மாய உணர்வுகள் – 9

Epi 9

“என்னது பைத்தியக்கார டாக்டரா! அய்யோ என் புருஷனுக்கு ஏதோ பெரிய மனநிலை பிரச்சனை இருக்கா அக்கா?” என பதட்டமாய் கேட்டாள் தனலட்சுமி. 

அவளின் கேள்வியில் வாய் விட்டு சிரித்த பார்வதி, “புருஷன் மேல எம்பூட்டு பாசம்” என அவளை பார்த்து குறும்பாய் கண் சிமிட்ட,

“அட போங்கக்கா கொஞ்ச நேரத்துல எனக்கு மினி ஹார்ட் அட்டாக்கே வர வச்சிட்டீங்க”  என்ற ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டாள் தனலட்சுமி.

“ஷ்யாம் என் ஹஸ்பண்ட்டோட ஸ்கூல் ஃப்ரண்ட்! ஹீ இஸ் எ சைக்கார்ட்டிஸ்ட்!  உன் புருஷன் இரண்டு வாரமா மந்திரிச்சு விட்ட மாதிரியே சுத்துறானேனு அங்க கூட்டிட்டு போய் விட்டேன். ஷ்யாம் அவன் கூட கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு இன்னிக்கு இந்த ஒன் மேன் ஸ்பீச் ஷோக்கு வர சொல்லிட்டான்” என்று நடந்ததை விவரித்தாள் பார்வதி.

‘ஓ அதான் நேத்து அவர்கிட்ட அவ்ளோ சேஞ்சஸ்ஸா! என்னிக்கும் இல்லாம கொஞ்சுறாரேனு அதை வச்சு வேற தப்பு தப்பா நினைச்சிட்டேனே! அப்படி என்ன இந்த டாக்டர் அவருக்கு சொல்லிருப்பாரு’ என எண்ணியவாறு அமர்ந்திருக்க,

அந்நேரம் பார்வதிக்கு கைபேசி அழைப்பு வர, உள்ளே சிக்னல் கிடைக்காமல் போக, வெளியே சென்று பேசுவதாக தனலட்சுமியிடம் செய்கை செய்து அரங்கினை விட்டு வெளியே சென்றாள் பார்வதி. 

‘கார்த்திக்கிட்ட என்ன சொல்லலாம்? அவரோட வீட்டு அட்ரஸ் வாங்கி அவர் வீட்டுக்கே கொரியர் செஞ்சி விட்டுடுவோமா? ஆனா நாளைக்கு  தானே அவர் பர்த்டே! பர்த் டே அன்னிக்கு போய் சேராதே” என யோசித்தவாறு அமர்ந்திருந்தாள்.

மேடையை பார்த்தவளுக்கு அது ஏதோ சொற்பொழிவு நிகழ்ச்சி போன்று தோன்றியது. 

தனலட்சுமியின் பார்வை அந்த மேடையில் இருந்த பேனரில் பதிந்தது.  அதில் “Relationship Secrets” என்று எழுதப்பட்டிருந்தது.  அதுக்குறித்தான சொற்பொழிவும் கலந்துரையாடலும் தான் இந்த நிகழ்ச்சி என புரிந்தது. 

ஷ்யாம் கையில் மைக்குடன் அங்குமிங்கும் நடந்தவாறு தனது சொற்பொழிவை ஆரம்பிக்க, சுந்தர், பார்வதி, ராஜராஜன் என அனைவரும் வந்து அவளருகில் அமர்ந்து கொண்டனர். 

“உடல்நலம் பேணுவது போல் மனநலம் பேணுவதும் ரொம்ப முக்கியம்! எப்படி உடம்புக்கு ஒவ்வாத உணவுகள் நடவடிக்கைகள்னு இருக்கோ அதே மாதிரி மனசுக்கும் இருக்கு”

“சிலருக்கு கத்திரிக்காய் பிடிக்காது. அதை சாப்பிட்டா உடம்புல பிரச்சனை வரும்.  அது தெரிஞ்சப்பிறகு அதை சாப்பிடவே மாட்டாங்க.  அதே போல இது செய்றது தவறுனு நம்ம மனசாட்சி நமக்கு நாம் செய்ற எல்லா விஷயத்துலயும் எது சரி எது தப்புனு நம்மளை கைட் பண்ணிட்டே இருக்கும்.  ஆனா நாம அதை ஃபாலோ செய்யாம ஏறுக்கு மாறாக நடந்துக்கும் போது தான் வாழ்க்கைல பிரச்சனை ஏற்படுது.  அது நம்ம மனசையும் பாதிக்குது. அப்ப நம்ம மனசு சொல்ற பேச்சை கேட்டு நல்வழில நடக்காம போறது நம்ம தவறு தானே!”

