மாய உணர்வுகள் – 7

Epi 7

“உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லையே! நீங்க சந்தோஷமா தானே இருக்கீங்க?” எனக் கேட்டாள் பார்வதி.

‘எதை மனசுல வச்சி இவங்க இப்படி கேட்குறாங்கனு தெரியலையே!’ யோசித்தவாறு அவள் நிற்க,

மேலும் தொடர்ந்து பேசிய பார்வதி, “ஏன் கேட்குறேன்னா, கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி கல்யாணமாகி வந்த பிறகும் சரி ஆபிஸ்ல இருக்கும் போது அவன் உங்ககிட்ட போன்ல பேசினதா நாங்க பார்த்ததே இல்லை.  உங்ககிட்ட இருந்தும் அவனுக்கு போன் கால் வந்த மாதிரி நாங்க பார்க்கலை.  மதியம் சாப்பிடும் போது உங்களுக்கு போன் செய்ய சொல்லி அவனை கேலி செஞ்சி கம்பெல் செய்வோம்! செய்றேன் செய்றேன்னு சொல்வானே தவிர ஒரு நாளும் செஞ்சதில்லை.  அவன் வாயிலிருந்து வார்த்தை வாங்குறதே பெரும்பாடு தான்.  சுந்தரும் நானும் அவனுக்கு பொண்ணு பார்க்கிறதை பத்தி நிறைய நேரம் கேட்டிருக்கோம்.  எனக்கான பொண்ணை நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிடுவான்.  திடீர்னு ஒரு நாள் பத்திரிகையோட வந்து கல்யாணத்துக்கு லீவ் கேட்டான்.  எங்க இரண்டு பேருக்கும் அவன் மேல ரொம்ப கோபம்.  எங்களை இன்வைட் கூட பண்ணலை.  பொண்ணு ஊருல கல்யாணம் உங்களால வர முடியாது.  எனக்கு பெரிசா செலவு பண்ணி கல்யாணம் செய்றதுல விருப்பம் இல்ல.  அதனால சிம்பிள்ளா பொண்ணோட குல தெய்வ கோவில்லயே கல்யாணத்தை வைக்க முடிவு பண்ணிட்டோம்னு சொன்னான்.  சரி மேரேஜ் முடிச்சி வந்த பிறகு விருந்துக்கு கூப்பிடுக்கலாம்னு நாலு மாசமா கேட்குறோம்! வீக்கெண்ட்டானா நாங்க பீச் போறோம் சினிமா போறோம்னு தட்டி கழிச்சிட்டே இருந்தான்.  சரி பொண்டாட்டியோட அவன் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைச்சிட்டு விட்டுட்டோம்” என்றவள் சொல்லும் போதே,

‘என்னது சினிமா பீச்சுக்கா! கல்யாணத்துக்கு பிறகு அவர் என்னை முதன் முதலா கூட்டுட்டு வந்திருக்கிறதே இந்த இடம் தானே’ என்று மைண்ட் வாய்ஸில் தனலட்சுமி பேசிக் கொள்ள,

“ஆனா லாஸ்ட் டூ வீக்ஸ்ஸா அவன் சரியில்லை! எவ்ளோ பெர்பக்ட்டா கோடிங் செய்வான் தெரியுமா! அவனுக்கு அவ்ளோ பிடிச்ச வேலை அது! அதையே அவன் தப்பு தப்பா செய்யும் போது தான், அவன் பேமிலி லைப்ல அவனுக்கு எதுவும் பெரிய பிரச்சனையோனு எங்களுக்கு பயம் வந்துடுச்சு!  அதனால தான் உன்னை எங்க கண்ணுல காமிக்க மாட்டேங்கிறானோனு சந்தேகம் வந்துச்சு” என்று நிறுத்தினாள் பார்வதி. 

“அதெல்லாம் சாதாரணமா புருஷன் பொண்டாட்டிக்குள்ள வர்ற பிரச்சனை தான் அக்கா! நீங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க! நாங்க சந்தோஷமா தான் இருக்கோம்” அந்நேரத்திற்கு பார்வதியை சமாதானம் செய்ய வாய்க்கு வந்ததை கூறியிருந்தாள் தனலட்சுமி. 

அவளின் அக்கா என்ற உரிமையான விளிப்பில் நெகிழ்ந்து போன பார்வதி, “இன்னிக்கு உங்க இரண்டு பேரையும் சேர்ந்து பார்த்ததுல ஓரளவுக்கு மனசுக்கு சந்தோஷமாகிடுச்சு தனம்! இருந்தாலும் உன்கிட்ட சொல்லனும் தோணுச்சு தனம் அதான் மனசு கேட்காம சொல்லிட்டேன்” என்றாள்.

