மாய உணர்வுகள் – 4

“அம்மா நானும் இன்னிக்கு சாயங்காலம் உன் கூட கோவிலுக்கு வரேன்” என்றான் கார்த்திக்.

“என்னடா அதிசயமா இருக்கு? சித்திரை வெயில்ல வெளில மழை எதுவும் பெய்யுதா என்ன?” ஜன்னலை எட்டி பார்த்தவர் அவனை நோக்கி நடந்தவாறு, “நானே கூப்டாலும் வர மாட்ட! இன்னிக்கு என்ன நீயே வரேன்னு சொல்ற?” எனக் கேட்டார்.

“வரேன்னு சொன்னா சரினு போவியா! ஏன் இவ்ளோ கேள்வி கேட்டுட்டு இருக்க!” என்றவாறு மடிகணிணியில் வேலை பார்த்து கொண்டிருந்தான்.

“என் புருஷன் மட்டும் இருந்திருந்தா இந்நேரம் இப்படி நீ என்னை தூக்கி எறிஞ்சு பேசுறதுக்கு உன்னை அடிச்சு வெளுத்துருப்பாரு” என வாயை சுழித்தவாறு அவர் கூற,

“ஆமா வெளுப்பாரு வெளுப்பாரு! என் கை பூ பறிக்கும் பாரு” என்றான் கார்த்திக். 

“எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷனை அடிப்பேன்னு என்கிட்டயே சொல்லுவ” என அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி அடிக்க,

“அம்மாஆஆஆ” என வலியில் முகத்தை சுருக்கியவாறு முதுகை நெளித்தவனோ, “செத்து போன புருஷனுக்கு இன்னும் வரிஞ்சு கட்டிட்டு வந்து சண்டை போடுறதை பாரு” என கடுப்பாய் உரைத்தான். 

“பேச்சை பாரு!” என அங்கிருந்து நகர்ந்தார் மேகலா. 

தந்தையின் இறப்புக்குப் பின் தாயை இயல்புக்கு கொண்டு வர இவ்வாறாக பேச ஆரம்பித்தவன் இன்று வரை அதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறான்.

மாலை ஐந்து மணியளவில் பரந்து விரிந்த அந்த பெரிய சிவன் கோவிலுக்குள் நுழைந்தனர் கார்த்திக்கும் மேகலாவும். 

வளாகத்திற்குள்ளேயே அமைந்திருந்த தோட்டத்திற்குள் இருந்த திண்டில் கார்த்திக் அமர்ந்திருக்க, மேகலா சென்று இறைவனை தரிசித்து விட்டு பிரகாரத்தை சுற்றி வந்தார். 

சாமியை சேவித்துவிட்டு கார்த்திக் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த மேகலா, அவனருகில் ஒரு பெண் அமர்ந்து சிரித்தவாறு பேசி கொண்டிருப்பதை கண்டார். 

‘இந்த பொண்ணை பார்க்க தான் கோவிலுக்கு வரேன்னு சொன்னானா? இது தெரியாம நம்ம இத்தனை நாளா கெஞ்சுறதுனால, மனசு இறங்கி வந்துட்டான்னு நினைச்சு பூரிச்சு போய்ட்டோமே’ என நொந்து கொண்டவாறு அவனருகில் சென்றார். 

“தாரா இவங்க தான் என் அம்மா” என்று தனது தாயை அறிமுகம் செய்து வைத்தவன்.

“அம்மா! இவ பவித்ரா! என்னோட ஃபேஸ்புக் ஃப்ரண்ட்” என்றான்.

அந்த பெண்ணிடம் நட்பாய் புன்னகை புரிந்தவர், “நல்லாருக்கியாமா?” என கேட்டு கொண்டே, கார்த்தியின் நெற்றியில் திருநீரை பூச செல்ல, இவனோ அந்த பெண்ணின் பின்னே நின்று வேண்டாமென தலையை ஆட்டியவாறு முறைக்க, ‘இந்த சான்ஸை எப்படி நான் மிஸ் பண்ணுவேன் மவனே’ மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவராய், அவனின் நெற்றியில் திருநீரை வைத்திருந்தார். 

பவித்ராவின் முன் தன் எதிர்ப்பை காண்பிக்க இயலாது பல்லை கடித்தவாறு தாயை அவன் முறைக்க, மேகலாவோ தாராவின் அருகில் அமர்ந்து, “இந்த பையனுக்கு நீயாவது புத்தி சொல்லுமா! கோவிலுக்கு கூப்பிட்டாலே வர மாட்டேங்கிறான். சாமினுலாம் ஒன்னும் கிடையாது.  அவங்கவங்க கையில தான் அவங்க வாழ்க்கை இருக்குனு தத்துவம் பேசுறான்” என புகாரளிக்க,

“அம்மாஆஆஆ” என பல்லை கடித்தவன், ‘இதுக்கு மேல இங்கிருந்தா இந்த அம்மா என் மானத்தை வாங்காம விட மாட்டாங்க’ என எண்ணியவனாய், “நான் பிரசாத ஸ்டால்ல போய் பிரசாதம் வாங்கிட்டு வரேன்” என்று கூறி நகர்ந்தான். 