புரிந்தார் போல் ஆமென தலையசைத்தவாறு சிந்தனையில் ஆழ்ந்தனர் பெரும்பாலானோர்.

கவுன்சிலிங் தெரபி போல் சென்று கொண்டிருந்த அந்த சொற்பொழிவை நேரம் போனதே தெரியாமல் ஆர்வமாய் கேட்டு கொண்டிருந்தனர் அனைவரும். 

“கல்யாணத்துக்காக உடம்பை குறைக்கிறவங்க நிறைய பேரை பார்த்திருப்பீங்க! கேள்விப்பட்டிருப்பீங்க! ஏன் நீங்களே கூட அதை செஞ்சிருப்பீங்க.  திருமணத்திற்காக உடலை தயார் படுத்துற அளவுக்கு நம்ம மனசை நாம தயார் படுத்துறோமா?” என அடுத்த டாப்பிக்கை ஆரம்பித்தார்.

“மனசை தயார் படுத்துறதுனா என்னனு உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க கேட்போம்”

“அன்பு, காதல், சகிப்புத்தன்மை, பொறுமை” என்று பலர் உரைத்தனர். 

“குட்” என்று நீர் அருந்திவிட்டு இடைவெளி விட்ட ஷ்யாம்,

“நான் இப்ப சொல்ல போறது தான் முக்கியமான ரிலேஷன்ஷிப் சீக்கிரட்ஸ்.  இந்த ஏழு சீக்கிரட்ஸ்ஸையும் நீங்க வாழ்க்கைல கடைப்பிடிச்சீங்கனா உங்க வாழ்க்கை எப்பவுமே லவ்வபிள்லா போகும்! இது வரைக்கும் கடமையேனு வாழ்ந்துட்டு இருந்தாலும் தானா உங்க பார்ட்னர்க்கு உங்க மேல காதல் வந்துடும்! ஆதர்ச தம்பதிகளாக நீங்க மாறிடுவீங்க” என்று கூறி மென்னகை புரிந்தான் ஷ்யாம். 

7 secrets to be a right partner in your relationship.

  1. முதல் சீக்ரெட் என்னன்னா – Listen to your partner. உங்க பார்ட்னர் என்ன சொன்னாலும் காது கொடுத்து கேளுங்க.  ஆண்/பெண் இரண்டு பேருக்குமே தான் சொல்றேன்.  கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா அப்பா பேச்சை கூட காது கொடுத்து கேட்காத பல பேர் இருப்பாங்க.  ஆனாலும் யாரா இருந்தாலும் கல்யாணம்னு ஒன்னு செய்றதா நீங்க முடிவு செஞ்சிட்டீங்கனா, உங்க பார்ட்னர் எது சொன்னாலும் காது கொடுத்து கேட்கனும்ன்ற மனப்பக்குவத்தை கொண்டு வாங்க. 

கண்டிப்பா difference of opinion இருக்கும் அதாவது கருத்து வேறுபாடு இருக்கும். எல்லா மனுஷங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.  ஆசைகள், ரசனைகள், விருப்பங்கள் வேற வேறையா தானே இருக்கும்.  அதை accept பண்ண பழகிக்கோங்க.  அதை வச்சி சண்டை போடாதீங்க.

  1. செகண்ட் சீக்ரெட் என்னன்னா ஃபால்ஸ் (False) கமிட்மெண்ட் கொடுக்க கூடாது! முடியும்னா முடியும் முடியாதுனா முடியாதுனு சொல்லிடுங்க. நோ சொல்றது தப்பே இல்ல. அந்த நேரத்துக்கு  தப்பிக்கிறதுக்காக பொய்யான கமிட்மெண்ட் கொடுக்கிறது தான் தப்பு. 

