மாய உணர்வுகள் – 10

Epi 10

மறுநாள் காலை எட்டு மணியளவில் வெளியே கிளம்பி கொண்டிருந்தான் கார்த்திக். 

“டேய் கார்த்திக், பிறந்தநாள் அதுவுமா கோவிலுக்கு வராம எங்கடா கிளம்பிட்டு இருக்க?” எனக் கேட்டார் மேகலா. 

“அட போமா எப்ப பார்த்தாலும் கோவிலுக்கு வானு நச்சரிச்சிட்டு இருக்க! நீயே போய் எனக்காகவும் சேர்த்து வேண்டிக்கோ” எரிச்சலாய் மொழிந்தான். 

முகப்பறையில் இருந்து பேசி கொண்டிருந்த மேகலா, அவனின் பதிலில் எரிச்சலுற்றவராய் படுக்கையறையில் தலை வாரிக் கொண்டிருந்த கார்த்திக்கிடம் வந்து அவனது கையில் கிள்ளி வைத்தார். 

“ஆஆஆஆஆ” என அலறியவன், “என்ன அம்மா நீ?  பிறந்தநாள் அதுவுமா பிள்ளைக்கு கேசரி பாயாசம்னு செஞ்சி கொடுக்காம கிள்ளி வச்சிட்டு இருக்க” என முறைத்தான். 

“இப்ப எங்க கிளம்பிட்டு இருக்க! அதை முதல்ல சொல்லு” என மேகலா கேட்க,

“என் ஃப்ரண்ட்டை பார்க்க போறேன்.  தனலட்சுமி என்னை பார்க்க வரதா சொல்லிருக்காங்க” என்றான். 

“உனக்கு திருந்துற எண்ணமே இல்லையா கார்த்திக்! உனக்குனு ஒருத்தி வருவாள்ல, அவ உன்னை அடிச்சு துவைக்கும் போது, அம்மா காப்பாத்தும்மானு வந்து நிப்பல்ல அப்ப கவனிச்சிக்கிறேன்டா உன்னை” என அவர் கடுப்பாய் உரைக்க,

“ம்ம்மாஆ” என பல்லை கடித்தவன், “பிறந்தநாள் அதுவுமா கல்யாணம் செஞ்சிட்டு பிள்ளை குட்டி பெத்துட்டு சந்தோஷமா இருனு வாழ்த்துவியா..  சாபம் விட்டுட்டு இருக்க”  என்றான்.

“அதுக்கு தான் கோவிலுக்கு வானு சொல்றேன்” என்று அவர் பிடியிலேயே நிற்க,

“சரி நான் லக்ஸை பார்த்துட்டு நேரா கோவிலுக்கு வந்துடுறேன்.  நீ கோவிலுக்கு போய் வெயிட் பண்ணு.  நானே உன்னை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துடுறேன்”  என்றான்.

“ஆமா யார்டா அது லக்ஸூ? தனலட்சுமினு தானேடா ஏதோ பேரு சொன்ன?” என கேள்வியாய் அவனை நோக்க,

“தனலட்சுமியோட ஷார்ட் ஃபார்ம் தான்மா லக்ஸ்” என்றான்.

தலையில் அடித்து கொண்டவராய், “எப்படியாவது கோவிலுக்கு வந்து சேரு” என்றவாறு கிளம்பினார் மேகலா. 

அதே நேரம் இங்கு, அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த ராஜராஜனின் முன் வந்து நின்றாள் தனலட்சுமி. 

காலையில் இருந்து அவனிடம் உரைக்க பல முறை ஒத்திகை பார்த்தும் தைரியம் இல்லாமல் ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தவள்,  அவன் அலுவலகத்திற்கு கிளம்பி தயாராகி வந்ததை பார்த்ததும் அவன் முன் வந்து நின்றாள். 

ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து வாசலில் ஷூவை துடைத்தவாறு உட்கார்ந்திருந்தவன், தன் முன் நின்ற தனலட்சுமியை என்ன என்பது போல் ஏறிட்டு பார்த்தான்.

“இன்னிக்கு ஆபிஸ் லீவ் போடுறீங்களா?” என தயங்கியவாறே கேட்டாள். 

