மாய உணர்வுகள் – 3
“தேங்க்ஸ் ஃபார் தி கைண்ட் வேர்ட்ஸ் சிஸ்டர்! எப்பவுமே நான் தான் மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்லி சிரிக்க வச்சிட்டு இருப்பேன். இன்னிக்கு என்னமோ எனக்கே மனசு சரியில்லாம போச்சு. அதான் போஸ்ட் போட்டேன்” என நன்றி பகர்ந்திருந்தான் கார்த்திக் அவளின் மெசெஞ்சரில்.
“இதுல என்னங்க இருக்கு! யாராவது நம்ம மன பாரங்களைக் கேட்க இருக்க மாட்டாங்களானு அந்த யாரோ ஒருத்தருக்காக மனசு ஏங்கி கிடக்கும் போது இப்படி யாரோ மூலமாய் வரும் ஒரு வார்த்தை எவ்ளோ நிம்மதியை தரும்னு எனக்குப் புரியதுங்க பிரதர்” எனத் தட்டச்சுச் செய்து அனுப்புவித்தாள்.
அவள் இதனைத் தட்டச்சு செய்வதற்குள்ளாகவே அவளின் பிரோபைலை பார்வையிட்டவன் அவளுக்கு நட்பழைப்பும் விடுத்திருந்தான்.
அதனை ஏற்றுக் கொண்டவளுக்குத் தனது வாட்ஸ்சப் எண்ணை அளித்து, “மெசஞ்சர் ரொம்ப ஹேங் ஆகுதுங்க. வாட்ஸ்சப்ல மெசேஜ் செய்றீங்களா?” எனக் கேட்டிருந்தான்.
அவனுக்குத் தனது அலைபேசி எண்ணை வழங்க ஒரு நிமிடம் தயங்கியவள், ‘அதான் இத்தனை பொண்ணுங்க அவர்கிட்ட பேசுறாங்களே! நம்பிக்கையானவரா தான் இருப்பாரு’ எனத் தனக்கே சொல்லி கொண்டவளாய் அவனளித்த எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் ஹாய் என அனுப்பியவள், அவனின் எண்ணை சேமிக்கும் பொருட்டு எதையோ அழுத்த அது அழைப்பாய் மாறி அவனுக்குச் சென்றிருந்தது.
ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறதே என எண்ணி தான் அந்த அழைப்பை ஏற்றிருந்தான் கார்த்திக்.
“ஹலோ யார் பேசுறது?” எனக் கார்த்திக் கேட்க,
“நான் தான்ங்க தனலட்சுமி! தெரியாம கால் வந்துடுச்சு” எனச் சொல்லவும்,
“ஓ இதான் உங்க நம்பரா? சரி சேவ் பண்ணிக்கிறேன்” என்றவனோ,
“உங்க குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு” என்று ரசனை பாவனையில் உரைத்தான்.
“நன்றி பிரதர்” என்றவளோ கணவனின் கைபேசி அழைப்பை கவனியாது விட்டிருந்தாள்.
“அப்புறம் உங்களைப் பத்தி சொல்லுங்க! எங்க இருக்கீங்க? என்ன செய்றீங்க?” எனக் கேட்டவனிடம்,
“அதெப்படிங்க பேசின உடனேயே உங்ககிட்ட என் டீடெய்ல்ஸ்லாம் சொல்லுவேன்னு நினைக்கிறீங்க” என காட்டமாகவே கேட்டாள்.
“நல்லவனுக்கு நல்லது தான் நடக்கும்னு சொன்னீங்களே, அப்ப என்னை நல்லவனா நினைக்கலையா நீங்க?” எனச் சோகமான பாவனையான குரலில் அவன் கேட்க,
“இல்ல அப்படிச் சொல்லலை” என இவளின் குரல் உள்வாங்கியது.
