முள்ளில் பூத்த மலரே – 12

மலரும் மாணிக்கமும் பிள்ளைகளுடன் திங்கட்கிழமை காலை ஆறரை மணியளவில் வீட்டை வந்தடைந்தனர்.

ஆயாவிடம், என்று இவர்கள் வருவார்களென கூறாததினால் அவர் மலரின் இல்லத்தில் இருந்திருக்கவில்லை.

தூங்கி கொண்டே வந்த கண்ணம்மாவை ஹாலிலுள்ள கட்டிலில் படுக்க வைத்து கிளம்புவதாய் உரைத்தான் மாணிக்கம்.

“ரொம்ப தேங்க்ஸ் மாணிக்கம்.  நான் இவ்ளோ நிம்மதியா என் கல்யாணத்துக்கு முன்னாடி கூட பஸ்ல டிராவல் பண்ணதில்லை! நான் கேட்டதும் பஸ் டிக்கெட் ஏற்பாடு செஞ்சி கூடவே இருந்து குழந்தைகளை பார்த்துகிட்டுனு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க.  உங்களுக்கு நிறைய நன்றி கடன் பட்டிருக்கேன். பொதுவா யாரையும் நான் சீக்கிரம் நம்ப மாட்டேன்.  நம்பினாலும் க்ளோசா பழக மாட்டேன்.  ஆனா உங்ககிட்ட எல்லாம் தானா சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்துடுச்சு.  உங்களை மாதிரி ஒருத்தரை நண்பராய் கொடுத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்”  அவள் குரல் முழுவதும் சிநேக பாவமே நிறைந்திருந்தது.

“அய்யோ என்ன மேடம்? இதுக்கு எதுக்கு தேங்கஸ்லாம்? உங்க பசங்களை என்கிட்ட பழக கூடாதுனு சொல்லிருந்தா என் வாழ்க்கை வெறுமையாவே போய்ருக்கும்.  அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டு இப்படி உங்க குடும்பம் வரை என்னையும் ஒரு ஆளாய் சேர்த்துகிட்டதுக்கு நான் தான் நன்றி சொல்லனும்”  என்றவன் சற்று தயங்கி,

“அப்பா அம்மா பிள்ளைங்கனு அவங்களுக்காக தைரியமா இருக்க மாதிரி நீங்க இருந்தாலும், உங்க மனசுக்குள்ளனு வலி ஒன்னு இருக்கும் தானே! அதை நீங்க சீக்கிரம் கடந்து வரனும்னு கடவுளை வேண்டிகிறேன் மேடம்! வரேன் மேடம்” அவள் முகம் பார்த்து கூறிவிட்டு அவன் செல்ல, மெல்லிய நீர்த்துளி அவளின் விழிகளை நிறைத்தது அவனின் சொல்லில்.

ஆயா வராததால் சமையலையும் கவனித்து கொண்டு, பிள்ளைகளையும் அவசர அவசரமாக அவள் பள்ளிக்கு கிளப்பி கொண்டிருக்க,  அப்போது உள் நுழைந்தார் ஆயா.

“நீ ஊருல இருந்து வந்திருப்பியோ இல்லையோ தெரியலையேனு ஒரு எட்டு பார்த்துட்டு போய்டுவோம்னு வந்தேன். பார்த்தா இப்படி சமையலும் பிள்ளையுமா அல்லாடிட்டிருக்கியே?” கூறி கொண்டே சமையல் வேலையை அவர் எடுத்து செய்ய,

பிள்ளைகளை கவனிக்கவென சென்றுவிட்டாள் அவள்.

“அப்பா எப்படி இருக்காங்க கண்ணு?”

“எல்லாரும் நல்லா இருக்காங்க ஆயா” பேசி கொண்டே இருவரும் அவரவர் வேலையை பார்க்க,

“நேத்து இந்த வீட்டு ஹவுஸ் ஓனர் வந்தாருமா! இரண்டு வாரமா வீடு சுத்தம் செய்யாம இருக்கேனு சுத்தம் செய்ய வந்தேன். அப்ப தான் அவரும் வந்தாரு” ஆயா கூற,

“எதுக்கு வந்தாரு? நான் தான் வாடகையை கொடுத்துட்டேனே” யோசித்துக் கொண்டே அவள் கேட்க,

“என்னனு தெரியலைமா! உன் கிட்ட தான் ஏதோ பேசனும்னு சொன்னாரு. வீட்டு ஃபோன் நம்பர் தான் கொடுத்திருக்கேன்” ஆயா கூற,

சரி என தலையாட்டினாலும், என்ன விஷயமாய் இருக்குமென்ற கேள்வி அவளின் மூளையை குடைந்தது.