“உங்க ஃப்ரண்ட்டை நான் சந்தோஷமா பார்த்துப்பேன்! நீங்க கவலைப்படாதீங்க!” என்ற தனலட்சுமியின் மனமோ, ‘அப்படி இவருக்கு என்ன தான் பிரச்சனை! அப்ப இத்தனை நாளா நைட் டைம் தவிர மத்த நேரங்கள்ல அவர் என்னை அவாய்ட் பண்ணிட்டு இருந்திருக்காரா! இது தெரியாம அவர் நேச்சரே அப்படி தான்னு நானும் கண்டுக்காம இருந்திருக்கேனே’ என நினைத்து கொண்டாள்.

“நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னென்னமோ உளறிட்டு இருக்கேன் பாரு” என்ற பார்வதி,

“நாங்கலாம் அஞ்சாறு வருஷமா ஒரே டீம்ல தான் இருக்கோம் தனம். அவன்கிட்ட கோடிங் கத்துக்கிறது மூலமா தான் என் ஹஸ்பண்ட் அவன் கூட ஃப்ரண்ட் ஆனாரு.  நானும் அந்த டீம்ல தான் இருந்தேன்.  நானும் சுந்தரும் லவ் பண்ணோம். ராஜ் பொதுவா யார்க்கிட்டயும் தன்னோட பர்ஸ்னலை உணர்வுகளை ஷேர் செய்ய மாட்டான்.  சுந்தர் தான் ராஜ்க்கு இருந்த ஒரே ஃப்ரண்ட்.  ஸ்கூல் காலேஜ்னு எங்கேயுமே அவனுக்கு ஃப்ரண்ட் கிடையாதுனு தெரிஞ்சு செம்ம ஆச்சரியம் எங்க இரண்டு பேருக்கும். ரொம்ப படிப்ஸ்னால அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருந்துட்டனால ஃப்ரண்ட்ஸ்னு யாரும் இல்லைனு சொன்னான். இப்படி ஒரு படிப்ஸ்ஸை நல்லவனை ஃப்ரண்ட்டா வச்சிக்க யாருக்கு தான் பிடிக்காது. சுந்தர் என்கிட்ட எல்லாத்தையும் ஷேர் செய்வாரு.  ராஜ்க்கு இது தெரியும்.  சோ சுந்தர் மூலமா ராஜ் கூட பேசி பழகி ராஜ்ஜை எப்படியாவது இயல்பாக்கனும்னு நினைச்சு ஒரு வழியா என்கிட்ட மட்டுமாவது கேலி செஞ்சி பேசுற அளவுக்கு கொண்டு வந்துட்டேன்” என்று பார்வதி முடிக்க,

‘என்னது ஃப்ரண்ட்ஸ்ஸே இல்லயா அவருக்கு!’ என ஆச்சரியமாய் கேட்க துடித்த நாவை அடிக்கினாள் தனலட்சுமி. 

‘பொண்டாட்டியா இருந்துட்டு உன் புருஷனை பத்தி இது கூட தெரியாதானு அவங்க கேட்டா என்ன செய்றது! இது வரைக்கும் நான் அவங்ககிட்ட கேட்ட கேள்வியே அதிகம் தான்’ என மனதினுள் நினைத்து கொண்டவள்,

‘அவர் என்கிட்ட பேசாம இருந்தாலும், நானாவது அவர்கிட்ட பேசிருக்கனும்.  இனியாவது அவர்கிட்ட பேசி அவருக்கு என்ன தான் பிரச்சனைனு தெரிஞ்சிக்கனும்’ என முடிவெடுத்து கொண்டாள்.

இருவரும் கழிவறைக்கு சென்று வந்தப்பின் இருக்கையில் அமர, ராஜராஜனின் மேனேஜர் மேடையில் பேசி கொண்டிருந்தார். 

“எங்க டீம்க்கு கிளைண்ட் ஃபன்ட்டா (fundஆஆ)  வந்த பணத்தை வச்சி அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு ஒரு மாத மளிகை சாமான்களை வாங்கி கொடுத்துட்டோம்! இந்த ஐடியாவை கொடுத்து இந்த திட்டத்தை முன்னெடுத்து செய்த பார்வதிக்கு பாராட்டுக்கள்”  என்றார். 

அவரின் பேச்சின் மூலமாக, நேற்று பார்வதியும் ராஜராஜனும் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்கியது அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக தான் என புரிந்தது. 

