முள்ளில் பூத்த மலரே – 14

மலரின் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் மலரை மட்டுமல்லாது அவளது இரு செல்வங்களையும் பாதித்துத் தான் இருந்தது.

இருவரும் தங்களைச் சுற்றி நடப்பதை கணிக்குமளவு பெரிய பிள்ளைகளில்லை ஆயினும், ரவி மலரிடம் போடும் சண்டையும், தந்தையின் அன்பில்லாது கவனிப்பில்லாது வளர்ந்த நிலையும் தங்களது வீட்டில் ஏதோ சரியில்லையெனப் புரிந்துணர முடிந்தது அவர்களால்.

பள்ளியில் அவர்களது தோழமைகளின் தந்தையைக் காணும் சமயங்களில் ஆதினி மதுரனிடம் ,  “நம்ம அப்பா மட்டும் ஏன் நம்ம ஸ்கூல்க்கு வர மாட்டேங்கிறாங்க! நம்மகிட்ட பேச மாட்டேங்கிறாங்க அண்ணா” தந்தையின் அன்புக்கான தனது ஏக்கத்தை இவ்வாறாகக் கேள்வியாய் கேட்பாள்.

தந்தையாய் அவளை அச்சமயம் மதுரன் தான் அரவணைப்பான்.

வாழ்வின் இன்பதுன்பம் எதுவெனப் பிரித்தறிய இயலா இவ்வயதில் இவ்வாறான துயரங்களையேற்று தான் அப்பிள்ளைகள் வாழ்ந்து வந்தன.

வழமை போல் மாலை வேளையில் கண்ணம்மாவையும் கண்ணாவையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றான் மாணிக்கம்.

மாணிக்கம் எப்பொழுது சென்றாலும் துள்ளியோடி வந்து தாவி அவன் கைகளுக்குள் அடங்கிக் கொள்ளும் அக்குட்டி பெண் அன்று வெகு அமைதியாய் காணப்பட்டாள். 

ஆயினும் மாணிக்கம் அவளைக் கைகளில் தூக்கி கொண்டு, “என்னடா ஆச்சு கண்ணம்மா” எனக் கேட்டான்.

அவள் அதற்கும் பதில் கூறாது அமைதியாய் இருக்க, அருகிலிருந்த மதுரனிடம், “டேய் கண்ணா பாப்பாக்கு என்னடா ஆச்சு? ரெண்டு பேரும் சண்டை போட்டீங்களா? இல்லயே நீ அவ கிட்ட சண்டை போட வாய்ப்பில்லையே? அவ தானே உன் கிட்ட சண்டை போடுவா! நீ அவளைக் கெஞ்சி கொஞ்சிட்டு தானே இருப்ப” தானே கேள்வியும் தானே பதிலுமாய்ப் பேசிக் கொண்டே வந்த மாணிக்கம், இருவரையும் ஆட்டோவில் அமர்த்திவிட்டு ஆட்டோவை ஓட்டினான்.

“என்னாச்சு பாப்பா?” ஆதினியின் தாடை பற்றிக் கொண்டு கண்ணா கேட்க,

“நான் அம்மாகிட்ட தான் சொல்லுவேன்” எனக் கூறினாள் கண்ணம்மா.

“சரி இதையாவது சொன்னாளே” என மனம் அச்சமயம் நிம்மதி அடைந்தாலும்,

“என்னவா இருக்கும்? உடம்பு எதுவும் சரியில்லையா? நான் தூக்கும் போது உடம்பு சூடு எதுவும் தெரியலையே? டீச்சர் யாரும் திட்டிட்டாங்களா? ஒரு வேளை யாரும் இவங்களுக்கு அப்பா இல்லைனு எதுவும் சொல்லிட்டாங்களா?” 

கைகள் அதன் போக்கில் ஆட்டோவை இயக்கினாலும், மனம் அதன் போக்கில் இயங்கி கொண்டிருந்தது மாணிக்கத்திற்கு.

வீட்டை அடைந்ததும், ஆதினியை தூக்கி கொண்டு உள் நுழைந்தவன், மலரை தான் தேடினான்.

ஆதினி மலரை தேடினாளோ இல்லையோ, இவன் வெகு ஆர்வமாய்த் தேடினான்.

சமையலறையில் இருந்து வெளி வந்த மலரை பார்த்ததும் சற்று ஆனந்தம் மேலிட, “கண்ணம்மா ஏதோ உங்ககிட்ட சொல்லனுமாம்” எனக் கூறி அவளை மலரருகே நிறுத்தினான்.

“என்னடா பாப்பா?” எனக் கூறி மகளின் உயரமளவு முட்டியை மடித்து அமர்ந்து கேட்டாள் மலர்.

