாய்த்த மலரினை பார்த்து சற்றாய் சிரித்தவன், “பேபிமா என்கிட்ட சொல்ல ஒன்னுமே இல்லையா?” எனத் திடுமெனக் கேட்டான்.

அவனின் கேள்வியில் சட்டெனத் தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள் புருவத்தைச் சுருக்கி “என்ன சொல்லனும்” எனக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் சிரித்தவன், “சரி! சீக்கிரம் சொல்ல வச்சிடுறேன்” குறும்பாய் உரைத்து மீண்டுமாய்ச் சிரிக்க,

அவனின் புஜத்தில் குத்தியவள், “என்ன சொல்ல வைக்கப் போறீங்களாம்?” புரிந்தும் புரியாதது போல் தோன்றிய இக்கேள்வியில் அவனை முறைத்து பார்த்து அவள் கேட்க,

“அதை நீ சொல்லும் போது நான் சொல்றேன் பேபிமா” கண் சிமிட்டி அவனுரைக்க,

“வர வர புரியாத மாதிரியே பேசுறீங்க” எனக் கூறிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து உறங்கி போனாள்.

சென்னை வந்தடைந்த குடும்பத்தை, ஆரத்தி எடுத்து உள்ளழைத்தார் ஆயா.

ஆயா சமையல் வேலையில் ஈடுபட்டிருக்க, படுக்கையறைக்குள் மலரை அழைத்துச் சென்ற மாணிக்கம், “உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன் பேபிமா” என்றான்.

“என்ன?” என்பது போல் புருவத்தை உயர்த்தி அவள் அவனைப் பார்க்க, அவளின் கையில் அந்த வீட்டுப் பத்திரத்தை கொடுத்தான்.

“வீட்டோட முழுக் கடனும் அடைச்சாச்சு! இது இனி நமக்கு உரிமையான சொந்த வீடு” ஆனந்த அதிர்ச்சியில் நெகிழ்வாய் அவனை அவள் பார்த்திருக்க,

அந்நேரம் வெளியிலிருந்து, “மலர் பாப்பா” என அழைத்திருந்தார் ஆயா.

என்னவென இருவரும் வெளி வந்து பார்க்க, “பாப்பா, யாரோ வண்டி காரங்க வந்து இந்தச் சாவியைக் கொடுத்தாங்க இப்ப! பிள்ளைங்க இரண்டும் அந்த வண்டி கிட்ட தான் நிக்கிறாங்க” எனக் கூறி அச்சாவியினை மலரிடம் அவர் கொடுத்துவிட்டுச் சமையலறை சென்று விட்டார்.

அதனைப் பெற்று கொண்டவள் மாணிக்கத்தைப் பார்த்துக் கண் சிமிட்டி , “நானும் உங்களுக்கு ஒரு பரிசு வச்சிருக்கேனே” எனக் கூறி அவன் பின்னின்று சற்று எம்பி அவன் கண்களைத் தனது கையால் மூடியவள், “அப்படியே என் கூட நடந்து வாங்க” என்றாள்.

அவனை ஒட்டியே நடந்து அழைத்துச் சென்றவள், அவர்களது வீட்டின் வாசல் படிக்கட்டினருகே கேட்டினுள்ளே நின்றிருந்த அந்த வண்டியினருகில் சென்றதும் அவன் கண்களைத் திறந்தாள்.

அப்பரிசினை பார்த்தவனின் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி விட்டது.

வெகு நாட்களாய் வாங்க வேண்டுமென ஆசை வைத்திருந்தாலும், இதில் அமர்ந்து தன்னுடன் பயணிக்க எவருள்ளாரென எண்ணியே இதனை வாங்காதிருந்த மாணிக்கத்திற்கு அதையே மலர் வாங்கி வைத்திருப்பது கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தது.

அவனின் கனவு வாகனமான புல்லட் இருசக்கர வாகனம் அங்கே நின்றிருந்தது.

“பேபிமா உனக்கு எப்படித் தெரியும்? நான் இதை வாங்கனும்னு நினைச்சது?” நெகிழ்ச்சியாய் அவள் கை பற்றி அவன் கேட்க,

“நம்ம ஒருத்தரை உயிராய் நேசிக்கும் போது, அவங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனு நம்மளை அறியாமலே நம்ம மனசு குறிப்பெடுக்க ஆரம்பிச்சிடும்ப்பா! அப்படித் தான் இது” அவன் கண் நோக்கி அவள் இவற்றைக் கூற, இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று பிணைந்திருக்க,

“அப்பா, வண்டியிலே போலாம்ப்பா” மாணிக்கத்தின் சட்டையினைப் பற்றி இழுத்திருந்தாள் ஆதினி.

திருமணமான நாளிலிருந்து பிள்ளைகள் இருவரும் மாணிக்கத்தை அப்பா வென அழைக்கப் பழக்கியிருந்தார் மலரின் அன்னை.

நினைவுலகுக்கு வந்த இருவரும், பிள்ளைகளைப் பார்த்து சிரித்து விட்டு, “கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டுச் சாயங்காலம் எல்லாரும் ஒன்னா கோயிலுக்குப் போகலாம் சரியா” எனக் கூறி அனைவரையும் உள்ளழைத்து சென்றாள் மலர்.

மாலை வேளையில் அனைவரும் அழகாய் பட்டுடுத்தி கிளம்பியிருக்க, அந்தப் புல்லட் வண்டியில் அமர்ந்த மாணிக்கம் தனக்கு முன் பக்கமாய் ஆதினியையும் மதுரனையும் அமர்த்தியிருக்க, பின்னிருக்கையில் அமர்ந்த மலர், அவனின் தோளை பற்றிக் கொண்டாள்.

இக்காட்சியினைக் கண்ட ஆயா, அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்ததும் திருஷ்டி சுற்றி போட வேண்டுமென எண்ணிக் கொண்டார்.

— தொடரும்.