நீங்க கொடுக்கிற கமிட்மெண்ட் வச்சி அவங்களுக்குள்ள ஒரு expectation டெவலப் ஆகும். அதை நீங்க செய்ய தவறும் போது அவங்களுக்கு எவ்ளோ பெரிய disappointmentஆஆ அது இருக்கும்னு நினைச்சு பாருங்க. அதுக்கு முதல்லயே நோ சொல்லிடலாம் தானே.

  1. மூனாவது – உங்க பார்ட்னருக்கான பிரைவேட் ஸ்பேஸ்ஸை கொடுங்க.  எப்ப பார்த்தாலும் யார்க்கிட்ட பேசின,  என்ன பேசினனு கேள்வி கேட்டு நச்சரிக்காதீங்க.  நீங்க இரண்டு பேரும் பார்ட்னர்ஸ்ஸா உங்க வாழ்க்கையை பகிர்ந்து வாழ்ந்துட்டு இருக்கீங்க. ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா அவங்க வாழ்க்கைனு ஒன்னு இருக்கு தானே! அவங்க வாழ்க்கையை அவங்களை வாழ விடுங்க. அதுக்கான இடைவெளியை கொடுங்க. 

இங்க ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி ஆகனும்.  பிரைவேட் லைப் இருக்கலாம் ஆனா சீக்ரெட் லைப் இருக்க கூடாது.  இரண்டுத்துக்குமான வித்தியாசத்தை நீங்க புரிஞ்சிக்கனும். 

நான் இங்க சீக்ரெட் லைப்னு சொல்றது தவறான ரிலேஷன்சிப்பை இல்ல.  அவர் எனக்கு தம்பி மாதிரி/ தங்கை மாதிரி/ அண்ணன் மாதிரி/ அப்பா வயசுங்க அவருக்குனு சொல்லுவாங்க. அவங்க நிஜமாவே உத்தமர்களா நல்லவங்களாவே இருந்தாலும், எந்த ஒரு ரிலேஷன்சிப்பை உங்க பார்ட்னர்கிட்ட உங்களால செல்ல முடியலையோ அந்த ரிலேஷன்சிப்பை தொடராதீங்க.  அது என்னிக்கா இருந்தாலும் உங்களுக்கு பிரச்சனையை உண்டு பண்ணும். 

அவர் எனக்கு அப்பா மாதிரிங்க ஆனா என் புருஷன்கிட்ட சொன்னா புரிஞ்சிக்க மாட்டாரு.  அந்த பொண்ணு எனக்கு தங்கச்சி மாதிரிங்க ஆனா என் மனைவிக்கிட்ட சொன்ன புரிஞ்சிக்க மாட்டா அதனால சொல்லாம இருக்கேன்னு சொல்றவங்க, அந்த தங்கச்சிக்கிட்டயும் அப்பாக்கிட்டயும் பேசாம இருக்கிறது தான் உங்க வாழ்க்கைக்கு நீங்க செய்ற நல்ல விஷயமா இருக்கும். 

அதையும் தாண்டி அந்த ரிலேஷன்சிப் உங்களுக்கு ரொம்ப முக்கியம்னு தோணுச்சுனா சண்டை வந்தாலும் பரவாயில்லைனு உங்க பார்ட்னர்கிட்ட அந்த ரிலேஷன்சிப் பத்தி சொல்லிடுங்க.  Any relationship that cannot be revealed will give you pain in future. இப்ப நிறைய டைவர்ஸ் ஆகுற காரணமே இப்படி பார்ட்னர்ஸ்கிட்ட சொல்லாத ரிலேஷன்சிப்னால தான் வருது. 

தனலட்சுமிக்கு நெற்றிப் பொட்டில் அடித்து சொன்னது போல் இருந்தது.  தான் எத்தனை பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது அவளுக்கு.  இதற்கு மேல் கணவனிடத்தில் கூறாது கார்த்திக்கிடம் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தனது வாழ்க்கைக்கு தானே வைத்து கொள்ளும் சூனியம் என்பதை உணர்ந்தாள் அவள். 