“அம்மா..  அம்மா..  என் ஃப்ரண்டு ரோகினி இருக்காலமா” கண்களை உருட்டி கண்ணம்மா கூற,

“ஆமா இருக்காங்க! போன வாரம் முழுக்க உன் ஃப்ரண்டு ஸ்கூலுக்கு வரலனு சொன்னீயே” மலர் ஞாபகமாய் ஆதினி கூறியவற்றைக் கூற,

“ஆமாமா அவ வந்து இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்துட்டாமா” கண்ணம்மா கூறவும்,

“இதைச் சொல்லவா இவ மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு வந்தா” மாணிக்கம் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க,

“அவ வந்தாளாஆஆஆ… எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்தாமாஆஆ” என்று ஆதினி ராகம் போட்டு கூற,

“ஹோ இன்னிக்கு ரோகினிக்கு பர்த்டே வா?” மலர் கேட்க,

இவர்களின் சம்பாஷனையை ஆயா,  மாணிக்கம் மற்றும் மதுரன் அனைவரும் சிரிப்பும் ரசனையுமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க,

“இல்லம்மா… ரோகினிக்கு ஹேப்பிப் பர்த்டே இல்ல” இல்லையெனத் தனது பிஞ்சு கையையும் தலையையும் ஆட்டி கண்ணம்மா கூற,

சிரிப்பாய் அவளைப் பார்த்த மலர், “ஹேப்பிப் பர்த்டே இல்லையா? அப்புறம் ஏன் சாக்லேட் கொடுத்தா ரோகினி?” கேட்க,

“அவளுக்குப் புது அப்பாஆஆஆ கிடைச்சிட்டாங்களாம்?” ராகமாய்க் கண்ணம்மா கூறியதை கேட்டதும்,

மலர் மற்றும் மாணிக்கத்தின் முகம் சிந்தையில் ஆழ்ந்தது.

“ஏதோ பூகம்பம் வர போகுது” மலரின் மனம் கலக்கமாய் எண்ண,

“நம்ம சீக்கிரம் மலருக்கு ஒரு மாப்பிள்ளைய பார்க்கனும்! அப்ப தான் பாப்பா இதெல்லாம் இப்படிப் பெரிசா வந்து பேச மாட்டா?” மாணிக்கம் இவ்வாறாய் நினைக்க,

ஆனால் மதுரனோ, “புது அப்பாவா! அது எப்படி?” தனக்கும் இப்படி ஒரு அப்பா கிடைக்கலாமோ என்ற ஆர்வத்தில் கேட்டிருந்தான்.

“ஆமாண்ணா புது அப்பா! ரோகினிக்கு அப்பா இல்லையாம்! சாமிக்கிட்ட போய்ட்டாங்களாம்! அவ பார்த்ததே இல்லையாம்! இவ அவங்க அம்மாகிட்ட அப்பா வேணும்னு கேட்டாளாம்.  அவங்க புது அப்பாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்கலாம்!  புது அப்பா கிடைச்சிட்டாராம்! அந்தப் புது அப்பா தான் இவளை ஸ்கூலுக்கு வந்து விட்டுட்டு போனாரு! மிஸ் கிட்ட சொல்லி எல்லாருக்கும் சாக்லேட் கொடுக்கச் சொன்னாரு” தனது மழலை மொழியில் இவள் கூற கூற மலர் அரண்டு போய் எழுந்து நின்று விட்டாள். 

இவள் என்ன கேட்க போகிறாளெனத் தெளிவாய் புரிகிறதே! இதற்கு என்ன பதில் சொல்வதென்ற குழப்பத்திலும் யோசனையிலும் மலர் நின்றிருக்க,

மாணிக்கமோ ஆனந்தத்தில் திளைந்திருந்தான். தான் மாப்பிள்ளை பார்த்த பிறகு மலரிடம் எவ்வாறு ஒப்புதல் வாங்குவது என்பதில் மாணிக்கத்திற்குப் பெரும் குழப்பம் இருந்தது.  தற்போது கண்ணம்மாவே இதைக் கேட்கும் போது இவள் மறுமணம் பற்றிச் சிந்திக்க வாய்ப்புள்ளதேயென எண்ணினான் மாணிக்கம்.

நின்றிருந்த மலரின் புடவையினைப் பற்றி இழுத்த ஆதினியோ, “அம்மா அம்மா நீயும் மாணிக்கம் கல்யாணம் பண்ணிக்கோமா! மாணிக்கம் எனக்கும் அண்ணாக்கும் புது அப்பாவா மாறிடுவாங்க! ப்ளீஸ்மா மாணிக்கம் கல்யாணம் செஞ்சிக்கோமா” கண்ணைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் , அமைதியாய் ஒரு அணுகுண்டை இறக்கி வைத்தாள் ஆதினி.

