மாய உணர்வுகள் – 2

தனது சொந்த வீட்டில் இருந்த குளுகுளு ஏசி அறையில் மடிகணிணியில் அலுவல் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“டேய் கார்த்தி, இன்னிக்குப் பிரதோஷம். சாயங்கலாம் கோவிலுக்குப் போகனும் கூட்டிட்டு போறியா?” எனக் கேட்டார் அவனின் தாய் மேகலா.

“ம்ப்ச் நீயே ஆட்டோ பிடிச்சி போமா! கோவிலுக்குலாம் என்னைய கூப்பிடாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” எரிச்சலாக மொழிந்தான்.

“நான் என்ன உன்னை சாமி கும்பிடவா வர சொன்னேன். என்னைக் கொண்டு போய் விடுனு தானே சொல்றேன்” என்றார் மேகலா விடாமல்.

“ஆட்டோக்கு காசு வேணும்னா நான் தரேன். நீ ஆட்டோ இல்லனா கால் டாக்சி கூடப் புக் பண்ணிட்டு போமா” என்றான் இவன்.

“இரண்டு தெரு தள்ளி இருக்கக் கோவிலுக்கு நான் எதுக்குடா ஆட்டோக்கும் கால் டாக்சிக்கும் செலவு பண்ணனும். அதுக்கு நான் நடந்தே போய்டுவேனே!” என்றவர் கூற,

“அது உன் விருப்பம்! என்னமோ பண்ணு” கணிணி திறையில் இருந்த பார்வையைத் திருப்பாமலேயே உரைத்தான்.

“ஏன்டா என் கிட்ட எரிச்சல்படுற” சற்று கவலையாய் அவர் கேட்க,

“பின்ன எப்ப பார்த்தாலும் இங்க கூட்டிட்டு போ அங்க கூட்டிட்டு போனு டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா எப்படிப் பேசுவாங்களாம்” இம்முறை கோபமாய் அவன் எகிற,

“ஹப்பா என்ன அக்கறை அம்மா மேல உனக்கு” எனக் கத்தினார் அவரும்.

“என்ன அக்கறை இல்ல? இப்ப என்ன அக்கறை இல்லாம நடந்துக்கிட்டேன்னு இப்படிப் பேசிட்டு இருக்க நீ! மாசமான சம்பளத்தை உன்கிட்ட தானே தரேன். உனக்குத் தேவையானதைலாம் வாங்கிப் போடுறேன்ல! உனக்கு ஹாஸ்பிட்டல் செலவுக்குக் கூடக் காசு கொடுக்கிறேன். இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு” என்றான் கார்த்திக்.

“நீ வீட்டுல இருந்து வேலை பார்க்க ஆரம்பிச்சு இரண்டு வருஷமாகுதுடா! என் கூட உட்கார்ந்து என்னிக்காவது பேசியிருக்கியா நீ! அதுக்கு முன்னாடி வரைக்கும் பையனுக்கு ஆபிஸ் போய்ட்டு வரவே சரியா இருக்கு நம்ம தொந்தரவு பண்ண கூடாதுனு நானும் கேட்கலை. ஆனா இப்ப இரண்டு வருஷமா வீட்டுல இருந்தும் கூட என்கிட்ட உனக்குப் பேச நேரமில்லாம போகும் போது, அதுவும் போன்ல மணிக்கணிக்கா செல்லம் வெல்லம்னு பொண்ணுங்க ஃப்ரண்ட்ஸ்கிட்டலாம் நீ கொஞ்சி பேசிட்டு இருக்கிறதை பார்க்கும் போது, நான் உன்னைக் கண்டிக்காம உன் இஷ்டத்துக்கு வளர்த்தது தப்புனு தோணுது! உன் அப்பா இருந்தா இப்படிப் பேசுவியா நீ? அவ போன பிறகு நிஜமாவே என்னை அனாதை போல உணர வைக்கிற! இதுல உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுனா நிஜமாவே என்னை வேலைகாரியா தான் நடத்துவ போல” மனதினுள் இருந்த ஆதங்கத்தை வார்த்தைகளாய் கோர்த்து ஆங்காரமாய் வெடித்துக் கொண்டிருந்தார்.

