மாய உணர்வுகள் – 1

கணவனின் கை அணைப்பிற்குள் இருப்பதாய் எண்ணி கண் விழித்துப் பார்த்த தனலட்சுமிக்கு, கணவன் அந்த கட்டிலிலேயே தன்னை விட்டு, சற்று தள்ளி படுத்தவாறு உறங்கியதை கண்டு பெருத்த ஏமாற்றம்.

‘நைட்டு அவரோட வேலை முடிஞ்சதும் தள்ளி போய் படுத்துக்கிறது. ஒரு கெஞ்சல் கொஞ்சல் அரவணைப்பு ஒன்னும் கிடையாது!’ ஏக்க பெருமூச்சு அவளிடம்.

திருமணம் முடிந்த இந்த நான்கு மாதங்களும் இவர் இப்படித் தான் என அறிந்திருந்த போதும் மனதின் ஆசையும் எதிர்பார்ப்பும் அவளை ஏங்க வைத்தது.

காலை சமையல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவளுக்கு, கழுதினில் ஏதோ ஊறுவது போல் தோன்ற, அது அவளைக் கூச செய்ய, கணவனின் மீசை உராய்வோ என எண்ணி சிலிர்த்து போனாள் அவள்.

ஆனால் சட்டென்று அவள் கழுதினில் உரசி சிலிர்க்க வைத்திருந்த அந்தக் காக்கை சிறகு பறந்த அதே சமயம், “தனலட்சுமி! காபி” என அவளின் கணவன் ராஜராஜன் அழைத்த சத்தத்தில் அதன் உணர்விலிருந்து விடுபட்டவளாய்,

‘இந்த மனுசன் சுட்டுப் போட்டாலும் பெட் ரூம் தாண்டி ரொமேன்ஸ் செய்ய மாட்டாருனு தெரிஞ்சுமே அவர்னு நினைச்சேன் பாரு என்னைச் சொல்லனும்’ எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘ஊர்ல உள்ளவங்க கூட என்னைத் தனம், லட்சுமினு பேரை சுருக்கி கூப்பிடுறாங்க. ஒரு செல்ல பேரு வச்சி கூப்பிட்டா என்னவாம்? தனலட்சுமினு நீட்டி முழக்கி கூப்பிட்டா தான் இவருக்கு கூப்டா மாதிரி இருக்கும் போல’ கடுப்பாய் மனதினுள் பேசியவாறே காபியை கலந்து கொண்டிருந்தாள்.

தலைக்குக் குளித்து ஈர முடியுடன் நெற்றியில் திருநீறு குங்குமம் பொட்டுயென மங்கலகரமாய் கையில் காபி கோப்பையுடன் தன்னை நோக்கி வந்த மனைவியை ஆசையாய் நோக்கிய ராஜராஜன், அவளின் பார்வை தன் மீது படர்வதை உணர்ந்ததும் கையிலிருந்த செய்திதாளில் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

அவளின் பார்வை கருத்த நிறத்தில் அடர்ந்த பெரிய மீசையுடன் ஆஜானுபாகுவான உடல் வாகுடன் இருக்கும் கணவனின் மீது தான் இருந்தது.

‘பொண்டாட்டி அழகா வந்து நிக்கிறாளே! அழகா இருக்கனு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம்?’ அவனைப் பார்த்தவாறே பொருமி கொண்டிருந்தாள்.

அவளிடம் இருந்த கோப்பையை வாங்கி அருந்தியவனோ, “நீ காபி குடிக்கலையா?” எனக் கேட்டான்.

“இல்ல நான் பால் காய்ச்சினதுமே குடிச்சிட்டேன்” என வழக்கம் போல் உரைத்தவளாய் சமையலறை நோக்கி செல்ல, ஏக்க பெருமூச்சு இவனிடம்.

திருமணமான நாளிலிருந்து இதமான இந்தக் காலை வேளையில் மனைவியுடன் அமர்ந்து ஒன்றாய் பேசி சிரித்துக் காபி அருந்த வேண்டுமெனப் பெருத்த ஆசை அவனுக்கு. ஆனால் இவன் வரும் முன்பே அவள் அருந்தி முடித்து விடுவதால், தன் ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்து விட்டான் அவன். என்றேனும் ஒரு நாள் அவள் தன்னுடன் அமர்ந்து காபி அருந்தாமலா போய்விடுவாள் என மனதினை தேற்றிக் கொண்டான்.

