முள்ளில் பூத்த மலரே – 10

அந்தப் பௌர்ணமி இரவின் நிலவொளியில் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர் ஆதினியின் குடும்பத்தினர்.

ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமெனக் கூறி அவர்களை ஒன்று கூட்டியிருந்தார் ஆதினியின் தந்தை.

பௌர்ணமி என்பதால் அங்கேயே ஆதினியின் தாயின் கையால் அனைவரும் நிலா சோறு உண்டு விட்டு அமர்ந்திருந்தனர்.

“என்ன விஷயம் சொல்ல எல்லாரையும் கூட்டிருக்கீங்க?” மதுரன் கேட்க,

“அகிலன் ஆதினியை கட்டிக்க ஆசைபடுறான். இன்னிக்கு என்கிட்ட வந்து பேசினான். நான் உங்க கிட்ட பேசிட்டுச் சொல்றதா சொன்னேன்” அவர் கூற,

ஆதினிக்கு நாணம் கலந்த மகிழ்வு இருந்தது. மதுரனுக்கோ தெரிந்த விஷயம் தானே, என்ன முடிவு எடுக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆதினியின் தாய்க்கோ பல கேள்விகள் எழுந்தது.

“நல்லா விசாரிச்சிட்டீங்களாப்பா?” தனது கணவரிடம் கேட்டார் அவர்.

“மதுரன் எல்லாமே விசாரிச்சிட்டான் பேபி” என்றவர் கூற,

அகிலனின் குடும்பத்தைப் பற்றி விசாரித்ததைக் கூறினான் மதுரன்.

சற்று யோசித்த அவளின் அன்னை, “உனக்குப் பிடிச்சிருக்கா பாப்பா?” எனக் கேட்டார்.

“உங்க விருப்பம் தான்மா என்னோட விருப்பம்” எனக் கூறி முடித்து விட்டாள் ஆதினி.

அதன் பின் அனைவருமாய் இணைந்து பேசி ஆதினியை அகிலனுக்கு மணம் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.

“அப்ப சரி! நான் நாளைக்கு அகிலன் கிட்டயும் அவங்க குடும்பத்துகிட்டயும் பேசுறேன்” எனக் கூற அனைவரும் உறங்க சென்றனர்.

ஆதினியின் அன்னை, தன் கணவரின் தோளில் சாய்ந்து மெத்தையில் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் வெகுவாய் கலக்கம் குடியிருந்தது.

“என்னடா பேபி! என்ன குழப்பம் உனக்கு?” அவரின் தலை கோதி கேட்க,

“நம்ம வாழ்க்கை மாதிரி நம்ம பசங்களுக்கு ஆகிட கூடாதுப்பா! நம்மளை பத்தி ஒரு வார்த்தை தவறா அவங்க கட்டிக்கிட்ட வீட்டுல பேசினாலும் நம்ம இரண்டு பசங்களும் அந்த வாழ்த்கையே வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு வந்துடுவாங்கப்பா! அதனால நம்மளையும் நம்ம குடும்பத்தையும் நல்லா புரிஞ்ச குடும்பமா இருந்தா தான் நல்லது… அப்ப தான் நம்ம பசங்களையும் நல்லா புரிஞ்சிக்கிட்டு வாழுவாங்க! நான் சொல்றது புரியுதாங்க” தோளிலிருந்து தலையை நிமிர்த்தித் தன் கணவரின் முகத்தை நோக்கி கவலையாய் அவர் கேட்க,

“தாயா உன்னுடைய கலக்கம் புரியுதுடா! என்ன தான் நீ அம்மானாலும் நான் அவங்களுக்கு அப்பா! என் பிள்ளை சுமையே தாங்கிற கூடாதுனு நான் அதைத் தாங்கி ஏத்து நடந்த அப்பாடா! அவங்கள அப்படிக் கஷ்டபட விட்டுடு வேணா… கண்டிப்பா நம்ம பசங்க சந்தோஷமா வாழுவாங்க! நம்ம அதைப் பார்த்து சந்தோஷமா வாழுவோம் சரியா! இப்ப போய்த் தூங்கலாமா பேபி” அவரின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி அவர் கேட்க, சிரித்துக் கொண்டே தலையாட்டினார் அவர்.

