மயிலாப்பூரு மயிலே… ஒரு இறகு போடம்மா! 18

அத்தியாயம் – 18

சிறுவயதிலிருந்து வெற்றி ஏன் தந்தை தன்னுடன் இல்லாமல் போனாரென யோசித்திக்கொண்டே இருப்பான்.

ஊருக்குள் மாணிகத்தைக் கண்டால் அவரிடம் ஆசையாக செல்வான். முன்புபோல வீட்டிற்கும் அவர் வருவதில்லையல்லவா.

ஆனால் அவர் எப்போதும் போல கண்டு கொள்ளமாட்டார். அவன் மீது பாசமும் இல்லையே.

தாமரை கர்ப்பமென அறிந்தபின், ஒருமுறை மாணிக்கத்தைக் கண்டபோது, அவரை இகழ்ச்சியாக திட்டிய சுந்தரம்,

“என் தங்கச்சிய தனியா நிக்க வச்சுட்டு… நீ மட்டும் பொண்டாட்டி குழந்தைனு நல்லாருக்கலாம்னு நெனைக்கரியா? உன்ன நிம்மதிய இருக்கவிட மாட்டேன்டா.” என கண்களில் குரோதத்தோடு ஒருமுறை மிரட்டியுள்ளார்.

அதுவே இன்றளவும் அவர்மீது பயம் கொள்ள காரணமாக இருக்கிறது.

நடந்த எதையும் ஏற்கமுடியாமல் மாணிக்கம் குடிப்பதை நிறுத்திய சமயம் அது.

இப்படியொரு விஷயம் நடந்திருக்காவிட்டால், தான் குற்றம் சாட்டப்பட்டிருக்க மாட்டோமேயென நினைத்தவர், யாரை பற்றியும் யோசிக்காது வெளியே சென்றுவிட்டார்.

அதன்பின் அவ்வப்போது வீடு வருபவர், அன்று கோவிலுக்கு நிரம்ப தந்தை வேண்டி கொண்டதாலேயே வந்தார்.

அதன்பின் நடந்தவை அவர் எதிர்பார்க்காததுதான். வேதனையை கொடுத்ததுதான். ஆனால் அவர் மனதை எந்த விதத்திலும் மாற்றவில்லை.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வோம்மென நினைத்தவருக்கே… கிடைத்தது இரண்டாவது வாய்ப்பு… அவர் காதலை அடைய…

தாமரை இறந்து இரு மாதங்கள் கழித்து சுந்தரம் அவரை சந்திக்க வர, அன்று போல எதுவும் மிரட்டதான் வராரோவென்று உள்ளம் பதறியது.

ஆனால் அவரோ, மன்னிப்பு கேட்பதுபோல பேசி, வேலையென குடும்பத்தைவிட்டு வருடமாக நீ தள்ளி இருக்கும்போதுதான் உன் மனநிலையை அறிந்தேனென சொன்னவர், மீனாட்சியும் காதலை மறக்க முடியாமல் கஷ்ட வாழ்வு வாழ்கிறார்.

இருவருக்கும் எதற்கு இத்தனை கஷ்டம். வாழ்வில் கிடைத்த வாய்ப்பைக் பயன்படுத்தி இருவரும் நன்றாக வாழலாமே என,

ஆரம்பத்தில் மாணிக்கம் ‘இது சரி வருமா? அனைவரும் என்ன பேசுவார்கள்?’ என தயங்கினார்.

ஆனால் இனி கிடைக்கவே கிடைக்காதென நினைத்த காதல் கைகூட ஒருவழி உள்ளதென்பது உணர அவருக்கு எல்லாம் மறந்துபோனது.

மீனாட்சி மன்னித்து என் காதலை புரிந்து கொள்வாரென நினைத்தார்.