‘அந்த காபி நல்லா இருக்குனு ஒரு நாளாவது சொல்லிருப்பாரா? என்னமோ வேலைக்காரி கையால வாங்கிக் குடிக்கிற மாதிரி ஒரு ரியாக்ஷனும் கிடையாது’ புலம்பியவாறே சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

அலுவலகத்திற்கு செல்ல கிளம்பி வந்தவன், “தனலட்சமி லன்ச் பேக் செஞ்சிட்டியா?” எனக் கேட்டவாறே, வரவேற்பறையில் வாசலில் இருந்த ஒற்றை மேஜையில் அமர்ந்து காலுறை அணிந்து கொண்டிருந்தான்.

‘சமையலறை பக்கம் எட்டி பார்க்கிறது கிடையாது! அது ரெடியாச்சா இது ரெடியாச்சானு மட்டும் கேட்கிறது. நான் அடுப்புல கூட்டு வைக்கிற டைம்ல இவர் வந்து டப்பால கட்டலாம்ல! எனக்கென்ன பத்து கையா இருக்கு’ இதையும் மனதோடு பேசியவாறே மதிய உணவினை டப்பாவில் அடைத்து அந்த உணவுப்பையினைத் தூக்கி கொண்டு அவனிடம் சென்றாள்.

பார்மல் பேண்ட் சர்ட், ஷூவை அணிந்து முதுகில் மடிகணிணி பையுடன் நின்றிருந்தவன் அருகில் வந்து பையினை அளித்தாள்.

அவனருகில் அவள் ஒல்லியாய் அவனுள் அடங்கிப் போகும் உருவத்துடன் மார்பு வரைக்குமான உயரத்துடன் என அவனின் ஆஜானுபாகுவான தோற்றத்திற்கு எதிர்ப்பதமாய் இருந்தாள்.

அவனை மேலும் கீழுமாய் பார்த்தவாறு உணவுப்பையினைக் கையில் திணித்தவள், ‘கல்யாணமாகி நாலு மாசம் ஆகுது! புதுசா கல்யாணமானவங்க மாதிரியா நடந்துக்கிறாரு! வெளிய போகும் போது ஒரு முத்தம் கொடுத்துட்டு இல்ல வாங்கிட்டு போனா என்ன? இப்படி இருக்கிறதுக்கு எதுக்கு இந்தத் தனிக்குடித்தனம்?’ அவனைப் பார்த்து சிரித்தவாறே மைண்ட் வாய்ஸில் பேசி கொண்டிருந்தவளை அவனின் “ஓகே பை! பார்த்து பத்திரமா இருந்துக்கோ” என்ற குரலே அவளை நடப்புக்கு இழுத்து வந்தது.

அவன் சென்றப்பின், “ஹப்பாடா” என நீண்ட பெருமூச்சை விட்டவாறு, வரவேற்பறையில் இருந்த சோபாவிலேயே அமர்ந்து கொண்டாள்.

பத்து நிமிடம் இளைப்பாறி விட்டு பெருக்கல் துடைத்தல் வேலையைத் துவங்கலாம் என எண்ணியவளாய் தொலைகாட்சி பெட்டியை இயக்கினாள்.

பாடல் சேனல் ஒன்றில், “வா வா என் தேவதையே” என்றொரு பாட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்க,

அதைப் பார்த்து கொண்டிருந்தவளோ, “ஹ்ம்ம் இப்படிலாம் அப்பா கிடைக்கவும் கொடுத்து வச்சிருக்கனும் போல” என்று தனது குடிக்கார தந்தையை நினைத்தவாறு பெருமூச்சு விட்டாள்.

தனலட்சுமி பிறந்தது படித்தது அனைத்தும் மதுரையில் தான். இவளின் மூன்றாம் வயதில் இறந்த தாயின் நினைவில் இவளின் தந்தை குடிகாரனாகி, அடுத்த இரண்டு வருடத்தில் போதையில் வண்டி விபத்தில் சிக்கி இறந்து போக, அடுத்து இவளை வளர்த்து படிக்க வைத்துக் கல்யாணம் வரை செய்து வைத்தது அனைத்தும் இவளின் தந்தை வழி பாட்டி தான்.

சொந்தமாய் நிலபுலன்கள் வைத்திருந்த குடும்பம் என்பதால், அதில் வரும் வருமானத்தை வைத்து வறுமை இல்லாமல், அவளைச் செழிப்பாய் வளர்த்தார் அவளின் பாட்டி.

