மாய உணர்வுகள் – 5
“என்னங்க இன்னிக்கு கொஞ்சம் வெளில போக வேண்டியது இருக்கு! காசு வேணும்! என் அக்கவுண்ட்ல போட்டுடுறீங்களா?” எனக் கேட்டாள் தனலட்சுமி.
அவளை ஒரு நிமிடம் அமைதியாய் பார்த்த ராஜராஜன் சரியென தலையசைத்தவாறு அலுவலகத்திற்கு கிளம்பினான்.
இன்னும் இரு நாட்களில் வரப் போகும் கார்த்திக்கின் பிறந்தநாளுக்காக பரிசு வாங்கும் திட்டத்தை பற்றி உரையாடினர் அந்த பெண்கள் குழுவினர்.
ஆனால் தனலட்சுமிக்கு அக்குழுவுடன் இணைந்து செயல்பட விருப்பமில்லை ஆதலால் அவனுக்காக ஏதேனும் பிரத்யேகமான பரிசு வாங்கி நேரிலேயே வழங்கலாம் என திட்டமிட்டிருந்தாள்.
அப்பரிசினை வாங்குவதற்காக மதியம் இரண்டு மணியளவில் கிளம்பியவள், கார்த்திக்குடன் கைபேசியில் குறுஞ்செய்தி மூலமாக அளவளாவியவாறே அவளின் இருப்பிடத்தில் இருந்து வாடகை மகிழுந்தின் மூலம் பயணப்பட்டு சற்று தொலைவில் இருந்த ஒரு கடைக்கு சென்று நின்றாள்.
“என் ஃப்ரண்ட் ஒருத்தருக்கு கிப்ட் வாங்க வந்தேன் கார்த்திக். என்ன வாங்கலாம்னு ஏதாவது ஐடியா சொல்லுங்க” என அவனிடமே கேட்டாள்.
அதற்கு அவன் அளித்திருந்த பதிலை பார்த்தவாறு அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தவள், அவன் கூறியவற்றில் ஒரு பொருளை வாங்கி அந்த கடையை விட்டு வெளியே வர, இவர்களது கார் இவளை கடந்து சென்றது.
ராஜராஜனின் அருகில் முன் இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதும் தெரிந்தது. அதி முக்கியமாக அந்த பெண்ணுடன் ராஜராஜன் சிரித்து பேசி கொண்டிருப்பது போலும் கண்டாள்.
நொடியில் கடந்து சென்ற மகிழுந்தில் காணக்கிடைத்த இந்த காட்சியில் ஒரு நிமிடம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் தனலட்சுமி.
“ம்ப்ச் அது வேற யாரோவா இருக்கும்” தன்னையே தேற்றிக் கொண்டவளாய் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வழி கூறினாள்.
போகும் வழியில் அதே மகிழுந்து ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நிற்பதை கண்டவள், ஆட்டோ ஓட்டுனரிடம் அவசரமாக நிறுத்துமாறு உரைத்து காத்திருக்குமாறு கூறி விட்டு அந்த இடத்திற்குள் நுழைந்தாள்.
உள்ளே சுற்றி முற்றி ராஜராஜனை தேடியவள், மளிகை பெருட்கள் வாங்கும் இடத்தில் அவனிருப்பதை கண்டு அங்கு செல்ல,
“பில் சரியா போட்டிருக்கியா பாரு! பாதாம் முந்திரிலாம் பில்ல இல்லையே! அதெல்லாம் வேண்டாமா?” என அருகிலிருந்த பெண்ணிடம் அவன் கேட்கும் குரல் காதில் விழ, அப்படியே நின்று விட்டாள்.
அவனருகில் இருக்கும் பெண்ணை, இதற்கு முன் வேறெங்கும் கண்டதாய் நினைவில்லை இவளுக்கு.
