மனம் கொய்த மாயவனே – 4
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 4
“அரைமணி நேரம் லேட் செழியன்…” என்று சொல்லி தன் கைகடிகாரத்தைப் பார்த்துக் கொண்ட தன் உயரதிகாரி சுதாகர் முன் அமர்ந்திருந்தான் செழியன்.
‘எல்லாம் அந்தக் கிறுக்கியால் வந்தது. கலரிங் பண்ணி விட்டு, அதைச் சரி பண்ண பார்லர் போய்ட்டு வர லேட் ஆகிடுச்சு. அது பத்தாதுன்னு ட்ரெஸ்னு என்ன கருமத்தையோ போட்டு வந்து என் நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டாள். அதையா இவரிடம் சொல்ல முடியும்?’ என்று நினைத்தவன் கிருதிலயாவை நினைத்து மனதிற்குள் பல்லைக் கடித்தான்.
ஆனால் வெளியே அமைதியாகக் காட்டிக் கொண்டவன், “சாரி சார். இங்கே வரத் தான் கிளம்பிட்டு இருந்தேன். அதுக்குள்ள ஒரு பர்சனல் எமர்ஜென்சி… சாரி…” என்று மன்னிப்புக் கேட்டு அவரைச் சமாளித்தான்.
‘என்னை இத்தனை சாரி கேட்க வச்சுட்டாளே அந்தக் கிறுக்கி’ என்று இன்னும் உள்ளுக்குள் கொதிப்பு அதிகமானது.
“ஓகே, அதை விடுங்க. உங்ககிட்ட ஒரு புதுப் பிராக்ஜெட் கொடுக்கத் தான் கூப்பிட்டேன்…” என்றவர் அதைப் பற்றிய விவரத்தை அவனிடம் பகிர்ந்து கொண்டார்.
அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டவன், “சரிங்க சார், கச்சிதமா பண்ணிடலாம்…” என்றான்.
“நீங்க சிறப்பா செய்வீங்க என்ற நம்பிக்கையில் தான் இந்தப் பிராக்ஜெட்டை உங்க கிட்ட கொடுத்திருக்கேன். எவ்வளவு சீக்கிரம் பிராக்ஜெட்டை முடிக்கிறீங்களோ அவ்வளவு சீக்கிரம் நல்லது…” என்றார்.
“முடிச்சுடலாம் சார்!”
“ஓகே, ஆல் தி பெஸ்ட்!” என வாழ்த்தியவர், “தலையை அழகு படுத்திக்கிறதை விடப் பங்சுவாலிட்டி முக்கியம் செழியன்…” என்றார் அவனின் தலையைக் குறிப்பாகப் பார்த்து விட்டு.
“சாரி சார்…” என்று மட்டுமே செழியனால் சொல்ல முடிந்தது.
“நீங்க சிறப்பா வர கூடிய இளைஞன் செழியன். இது மாதிரி சின்னச் சின்ன விஷயம் கூட உங்க வளர்ச்சிக்குத் தடையா வந்திட கூடாதுன்னு தான் சொல்றேன்…”
“புரிகிறது சார்…”
“ஓகே செழியன், நீங்க கிளம்புங்க…” என்றார் சுதாகர்.
வெளியே வந்தவன் முகம் கடுகடுவென்று இருந்தது.
‘தன் அதிகாரி குறை சொல்லும் படி ஆகிவிட்டதே’ என்ற கோபம் அவனின் நடையில் தெரிந்தது.
“என்னடா செழியா, சுதாகரு உன்னைக் கஞ்சி காய்ச்சி அனுப்பிட்டாரா? எத்தனை செல்சியஸ் கொதிச்சார்?” என்று கேட்டு வழியில் சிரித்துக்கொண்டே வரவேற்ற நண்பன் ஆனந்தை எரித்து விடுவது போல் பார்த்தவன் நிற்காமல் நடையைத் தொடர்ந்தான்.
“நில்லுடா செழியா! எதுக்கு இந்த ஓட்டம் ஓடுற? என்ன லேட்டா வந்ததுக்கு வார்த்தையால் கொட்டு வச்சாரா? அவரு எப்பவும் பங்சுவாலிட்டி பத்தி பாடம் எடுக்கிறவர் தானே. அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு சூடாகுற?”
அவனின் கேள்வியில் தன் வேகநடையைச் சட்டென்று நிறுத்தி, “வாயை மூடிக்கிட்டு வர்றியா? இல்ல என்கிட்ட ஒரு அப்பு வாங்கினா தான் அடங்குவியா?” என்று கோபமாக இரைந்தவன் மேலும் நிற்காமல் நடக்க ஆரம்பித்தான்.