படுக்கையில் புரண்டிருந்த ஆதினிக்குக் கண்டம் அண்டம் தாண்டி அகிலனிடம் ஓடிக் கொண்டிருந்தது அவளின் மனது.

எந்தக் கனவையும் கற்பனையும் வளர்த்துக் கொள்ளக் கூடாதென எத்தனையாய் கடிவாளம் போட்டு வைத்தாலும், மணக்கண்ணில் ஓடும் அவனுடனான வாழ்வை தடுக்க இயலவில்லை அவளால். அந்தக் கனவு கோட்டையிலேயே உறங்கியும் போனாள்.

மறுநாள் காலை அகிலனை அழைத்துப் பூங்காவிற்கு வருமாறு அழைத்த ஆதினியின் தந்தை, அங்குச் சென்று பார்க்க, பதட்டமாய் அமர்ந்திருந்தான் அகிலன்.

“என்னப்பா நைட் முழுக்கத் தூக்கமில்லையா?” அவனைக் கேலி செய்து அவர் கேட்க,

நாணி சிரித்துத் தலை குனிந்தான் அகிலன்.

இருவருமாய் அந்த மர பலகையில் அமர பேச ஆரம்பித்தார் அவர்.


மறுநாள் காலை பிள்ளைகளை மாணிக்கமே அழைத்துச் சென்று மலரின் இல்லத்தில் விட்டவன்,

“மனசே கேக்கலங்க… அந்த அயோக்கியனை ஏதாவது செய்யனுங்க! அதுக்காகவாவது எனக்குப் பர்மிஷன் கொடுங்களேன்” மலரிடம் கெஞ்சும் பாவனையில் மாணிக்கம் கேட்க,

தனக்காய் யோசிக்கும் அவனது அன்பில், அத்தனை கோபத்திலும் தன்னிடம் ஒப்புதல் கேட்டு நிற்கும் தன் மீதான அவனின் மதிப்பு மரியாதையில் அவளின் உள்ளம் வெகுவாய் கனிந்து பூரித்தது.

“தப்புச் செஞ்சவங்களுக்குக் கண்டிப்பா தண்டனை உண்டு மாணிக்கம்! அவங்க செஞ்ச பாவமே அவங்களுக்குப் பின்னாலே ஆப்பு வைக்கும்! அப்ப நம்மலாம் நல்ல நிலைமைல இருந்து அவங்கள பார்ப்போம். நீங்க கவலைப்படாம உங்க வேலையைப் பாருங்க” அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தாள்.

மலரின் மனம் ஏனோ சந்தோஷத்தில் துள்ளியது. அந்த இன்பமான மனநிலையிலேயே அன்று பள்ளியில் சுழன்றிருந்தவளிடம், “மலர் மேடம் உங்களுக்கு ஃபோன் வந்திருக்கு” என உதவியாளர் வந்து கூறி விட்டு செல்ல,

“யாரு இந்த நேரத்துல நமக்கு ஃபோன் செய்றது?” யோசித்துக் கொண்டே அலுவலக அறை சென்று அழைப்பை ஏற்றவள், மறுபக்கம் கூறிய செய்தியில் மயங்கி விழுந்திருந்தாள்.

மலரின் வீட்டு அலைபேசிக்கு அழைத்தார் அந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவர்.

மலரின் வீட்டில் வேலை செய்திருந்த ஆயா அழைப்பை ஏற்க, மலர் மயக்கமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு உடனே வருவதாய் உரைத்தார்.

மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்று பார்க்க, அங்கு அவனில்லாது போக, அவன் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி சென்றார் ஆயா.