மலர் மற்றும் மாணிக்கம் இருவருக்கும் பேரதிர்ச்சியைத் தாண்டிய அதிர்ச்சியாய் இது இருந்தது.

“ஹய்யா சூப்பர் ஐடியா ஆது” என அவள் கைகளைத் தட்டி குதூகலித்திருந்தான் மதுரன்.

திருமணம் என்றால் என்னவென அறியாத குறுத்துகளுக்கு, தாய் திருமணம் செய்தால் தனக்கொரு தகப்பன் கிடைப்பான் என்ற புரிந்துணர்வில் இயல்பாய் இக்கேள்வியைக் கேட்டு விட்டு பதிலுக்காய் காத்திருந்தனர்.

மாணிக்கத்தின் நிலையோ அந்தோ பரிதாபம்! இது கனவிலும் நினையாத விஷயமல்லவா அவனுக்கு. 

ஆனால் மலர் மாணிக்கம் இருவரது மூளையும் ஒரே விஷயத்தைத் தான் சிந்தித்து  கொண்டிருந்தது.

எவ்வாறு இதைப் பிள்ளைகளுக்கு எடுத்து கூறி புரிய வைப்பது? என்பது தான் இருவர் மனதிலும் பெருங்கவலையாய் இருந்தது.

மலர் மாணிக்கத்தினை நோக்க, மாணிக்கம் மலரினை நோக்க,  அந்த நேர சமாளிப்பாய், “சரி சரி நம்ம அப்புறம் போசலாம்! பாப்பா பசியா இருப்பல்ல!  அம்மா உனக்குச் சோறு ஊட்டுறேன் வா!” என மலர் அவளைத் தூக்கி கொண்டு உள் செல்ல,

“நான் வரேன் மேடம்” என வெளி வந்துவிட்டான் மாணிக்கம்.

அன்றிரவு இருவருக்கும் உறக்கம் வரவில்லை.

மாணிக்கத்திற்கோ, “எப்படி இந்தப் பசங்களைச் சமாளிக்கிறது” என்ற யோசனையிலும், “இதையே சாக்கா வச்சி பேசி எப்படியாவது மேடமை செகண்ட் மேரேஜுக்கு ஒத்துக்க வைக்கனும்” என்ற எண்ணத்திலும் அவ்விரவு கழிய,

மலருக்கோ பெரும் குழப்ப நிலையை உண்டாக்கியது ஆதினியின் இந்தக் கோரிக்கை.

தெளிந்த நீராய் தன் கடமை, தன் வேலை, எதிர்காலத் திட்டமிடல், அதற்கான உழைப்பு என அதை நோக்கி ஓடி கொண்டிருந்தவளின் மனதில் பெரும் குழப்பம் சூழ்ந்தது இப்போது. 

இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவு எடுத்த பின்பே உறங்கினாள் அவள். ஆனால் அந்த முடிவு யாருக்கும் உவப்பாய் இல்லை. அவளுக்கே அது நிம்மதியற்றதாய் மாறியது தான் விந்தை.

மறுநாள் மாலை வேளையில் வீட்டிற்கு வந்த மாணிக்கத்திடம், தனியாய் பேச வேண்டுமெனக் கூறி மாடிக்கு அழைத்துச் சென்றவள், “இனி நீங்க இங்க வராதீங்க”  அலுங்காமல் குலுங்காமல் தீர்க்கமாய் அவன் முகம் நோக்கி கூறினாள்.

மாணிக்கம் தான் ஆடி போனான்.  மனதில் சுருக்கென ஒரு வலி வந்து போனது.
ஆயினும் மலரை புரிந்து கொள்ள வைக்கும் நோக்கத்தில்,

“என்ன மேடம்! பாப்பா நேத்து கேட்ட விஷயத்துக்காகவா என்னைய வர வேணாம்னு சொல்றீங்க! நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணி அவர்கிட்ட பாப்பாவும் கண்ணாவும் வளர ஆரம்பிச்சிட்டா இந்தப் பிரச்சனைலாம் வராது மேடம்! நீங்க இன்னொரு கல்யாணத்தைப் பத்தி யோசிக்க வேண்டிய தருணம் இதுனு கண்ணம்மா மூலமா கடவுள் சொல்றதா தான் எனக்குத் தோணுச்சு”  அவன் கூற,

அமைதியாய் அவனையே பார்த்திருந்தவள், “அதெப்படி? நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களாம்! நான் மட்டும் பண்ணிக்கனுமா?  அடுத்து வரவனும் ரவி மாதிரி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்! நீங்க இனி வீட்டுக்கு வராதீங்க மாணிக்கம்! பசங்க வளர வளர இன்னும் என்னவெல்லாம் கேட்பாங்களோனு பயமா இருக்கு! ஊரு பேசும் போது கூட நான் கவலைபடலை.  ஆனா என் பிள்ளைங்க நாளைக்கு என்னைய தப்பா பேசிட கூடாது”

மலரின் பேச்சில் கடுப்பின் உச்சிக்கே சென்றவன், “ம்ப்ச் என்ன பேசுறீங்க நீங்க?” குரலை உயர்த்தியிருந்தான்.

