முள்ளில் பூத்த மலரே – 13

ரவியின் வீட்டை விட்டு மலரும் மாணிக்கமும் வெளி வர, ரவி தனது கோபத்தையெல்லாம் அவனின் மனைவி மீது காண்பித்து அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். இவர்களின் காதிலும் அது விழுந்தது.

மலர் வண்டியை எடுக்க, “கொடுங்க மேடம்… நான் ஓட்டுறேன்! வரும் போதும் ஒரு மணி நேரம் நீங்க தான் ஓட்டினீங்க” மாணிக்கம் மலரிடம் கேட்க,

“இல்ல மாணிக்கம்! உங்களை மாதிரி எனக்கும் வண்டி ஓட்டுறது ரொம்பப் பிடிக்கும். எனக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது வண்டியை எடுத்துட்டு இலக்கே இல்லாம எங்கேயாவது சுத்திட்டு வரது பெரிய ரிலாக்சேஷனா தோணும்” பேசிக் கொண்டே வண்டியிலேறி அவனை ஏற வைத்து ஓட்டவாரம்பித்திருந்தாள்.

“பாவம் அந்தப் பொண்ணு” என மாணிக்கம் கூற,

“எந்தப் பொண்ணு?” அவள் கேட்க,

“ரவியோட பொண்டாட்டிய சொல்றேன் மேடம். பார்க்க ரொம்ப அப்பாவியா தெரியுறாங்க! அவங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? எப்படித் திட்டினான் பார்த்தீங்களா? உங்களையும் அப்படித் தான் திட்டுவானா மேடம்?” மனம் பொறுக்காமல் மாணிக்கம் கேட்க,

அவனின் கேள்வியில் மனம் கனிந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.

“அந்தப் பொண்ணுக்கு அப்பா அம்மா இல்லை. செந்தகாரங்க தான் வளர்த்திருக்காங்க. சொத்து நிறைய உண்டு! அதான் காலேஜ் படிக்கும் போது காதலிச்சுக் கல்யாணம் செஞ்சிக்கிட்டான். இவன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு தலையாட்டுறனால அந்தப் பொண்ணை இவனுக்குப் பிடிக்கும் தான்! இப்ப திட்டினாலும், அவங்களைலாம் விட்டு இவனால இருக்க முடியாது. அந்தப் பையன் மேலயும் ரொம்பப் பாசம் வச்சிருக்கான். நான் இதெல்லாம் அவனுக்குத் தெரியாம மறைஞ்சிருந்து நேர்லயே பார்த்திருக்கேன்!”

சற்று இடைவெளி விட்டவள்,

“இவனைப் பத்தி விசாரிச்சப்ப பாப்பா கை குழந்தையா இருந்தா… என்னால அப்ப எந்த முடிவும் எடுக்க முடியலை! என்ன தான் இவன் கிட்ட சண்டை போட்டு விலகி இருக்கிறதுனு முடிவு செஞ்சிருந்தாலும், அப்ப லீகல் ஆக்ஷன் என்னால எடுக்க முடியலை. முதல் காரணம் இந்தப் பொண்ணு தான். இவனை விட்டா யாருமில்லைன்ற நிலைமைல தான் இந்தப் பொண்ணு இருக்கு. அதான் இவனை ஜெயில்ல தள்ளினா இவங்க நடு ரோட்டுல நிப்பாங்கனு தோணுச்சு. அடுத்தக் காரணம் என்னோட அப்பா அம்மா! அவங்களுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாமேனு விவாகரத்து பத்தி நான் யோசிக்கவே இல்லை.

என்ன தான் அஞ்சு வருஷமா ரவிய விட்டு நான் விலகி இருந்தாலும், போன வருஷம் வந்து தான் ரவி விவாகரத்து வேணும்னு கேட்டான். எனக்கு என்ன தோணுச்சுனா, “இவன் கேட்டு நான் கொடுக்கனுமா? இவனை அலைய விடனும்னு” தோணுச்சு. அதனால முடியாதுனு சண்டை போட்டேன். அப்ப தான் என்னைய அடிச்சிட்டான்.  மது இதைப் பார்த்து ரவியைப் பிடிச்சி தள்ளி விட்டுட்டான். அவனுக்குக் கீழ விழுந்ததுல கையில எலும்பு முறிஞ்சிடுச்சு. இவனால மதுக்குப் பிரச்சனை வந்துடுமோனு பயம் வந்துட்டு. மதுக்கு ரவியைச் சுத்தமா பிடிக்காது. அதுக்கப்புறம் இவன் சகவாசமே வேண்டாம்னு விவாகரத்துக்கு ஒத்துக்கலாம்னு நினைச்சப்ப தான் அப்பாக்கு முதல் ஹார்ட் அட்டாக். அப்புறம் தான் கண்டிப்பா விவாகரத்துக் கொடுக்கக் கூடாது, அப்பாவுக்காக இவன் கூட இப்படியே இருந்துடுவோம்னு முடிவு பண்ணேன்.