ஆனால் பேச்சு முடியும் தருவாயில், அந்த வீட்டின் அத்தனை… தொடர்பையும் விட்டு வரவேண்டும். யாருடனும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாதென சுந்தரம் கூற,

முதலில் மறுத்தவரை அவரின் பெற்றோர் செய்த அவசர முடிவால்தானே இத்தனை கஷ்டம். இல்லாவிட்டால் தாங்கள் அன்று பெண் கேட்டு வரும்போது எல்லாம் நல்லபடியாக நடந்திருக்குமே என ஏற்றிவிட, அது நன்றாக வேலை செய்தது.

‘காதலுக்காக இதைக்கூட செய்ய மாட்டாயா?’ என ஊசியை பாதமாக ஏற்றியவர் சென்றுவிட, மாணிக்கம் முடிற்றிலும் குழம்பிப் போனார்.

மனசாட்சி செய்ய போவது தவறு என கூறுவது புரியவே செய்தது. ஆனாலும் இத்தனை நாள் தான் அனுபவித்த வேதனை போதும். இனியேனும் மகிழ்வாக வாழ்கிறேனென சுயநலமாக முடிவெடுத்தார்.

சிலமுறை நாம் ஏதேனும் தவறு செய்துவிட்டால் அதனை ஒப்புக் கொள்ள, அதன் விளைவுகளை ஏற்க இயலாமல் அங்கிருந்து தூரமாக ஓட நினைப்போம். ஏற்று சரி செய்ய தைரியம் இருக்காது.

வெற்றி விஷயத்தில் அவருக்கு அந்த நிலைதான்.

மாணிக்கத்தை பொறுத்தவரை வெற்றி அவர் வாழ்வில் செய்த பெரும்பிழையால் தோன்றியவன்.

அவனை ஏற்க இயலாமல் இத்தனை நாட்களாக சுற்றியவருக்கு, அவனை விட்டு ஒரேயடியாக தள்ளி போவது அத்தனை கடினமானதாக இருக்கவில்லை.

சுந்தரம் சொன்னதுபோல பழைய வாழ்க்கையின் அனைத்தையும் உதறிவிட்டு மீனாட்சியை கரம் பிடித்தார்.

ஆனால் அது எத்தனை சுயநலம்?

அதானால்தான் அவருக்கு காதல் என சென்ற வாழ்க்கையில் பெரிதாக எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை.

மாணிக்கமும், சுந்தரமும் மனசாட்சியற்றவர்களாக இருக்கலாம்.

ஆனால் மீனாட்சி அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லையே!

காதல் கைகூடாது என உள்ளுக்குள் உடைந்து திருமணமே வேண்டாம் தனிமையே போதுமென்றவர்தான். 

அதற்காக தாமரை இறந்தபின் அவரை மீண்டும் திருமணம் செய்துகொள்ளவெல்லாம் நினைக்கவில்லை.

அப்படியிருக்க அண்ணன் வந்து சுந்தரத்தை திருமணம் செய்து கொள்ளும்படியும், அவரிடம் பேசிவிட்டதாகவும் சொல்ல, அளவுகடந்த கோபம் வந்தது.

இதில் அவர்கள் வீட்டில் யாருடனும் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டாரென்று கூறியதை மகிழ்ச்சியாக சொன்னவர், கல்யாணத்துக்கு தயாராக இருக்குமாறும் சொல்ல, தமயனை அற்பமாக பார்த்தவர், முடியாதென மறுக்க வாக்குவாதம் வந்தது.

கோபத்தில், “எனக்கு அண்ணன்தான நீங்க எப்போலருந்து…” என வார்த்தைகளை விட ஓங்கி அறைந்துவிட்டார்.

“இதுக்குமேல ஒரு வார்த்தை பேசுன. அப்டியே கொன்னு பொதச்சுருவேன்.” கர்ஜனையாக சொன்னவர்,

“நீ அவன தவர யாரையும் கட்டிக்குவேன்னு சொல்லு. இதை விட்டற்றேன்.” உடனே தலையை குனிந்து கொண்டார். அது அவருக்கு சாத்தியமில்லை.