அவன் சென்றப்பின் அந்த பெண்ணிடம் திரும்பிய மேகலா, “உனக்கு எப்படிமா கார்த்திய தெரியும்?” எனக் கேட்டார்.

“ஃபேஸ்புக்ல தான்மா”

“எப்படிமா ஃபேஸ்புக்ல நம்பி பசங்ககிட்ட பேசுறீங்க” என்று பவித்ராவின் முகத்தை நோக்கியவாறு கேட்டார்.

‘என்ன இப்படி கேட்குறாங்க’ என்பது போல் அவரை பார்த்தவள், “இது வரைக்கும் நான் பேசினதுல கார்த்திக் வரம்பு மீறி பேசினது இல்லமா! ஒரு பையன் பேசும் போதே அவன் என்ன நோக்கத்தோட தன்கிட்ட பேசுறான்னு கண்டுபிடிக்க தெரிஞ்ச பொண்ணு தான்மா நான்!” என்று நிறுத்தியவள்,

“அப்புறம் நான் என்னமோ ஃபேஸ்புக்ல இருக்கிற பசங்ககிட்டலாம் தேடி போய் பேசிட்டு இருக்கிறதா நினைக்க வேண்டாம்! கார்த்திக் தான் என்கிட்ட முதல்ல வந்து பேசினாரு” வெடுக்கென உரைத்தாள். 

“அய்யோ அப்படி இல்லமா. தெரியாத பையனை நேர்ல பார்க்க வந்திருக்கியே! உன்னோட பாதுகாப்பு முக்கியமில்லையா! அதனால தான் கேட்டேன்” என்றவர்,

“உன் வீடும் இங்க தான் பக்கத்துல இருக்காமா?” எனக் கேட்டார்.

“இல்லம்மா! இங்க ஒரு ஃப்ரண்ட்டை பார்க்க வந்தேன்.  கார்த்திக் வீடும் இங்க தான் இருக்குனு சொன்னாங்க. அதான் கோவில்ல மீட் செய்யலாம்னு சொன்னேன்” என்றாள். 

‘ஓ நான் கூப்பிட்டா கோவிலுக்கு வரது வேப்பிலை சாப்பிட்டா மாதிரி கசக்குமே அவனுக்கு! இந்த பொண்ணு கூப்பிட்டதும் ஜாங்கிரி சாப்பிட்டா மாதிரி இளிச்சிட்டு வந்திருக்கான்’ மனதிற்குள்ளாகவே கூறி கொண்டார்.

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா மா?” எனக் கேட்டார்.

“ஆகிடுச்சு மா! நான் இங்க ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறேன்.  ஹஸ்பண்ட் வெளிநாட்டுல இருக்காரு” என்றவள் மிக ஆர்வமாய்,

“கார்த்திக்கு எதுவும் அலையன்ஸ் வந்துச்சா மா!” எனக் கேட்டாள். 

“இல்லமா பார்த்துட்டே தான் இருக்கோம். எதுவும் செட் ஆகலைமா.  எனக்கு இப்ப இருக்க ஒரே கவலை அது தான்மா” என்று கவலையாய் அவர் கூற,

“கார்த்திக் கூட அடிக்கடி இதை சொல்லி வருத்தப்படுவாங்க.  அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா தாழ்வு மனப்பான்மை வர ஆரம்பிச்சிட்டு. நான் அப்பப்ப பேசி தேத்துவேன் மா” என்றாள். 

கார்த்திக் கை நிறைய பிரசாதத்துடன் வருவதை கண்டு புன்னகைத்தனர் இருவரும். 

கார்த்திக்காக வாங்கியிருந்த பிரத்யேக பரிசினை அவனிடம் அளித்து விட்டு விடைபெற்று சென்றாள் பவித்ரா. 

“சரி நாம கிளம்பலாமா மா?” என கேட்டான் கார்த்திக்.

“கார்த்தி உன்கிட்ட சில விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு! இங்கேயே பேசிடலாம்” என்றபடி மரத்தினூடே இருந்த திண்டில் சென்று அமர்ந்தார் மேகலா.

“என்கிட்ட என்ன பேச வேண்டி இருக்கு?” என கேட்டவாறு அவரின் பின்னேயே சென்றவன் அருகில் அமர்ந்தான். 