அங்கு மாணிக்கத்திடம் மலர் மயக்கமடைந்ததை அவர் கூற, அந்த மருத்துவமனைக்குத் தனது ஆட்டோவில் ஆயாவை ஏற்றிக் கொண்டு பதற்றமாய்ச் சென்றான் மாணிக்கம்.

அவன் அங்குச் சென்றதும் மலரின் உதவிக்காக அந்த மருத்துவமனையிலிருந்த ஆசிரியையிடம் நடந்ததை விசாரிக்க, “ஃபோன் வந்துச்சுங்க! அதைக் கேட்டு தான் மயக்கம் போட்டு விழுந்தாங்க! ஃபோன்ல யாரு என்ன பேசினாங்கனு தெரியலை! அதிர்ச்சில தான் மயங்கிருக்காங்க. காலைல வேற சாப்பிடலை போல… லோ பிபி ஆகிருக்கு… சரியாகிடுவாங்கனு டாக்டர் சொல்லிருக்காங்க” என்று கூறினார் அவர்.

மலரின் அருகில் அமர்ந்திருந்த மாணிக்கம், “ஏன் மேடம் சாப்பிடலை? இனி நீங்க வேளா வேளைக்குச் சாப்பிடுறீங்களானு விசாரிச்சு வச்சிக்கனும். நீங்க தெம்பா இருந்தா தானே கண்ணாவும் கண்ணம்மாவும் சந்தோஷமா இருப்பாங்க” இதைக் கூறும் போது தான் பிள்ளைகளின் நினைவு வர,

“ஒரு வேளை பசங்க ஸ்கூல்ல இருந்து தான் ஃபோன் செஞ்சிருப்பாங்களோ? அந்த ரவியால பசங்களுக்கு எதுவும் பிரச்சனை ஆகியிருக்குமோ? பிள்ளைங்களை வச்சி மிரட்டி கையெழுத்து வாங்க ப்ளான் செஞ்சிருப்பானோ?” யோசிக்கும் போதே மனதினுள் பதற்றம் சூழ,

“ஆயா நான் ஸ்கூலுக்குப் போய்ப் பிள்ளைங்களைப் பார்த்துட்டு வரேன்” அவசரமாய் கூறி விட்டு ஓடிச் சென்றான்.

அப்பிள்ளைகளின் பள்ளியிலிருந்த காவலாளி ஏற்கனவே மாணிக்கத்தை ஆயாவுடன் பார்த்திருப்பதால் ஏதும் கேள்வி கேட்காது அவனை உள்ளே செல்ல அனுமதித்தார்.

சரியாய் அந்நேரம் மதிய உணவிற்கான மணியடிக்க, பிள்ளைகள் இருவரும் வெளியே வந்தனர். வெளியே வந்ததும் மாணிக்கத்தைப் பார்த்து கூக்குரலிட்டனர். ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டனர்.

பிள்ளைகளை அப்படியே மருத்துவமனை அழைத்துச் செல்ல மனம் வராது, அவர்களை அமர வைத்து உணவு உண்ண வைத்து, அவர்களின் வகுப்பாசிரியையிடம் அனுமதி பெற்றுவிட்டு இவர்களை அழைத்துச் சென்றான்.

மருத்துவமனையினுள் இவன் கண்ணம்மாவை தூக்கி கொண்டு கண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வர, அச்சமயம் மலரின் அறைக்குள் ரவி நுழைவதை கண்டான் மாணிக்கம்.

அவசரமாய் இருவரையும் அறையின் வெளியில் அமர்ந்திருந்த ஆயாவிடம் கொடுத்தவன், அறைக்குள் நுழைய,

அப்பொழுது தான் மயக்கம் தெளிந்து அறை மயக்கத்தில் கட்டிலில் அமர்ந்திருந்த மலரிடம், “நீ தானடி ஆளு வச்சி எனக்கு ஆக்சிடெண்ட் ஆக வச்ச” அவளின் தோளை உலுக்கினான்.

