மாய உணர்வுகள் – 6

Epi 6

மறுநாள் காலை படுக்கையில் கண் விழித்த தனலட்சுமி, தன்னை அணைத்தவாறு உறங்கி கொண்டிருந்த ராஜராஜனை கண்டாள்.

‘என்ன அதிசயமா விலகாம கட்டிப்பிடிச்சிட்டே நைட் முழுக்க தூங்கியிருக்காரு’ மனதிற்குள் நினைத்தவாறே அவனை நோக்கி திரும்பி அவனின் முகத்தை பார்த்தாள்.

நேற்றைய அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிகழ்விற்கு பிறகான அவனின் செயல்கள் யாவும் தனது தவறை மறைப்பதற்கான அவனது யுக்திகளாய் அவளுக்கு தோன்ற, எண்ணும் போதே கண்ணீர் பொங்கி கொண்டு வந்தது அவளுக்கு.

அவனின் ஆஜானுபாகுவான பெரிய உடலுக்குள் இவளின் ஒல்லியான சிறிய தேகம் அடங்கியிருந்தது. 

“உங்களுக்கு என்னை விட அந்த பொண்ணு பெரிசா போய்ட்டாளா? அந்த பொண்ணுகிட்ட பேசின மாதிரி என்னிக்காவது என்கிட்ட பேசியிருக்கீங்களா?” கண்களை துடைத்தவாறு உறங்கும் அவன் முகம் நோக்கி சத்தமாய் உரைத்தவள்,

“நீங்க எனக்கு மட்டும் தான்!  யாருக்காகவும் உங்களை நான் விட்டு கொடுக்க மாட்டேன்!” எனக் கூறியவாறு அவனை அணைத்து மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள். 

சற்றாய் உறக்கம் கலைந்தவன், அவள் தன்னுள் புதைவதை உணர்ந்து தானும் அவளை இறுக அணைத்தவாறு மீண்டுமாய் உறக்கத்திற்குள் சென்றான். 

தனலட்சுமி குளித்து முடித்து கண்ணாடியின் எதிரே நின்று தரையை பார்த்தவாறு தலையை துவட்டி கொண்டிருக்க, பின்னிருந்து இரு கரங்கள் அவளின் இடையினை தழுவியதை உணர்ந்தவள், திடுக்கென பயந்தவாறு தலையை திருப்பி பார்த்தாள்.

கணவனின் முகத்தை கண்டவளுக்கு சற்று ஆசுவாசம் உண்டாக,  தனது தலையை அவன் மார்பினில் சாய்த்தாள். 

எத்தனை நாள் ஆசை இது அவளுக்கு.  அவனின் மார்பில் அவளின் பின்னந்தலை இருக்க, அவனின் இரு கைகளும் அவளை வளைத்திருக்க, அதன் மீது தனது கைகளை வைத்தவாறு அவளிருக்க, கண்ணாடியில் தெரிந்த அவர்களின் பிம்பத்தினை கண்டவளுக்கு இதழில் வெட்க முறுவல் பூத்தது.

அவளின் கழுத்தினில் அழுந்த முத்தமிட்டவன், அவளை முன்னே திருப்பி முகம் முழுவதும் முத்தம் பதிக்க, உணர்ச்சி ததும்பலில் அவள் நிற்க, அவளின் நெற்றியுடன் தனது நெற்றியை உரசியவாறு பெருமூச்சுடன் இளைபாறியவன், “உன்னை தொட்டாலே டெம்ப் ஆகிடுவேன் தனு!” என அவன் மேலும் அவளுள் புதைய,

அவனை பிடித்து தள்ளி நிறுத்தியவள், “டைம் ஆகிடுச்சு” என்றாள் உள்ளே போன குரலில். 

ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன், “இதுக்கு தான் காலைல உன் பக்கமே வராம ஆபிஸ்க்கு கிளம்பி போய்டுறது” என்றவாறு குளிக்க சென்று விட்டான். 

‘ஓ அதான் காலைல நான் இருக்க பக்கமே வர மாட்டேங்குறாரா?’ அவனின் கூற்றில் வெட்க புன்னகை சிந்தியவளாய், அவனின் தனு என்ற அழைப்பை மனதினுள் உறுப்போட்டவாறு சிலிர்ப்பான மனநிலையுடன்  கிளம்பி கொண்டிருந்தாள்.