சரியாய் அந்நேரம் அவளது வீட்டின் அலைபேசி மணியடித்தது. அந்த வீட்டின் உரிமையாளர் தான் அழைத்திருந்தார்.

“என்ன சார் விஷயம்?” இவள் கேட்க,

“வீட்டை இடிச்சு கட்டுறதா ப்ளான் இருக்குமா! அதான் நாலு மாசத்துல நீ காலி பண்ணா நல்லா இருக்கும்” அவர் கூற,

“என்ன சார், இந்த மாசம் வாடகை கொடுக்கும் போது கூட இதை சொல்லலையே! திடீர்னு எப்ப வந்துச்சு இந்த ப்ளான்?” என அவள் கேட்க,

அதற்கு அவர் ரகரகமாய் விதவிதமாய் பொய் கூறி கடைசியாய் இது தான் முடிவு என கூற, “சரி ஆறு மாசம் பொறுத்துக்கோங்க”  அவரிடம் போராடி ஒப்புதல் வாங்கினாள்.

பேசி முடித்ததும் அருகில் இருந்த இருக்கையிலேயே அமர்ந்து கொண்டாள்.

அவளது மூளை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தது.

ஆயா வந்து என்னவென்று கேட்க, நடந்ததை அவள் கூற,  “இதெல்லாம் நீ யோசிக்காதமா! ஸ்கூல்க்கு கிளம்பு” அவளை எதுவும் யோசிக்க விடாது கிளம்ப வைப்பதிலேயே ஆயா குறியாய் இருக்க,

தீர்க்கமாய் அவரை அவள் பார்ப்பதிலேயே அவருக்கு மனதில் பயம் உண்டாக, “உங்களுக்கு ஏதோ தெரியும்! என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க!  என்ன நடந்துச்சு? சொல்லுங்க”  அவள் கேட்க,

“அதெல்லாம் இப்ப எதுக்குமா? நீ ஸ்கூலுக்கு போய்ட்டு வந்த பிறகு பேசலாமே!” மீண்டும் அவளை கிளம்ப வைப்பதிலேயே அவர் முனைப்பு காட்ட,

“இன்னிக்கு நாங்க எல்லாரும் லேட்டாவே ஸ்கூலுக்கு போறோம்! நடந்ததை நீங்க முதல்ல சொல்லுங்க”  உட்கார்ந்த இடத்தை விட்டு துளியும் நகராது ஆயாவையே அவள் முறைத்து பார்த்து கேள்வி கேட்டிருக்க,

“உன் புருஷன் போன வாரம் வந்தாருமா!” தயங்கியவாறு தட்டு தடுமாறி கூறினார்.

“ஹ்ம்ம் வந்து என்ன சொன்னாரு?” அவளின் முகம் கடுமையாய் மாறியது.

“உங்களுக்குள்ள ஏற்கனவே ஏதோ பிரச்சனைனு தெரியும்.  ஆனா என்னனு எனக்கு தெரியாதே! ஆனாலும் யாரும் உன்னை தப்பா சொன்னா நான் நம்ப மாட்டேன்மா! உன்னையும் மாணிக்கமும் பத்தி எனக்கு தெரியாதா?” அவர் கூறவும் அவள் புரிந்துக் கொண்டாள். 

இவளையும் மாணிக்கத்தையும் சேர்த்து வைத்து ஏதோ தவறாய் ரவி ஊர் முழுக்க பரப்பி இருக்கிறானென அவள் புரிந்து கொண்டாள்.

அதை ஆயாவின் வாயிலிருந்தும் வரவழைத்து உறுதி செய்து கொண்டாள்.

இதை நம்பி தான் அந்த வீட்டின் உரிமையாளரும் இவளை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க இந்த பொய்யை கூறினாரெனவும் அறிந்து கொண்டாள்.

மாணிக்கத்திடம் இவ்விஷயத்தை கூற வேண்டாமென ஆயாவிடம் ஆணையிட்டு விட்டாள்.

