முள்ளில் பூத்த மலரே – 11

“என்னடா இது? பாட்ஷா…  மாணிக் பாட்ஷா ரேஞ்ச்க்கு சொல்றாரு” மனதிற்குள்ளாக பேசி கொண்டே அகிலன் மாணிக்கத்தை நோக்க,

“என் பொண்ணை உனக்கு கட்டி கொடுக்கிறதுக்கு முன்னாடி எங்க குடும்பத்தை பத்தின சில விஷயங்களை நீ தெரிஞ்சிக்கனும் அகிலன். இந்த விஷயாம்னால பின்னாடி என்னிக்குமே உங்களுக்குள்ள பிரச்சனை வரக்கூடாது. அதனால நான் சொல்றதை தெளிவா கேட்டுட்டு அதுகப்புறமும் உனக்கு ஓகேனா தொடர்ந்து கல்யாணத்தை பத்தி பேசுவோம்” அவர் கூற,

“ஹ்ம்ம் புதிரா பேசுறாரே” எண்ணிக் கொண்டவன்,

“சொல்லுங்க அங்கிள்! எந்த பிரச்சனையா இருந்தாலும் ஆதினிக்கு நான் துணையா நிப்பேன் அங்கிள்.  அதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.  நீங்க இப்ப சொல்ல போற எந்த விஷயமும் ஆதினி மேல இருக்க என் காதலை மாத்தாது. அதை எப்படி சரி செய்யலாம்னு தான் யோசிப்பேனே தவிற ஆதினிய விட்டு தர மாட்டேன் அங்கிள்” ஆதினியை மணமுடிப்பதில் தான் தீவிரமாயிருப்பதை இவ்வாறாய் அவனுரைக்க,

“ஹ்ம்ம்” நீண்ட பெருமூச்சு விட்டவர், தனது கதையை கூறலானார்.

தனது பிறப்பு முதல் தனக்கு நிகழ்ந்த திருமணமும், அதன்  பின்பு அப்பெண்ணை அவளது காதலனுடன் அனுப்பி வைத்தது வரை அனைத்தையும் அவர் கூற, பேரதிர்ச்சி அகிலனுக்கு.

“எப்படி அங்கிள் உங்களுக்கு மனசு வந்துச்சு? எவ்ளோ ஆசை ஆசையா அந்த கல்யாணத்தை செஞ்சிருப்பீங்க”

தான் இப்போது ஆதினிக்காக கனவு கண்டிருப்பது போல தானே அவரும் கண்டிருப்பார்.  அதுவும் திருமணம் நடந்து வாழ்ந்த பிறகு இவ்வாறு நிகழ்வது எத்தகைய வேதனையை அளித்திருக்குமென எண்ணியவனின் மனமோ வேதனைக் கொண்டது.

அவன் தனக்காய் அதுவும் என்றோ நிகழ்ந்த நிகழ்வுக்காய் கலங்குவதை பார்த்து மாணிக்கத்திற்கு அவன் மீது பெரும் மதிப்பு கூடியது.

“நான் தான் ஆசைப்பட்டேன் அகி! அவளுக்கு என்னை விட அவனை தான் பிடிச்சிது! நமக்கு பிடிக்கும்ங்கிறதுக்காக அவங்களை கஷ்டப்படுத்தி நம்ம கூட வச்சிக்கனும்னு நினைக்கிறது தப்பு.  உண்மையா காதலிக்கிற எவனும் தன்னுடைய காதலன்/காதலி கஷ்டபடனும்னு நினைக்க மாட்டான்! இதெல்லாம் எப்பவோ முன்னாடி ஜென்மத்துல நடந்த மாதிரி தான் இப்ப என் மைண்ட்ல இருக்கு.  அம்மா இறந்தது தான் என்னால தாங்கிக்க முடிமாத பெரிய துக்கம்”

“நம்ம வாழ்க்கைல ஒரு கதவு அடைக்கும் போது, இன்னொரு கதவு தானா திறக்கும்னு சொல்லுவாங்களே! அப்படி தான் என் வாழ்க்கைல நடந்துச்சு! எனக்கு ஒரு குடும்பத்தையே வரமாய் கொடுத்தாரு. கண்ணம்மாவும் கண்ணாவும் என் வாழ்க்கைல வந்த பிறகு தான் நான் வாழுறதுக்கே ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுச்சு” என்றவர்,  மலரை கண்ட நாளிலிருந்து நிகழ்ந்ததை கூறிக் கொண்டே வந்தார்.