தலையை அழுந்த கோதி, பல்லை கடித்து, தனது கோபத்தினைக் கட்டுக்குள் கொண்டவன், “இப்ப என்ன உங்களுக்கு? நான் இனி வீட்டுக்கு வர கூடாது அவ்ளோ தானே! இனி ஒரு நேரம் பிள்ளைகளைப் பத்தி தப்பா பேசாதீங்க! தன்னுடைய அம்மாவை புரிஞ்சிக்காம தப்பா பேசுவாங்கனு எப்படி உங்களால சொல்ல முடிஞ்சிது! என்னமோ அவங்க வயசுக்கு காதுல கேட்டதைத் தன்னோட வாழ்க்கைல பொறுத்தி பார்த்து அந்தப் பிள்ளைங்க கேட்டது எப்படி உங்களுக்கு இவ்ளோ தவறா தோணிருக்கு”

சற்று இடைவெளி விட்டவன்,

“உங்களை வேணா நான் பார்க்காம இருப்பேன்! ஆனா கண்ணாவையும் கண்ணம்மாவையும் என்னால பார்க்காம இருக்க முடியாது! அவங்களை நான் பார்க்கிறதை யாரும் தடுக்கவும் முடியாது” கூறிவிட்டு நிமிடமும் நில்லாது அவ்விடம் விட்டு சென்று விட்டான் மாணிக்கம்.

இதன்பின் தான் மலருக்கு உண்மையான சோதனையும் வேதனையும் காத்திருந்தது.

“எவ்வளவோ பார்த்துட்டோம்! இதைப் பார்த்துக்க முடியாதா? இதுவும் கடந்து போகும்னு போய்டும்” இவ்வாறு எண்ணி தான் மலர் தனது மனதினை தேற்றி கொண்டாள்.

இந்த ஒன்றரை வருடத்தில் மலரிடம் மாணிக்கம் கோபித்துக் கொண்ட முதல் நிகழ்வு இது.

அவனின் மனம் காயமுற்றதே என்ற முதல் கவலை மலரை ஆட்டுவிக்க, “யாரு கவலைப்பட்டா எனக்கென்ன”  எனத் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முற்பட்டாலும், எந்த ஆறுதல் தேறுதல் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை அவளின் மனம்.

அன்றிரவும் அவளின் தூக்கத்தினைத் தொலைத்தாள்.

மாணிக்கத்தின் நிலையோ இதை விட மோசமாய் இருந்தது.

“ஏன் எனக்கு இவ்ளோ கோபம் வருது? பெறுமையா பேசி புரிய வைக்காம இப்படிக் கோபமா பேசிட்டு வந்துட்டேனே! அழுதிருப்பாங்களோ? சே சே அழலாம் மாட்டாங்க!  ஆனாலும் மனசு கஷ்டபட்டிருக்கும்ல” தானே கேள்வியும் தானே பதிலுமாய் மனதிற்குள் பேசிக் கொண்டே அன்றைய இரவை கழித்தவனுக்கோ, அவளைக் காலை ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டுமென முடிவெடுத்த பின்பு தான் நிம்மதியான நித்திரை வந்தது.

மறுநாள் காலையில் மாணிக்கத்தின் மனத்தினை வதைத்திட்டோமோ என்ற எண்ணத்தில் மனதிலேறிய பாரத்தினுடேயே இங்கு மலர் பள்ளிக்கு கிளிம்பி கொண்டிருக்க, அங்கு மாணிக்கமோ மலரை  சென்று பார்க்கலாமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தான்.

அவள் முன் போய் நின்றால் கோபம் கொள்வாளோ இல்லை கவலை கொள்வாளோ? எதுவாகினும் இப்போது நேரடியாய் சென்று பார்ப்பது சரியான முடிவல்ல என முடிவு செய்தவன், அவள் தனது இரு சக்கர வாகனத்தில் கேட்டை விட்டு வெளி வரும் போது மறைந்திருந்து பார்த்திருந்தான்.

மதிய உணவு இடைவேளையில் பிள்ளைகளைச் சென்று பார்த்து வந்தான். 

மாலையில் அவளே பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தாள்.