வீட்டின் கேட்டை விட்டு வண்டியை வெளியே தள்ளி வந்து, பிள்ளை இருவரையும் பின்னே அமர வைத்து வண்டியை உயிர்ப்பிக்கும் வரையுமே, ஏனோ அனைவரும் அவளையே வித்தியாசமாய் பார்ப்பதொரு உணர்வு வந்தது அவளுக்கு.  அவள் கேட்டிருந்த செய்தி உற்படுத்திய மன உணர்வு அது.

மனமெங்கும் ரணமாய்  வலிக்க,  வண்டியை ஓட்டி கொண்டிருந்தவளுக்கு, காற்றின் ஓட்டத்தில் கண்ணில் நீர்துளி பூத்தது.  மனமும் காற்றும் ஒரே விசையில் நில்லாது அடித்துக் கொண்டிருந்தது.  காற்றுக்கு கூட அணைக்கட்டி விடலாம் போல,  ஆனால் மனதின் போராட்டத்திற்கு அணைக்கட்ட முடியாமல் திணறி கொண்டிருந்தாள்.

இவள் பள்ளி சென்று தனது பணியினை துவங்கிய சமயம், தலைமை ஆசிரியை இவளை அழைப்பதாய் ப்யூன் வந்து கூற, அங்கு சென்று பார்த்தவளுக்கோ இதே செய்தி தான் காத்திருந்தது, ஆயினும் அதை அவர் நம்பவில்லை எனும் செய்தி சற்று ஆறுதலை அளித்தது அவளுக்கு.

“ஒரு பொண்ணோட தன்னம்பிக்கையும் தைரியத்தையும் நிலைக்குலைய வைக்க ஆண்கள் எடுக்கும் அஸ்திரம் அவளோட ஒழுக்கத்தை குறை சொல்றது! “எனக்கு என்னை பத்தி தெரியும்! ஊரு யாரு எனக்கு நல்லவனு சர்டிஃபிகேட் கொடுக்கனு” நினைச்சிக்கோமா! இது எதையுமே மனசுக்கோ மூளைக்கோ எடுத்துட்டு போகாத! உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப மலர்” அந்த தலைமை ஆசிரியை அவளுக்கு ஆறுதலளித்து வாழ்த்தினார்.

“உங்களுக்கு எப்படி இந்த செய்தி காதுக்கு வந்துச்சு மேடம்” அவன் எவ்வாறு இப்படி ஒரு பழியை ஊரு முழுக்க,  அதுவும் இவளுக்கு தெரிந்தவர்களிடத்தில் எல்லாம் பரப்பினான் என அறிந்து கொள்ளும் ஆவலில் அவள் கேட்க,

“வெரி சிம்பிள் மலர்!  யாரெல்லாம் உன் மேல,  உன் வளர்ச்சி மேல பொறாமைல இருக்காங்களோ அவங்க காதுக்கு போற மாதிரி புரளி பேசுற ஒருத்தங்ககிட்ட இதை சொன்னா போதுமே! ஒரு பொண்ண பத்தி தர குறைவா பேச தான் ஊரே திரண்டு வந்துடுமே! இது உண்மையா பொய்யா? இந்த பொண்ணுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக இந்த பொண்ண பத்தி நம்ம பேசனும்! இப்படி எதுவுமே யோசிக்காம நாக்கு இருக்குனு பேசுற நயவஞ்சக கூட்டம் இதெல்லாம்! நானும் இதெல்லாம் கடந்து வந்திருக்கேன் மலர்.  அந்த அனுபவத்துல சொல்றேன்! ஜஸ்ட் மூவ் ஆன்! இந்த விஷயத்தை இதோட மறந்துடு! உன் வேலையை பாரு” அவர் கூற, சரியென தன் பணியை கவனிக்க சென்று விட்டாள்.

மனம் சற்று அமைதியடைந்திருந்தது.
இந்த செய்தியை நம்பும் நான்கு மக்களை நினைத்து கவலை கொள்வதை விட,  இவ்வாறு அந்த செய்தியை நம்பாது தன்னை நம்பும் நான்கு நல்ல உள்ளங்களை தன்னை சுற்றியும் ஆண்டவன் அருளியுள்ளாரேயென அவர்களை எண்ணி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் மலர்.