அவரின் பேச்சில் கோபமுற்ற கார்த்திக், “இப்ப தானே புரியுது எனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைனு! ஒரு பொண்ணும் கட்டிக்க ஒத்துக்காம அரைக் கிழமா சுத்திட்டு இருக்கேன். மருமக வந்துட்டா உன் நிலைமை என்னாகுமோனு பொருமிட்டு இருக்கியா நீ! இப்படி நீ பொருமிட்டு இருந்தா எங்கிருந்துமா எனக்குப் பொண்ணு அமையும்” அவன் கவலை அவனுக்கு என்பது போல் அவர் கூறிய மற்றைய அனைத்தையும் உதறி விட்டு மருமகள் என்ற தனது திருமணம் குறித்தான வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு கத்தி கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனது அலைபேசி அடிக்க, முகத்தைத் தூக்கி கொண்டு மேகலா அந்த அறையை விட்டு அகல, கைபேசியை எடுத்த கார்த்திக்கோ, “சொல்லுங்க ராஜிக்கா! என்னாச்சு இரண்டு வாரமா ஃபேஸ்புக்ல ஆளையே காணோம்” என உதட்டில் ஒட்டி வைத்த புன்னகையுடன் பேச்சை தொடர்ந்தான்.


நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு மாதம் கடந்திருந்த நிலையில்,

சமையல் அறையில் வயிறு வலியுடன் நின்று சமைத்து கொண்டிருந்தாள் தனலட்சுமி.

அன்று காலை எழும்பும் போதே உடலின் மாற்றத்தினை உணர்ந்தவளுக்கு இது மாதாந்திர வலி எனப் புரிந்து போயிற்று. கணவனுக்கான சமையலை முடித்து விட்டு ஓய்வெடுக்கலாம் என எண்ணியவளாய் பொறுமையாய் சமையல் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

ராஜராஜனுக்கோ அன்று ஒரு முக்கியக் கிளைண்ட் மீட்டிங்கிற்கு விரைவாக அலுவலகம் செல்ல வேண்டியது இருந்தது. அந்த மீட்டிங்கிற்குத் தேவையான பிரசன்டேஷனும் அவனே செய்ய வேண்டி இருந்ததால் முந்தைய தினமே தனலட்சுமியிடம் காலை விரைவாக அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருப்பதை உரைத்திருந்தான்.

எப்பொழுதும் கிளம்பும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பியவன், “தனலட்சுமி லஞ்ச் ரெடியா? டிபன் கொடு சாப்பிட்டுட்டு கிளம்புறேன்” என முகப்பறையில் இருந்து கத்தினான்.

‘என்னது கிளம்பிட்டாரா’ என்று அதிர்ச்சியானவள், அவன் அன்று விரைவாய் கிளம்ப வேண்டும் என உரைத்திருந்ததை முற்றிலுமாய் மறந்திருந்தாள்.

‘அய்யய்யோ சோறும் கூட்டும் தானே ரெடி ஆகிருக்கு! டிபன் எதுவும் இன்னும் செய்யலையே’ மனதினுள் அலறியவளாய் அவனிடம் வந்து,

“தயிர் சாதம் எடுத்துட்டு போறீங்களா! குழம்பு இன்னும் வைக்கலை. காலைக்கும் எதுவும் செய்யலை! தோசை ஊத்துறேன்! பொடி வச்சு சாப்பிட்டுக்கிறீங்களா?” எனக் கேட்டாள்.

கையில் இருந்த மடிகணிணியில் அன்றைக்கான பிரசன்டேஷனில் ஏதோ குளறுபடி செய்து வைத்திருந்த ஜூனியரை திட்டியவாறு அதைச் சரி செய்து கொண்டிருந்தவனிடம் அவள் கூறிய இந்த உணவு செய்தி மேலும் கடுப்பை ஏற்ற,

“என்னது இன்னும் சமையல் முடிக்கலையா? இந்த ஒரு வேலையைத் தானே வீட்டுல செஞ்சிட்டு இருக்க! அதைக் கூடச் சீக்கிரமா செய்ய முடியலையா உனக்கு!” எனக் கூறியவாறு கிளம்பி சென்று விட்டான்.