“தெரியும்… இந்த ம**த்துக்குதான் அவன்கிட்ட பேசி கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்றேன். அவன விட்டும் தொலைய மாட்டே. அவன்கூடவே கல்யாணம் பண்ணிட்டு கிளம்பு.”

“ஊருக்குள்ள உன் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க துப்பு இல்லை. நீயெல்லாம் ஒரு ஆம்பளையானு கேக்குறானுங்க. எனக்கு இதுலாம் தேவையா?”

“உனக்கு புடிக்குதோ இல்லையோ கல்யாணம் நடந்தே ஆகனும் அவ்ளோதான் எனக்கு. இல்ல நடக்கறதே வேற…” மிரட்டிவிட்டு சென்றுவிட, இரண்டாவது முறையாக தன் வாழ்வில் திக்கற்று நின்றார்.

அவர்கள் வீட்டிலும் எப்டியோ மீனாட்சிக்கு திருமணமானால் போதுமென்ற எண்ணம் வந்திருந்தது இந்த நான்கு வாருடங்களில். எனவே சுந்தரம் முடிவையே சரியென்றனர்.

அடுத்த நாளே, அவர்கள் வீட்டினரை மட்டும் கொண்டு, கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்திருக்க,

காரில் தனியாக செல்லும்போது எத்தனையோ முறை கெஞ்சியும், மாணிக்கம் அவர் குடும்பத்தை விலகுவது என்ற முடிவில் பின்வாங்கவில்லை.

‘தானே குழந்தையை வளர்க்க பிரியப்படும்போது ஏன் அதை மறுக்கவேண்டும்?’

‘சுந்தரம் சொல்லி செய்கிறாரா? இல்லை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாரா?’ என சந்தேகம் வந்தது.

இரண்டும்தான்…!

வள்ளியம்மையிடம் கணவன் பேசிய பேச்சு, குழந்தையை திரும்பியும் பார்க்காமல் வந்தது என எல்லாம் மாணிக்கத்தின் நிலையை அவர் மனதில் ரொம்பவே இறக்கியது.

அதுவும் மாமியார் பார்த்த பார்வை…

அர்த்தம் புரியாதா என்ன?

அவர் மட்டுமல்ல… அதன்பின் பலரும் அதுபோல அவரை பார்ப்பதை கவனித்திருக்கிறார்.

தாயை இழந்த குழந்தையிடமியிருந்து, தந்தையை பிரித்துவிட்டாளென்ற குற்றம் சாட்டும் பார்வை!

அவன் மனைவி எப்போ போவளோ என காத்திருந்தாள் போல என்ற இளக்காரமான பார்வை!

‘இது எதுவுமே உண்மையில்லை என்று யாரும் சொன்னால் நம்புவார்களா? வாய்ப்பில்லையே.’

‘என்ன வாழ்க்கை இது? நான் என்ன பாவம் செய்தேன்? உண்மையாக காதலித்ததற்கு தனக்கு இத்தனை வலி, வேதனை, இழப்பு, அடுத்தவரின் தூற்றல் என இத்தனை சன்மானமா?’

அவரிதழ்கள் விரக்தியாக புன்னகைத்துக் கொண்டது.

அதன்பின் ஒரு மனைவியாக இருந்தார்தான். ஆனால் துளியும் மகிழ்ச்சியாக இல்லை.

தான் நேசித்தவர் இத்தனை சுயநலவாதி என்பதிலேயே அவருக்கு வெறுத்துப்போனது.

மாணிக்கம் எத்தனை முயன்றும் அவரின் மீனாவை மீட்க இயலவில்லை.

ஆரம்பத்தில் மனைவி ஒட்டாமல் இருந்தாலும் சரியாகிவிடுமென நினைக்க எதுவுமே மாறவில்லை.