நெற்றியில் பெரிய காயமும், கன்னத்திலும் கைகளிலும் ஆங்காங்கே சிராய்ப்புகளுடனும் நின்றிருந்த ரவியைப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான் கதவினருகில் நின்றிருந்த மாணிக்கம்.

முழுதாய் மயக்கம் தெளியாது, மலர் ஏதும் புரியாது விழிக்க,

“நடிக்காதடி! நான் பைக்ல போகும் போது பின்னாடி ஒரு ஆட்டோகாரன் தான் வந்து இடிச்சான். நீயும் அந்த ஆட்டோகாரனும் சேர்ந்து செஞ்ச ப்ளான் தானே இது. எனக்குத் தெரியாதுனு நினைச்சிட்டியா? கொஞ்ச நாளா அந்த ஆட்டோகாரன் கூடத் தானே சுத்திட்டு இருக்க?” விஷமாய் அவன் சொற்களை உதிர்க்க,

“ச்சீஈ அசிங்கமா பேசாத! உன்ன மாதிரியே எல்லாரையும் நினைச்சிட்டியா? நான் இப்ப யாரையாவது கட்டிக்கனும்னு நினைச்சாலும் உன்னை மாதிரி கோழையா மறைஞ்சிருந்து வாழ மாட்டேன்! ஊருக்கே தெரியுற மாதிரி இது தான் என் புருஷன்னு சொல்லி வாழுவேன். அந்த நேர்மை உன்கிட்ட கிடையாது. நீ அந்த மனுஷனை பத்தி பேசாத”

மாணிக்கம் அவளின் கூற்றில் கனிந்து நோக்கினான்.

பெண்ணவள் அறியவில்லை! அவளின் வார்த்தைகள் அவளுக்கே பின்னாளில் பலிக்கப் போகிறதென அறியவில்லை அவள்.

அரை மயக்கத்தில் தட்டு தடுமாறி பேசியவளின் மயக்கம் முற்றாய் தெளிய, அந்த அலைபேசி செய்தி அவளின் நினைவுக்கு வர, சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவள் ஆங்காரமாய் ரவியின் சட்டையை உலுக்கி, “மனசாட்சி இல்லாதவனே! உன்னால தான்டா என் அப்பா இப்ப ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க” அழுது கொண்டே அவள் கூற, அவளைப் பிடித்துத் தள்ளினான் ரவி.

தட்டு தடுமாறி அவள் விழ போக, ஓடி வந்து தாங்கி பிடித்த மாணிக்கம்,
“உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? பொம்பளை பிள்ளைகிட்ட உன் வீரத்தை காமிக்கிற” கூறிக் கொண்டே மலரை கட்டிலில் அமர வைத்தான் மாணிக்கம்.

“அவளைச் சொன்னா உனக்கு ஏன் கோபம் பொத்துகிட்டு வருது? உங்களுக்குள்ள ஏதோ இருக்கப் போய் தானே?”

அவனது பேச்சில் கடுங்கோபமுற்று அவனை அறைய மாணிக்கம் கை ஓங்க,

தனக்கு நடந்த விபத்துக்கு இவன் தான் காரணமென ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ரவி மாணிக்கத்தை அடிக்கக் கை ஓங்க,

“என்னையேவா அடிக்க வர” என்ற மாணிக்கம் ஓங்கி அறைந்திருந்தான் ரவியின் கன்னத்தில்.
தன்னைத் திருப்பி அடிக்க வந்த ரவியின் கையைத் தடுத்து பிடித்து அவன் வயிற்றில் ஒரு குத்து விட்டிருந்தான். வலி தாங்காது சுருண்டு விழுந்தான் ரவி.