“மலரும் கண்ணம்மாவும் என் வாழ்க்கைல கடவுள் கொடுத்த பொக்கிஷங்கள்! எனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு வந்ததே இவங்களை பார்த்த பிறகு தான்.  மதுரன் மாதிரி பொறுப்பான பையன்லாம் மலரோட வளர்ப்பினால மட்டும் தான் சாத்தியம்” என்றவர்,  மலரின் வாழ்வில் நிகழ்ந்ததை கூற,

“ஹப்பா எவ்ளோ கஷ்டத்தை தாண்டி வந்திருக்காங்க மலர் ஆன்ட்டி” கேட்க கேட்க மனம் பாரமானது அகிலனுக்கு. 

“அந்த ரவியை ஒரு அடியோட விட்டிருக்க கூடாது” ஆத்திரம் கொண்டு கோபமாய் அவன் கூற,

இதுக்கே கோபப்படுறியே, அடுத்து அவன் செஞ்ச வேலை தான், மலர் அவனை மொத்தமா தலை முழுக காரணமா இருந்துச்சு.

“அப்படி என்ன செஞ்சான்?” அகிலன் அக்கதைக்குள் மூழ்கி மாணிக்கத்தை கேட்க, தொடர்ந்தார் அவர்.


அன்று மருத்துவமனையில் அப்பிள்ளைகள் கூறிய பெயரில் ஆச்சரியமடைந்த மாணிக்கம், “என்னது! இது தான் உங்க நிஜ பெயரா?” எனக் கேட்க,

சற்று தொலைவாய் அமர்ந்திருந்து இவர்களின் சம்பாஷனையை கேட்டிருந்த மலர், எழுந்து அவர்களருகில் வந்தாள்.

“என்ன மலர் மேடம்?  இவ்ளோ அழகான பேரு வச்சிட்டு…. பிள்ளைகளை ஏன் கண்ணா கண்ணம்மானு கூப்பிட்டுட்டு இருந்தீங்க?” மாணிக்கம் கேட்க,

“நான் எப்ப அப்படி கூப்டேன்? நான் பாப்பா இல்லனா ஆதுனு தான் கூப்பிடுவேன்.  அப்பப்ப பொம்முமா குட்டிம்மானு வாய்க்கு வந்ததை கூப்பிடுவேன். நான் எப்ப கண்ணம்மானு கூப்பிட்டேன்” யோசனையாய் கூறியவள்,

“ஹோ… ஆயா பசங்களை அப்படி கூப்பிடுவாங்க. நீங்க அதை கேட்டுட்டு ஒரிஜினல் நேம்னு நினைச்சிட்டீங்களா?” எனக் கூறி சிரித்தாள்.

வெகு நேர தவிப்பு, கவலை, வேதனை, மன போராட்டத்திற்கு பிறகு அவள் முகத்தில் கண்ட அந்த சிரிப்பில், அவன் முகம் கனிந்து நோக்கி கொண்டிருந்தான்.

“நீங்க எப்பவும் இப்படி சிரிச்சிக்கிட்டே இருக்கனும் மலர் மேடம்!” மனதிற்குள் கூறிக் கொண்டான்.

“ஆதினி…  மதுரன்.. ரொம்ப நல்லா பேரு வச்சிருக்கீங்க மலர் மேடம். அழகான தமிழ் பெயர்கள்” அவன் பாராட்டி பேச,

“அப்பா தான் வச்சாங்க” கண்களில் பெருமிதம் மின்ன கூறினாள்.

அதன் பின் வந்த நாட்களில் மலரின் தந்தை பொன்னுசாமியின் உடல்நலம் தேறி வர,  மலரின் முகமும் தெளிந்து பளபளத்தது.  அன்னை தந்தையுடன் இருப்பதே பெரும் நிம்மதியை தந்தது அவளுக்கு. மாணிக்கமும் பிள்ளைகளுடன் அங்கேயே தங்கி விட்டான். இவ்வாறு குடும்பமாய் தங்கியிருப்பது அவனுக்கும் உற்சாகமளித்து அவனது தனிமை உணர்வை போக்கியது.

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் சாய்வு நாற்காலியில் பொன்னுசாமி அமர்ந்திருக்க,  அவரருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தாள் மலர்.

“என்னம்மா முடிவு பண்ணியிருக்க?” அவர் கேட்க,

“விவாகரத்து கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்ப்பா! அவரை விட்டு பிரியறுதுலலாம் எனக்கு வருத்தமில்லைபா. மனசால அவரை விட்டு பிரிஞ்சி அஞ்சு வருஷமாகுது.  இப்ப மொத்தமா அவரை விட்டு வெளில வந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்” அமைதியாய் எவ்வித கவலையுமின்றி அவள் கூற, 

“அதுக்கப்புறம் உன்னோட வாழ்க்கை?”

