மாய உணர்வுகள் – 8
Epi 8
“உனக்கு என்னை பிடிக்காது தானே! பிடிக்காம தானே என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்ட” என்றவன் கேட்டதும்,
‘அதெப்படி இவருக்கு தெரியும்’ என மனதினுள் நினைத்து கொண்டாலும்,
“அப்படிலாம் ஒன்னுமில்லைங்க! எனக்கு உங்களை பிடிக்கும்” என்றாள்.
“பொய் சொல்லாத தனலட்சுமி! என்னை பிடிக்கலைனு நீ உன் பாட்டிக்கிட்ட சொல்லி அழுதுட்டு இருந்ததை என் காதால கேட்டேன்” கவலை தோய்ந்த குரலில் உரைத்தான்.
‘கேட்டாரா’ என அவனை ஏறிட்டு பார்த்தவள், தயங்கியவாறே “உங்களை பார்த்ததும் பிடிக்கலை தான்! ஆனா..” என ஏதோ கூற வர,
“இப்ப இதை பத்தி பேசி, இருக்கிற நல்ல மனநிலையை கெடுத்துக்க வேண்டாம் தனலட்சுமி!” என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே இவர்களின் இல்லம் வந்து விட, அத்துடன் அந்த பேச்சை நிறுத்தி கொண்டனர்.
இருவரும் ரிப்ரெஷ் ஆகிய உடன், தனலட்சுமியிடம் உறங்குமாறு கூறியவன் முகப்பறையில் தொலைகாட்சியை இயக்கி விட்டு அமர்ந்து கொண்டான்.
“இல்ல நான் உங்ககிட்ட பேசனும்” என்று அவனருகில் அமர்ந்தவாறு அவள் கூற,
“எனக்கு இப்ப இருக்க மனநிலைல உன்னை ஏதாவது திட்டி காயப்படுத்திடுவேனோனு பயமா இருக்கு தனு! இப்ப பேச வேண்டாமே” கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவன் கேட்டதும், மனமுருகி போனது அவளுக்கு.
இத்தனை நாட்களாய் தனக்கு அவரை பிடிக்கவில்லை என்று எண்ணியே தன்னை விலக்கி வைத்திருக்கிறாரே என நினைத்து மனம் வெகுவாய் கவலைக் கொண்டது.
அவள் யோசனையுடன் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டவன், “வா நீ!” அவள் கைப்பிடித்து அழைத்து சென்று கட்டிலில் படுக்க வைத்தவன்,
“தலைவலிக்குதுனு சொன்னல! எதையும் யோசிக்காம தூங்கு. கண்டிப்பாக இதை பத்தி ஒரு நாள் நாம பேசலாம். இனி முன்ன மாதிரி உன்கிட்ட பேசாமலாம் இருக்க மாட்டேன். அதனால மனசை போட்டு குழப்பிக்காத” எனக் கூறி போர்வையை போர்த்தி விட்டு முகப்பறைக்கு வந்து விட்டான்.
கண் மூடி படுத்த தனலட்சுமிக்கு இவன் முதன் முதலாக பெண் பார்க்க வந்த நினைவுகள் வந்து போனது.
அவளுக்கான கணவன் சற்று மார்டனாய் ஒல்லியாய் மாநிறமாய் இருக்க வேண்டுமென கற்பனை செய்திருந்தவளுக்கு உயரமாய் கருத்த பெரிய உடலுடன் கம்பீரமாய் வந்த இவனை பார்த்ததும் பிடிக்காமல் தான் போனது.
‘ஆனா இப்பவும் அவரை எனக்கு பிடிக்கலைனு எப்படி அவர் நினைக்கலாம்’ மனம் வெதும்பி போனது அவளுக்கு.
எங்கெங்கோ சுற்றிய நினைவுகள் இறுதியாக கார்த்திக்கிடம் வந்து நின்றது.
‘பாரு அக்காக்கிட்ட இவ்ளோ கிளோஸ் ஃபிரண்ட்டா இருக்கிறவங்க கண்டிப்பா கார்த்திக் கூட எனக்கு இருக்க ஃப்ரண்ட்ஷிப்பையும் புரிஞ்சிப்பாங்க. எங்களுக்குள்ள இருக்க பிரச்சனைலாம் சரியான பிறகு கார்த்திக் பத்தி அவர்கிட்ட பேசனும்’ என மனதினுள் நினைத்து கொண்டவளுக்கு அப்பொழுது தான் கார்த்திக்கின் குறுஞ்செய்திகளை காண வேண்டும் என்ற எண்ணமே வந்தது.
‘ஏன் இரண்டு நாளா மெசேஜ் பார்த்தும் ரிப்ளை செய்யாம இருக்கீங்க? உடம்பு எதுவும் சரியில்லையா? அப்படி சரியில்லைனா டேக் கேர்! உடம்பை பார்த்துக்கோங்க. ஹெல்த் தான் ரொம்ப முக்கியம்’
‘அப்புறம் லக்ஸ்ஸூ நாளைக்கு மீட் பண்ணலாம்னு சொல்லிருந்தீங்களே! எங்க எப்பனு சொல்லவே இல்லியே! மீட் பண்ணலாமா?’ எனக் கேட்டிருந்தான் கார்த்திக்.