தனலட்சுமி கல்லூரி படித்து முடித்து, தேர்வு முடிவுக்காய் காத்திருந்த நேரத்தில் கல்யாண தரகர் மூலம் ராஜராஜனே தனக்காகப் பெண் கேட்டு அவளின் பாட்டியிடம் பேசினான்.

தனது வாழ்வில் தந்தை, தமையன், நண்பன் என எந்த வடிவத்திலும் ஆண் துணையில்லாது, ஆண்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாது வளர்ந்து வந்த தனலட்சுமிக்குத் திருமணம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது.

தனக்கென்று யாருமில்லாமல் விடுதியில் தங்கி படித்து வளர்ந்து, மென்பொருள் நிறுவனத்தில் மேனேஜராய் பணிபுரியும் இருபத்தி எட்டு வயது ராஜராஜனுக்குத் தரகர் காண்பித்த இருபத்தொரு வயது தனலட்சுமியின் புகைப்படம் மனதினுள் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்த அவளை மணமுடிக்க அவனே அவளது பாட்டியிடம் பேசினான்.

அவனின் படிப்பும், வேலையும், ஐந்து இலக்க சம்பளமும், சென்னையில் இருக்கும் சொந்த வீடும் என இவை அனைத்தும் தனலட்சுமியின் பாட்டியை இந்தச் சம்மந்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்தது.

“வா வா என் தேவதையே” பாடல் கேட்கும் போதே தந்தையின் இழப்பை எண்ணியும் தன் வாழ்வில் தனக்காக இருக்கும் ஆண்களென எவரும் இல்லாமலேயே போய்விட்டனரே என எண்ணி வருந்தியவளுக்கு,

அடுத்து வந்த, “கொஞ்சி பேசிட வேண்டாம்” பாடல் ராஜராஜன் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் ஒருங்கே உண்டாக்கியது.

“இப்படி ஒரு வாழ்க்கை தானே நான் கேட்டேன். புருஷன் என்னைக் கொஞ்சனும் கெஞ்சனும், சண்டை போடனும், சமாதானம் செய்யனும்! எல்லார விடவும் அவருக்கு என்னைத் தான் பிடிச்சிருக்கனும். எனக்காகவே அவர் வாழனும்னு எவ்ளோ ஆசையோட கனவுகளோட எதிர்பார்ப்போட இந்த வாழ்க்கைக்குள்ள அடியெடுத்து வச்சேன். ஆனா நாலு மாசமாகியும் என்கிட்ட மொத்தமா நாலு வார்த்தை தான் பேசியிருப்பாரு இந்த மனுஷன். இந்த வாழ்க்கை எங்க போய் முடியுமோ!” என வாய்விட்டே புலம்பினாள்.

சிறிது நேரம் கழித்து வீட்டை கூட்டியவள், பாத்திரங்களைத் துலக்கி சமையலறையைச் சுத்தம் செய்து எனத் தனது அன்றாடப் பணிகளுக்குள் மூழ்கி போனாள்.

மதிய வேளையில் உணவை தட்டில் எடுத்து வந்து சோபாவில் அமர்ந்தவள், “ஆபிஸ்க்குப் போனதும் ஒரு போன் கால் பண்ணி சாப்பிட்டியா என்ன செய்றனு கேட்குறதுக்கு என்னவாம் இவருக்கு!” வாய்விட்டே கூறி கொண்டவளாய் உண்டு கொண்டிருந்தாள்.

“ஆமா சும்மா வீட்டுல இருக்கச் சனி ஞாயிற்றுக்கிழமைலயே அவர் உன்கிட்ட சிரிக்கச் சிரிக்கப் பேசினாரு பாரு ஆபிஸ்க்குப் போய் போன் பண்றதுக்கு” என அவளின் மைண்ட் வாய்ஸ் மேலும் வெறுப்பேற்றியது.

தனது கைபேசியினை எடுத்து பாட்டிக்கு அழைக்கலாம் என எண்ணியவள் முகநூலில் வந்திருந்த அறிவிப்புகளைப் பார்த்து அதனுள் நுழைந்து நியூஸ் ஃபீடை தள்ளி பார்த்தவாறே உண்டு கொண்டிருந்தாள்.

“என் தங்கம் பரிசு வாங்கியிருக்கு! என் தங்கச்சி என் நலம் விரும்பி ரேகா பொதிகை தளத்தில் நடத்திய சிறுகதை போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கா! வாழ்த்துகள் மச்சி!