பள்ளியிலிருந்து வீடு திரும்பியவளை கண்ட ஆயா, “என்னம்மா! முகம் ரொம்ப வாட்டமா இருக்கு” எனக் கேட்க,

“கொஞ்சம் தலைவலி ஆயா! நான் கொஞ்ச நேரம் படுத்திருக்கேன்.  டிஸ்டர்ப் பண்ணாதீங்க!”  எனக் கூறி உள்ளறைக்குள் சென்று கட்டிலில் படுத்து விட்டாள்.

ஏனோ மனம் பாரமாய் இருந்தது அவளுக்கு.  எத்தகைய கஷ்டநஷ்டங்கள் வந்த போதும்,  அவளது ஆசிரியை வேலையில், வகுப்பில் பாடமெடுக்கும் சமயங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் இல்லாமல் பணியைச் செவ்வனே செய்து முடிப்பாள்.  அத்தனையாய் அவள் விரும்பி செய்யும் வேலை அது. 

ஆனால் இன்று எதிலும் அவளால் கவனம் செலுத்தயியலவில்லை.  எந்த வகுப்பிலும் பாடம் எடுக்காமல் அவர்களையே படித்துக் கொள்ளக் கூறி விட்டு அமர்ந்துவிட்டாள்.

மாணிக்கத்தின் நினைவுகள் அவளைச் சூழ்ந்திருந்தது. வெகுவாய் காயப்பட்டு விட்டானோ அதனால் தான் தன்னைக் காண வரவில்லையோ என அவளின் எண்ணம் தற்போதும் அவனைச் சுற்றியே வர,  அச்சமயம் அவளுக்கு டீ வழங்க கதவை தட்டிக் கொண்டு உள் நுழைந்தார் ஆயா.

அவரிடம் டீயை கையில் வாங்கியவள், “ஆயா! மாணிக்கம் எதுவும் கவலையா தெரிஞ்சாரா? அவரைப் பார்த்தீங்களா?” என அவள் கேட்க,

“அப்படிலாம் எதுவும் இல்லைமா!  அவன் நல்லா தான் இருக்கான்” ஆயா கூற, சரியெனத் தலையை ஆட்டி அவரை அனுப்பி வைத்தவள் மூளையில் மின்னலாய் நேற்று அவன் கூறியது நினைவிலாடியது. 

“உங்களைக் கூடப் பார்க்காம இருப்பேன்” அவன் சொன்ன வார்த்தை நினைத்து பார்த்தவளுக்கு, “அப்ப என்னைய பார்க்காம அவரால இருக்க முடியும் போது, நான் மட்டும் ஏன் இப்படி அவரை நினைச்சி கவலைப்படனும்” மாணிக்கத்திற்கான தனது மனதின் கவலையை இதை எண்ணி தள்ளி வைக்க முற்பட்டாள். 
அச்செயலையாற்ற அவள் முற்பட்டாலும், மனம் அதற்கு வளைந்து கொடுக்கவில்லை.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், மலர் வெகுவாய் மாறி போயிருந்தாள். அவளது கண்ணிலும் உதட்டிலும் எப்பொழும் உறைந்திருக்கும் புன்னகை எங்கோ காணாமல் போயிருந்தது.  பள்ளி வேலையில் வெகுவான கவன சிதறல் வந்திருந்தது. 

பிள்ளைகளுக்குப் பாடம் கற்று தருவதைத் தவிர வேறெதுவும் வீட்டில் அவள் செய்வதே இல்லை. ஆயா தான் அனைத்து வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மாணிக்கம் இல்லாத வாழ்வு, பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது அவளுக்கு.  அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் தான் அவள் இல்லை.

அவனை மீண்டுமாய்த் தானே சென்று வீட்டிற்கு அழைத்து வரவும் மனம் ஒப்பவில்லை.

இத்தகைய இரண்டுங்கெட்ட மனநிலையில், எந்த நேரமும் எதையோ பறிகொடுத்தது போல் உலவிக் கொண்டிருந்தாள்.  அவளின் மனம் அவ்வாறாய் தான் உலவியது.

மாணிக்கம் தினமும் காலை வேளையில் மலரை அவளறியாது பார்த்துக் கொண்டு தானிருந்தான். மதிய வேளையில் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு வருவதால் அவர்களும் எவ்வித கவலையுமில்லாது சுற்றி கொண்டிருந்தனர்.

மலரின் முன் வாழ்வில் அத்தனை துன்பம் ஆட்டுவித்த போதும் ஏதோ ஒன்றை தனது இலக்காய் வைத்து அதை நோக்கி பயணித்து தனது வாழ்வை மேம்படுத்தும் பணியில் முனைப்பாய் செயல்பட்ட மலருக்கு, மாணிக்கம் இல்லாத தற்போதைய வாழ்க்கை பெரும் வெறுமையாய் தோன்றியது.  ஏதோ ஓர் ஏக்கம், ஆதங்கம், கோபம், வெறுமை என அனைத்தும் அவளைச் சூழ்ந்தது.  எதிலும் நாட்டமில்லாது உயிர்பில்லாது இயந்திரதனமாய்ச் சென்று கொண்டிருந்தது அவளது வாழ்வு.