“என் வாழ்க்கைனு தனியா என்னப்பா இருக்கு. மதுவையும் ஆதுவையும் படிக்க வச்சி அவங்க சொந்த கால்ல நிக்க வைக்கிறது தான் என் வாழ்க்கை லட்சியம்பா”

“நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது பொன்னுமா?  தப்பு செஞ்ச அவனே குடும்பம் குழந்தைங்கனு சந்தோஷமா இருக்கும் போது உனக்கு ஏன் இந்த தண்டனை?”  கவலை தொண்டையை அடைக்க அவர் கேட்க,

“அப்பாஆஆஆ டாக்டர் இப்படி நீங்க உணர்ச்சி வசப்படக் கூடாதுனு சொல்லிருக்காங்க.  என்னைய பத்தி கவலைப்படுறதை முதல்ல நிறுத்துங்க”  அவள் அவரை கண்டிக்க,

“இல்லமா கவலைப்படலை!” தெம்பாய் தனது குரலை மாற்றியவர்,

“சொல்லு பொன்னுமா! இன்னொரு கல்யாணம் நீ பண்ணிப்பேனு எனக்கு வாக்கு கொடு” அவர் கேட்க,

“அப்பா! இப்ப யாரையும் நம்ப மனசில்லைப்பா! திரும்பி அன்பு வச்சி ஏமாந்துட்டா தாங்கிக்கிற சக்தி இல்லபா”  மனதின் வலியை அடக்கி கொண்டு வெறுமையான குரலில் அவள் கூற,

“நீ ஏன் மாணிக்கத்தை கட்டிக்க கூடாது? அவன் உன்னை ஏமாத்துவானு தோணுதா? நம்ம பொம்முமா மேல உயிரா இருக்கான்! உனக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல பாதுகாப்பா இருப்பான்!” அதிர்ச்சியாய் அவரை அவள் பார்க்க,

“ஆஸ்தி அந்தஸ்து படிப்புனு இல்லனாலும் நல்ல மனசு இருக்குமா அவனுக்கு. ரொம்ப நல்லவன்மா அவன். அப்பா சொல்றத கொஞ்சம் யோசிச்சி பாருமா. உனக்கு இப்ப துணை வேண்டாம்னு தோணினாலும் உன் பிள்ளைங்களுக்கு அப்பா வேணும்மா! இப்பவே நீ வேறொரு வாழ்க்கையை பத்தி யோசிக்கிறது நல்லது”

அவரை மறுத்து பேசி காயம் செய்ய மனமற்று, “எனக்கு கொஞ்சம் டைம் தாங்கப்பா! நான் கல்யாணம் பண்ணாம இப்படியே இருப்பேனு நினைச்சி கவலைப்படுறதை நிறுத்துங்க. உங்களுக்காக நான் கண்டிப்பா கல்யாணம் செஞ்சிப்பேன்” அவருக்காக அச்சமயம் அப்பதிலை கூறிக் கொண்டிருந்தாள் மலர்.

அந்த வாரமே அவர்கள் கிளம்புவதாய் கூற,  அவளின் அன்னையும் தந்தையும் அவர்களை மேலும் ஒரு வாரம் இருக்குமாறு கட்டளையிட்டனர்.

“நீங்களும் அம்மாவும் என் கூட சென்னைக்கு வந்துடுங்களேன்பா” மலர் கேட்க,

“இல்லம்மா! பல வருஷம் வெளியூர்ல தங்கி இருக்கிறவங்க கூட சாகுற காலத்துல கொஞ்ச நாளாவது சொந்த ஊருல இருக்கனும்னு வந்துடுவாங்க.  நான் இங்கயே பிறந்து வளர்ந்த ஆளு! உங்கம்மாவுக்கு இங்கன பக்கத்துல உள்ளவங்கலாம் வந்து பேச்சு கொடுக்குறதுல நேரம் போய்டும். எங்க இரண்டு பேராலயும் இந்த ஊரை விட்டுலாம் வர முடியாதுமா” என்று மறுத்து விட்டார்.