வாங்க வந்து வாழ்த்துங்க ஃப்ரண்ட்ஸ்!

உங்கள் நண்பன்,
கார்த்திக்”

என்று அந்தப் பெண்ணின் புகைபடத்துடன் ஒரு பதிவு அவள் கண்களில் படவும் அதிலுள்ள பின்னூட்டங்களைப் பார்த்தாள் தனலட்சுமி.

“ரேகா டிரீட்”

“தம்பி டிரீட்”

“மச்சி டிரீட்”

“கார்த்திக் செல்லம் தேங்க்யூடா! எனக்குப் பதிலா நீயே எல்லார்க்கும் ட்ரீட் கொடுத்துடு”

“ஹே நமக்குப் பிரியாணி கிடைக்கப் போகுது! கார்த்திக் கார்ல கூட்டிட்டு போய் நம்ம எல்லாருக்கும் வாங்கித் தருவான்”

“டேய் அண்ணா இப்படித் தனிப் போஸ்ட் என்னிக்காவது எனக்குப் போட்டிருக்கியா? நான் உனக்குப் பாசம் இல்லை தானே 😓😓”

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கிண்டலாய் கேலியாய் தங்களின் மகிழ்வை பின்னூட்டத்தில் வெளியிட்டிருந்ததைப் பார்த்தவளுக்கு,

“என்னடா இது எல்லாரும் பொண்ணுங்களா ரிப்ளை பண்ணிருக்காங்க! ஒரு பசங்க இல்லை” எனத் தோன்ற, அவனது பிரோபைலை பார்த்தாள்.

ரேகா என்பவள் தான் இவளின் முகநூல் நட்பில் இருப்பவள். அவளின் கதைகளைப் படித்துப் பிடித்து, தானே விரும்பி தான் நட்பிணைப்பில் சேர்த்து கொண்டாள் தனலட்சுமி.

கார்த்திக் அந்த ரேகாவை டேக் செய்திருந்ததில் அந்தப் பதிவு இவளுக்கும் காணக்கிடைக்க, இத்தனை பெண்கள் தங்கம், செல்லம், வெல்லம் எனக் கொஞ்சும், யார் இந்த அப்பாட்டக்கர் கார்த்திக் என மனதினுள் நினைத்தவாறே பிரோபைலை பார்த்தவளுக்கு அவனொரு மென்பொறியாளன் என்பதும், பின்னூட்டம் அளித்திருந்த அனைத்து பெண்களுக்கும் பாலமாய் இருந்து அவனை அறிமுகம் செய்து வைத்திருந்தது அந்தப் பொதிகை தளம் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

‘தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்டா அண்ணா. உன்கிட்ட பேசின பிறகு நிஜமாவே மனசு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு’ என்று ஒரு பெண் அவனை டேக் செய்து பதிவு போட்டிருக்க,

‘அதான் ரிலாக்ஸ் ஆகிட்டல்ல! அப்புறம் என்ன ஃபேஸ்புக்ல வேலை. போ போய்ப் படி! நாளைக்கு ஒழுங்கா எக்ஸாம் எழுதுற வழியைப் பாரு’ என்று பதிலளித்திருந்தான் கார்த்திக்.

அவனது முகநூலில் இருந்த பல பதிவுகளையும் அதிலிருந்த பின்னூட்டங்களையும் கண்டவளுக்கு ‘அவ்ளோ நல்லவனா இவன்?’ என்ற கேள்வி தான் எழுந்தது.

இவள் இங்கே முகநூலில் கார்த்திக்கை பின் தொடர்ந்தவாறு உண்டு கொண்டிருந்த அதே நேரம், அங்கே ராஜராஜன் உணவு உண்டவாறே, கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“தனலட்சுமிக்குப் போன் பண்ணலாமா? இந்நேரம் சாப்பிட்டிருப்பாளா?” என அவன் யோசிக்க, ‘தினமும் இப்படித் தான்டா நீ யோசிச்சிட்டு இருக்க! ஆனா ஃபோன் பண்ற வழிய தான் காணோம்’ என அவனுடன் உண்டு கொண்டிருந்த அலுவலக நண்பர்கள் குழாம் கடுப்பாய் உரைத்தனர்.

வழமை போல் அவளுக்கு அழைப்பு விடுக்காது உண்டுவிட்டு வேலை பார்க்க சென்று விட்டான்.

— தொடரும்