சுத்தி நிகழும் நிகழ்வுகள் எதுவும் மலரின் கருத்தில் பதியவில்லை. அவளின் கருத்தை முழுவதாய் நிறைத்திருந்தது அவளது அப்பா மட்டுமே. அவரை எண்ணி கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

மாணிக்கத்தின் கையைப் பற்றிய மலர் விசும்பும் குரலில், ” மாணிக்கம், நான் இப்பவே ஊருக்கு போகனும். அப்பாவை பார்க்கனும். ஏற்பாடு பண்றீங்களா ப்ளீஸ்” தனது மன தைரியத்தை முற்றாய் துறந்து அழுதிருந்தாள் மலர்.

மலரின் அழுகையில் மாணிக்கத்தின் கண்களும் கலங்கியது.

இந்தக் கலவரத்தில் பயந்த கண்ணம்மா ஆயாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவரை ஒட்டி நின்றிருக்க, கண்ணா அறையினுள்ளே எட்டி பார்த்திருந்தான்.

மலர் அழுவதைப் பார்த்து ஓடி சென்று அவளின் கண்களைத் துடைத்திருந்தான்.

நொடிப் பொழுதில் நடந்த இந்தச் சண்டை நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள், காவலாளிகள், மருத்துவர்கள் என அனைவரும் வந்து சூழ்ந்து கொள்ள அந்த மருத்துவமனையை விட்டு வெளி செல்லுமாறு கூறி அனைவரையும் வெளியேற்றினர். ரவிக்கு மருத்துவம் பார்க்கவும் முடியாதென விரட்டிருந்தனர் அவர்கள்.

மலர், பிள்ளைகள் மற்றும் ஆயாவென அனைவரையுமே தனது ஆட்டோவிலேயே அழைத்துச் சென்று மலரின் வீட்டில் இறக்கி விட்டவன்,
“ஆயா மலர் மேடமை முதல்ல சாப்பிட வைங்க! பசங்கள நான் ஸ்கூல்லயே சாப்பிட வச்சிட்டேன்! நீங்களும் மலரும் சாப்பிட்டு ஊருக்குப் போகத் துணிமணிலாம் எடுத்து வைங்க” என்றவன் கூறியதும்,

“நானுமா?” எனக் கேட்டார் ஆயா.

“ஆமா ஆயா! இந்த நிலைமைல அவங்களைத் தனியா பஸ்சுல பசங்களோட அனுப்புறது சரினு படலை” என்றவன் கூறவும்,

“காலேஜ் ஹாஸ்ட்டல்ல தங்கி படிக்கிற என் பேரன் நாளைக்கு என்னைய பார்க்க வர்றதா சொல்லிருக்கான்ப்பா! அவன் வரும் போது நான் இல்லாம போய்ட்டேனா பிள்ளை வாடி போய்டும்! ஒழுங்கா சாப்பிட மாட்டான். வாரத்துல ஒரு நாள் என்னைய வந்து அவன் பார்க்கிறது தான் அவனோட சந்தோஷமே என்னோட சந்தோஷமும் தான்” என்ற ஆயா,

“நீயே கூடப் போய்ட்டு வாயேன்” என்றார்.

“நானாஆஆஆ?” என இழுத்தவன்,
“நான் முதல்ல போய் இன்னிக்கு நைட் பஸ்சுக்கு டிக்கெட் இருக்கானு பார்க்கேன். அவங்களை முதல்ல சாப்பிட வை ஆயா” எனக் கூறி சிட்டாய் பறந்து விட்டான்.

மாணிக்கம் தனக்குத் தெரிந்த பேருந்து ஓட்டுனர் மூலம் பயணச்சீட்டினை ஏற்பாடு செய்தான்.

அன்றைய நாளின் இறுதி பேருந்தான இரவு பதினொரு மணிக்குப் புறப்படும் பேருந்தில் தான் பயணச்சீட்டுக் கிடைத்தது.

வீட்டிற்கு வந்து மலரிடம், பயணச்சீட்டை காண்பித்துக் கிளம்பப் பணித்தான்.
அழுது அழுது முகம் வாடி போய் இருந்தது அவளுக்கு.