மாலை வேளையில் பிள்ளைகளுக்கு இரு வாரங்களுக்கான வீட்டு பாடங்கள் சேர்ந்திருக்க அதில் மூழ்கி போனவள், அவர்களை மாணிக்கத்தின் வீட்டிற்கு அனுப்பாதிருக்க,  அவர்களை தேடி வீட்டிற்கே வந்திருந்தான் மாணிக்கம்.

“ஓ பிள்ளைங்க படிச்சிட்டு இருக்காங்களா? அதான் அங்க வரலையா? நான் என்னமோ ஏதோனு பார்க்க வந்தேன்” கூறிக் கொண்டே உள் நுழைந்தவன், அவளின் முகத்தை பார்த்து விட்டு, “என்ன மேடம்! இன்னிக்கு வேலை ரொம்ப அதிகமா இருந்துச்சா?  சோர்வா தெரியுறீங்களா! மதியம் நேரத்துக்கு சாப்பிட்டீங்களா?” அக்கறையாய் அவன் கேட்க,

அவனது அக்கறையான பேச்சில் அவளுக்கு கண்ணீர் தான் கண்களை நிறைத்தது.

அவ்விடத்தை விட்டு அகன்று சமையல் அறையில் ஏதோ செய்வது போல் உள்ளே சென்று கண்களை துடைத்து தொண்டையை சரி செய்து கொண்டவள், “நீங்க சாப்பிட்டீங்களா மாணிக்கம்?” உள்ளிருந்தே அவள் குரல் கொடுக்க,

மாணிக்கத்தின் மனதிற்கு ஏதோ சரியில்லை என தெளிவாய் புரிந்தது.

“சாப்பிட்டேன் மேடம்! சரி நான் கிளம்புறேன்” என்றவன் கிளம்ப முற்பட,

“இருங்க காபி குடிச்சிட்டு போங்க!  உங்களுக்கு தான் காபி போட்டுட்டு இருக்கேன்” மீண்டும் அவள் குரல் கொடுக்க,

இத்தனை நாட்களாய் பழகியதில் அவளின் முக பாவம் மற்றும் பேச்சிலிருக்கும் உணர்வை வைத்தே அவள் எண்ணங்களை ஓரளவு கணிக்கும் வகையில் அவளை புரிந்து வைத்திருந்தான் மாணிக்கம். 
ஆகையால் தான் தற்போது ஏதோ துக்கத்தில் அவள் உள்ளாளென இவனின் மூளை உரைத்திருந்தது.

காபி அவள் கொடுக்க,  கைகளில் வாங்கியவன், “அம்மா அப்பா எப்படி இருக்காங்க? அவங்க எதுவும் ஃபோன் செஞ்சாங்களா?”  யோசனையாய் அவன் கேட்க,

“இப்ப தானே வந்தோம் மாணிக்கம்.  அதுக்குள்ள எப்படி ஃபோன் பண்ணுவாங்க”  அவள் கூற,

சரியென கூறி கிளம்பி சென்றான். அன்றிரவு ஆயாவின் வீட்டிற்கு சென்று நடந்ததை அறிந்து கொண்டான்.

அதை கேட்டதும் அவனுக்கு கட்டற்ற கோபம் வந்தது.  ஆயினும் இவன் ஏதும் செய்து மீண்டும் அது மலருக்கு பிரச்சினையாகிவிட கூடாதே என எண்ணி கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன் ஆயாவிடம் தனது ஆற்றாமையை புலம்பி தள்ளினான்.

அன்றிரவு முழுவதும் மலருக்கு உறக்கம் பிடிபடவில்லை.  சமாதானம் செய்யும் சமயம், சிறிது நேரத்திற்கு சமன்பட்டிருக்கும் மனம், தனிமை கிடைக்கும் சிறு பொழுதிலும் தன் மீதான அவச்சொல்லை எண்ணி மனம் வருந்த தான் செய்தது அவளுக்கு. தன் மீதே கழிவிரக்கம் உண்டானது. தனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை தீயாய் சுடுகிறதோவென வேதனை கொள்ளாமல் இருக்க முடியவில்லை அவளால். இரவின் தனிமையில் அவளின் தலையணை அழுகையால் நீர்த்து போனது.

அன்றிரவு மொத்தமாய் அழுது தீர்த்தவள், அடுத்து என்ன என்ற கேள்வியுடன் மறுநாள் காலை விடியலை எதிர் கொண்டாள்.