முந்தைய நாள் நிகழ்வுகள் எல்லாம் மறந்து காலையில் அவனின் தொடுகையும் பேச்சும் தந்த சிலிர்ப்பான உணர்வுகளிலேயே உழன்றவாறு அவனுடன் கிளம்பி வெளியே வந்தவளை, மகிழுந்தில் முன் இருக்கையில் அமர்ந்த நொடி நேற்றைய பாருவின் நினைவுகள் தாக்கவாரம்பித்தது. 

‘இந்த சீட்ல தானே நேத்து அவளையும் உட்கார வச்சு கூட்டிட்டு போனாரு’

குளுமையான மனநிலை வெம்மையாய் மாறி கொண்டிருந்தது.

அலுவலகம் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் கேள்வி கேட்டு சண்டையாகிட வேண்டாமென எண்ணியவளாய் அமைதியாய் அமர்ந்திருந்தாள் தனலட்சுமி.

அலுவலகத்தை இவர்கள் அடைந்ததும், இவள் மகிழுந்தில் இருந்து இறங்க, “ஹே தனலட்சுமி! எப்படி இருக்கீங்க?” என கேட்டவாறே அவளருகில் வந்து அன்பாய் கேட்டிருந்தாள் பாரு என அனைவராலும் அழைக்கப்படும் பார்வதி.

திருதிருவென இவள் விழித்து கொண்டு நிற்க, மகிழுந்தை தரிபிடத்தில் விட சென்றிருந்தான் ராஜராஜன். 

“ஏன் இப்படி முழிக்கிறீங்க? ஓ.. சாரி! நான் யார்னு உங்களுக்கு தெரியாதுல! ராஜ் தான் உங்ககிட்ட ஆபிஸ் பத்தி எதுவும் பேசினது இல்லனு சொன்னானே!” என்றவாறு தொடர்ந்த பார்வதி,

“என் பேரு பார்வதி! நானும் ராஜும் கடந்த ஆறு வருஷமா ஒன்னா தான் வேலை பார்த்துட்டு இருக்கோம்! வி ஆர் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்” என்றாள்.

பார்வதியை கண்ட உடனே அடையாளம் கண்டு கொண்ட தனலட்சுமிக்கு இவள் ராஜ்ஜின் தோழி என்பதில் ஒரு புறம் மனம் ஆசுவாசமானாலும் மறுபுறம் தன்னை விட இவளிடம் அவர் அனைத்தையும் பகிர்ந்து சிரித்து பேசுமளவு நட்பு வைத்திருக்கிறாரே என்ற பொறாமை உணர்வும் தாக்கியது. 

‘வேற பொண்ணுக்கிட்ட இவ்ளோ சிரிச்சு பேச முடியுது! ஏன் பொண்டாட்டிக்கிட்ட அப்படி பேச மாட்டேங்கிறாரு! ஒரு வேளை, பொண்டாட்டிக்கிட்ட கறாராய் உம்முனா மூஞ்சியா நடந்துக்கிட்டு வெளில எல்லாருக்கிட்டயும் சிரிச்சி பேசி நல்ல பேரு வாங்கி வச்சிருப்பாங்களே மூளை கெட்ட புருஷங்க! அந்த மாதிரியான புருஷனா இவரு’  நொடி பொழுதில் மனம் பலவற்றை சிந்தனை செய்ய,  அதனை ஒதுக்கியவளாய்,

மெல்லியதாய் சிரித்து, “நைஸ் டு மீட் யூ பாரு” என்று பார்வதியிடம் கை குலுக்கினாள் தனலட்சுமி.

“ஹே நான் என் பேரோட ஷார்ட் பார்ம் பாருனு சொல்லவே இல்லயே!  நீங்களே கூப்பிட்டுட்டீங்க! சோ யு ஃபீல் மீ கிளோஸ் டு யுர் ஹார்ட்! அப்படி தானே அர்த்தம் தனம்” என கண்கள் மின்ன கேட்டவாறு சிரித்தாள்.

அவள் என்ன பதில் கூறவென தெரியாது முழிக்க, “டோண்ட் பேனிக்! நீங்க உங்க புருஷனை கிளோஸ் டு ஹார்ட் வச்சிருக்கனால, புருஷனோட பெஸ்ட் ஃபிரண்ட்டுனு தெரிஞ்சதும் என்னையும் கிளோஸ் டூ ஹார்ட்டா ஃபீல் செஞ்சிட்டீங்க! அதுல ஒன்னும் தப்பில்லை! அதுக்காக இவ்ளோ வருத்தப்பட தேவையில்ல” கேலியாய் சிரித்து கொண்டே பார்வதி பேசி கொண்டே போக,

அவளின் தலையில் கொட்டியவாறு வந்து நின்றான் ராஜராஜன்.