அதை படித்ததும் தான், தான் அவனிடம் நேரில் சந்திக்கலாம் என கூறியதே நினைவுக்கு வந்தது.
‘அய்யோ இதை எப்படி மறந்து போனேன். கிப்ட் வேற வாங்கி வச்சிட்டேனே. நாளைக்கு அவரோட பிறந்தநாள் வேற வேண்டாம்னு சொன்னா டிஸ்அப்பாய்ண்ட் ஆகிட மாட்டாங்களா?’ என கார்த்திக்காக யோசித்தாள்.
அவளின் மனசாட்சியோ, ‘அவனுக்காக யோசிச்சீனா உன் வாழ்க்கை ஹோ கயா ஆகிடும் பரவாயில்லையா?’ என எச்சரித்தது.
‘அய்யோ இல்ல! எனக்கு என் மாமா தான் முக்கியம்’ என தனக்குள்ளே கூறி கொண்டவளாய்,
‘நாளைக்கு சொல்றேன் கார்த்திக்’ என்று மட்டும் அனுப்பிவிட்டு இதற்கான முடிவு எடுப்பதை ஒத்தி போட்டாள்.
மாலையானதும் புடவை அணிந்து கொள்ள மட்டும் அவளிடம் உரைத்த ராஜராஜன், அவளை ஒரு சிறிய ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்றான்.
“என்ன தனம்! முகம் டல்லா இருக்கு! ராஜ் எதுவும் திட்டினானா உன்னை! திட்டிருந்தா என்கிட்ட சொல்லு, என் தங்கச்சியை எப்படி மேன் நீ திட்டலாம்னு அவனை ஒரு வழி பண்ணிடுறேன்” என பார்வதி தனலட்சுமியிடம் ஏற்ற இறக்கத்துடன் கூறி கொண்டிருக்க, அவளின் தங்கை என்ற விளிப்பில் கண் கலங்கி போனது தனலட்சுமிக்கு.
அந்த மாலை பொழுதில் சென்னையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆடிட்டோரியத்தில், ராஜராஜனும் சுந்தரும் தங்களது மகிழுந்தை தரிபிடத்தில் சேர்க்க சென்றிருக்க, இவர்கள் இருவரும் பேசியப்படியே நடந்தவாறு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
தனலட்சுமியின் கண்ணீரை கண்டு பதட்டமடைந்த பார்வதி, “நிஜமாவே உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா தனம்?” எனக் கேட்டாள்.
“இல்லக்கா சின்ன வாக்குவாதம் தான். சரியாகிடும்! நீங்க தங்கச்சினு சொன்னது ஒரு மாதிரி ஆகிடுச்சு! அம்மா அப்பா இல்லாம பாட்டியோட கண்டிப்புல வளர்ந்தனால ஃப்ரண்ட்ஸ்னு கூட பெரிசா யாருமே இல்லக்கா. காலேஜ்ல இரண்டு மூனு பொண்ணுங்க இருந்தாங்க. எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கைனு போய்ட்டாங்க. உறவுகள்னும் யாரும் கிடையாது. அதான் நீங்க தங்கச்சினு சொன்னதும் கொஞ்சம் சென்ட்டியாகிட்டேன்” என சிரித்தாள்.
பேசிக் கொண்டே நடந்த இருவரும் ஆடிட்டோரியத்தின் பார்வையாளர் இடத்தில் இருத்த இருக்கையை அடைந்து இருந்தனர்.
அவளின் தலையை வருடியவள், “டோன்ட் வொரி! எல்லாம் சரியாகிடும்! சரி செய்ய தான் உங்க இரண்டு பேரையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். நேத்து ராஜ்ஜை நான் ஷ்யாமை மீட் பண்ண வைக்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன். சுந்தர் என்னடானா இவன் சரியில்ல இவனை எப்படியாவது ஷ்யாமை மீட் பண்ண வச்சிடுனு என்னை டார்ச்சர் பண்ணி எடுத்துட்டாரு. சரினு உன் புருஷன்கிட்ட, என்னை சூப்பர் மார்க்கெட் கூட்டிட்டு போடானு சொல்லி கூட்டிட்டு போக வச்சு, அங்க இருந்து என் வேலைக்காக ஷ்யாமை பார்க்க போகனும்னு சொல்லி அங்க போக வச்சி ஷ்யாமை மீட் பண்ண வச்சேன்” என்றவாறு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
‘ஓ அதான் அவர் கூட நேத்து சூப்பர் மார்க்கெட்டுக்கு போனாங்களா!’ என்று எண்ணி கொண்டவள்,
“ஆமா யார் அந்த ஷ்யாம்? அவரை பார்க்க ஏன் சுத்தி வளைச்சு பொய் சொல்லி கூட்டிட்டு போனீங்க” எனக் கேட்டாள்.
“பின்ன பைத்தியக்கார டாக்டரை பார்க்க போறோம் வானு சொன்னா யாரு வருவா? நீ வருவியா முதல்ல” எனக் கேட்டு அவள் சிரிக்க,
“என்னது பைத்தியக்கார டாக்டரா! அய்யோ என் புருஷனுக்கு ஏதோ பெரிய மனநிலை பிரச்சனை இருக்கா அக்கா?” என பதட்டமாய் கேட்டாள் தனலட்சுமி.
— தொடரும்