முள்ளில் பூத்த மலரே – 1​

முள்ளில் பூத்த மலரே 1​

அந்த அந்திமாலைப் பொழுதில் மனநல மருத்துவரின் வீட்டில் அமைக்கப்பெற்ற சிகிச்சையகத்தில் (clinic) அமர்ந்திருந்தான் அகிலன்.

சிறிது நேரத்தில் அவ்விடத்தை வந்தடைந்தனர் ஆதினியும் அவளின் பெற்றோரும்.

ஆதினியின் சுகமறிய அவளை பார்வையால் ஸ்பரிசித்தவன், அவளின் பெற்றோரிடம் நலம் விசாரித்தான்.

அகிலனை அமைதியாய் ஒரு பார்வை பார்த்து விட்டு அமர்ந்திருந்தவள், தனது தந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டு அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.

இரு வாரங்களுக்கு முன்பிருந்த நிலைக்கு தற்போது அவள் அவ்வாறு அவனைப் பார்த்ததே சற்றாய் நிம்மதி அளித்தது அகிலனுக்கு.

மருத்துவரின் கையாள், “மிசஸ். ஆதினி அகிலன்” என அழைக்க,

தனது தந்தையின் தோளிலிருந்து திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் ஆதினி.

அவள் பயந்து அதிர்ந்து நிமிர்ந்ததைப் பார்த்த அவளின் தந்தை, “ஒன்னுமில்லடா பயப்படாத! போ மாப்பிள்ளை கூட போய்ட்டு வா” எனக் கூறவும்,

எழுந்து அகிலன் அருகில் சென்றாள்.

அவளின் கைப்பற்றி அவளது முகத்தினை அவன் பார்க்க, அவனது கையிலிருந்து தனது கையை உறுவவும் முயலாமல், இணைக்கவும் இல்லாமல் அவன் முகத்தை அவள் பார்க்க,

எதையும் உணர்த்தாத அவளின் முக பாவனையில், எதையோ எதிர்ப்பாத்து ஏமாந்தவனாய் மனதின் வலியை தனக்குள் புதைத்துக் கொண்டான்.

“என்னால் தானே! இவளின் இந்த துயரெல்லாம் என்னால் தானே” அவனின் மனம் குற்றவுணர்வில் தத்தளித்து, அவளுக்காய் கவலைப்பட்டுக் கசிந்துருக,

அந்த மனநல மருத்துவர் சிந்தாமணியின் முன் சென்று அமர்ந்தனர் இருவரும்.

மருத்துவருடன் ஒரு மணி நேரம் நிகழ்ந்த கருத்துரை வழங்கலுக்கு(counseling) பின் ஆதினியின் முகம் சற்றாய் தெளிந்திருந்தது.

“ஆதினி நீங்க உங்க ஹஸ்பண்ட் கூட இருப்பீங்க தானே! அவங்க வீட்டுக்கு போவீங்க தானே! இப்ப எந்த பயமும் இல்லையே” என மருத்துவர் கேட்க,

“இல்ல டாக்டர். பயம் இல்ல. அவர் கூட இருப்பேன்” என அவள் மெல்லியதாய் சிரித்து கூறவும் தான், சற்றாய் நிம்மதி வந்தது அகிலனுக்கு.

“தட்ஸ் குட்” என கூறியவர், அவள் நிம்மதியாய் உறங்க சில மாத்திரைகள் மட்டும் தருவதாய் உரைத்து வழங்கினார்.

“டாக்டர் திரும்பவும் இப்படி எதுவும் ஆகாதுல்ல. அவ என்னை யாரோ ஒருத்தர் போல நினைச்சு என்னை விட்டு இத்தனை நாள் ஒதுங்கி இருந்ததுலயே நான் செத்துட்டேன்” என மனம் வலிக்க அவன் கூற,

“பாஸ்ட் இஸ் பாஸ்ட்! திரும்ப அதை பத்தி அவங்க கிட்ட பேசாதீங்க அகிலன். ஜஸ்ட் ஸ்டார்ட் யுவர் ஃலைப் ந்யூலி! ஆல் த பெஸ்ட்” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

வெளி வந்ததும் மருத்துவர் கூறியதை ஆதினியின் தந்தையிடம் உரைத்தவன், “மாமா ஆதுவ நான் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் மாமா! இதுக்கு மேல அவளை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது” கெஞ்சும் பாவனையில் அவரிடம் ஒப்புதல் கேட்டு அவன் நின்றிருக்க,