அன்று பள்ளி செல்ல மனமில்லாததால், பிள்ளைகளை மட்டும் பள்ளிக்கு அனுப்பிவித்தவள், மதிய வேளையில் நன்றாய் உறங்கி எழுந்தவள், மன அமைதி வேண்டி கோவிலுக்கு செல்லலாமென முடிவெடுத்து கிளம்பி கொண்டிருந்தாள்.

அச்சமயம் மாணிக்கம் வீட்டிற்கு வர,  அவனின் கவலை தோய்ந்த முகத்தை வைத்தே அவனுக்கு அனைத்துமே தெரிந்திருக்கிறது என அறிந்துக் கொண்டாள். ஆயினும் அவனிடம் ஏதும் கேளாது, தன்னுடன் கோவிலுக்கு வருமாறு அழைத்தவள், தனது இரு சக்கர வாகனத்திலேயே அவனை அழைத்து சென்றாள்.

“ஏன் மாணிக்கம் இந்த கலக்கம்! அம்மா சொன்னா மாதிரி இதுவும் கடந்து போகும்னு மனசை தேத்திக்கோங்க!” பேசிக் கொண்டே வண்டி ஓட்டினாள்.

சிவன் கோவிலில் பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு கண் மூடி அமர்ந்தவள், எம்பெருமானான ஈசனை மனதில் நிறுத்தி, “ஓம் நமச்சிவாய”  என அவரை மட்டுமே ஜெபித்து கொண்டிருக்க,  அந்த அமைதியான சூழலும், சுற்றி பரவிய தெய்வீக அலையும் அவள் மனதினை சற்றாய் சமன்படுத்த, “எல்லாத்துக்குமே காரணம் இருக்கும்னு சொல்வீங்களே! இதுக்கென்ன காரணம்?” மனதோடு இறைவனிடம் ஒன்றி அவள் பேசிக் கொண்டிருக்க,

மனதின் ஓரத்தில் தோன்றியது அந்த விடை, “அவனின் சுயரூபத்தை நீ அறிந்து கொள்ளவும், பிரிதொரு காலம் அவன் மீது சிறு துளி கருணையும் இரக்கமும் கூட பின் நாட்களில் உனக்கு வந்திட கூடாது எனவும் தான்”

அதற்கும் ஓர் கேள்வியாய், “ஆனா ஏன்?” அவளின் மனமே கேட்க, விடையில்லை இக்கேள்விக்கு. 

காலம் இதற்கு விடையளிக்கும் மகளே!

அன்று மாணிக்கம் தரிசித்த அதே சாமியார் வேறோர் பெண்ணுக்கு இவ்வாசகத்தை கூறியிருந்தார்.

காதில் கேட்ட இச்சொல்லில் கண் விழித்து சுற்றும் முற்றும் அவள் பார்க்க,  அது வரை அவளெதிரில் அமர்ந்து  கவலையாய் அவள் முகத்தை பார்த்திருந்த மாணிக்கம், “என்னாச்சு மேடம்! யாரை தேடுறீங்க?”  அவளின் தேடுதலை கண்டு அவன் கேட்க,

“இப்ப யாராவது நம்ம பக்கத்துல வந்து பேசினாங்களா மாணிக்கம்?”

“பக்கத்துல இல்ல. ஒரு சாமியார் தான் தூரமா பேசிட்டு இருந்தாரு”

“தூரமாவா… எனக்கு என் காது கிட்ட வந்து பேசின மாதிரி இருந்துச்சு” என்றவள்,

“கடவுள், உனக்கு நான் பக்க துணையாய் இருக்கேன்! கவலைபடாதேனு உணர்த்துறார் மாணிக்கம்” பரவசமாய் அவள் கூற,

“எப்படி மேடம் இவ்ளோ நடந்த பிறகும் கடவுள் மேல நம்பிக்கை இருக்கு உங்களுக்கு?” அவன் கேட்க,