ஏன் என்பது போல் அவன் பார்க்க,

“கார்த்திக்னு ஒருத்தரை இன்னிக்கு நாம பார்க்க போகனும்” என்றவள் கூறியதும்,

இதுவரை அமைதியாய் இருந்தவன், “அது என்ன என் அப்பனோட ஆபிஸ்ஸா நான் கேட்டதும் லீவ் கொடுக்கிறதுக்கு” என எரிந்து விழுந்தான். 

அவனின் எரிச்சலில் கோபமுற்றவளாய், “இல்லாத தாத்தா பாட்டி செத்துட்டாங்கனு சொல்லி லீவ் எடுங்க! இன்னிக்கு நீங்க லீவ் எடுக்குறீங்க, அவ்ளோ தான்” என்று விட்டு கடகடவென சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள். 

‘தாத்தா செத்துட்டாங்கனு லீவ் சொல்லனுமா! அடியேய் இது என்ன நீ படிக்கிற காலேஜ்னு நினைச்சியா’  என மனதோடு சிரித்து கொண்டான். 

சமையலறைக்குள் நுழைந்த அவளது கைகள் சில்லிட்டு நடுங்கி கொண்டிருந்தது. 

‘இது வரைக்கும் எங்கேயாவது போகனும்னு அவர்கிட்ட கேட்டிருப்பேனா? இல்ல ஆபிஸ்க்கு தான் லீவ் போட சொல்லிருப்பேனா?  இப்ப போகனும்னு சொன்னேன்னா காரணம் இருக்கும்னு லீவ் போட வேண்டியது தானே’ என பாத்திரங்களை டங் டங்கென வைத்தவளாய் புலம்பி கொண்டிருந்தாள்.

சமையலறையில் அவள் கோபத்துடன் பாத்திரங்களை உருட்டவதை கேட்டவன், ‘ஹ்ம்ம்ம்ம் எதுக்கு இப்படி அராஜகம் பண்ணிட்டு இருக்கா?’ என மனதோடு புலம்பினாலும் அலுவலகத்தில் தனது விடுப்பை தெரிவித்திருந்தான். 


ஒரு ஐஸ்க்ரீம் பார்லரில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.  தனலட்சுமியின் இல்லம் இந்த இடத்தில் இருந்து ஒரு மணி நேர பயண தொலைவில் இருந்ததால் அங்கேயே சந்திக்கலாம் என வர சொல்லியிருந்தாள்.

“லக்ஸூ வெய்ட்டிங்?” என்று அவன் அனுப்பிய குறுஞ்செய்திக்கு,

“ஆன் த வே” என பதில் அனுப்பி இருந்தாள் கணவனுடன் மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த தனலட்சுமி. 

யாரந்த கார்த்திக் என அவனும் கேட்கவில்லை.  இவளும் கூறவில்லை. செல்ல வேண்டிய இடத்தை இவள் கூறவும், தெரிந்த இடம் தானென கூறி இவளை அழைத்து சென்று கொண்டிருக்கிறான் ராஜராஜன். 

தனலட்சுமி தான் மிகுந்த பதட்டத்தில் இருந்தாள்.  நேற்று பார்வதியுடன் ராஜராஜன் பேசிய விதமே அவன் இவ்வகையான நட்பினை தவறாக நினைக்க மாட்டான் என்ற பிம்பத்தை அளித்திருத்தாலும், கார்த்திக்கை கண்டதும், அவனை பற்றிய அறிமுகத்தை கூறியதும் இவனின் எதிர்வினை எவ்வாறாய் இருக்கும் என்ற பயம் அவளை பதட்டமடைய செய்திருந்தது. 

ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்த போதே தனலட்சுமியை அடையாளம் கண்டு கொண்டான் கார்த்திக். வாட்ஸ்அப்பில் கணவருடன் இருக்கும் அவளின் புகைப்படத்தை கண்டிருக்கிறான். 

“ஹாய் லக்ஸ்” என கை அசைத்தவன், அவளுடன் வந்திருந்த ராஜராஜனை கண்டு சற்று மெர்சலானான். 

இருவரும் அருகில் வந்ததும், “ஹேப்பி பர்த்டே கார்த்திக்” என வாழ்த்தியவாறு அவள் கையிலிருந்த பரிசினை அவனிடம் வழங்க,

“தேங்க்ஸ் லக்…” என தொடங்கியவன், ராஜராஜனின் ஆஜானுபாகுவான தோற்றத்திலும் அவன் முகத்தினில் கண்ட கடுமையிலும், “தேங்க்ஸ் தனலட்சுமி” என முடித்தான். 