“வேற எப்படி நினைச்சீங்க சிஸ்டர்? ரொம்ப மோசமான டெரரான கெட்ட பையன்னு நினைச்சீங்களோ! இந்தப் பால் வடியுற முகத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது உங்களுக்கு” என்று அவன் கேலியாய் கூறவும், வாய்விட்டு சிரித்தவளோ,
“இல்ல கொடூர அரக்கன் மாதிரி இருக்கு” என்றாள்.
உடனே அவளின் புலனத்திற்குத் தனது புகைப்படத்தை அனுப்பியவன், “என் மூஞ்சை நல்லா பார்த்துட்டு சொல்லுங்க! நான் அரக்கன் மாதிரியா இருக்கேன்” எனக் கேட்டான்.
அவனின் படத்தைப் பார்த்தவளின் இதழ் தானாய், “இல்லங்க ஹீ…” என ஆரம்பித்தவள், “அழகான வில்லன் மாதிரி இருக்கீங்க” என வம்பிழுத்தவாறு முடித்தாள்.
“அப்படியும் அந்த வில்லனை விட மாட்டீங்க! எப்படியோ அழகுனு ஒத்துக்கிட்டீங்களே! அது வரைக்கும் சந்தோஷம் தான்” என்றவன், தனது சுய புராணத்தை உரைக்கலானான்.
“அப்பா நான் காலேஜ் முடிச்சி வேலைக்குப் போக ஆரம்பிச்ச வருஷத்துல இறந்துட்டாங்க. அம்மா டிகிரி படிச்சிருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு அப்பா தான் உலகம்னு வாழ்ந்துட்டாங்க. வெளி உலகம் தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதுலாம் வீடு குடும்பம் மட்டும் தான். வீடு கட்டிட்டு இருந்தோம் கொஞ்சம் கடன்லாம் வேற இருந்துச்சு அப்போ! அதனால எல்லாம் முடிச்சிட்டுக் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருந்ததில் வயசு போனது தெரியலை. இப்ப பொண்ணு தேடினா கிடைக்க மாட்டேங்குது. அவ்ளோ சம்பாதிச்சும் சொந்த வீடு மட்டும் தாங்க எனக்குனு இருக்கு. அப்பாவோட கடனை அடைக்கவும் லோனை கட்டவுமே சரியா இருக்குச் சம்பளம். கட்டிக்கப் போற பொண்ணுக்கிட்ட உண்மையா இருக்கனும்னு இதெல்லாம் நான் பொண்ணு பார்க்கும் போதே சொல்லிடுறது. அவங்க கேட்டுட்டு காசு இல்லாத பையன் எதுக்குனு வேண்டாம்னு சொல்லிடுறாங்க” பெருமூச்சுடன் கூறி முடித்தான்.
“எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நல்லபடியா நடக்கும்ங்க. கவலைப்படாதீங்க” ஆறுதல் மொழிந்தாள்.
“தேங்க்ஸ்ங்க மனசு ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நேத்து ஒரு பொண்ணைப் பார்த்துட்டு வந்தோம். அந்தப் பொண்ணு வீட்டுல இன்னிக்கு போன் பண்ணி ஏதோ காரணம் சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்கனு அம்மா சொன்னாங்க. அதான் மனசு கஷ்டமா போச்சு. எந்தப் பொண்ணுக்குமே நம்மளை பிடிக்க மாட்டேங்குதேனு நினைச்சி தான் அந்தப் போஸ்ட் போட்டேன்” அவன் கூறவும்,
“எந்தப் பொண்ணுக்குமே பிடிக்க மாட்டேங்குதேனு இத்தனை பொண்ணுங்களை டேக் செஞ்சி போட்டிருக்கீங்க! என்ன ஒரு முரண்” எனச் சிரித்தவாறு கேட்டாள்.
“ஹா ஹா ஹா” எனச் சிரித்தவன்,
“இவங்கலாம் என் தோழிகள். இந்தப் பொண்ணுங்கலாம் தான்ங்க எனக்கு விரக்தி லோன்லினஸ்லாம் வராம பாதுகாத்துட்டு இருக்காங்க. அவங்களைக் கேட்டா நான் தான் அவங்களுக்கு நிறையச் செஞ்சிருக்கேன்னு சொல்லுவாங்க” என்றவன் தொடர்ந்து,
“சரி அதை விடுங்க! உங்களை நான் லக்ஸ்னு கூப்பிடவா?” எனக் கேட்டான்.