  1. நாலாவது சீக்ரெட் – உங்க பார்ட்னரை என்னிக்கும் கில்டியா ஃபீல் செய்ய வைக்காதீங்க. கில்டியா உணர்ற இடத்துல மனசு நெருக்கமா உணர முடியாம தடுமாறும் தத்தளிக்கும்.  Don’t ask explanation for mistakes.  ஏதாவது தவறு செய்தாங்கனா சரிப்பா விடுப்பா இல்ல சரிமா விடுமா இனி செய்யாதனு சொல்லிட்டு விட்டுட்டுங்க.  ஏன் இப்படி செஞ்ச, என்ன தைரியம் இருந்தா இப்படி செஞ்சிருப்பனு அவங்களை குற்றவாளியாக்கி கேள்வி கேட்காதீங்க.  இது உங்களுக்குள்ள இருக்க பாண்டிங்கை பிரேக் பண்ணிடும். 
  2. ஐந்தாவது சீக்ரெட் – learn from your last fight/mistake. ஒரு சண்டை வருதுனா கடைசியா போட்ட சண்டையை நினைச்சு பாருங்க.  எதனால் அந்த சண்டை வந்துச்சு அதுல எப்படி நம்ம பார்ட்னரை சமாதானம் செஞ்சோம்னு யோசிங்க. 

பொதுவா பொண்ணுங்கலாம் கோபத்தை வெளிப்படுத்த வாயை மூடிட்டு அமைதியா இருப்பாங்க. நீங்க அமைதியா இருக்கிறது அவரை தவிர்க்கிறீங்கனு காமிக்காது அதுக்கு பதிலா அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.  அதனால சண்டை போடனும்னு தோணுச்சுனா திட்டனும்னு தோணுச்சுனா உடனே செஞ்சு முடிச்சிடுங்க. 

எந்த சண்டையையும் அன்னிக்கு நைட் பெட்ல  படுக்கும் போது சால்வ் செஞ்சிடுங்க. மறுநாள் வரைக்கும் நீடிக்க விடாதீங்க.

  1. அப்ரிசியேட் யுவர் பார்ட்னர்.  அவங்க எது செஞ்சாலும் உங்களுக்கு பிடிச்சிதுனா உடனே பிடிச்சிருக்குனு சொல்லிடுங்க.  இந்த சாம்பார் அவ எப்பவுமே வைக்கிறது தான்ங்க.  இந்த சட்டை அவர் எப்பவுமே போடுறது தான்ங்க. இதுக்கு போய் எதுக்கு பாராட்டிட்டு இருக்கனும்னு நினைக்காதீங்க. அவங்க உங்களுக்காக வேலை செய்றாங்க.  ஆபிஸ்ல வேலை செய்றவங்களையே பாராட்டும் போதும் ஆயுசுக்கும் கூட இருக்கிறவங்களை பாராட்ட வேண்டாமா! எவ்ளோ முடியுமோ அவ்ளோ பாராட்டுங்க. 
  2. கோபத்தை முடிந்த அளவு குறைச்சிக்கோங்க.  பார்ட்னர்கிட்ட எபப்வுமே கோபமா பேசாதீங்க. எப்பவும் இவள்/இவன் கோபமா தான் பேசுவான்னு உங்க மேல வெறுப்பை ஏற்படுத்தும்.

கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த ஏழு சீக்ரெட்டையும் கடைப்பிடிக்கனும்னு உங்க மனசை தயார்படுத்தினீங்கனா போதும்! கல்யாணத்துக்கு பிறகு வரும் நிறைய சண்டைகளை தவிர்க்கலாம். 

நீங்க இதை தொடர்ந்து கடைப்பிடிச்சீங்கனா, இது உங்க வாழ்வியலா மாறிடும். அதன் பிறகு உங்க வாழ்க்கை முழுதும் அன்பும் காதலும் மட்டுமே சூழ்ந்திருக்கும். 

கோபம் போல தான் நமக்கு வருகிற பிற உணர்வுகளும். கோபத்தை எப்படி நாம கன்ட்ரோல் செய்றோமோ அதே மாதிரி தான் பிற உணர்வுகளையும் கன்ட்ரோல் செய்ய கத்துக்கனும். நமக்கானவர்களை நம் உணர்வுகள் பாதிக்கும் போது அதை நாம கட்டுப்படுத்த தெரிஞ்சிருக்கனும். 