“இவர் தான் என் ஹஸ்பண்ட்! ஃபோட்டோல பார்த்திருப்பீங்களே” என்று கார்த்திக்கு அறிமுகம் செய்து வைத்தவள், “இவர் தான்ங்க கார்த்திக்.  என்னோட ஃபேஸ்புக் ஃப்ரண்ட்” என்றாள்.

கார்த்திக்கிடம் கைகளை நீட்டி, “ஹேப்பி பர்த்டே கார்த்திக்” என ஒட்டி வைத்த சிரிப்புடன் வாழ்த்து தெரிவித்தவன், கார்த்திக்கின் கையினை நொறுக்க, “தேங்க்ஸ் சா… ஆஆ… சார்” அவன் கையினை விட்டதும் சார் என்று கூறி முடித்தான்.

சிறிது நேரம் ராஜராஜன் கார்த்திக்கின் வேலை பற்றி கேட்டு கொண்டிருக்க, ராஜராஜனும் அவனது பணியினை பற்றி உரையாடி கொண்டிருந்தான். 

அனைவரும் கிளம்பலாம் என முடிவு செய்த நேரம், “கார்த்திக் நான் ஒன்னு சொல்லனும்” என்று நிறுத்தி இருவரின் முகத்தையும் பார்த்தவள்,

“நம்ம ஃப்ரண்ட்ஷிப்பை இதுக்கு மேல தொடர வேண்டாம்னு நினைக்கிறேன். அதனால உங்க கான்டேக்ட்டை நான் டெலீட் செஞ்சிடுவேன்.  நீங்களும் செஞ்சிடுங்க.  ஐ ஹோப் யூ அண்ட்ஸ்டாண்ட்” என்று இவள் கூறி முடிக்க, ராஜராஜன் இவளை சந்தோஷ வியப்புடன் பார்க்க,

“ஏன் என்னாச்சு?” எனக் கேட்டவாறு குழப்பமாய் இருவரையும் பார்த்தான்.

“எனக்கு என் வாழ்க்கை முக்கியம் கார்த்திக்! ஐ வாண்ட் டு லிவ் எ பீஸ்புல் லைப். என் வாழ்க்கையை நானே காம்ப்ளிகேட் பண்ணிக்க விரும்பலை” என்றாள். 

தனலட்சுமியையும் ராஜராஜனையும் மாறி மாறி பார்த்த கார்த்திக், ‘எதுவும் குடும்ப பிரச்சனையா இருக்குமோ! அதான் இரண்டு மூனு நாளா லக்ஸ் ஒழுங்கா ரிப்ளை பண்ணலையோ! அதான் இவர் என் கை எலும்பை நொறுக்கி எடுத்தாரோ! குடும்ப பிரச்சனையா தான் இருக்கும். இனியும் நம்ம பேசினோம்னா சார் வீடு தேடி வந்து உதைச்சாலும் உதைப்பாரு’ மனதினுள் எண்ணிக் கொண்டவனாய் சரி என தலை அசைத்தான். 

தன்னை வியப்பாய் பார்த்து கொண்டிருந்த கணவனிடம், “வாங்க கிளம்பலாம்” எனக் கூறி கலைத்தவள், அவனின் முன் கையோடு தனது கையை கோர்த்தவாறு நடந்து சென்றாள். 

மகிழுந்தில் ஏறியதும், “பீச்சுக்கு போகலாமா?” எனக் கேட்டாள்.

கடல் அலைகளின் அருகே நிழல் தேடி கடலை பார்த்தவாறு அமர்ந்திருந்தனர் இருவரும். அவள் கேட்ட சுண்டலை வாங்கி கொடுத்தான். 

மகிழுந்தில் வரும் பொழுதும் ராஜராஜன் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

“உங்களுக்கு என்கிட்ட கேட்க எதுவுமில்லையா?” எனக் கேட்டாள்.

“ஏன் கார்த்திக் ஃப்ரண்ட்ஷிப்பை வேண்டாம்னு சொன்ன?” எனக் கேட்டான்.