ஒரு மாதம் இவ்வாறாகவே உருண்டோட, ஒரு நாள் கண்ணம்மாவிற்கு வாந்தி ஜூரம்  என உடல் நிலை மோசமாகி போக,  அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் செய்தி அறிந்த நொடி ஓடோடி வந்தான் மாணிக்கம்.  ஆதினியை அனுமதித்திருந்த மருத்துவ அறைக்குச் சென்று அவன் பார்க்க, ஆதினி கைகளில் ட்ரிப்ஸ் ஏற படுத்திருக்க, அருகில் நின்றிருந்தாள் மலர்.

இவனைக் கண்ட நொடி மலரின் இத்தனை நாள் ஏக்கம்,  தவிப்பு,  வெறுமை அனைத்தும் மறந்து மனம் ஆனந்தத்தில் துள்ள, கண்ணில் ஒளி மின்னியது.  ஆனால் இவன் தனக்காய் வரவில்லை பிள்ளைக்காய் வந்திருக்கிறான் என மூளை எடுத்துரைத்த மறுநொடி,  அவள் மனதில் பொங்கி வந்த உவகையெல்லாம் தண்ணீர் பட்ட பாலாய் அடங்கிப் போக,  கோபம் அவளை ஆட்கொள்ள,  அவன் முகம் காணாது அவள் விறுவிறுவென அறையை விட்டு வெளி சென்றுவிட்டாள்.

மலரின் இச்செயலில் அவள் இன்னும் தன் மீது கோபமாய் தான் இருக்கிறாள் என எண்ணினான் மாணிக்கம்.

அன்று முழுவதும் ஆதினியுடனேயே இருந்த மாணிக்கம், மலரிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 

அவளுக்கு மனம் வெகுவாய் வலித்தது.  ஏன் இவன் தன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், தன்னிடம் பேசாமல் இருப்பதற்கும் இத்தனையாய் தான் வேதனை கொள்கிறேன் என விளங்கி கொள்ள இயலவில்லை மலரால். 

அவனின் ஒற்றைப் பார்வைக்காகவும், கரிசனமான ஒரு வார்த்தைக்காகவும் வெகுவாய் ஏங்கி கொண்டிருந்தது மலரின் மனது.  ஆனால் அதைத் தானே கேட்டு பெற்றுக் கொள்வதில் மனமில்லை அவளுக்கு.  ஏன் அவனாகவே தன்னிடம் வந்து பேசவில்லை என்கின்ற கோபம் மனதில் நிலை கொண்டது.

கண்ணம்மா உடல்நலம் தேறி அன்றைய இரவே டிஸ்சார்ஜ் ஆக,  அவர்களை ஆட்டோவில் ஏற்றி வீட்டில் இறக்கி விட்டு செல்ல, மலரோ தனது இரு சக்கர வாகனத்திலேயே வீட்டிற்குச் சென்றாள்.

இவள் வீட்டை அடைந்த நேரம், மாணிக்கம் இவர்களை இறக்கி விட்டு அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான்.

மலர் வீட்டினுள் நுழையவும், “மலரு, மாணிக்கம் நாளைக்குச் சென்னையை விட்டே கிளம்பி போறானாம்! “இப்படி அவங்க மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா… யாருக்காக நான் இங்க இருக்கனும்? நான் இங்க இருக்கிறது தான் அவங்களுக்கு இப்ப பிரச்சனைனா நாளைக்கே நான் ஊருக்கு போறேன்! அவங்க கிட்ட சொல்லிடுங்க ஆயானு” சொல்லிட்டு போய்ட்டான்மா” ஆழ்ந்த வருத்தத்தில் ஆயா உரைக்க,

நிமிடமும் நில்லாது, “நான் கொஞ்சம் வெளியில போய்ட்டு வரேன் ஆயா! பசங்களைச் சாப்பிட வச்சிட்டு நீங்க தூங்குங்க” எனக் கூறி மலர் உடனே தனது வண்டியில் கிளம்பி போக, ஆயா மனதினுள் சிரித்துக் கொண்டார்.

நேராய் மாணிக்கத்தின் வீட்டில் வண்டியை நிறுத்தியவள், கதவினை தட்டினாள். 

பெரும் கவலையுடன் கண் கலங்கி அமர்ந்திருந்த மாணிக்கம், ஆயா தான் வந்திருப்பதாய் எண்ணி கதவை திறக்க, அங்கு மலரை பார்த்து அதிர்ச்சிக்குள்ளானான்.