ஆதினியின் தாய் பதறி வந்து, “அதெல்லாம் வேண்டாம் தம்பி! அவ கொஞ்ச நாள் எங்க கூட இருக்கட்டுமே” என்றவர் கூற,

“ஏன்டா பேபி அப்படி சொல்ற? பாவம்ல மாப்பிள்ளை… அவர் கூட்டிட்டு போகட்டும்! எதுவும் பிரச்சனை ஆச்சுனா நம்ம போய் கூட்டிட்டு வந்துடலாம்” என தன் மனைவியை தேற்றியவர்,

“நீ கூட்டிட்டு போப்பா” என்றார் அகிலனிடம்.

“பயமே கூடாது சரியா! தைரியமா இருக்கனும். ஃலைப்ல எது வந்தாலும் பார்த்துக்கலாம்… அப்பா உனக்கு எப்பவும் கூட இருப்பேன் சரியா” மகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.

அகிலன் தனது இரு சக்கர வாகனத்தில் அவளை பின்னிருக்கையில் தன்னை பிடித்துக் கொள்ளுமாறு கூறி அமர செய்தவன்,

“கண்ணுமா! என்னைய உனக்கு பிடிக்கும் தானே?” அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

“ஹ்ம்ம்” என அவள் தலையையாட்ட,

கண்ணாடி வழியாய் அவளின் தலை அசைத்தலை பார்த்து சற்றாய் சிரித்தவன், “நீ தலை அசைச்சீனா வண்டி ஓட்டுற எனக்கு எப்படி தெரியும்? வாயை திறந்து சொல்லு கண்ணுமா” என்றான்.

“ஹ்ம்ம்… கேட்கலை” வண்டி இரைச்சலில் அவன் பேசுவது அவளுக்கு கேட்காமல் போக,

இதே போல் முன்பு நடந்த நிகழ்வு அவனுக்கு நினைவு வர, அப்போது கூறியது போலவே, “என்னை இறுக்கி அணைச்சு ஒட்டிக்கிட்டு உட்கார்ந்தீனா நல்லா கேட்கும் ஆதுமா” என இவன் கூறிய நொடி,

“ஹான் ஆசை தோசை அப்பளம் வடை! பப்ளிக்கா யாராவது அணைச்சிட்டு உட்காருவாங்களா… நான் மாட்டேன்ப்பா” முன்பு கூறிய அதே வசனத்தை, இவன் கேட்ட நொடி தன்னையும் அறியாது உரைத்திருந்தாள் ஆதினி.

அவளின் பதிலில், “என் கண்ணுமா எனக்கு தான்டா! அவ என்னிக்கும் என்னைய வெறுக்க மாட்டாடா” என எண்ணி மனதிற்குள் குத்தாட்டம் போட்டவன், அவர்கள் வழமையாய் உண்ணும் ஐஸ்க்ரீம் பார்லரில் வண்டியை நிறுத்தினான்.

அவள் ஏன் இங்கு வந்திருக்கிறோம் என்பது போன்று அவனை பார்க்க,

“வாடா ஐஸ்க்ரீம் சாப்பிட்டு போகலாம்” அவன் கூறவும், “இல்ல எனக்கு வேண்டாம்” அவள் கூறவும் அவன் முகம் சுருங்கியது.

“எனக்காக ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாமே” கண்ணை சுருக்கி அவள் முகம் பார்த்து பரிதாபமாய் அவன் கேட்க, சரி என தலை அசைத்தாள்

“ஹய்யா” என நிஜமாகவே துள்ளி குதித்தவன், அவளின் கையை பிடித்துக் கொண்டு உள் சென்றான்.

வழமையாய் செல்லும் இடமாதலால் அங்கிருந்த வேலையாளிடம், “எப்பவும் தரதே தாங்கண்ணா” எனக் கூறிவிட்டு, எதிரிலிருந்த தன் மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான்.

“எனக்காக தானே இப்ப என்னைய இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க” அவள் அவனை கேட்கவும்,

“என் பொண்டாட்டி என்கிட்ட பேசிட்டா” என எழுந்து நின்று அவன் கத்த,

“அய்யோ மானத்த வாங்காதீங்க! உட்காருங்க” அவனது சட்டையை இழுத்துப் பிடித்து உட்கார வைத்தாள்.