“மேடம் நீங்க தனியா போக வேண்டாம்! நானும் கூட வரேன்! பிள்ளைகளைப் பார்த்துக்கிறதுக்கு நானும் வந்தா தான் சரியா இருக்கும்” தயங்கி தயங்கி அவன் கூற,

அவள் ஏதும் கூறாது பயணச்சீட்டை பெற்றுக் கொண்டு சரியெனத் தலை அசைத்தாள். பிள்ளைகள் மீதும் கூட அவளின் கவனம் இல்லை. அவளின் மனமெல்லாம் தந்தையைச் சென்று காணும் நொடிகளுக்காகத் தவமிருந்தது.

பேருந்து ஏறியதும், ஒரு பெண்ணின் அருகே இருந்த இருக்கையில் மலரை அமர செய்து, அதன் பின்னிருந்த இருக்கையின் ஒன்றில் அவனமர்ந்து மடியில் கண்ணம்மாவை இருத்தி கொண்டான். அருகில் கண்ணாவை அமர்த்தியிருந்தான்.

தனது இருக்கையைச் சற்று பின்னோக்கி சாய்த்து சாய்ந்து கொண்டவன், கண்ணம்மாவை தன் மீது போட்டுக் கொள்ள, அவன் நெஞ்சின் மீது சாய்ந்து சுகமாய் உறங்கியிருந்தாள் கண்ணம்மா.

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் – அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

ஓட்டினரின் கை தவறி பேருந்தின் ஒலிபெட்டியில் பட்டு இந்தப் பாட்டு தற்செயலாய் ஒலிக்க, அவனின் கண்ணம்மாவை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டான்.

தந்தைக்கும் தாயமுதம்
சுரந்ததம்மா என் தங்கத்தை
மார்ப்போடு அணைக்கையிலே

அவ்வரிகளை போல் ஆணிலுள்ள தாய்மையை அவன் உணர்ந்த தருணமது.

மறுநாள் காலை ஊரை அடைந்ததும் மலருக்கும் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து உண்ண வைத்து விட்டே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

மலரின் தந்தை ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டதாய் உரைத்த அவளின் அன்னை, அவளின் கையில் அவள் தந்தை எழுதியதாய் கூறி ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

அவருக்கு லேசாய் வலி வந்த போதே, தன்னுயிர் பிரிந்திடுமோ என்ற எண்ணம் அவரைச் சூழவும், தன்னுயிர் பிரிந்த போதினும் தான் கூற வந்த செய்தி மகளைச் சென்றடைய வேண்டுமென எண்ணி இக்கடிதத்தை எழுதியிருந்தார் அவர்.

மருத்துவமனையின் அறையிலிருந்த தந்தையைப் பார்த்த பிறகே சற்று ஆசுவாசமானாள் மலர்.

அறை விட்டு வெளி வந்து நாற்காலியில் அமர்ந்தவள், அக்கடிதத்தைப் பிரித்தாள்.

அவள் இங்குக் கடிதத்தைப் பிரித்திருக்க, அங்குப் பிள்ளைகளுடன் மலரின் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