“உங்களுக்காக தான்! இந்த நட்புனால நம்ம உறவுக்குள்ள எந்த விதமான பிரச்சனையும் வர வேண்டாம்னு நினைச்சேன். நம்ம உறவுக்குள்ளேயே பேசி புரிஞ்சிக்க தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கும் போது இடையில் வரும் இந்த மாதிரியான நட்போ உறவோ நம்ம உறவை பாதிக்கும்னு தோணுச்சு” என்றவள்,

“கார்த்திக் எனக்கு எப்படி ஃப்ரண்ட்டானாருனு தெரிஞ்சிக்க தோணலையா?” எனக் கேட்டாள்.

“அது எனக்கு தெரியும்” என்றவன் கூறவும், ஆச்சரியமடைந்தவளாய்,

“என்ன தெரியும்? எப்படி தெரியும்?” என கேள்வி கேட்கும் போதே,

‘இரண்டு வாரமா இவர் நார்மலா இல்லைனு பாரு அக்கா சொன்னதுக்கு காரணம் இது தானோ’ என அவளின் மூளை எடுத்து கொடுத்தது.

“உனக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் என் மொபைல்ல தான் கிரியேட் செஞ்சேன் ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டான்.

ஆமென தலையசைத்தவள், “வீட்டில தனியா போர் அடிக்கும்னு பெரிய டிவியும் எனக்கு போனும் வாங்கி கொடுத்தீங்க.  உங்க போன்ல எனக்கு Fb அக்கவுண்ட் ஓபன் செஞ்சிட்டு அப்புறம் அதை என் போனுக்கு மாத்தி தந்தீங்க” என்றவள் கூறவும்,

“ஆமா அப்ப என் போன்ல உன் அக்கவுண்ட்டை நான் லாக் அவுட் செய்யாம விட்டுட்டேன் போல.  இப்ப தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாள் என்னோட ஃபேஸ்புக் பாக்கலாம்னு ஓபன் செய்யும் போது, பார்த்தா உன் பேஸ்புக் ஓபன் ஆகியிருந்துச்சு. அதுல தான் நீ கார்த்திக்கிட்ட பேசினதைலாம் பார்த்தேன்” என்றுவிட்டு நிறுத்தினான். 

இவளுக்கு மிகுந்த பதட்டமாகி போனது.

“பார்த்துட்டு என்ன நினைச்சீங்க? ஏன் அதை பத்தி என்கிட்ட எதுவும் கேட்கலை” என பதட்டமாய் கேட்டாள்.

“ஏற்கனவே உனக்கு என்னை பிடிக்காதுனு நினைச்சிட்டு இருந்தேன்ல.  இதுல நீ வேற ஒருத்தன்கிட்ட ஃப்ரண்ட்டா நினைச்சி மனசு விட்டு பேசவும் உனக்கு என்னை நிஜமாவே பிடிக்கலைனு முடிவு செஞ்சிட்டேன் தனு. மனசு ரொம்ப கஷ்டமா போச்சு” என்று உரைத்தான். 

அவனை முறைத்தாள்.

“எனக்கு உங்களை பிடிக்காதுனு நினைச்சு தான் கல்யாணமான நாள்லருந்து என்கிட்ட மனசு விட்டு பேசாம இருந்தீங்களா?” எனக் கேட்டாள். 

“உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னிக்கு, உன்னோட பெட்ரூம் பின்னாடி தான் என் காரை பார்க்க செஞ்சிருந்தேன். உன்னை நான் பார்த்துட்டு கார்ல கிளம்பும் போது நீயும் பாட்டியும் பெட்ரூம்ல பேசினது கேட்டது. நீ அழுதுட்டே இவரை எனக்கு சுத்தமா பிடிக்கலைனு சொன்னதை கேட்டேன்.  என்னோட உருவத்தை வச்சி என்னை பிடிக்கலைனு நீ சொன்னது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. உங்க பாட்டி ஒரு வாரம் கழிச்சு தகவல் அனுப்புறதா தானே சொன்னாங்க. கண்டிப்பா நீ வேண்டாம்னு சொல்லிட்டனு தான் உங்க வீட்டுலருந்து சொல்லி அனுப்புவாங்கனு நினைச்சேன். ஆனா உன் பாட்டி போன் செஞ்சி நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா சொன்னதை என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை.  அன்னிக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன் தெரியுமா தனு.

எங்கே நான் உனக்கு போன் செஞ்சி பேசி உனக்கு என்னை பிடிக்காம போய்டுமோனு தான் கல்யாணத்துக்கு முன்னாடி உன்கிட்ட பேச நான் முயற்சியே செய்யலை. 

எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு பிறகு பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.
இந்த ‘பாரு’ பேசுறதை கேட்டல்ல.  கல்யாணத்துக்கு முன்னாடி பார்வதி அங்க வந்து எதுவும் வாயாடித்தனமா பேசி காரியத்தை கெடுத்துட கூடாதேனு தான் யாரையும் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணலை. 

எனக்கு எப்படியாவது உன்னை கல்யாணம் செஞ்சிக்கனும். அதுக்கு தடங்கலா எதுவும் வந்திட கூடாதுனு மட்டும் தான் மைண்ட்ல இருந்துச்சு. 
உன்னை எனக்கு அந்தளவுக்கு பிடிச்சிது தனு” என்று நிறுத்தினான். 

“என்னை பொண்ணு பார்க்க வந்த முதல் ஆளே நீங்க தான்.  நான் செஞ்சி வச்சிருந்த கற்பனைக்கு எதிர்பதமா வந்தா நான் எப்படி உடனே ஓகே சொல்லுவேன்.  அப்புறம் பாட்டி தான் ரியாலிட்டியை எடுத்து சொல்லி உங்க நல்ல குணங்களைலாம் சொல்லி ஒத்துக்க வச்சாங்க. நான் முழு மனசோட தான் உங்களை கட்டிக்கிட்டேன்” என்றவள் மேலும் தொடர்ந்து,

“ஆனா கல்யாணத்துக்கு பிறகு உங்களை பிடிக்காத மாதிரி நான் எங்கேயும் காமிச்சதே இல்லையே. அப்புறமும் ஏன் பேசாம இருந்தீங்க” என ஆதங்கமாய் கேள்வி எழுப்பினாள்.

“ஆமா நைட் உன்னை நெருங்கும் போது அரவணைச்சிக்கிட்டவ காலைல அழுதுட்டு உட்கார்ந்துட்டு இருந்தா நான் என்னனு நினைக்கிறது?” என அவன் அவளை நோக்கி கேட்க,

தனது நெற்றியிலேயே அடித்து கொண்டாள் தனலட்சுமி.

“கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உங்களுக்கு?” என அவள் கடுப்புடன் கேட்க,

“என்ன நக்கலா?” என அவன் முறைக்க,

“பின்ன என்னங்க, சொந்த வீட்டையும் ஊரையும் விட்டு ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு அவளோட பிறந்த வீட்டை பத்தின நினைப்பு அவளுக்கு வரவே வராதா? அதுவும் முதல் நாள்லருந்தே காலைல எழுந்திருச்சி எல்லா வேலையும் நான் தான் செய்யனும்னும் போது கண்ணீர் தான் வந்துச்சு எனக்கு”  என அதே வேதனையுடன் அவள் கூற,

“என்னை பிடிக்காம கல்யாணம் செஞ்சிக்கிட்டனால தான் நீ அழுறனு நினைச்சிட்டேன்.  கொஞ்சம் கொஞ்சமா உனக்கு என்னை பிடிக்க ஆரம்பிக்கும், அதுக்குள்ள நானா எதுவும் பேசி உன்னை குழப்பிட வேண்டாம்னு நினைச்சேன்.  நீயும் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு பிடிச்சது எது பிடிக்காது எதுனு என் நடவடிக்கைகள் வச்சே பார்த்து பார்த்து செய்ய ஆரம்பிச்ச,  நானும் உனக்கானதை பார்த்து பார்த்து செஞ்சேன்” என்றவன் கூறியதும்,

கடுப்பானவளாய், “எது? போன் வாங்கி கொடுக்கிறது, டிவி வாங்கி கொடுக்கிறது, எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் நீ டைம்க்கு சாப்பிட்டுடுனு சொல்றது இதெல்லாம் தான் எனக்காக பார்த்து பார்த்து செஞ்சதா?” என கேள்வி எழுப்பினாள். 

‘அப்ப அதெல்லாம் உனக்கு என் மேல எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தலையா?’ எனக் கேட்டான்.

“போன் டிவி கூடவே குடும்பம் நடத்துறதுக்கு நீங்க எதுக்கு எனக்கு புருஷனா இருக்கனும்?” எனக் கோபமாய் கேட்டவள்,

“எனக்கு தேவைப்பட்டது, நான் எதிர்பார்த்தது, என்கிட்ட உங்க அன்பையும் அக்கறையையும் காண்பிக்கிற மாதிரியான உங்க பேச்சையும் செயலையும், எனக்காக நீங்க செலவிடும் நேரத்தையும் தான். நீங்க வாங்கி தருகிற எந்த பொருளும் உங்களோட அன்பை எனக்கு காண்பிக்காதுங்க” என்றாள். 