“சரி இப்ப விடுறேன்! அங்கிருக்க பிரச்சனைலாம் சரி செஞ்ச பிறகு ஒரு மாசமாவது அங்க வந்து நீங்க தங்கனும். அப்ப அடம் பிடிச்சாவது உங்களை கூட்டிட்டு போய்டுவேன் சொல்லிட்டேன்” முகத்தை உர்ரென வைத்து கொண்டு அடமாய் அவள் கூற,

அவளின் முக பாவனையை ரசித்து சிரித்து, “நீ எவ்ளோ பெரிய பொண்ணானாலும் எனக்கு பாப்பா தான்டா” கூறியிருந்தார்.

மாணிக்கம் அவர்களின் அப்பா மகள் பாசத்தை பூரிப்பாய் பார்த்திருந்தான்.  அவனுக்கு அவனின் அன்னை நினைவு வந்து கண்களில் நீர் கோர்க்க, அந்நேரம் வெளியில் ஓடி விளையாடி கொண்டிருந்த கண்ணாவும் கண்ணம்மாவும் விளையாட்டு போக்கில் வீட்டினுள் ஓடி வர,  இருவரும் நேராய் மாணிக்கத்தின் மடியில் போய் அமர்ந்து கொண்டனர்.

ஏனோ அவர்களின் செய்கை, “உனக்கு நான் இருக்கேன்” என்பதாய் புரிபட,  இருவரையும் அணைத்து முத்தமிட்டிருந்தான் மாணிக்கம்.

பொன்னுசாமி, மலர், மலரின் அன்னை மணிமேகலை இதை பார்த்து நெகிழ்ந்து போயினர்.

கண்ணா கண்ணம்மா இருவருக்கும் அந்த வாரம் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத வாரமாய் அமைந்தது.

அந்த வாரம் முழுவதும் ஏதேனும் ஒரு இடத்திற்கு அவர்களை அழைத்து சென்றான் மாணிக்கம்.

ஒரு நாள் கிணற்று தண்ணீரில் அவர்களை குளிக்க அழைத்து சென்றவன், ஒரு நாள் பம்ப் மோட்டாரில் குளிக்க அழைத்து சென்றான்.  ஆற்றில் ஒரு நாள் குளிக்க செய்தான். மதுரனுக்கு நீச்சல் கற்று கொடுத்தான்.

ஒரு நாள் அனைவருமாய் சேர்ந்து அருகிலிருந்த கடற்கரை கோவிலுக்கு சென்று வந்தனர்.  மாணிக்கமும் பிள்ளைகளும் கடற்கரையில் வெகுவாய் ஆட்டம் போட்டு விட்டே வந்தனர்.

மலரின் அன்னை மணிமேகலை தினமும் வகை வகையாய் ருசியாய் சமைத்து பரிமாறினார் அனைவருக்கும்.

கிளம்பும் நாளன்று அங்கிருந்து கிளம்ப எவருக்குமே மனம் வரவில்லை.

அனைவரும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தங்களது பையில் துணிமணிகளை அடுக்கி கொண்டிருந்தனர்.

“என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா ஏத்துகிட்டு நீங்க என்னை கவனிச்சிக்கிட்ட விதம், எனக்கு யாருமில்லைனு நான் இத்தனை நாள் பட்ட மன வேதனையை மொத்தமாய் தூக்கி எறிஞ்சிடுச்சுமா! ரொம்ப நன்றிமா” மணிமேகலையின் கரம் பற்றி தொண்டை கமர மாணிக்கம் கூற,

“அட என்னப்பா! இதுல என்ன இருக்கு? என் மகளுக்காக எவ்ளோ செஞ்சிருக்க…  இதை நான் செய்ய மாட்டேனா?” என்றவர் கூறவும்,

“ஒரே ஒரு கேள்வி கேட்கனும்” தயங்கி தயங்கியே மாணிக்கம் கேட்க,

“சொல்லுப்பா” மணிமேகலை கூறவும்,

“எங்கிருந்து இவ்ளோ மன தைரியமும் வந்ததுமா?”  அவன் கேட்க,

அவன் எதை மனதில் நினைத்து இக்கேள்வியினை கேட்கிறானென அறிந்த மணிமேகலையோ மென்னகை புரிந்தார்.