அவனிடம் முதல் முறையாய் கண்ட இந்தக் கோபமான குரலில் கண்களில் நீர் திரண்டோடியது தனலட்சுமிக்கு.

அடுப்பை அணைத்து போட்டவள் சோபாவில் படுத்து அழுது கொண்டிருந்தாள். யாரிடமேனும் தன் மனக்குமுறலை கொட்ட வேண்டுமெனத் தோணியது அவளுக்கு. அவளுடன் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாய் படித்த நெருங்கிய தோழி ஒருவள் இருந்தாள். ஆனால் அவள் இவளுக்கு முன்பே மணமாகி அயல்நாட்டிற்குச் சென்று விட, அவளுடனான தொடர்பு புலனத்தில் ஹாய் பை என்றளவிற்குச் சுருங்கி போனது.

இவளின் பாட்டியிடம் ராஜராஜனை பற்றி ஒரு வார்த்தை இவள் குறை கூறி பேசினாலும், “பொண்டாட்டி தான் புருசனுக்கு ஏத்த மாதிரி வளைஞ்சு போகனும்” என அறிவுரை கூறியே இவளை மேலும் படுத்தி எடுப்பார்.

ஆகப் பாட்டியா தோழி சித்ராவா யாருக்கு அழைப்பது எனக் கைபேசியை நோண்டியவாறே யோசித்தவள், சித்ரா தங்கியிருக்கும் பர்மிங்ஹம் நாட்டில் இப்பொழுது என்ன நேரமிருக்கும் எனக் கைபேசியில் கணக்கிட, அது அவள் இன்னும் உறங்கி கொண்டிருக்கும் நேரமாய் இருக்கும் எனக் காண்பிக்க, மனமோ கழிவிரக்கத்தில் கண்ணீர் சிந்தியது.

ஏனோ யாருமற்ற அனாதையாகி போன உணர்வு தோன்ற தலையணைக்குள் முகத்தைப் புதைத்து அழுது கரைந்தாள்.

சற்றாய் தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டவளாய், அந்தக் கைபேசியை எடுத்து முகநூலில் உலாவி இருந்த போது கண்ணில் பட்டது கார்த்திக்கின் அந்தப் பதிவு.

தன்னுடன் பேசும் முகநூல் தோழிகள் அனைவரையும் டேக் செய்திருந்தவன், “இந்த உலகத்துல நல்லவனா வாழுறது தப்பாங்க! இது வரைக்கும் நான் யாரையும் காதலிச்சது இல்லங்க. கட்டிக்கிற பொண்டாட்டியை தான் காதலிக்கனும்னு காத்துட்டு இருக்கேன். என்கிட்ட என்ன குறைச்சல்னு இந்தப் பொண்ணுங்கலாம் ரிஜக்ட் செய்றாங்கனு சத்தியமா புரியலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு செல்லங்களா” எனப் பதிவிட்டிருந்தான்.

ரேகாவை டேக் செய்திருந்ததினால் அந்தப் பதிவு இவளது நியூஸ் ஃபீடில் காணக்கிடைத்தது.

அதனைப் பார்த்தவளோ, ‘இவரையா ரிஜ்க்ட் பண்றாங்க! ஐடி வேலை பார்க்கிறாருனு சொன்னா நம்புற மாதிரி அழகா ஸ்டைலான ஹேர்ஸ்டைல் குறுந்தாடிலாம் வச்சிட்டு ஒல்லியா கலரா வேற இருக்காரு! இவரை ஏன் ரிஜெக்ட் பண்றாங்க’ அவனது முகநூல் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களைப் பார்வையிட்டவாறு தனக்குள் பேசி கொண்டவள், அவனின் பிறந்த வருடத்தைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

“என்னது முப்பத்திரண்டு வயசாகுதா” அதிர்வாய் வாய் விட்டு உரைத்தவள்,
“ஆனா அவர் ஃபோட்டோல எதுலயுமே அப்படி ஒன்னும் வயசு தெரியலையே! எல்லாம் பழைய ஃபோட்டோவா இருக்குமோ!”