அமைதியாய் மென்னகை புரிந்தவள், “நம்ம கேட்டதெல்லாம் கொடுக்கிற பூதம் இல்ல கடவுள்! நான் உன் கூடவே இருந்து உன் இன்ப துன்பத்தில் பங்கெடுத்து வழி நடத்துவேன்னு கை பிடிச்சி கூட்டிட்டு போகுற அம்மா அப்பா மாதிரி அவர்.  அம்மா அப்பா மேல கோபம் வரும் ஆனா வெறுப்போ நம்பிக்கையின்மையோ வருமா? அப்படி தான் இது மாணிக்கம்.  இந்த அஞ்சு வருஷத்துல என்னோட கவலைகள் எல்லாத்துக்கும் எனக்கு ஆறுதலா துணை இருந்தது இவர் மட்டும் தான்.  இப்பவும் இந்த கஷ்டத்தையும் என்னை கடந்து போக வைக்க உதவி செய்வாருனு மனசார நம்புறேன்.  இது சொன்னா புரியாது, உணர்ந்தா தான் புரியும் மாணிக்கம்”

“என்னமோ சொல்றீங்க போங்க! நான் உங்களை விட்டு போய்டுறேன் மேடம்.  வேற ஊருக்கு போய்டுறேன். நான் உங்க கூட ஊருக்கு வந்தனால தானே உங்களுக்கு இந்த கெட்டப்பெயர்லாம்” மிகுந்த மன வேதனையில் அவன் கூற,

“இது வரை எந்த ஃப்ரண்டும் தன்னோட ஃப்ரண்டு கஷ்டத்துல இருக்கும் போது விட்டுட்டு போனதா நான் கேள்வி பட்டுதில்லையே? ஃபிகரை பார்த்தா தான் ஃபிரண்டை கழட்டி விடுவாங்கனு சொல்லுவாங்க! நீங்க எதுவும் அப்படி பொண்ணை பார்த்துட்டீங்களா?” சிரிப்பாய் அவனை பார்த்து அவள் கேட்க,

அவளின் கூற்றில் அவன் சிரிக்க,
“ஏன் மாணிக்கம் நீங்க வேற கல்யாணம் செஞ்சிக்கலை? இன்னும் நீங்க கல்யாண செஞ்சிக்கிட்ட பொண்ணை நினைச்சிட்டு இருக்கீங்களா?”

“அய்யோ இல்ல மேடம்! நம்ம காதலிச்ச பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்ட பிறகு, அந்த பொண்ணை மனசுல நினைக்கிறது கூட பாவம்!  அது வேறொருத்தரோட மனைவியை மனசுல நினைக்கிறதுக்கு சமம். அது தப்பு.  அம்மா போன பிறகு வாழ்க்கை மேலயே ஒரு பிடிப்பில்லாம போச்சு மேடம்!  ஊருல ரொம்ப அம்மா நியாபகமாவே வந்தனால தான் இங்க வந்தேன்.  எனக்கு ட்ரைவிங்  ரொம்ப பிடிக்கும்.  அதான் பிடிச்ச வேலையே செய்யலாமேனு ஆட்டோ ஓட்ட வந்துட்டேன்”

“ஆனாலும் கல்யாணம்னு யோசிச்சா பயமா இருக்கு மேடம்! திரும்ப ஒரு ஏமாற்றத்தை சந்திக்க மனசுல தைரியம் இல்லை மேடம்! இப்ப என் வாழ்க்கையோட சந்தோஷம் ஆதினியும் மதுரனும் தான் மேடம்”

அந்த அன்பின் ஏமாற்றம் மற்றும் பயம்! இதை  தானே இவளது தந்தையிடம் இவள் கூறினாள்.

அவனது மனநிலையை நன்றாய் புரிந்து கொள்ள முடிந்தது இவளால்.

இருவரும் தத்தமது நினைவுகளில் சற்று நேரம் அமைதியாய் இருந்தனர்.

“ஏன் ரவி இப்படி செஞ்சான்? இதனால அவனுக்கு என்ன லாபம்? கேள்வியாய் மாணிக்கம் கேட்க,

“பழி வாங்கல் தான்! வேறென்ன? அன்னிக்கு நீங்க எல்லார் முன்னாடியும் அடிச்சதுக்கு பழி வாங்குறதா நினைச்சி இப்படி செஞ்சிருக்கான்.  அவன் உண்மையான ஆம்பிளையா இருந்தா நேருக்கு நேரா உங்க முன்னாடி வந்து உங்களை அடிச்சிருக்கனும். அந்த தைரியம்லாம் அவனுக்கு கிடையாதுங்க!  அவன் எப்பவுமே இப்படி தான்” அவள் கூறுவதை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தான். 

“மாணிக்கம், வீடு மாத்தனும்” என்றவள் காலையில் வீட்டின் உரிமையாளர் உரைத்ததை கூறினாள்.