“என்னது லக்ஸ்ஸா? என முகத்தை அஷ்டகோணலாக்கியவள், “ஏன்?” எனக் கேட்டாள்
“எப்படியும் எல்லாரும் உங்களைத் தனம், லட்சுமினு தானே கூப்பிடுவாங்க. என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் நான் மட்டும் கூப்பிடுற மாதிரி ஸ்பெஷல் நேம் வைப்பேன். உங்களுக்கு நான் வச்சிருக்க ஸ்பெஷல் நேம் லக்ஸ்! நல்லாயிருக்கா?” எனக் கேட்டான்.
அவளையும் மீறி அவளது கணவன் அவளைத் தனலட்சுமி என நீட்டி முழக்கி அழைப்பது அவளின் நினைவினில் வந்து போனது. ‘அப்ப நான் அவருக்கு ஸ்பெஷல் இல்லையா?’ என மனதோடு எண்ணி கொண்டவளாய்,
“நல்லாயிருக்கு ஆனா என் புருஷனுக்குப் பிடிச்சிருக்கானு கேட்டுட்டு சொல்றேன்” என்று சிரித்தவாறு உரைத்தாள்.
புருஷன் என்ற வார்த்தையில் அவன் கையில் இருந்து நழுவிய கைபேசியை அவசரமாய் பிடித்துக் காதில் வைத்தவன், “என்னது புருஷனா! அப்ப உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா? அய்யோ அப்ப இத்தனை நேரமா ஒரு ஆன்டிக்கிட்ட தான் கடலைப் போட்டுட்டு இருந்தேனா?” என வாயை விடவும்,
“ஹலோ ஏதோ சோகமா இருக்கீங்களே ஆறுதலா பேசலாம்னு பேசினா ஆன்டினு சொல்றீங்க! கடலை போடுறனேனு சொல்றீங்க. இப்படிப் பேசுறதுலாம் எனக்குச் சுத்தமா பிடிக்காது” எனச் சற்று அதட்டலாய் உரைத்தாள்.
“அய்யோ சாரி சாரிங்க! நான் சும்மா உங்களைச் சிரிக்க வைக்க அப்படிச் சொன்னேன்! நேரில் இருந்திருந்தா கால்ல விழுந்து சாரி கேட்டிருப்பேன். உங்களுக்குப் பிடிக்காதது எதுவும் நான் பேச மாட்டேன் சரியா” என்று உடனே இறங்கி வந்தான்.
மேலும் அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டிக்க, இத்தனை நேரமாய் மனதை அழுத்தி இருந்த பாரமும் வலியும் கரைந்து போனதாய் உணர்ந்தாள் அவள்.
இத்தகைய அளவளாவல்களைத் தான், தான் கணவனிடம் எதிர்பார்க்கிறோமோ என்று தோன்றியது அவளுக்கு.
கார்த்திக்குடன் பேசியது மனதை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாலும் அவனை சற்று தள்ளி வைத்து தான் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டவளாய், சமையலறையில் பாதியில் விட்டிருந்த வேலையைக் கவனிக்கச் சென்றாள்.
அன்றாட வேலைகளை முடித்து இரவுணவை தயாரித்து வைத்து விட்டு, புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள், வீட்டு வாயிலின் அழைப்பொலியில் நடப்புக்கு வந்து, சென்று கதவை திறந்தாள்.
மாலை வேளையில் குளித்து முடித்துப் பூஜை செய்ததற்கான புத்துணர்வுடன் இருந்த தனலட்சுமியின் முகத்தைக் கண்டவனோ, ஆசுவாசமாய் மூச்சை இழுத்து விட்டு கொண்டவாறே உள்ளே நுழைந்தான்.