அங்கு அடுக்கி வைத்திருந்த பொருட்களை வேடிக்கை பார்த்தவாறே சென்ற அந்த பெண் கால் இடறி அவன் மேலேயே விழ, அவளை பிடித்து நிறுத்தியவன், “மேக்கப் ஐட்டத்தை பார்த்ததும் கால் தரைல நிக்கலை போலயே” என வாய்விட்டு சிரித்தவாறு அவளை கேலி செய்ய,
“ராஜ்” என அவனின் புஜத்தில் போலியாய் குத்தியவள், “இங்க எங்க மேக்கப் ஐட்டம் இருக்காம்” என முறைத்தவள், “மிஸ்டர் ஒப்பிலி என்னை கேலி செய்றதுனா மட்டும் உங்க வாய் எட்டூருக்கு நீளுதே எப்படி?” என புருவத்தை உயர்த்தி கேட்டாள்.
ராஜராஜனின் கேலி பேச்சிலும் அந்த பெண்ணின் உரிமையான அழைப்பிலும் அதிர்ந்து நின்றாள் தனலட்சுமி.
‘கல்யாணமான இத்தனை மாசத்துல ஒரு நாளாவது இப்படி நம்மகிட்ட பேசிருப்பாரா! ஏதோ கேட்கிறதுக்கு பதில் சொல்லுவாரு. அவரா ஒரு வார்த்தை பேசியிருப்பாரா? எனக்கு என்ன ஏது பிடிக்கும்னாவது அவருக்கு தெரியுமா? இந்த பொண்ணுக்கு மேக்கப் செய்றது பிடிக்குங்கிற வரைக்கும் தெரிஞ்சு வச்சி கிண்டல் வேற செய்றாரு! இவருக்கு இப்படிலாம் பேச வருமா? யாரு இந்த பொண்ணு? வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி பில்லாம் எழுதிட்டு வந்திருக்காங்களே! அப்ப அந்த பொண்ணு வீட்டுக்கு தான் இவர் மளிகை வாங்க வந்தாரா?”
பரபரவென ஓடிய எண்ணங்களின் சுழற்சியிலும் அதீத அதிர்ச்சியிலும் தலை சுற்றுவது போலவும், உடல் அந்தரத்தில் மிதப்பது போலவும் தோன்ற, வேக வேகமாக அங்கிருந்து அகன்று ஆட்டோவில் ஏறி கொண்டவள், வீட்டிற்குள் சென்று படுக்கையில் விழுந்ததும் இத்தனை நேரமாய் உள்ளிழுத்து அடிக்கியிருந்த கண்ணீரை மடையென திறந்து விட்டாள்.
“அதெப்படி அவர் என்னை விட்டு வேற பொண்ணுக்கிட்ட அப்படி உரிமையா பேசலாம்! தனலட்சுமியை தனம்னு கூட சுருக்கி கூப்பிட்டதில்லை! அந்த பொண்ணை பாருனு சொல்றாரு! என் புருஷனுக்கு இவ்ளோ சத்தமா சிரிக்க தெரியும்னே இன்னிக்கு தான் எனக்கு தெரிஞ்சிது” மனதினுள் பேசி கொண்டவளாய் அழுது கரைந்தவள்,
‘இன்னிக்கு வரட்டும்! அவரை நான் கேட்காம விட மாட்டேன்’ என சூளுரைத்து கொண்டாள்.
அழுதழுது கண்கள் வீங்கி உறங்கி எழுந்தவள், மாலை ஏழு மணியளவில் முகத்தை கழுவி இரவுணவை தயார் செய்தாள்.
வழமை போல் வீட்டிற்கு வந்ததும், உணவுப்பையை அவளிடம் வழங்கிய ராஜராஜன் அவளின் முகத்தில் தெரிந்த அதீத சோர்வையும், வீங்கிய கண்களையும் பார்த்தவாறு, “சாப்பிட்டியா தனலட்சுமி?” எனக் கேட்டான்.
“இல்லை” என தலையசைத்தவாறு சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் அவள்.