“வாலு வாயை திறந்தா மூட மாட்டா! உன்னை எதுவும் வம்பிழுத்தாளா?” என தனலட்சுமியை நோக்கி கேட்டான் ராஜராஜன். 

“ஹப்பா உன் பொண்டாட்டியை நான் ஒன்னும் சொல்லலைப்பா! வந்துட்டாரு பொண்டாட்டிக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு” என நாக்கை துருத்தினாள். 

“அவ இப்படி தான் லூசு மாதிரி பேசிட்டே இருப்பா! நாம உள்ளே போகலாம் வா” என பார்வதியை கண்டு கொள்ளாதது போல் நடித்தவாறு மனைவியின் கரத்தினை பிடித்து அவன் உள்ளே அழைத்து செல்ல,

“மிஸ்டர் ஒப்பிலி! பொண்டாட்டி வந்ததும் ஃபிரண்ட்டை கழட்டி விட்டுட்டு போறியா நீ! இரு என் புருஷன்கிட்ட உன்னை போட்டு கொடுக்கிறேன்” என கோபமாய் கத்தியவாறு ஒழுங்கு காட்டினாள்.

அவள் கூறியது காதில் விழாதது போல் அவன் தனது மனைவியுடன் நடந்து செல்ல,

“அய்யோ அவங்களை தனியா விட்டுட்டு போறோமே” என தனலட்சுமி பதட்டப்பட,

“தனியா விடுறதா! அவ ஊரையே வித்துடுவா! அவ ஹஸ்பெண்ட்காக வெயிட் பண்றா! அவன் ஏதோ முக்கியமான கால்னு சொல்லி பார்க்கிங்க்ல கார்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்கான்! அவன் வந்ததும் வந்துடுவா” என உரைத்தான். 

“ஓ அப்ப தெரிஞ்சு தான் வம்பிழுத்திட்டு வந்தீங்களா?” இவள் ஆச்சரியமாய் கேட்க,

சிரித்தவாறே ஆமென்று தலையசைததான் அவன். 

இன்று அவள் காணும் இந்த ராஜராஜன் முற்றிலும் புதியவனாய் தெரிந்தான். அவனின் மன மகிழ்வு முகப்பொலிவாய் ஒளிர்ந்ததை கண்டு ஆர்வமாய் அவனை நோக்கினாள். 

பார்வதி அவனின் தோழி என்று தெரிந்ததில் மனம் ஆசுவாசமடைந்தாலும், அவரது தோழியிடம் இத்தனையாய் வாயடிக்கும் அவர், ஏன் தன்னிடம் திருமணம் பேசிய நாளிலிருந்து மௌனமாய் இருந்தான் என்ற கேள்வி எழுந்தது. 

பலவிதமான எண்ணங்கள் சூழல, அவன் கைப்பற்றி அழைத்து சென்ற இழுப்பிற்கு சென்றவளை ஒரு அரங்கத்தினுள் கொண்டு சென்று நிறுத்தினான்.

சுமார் நூறு நபர்கள் அமரக்கூடிய அந்த பெரிய அரங்கினுள் இவனது பெயர் ஒட்டப்பட்ட இருக்கைக்கு அவளை அழைத்து சென்றவன், தன்னருகில் அவளை அமர செய்தான். 

“ஹே ஒப்பிலி, உங்களுக்கு பக்கத்துல தான் எங்களுக்கும் சீட் போட்டிருக்காங்க” என்றவாறு தனலட்சுமியின் அருகில் அமர்ந்தாள் பார்வதி.  அவளருகில் அமர்ந்தான் அவளது கணவன் சுந்தர். 

“அதென்ன ஒப்பிலி? ஏன் அவரை அப்படி கூப்பிடுறீங்க?” தன்னை மீறிய ஆர்வத்தில் கேட்டிருந்தாள் தனலட்சுமி. 

அவளின் கேள்வியில் மூவருமே சிரித்தனர்.  “உங்க புருஷனுக்கு நான் வச்ச பேரு இது! ஒரு வார்த்தை ஒப்பிலியப்பன்! நல்லா இருக்குல்ல” என தலையை ஆட்டி சிரித்தவாறு பார்வதி கேட்க,

என்ன சொல்வதென்று தெரியாமல் கணவனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவாறு முழித்தாள் தனலட்சுமி.