“சாப்பிட்டியா தனலட்சுமி?” என உணவு பையை அவளிடம் கொடுத்தவாறு கேட்டான்.
“ஹ்ம்ம் சாப்பிட்டேன்” என்று அவள் சமையலறைக்குள் செல்ல இவன் குளியலறைக்குள் சென்றான்.
அலுவலகத்தில் இருந்து இவன் வரும் நேரம் இரவு எட்டு மணியாகி விடுவதால், அவன் வருவதற்கு முன்பே உண்டு விடுவாள் அவள். பசி தாளமாட்டாள் என அவன் தான் அவளைக் காக்க வேண்டாமெனக் கூறி நேரத்திற்கு உண்ணுமாறு உரைத்திருந்தான்.
இரவு படுக்கையில் அவள் ஒருகளித்துப் படுத்திருக்க, பின்னின்று அவளை அணைத்தவன், அவளின் காதினில் இதழ் பொருத்தி “சாரி” என்றான்.
“ம்ம்ம்” என்றவளோ, “இன்னிக்கு நான் தலைக்கு ஊத்திட்டேன்” என்றாள்.
“ஓ பீரியட்ஸ்ஸா” என நிறுத்தியவன், “அதான் காலைல லேட்டாகிடுச்சா சமையல்! வெரி சாரிடா” குற்றயுணர்வு அவன் நெஞ்சை கிழிக்க, அவனை மீறி சாரிடா என்றிருந்தான் அவள் காதினில்.
முதன் முதலாக அவன் வாயிலிருந்து தனலட்சுமி என்ற அழைப்பை தாண்டி வரும் டா என்ற அந்த அழைப்பு அவளின் மனதை நெகிழ செய்ய, அதில் அவளின் இயல்பான குணம் தலை தூக்க, “யாராவது வேணும்னே திட்டுவாங்களா மேனேஜர் சார்! அதனால போனா போகுதுனு மன்னிச்சிட்டேன்” அவனை நோக்கி திரும்பியவாறு கண் சிமிட்டி கூறியவள் அவனுள் புதைந்து கொண்டாள்.
தன்னிடம் அவள் முதல் முறையாகப் பேசும் இந்த இயல்பான பேச்சில் மனம் குளிர்ந்தவனாய், அவளின் நெற்றியில் முத்தமிட்டு, “காலைல போன் செஞ்சேனே ஏன் எடுக்கலை?” எனக் கேட்டான்.
‘என்னது போன் செஞ்சாரா? கார்த்திக்கிட்ட பேசும் போது செஞ்சிருப்பாரோ! செகண்ட் லைன் வந்த மாதிரியே தெரியலையே’ எண்ணியவளாய்,
“அப்படியா கால் வந்தா மாதிரி தெரியலையே” என்றாள்.
“பிசினு வந்துச்சே! ஒரு வேளை உன் பாட்டிக்கிட்ட பேசும் போது கவனிக்காம விட்டிருப்பியா இருக்கும்” அவளுக்கான பதிலை அவனே கூறிக் கொண்டான்.
மென்மையாய் அவளை அணைத்தவாறு மகிழ்வான மனநிலையுடனே அவன் உறங்கி போனான்.
ஆனால் கார்த்திக்குடன் பேசியதை அவனிடம் உரைக்காதது அவளுக்குச் சிறிய குற்றயுணர்வை அளித்திருந்தது.
‘பொய் சொல்றதுல என்ன இருக்குனு நினைப்போம்மா. ஆனா நம்ம சொல்ற சின்னச் சின்னப் பொய் தான் நாளைக்கு நமக்குப் பெரிய பிரச்சனையை இழுத்து வந்து விட்டிருக்கும். அந்தப் பிரச்சனையின் ஆணிவேர் என்னனு தோண்டி பார்த்தோம்னா எங்கேயோ எப்பவோ சொன்ன ஒரு பொய்யா தான் இருக்கும்’ அவளின் பாட்டி எப்பொழுதும் அவளுக்கு வழங்கும் அறிவுரை மனக்கண்ணில் வந்து குற்றயுணர்வை கிளறியிருந்தது.