மாதங்கள் போயும் விலகி நிற்கும் மனைவி, உள்ளே தப்பு செய்கிறோமோ என்ற குற்றவுணர்வு, சுந்தரத்தின் அதிகாரத்திற்கு கீழே இருப்பது என அவர் எண்ணியது போல காதல் வாழ்க்கை இனிக்காமல் போக, அத்தனை கோபமும் மனைவி மீதே திரும்பியது. அதை நினைத்தும் மீனாட்சி வருந்தவில்லை.

‘தனக்கு இது தேவைதான்.’ என தன்னையே சாடிக்கொண்டவர், ‘அவ்வளவுதான் நீ . ஆடும் வரை ஆடு எல்லாத்துக்கும் முடிவுண்டு.’ என அமைதியாகிப் போனார்.

கதிர் பிறந்த பின் ஒரு அன்னையாக குழந்தையை அன்பாக பார்த்துக் கொண்டார்தான்.

ஆனாலும் வெற்றியை நினைத்து ரொம்ப குற்றவுணர்வாக இருக்கும்.

எனவே யாருமறியாமல் கதிருக்கு வெற்றி மீது பாசமும் மதிப்பும் இருக்கும் படியே சொல்லி வளர்த்தார்.

கதிர் வெற்றிக்கு இடையே நான்கு வயது வித்தியாசம். 

ஊரிலுள்ள பள்ளியில்தான் வெற்றி, தர்மா, கதிர், பிரபா, கண்ணன், தேன்மொழி, மல்லி, புவனா, பவி என அனைவரும் படித்தனர்.

வெற்றியின் அன்பின் ஏக்கம் நாளடைவில் கொஞ்சம் கோபமாக மாறியது.

ஏன் விட்டு சென்றாரென குழந்தையாக இருக்குமோது புரியாமலிருந்தவன், இப்போது அறிந்திருந்தானே.

அதுவும் பள்ளிக்கு என்றேனும் மகனை அழைத்து செல்ல வரும்போது, கதிரை அவர் கொஞ்சுவது கண்டுவிட்டானென்றால், பொறாமையாகக் கூட இருக்கும்.

மீனாட்சி, கதிர் இருவரும்தான் தந்தை தன்னை விட்டு செல்ல காரணம்மென நினைத்தான்.

ஒருமுறை கதிர், “அண்ணா” என பேச வரும்போது, “நீ ஒன்னும் என் தம்பி இல்ல. அப்படி கூப்டாத.” திட்டி அடித்து விட, அவன் அழுதுகொண்டே சென்றுவிட்டான். அதை பார்த்து மனம் என்னவோ போலானதுதான்.

அதன்பின் கதிரும் பாசமிருந்தாலும் வெளிப்படுத்தவில்லை.

வருடங்கள் நகர, தந்தையின் வாழ்க்கையில் நடந்தது பற்றி தெரிந்தபோது, ஆரம்பத்தில் அவர் காதல் சேராது போனது பாவமென நினைத்தான்.

ஆனால் அவர் செய்தது எந்த விதத்திலும் ஞாயப்படுத்த முடியாத தவறு என்று நிச்சயம் தோன்றியது.

‘எனக்கு எதற்கு கோபம், ஏக்கம் வரவேண்டும்?’

‘என்னை ஒதுக்கியவர்கள் என்மீது பாசம் செலுத்தவில்லை என்பதாலா?’

‘அன்பைக் கெஞ்சி பெறமுடியுமா? அப்படி பெரும் அன்புதான் தேவையா?’

‘உண்மையான அன்பை செலுத்த என் வாழ்வில் பாட்டி, புவனா உள்ளார்கள். அவர்களே போதும்.’ என ஒரு கட்டத்தில் வெற்றி புரிந்து கொண்டான்.

மென்மை, கனிவு என்பது அவன் இயல்பாக, உள்ளம் எதையோ தேடி ஏக்கம் கொண்டாலும், எல்லாவற்றையும் தாண்டி சிரித்த முகமாக வலம் வந்தான்.

தொடரும்…