முன்பே காணாதது ஏனடா(டி) – 11

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மகாவின்  வாய்மொழி உதிர்ந்த வார்த்தைகள் செழியனின் மனதில் அமிலத்தை பொழிந்துவிட்டது. அதன் வெளிப்பாடாக கண்களில் கண்ணீர் வழிய தொடங்க அவசரமாக துடைத்துக் கொண்டான்.

அவன் இதனை துளியும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை வருடங்களாக தன் மனதில் மனைவி என்ற இடத்தை பற்றிய அவனது அம்மு தன் அண்ணன் மனைவியாகவா? என்ற நினைப்பே அவனை உயிருடன் எரித்தது.

வள்ளியோ “மகா என்ன பேசுற நீ.. “

மகா, ” என்னாச்சு கா… “

வள்ளி, “எனக்கு இதுல விருப்பம் இல்ல “

மகா, ” ஏன் அப்படி சொல்றீங்க அக்கா நர்மதா ரொம்ப நல்ல பொண்ணு “

ரத்தினம் தன் மனைவியின் வார்த்தைக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தார். மேலும் வள்ளி எப்பொழுதும் ரத்தினத்திடம் நர்மதாவை பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருப்பார். ஆனால் தற்போது அவரின் மறுப்பிற்கான காரணம் விளங்கவில்லை. அதற்கு காரணம் அக்குடும்பத்தின் இளைய மகனின் மனதில் இருக்கும் விருப்பமே என்று ரத்தினத்திற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்படியாவது இத்திருமண பேச்சை நிறுத்த வேண்டும் செழியன் மனது காயப்படுத்த கூடாது என்ற நோக்கத்தில் இருந்த வள்ளி வார்த்தைகளை விட்டுவிட்டார்.

வள்ளி, “என் புள்ள வாழ்க்கையில எது நல்லதுனு முடிவு எடுக்க எனக்கு உரிமையில்லையா “

கதிரை உயிரேன எண்ணி வளர்த்த மகாவிற்கு வள்ளியின் வார்த்தையை தாங்கி கொள்ள இயலவில்லை. நெஞ்சின் ஓரம் ஏதோ சுருக்கென்று தைத்தது.

மகா, ” என்ன வார்த்தை அக்கா என் புள்ள உன் புள்ளனு …” கடைசி வார்த்தை பேசும் போதே அழுகை வருவது போல் இருந்தது முயன்று கட்டுபடுத்தி கொண்டார்.

வள்ளி கதிரிடம் சென்று ” டேய் கதிர் நீ சொல்லு நர்மதா மேல உனக்கு எதுவும் அபிப்ராயம் இருக்கா”

இக்கேள்வியை கேட்ட உடன் செழியனின் மனம் அதி வேகத்தில் துடித்தது. தன் அண்ணன் வாயில் இருந்து வரப்போகும் பதிலை எதிர் நோக்கி காத்திருந்தவன் தன் கண்களை இறுக மூடி திரும்பி நின்று கொண்டான்.

கதிர், “எனக்கு நர்மதா மேல எந்த அபிப்ராயமும் இல்ல அம்மா. ஆனா.. “

அதற்கு மேல் அவனை பேச விடவில்லை அவனின் தாய். எங்கே அவன் மேற்கொண்டு பேசினால் திருமணம் உறுதி ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவனது பேச்சை இடை வெட்டி மகாவின் புறம் திரும்பிய வள்ளி, ” கேட்டல மகா எம்புள்ள சொன்னத “

கண்களை திறந்த செழியனின் மனம் அப்பொழுது தான் நிம்மதி அடைந்தது.  எங்கே தன் தமயன் நர்மதாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லிவிடுவானோ என்று மனம் அமைதி இல்லாமல் துடித்தது அச்சில கணத்திலே.

வள்ளி, “இதோபாரு மகா அவனுக்கு நர்மதா மேல எந்த அபிப்ராயமும் இல்ல அதோட நம்ம செழி..  “

 ” புரிஞ்சு போச்சு உங்கபுள்ள வாழ்க்கையில மூக்க நுழைக்காதனு சொல்றீங்க அதான “

 ” மகா நா அப்படி சொல்லல “

 “வேற எப்படி சொல்லவறீங்க அக்கா. என்னதான் இருந்தாலும் நான் அந்நியம் தானே”

வள்ளி,”அப்படி எல்லாம் இல்ல மகா நான் உன்னை சொந்த தங்கச்சியா தான் பார்க்கிறேன்”

மகா, “அதான் நீங்க பேசுறதுலே தெரியுது உங்க லட்சணம்”

செழியன் ,”அம்மா போதும் வார்த்தையை அளந்து பேசு”

“நான் என்னடா தப்பா சொன்னேன் அவங்க தான் வாய்க்கு வாய்க்கு என் புள்ள என் புள்ள ன்னு சொல்றாங்க”

சந்திரன் ,”மகா தேவை இல்லாத பேச்சு பேசாத நீ மொத உள்ள போ “

மகா, ” என்னையே எல்லாரும் கேள்வி கேக்குறீங்க முதல்ல பிரிச்சு பேசினது அவங்க. ஆனா திட்டு மட்டும் எனக்கா “

என்று கூறிவிட்டு அறையினுள் சென்று விட்டார்.

மகாவிற்கு மிகுந்த வருத்தம் ‘தான் என்ன தவறாக கூறினேன் தன் பெறாத மகனின் நல்வாழ்விற்காக கூறியது தவறா? தன் தம்பியின் மகள் தன் வீட்டு மருமகளாக வரவேண்டும் என்று ஆசை கொண்டது தவறா?’ என்று  பெரும் ஆலோசனைக்குள் சென்றார்.