அவளின் கையை பிடித்து கொண்டவன், “நீ என் கிட்ட பேசி ஒன்றரை மாசம் ஆகுது ஆதுமா! நீ என்னைப் பார்த்து பயந்த ஒவ்வொரு நேரமும் நான் செத்துட்டேன்! புருஷனா நான் தோத்துட்டேன்! மனசுல அவ்ளோ வலி…. சொல்லவும் முடியாம மெள்ளவும் முடியாம நான் பட்ட கஷ்டமிருக்கே என் எதிரிக்கு கூட அப்படி ஒரு நிலை வரக் கூடாது” கண்ணில் நீருடன் உரைத்தவனின் மனசாட்சியோ, “டாக்டர் உன் கிட்ட என்ன சொன்னாங்க? என்ன செஞ்சிட்டிருக்க நீ” என இடித்துரைக்க,

“அய்யோ ஆமா பழசை பேச கூடாதுனு சொன்னாங்கல்ல” தன்னை தானே தேற்றிக் கொண்டு அவன் அடுத்து பேசும் முன் ஐஸ்க்ரீமை அவர்களின் மேஜை நோக்கி கொண்டு வந்திருந்தார் அந்த வேலையாள்.

ஆதினியின் முன்பு மட்டும் ஐஸ்க்ரீமை வைத்தாரவர். இதுவும் வழமையான செயல்.
அவள் என்ன செய்கிறாளென அவளையே அவன் பார்த்திருக்க, ஐஸ்க்ரீம் கரைந்து அவளது வாயினுள் சென்று கொண்டிருக்க, கடைசி இரண்டு வாய் ஐஸ்க்ரீம் மீதமிருக்கும் போது, அது வரை ஐஸ்க்ரீமை மட்டுமே பார்த்திருந்தவள், சற்றாய் நிமிர்ந்து அவனை பார்த்தவள், அந்த ஐஸ்க்ரீம் கப்பை அவனை நோக்கி தள்ளி வைத்தாள்.

“ஹப்பா” என பெருமூச்சு விட்டவன், ஒரு வாய் சாப்பிட்டு விட்டு மீதமுள்ளதை வெகு மகிழ்வாய் அவளுக்கு ஊட்டி விட்டான். அவளும் சிரித்துக் கொண்டே வாங்கி கொண்டாள்.

அதன் பின் இருவரும் வீட்டை அடைந்ததும், அவளின் அத்தையும் மாமாவும் அவளிடம் நலம் விசாரித்தனர்.

இருவரும் தன்னிடம் எவ்விதம் நடந்து கொள்வார்களோ என்கின்ற பயம் ஆதினிக்கு இருந்தது. ஆனால் அவள் உள்நுழைந்ததும், “இனி உன் கிட்ட ஏட்டிக்கு போட்டியா பேசி சண்டை போட மாட்டேன்மா” என்று அவளின் அத்தை கூறியதே அவளின் பயத்தை வெகுவாய் மட்டுபட செய்தது.

சற்று நேரம் அத்தையிடம் அவள் பேசி கொண்டிருக்க, ஆதினி வீட்டினுள் நுழைந்த நொடியிலிருந்து அவனின் கவனம் முழுவதும் அவள் மீதே தான் இருந்தது.

“அம்மா அவ மாத்திரை சாப்பிடனும். சீக்கிரம் சாப்பிட ஏதாவது கொடுங்க! சாப்பிட்டுட்டு தூங்கட்டும்” அகிலன் உரைக்க, அவளுக்கு தோசை ஊற்றி கொடுத்தாரவர்.

அவளுக்கு மாத்திரை எடுத்து கொடுத்த அகிலன், “நீ போய் தூங்கு ஆதுமா! நான் ஃபோன் பேசிட்டு வரேன்” எனக் கூறி வெளியே சென்றான்.

ஆதினியின் தாய் தந்தைக்கு அழைத்து வீட்டிற்கு வந்து சேர்ந்ததையும் ஆதினியின் நலத்தையும் கூறியவன் கைபேசியின் அழைப்பை அணைக்கப் போன நொடி, “அகி ஒரு நிமிஷம்! ஃபோனை வச்சிடாத” எனக் கூறினார் ஆதினியின் தந்தை.