அவளின் முக உணர்வுகளை பார்த்த பார்வதி, “புரியலையா? உங்க புருஷன்கிட்ட எது கேட்டாலும் ஒரு வார்த்தைக்கு மேல பதில் சொல்ல மாட்டாரு தனம். அதான் ஒரு வார்த்தை ஒப்பிலியப்பன்னு ரைமிங்கா இருக்கும்னு வச்சிட்டேன்! இப்ப சொல்லுங்க சரியா தானே வச்சிருக்கேன்?” எனக் கேட்டாள்.

‘ஹப்பாடா அப்ப இங்கேயும் இவர் சைலண்ட் தானா! நம்மகிட்ட தான் பேச மாட்டேங்கிறாருனு தப்பா நினைச்சிட்டோமோ’ என இவள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க,

“என்னங்க பதில் செல்லாம தீவிர யோசனைல இருக்கீங்க?” என அவளை கலைத்தாள் பார்வதி. 

“இல்ல எப்படி இவ்ளோ சரியா அவருக்கு பேரு வச்சிருக்கீங்கனு ஆச்சரியமாகிடுச்சு எனக்கு” என இவள் கண்களை சிமிட்ட,

“யூ டூ புரூட்டஸ்” என மனைவியை நோக்கி வாய்விட்டே கேட்டிருந்தான் ராஜராஜன். 

“ஹே ஐ காட் எ கம்பெனி! இனி உன் பொண்டாட்டி கூட சேர்ந்து உன்னை விதவிதமா கலாய்க்கிறது தான் என்னோட ஃபேவரெட் டைம் பாஸே பாஸூ” என கேலியாய் சிரித்தாள் பார்வதி.

“ம்ப்ச் போதும் விடு பாரு! ரொம்ப தான் வம்பிழுக்கிற அவனை” என தனது மனைவியை அதட்டினான் சுந்தர். 

“பின்னே என்ன சுந்தர்! கல்யாணத்துக்கும் நம்மளை கூப்பிடலை! நம்ம விருந்து வைக்கிறோம் பொண்டாட்டியோட வானு சொன்னதுக்கும் வேண்டாம்னு சொல்லி அஞ்சு மாசமா இந்த அழகு தேவதையை நம்ம கண்ணுல காமிக்காம, பேசவும் வைக்காம வெறுப்பேத்திட்டு இருந்தான்ல! அதான் வச்சி செய்றேன்! அப்ப நம்மளை அவன் ஃப்ரண்ட்டா நினைக்கலைனு தானங்க அர்த்தம்” என கணவனிடம் கூறியவாறு திரும்பி ராஜராஜனை முறைத்தாள்.

பார்வதியின் கூற்றில் கணவனை விட்டுக் கொடுக்க மனமில்லாது, அவனுக்காக பேச சொல்லி மனம் உந்தி தள்ள,

‘அய்யோ அப்படிலாம் இல்லங்க! என் ஃபேமிலில கொஞ்சம் பிராப்ளம் இருந்துச்சு. அது சரி செஞ்ச பிறகு இந்த விருந்துக்குலாம் என்னை கூட்டிட்டு போகலாம்னு நினைச்சிருப்பாரு!” என்ற தனலட்சுமி, “அப்படி தானேங்க” என கணவனின் கை மீதி அழுத்தத்தை கொடுத்து தனது பேச்சினுள் இழுத்து ஆமாமென தலையசைக்க வைத்திருந்தாள். 

“கெத்தா இருந்த எங்க ஃப்ரண்ட்டை இப்படி தலையாட்டி பொம்மையா மாத்திட்டியேமா மாத்திட்டியே” என ஏற்ற இறக்கத்தோடு கேலி செய்து பார்வதி கூற,

‘அய்யோ எது சொன்னாலும் கிண்டல் செய்றாங்களே’ என கணவனின் முகத்தை நோக்கினாள் தனலட்சுமி. 

“அவ அப்படி தான்!  அவகிட்ட நீ வாயை கொடுக்காத” என மனைவியின் தோள் மீது கைப்போட்டு தன்னை நோக்கி இழுத்தான் அவன். 

“பார்த்துப்பா உன் பொண்டாட்டியை நாங்க ஒன்னும் தூக்கிட்டு போய்ட மாட்டோம்” என பார்வதி மேலும் பேச,

அதற்கு இவன் ஏதோ பதில் கூற வரும் போது அந்த நிகழ்ச்சி தொடங்க ஆரம்பிக்க, அனைவரது பார்வையும் கவனமும் மேடை மீது சென்றது. 