அவனை நோக்கி திரும்பி அவன் முகத்தை பார்த்தவர், “பொண்ணுங்க மனசு பத்தி தெரியுமா கார்த்தி உனக்கு” எனக் கேட்டார். 

“என்னமா சம்பந்தமில்லாம பொண்ணுங்க மனசை பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க.  அதை தெரிஞ்சி நான் என்ன பண்ண போறேன்” எனக் கேட்டான். 

“எந்த மாதிரியான பொண்ணா இருந்தாலும்…. அதாவது சாஃப்ட், ஸ்ட்ராங், போல்ட், பயந்த சுபாவம் இப்படி எந்த மாதிரியான பொண்ணா இருந்தாலும் அவங்க ஏமாந்து போறது ஒரே ஒரு விஷயத்துல தான் தெரியுமா!” என்றவர் நிறுத்த,

“என்னது அது?” எனக் கேட்டான் கார்த்திக்.

“கேரிங்!”

“அன்பும் அக்கறையும் தான்”

“அவளுக்கான அக்கறையான வார்த்தைலயே அவளை ஏமாத்திடலாம்! நீ அதை தான் செஞ்சிட்டு இருக்க கார்த்திக்” என்றார் காட்டமாய். 

“அம்மா! அப்ப நான் பொண்ணுங்களை ஏமாத்திட்டு இருக்கேன்னு சொல்றீங்களா?” என கோபமாய் கேட்டவாறு எழுந்து நின்றான்.

“ஆமாடா ஏமாத்திட்டு தான் இருக்க! பொண்ணோட உடம்பை கெடுக்கிறது மட்டும் ஏமாத்துறது இல்லை. மனசை கெடுக்கிறதும் ஏமாத்துறது தான்” என்றார் கோபமாய். 

“லூசு மாதிரி பேசாதமா. நான் என்னமோ எல்லாரையும் லவ் பண்ணி ஏமாத்திட்டு இருக்க மாதிரி சொல்லிட்டு இருக்க! எல்லார்கிட்டயும் அக்கா தங்கச்சி ஃப்ரண்டுன்ற முறைல தான் பழகிட்டு இருக்கேன்” என பொரிந்தான் கார்த்திக்.

“ஆமாடா உன்னை பெத்துருக்கேன்ல. லூசு அம்மாவோட பையன் மட்டும் எப்படி டைட்டா இருப்பான்” என சொல்லி அவர் முறைக்கவும்,

“அம்மாஆஆ” என பல்லை கடித்தான். 

“நான் சொல்றது லவ் பண்றதை பத்தி இல்லடா கார்த்தி. அக்கா தங்கச்சின்ற பேருல ஒரு பொண்ணு பேசுறதுக்கு கிடைச்சா போதும்னு அக்கறையா பேசி ஃப்ரண்ட்டாக்கி கடலை போடுறதை பத்தி சொல்றேன்” எனவும், திருதிருவென முழித்தான் அவன்.

“நான் கடலை போடுறேன்னு எப்படி சொல்றீங்க?” உள்ளே போன குரலோடு கேட்டான்.

“வீட்டுல இருந்து வேலை பார்க்கிற இந்த இரண்டு வருஷம் முழுக்க நீ எத்தனையோ பொண்ணுங்ககிட்ட போன்ல பேசுறதை கேட்டிருக்கேன். இது கூட கணிக்க தெரியாதா எனக்கு” என்றவர் மேலும் தொடர்ந்து,

“அன்பு காட்டுறேன், அக்கறை காட்டுறேன்னு உன்னோட தனிமையையும் விரக்தியையும் போக்கிக்க நீ மத்த பொண்ணுங்ககிட்ட வைக்கிற நட்பு அந்த பொண்ணுங்களுக்கு மனரீதியாவும் அவங்களோட திருமண வாழ்க்கைலயும் நிறைய பிரச்சனையை உருவாக்கும்னு சொல்றேன்” என்றார். 

“அம்மா நான் இது வரைக்கும் யாருகிட்டயும் தரக்குறைவாவோ தவறான எண்ணத்தோடயோ பேசினதில்லை.  என்னை தோழனா, அண்ணனா,  தம்பியா, அவங்க வீட்டுல ஒருத்தனா ஏத்துக்கிட்டவங்களை தோழியா நினைச்சு நான் அவங்ககிட்ட அக்கறையா பேசுவேன் பழகுவேன். அவ்ளோ தான்”

“ஏன்டா இந்த அக்கறையான பேச்சை என்கிட்ட என்னிக்காவது உட்கார்ந்து பேசிருக்கியா? நான் எந்தந்த வேளைல என்னென்ன மாத்திரை போடுறேன்னாவது தெரியுமா?
முதல்ல வீட்டுல உள்ளவங்ககிட்ட அக்கறையை காமிங்கடா! அதுக்கு பிறகு வெளில உள்ளவங்ககிட்ட உங்க அன்பை பொழியலாம்” என்றார் நக்கலாக. 