ஆனா ஒன்னு மாணிக்கம், என்னிக்குமே என் பிள்ளைங்களுக்கு அப்பானு பேருக்காகவாவது இவன் இருக்கனும்னுலாம் நான் நினைச்சது கூட இல்லை. அப்பாவா எதுவுமே செய்யாம இருக்கும் போது பெயருக்கு மட்டும் இவன் எதுக்குனு தான் தோணும்.

ஆயா முன்னாடி சண்டை போட கூடாது, யார் முன்னாடியும் என் பிரச்சனைகளைக் காமிக்கக் கூடாதுனு தான் இவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நான் அமைதியா இருந்துப்பேன். ஆனா இவனைப் பார்த்தாலே ஆத்திரம் ஆத்திரமா வரும்.
ஒரு பொண்ணுக்கு புருஷன் சரியில்லைனு வெளில தெரிஞ்சிடுச்சுனாலே அட்வாண்டேஜ் எடுத்துக்கப் பல பேரு வந்துடுவாங்க மாணிக்கம்! அதுக்காகவே இவனைக் குறையா வெளில யாருக்கிட்டயும் பேசினதில்லை. இவனை விட்டு கொடுக்காம தான் வெளில பேசுவேன். ஆனா இவன் அதையே அவனுக்குச் சாதகமாக்கி, இவளோ நல்ல புருஷனுக்கு நான் துரோகம் பண்றேனு வெளிய சொல்லி வச்சிருக்கான் ராஸ்கல்”

இத்தனை நாளாய் தன் மனதில் தேக்கி வைத்திருந்ததையெல்லாம் கூறிக் கொண்டே வண்டியை ஓட்டினாள் மலர்.

அவளும் பேசட்டுமென இடையில் எதுவும் குறுக்கிடாது உம் கொட்டி கொண்டு மட்டுமே வந்தான் மாணிக்கம்.

ரவியை அடித்து நொறுக்கும் அளவுக்குப் படு கோபம் வந்தது அவனுக்கு. ஆயினும் விட்டு விலகி விடுவதென முடிவு செய்த பிறகு, தான் எதுவும் செய்து அது மலருக்குப் பிரச்சனை ஆகிவிடக் கூடாதென எண்ணியே அமைதி காத்தான் மாணிக்கம்.

மாணிக்கத்தை அவனது வீட்டின் வாசலில் இறக்கி விட்டவள், “தேங்க்ஸ்” என்றாள்.

“எதுக்கு?” என்பது போல் இவன் பார்க்க,

“மனசுல உளள்தெல்லாம் உங்ககிட்ட கொட்டிட்டதால நிம்மதியா இருக்கு மாணிக்கம்! இன்னிக்கு ரிலாக்ஸ்சா தூங்குவேன்னு தோணுது. அதுக்குத் தான்”

“குட் நைட்” என்றவள் மெலிதாய் சிரித்துக் கை அசைத்து அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

ஆனால் இவனின் மனதில் அனைத்தும் பாரமாய் ஏறிக்கொண்டது.

“எவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்க! ஆனா அப்பா அம்மா பிள்ளைங்கனு அவங்களுக்காக எதையுமே வெளிய காமிக்காம வாழ்ந்திருக்காங்களே” என மலரை எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

அன்றிரவு மலர் நிம்மதியாய் உறங்க, மாணிக்கத்திற்கு உறக்கம் வரவில்லை.

மனம் மலர் கூறிய அவளின் வாழ்வின் நிகழ்வுகளிலேயே சுழன்று கொண்டிருந்தது. ஏதேனும் மலருக்குச் செய்து அவளின் வாழ்வு சந்தோஷமான வாழ்வாய் உடனே மாற்ற வேண்டுமென நெஞ்சம் பரபரத்தது. ஆனால் என்ன செய்தால் அவளுக்கு இன்பமான வாழ்வை அளிக்க இயலுமென அறியமுடியவில்லை அவனால்.