அங்கேயே மதிய உணவை முடித்து அனைவரும் அவரவர் இல்லத்திற்கு செல்ல ஆயத்தமாக, “ராஜ் சாய்ந்திரம் ஷ்யாம் ஒரு மீட்டிங்க்கு உன்னை வர சொல்லிருந்தானே! ஞாபகம் இருக்கு தானே! மறக்காம தனலட்சுமியோட வந்து சேரு” என்றவாறு சுந்தருடன் கிளம்பி போனாள் பார்வதி. 
‘என்ன மீட்டிங்? எதுக்கு நான் வரனும்?’ என்பது போல் ராஜராஜனை பார்த்தாள் தனலட்சுமி.

அவளின் பார்வையை புரிந்து கொண்டவனாய், “அது ஒரு ஸ்டேஜ் ஷோனு வச்சிக்கோயேன்.  நேர்ல போய் பார்க்கும் போது உனக்கே புரியும்” என்றவாறு மகிழுந்தில் ஏறினான். 

முன்னிருக்கையில் ஏறி அமர்ந்த தனலட்சுமிக்கு,  பார்வதியுடனான கணவனின் உறவை குறித்து, வரும் பொழுது இருந்த மனக்கலக்கமும் இறுக்கமும் நினைவினில் வந்து போக,

‘சே தப்பா நினைச்சிட்டோமே’ என தன்னையே திட்டிக் கொண்டாள். 

சரியாய் அந்நேரம் அவளின் மனசாட்சி,
‘நீ கார்த்திக் கூட பேசுறதை உன் புருஷன் கேட்டாலும் இப்படி தானே நினைப்பாரு’ என்று கேள்வி எழுப்ப,

‘ஆமா தானே!’ உண்மை சுட, நெஞ்சம் அதிர்வில் விம்ம முகம் வெளிறி போனது தனலட்சுமிக்கு. 

அவளின் முகத்தை பார்த்து, “என்னாச்சு தனலட்சுமி?” எனக் கேட்டான். 

“இல்ல தலை வலிக்கிற மாதிரி இருக்கு” என்று நெற்றியை சுருக்கி தலையை தடவியவாறு அவள் கூற,

“சரி சீட்டை சாய்ச்சு படுத்துக்கோ! வீட்டுக்கு போய் தூங்கி ரெஸ்ட் எடுத்தீனா சரி ஆகிடும்” என்றான். 

“ம்ம்ம்” என்றவாறு கண் மூடியவளுக்கு கார்த்திக்குடன் இவள் பேசியவைகள் அனைத்தும் மனதில் ஊர்வலமாய் வந்து போக, மனம் மிகுந்த குற்றவுணர்வுக்குள்ளானது.

சாய்ந்து கண் மூடியிருந்தாலும் கண்ணின் மணிகள் உருளுவதை பார்த்த ராஜராஜன், “என்ன யோசனை தனு! ரொம்ப யோசிச்சா தலை தான் வலிக்கும்” என்றான்.

அவனின் குரலில் கண் திறந்து பார்த்தவளின் விழிகளில் நீர் சூழ்ந்திருந்தது. 

“என்னடா தலை ரொம்ப வலிக்குதா?” என அவளின் நெற்றியை அவன் வருட, இல்லையென தலையசைத்தவள் அவனது கரத்தினை கன்னத்தில் வைத்து முகத்தை அழுத்தி கொண்டாள்.

‘எதை நினைச்சு இவ இப்படி இருக்கா’ என யோசித்த ராஜராஜன், “பாரு உன்கிட்ட எதுவும் பேசினாளா?” எனக் கேட்டான்.

அவனின் கேள்வியில், பார்வதி இன்று அவளிடம் பேசிய அனைத்தும் வந்து போக,

“ஏன்ங்க நம்ம கல்யாணத்துக்கு பாரு அக்காவை கூப்பிடலை! அவங்க நம்மளை விருந்துக்கு கூப்பிட்டும் ஏன் என்னை கூப்பிட்டுட்டு போகலை! இது வரைக்கும் ஏன் என்னை எங்கேயும் கூட்டிட்டே போகலை” அவனை நோக்கி திரும்பி படுத்தவாறு கேட்டாள்.

அவனின் முகம் ஒரு நிமிடத்தில் பலவித பாவனைகளை காண்பித்து இயல்பாகியது.

“உனக்கு என்னை பிடிக்குமா தனு?” எனக் கேட்டான். 

சட்டென இருக்கையில் எழுந்து அமர்ந்தவள், “ஏன் இப்படி கேட்குறீங்க?” அதிர்வாய் கேட்டாள். 

“உண்மையை சொல்லு! உனக்கு என்னை பிடிக்காது தானே! பிடிக்காம தானே என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்ட” மனதின் வலி முகத்தில் தெரிய இறுகிய குரலில் கேட்டான் ராஜராஜன். 

‘அதெப்படி இவருக்கு தெரியும்’ என அதிர்ந்து போனாள் தனலட்சுமி. 

— தொடரும்