“இல்ல மாமா! ஃபோனை வைக்கலை சொல்லுங்க” என அகிலன் கூறியதும்,

“பொம்முமாவோட அண்ணன் உன் மேல ரொம்ப கோபமா இருக்கான். நல்லவேளை அவன் வெளிநாட்டுல இருக்கான். அவன் இங்க மட்டும் இருந்திருந்தா உன்னை ஒரு வழி பண்ணிருப்பான்! உன் மேல பெரிசா தப்பில்லைனு அவனுக்கு புரிஞ்சாலும் தங்கச்சி மேலுள்ள பாசம் அவன் கண்ணை மறைக்குது! அவனுக்கு ஃபோன் பண்ணி பேசுடா அகி” என்றார் அவர்.

அவரின் கூற்றில் வாய்விட்டு சிரித்தவன், “என் நண்பன் என்னை அடிச்சா கூட வாங்கிப்பேன் மாமா! நான் பார்த்துக்கிறேன் மாமா… நீங்க கவலைப்படாதீங்க” என்றவன் கூற,

“உன் இடத்துல வேறொரு பையன் இருந்திருந்தா…. அவன் என் மகளோட நிலைமையை புரிஞ்சிருப்பானானு எனக்கு தெரியலை” சற்று பெருமூச்சு விட்டவர்,

“கடவுள் அருளால் அவளுக்கு எல்லாமே நல்லதா தான் நடந்துட்டு இருக்கு! இனியும் அப்படித் தான் நடக்கனும்” என மனதார கடவுளை வேண்டிக் கொண்டு அவர் கூற,

“என் கண்ணுமாவ நான் கண்ணுல வச்சி பார்த்துப்பேன் மாமா! அவளை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உங்களுக்கு தெரியும் தானே! அப்புறம் ஏன் இந்த பயம்? நான் பார்த்துக்கிறேன் மாமா… நீங்களும் அத்தையும் கவலைப்படாம இருங்க” அவருக்கு ஆறுதல் மொழி உரைத்தான்.

பின் வீட்டிற்கு வந்து ஆதினி வரவேற்பரையில் இல்லாததை பார்த்து படுக்கையறை சென்று பார்த்தான். அங்கு விட்டத்தை நோக்கி படுத்திருந்தாள் ஆதினி.

படுக்கையறை கதவினை சாத்திவிட்டு உள் வந்தவன், விழித்திருந்த ஆதினியை பார்த்து, “தூக்கம் வரலையா கண்ணுமா” எனக் கேட்டான்.

அவனின் குரலில், அவனை நோக்கி திரும்பியவள், வழமையாய் செய்யும் செயலாய் தனது இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டி அழைத்தாள்.

மனம் நிறைந்த சிரிப்புடன், அவளை நோக்கி சென்றவன் அவளருகில் சாய்வாய் அமர்ந்து, அவளை தன் கைவளைக்குள் வைத்துக் கொண்டான்.

அவனின் மார்பில் சாய்ந்திருந்தவள், அன்னை மடி சேர்ந்த கன்றாய் நிம்மதியாய் நித்திரை கொண்டாள்.

மனதின் பாரம் துக்கம் வேதனை அனைத்தும் தன்னை விட்டு வெகு தொலைவு ஓடிப் போனதாய் உணர்ந்தான் அகிலன்.

—————-

20 வருடங்களுக்கு முன்பு….

திசை மாறா பறவை, நேசமணி என விதவிதமாய் வெளியூர் செல்லும் இரவு பேருந்துக்கு பெயர் வைத்திருந்தது தமிழக அரசு.

இப்பொழுது போல் நெடுஞ்சாலைகள் இல்லை அக்காலத்தில்.

அவரவர் ஊருக்கு பல ஊரினுள்ளே பயணம் சென்று தான் தங்களது சொந்த ஊரை அடைய முடியும்.

திசை மாறா பறவை எனும் அப்பேருந்து நெல்லைக்கு பயணமாகி கொண்டிருந்தது.

மணி நள்ளிரவை தாண்டிய நிலையில் அப்பேருந்து மிதமான வேகத்தில் சாலையில் பயணித்திருக்க, அதனுள் அமர்ந்திருந்தாள் பொன்மலர்.

பொன்மலர் அருகே வேறோர் பெண் பயணி அமர்ந்திருக்க, அவளின் பின்னிருக்கையில் இரு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

பொன்மலரின் பின்னே அமர்ந்திருந்தவன், அவளின் தலை சாய்ப்பது போல் சாய்ந்திருந்து இருக்கையினிடையில் தெரிந்த பொன்மலரின் இடையை தொட முற்பட, அக்கயவனின் அருகில் அமர்ந்திருந்த மாணிக்க வேல் அவனை அடிக்க எத்தனித்த சமயம்,

இருக்கையில் இருந்து பின்னோக்கி திரும்பிய பொன்மலர், அக்கயவனின் தலை முடியை பற்றி கன்னத்தில் பளார் பளாரென அறைந்திருந்தாள்.