“நான் என்ன தப்பு செஞ்சிட்டு இருந்தேன்னு டாக்டர் ஷ்யாம் சொல்லி புரிஞ்சிது தனு. 

கார்த்திக் உனக்கு ஃப்ரண்டுன்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.  ஆனா என்னை விட அவன் உனக்கு ஆறுதலா இருக்கான்னு நீ நினைக்கிறது என்னை ரொம்பவே கவலைக்குள்ளாக்கிச்சு.  கார்த்திக்கிட்ட மனசு விட்டு பேச முடிஞ்ச உன்னால என்கிட்ட பேச முடியாம போனதுக்கு காரணம் என்னனு தெரியாம தான் இரண்டு வாரமா மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்திட்டு இருந்தேன்” என்று அவன் கவலையாய் உரைக்கவும்,

“அதுக்கு காரணம் நீங்க தான்.  ஏற்கனவே உங்களை பார்த்தா கொஞ்சம் பயம் எனக்கு. இதுல நீங்க என்கிட்ட சாதாரணமா பேசியிருந்தா கூட என் சைட்ல நான் பேச முயற்சி செஞ்சிருப்பேன்.  நீங்க பேசாம இருந்துட்டு நைட் மட்டும் ரொமேன்ஸ் செஞ்சா உங்க குணமே அது தான்னு நினைச்சிட்டேன்” என்றாள் இவள். 

“டாக்டர் ஷ்யாம் சொன்னாரு, காதலை வெளிப்படுத்தாம நான் செய்யும் எதுவும் உனக்கு காதலாய் தெரியாது கடமையா தான் தெரியும்னு சொன்னாரு.  அன்னிக்கு பார்வதி என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போனதும் அவர் கேட்ட முதல் கேள்வி, பொண்டாட்டிக்கிட்ட உங்க பிரச்சனையை பேசுனீங்களானு தான் கேட்டாரு.  நான் இல்லைனு சொன்னதும், புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்க பிரச்சனையை அவங்க இரண்டு பேரும் தான் பேசி தீர்க்கனும்.  இடையில மூணாவதா யாரையும் வர வைக்க கூடாதுனு சொன்னாரு. 

நான் உன்கிட்ட மனம் விட்டு பேசினதே இல்லையே! அது தான் நான் செஞ்சிட்டு இருக்க பெரிய தப்புனு புரிஞ்சிது! அன்னிக்கு வீட்டுக்கு வரும் போது நீ வேற அழுத மாதிரி இருந்தியா! அதுக்கு காரணம் தெரியலைனாலும் உனக்கு நான் ஆறுதலா இருக்கனும்னு தோணுச்சு. உன்கிட்ட இயல்பா பேசவும் பழகவும் முடிவு செஞ்சேன்” என்று கூறி முடித்தான். 

“சரி விடுங்க. இனி நம்ம செஞ்ச தவறைலாம் திருத்திக்கிட்டு வாழ்வோம்.  அன்னிக்கு நீங்க பாரு அக்காகிட்ட பேசினதை பார்த்ததுலயே உங்க மேல உள்ள பயம்லாம் போய்டுச்சு.  இனி நீங்களே பேசாம இருந்தாலும் நான் பேசாம இருக்க மாட்டேன்! உங்களை பேச வைக்காம விட மாட்டேன்” சிரித்தவாறு உரைத்தாள். 

“லவ் யூ தனு” என அவளின் உள்ளங்கைக்குள் தனது கையினை கோர்த்து கொண்டான். 

“மீ டு புருஷா” என கண் சிமிட்டினாள் அவள். 


நான்கு மாதங்களுக்கு பிறகு…

காலையில் எழுந்த தனலட்சுமி, சமையலறையில் வழமையாய் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்க, தூங்கி எழுந்து காலை கடன்களை முடித்து வந்து செய்திதாளை கையில் எடுத்த ராஜராஜன்,  மீண்டுமாய் அதை மேஜை மீது வைத்து விட்டு பூனை நடையிட்டு சமையலறை நோக்கி சென்றான். 