அன்புள்ள மகளுக்கு,

உன் வீட்டுல பஞ்சாயத்து பேசின அந்தப் பெரியவர் என்னை வந்து பார்த்தார்மா. அங்க நடந்ததெல்லாம் சொன்னாரு. அந்த ரவி தான் இவரை அனுப்பி வச்சிருந்தான். என் பொண்ணு விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போடுறதுக்கு என்னையவே தூதா அனுப்ப முடிவு செஞ்சி அவரை என்கிட்ட பேச அனுப்பிருக்கான்.
உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனேனு மனசு துடிச்சி போச்சுமா. ஆனா என் மகளை நான் இப்படி வளர்க்கலயே! யாரையும் நம்பி இருக்காம அவ சொந்த கால்ல நிற்கிற மாதிரி தானே வளர்த்தேன்! அப்படி வளர்த்திட்டு அந்தக் காலை என் கூடவே பாசங்கிற கயிறால கட்டி வச்சிட்டேனோ? அதனால தான் அந்தப் படுபாவி உன்னை ஏமாத்திருக்கான்னு தெரிஞ்சும் அவனை விட்டு பிரியாம இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்க… இந்த அப்பாவுக்காக அஞ்சு வருஷம் நரக வாழ்க்கை வாழ்ந்துட்டியேமா! போதும்மா போதும் இப்படி ஒரு புருஷன் உனக்குத் தேவையில்லை. அவன் இல்லாமலேயே நீயும் உன் பிள்ளைகளும் சந்தோஷமா வாழ முடியும். சமுதாயத்துக்காகனு என்னிக்கும் வாழ கூடாது. நம்ம சந்தோஷத்துக்காக வாழனும். அவனை அறுத்து விட்டுடுமா! அப்பா திரும்ப வருவேன். என் மக சந்தோஷமா வாழுறதை பார்க்காம என் உசுரு போகாது! அந்த எமன்கிட்ட போராடி திரும்ப வருவேன். உனக்கு நல் வாழ்க்கை அமைச்சு கொடுக்காம இந்த உசுரு போகாது! இது நான் வணங்குற என் குலசாமி மேல சத்தியம்”

எத்தகைய பாசம் அவருடையது என எண்ணி நெகிழாமல் இருக்க முடியவில்லை. இனி தான் அழ கூடாது என முடிவெடுத்தாள். அடுத்து தான் செய்ய வேண்டியவற்றை ஒவ்வொன்றாய் கணக்கிட்டாள்.

அந்த மருத்துவமனைக்கு வந்த மலரின் தூரத்து உறவினர் மலரின் அன்னையிடம் பேசியவர், பிள்ளைகள் இருவரையும் நோக்கி அவர்களின் பெயர் என்ன என்று கேட்க, கண்ணாவும் கண்ணம்மாவும் கூறிய தங்களது பெயரில், “என்னது இதுவா இவங்க பேரு” என ஆச்சரியமாய்ப் பார்த்திருந்தான் மாணிக்கம்.


இங்கு அகிலனுடன் பேசவென அமர்ந்த ஆதினியின் தந்தை சற்று நேரம் அமைதியாக இருக்க, அகிலனின் மனதில் கிலி பிடித்தது.

“அவங்க அம்மாக்கு இதுல விருப்பமில்லைனு சொல்றதுக்குத் தான் இவ்ளோ தயங்குறோரோ?” மனதில் உண்டான பயத்தினை மறைத்துக் கொண்டு,

“அங்கிள் எதுவானாலும் சொல்லுங்க? ஏன் தயங்குறீங்க? ஆதினி அம்மாக்கு பிடிச்சிருந்தா அடுத்தக் கட்டத்தைப் பத்தி பேசுவோம்… பிடிக்கலைனா அவங்களுக்கு என்னை எப்படிப் பிடிக்க வைக்கிறதுன்றது பத்தி பேசவோம்” அவன் கூற,

வாய்விட்டுச் சிரித்திருந்தார் அவர்.

“அங்கிள் என்ன நடந்தாலும் ஆதினியை என்னால விட்டு தர முடியாது” அவரின் முகம் நோக்கி அவன் கூற,

“ஹ்ம்ம் எங்க வீட்டுல என்ன முடிவு எடுத்திருக்காகனு தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி, நீ ஒரு உண்மையைத் தெரிஞ்சிக்கனும். எங்க குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சிக்கனும்” அவர் கூற,

“என்ன அங்கிள்?” என அவன் கேட்க,

“என் பேரு என்னனு தெரியுமா?” அவர் கேட்க,

“வேலு தானே அங்கிள்” யோசனையாய் அவன் கேட்க,

“எனக்கு இன்னொரு பேரு இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு

“மாணிக்கம்” என்றார்.

— தொடரும்