“என்னமா இதுக்கும் அதே அமைதியான சிரிப்பு தானா? பொண்ணு டைவர்ஸ் செய்ய போறானு சொன்னதுக்கும் கூட அப்படியாங்கிறது போல தான் உங்க முக பாவம் இருந்தது.  அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது, மலர் மேடம் அவ்ளோ பதட்டத்துல வந்தாங்க..  நீங்க அமைதியா உட்கார்ந்திருந்தீங்க!  எப்படி உங்களால் இப்படி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியுது?” ஆச்சரியமாய் அவன் கேட்க,

தனது கணவரை திரும்பி ஒரு பார்வை பார்க்க, கூறு என்பது போல் சிரித்து அவர் தலையசைக்க, “கடவுள் மேலுள்ள நம்பிக்கை தான் முதல் காரணம்னா இரண்டாவது காரணம், இதை விட பெரிய பிரச்சனையெல்லாம் நானும் அவரும் சேர்ந்து நிறையவே கடந்து வந்திருக்கோம்.  அப்ப நாங்க கத்துக்கிட்டது இதுவும் கடந்து போகும், வாழ்க்கை அதன் போக்குல இழுத்துட்டு போய் நமக்கு நல்வழி காமிக்கும்.  நம்ம நல்லவங்களா உண்மையா நேர்மையா வாழ்ந்தா மட்டும் போதும்.  இவருக்கு நெஞ்சு வலி வந்தப்ப பயம் கவலை வந்தாலும், கண்டிப்பா குணமாகி வந்துடுவாருனு திடமான நம்பிக்கை இருந்துச்சு.  மலருக்கு அவ கணவனே சரியில்லைனு தெரிஞ்ச சமயம் பெத்த வயிறு பத்தியெரிய தான் செஞ்சிது.  ஆனா இதுக்கும் காரணம் இருக்கும்.  இதை விட நல்ல வாழ்வு என் மகளுக்கு கடவுள் தருவாருனு ஒரு ஆழ்ந்த நம்பிக்கை மனசுல வந்தது” அவர் பேசிக் கொண்டே போக,

“இது தான் மாணிக்கம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்க வித்தியாசம்! பெண்கள் எவ்ளோ மென்மையானவங்கனு நம்ம பேசினாலும், எவ்ளோ கடுமையான சூழலையும் அழகா கையாள தெரியும். ஆனா ஆண்களுக்கு அந்த உணர்வை கடந்து கையாளும் தன்மை தெரியாம போராடுவோம்” என்றவர் கூற,

“உங்க வயசு அனுபவத்துல என்னென்னமோ சொல்றீங்க! எனக்கு புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு”  தலையை தட்டிக் கொண்டே குழப்பமாய் அவன் கூற,

“அது என்ன சொல்ல வர்றாங்கனா… எப்பவுமே இப்படி ஆயிடுச்சேனு கவலைப்பட்டுகிட்டு அதுலயே உழண்டுகிட்டு இருக்காம,  அடுத்து என்னனு யோசிச்சு அதற்கான செயல்ல இறங்கும் போது தான், இந்த கவலைகளை கடந்து வர முடியும்னு சொல்றாங்க” மலர் விளக்கமாய் கூற,

“நீங்க இப்படி தான் உங்க கஷ்டத்தை எல்லாம் கடந்து வந்தீங்களா மலர் மேடம்? மனதில் நினைத்து கொண்டு வியப்பாய் அவளை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதன் பின்பு பிரியா விடை பெற்று அனைவரும் சென்னைக்கு கிளம்பி வந்தனர்.

சென்னையிலிருந்து பேருந்தில் வரும் போது இருந்த மன வேதனையில் கவனிக்காத பல விஷயங்கள் இப்பொழுது மலரின் கருத்தினில்பட்டது.

அதில் முதன்மையானது மாணிக்கம் அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பு.

எப்பொழுது அவள் தனித்து ஊருக்கு வந்தாலும் நிம்மதியாக உறங்க முடியாது அசௌகரியமாக, யாரோ தன்னை உற்று நோக்குவது போலவே உணர்வாள் மலர்.

ஆனால் தற்போது எது நடந்தாலும் அவனிருக்கிறான் என்றொரு நம்பிக்கையில் இந்த பயணம் முழுவதும் நிம்மதியாகவே இருந்தாள்.

பேருந்து இடையில் நிறுத்தமிடமெல்லாம், மலர் கழிப்பறைக்கு செல்லும் போதும் கூட,  அவள் வெளியே வரும் வரை தூரமாய் நின்று கண்காணித்திருந்தான்.

பிள்ளைகள் இருவரின் தேவைகள் அனைத்தையும் அவனே கவனித்து கொண்டான். அவள் வாழ்நாளில் வெகு நிம்மதியாய் செய்த பயணமிது.

இருவரும் சென்னை வந்த பின்பே ரவி கிளப்பி விட்டிருந்த பிரச்சனையை பற்றி அறிந்தனர்.  அறிய செய்தனர் அவர்களை சுற்றியிருந்த மக்கள்.

–தொடரும்