தனலட்சுமி ஏதோ பலத்த யோசனையுடன் குழம்பை கிளறி கொண்டிருக்க, இவன் பின்னே சென்று கட்டியணைக்க,  இவள் பதறி கையை வீச கரண்டி தூர பறக்க, அவளது வலக்கண்ணில் குழம்பு தெறித்து விழுந்திருந்தது. 

“ஆஆஆஆ” என இவள் கண்ணை கசக்க, “அய்யோ சாரி சாரி தனு” எனக் கூறியவனாய் குழாயில் தண்ணீரை பிடித்து அவள் கண்களை கழுவி கொண்டிருந்தான். 

“பரவாயில்ல விடுங்க! அது கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்றவள் கூற,

“இரு நான் ஊதி விடுறேன்!” என்று அவளின் வலது கண்ணை விரித்து ஊதிக் கொண்டிருந்தான்.

அவளது பார்வையில் விழுந்த அவனது வதனத்தை இமை சிமிட்டாது கண்டு ரசித்தவள், “என் பக்கத்துல வந்தா டெம்ப்ட் ஆகி வேலை கெட்டுடும்னு சொன்னீங்களே! இப்ப ஏன் வந்தீங்களாம்?” எனக் கேட்டாள். 

அவளின் கேள்வியில் இதழ் விரிய சிரித்தவனை விழிகள் விரிய நோக்கியவள், “நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க” என்றாள். 

வெட்க புன்னகை அவன் சிந்த, “வெட்கப்பட்டா இன்னும் அழகா இருக்கீங்க” என அவள் மேலும் அவனை சிவக்க செய்ய,

“என் புருஷன் எம்பூட்டு வெட்கப்படுறாரு” கண்ணை துடைத்துக் கொண்டே உரைத்தவள், “பாருங்க உங்க கருத்த கன்னம் பளபளனு மின்னுது”  என மேலும் அவனை கேலி செய்ய,

“தனுஊஊ!” என முறைத்தான். 

“போதும் போதும் உங்க முறைப்பு!  இந்த முறைப்புக்குலாம் அடங்குற ஆளு நான் இல்ல! இத்தனை நாளா உங்களை மிலிட்டரி ஆபிசர்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.  இப்ப தானே தெரியுது நீங்க ஒரு லவ்வர் பாய்னு!” என்று அவள் கண்களை சிமிட்ட,

“தெரியாத்தனமா கிச்சன் பக்கம் வந்துட்டேன்மா! என் மானத்தை வாங்காத” என்று கை எடுத்து கும்பிட்டு விட்டு முகப்பறைக்கு சென்றான்.  தனலட்சுமியின் சிரிப்பொலி அவனை பின் தொடர்ந்தது. 

அவன் தான் விட்டு சென்ற செய்திதாளை வாசிக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற தனலட்சுமி,

“இன்னிக்கு ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடுங்க” என்றாள். 

“இன்னிக்கு எந்த தாத்தா பாட்டி சொர்க்கத்துக்கு போய்ட்டாங்கனு பொய் சொல்லனும்” என அவன் சிரித்தவாறு கேட்க,

“நீங்க ஒன்னும் பொய்லாம் சொல்ல தேவையில்ல. உங்க பொண்டாட்டிக்கு செக்கப்க்கு போறேன்னு உண்மையை சொல்லிட்டே வாங்க” என்றவள் கூறியதும்,

“என்னாச்சு தனு? கண்ணு ரொம்ப எரியுதா?” என எழுந்து நின்று அவளின் கண்களை ஆராய்ந்தான்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல”  என்றவள்,  அவன் அணிந்திருந்த டீ ஷர்ட்டை கைகளில் சுற்றியவளாய், எப்படி சொல்வது என திணறியவள் அவனின் கையை பற்றி வயிற்றில் வைத்து, “இங்க குட்டி பாப்பா இருக்கோனு சந்தேகமா இருக்கு.  அதான் செக்கப் பண்ணி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்னு” எனக் கூறி அவன் முகத்தை நோக்க,

“தனுஊஊ” என இன்பமாய் அதிர்ந்து அவளை இறுக அணைத்து கொண்டான். 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இந்த குறளுக்கேற்ப அன்பும் அறமும் உடையதாகிய இல்வாழ்க்கையாய் இவர்களின் வாழ்க்கை விளங்க வேண்டுமென வாழ்த்தி விடைபெறுவோம் நாமும். 

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்