இவன் குளித்து முடித்து உண்ண வந்த நேரம், அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள், படுக்கையறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள்.
“தனலட்சுமி” என அவன் சத்தமாய் அழைத்ததில், உடல் திடுகிட கட்டிலில் இருந்து எழுந்தவள், ‘இவ்ளோ சத்தமா இது வரைக்கும் இவர் கூப்பிட்டது இல்லையே! ஒரு வேளை என்னை அந்த சூப்பர் மார்க்கெட்ல பார்த்திருப்பாரோ? நம்ம கேட்குறதுக்கு முன்னாடி அவரே கேட்கலாம்னு முந்திக்கிறாரோ?’ என எண்ணியவாறே, வரவேற்பறையில் அவனருகே சென்று நின்றாள்.
அவளின் கைப்பற்றி தன்னருகே அமர்த்தி கொண்டவன், தனது தட்டில் இருந்து தோசையை பிய்த்து அவளின் வாயருகே கொண்டு சென்றான்.
அவள் முழித்தவாறு அவனை நோக்க, “இன்னும் சாப்பிடலை தானே” என அவன் கேட்க, ஆமாம் என தலையசைத்தவாறு வாயை திறந்தவள் அவனளித்த உணவை கண்களில் கசிந்த மெல்லிய நீருடன் வாங்கி கொண்டிருந்தாள்.
“நான் சாப்பிடும் போது நீ பக்கத்துல இருக்கனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை தெரியுமா? நீ பாட்டுக்கு சாப்பாடுலாம் டைனிங் டேப்பிள்ல எடுத்து வச்சிட்டு பெட்ரூம்ல போய் ஏதாவது புக் படிக்க போய்டுவியா, உன்னை டிஸ்டர்ப் பண்ணவும் மனசு வராது. அதனால நான் ஹால்ல டிவி பார்த்துட்டே சாப்பிட்டு முடிச்சிடுவேன். இன்னிக்கு நீ சாப்பிடலைனு சொன்னது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா!” அவளிடம் பேசியவாறே அவளுக்கு ஊட்டி கொண்டிருக்க, அவளும் சுற்றம் சூழல் இடம் பொருள் அனைத்தையும் மறந்து அவனின் முகத்தில் மட்டுமே தனது பார்வையை பதித்து அவனளித்த உணவை வாங்கி கொண்டிருந்தாள்.
அவனும் உண்டு முடித்த பிறகு அவளிடம் ஒரு கவரை வழங்கியவன், “நாளைக்கு நீயும் என் கூட ஆபிஸ்க்கு வரனும் தனலட்சுமி. ஆபிஸ்ல ஒரு ஃபங்ஷன் இருக்கு. மேனேஜர் என்னை கண்டிப்பா பேமிலியோட வரனும்னு சொல்லிருக்காரு. வருஷா வருஷம் தனியா தான் இந்த ஃபங்ஷன்ல கலந்துப்பேன் தனலட்சுமி. எனக்குனு தான் குடும்பம்னு யாரும் இல்லையே” என வருத்தமாய் உரைத்து நிறுத்த,
அவனின் வருத்தம் இவளை கலங்க செய்தது. அவனின் உணர்வுகள் தன்னை ஏன் இந்தளவிற்கு பாதிக்கிறது என்ற கேள்வியுடனும் சிந்தனையுடனேயே அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவள்.
வருத்தத்தில் உடைந்த குரலை சரி செய்தவன், “வேலைக்கு சேர்ந்த இத்தனை வருஷத்துல இந்த வருஷம் தான் முதல் முறையா எனக்குனு இருக்க என் குடும்பத்தோட போக போறேன். எனக்காக வருவியா தனலட்சுமி?” என அவள் கண்களை பார்த்து கேட்டான்.
“வருவேன்ங்க” என்றாள்.
“அந்த ஃபங்ஷன்ல நீ போடுறதுக்கான டிரஸ் இது” என அவளிடம் அளித்த கவரை பார்த்து உரைத்தான்.