“உள்ள வாங்க மேடம்” அவளின் முகத்தை நேராய் காணாது, நாற்காலியை எடுத்து போட்டு “உட்காருங்க மேடம்” என்றான்.

அவள் எங்கும் நோக்காது அவனின் முகத்தினில் மட்டுமே தனது பார்வையைப் பதித்திருக்க, அவனறையில் அவன் சாமி படம் வைத்திருந்த மேடையின் அருகில் அமர்ந்து கொண்டான்.

தனது கைகளை மட்டுமே பார்த்திருந்தவன் அவள் முகத்தை மறந்தும் பார்க்கவில்லை.

தான் கூற வந்த விஷயத்திற்கு அவன் இவ்வாறு தன்னைக் காணாதிருப்பதே நல்லது என எண்ணிக் கொண்டவள், தான் கூற வந்ததைச் சொல்ல தொடங்கினாள்.

“உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்னு தான் வந்தேன் மாணிக்கம்” சற்று இடைவெளி விட்டவள்,

“என் வாழ்க்கைல எவ்வளவோ கஷ்டம் துன்பம் எல்லாம் கடந்து வந்திருக்கேன் மாணிக்கம்! ஆனா இப்ப இந்த ஒரு மாசம் நான் பட்ட மன வேதனை இதுவரை நான் உணராதது மாணிக்கம்”

இவள் எதைப்பற்றிக் கூறுகிறாள் என எண்ணிக் கொண்டே அவளின் முகத்தை நிமிர்ந்து அவன் பார்க்க,  அது வரை அவன் முகம் மட்டுமே பார்த்து பேசியவள், தற்போது அவனின் பார்வையை எதிர்கொள்ள இயலாது தனது பார்வையினை அந்தச் சாமி படங்கள் மீது திருப்பிக் கொண்டவள் தொடர்ந்தாள்.

“தினமும் நான் சாப்பிட்டேனானு கேட்குற உங்க அக்கறையான கேள்வி இல்லாம, நான் சரியா வண்டி ஓட்டுறேனா, பாதுகாப்பா இருக்கேனானு என்னைப் பார்த்துக்கிற உங்க பாதுக்காப்பான அன்பில்லாம, என் லட்சியத்தில் நான் முன்னேறிட்டு இருக்கேனானு அடிக்கடி கேட்டு தெரிஞ்சிக்கிற உங்க கவனிப்பு இல்லாம இந்த ஒரு மாசமா நான் நானா இல்ல மாணிக்கம்! வாழ்க்கைல இப்டி ஒரு தனிமையை, மனசோட வலியை நான் உணர்ந்தது இல்லை மாணிக்கம்!” இதைக் கூறும் போது அவளது கண்கள் மெலிதாய் கலங்க,

“இப்படி ஒருத்தர் முன்னாடி உட்கார்ந்து கண்கள் கலங்க நான் பேசுறதே எனக்குப் புதுசு! யாரா இருந்தாலும் நான் உங்களுக்கு வேணும்னா இருங்க இல்லனா போங்கனு தான் இதுவரை நான் இருந்திருக்கேன்! என் பிள்ளைங்களைத் தவிர வேற யாரும் எனக்கு வேணும்னு நான் நினைச்சதே கிடையாது! ஆனா இப்ப என்னைச் சுத்தி எல்லாம் இருந்தும்…” கண்ணீர் தொண்டையை அடைக்க,

சற்று அமைதியாகி அவள் தன்னைச் சமன் செய்ய, 

இந்த ஒரு மாத பிரிவு அவர்களுக்குள்ளான பிரியத்தை வெளிபடுத்தியிருக்க, இப்பொழுது பேரன்புடன் அவள் முகத்தை மட்டுமே மாணிக்கம் பார்த்திருந்தான்.

“என்னைச் சுத்தி எல்லாம் இருந்தும் இப்படி உங்களோட அன்பும் அருகாமையும் இல்லாம இருக்கிறது நரகத்துல இருக்கிறது போல ஃபீல் ஆகுது மாணிக்கம். இப்படி ஒரு நிலையை நான் வெறுக்கிறேன் மாணிக்கம்! நான் இப்படி இருக்கிறது எனக்குச் சுத்தமா பிடிக்கலை! எனக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியலை! நான் என்ன செய்யட்டும்”  கண்கள் கண்ணீரில் குளமாகி இருக்க,  அவன் முகம் நோக்கி தேம்பலாய் அவள் கேட்டிருக்க,

தாய்மையின் அன்பின் கூறுகள் அவன் முகத்தில் பெருக்கோட ஆழ்ந்த நேசத்துடன் அவளை நோக்கி இருந்தான் மாணிக்கம்.