“அடப்பாவி! யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவானா அவன்? அப்படினாலும் இரண்டு பிள்ளைகளை வச்சிக்கிட்டு பொம்பளை பிள்ளை எங்க போகும்னு யோசிக்க மாட்டானா?” ஆத்திரமாய் வந்தது மாணிக்கத்திற்கு.

“விடுங்க மாணிக்கம்!”

“எனக்குனு சில லட்சியம் இருக்கு மாணிக்கம்! என்னோட உழைப்புல ஒரு சொந்த வீடு வாங்கனும்.  பாப்பாவையும் கண்ணாவையும் நல்லா படிக்க வச்சி அவங்க விரும்பின துறைல நல்ல இடத்துல இருக்க வைக்கனும். நான் அதுக்கு அவங்களுக்கு உறுதுணையா இருக்கனும்” கண்களில் கனவுகள் மின்ன உரைத்தவள்,

“சொந்த வீடு வேலை ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு! இடம் வாங்கிட்டேன். இப்ப இந்த ஆறு மாசத்துல லோன் வாங்கி வீடு கட்டிட்டே போய்டலாமானு யோசிக்கிறேன் மாணிக்கம். நீங்க என்ன சொல்றீங்க?”

“ரொம்ப நல்ல ப்ளான் மேடம். ஆனா ஏன் லோன் வாங்குறீங்க? நான் சேர்த்து வச்ச காசு தரேன்! உங்களால எப்ப முடியுதோ அப்ப திருப்பி தாங்க”  என்றவன் கூறியதை தலையசைத்து மறுத்தவள்,

“வேண்டாம்ங்க அது சரி வராது”  அவள் கூற,

“ஆபத்து வரும் போது, பண பிரச்சனை வரும் போது ஃப்ரண்டை கழட்டி விட்டுட்டு ஓடி போற ஆளு நானில்லனு நிரூபிக்க வேண்டாமா?” அவன் கேட்க,

“நீங்க அப்படி இல்லனு எங்களுக்கே தெரியும்! யாருக்கு நிரூபிக்க போறீங்களாம்?” சிரிப்பாய் அவள் கேட்க,

“மேடம்! ப்ளீஸ் மேடம் ஒத்துக்கோங்க மேடம்”  அவன் கெஞ்ச,

வேண்டவே வேண்டாமென வம்படியாய் மறுத்து விட்டாள்.  ஆனால் பின் நாட்களில் இந்த வீட்டு லோனையே அவன் தான் அடைக்க போகிறானென அறியவில்லை அவள்.

மாலை ஏழு மணியாகிருக்க, அதன் பின்பு இருவருமாய் இரு சக்கர வாகனத்தில் கோவிலில் இருந்து கிளம்பினர்.

அவள் வேறோர் பாதையில் எங்கோ செல்ல, “எங்க போறீங்க மேடம்?” மாணிக்கம் கேட்க,

“வெய்ட் அண்ட் சீ” எனக் கூறியவள், ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு நேராய் ஒரு பெரிய வீட்டின் முன் போய் நிறுத்தினாள்.

“யாரு வீடு இது?” எனக் கேட்டு கொண்டே அவன் இறங்க,

“உள்ள வாங்க புரியும்” அவனை தன்னுடன் உள்ளழைத்து சென்றாள்.

இவள் அழைப்பொலியை அடிக்க,  இவள் வயதுடைய ஒரு பெண் வந்து கதவை திறந்தவள், இவளை கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானாள்.

ஆயினும் எவ்வித உணர்வையும் வெளி காட்டாது, வரவேற்று வரவேற்பறையில் அமர வைத்தாள்.

“அவர் வேலையில் இருந்து இன்னும் வரலை! இது வர நேரம் தான்” அந்த பெண் கூற,

“நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பையன் எப்படி இருக்கான்?” என விசாரித்தாள் மலர்.

மிகுந்த பயந்த சுபாவியாய் அப்பாவியாய் தெரிந்தாள் அப்பெண்.

“ஹ்ம்ம் நல்லா இருக்கோம்” முந்தானையை கையில் திருகி கொண்டே கூறியவள், 

“இருங்க காபி போட்டு தரேன்” அவள் கூற,

“இல்லங்க வேண்டாம்” என்ற மலர்,

“உங்களை போல நான் இருப்பேன் நினைச்சி தான் ரவி என்னைய கட்டிக்கிட்டாரு போல! ஐ மீன் அவர் எது சொன்னாலும் தலையாட்டிக்கிட்டு எதிர்த்து பேசாம இருக்க மாதிரி”

இந்த வார்த்தையில் மலரை அதிர்ந்து நோக்கினான் மாணிக்கம்.