“ம்ம்மா ஓவரா தான் நக்கல் பண்ற நீ! நம்ம கிளம்புவோம் வா” என கோபத்தில் சிவந்த முகத்துடன் அவன் எழுந்து கொள்ள,

“நான் கேட்குற ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு நாம கிளம்பிடலாம்” என்றவர்,

“இப்ப உன்னை வந்து பார்த்துட்டு ஸ்பெஷல்லா கிப்ட்லாம் கொடுத்துட்டு போச்சே தாரா பொண்ணு, அந்த பொண்ணோட புருஷனுக்கு நீ அந்த பொண்ணுக்கிட்ட பேசுறது தெரியுமா?” எனக் கேட்டார். 

“ம்ப்ச்” என உதட்டை பிதுக்கியவன்,

“தெரியாது! அதாவது அவருக்கு தெரியுமா தெரியாதானுலாம் எனக்கு தெரியாது! தட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ்மா” என தோளை குலுக்கினான். 

அவனின் பதிலில் கடுப்பானவராய், “டேய் அந்த பொண்ணோட புருஷனுக்கு தெரிய வந்து, என்னமோ நீ அந்த பொண்ணுக்கு கள்ள காதலன்னு நினைச்சா என்னடா பண்ணுவ?” எனக் கேட்டார்.

“ம்மாஆஆஆ தப்பா பேசாதம்மா! இதோட இதை பத்தி பேசுறதை நிறுத்திக்கோ! நான் யார்க்கிட்டயும் தப்பா பேசுலை பழகலை. அதை மட்டும் மனசுல வச்சிக்கோ சரியா” என்றவாறு அங்கிருந்து நகர்ந்து விட்டான். 

செல்லும் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருந்த திண்டிலிருந்து இறங்கிய மேகலாவிற்கு தான் “புரிஞ்சிக்க மாட்டேங்கிறானே” என எரிச்சலானது. 

கோவிலுக்கு சென்றப்பின் வாசிக்காது வைத்திருந்த குறுஞ்செய்திகளை, அன்றிரவு படுத்தப்பின் எடுத்து பார்த்தான் கார்த்திக்.

அதில் தனலட்சுமியிடம் பவித்ராவை காண கோவிலுக்கு செல்வதாய் அவன் உரைத்திருந்த செய்திக்கு பின்,  அவள் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தான். 

“பவித்ராவும் என்னை போல உங்களுக்கு ஃப்ரண்ட்னு புரியுது.  இப்படி நிறைய ஃப்ரண்ட் உங்களுக்கு இருக்காங்கனும் புரியுது. எனக்கு முன்னாடி பல வருஷமா உங்ககிட்ட பேசி பழகிட்டு இருக்க பொண்ணுங்களுக்கு தான் நீங்க முன்னுரிமை அளிப்பீங்கனும் புரியுது.  ஆனாலும் இவ்ளோ புரிஞ்சும் என் மேல நீங்க காட்டுற அன்பு மத்த பொண்ணுங்ககிட்ட நீங்க காட்டுறதை விட ஒரு சதவீதமாவது அதிகமா இருக்கனும். உங்களுக்கு நான் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலா இருக்கனும்னு தோணுதே! இது சரியா தப்பானு கூட தெரியலை கார்த்திக். என் மனசுல நீங்க நல்ல நண்பரா மட்டும் தான் இருக்கீங்க. நான் வணங்குற சாமி மேல சத்தியம்.  நண்பர் மட்டும் தான்.  ஆனா அந்த நண்பரோட அன்பும் அக்கறையும் எனக்கு அதிகமாக கிடைக்கனும்னு மனசு தவிக்கிறதை என்னனு புரிஞ்சிக்கனு எனக்கு தெரியலை கார்த்திக்! இப்ப நீங்க பவித்ராவை பார்க்க போறேன்னு சொன்னது ஒரு மாதிரி என் மனசை கவலைக்குள்ளாக்குது.  அதான் மனசுல தோணினதுலாம் சொல்லிட்டேன்.  தப்பா இருந்தா சாரி” என்று அனுப்பியிருந்தாள்.

அவள் அனுப்பியிருந்த பதிலை பார்த்தவனுக்கு, தாய் உரைத்த விடயங்கள் காதினுள் ஒலிக்க, தான் செய்வது தவறோ என்ற எண்ணம் முதல் முறையாக தோன்றியது.

— தொடரும்