“பொறுக்கி ராஸ்கல்! நானும் தெரியாம தான் கை படுதோனு பார்த்துட்டே இருந்தா… கையை உடைச்சு வீசிடுவேன்! ஜாக்கிரதை” காளி உருவாய் மாறி அவனை அவள் வதக்கி கொண்டிருக்க,

“நானும் வந்ததுலருந்து பார்க்கிறேங்க இவன் ஆளும் முழுயும் பார்க்கிற பார்வையும் எதுவுமே சரியில்லைனு நோட்டம் பார்த்துட்டே தான் இருந்தேன். நானே அவனை அடிக்கனும் நினைச்சேங்க! நீங்களே தைரியமா அடிச்சிட்டீங்க!” அவனருகில் அமர்ந்திருந்த மாணிக்கவேல் கூற,

மாணிக்கத்தை முறைப்பாய் ஓர் பார்வை பார்த்தவள், “என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும். பொண்ணுக்கு பிரச்சனைனா ஆபத்பாண்டவனா ஓடி வந்துடுவீங்களே” கூறி விட்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்.

நன்றாய் தூக்கத்திலிருந்த அனைவரும் விழித்து அக்கயவனை வார்த்தையால் வறுத்ததெடுத்து மீண்டும் உறங்கிப்போயினர்.

விடியற்காலை நான்கு மணியளவில் நெல்லை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது அந்த பேருந்து.

அனைவரும் இறங்கி விட்டு அவரவர் ஊர் செல்லும் உள்ளூர் பேருந்தினை பிடித்து செல்ல, பொன்மலரோ அங்கேயே ஓர் அமர்விடத்தில் அமர்ந்து விட்டாள்.

நேர்த்தியாய் கட்டிய புடவையும், நீளமான பின்னிய அடர்ந்த கூந்தலும், இடது கையில் கடிகாரமும், படித்த பெண்ணின் கலையும் சேர்ந்து அவளது முகத்தினில் வெளிப்பட, அவளை பார்த்து நின்றிருந்த மாணிக்கவேலிற்கு அவளுக்கு ஏதேனும் வந்திடுமோ என்றோர் அச்சம் ஆட்கொண்டது.

அவளிடம் சென்றவர், “நீங்க எங்க போகனும்ங்க! நான் என் நண்பனோட ஆட்டோல தான் போக போறேன், போற வழியா இருந்தா உங்களை இறக்கி விடுறேன்! நீங்க சண்டை போட்ட ஆளால உங்களுக்கு எதுவும் பிரச்சனை வந்துடுமோனு பயமா இருக்கு” என பொன்மலரிடம் கூறிக் கொண்டிருக்க,

மாணிக்கத்தை மேலும் கீழுமாய் பார்த்தாள். நெடு உயரமாய் அடர் மீசையும் கரு நிறமுமாய் அவ்வூர் மக்களின் முக ஜாடையுடன் இருந்ததை பார்த்ததும் , “பஸ்ல இருட்டுல அவளோவா முகம் தெரியலை. இப்ப பார்க்கிறப்ப இவரை எங்கயோ பார்த்த மாதிரி தெரியுதே!” என மனதில் எண்ணிக் கொண்ட மலர்,

“ஒரு பொண்ணு தனியா இருந்துட கூடாதே! உடனே கடலை போடுறதுக்கு சான்ஸ் தேடி வந்து பேசுறது. என்னைய காப்பாத்திக்க எனக்கு தெரியும். அவனால எனக்கு பிரச்சனை வந்தாலும் அவனை சாகடிக்காம நான் சாக மாட்டேன்! அதனால நீங்க கவலைபடாம போங்க” எனக் கூறி மாணிக்கத்தை அனுப்பி வைத்தாள்.

தன் நண்பனின் ஆட்டோவில் பயணித்திருந்த மாணிக்கத்திற்கு மலரின் மீது துளியளவும் கோபமில்லை. மாறாய் அவளின் துணிச்சலை எண்ணி மனம் வெகுவாய் வியந்து ரசித்திருந்தது.

“என்ன இருந்தாலும் நம்ம ஊரு பொண்ணுல! அந்த துணிச்சல் இருக்கத் தானே செய்யும்” என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டான்.

—தொடரும்​