விடியற்காலை வரை ஏதேதோ சிந்திந்து விட்டு கடைசியாய் அவளுக்கேற்றவனாய் பார்த்துத் திருமணம் செய்து வைத்து விட்டால் அவளின் வாழ்வு சரியாகி விடுமென ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

விவகாரத்து கிடைப்பதற்கு ஒரு வருடமாகும். அந்தக் கால நேரத்திற்குள் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட வேண்டுமென முடிவு செய்து கொண்டான் மாணிக்கம். இதைப் பற்றி அவளின் தாய் தந்தையிடம் பேசி விட வேண்டுமெனவும் எண்ணி கொண்டான்.

ஆனால் காலம் வேறொரு முடிவை இவனுக்காக வைத்திருந்ததை அறியவில்லை இவன்.

மறுநாள் மாலை பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து தனது ஆட்டோவினில் அழைத்து வந்தவன், இனி தாமே இவர்கள் இருவரையும் மாலை பள்ளியிலிருந்து அழைத்து வருவதாய்க் கூறினான்.

மலர் ஏதும் மறுத்து கூறவில்லை. அவனது பள்ளி சவாரிக்கு இது தடையாக இல்லாமல் இருந்தால் பிரச்சனையில்லையென இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டாள்.

அவளது இல்லத்தின் வரவேற்பறையில், ஒரு அட்டை பெட்டிக்குள் நிறையப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்க, அதைப் பார்த்த மாணிக்கம், “என்ன மேடம்! ரூம் க்ளீன் பண்ணீங்களா இன்னிக்கு?” எனக் கேட்டான்.

“ஆமா மாணிக்கம்! ரவி திங்க்ஸ்லாம் மொத்தமா ஒதுக்கி வச்சிடலாம்னு தான்! அவனோட வீட்டுக்கு போய் இது சேருற மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு பண்ணி விடுறீங்களா?” மலர் மாணிக்கத்திடம் கேட்க,

“வண்டி எதுக்கு? நானே அவன் வீட்டுல எல்லாத்தையும் தூக்கி வீசிட்டு வரேன்” கோபமாய் மாணிக்கம் கூற,

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல! இப்பவே இவ்ளோ கோபப்படுறீங்களே, அவனை நேர்ல பார்த்தா ஒரு வழி ஆக்கிடுவீங்க! தேவையில்லாம கைகலப்பு தான் வரும்! நான் சொன்ன மாதிரி வண்டி அரேஞ்ஜ் பண்ணி விடுங்க” எனக் கூறி அந்தப் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தாள்.

சரியெனத் தலையாட்டியவன் அப்போது தான் மலரை சற்றே கூர்ந்து நோக்கினான்.

“மேடம் புதுச் செய்ன்னா போட்டிருக்கீங்க?”

“ஆமா மாணிக்கம்! தாலியை கோவில் உண்டியல்ல போட்டுட்டேன்” அவள் கூறிக் கொண்டிருந்த நொடி உள்ளே நுழைந்த ஆயா, பேரதிர்ச்சிக்குள்ளாகி நிற்க,

“நல்ல காரியம் பண்ணீங்க!” எனக் கூறிய மாணிக்கத்தின் மனதிலோ, ‘ஹப்பாடா அப்ப எப்படியாவது பேசி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சிடலாம்’ என்ற எண்ணமே மகிழ்வை அளித்தது.

“என்ன பாப்பா சொல்ற?” ஏற்கனவே மாணிக்கம் வாயிலாக அவளின் வாழ்வை பற்றி முழுவதுமாய் ஆயா அறிந்திருந்தாலும், இந்தத் தாலி செண்டிமெண்ட் அவரை நடுக்கமுற செய்தது.

“நானும் தாலியை தெய்வமா நினைச்சி வணங்கின பொண்ணு தான் ஆயா! அதுக்குனு ஒரு சக்தி இருக்குனு ரொம்பவே நம்புற ஆளு தான்! ஆனா இதெல்லாமே கட்டினவன் எப்படி நம்ம கிட்ட நடந்துக்கிறான்றதை பொறுத்து தான்! அவனோட ஆழ் மன அன்பும் காதலும் தான் இந்தத் தாலியோட பலமும் அதோட பாசிட்டிவிட்டிக்கு காரணமும் கூட! அப்படி இல்லாத ரவியை மாதிரி இருக்கத் துரோகிகள் கட்டின தாலிக்குலாம் எந்தவித வேலிட்டிட்டியும் இல்ல! அதை மதிச்சு வாழனும்னு அவசியமும் இல்ல”

என்ன தான் பழம் பெருமை பாரம்பரியம் எனப் பேசும் ஆளாக இருந்தாலும், இவளின் துன்பத்தை நேரிலிருந்து கண்டிருந்த ஆயாவினால் இந்த நிதர்சனத்தைச் சற்று ஏற்றுக் கொள்ள முடிந்தது.