“என்னது இது ரவியோட வீடா? இங்க எதுக்கு இப்ப இவங்க வந்திருக்காங்க” யோசனையாய் அவன் மலரை பார்க்க,

மலரின் கூற்றில் அவளை பார்த்த அந்த பெண், “சாரி அவரை எதிர்த்து நான் எதுவும் கேட்காம போனதால தான் இப்படி உங்க வாழ்க்கையை பாழாக்கிட்டாரு!” அவள் கூறிக்  கொண்டிருந்த சமயம், உற்சாகமாய் விசிலடித்து கொண்டே உள் நுழைந்த ரவி, இவர்களை கண்டதும் பேய் அரைந்தது போல் நின்றான்.

மறுநிமிடமே சுதாரித்து கொண்டவன், “வீட்டுக்கு யாரு வந்தாலும் இப்படி தான் நடு ஹால்ல உட்கார வைப்பியா?” மனைவியிடம் அவன் கத்த,

அவனின் கத்தலில் பயந்தவள், “இல்லங்க.. ”  என தட்டு தடுமாறி ஏதோ கூற வர,

அதை காதில் சிறிதும் வாங்காது, “நீ உள்ள போ முதல்ல”  எனக் கத்தியிருந்தான்.

அவள் திரும்பி உள்ளே போக பார்க்க,

“நில்லுங்கமா ஒரு நிமிஷம்” அவளை கூப்பிட்ட மலர்,

“ஏன் உன் பொண்டாட்டி முன்னாடி உன்னை அசிங்கபடுத்திடுவேனு பயந்து உள்ள போக சொல்றியா?” என்றவள்,

“பார்த்துக்கோ நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன்! அதுவும் யாரு கூட சேர்த்து வச்சி என் மேல பழி போட்டியோ அவரோடயே சேர்ந்து தான் சுத்திட்டு இருக்கேன்!”

“அய்யோ மானம் போச்சேனு செத்து போய்டுவேன்னு நினைச்சியோ? கெத்தா உன் முன்னாடி வாழ்ந்து காமிப்பேன்டா!” அந்த வீடே அதிர சத்தமாய் கூறியவள்,

அவளது பையிலிருந்த காகிதத்தை தூக்கி அவன் முகத்திலேயே விட்டெரிந்தவள், “இந்தா நான் கையெழுத்து போட்ட விவாகரத்து பத்திரம்! இனி நமக்குள்ள ஒன்னும் கிடையாது! இனி உன்னால எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் லீகலா தான் ஹேண்டில் பண்ணுவேன்! லீகல் நோட்டீஸ் உன் வீடு தேடி வரும்! கோர்ட்ல சந்திப்போம்” 

ஆஆஆ வென அவளை தான் வியந்து பார்த்திருந்தான் மாணிக்கம்.

“வாங்க மாணிக்கம்” எனக் கூறி விட்டு முன்னே நடந்து செல்ல, அந்த வியப்பு பாவனையை மாற்றாது அவள் பின்னே சென்றான் மாணிக்கம்.

“வாவ்! வாட் எ லேடி! என்ன ஒரு தைரியம்” அகிலன் இங்கே மாணிக்கம் கூறியதை கேட்டு மலரை புகழ்ந்து தள்ளி கொண்டிருந்தான்.

“இருந்தாலும் இதனால பின்னாடி அவங்களுக்கு பிரச்சனை எதுவும் வரலையே” அகிலன் கேட்க,

சிரித்துக் கொண்டே இல்லையென தலையசைத்தார்.

“சரி சொல்லுங்க! அப்புறம் எப்ப எப்படி உங்க மலர் மேடமை கல்யாணம் செஞ்சிக்கலாம்னு எண்ணம் வந்துச்சு?” அவர்களின் கல்யாண காதல் கதையை கேட்கும் ஆவலில் அகிலன் கேள்வி கேட்க,

வெட்க சிரிப்பை உதிர்த்தவர், “அதுக்கு காரணம் கண்ணம்மா தான்” என்றார்.

— தொடரும்