அவளின் நிலையும், அவளுக்கான தேவை என்னவென்றும் தெளிவாய் புரிகிறதே இவனுக்கு.  ஆனால் அவளுக்கு என்ன பதில் கூறவெனத் தெரியாது அங்குங்குமாய் தனது வீட்டினுள் பார்வையை அவன் சுழலவிட, ஏதேச்சையாய் அவன் விழியினில் விழுந்தது அந்த ருத்ரக்ஷம்.

இந்த ருத்ராக்ஷத்தை கையினில் கொடுத்து அந்தச் சாமியார் கூறியது அவனின் நினைவினில் ஓடியது.

“மனம் போல் இல்லறம் அமையாது சிக்கலாகி வாழ்க்கையே சின்னாபின்னமாகி வேதனையில் சுழலும் உனக்கு, விடியலாய் ஒருத்தி வருவாள் உன் வாழ்வில்!  அவளையும், அவளைச் சார்ந்தவர்களையும் உன்னவர்களாய் ஏற்று, அவளின் சூழ்நிலையையும் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழு! உனக்குக் குழப்பம் வரும் போது இது உதவும்”

மனம் அந்த வார்த்தைகளில் சுழன்று தெளிவடைய மலரின் அருகில் வந்து நின்றவன், ஆறுதலாய் அவள் தலை கோத, நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா மாணிக்கம்” கண்களில் அவனின் அன்பிற்கான ஏக்கத்தை ஏந்தி அவள் கேட்க,

“என்னோட மலர் என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டா தான் சந்தோஷமா இருப்பாங்கனா, கண்டிப்பா செஞ்சிக்கலாம்” என்றவன் சொன்னதும், தனது இத்தனை நாள் துயரங்களுக்குக் கிடைத்த வடிகாலாய் எண்ணி அவனிடையைக் கட்டிக் கொண்டு அழவாரம்பித்தாள் மலர்.

அமைதியாய் அவளின் தலை கோதினான் மாணிக்கம்.

“நீங்க கஷ்டபடுறதை என்னால என்னிக்குமே பார்த்துட்டு இருக்க முடியாது மேடம்.  என்னை நீங்க பார்க்காம இருக்கிறது தான் உங்களுக்கு விருப்பம் போலனு நினைச்சு தான் இத்தனை நாள் நான் அந்தப் பக்கமே வராம இருந்தேன்! ஆனா நானும் சந்தோஷமா நிம்மதியா ஒன்னும் இல்லை மேடம்.  உங்களைக் கூடப் பார்க்காம இருப்பேன் பிள்ளைங்களைப் பார்க்காம இருக்க முடியாதுனு சொன்ன எனக்கு,  நீங்க என் வாழ்வில் எவ்ளோ முக்கியம்னு புரிய வச்சிது இந்த ஒரு மாசம்.  நான் தினமும் உங்களுக்குத் தெரியாம மறைஞ்சிருந்து உங்களைப் பார்த்துட்டு தான் இருந்தேன்” அவன் கூறிய நொடி அப்படியா என்றொரு ஆனந்த பாவனையில் அவனை அவள் நிமிர்ந்து நோக்க, தாயை நிமிர்ந்து நோக்கும் சேயாய் அவள் அவனுக்குத் தென்பட, “என் செல்ல பேபிமா நீங்க”  என அவளின் கன்னம் கிள்ளி அவன் கொஞ்ச,

“என்னது பேபியா? நான் ஒன்னும் அவ்ளோ சின்னபிள்ளதனமாலாம் நடந்துக்கல” முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு அவள் கூற, 

“நீங்க அன்னிக்கு ஹாஸ்ப்பிட்டல்ல என்னைய அப்பா கிட்ட கூட்டிட்டு போறீங்களானு அழுதுகிட்டே கேட்டீங்களே, அப்ப நான் உங்களுக்கு வச்ச பேரு இந்தப் பேபிமா! அப்ப நீங்க எனக்குக் கண்ணம்மாவை விடக் குட்டி பொண்ணா தான்  தெரிஞ்சிங்க.  நீங்க அழும் போதெல்லாம் உங்களையே அறியாம உங்களை மீறி குட்டி மலர் வெளிபடுவாங்க பேபிமா” சிரித்துக் கொண்டே ரசனையாய் அவன் கூற,

தனது பெண்மையைத் தாண்டி, தனக்குள் இருக்கும் குழந்தைதனத்தையும், தாய்மையையும் அல்லவா ரசித்திருக்கிறான் இவன்.

மனதின் பூரிப்புப் பெருமிதமாய்க் கண்ணில் பொங்கி வழிய, “உங்களை ரொம்பப் பிடிக்குது” தன்னை மீறி கூறியிருந்தாள்.

அவளின் கூற்றில் ஆனந்தமாய்ச் சிரித்தவன், அவளின் நெற்றியில் முட்டி, “எனக்கும் தான்” என்றான்.

— தொடரும்