அந்த கவரை பிரித்து பார்த்தவளுக்கு இளமஞ்சள் நிறத்தில் அளவான வேலைப்பாட்டுடன் இருந்த கவுன் மாடல் சுடிதார் மிகவும் பிடித்திருந்தது.
அந்த துணியினை பார்த்து கொண்டிருந்த அவளின் முகவுணர்வுகளை கண்டு மகிழ்வுற்றவனாய், “பிடிச்சிருக்கா?” எனக் கேட்டான்.
“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
என்றுமில்லாமல் ராஜராஜன் இத்தனையாய் பேசி தனது உணர்வுகளை பகிர்ந்து அளவளாவியதில், பாருவை பற்றி அவனிடம் கேட்கும் எண்ணமே வரவில்லை அவளுக்கு.
இவள் சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்து படுக்கையறையில் படுக்கவும், அவளை அணைத்தவாறு உறங்கி போனான் ராஜராஜன்.
‘கல்யாணமான இந்த அஞ்சு மாசத்துல இன்னிக்கு தான் இவர் இவ்ளோ பேசியிருக்காரு. ஒரு வேளை நான் அவரை கேள்வி கேட்டுட கூடாதுனு என்னை டைவர்ட் பண்ண தான் ஊட்டி விட்டு டிரஸ்லாம் வாங்கி கொடுத்து அவருக்குனு யாரும் இல்லனு சென்ட்டியாலாம் பேசினாரோ?’
ராஜராஜனின் செயலை நல்ல விதமாய் யோசிக்க இயலாமல் மனம் கவலையுற, மனத்தினை திசை மாற்றும் பொருட்டு கைபேசியை எடுத்தாள்.
கடைசியாய் பரிசு வாங்கிய கடையில் இருந்து கிளம்பியப் பின் கார்த்திக் வரிசையாய் அனுப்பிருந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.
“வீட்டுக்கு போய்ட்டீங்களா லக்ஸ்?”
“??”
இரவு ஏழு மணியளவில்,
“லக்ஸ்ஸு இன்னுமா வீட்டுக்கு போகாம இருக்கீங்க?”
சிறிது நேரம் கழித்து,
“ஒரு வேளை உங்க போன் தொலைஞ்சி போய்டுச்சா? இவ்ளோ நேரம் பார்க்காம இருக்க மாட்டீங்களே! இங்க பார்க்கலைனாலும் மெசெஞ்சர்ல பார்ப்பீங்களே! அங்கயும் ரிப்ளை வரலையே” என யோசிக்கும் ஸ்மைலிக்களை சிதற விட்டிருந்தான்.
இந்த செய்திகளை எல்லாம் பார்த்த பிறகும் ஏனோ அவனுக்கு பதில் அனுப்ப மனம் வரவில்லை அவளுக்கு.
ராஜராஜனை பாருவுடன் கண்ட பொழுதினில் இருந்து அவளின் உடல் பொருள் ஆவி அனைத்துமே அவனை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததில் கார்த்திக்காக வாங்கியிருந்த பரிசு, கார்த்தியின் பிறந்தநாள் என அனைத்துமே அவள் நினைவினை கவராது பிந்தி போனது.
பதில் அனுப்பாது, மெசெஞ்சர் சென்று அவன் அனுப்பியதாய் கூறியிருந்த குறுஞ்செய்திகளை கூட காணாது, கைபேசியை அருகில் இருந்த மேஜை மீதி வைத்தாள்.
மனம் முழுவதும் ராஜராஜனே ஆட்சி செய்ய, “மாமா நீங்க எனக்கு மட்டும் தான்” என அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
மறுநாள் தனக்கு வைத்திருக்கும் அதிர்ச்சிகளை அறியாது அவனின் அணைப்பினுள் அடங்கியவாறு உறங்கி போனாள் தனலட்சுமி.
— தொடரும்