‘நான் எங்க பொய் சொன்னேன்? அவர் சொன்னதுக்கு நான் ஆமாம்னு கூடச் சொல்லலையே! அமைதியா இருந்து உண்மையை மறச்சிருக்கேன் அவ்ளோ தான்’ குற்றயுணர்விற்கான உள்ளுணர்வை கண்டு கொள்ளாமல் புறங்கையால் உதறிவிட்டாள்.
தனலட்சுமி ராஜராஜனின் உறவு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருக்க, தினமும் அரை மணி நேரமாவது தனலட்சுமியுடன் உரையாடுவதை வழக்கமாக்கி இருந்தான் கார்த்திக்.
அவனின் தோழிகள் பட்டியலில் இவளையும் இணைத்து கொண்டவனோ, தனது முகநூல் தோழிகளுக்காக வைத்திருந்த புலனத்தின் குழுவிலும் இவளை இணைத்தான்.
கார்த்திக் அல்லாது சில பெண்களின் அறிமுகமும் கிடைக்க, அவளின் மனம் தனிமை உணர்விலும் இறுக்கத்திலும் இருந்து விடுபட்டு இலகுவாகி இருந்தது.
புலனத்தில் குறுஞ்செய்தி மூலம் பெரும்பாலான நேரங்களில் உரையாடி கொண்டிருந்தனர் இருவரும்.
அவன் காலை உண்ணும் உணவு முதல் இரவு உறங்கும் வரை அவனின் அன்றாடப் பணிகள் அனைத்தையும் அந்தக் குழுவில் பகிர்வதன் மூலம் அவளும் அறிந்து வைத்திருந்தாள்.
அவளையும் அவளின் அன்றாடப் பணிகளைக் கூற சொல்லி கேட்டு தெரிந்து வைத்திருந்தான்.
“சாப்பிட்டீங்களா லக்ஸ்?”
“இன்னிக்கு என்ன சமைச்சீங்க?”
அவள் வெளியே செல்வதாய் உரைத்தால், “கேப் எடுக்கிறீங்களா இல்ல நடந்து போறீங்களா? பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க!”
“அந்த இடத்துக்குப் போய்ட்டீங்களா?”
“அங்கிருந்து கிளம்பிட்டீங்களா?”
“ரெஸ்ட் எடுங்க லக்ஸ்! இன்னிக்கு ரொம்ப வீட்டு வேலை பார்த்துட்டீங்க. ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு செய்ங்கனு சொன்னா கேட்குறீங்களா?”
இப்படியாக பலவிதமான அக்கறையான உரையாடல்களின் மூலம் தனது அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தித் தனலட்சுமியின் நட்பை பெற்றிருந்தான் கார்த்திக்.
அனைத்து பெண்களிடமும் இவ்வாறான பேச்சுகள் மூலமே அவர்களைத் தன்னை நோக்கி ஈர்க்க செய்து தோழிகளாக்கி வைத்திருந்தான் கார்த்திக்.
இவனுடன் ஏற்பட்டிருக்கும் நட்பை பற்றி ராஜராஜனிடம் கூற எண்ணிய பொழுதெல்லாம் ஏதோ ஒரு தயக்கம் இவளை கூற விடாமல் தடுத்தது.
பிறந்ததில் இருந்து ஆண்களின் துணையின்றி வளர்ந்து வந்த தனலட்சுமிக்கு, கார்த்திக்கின் இந்த அன்றாட அன்பான உரையாடல்கள் மனதை நெகிழ்த்த செய்ய, அவனது நட்பை முறிக்கும் எந்தவித செயலும் செய்ய மனமற்று ராஜராஜனிடம் இதை உரைக்காமல் தள்ளிப் போட்டு கொண்டிருந்தாள் தனலட்சுமி.
— தொடரும்