ஒரு மணி நேரமாக பலர் வந்து உரையாற்றி முடித்தப்பின்,  பரிசு வழங்கும் விழா துவங்கியது.

அந்த வருடத்தில் நன்றாக வேலை செய்த ஊழியர்களின் பெயர்களை கூறி மேடைக்கு வரவழைத்து அவர்களுக்கு சான்றிதழும் பரிசுப்பணமும் அளித்து கொண்டிருந்தனர். 

அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், ராஜராஜன் என்று அழைத்ததும் அவனை ஆனந்த அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் தனலட்சுமி. 

அவன் மென்மையாய் சிரித்தவாறே மேடை நோக்கி செல்ல, பலமாய் கை தட்டியவாறு தனது மகிழ்வினை வெளிப்படுத்தினாள் தனலட்சுமி.

அவளின் மகிழ்வை கண்டு சிரித்த பார்வதி, “என்ன இந்த ஒப்பிலி இது கூட சொல்லாம தான் உன்னை கூட்டிட்டு வந்தானா?” எனக் கேட்டாள்.

ஆமென அவள் தலையசைக்க, “வருஷா வருஷம் தவறாம அவார்ட் வாங்கிடுவான் உன் புருஷன்” என்றாள் பார்வதி.

பார்வதியை திரும்பி அப்படியா என்பது போல் ஒரு பார்வை பார்த்தவள், மீண்டுமாய் கணவனின் மீது பார்வையை செலுத்தினாள்.

அவனுக்கு பரிசளிக்கும் போது, நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் இருந்த மைக்கை வாங்கிய ராஜராஜனின் மேனேஜர், “எங்க டீம் சைலண்ட் கில்லர் ராஜராஜன் இந்த வருஷோத்தோட மூன்று வருடம் தொடர்ந்து அவார்ட் வாங்கிட்டு இருக்கனால அவருக்கு இந்த அவார்ட்டோட சேர்த்து கண்சிஸ்டண்ட் பெர்பாமர் அவார்டும் இந்த வருஷம் தர்றோம்” என்றார்.

இதை கேட்டு ராஜராஜனின் கண்கள் விரிய, வாவ் என்றவாறு கை தட்டினர் பார்வதியும் சுந்தரும். 

மகிழ்ச்சி மிகுதியில் தத்தளித்து கொண்டிருந்த தனலட்சுமியிடம், “எங்க மேனேஜரே அவனுக்கு வச்ச பேரு சைலன்ட் கில்லர். கிளைண்ட் கால்ல கூட பேசவே மாட்டான்.  ஆனா கொடுக்கிற வேலையை சரியா செஞ்சி முடிப்பான்.  கோடிங் அவனுக்கு கை வந்த கலை” என்றாள் பார்வதி.

ராஜராஜன் இறங்கி வந்து தனலட்சுமியிடம் தனக்கு அளித்த பரிசுகளை வழங்கி விட்டு அருகில் அமர, “கங்கிராட்ஸ் டா” என அவன் கைப்பற்றி வாழ்த்தினர் பார்வதியும் சுந்தரும்.

அவர்களை போல் இவளும் அவனின் கைப்பற்றி வாழ்த்த, புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான். 

இன்னும் சிறிது நேரம் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்க, கழிவறைக்கு செல்ல வேண்டுமென தனலட்சுமி கேட்க, அவளுடன் சென்றாள் பார்வதி. 

இருவரும் ஒன்றாக நடந்து கொண்டிருக்க, “நீங்க எப்படி அவருக்கு ஃப்ரண்ட் ஆனீங்க?” என பார்வதியிடம் கேட்டாள் தனலட்சுமி.

“தனம் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க! இது உங்க பர்சனல் தான்.  ஆனாலும் ஃப்ரண்ட்டா அவனோட வாழ்க்கை நல்லா இருக்கனும்ங்கிற நினைப்புல தான் கேட்கிறேன்” என பீடிகையுடன் ஆரம்பித்தாள் பார்வதி. 

“என்ன கேட்கனும்? கேளுங்க” என்றாள் தனலட்சுமி.

“உங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லையே! நீங்க சந்தோஷமா தானே இருக்கீங்க?” எனக் கேட்டாள். 

— தொடரும்