எல்லாமே மாயை தான்ங்க.  இன்னிக்கு ஒருத்தர் இல்லாம இருக்க முடியாதுனு நினைப்போம்.  ஆனா சில வருஷங்கள் அவங்க இல்லாமலேயே நாம வாழ்ந்துட்டு இருப்போம்.  அப்ப உயிர்ப்பா இருந்த அந்த உணர்வு இப்ப சுத்தமா இல்லாமலேயே போயிருக்கும் அப்படியான உணர்வுகள் தான் மாயையான உணர்வுகள்.

முன்னாடி இருந்த அதே உயிர்ப்புடன் இன்றும் அந்த உணர்வுகள் நம்முள் புதைந்து, நினைவுகளாய் நெஞ்சில் நிற்கும் போது அது மாயையிலிருந்து விலகி ஆன்மாவின் உணர்வாய் மாறிடுது. 

நல்லது மட்டுமே பேசி, நல்லது மட்டுமே சிந்திச்சு, நல்லது மட்டுமே பிறருக்கு செஞ்சோம்னா எல்லாரும் நல்லா இருப்போம்னு சொல்லி என்னுடைய பேச்சை நிறைவு செய்கிறேன்.

அரங்கில் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு அரங்கை நிறைத்த அனைவரின் கைதட்டலையும் ஏற்று மகிழ்வாய் மேடையை விட்டு அகன்றான் ஷ்யாம். 

ஏதோ ஓர் ஆன்மீக சொற்பொழிவை கேட்ட களிப்பில் கலைந்து சென்றனர் அனைவரும். 


இரவு பத்து மணியளவில் வீட்டை அடைந்தனர் ராஜராஜனும் தனலட்சுமியும். 

தனலட்சுமி கண்ணாடியின் முன் நின்று தனது சேலையில் இருந்த பின்களை எடுத்து கொண்டிருக்க,  பின்னிருந்து அவளை அணைத்த ராஜராஜன், “இன்னிக்கு புடவைல ரொம்ப அழகா இருந்த தனு!” என்றான்.

அவன் புறமாய் திரும்பி நிமிர்ந்து முகத்தை நோக்கியவள், “நீங்களும் தான் ரொம்ப கம்பீரமா இருந்தீங்க” என்றாள். 

அவளின் கம்பீரம் என்ற வார்த்தையில் வாய்விட்டு சிரித்தவன், “இதை பார்த்து தானே பயந்த?” எனக் கேட்டான். 

விழி உயர்த்தியவள், “அது நான் கட்டிக்கிறவரு சின்ன பையனா இருப்பாருனு எதிர்ப்பார்த்தேன்! இப்படி பெரிய ஆளா வந்து நின்னா நான் என்ன செய்ய!”  உள்ளே போன குரலில் கேட்க,

“ஒன்னும் செய்ய வேண்டாம். இப்படி எனக்குள்ள நீ அடங்கி இருந்தா போதும்” என்றவாறு அவளை அணைத்து கைகளில் அள்ளிக் கொண்டான்.

வழமைப்போல் அவளின் கழுத்தினில் முத்தமிட்டு அவளுள் புதைய முனைந்தவன், அவள் முகத்தினை நோக்கி, “நீ டயர்ட்டா இல்லையே! உனக்கு ஓகே தானே” எனக் கேட்டான். 

அவனின் முத்தத்தில் கிறங்கியவளாய் ம்ம்ம் என மொழிந்தவள், “அதென்ன எத்தனை நாளானாலும் தினமும் இதே கேள்வி” என சிணுங்கியவாறு அவள் கேட்க,

“ஆயுசுக்கும் இதை கேட்பேன்! இது அவர் சொல்லாத எட்டாவது சீக்ரெட்” என்றவாறு அவளுள் அவன் மூழ்கி போக, கணவனின் இந்த அக்கறையான அன்பில் காதலாகி கனிந்து போனாள் தனலட்சுமி.

— தொடரும்