ஆனால் ஒன்றை மறந்து விட்டார் தனக்கு இன்னொரு மகன்  இருக்கிறான் அவனுக்கு திருமணம் செய்து  வைத்தாலும் அவள் தன் வீட்டு மருமகளே என்பதை. அவர் மறந்துவிட்டார் என்று கூறுவதை விட அவருக்கு அப்படி ஒரு எண்ணம் துளியும் இல்லை என்பதே உண்மை.

இங்கு வள்ளி உடனடியாக தனது பிறந்த வீட்டாரிடம் தொடர்பு கொண்டு என்றோ ஒரு நாள் கதிருக்காக அவர்கள் கூறிய  மஞ்சுளா எனும் பெண்ணின் ஜாதகத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்.

அன்று திருமணத்திற்கு என்ன அவசரம் என்றும் அதனைக் கிடப்பில் போட்டவர் தங்கள்  வீட்டின் செல்ல மகன் செழியன் வாழ்விற்கு இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்திலும் மேலும் கதிரின் மனம் அறிந்தபின் உடனடியாக அவனுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்

செழியனை பற்றி மகாவிற்கு சொல்ல முயற்சிக்கும்போது அவள் அதனை கண்டு கொள்ளவில்லை மேலும் அனைவரிடமிருந்தும் விலகியே இருந்தார்.

கதிர் மஞ்சளாவின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தது.

மகா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவரது அமைதி அனைவரையும் அச்சுறுத்தியது.

திருமணமும் முடிந்து அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அனைவரும் முன்பும் வந்து நின்றார். அவரது மகள் அருள்மொழியும் அழுது கொண்டே அவர் அருகில் நின்றிருந்தாள்.

சுதாகரன், “செழியா இங்க என்னடா பண்ற “

அதுவரை கடந்த காலத்தை பற்றி எண்ணி கொண்டிருந்த செழியன் தன் அருகில் இருக்கும் நண்பனின் குரலில் அவனை பார்த்து ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு மீண்டும் அருவியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

…………..

கோவில் குளக்கரையில் இருந்து எடுத்து வந்த நீரினை கடவுள் அபிஷேகத்திற்கு கொடுத்துவிட்டு சோர்வாக வந்த மைத்ரியின் கையில் இருந்த குடத்தை வாங்கி கீழே வைத்தார் சுந்தரி.

அவளை அருகில் இருந்த திண்டில் அமர வைத்த மாரி அவளின் தலையை துண்டால் துடைத்துவிட்டார். தனது வாழ்க்கையில் வரிசையாக நடக்கும் நல்லதை எண்ணி பூரித்து போனாள் மைத்ரி.

இதுவரை தனக்கென யோசிக்க எவரும் இல்லை என வருந்தி கொண்டிருந்தவளுக்கு இன்று தனக்காக யோசிக்கும் இரு ஜுவன்களை எண்ணி அவள் அடைந்த ஆனந்ததிற்கும் நிம்மதிக்கும் அளவே இல்லை.

………..

அன்று பிரதோஷ தினத்தன்று காதலை சொல்ல காத்திருந்த குமரன் மற்றும் நர்மதா இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் தங்களது விருப்பத்தை  சொல்ல முடியவில்லை.

கேண்டினில் அமர்ந்திருந்த நர்மதாவின் அருகில் வந்த குமரன் ஒரு புன் சிரிப்பை அவளுக்கு வழங்கிவிட்டு தனது பையில் இருந்து உணவினை எடுத்து வெளியே வைத்தான்.

நர்மதா ,”குமரன் சார் இன்னைக்கு என்ன லன்ச்”

குமரன், “இன்னைக்கு கர்ட் ரைஸ் ஊறுகாய்”

நர்மதா, “எப்பவும் வகை வகையா கொண்டு வருவிங்க இப்போலாம் ரொம்ப டல்லடிக்குது என்னவோ”

“அத ஏன் கேக்குறீங்க மேடம் இப்போலாம் எங்க வீடே கோவில்ல தான் குடி இருக்காங்க.”

“புரியல…..”

“அட போங்க எப்போ பார்த்தாலும் கோவில் கோவிலா சுத்துறாங்க. இன்னைக்கு கூட நாழு மணிக்கே எழுந்து போய்ட்டாங்க. அதா நானும் என் தங்கச்சியும் சேர்ந்து காலைல டிபன் மதியம் லன்ச் செஞ்சோம். தம்பி பாத்திரம் விலக்கி மத்த வேலைய பாத்துகிட்டான்.”

“என்ன.. சமையல், வீட்டு வேலையெல்லாம் பாத்திங்களா…  எங்க வீட்டுல எங்க அப்பாக்கு சமையல் அறை எந்த பக்கம் இருக்குனு கூட தெரியாது. அதனால இன்னைக்கு உங்க சாப்பாடுதா சாப்பிட போறேன் குடுங்க இங்க…” என்று அவனது உணவை வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

……..

மகா, “என்னங்க நம்ம மொழிக்கு வரன் வந்து இருக்குனு சொன்னீங்க “

சந்திரன்,  “ஆமா மகா அது சம்பந்தமா தான் இப்போ வெளிய கிளம்பிட்டு இருக்கேன் வந்து உனக்கு விவரம் சொல்றேன். “

மகா, “சரிங்க… “

தொடரும்…