“என் புருஷனை விட நாலு வயசு பெரியவரு! இவரையும் என் புருஷனையும் பக்கத்துல நிக்க வச்சா என் புருஷனை தான் முப்பது வயசுக்கு மேல சொல்லுவாங்க” தனக்குள்ளேயே சொல்லி கொண்டவளுக்கு அவனுக்கு ஆறுதல் உரைக்குமாறு உள்மனம் உந்த,

“கவலைபடாதீங்க! நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும்” எனப் பின்னூட்டமிட்டிருந்தாள் அவனின் அந்தப் பதிவில்.

ஒரு வேகத்தில் பதில் போட்டிருந்தவளுக்கு இப்பொழுது ஏதோ தயக்கம் சூழ, அதனை நீக்கி விடுவோமா என்ற எண்ணம் தோன்ற, நீக்குவதற்காக அவள் பார்வையிட்ட போது, அந்தப் பதிலுக்கு அவன் விருப்பக்குறியிட்டு, “நன்றி தோழி❤❤❤” என இதயத்தோடு பதிலுரைத்திருந்தான்.

அந்த இதயத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு மனதிற்குள் ஏதோ ஒரு சிலிர்ப்பு வந்து போனது.

புலனத்தில் கூட அவளுக்கு முகக்குறியீடு அனுப்பிக் குறுஞ்செய்தி அனுப்பியதில்லை எவரும். முகநூலிலும் அனைத்து பதிவுகளைப் பார்த்து வாசிப்பாளே தவிர எதற்கும் விருப்பக்குறி கூட இட்டு எதிர்வினையாற்றியதில்லை.
ஆனால் இன்று முதன் முதலாய் தனக்கு வந்திருக்கும் இந்த இதய வடிவ செய்தியை பார்த்தவளுக்கு மெல்லிய சிரிப்பு இதழில் படர்ந்தது.

அதே நேரம் அவளது உள்பெட்டிக்கு குறுஞ்செய்தி வந்த ஒலி வரவும், ‘நமக்கு யாரு மெசென்ஜர்ல மெசேஜ் செய்றது’ என எண்ணியவளாய் சென்று பார்க்க,

“ஹாய்” என அனுப்பி இருந்தான் கார்த்திக்.


இங்கு அலுவலகத்தில் பிரசன்டேஷனை வெற்றிகரமாக முடித்துப் பெரும் மகிழ்வுடன் கிளைண்ட்டிடம் பேசிவிட்டு வெளியே வந்த ராஜராஜனுக்கு உடனே தனது மனைவியை அழைத்து இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று மனம் உந்தியது.

இந்த எண்ணம் தோன்றிய பொழுது தான் அவன் காலையில் அவளைத் திட்டி விட்டு வந்ததே அவன் நினைவினில் வந்து போனது.

“அச்சோ திட்டிட்டு வந்தோமே! சாப்பிட்டாளா இல்லையானு தெரியலையே” எனக் கவலையோடு கைபேசியை எடுத்து அவளுக்கு அவன் அழைக்க, தாங்கள் அழைத்திருக்கும் நபர் வேறொருடன் பேசி கொண்டுள்ளார் என்ற செய்தி கிடைக்கப்பெற, ‘அவ பாட்டிக்கிட்ட பேசிட்டு இருக்கா போல’ என எண்ணி கொண்டவனாய் தனது அலுவல் வேலையில் மூழ்கி போனான்.

அங்குக் கார்த்திக்குடன் ஆர்வமாய் பேசி கொண்டிருந்தவளோ கணவனின் அழைப்பை கவனியாது போனாள்.

— தொடரும்