கணவன் கயவனாய் இருக்கும் போது, அவன் கட்டிய தாலி மட்டும் எப்படி வேலியாய் இருக்கும்?

கணவனையே வேண்டாமென முடிவு செய்தபின், தாலியும் காலாவதியாகி போனதாய் தான் எண்ணினாள்.

பிள்ளை இருவரையும் அறையினுள் படிக்க வைத்துவிட்டே வெளியில் இதனை இவர்களிடம் பேசி கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் முன் சண்டை போடுவது அவளுக்கு அறவே பிடிக்காத செயலாகினும், அவளின் வாழ்க்கை அவளை அதைப் பின்பற்ற விடவில்லை.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, தினமும் காலை பிள்ளைகளை இவள் பள்ளிக்கு அழைத்துச் செல்ல, மாலை வேளையில் பிள்ளைகளை மாணிக்கம் வீட்டிற்கு அழைத்து வருவான். தினமும் மலர் சாப்பிட்டாளா என்பதை மறவாமல் கேட்டு தெரிந்து கொள்வான். தினமும் இரவு மாணிக்கம், மலர், ஆதினி, மது என அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பேசிக் கொண்டே உண்டுவிட்டு என அனைத்து விஷயங்களையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்ளலாயினர். வாரயிறுதி நாட்களில் அனைவருமாய் சேர்ந்து ஊருக்குப் பயணம் செய்தனர். மாணிக்கம் அக்குடும்பத்தின் ஓர் அங்கத்தினராகவே மாறியிருந்தான்.

மாணிக்கம் ஒரு பக்கம் தனது தேடலை துவங்கினான். மலருக்கு வேறொரு நல் வாழ்க்கை அமைத்து தருவதே தனது லட்சியமாய் எண்ணி தீவிரமாய்த் தேடினான். மலருக்குத் தெரிவிக்காமல், அவளது தாய் தந்தையரிடம் மட்டும் கூறி அனுமதி பெற்ற பின்பே இத்தேடலை தொடங்கினான்.

நாட்கள் வாரங்களாகி, அதன் பின் மாதங்களாகி வருடங்களாய் உருண்டோடி சென்றது.

ஒரு வருடம் கடந்திருந்த நிலையில், மாணிக்கம் அவளுக்கு உற்ற தோழனாய் மாறியிருந்தான். அவளுக்கு விவாகரத்தும் கிடைத்திருந்தது.

மலர் குடும்பத்தினர் புது வீடு கட்டி முடித்து அதில் குடிபுகுந்தனர். மாதாமாதம் வட்டிக் கட்டிகொண்டிருந்தாள் இந்தப் புது வீட்டு லோனுக்காக. மாணிக்கம் அதனருகிலேயே ஒரு வாடகை வீடு பார்த்து தங்கி கொண்டான். ஆயாவினால் தினமும் அத்தனை தொலைவு பயணம் செய்ய இயலாதெனக் கூற, தனது வீட்டிலேயே ஆயாவை தங்க வைத்துக் கொண்டான் மாணிக்கம். அவனின் பேரன் கல்லூரி முடித்து நல்ல வேலையில் அமர்ந்தபின் அவனுடன் சென்று தங்கி கொள்வதாய் உரைத்து, அது வரை மாணிக்கத்துடன் தங்க ஒத்துக்கொண்டார் ஆயா.

மலர் மற்றும் குழந்தைகள் இருவரும் வீட்டினருகில் இருக்கும் வேறு பள்ளிக்கு மாறியிருந்தனர்.

மலர் பல வருடங்களுக்குப் பிறகு வெகு மகிழ்வாய் இருந்தது கடந்து போன இந்த ஏழு மாதங்கள் தான். ரவி என்றொருவன் தனது வாழ்வில் இருந்ததையே மறந்திருந்தாள். விவாகரத்து வழக்கின் போது தான் அவனின் நினைவே அவளுக்கு வந்தது.

அதுவும் தற்போது முடிந்து இரு மாதங்களான நிலையில் வெகு நிம்மதியாய் உணர்ந்தாள்.

ஆனால் கடவுள் அந்த நிம்மதியை நீட்டிக்க எண்ணவில்லையோ?

“இது தற்காலிக நிம்மதி மகளே! உனக்கு நிரந்திர நிம்மதியளிக்க, தற்போதிருக்கும் நிம்மதியை குலைப்பது அவசியமென” எண்ணிய அவளது கடவுளும் அதற்கான வேலையைத் துவங்கினார்.

தெளிந்த நீரோடையாய் இருந்த அவளின் மனதை குழப்புவிக்க வந்து நின்றாள் அவளின் மகள் ஆதினி.

— தொடரும்