“பயபுள்ள ரொம்பச் சூடா இருக்கான் போல…” என்று தனக்குத் தானே புலம்பியவன் “உன் சூட்டை எப்படித் தணிக்கணும்னு எனக்குத் தெரியும்டா…” என்று மார்த்தட்டிக் கொண்டவன் வேகமாகத் தானும் அவனைப் பின் தொடர்ந்தான்.
அவன் சொன்னது செழியன் காதிலும் விழ, நடந்து கொண்டிருந்தவன் விரைந்து ஆனந்தின் அருகில் வந்து, “இப்படிச் சத்தமா பேசாதடா. யார் காதுலயாவது விழுந்தா உன்னையும், என்னையும் தப்பா நினைக்கப் போறாங்க…” என்றவன் நண்பனின் வாயைத் தன் கரத்தால் மூடினான்.
அவனின் கையை விலக்கியவன் “தப்பாவா? இதில் நம்மளை தப்பா நினைக்க என்னடா இருக்கு?” புருவம் சுருக்கிப் புரியாமல் கேட்டான் ஆனந்த்.
“கேட்குறான் பாரு… கேனயன் மாதிரி! நீ சொன்னதைத் திரும்பி ஓட்டிப் பாருடா, உனக்கே புரியும்…” என்றவன் நண்பனுடன் நடையைத் தொடர்ந்தான்.
ஒரு நொடி யோசித்த ஆனந்தின் முகம் அஷ்டகோணலாக மாற, “அட, ச்சை! கருமம் பிடிச்சவனே. நான் எதைச் சொன்னா நீ எதோட லிங்க் பண்ற?” என்று எரிச்சலுடன் கத்தியவன் செழியன் முதுகில் ஒரு அடியைப் போட்டான்.
“உலகம் அப்படி இருக்குடா. அதனால கவனமாகவே பேசு!” என்று சிரித்தபடி சொன்னான் செழியன்.
“கொடுமையைப் பார் செழியா. ஒரு ஆம்பளையும், ஆம்பளையும் ஜாலியா பேசிக்கிறது கூடத் தப்பான அர்த்தத்தில் போய் முடியுது…” என்று புலம்பிக்கொண்டே கூட நடந்தான் ஆனந்த்.
“அங்க எங்க போற செழியா? இப்படி வா!” தன் இருக்கையில் அமர போனவனைத் தடுத்து வாசல் பக்கம் அழைத்தான் ஆனந்த்.
“வெளியே எதுக்குடா? ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் அதைப் பார்க்கணும்…” என்று மறுத்தான் செழியன்.
“வேலையெல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப நீ வா!” என்று அவனின் கையைப் பிடித்து வெளியே அழைத்துப் போனவன், “உன்னோட வண்டி வேண்டாம். என் வண்டிலயே போயிடலாம்…” என்று தன் வண்டியிலேயே அவனை அழைத்துச் சென்றான் ஆனந்த்.
“எங்கடா?” என்று கேட்டாலும் அவனுடன் சென்றான் செழியன்.
சிறிது நேரத்தில் வந்த உணவகத்தின் முன் தன் வண்டியை நிறுத்தியவன் உள்ளே அழைத்துச் சென்றான்.
“என்ன, உன்கிட்ட அந்தக் கிறுக்கிப் போன் போட்டுச் சொன்னாளாக்கும்?” உணவகத்தைப் பார்த்ததுமே கேட்டான் செழியன்.
“ஆமா, கிருதி போன் போட்டாள். காலையில் அவள் செய்த கலாட்டாவில் நீ லேட் ஆகிடுச்சுனு சாப்பிடாம வந்துட்டியாம். உன்னைச் சாப்பிட வைக்கச் சொன்னாள்…”
“இதுதான் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டுறதோ? அவளால் தான் இன்னைக்கு லேட்டாகி சுதாகர் கிட்ட அட்வைஸ் வாங்கிக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்…” தொலைந்து போயிருந்த அவனின் கோபம் திரும்பி வந்து ஒட்டிக் கொண்டது.
அவனுக்கான உணவை கேட்டு ஆர்டர் கொடுத்து விட்டுத் திரும்பிய ஆனந்த், “லேட் அவளால் இல்ல, உன்னால் தான்…” என்று செழியனைக் குற்றம் சாட்டினான்.
“நானா? நான் என்ன செய்தேன்? நானா எனக்குக் கலரிங் பண்ணி விடுன்னு கேட்டேன்?”
“நீ கேட்கலை தான். ஆனா நீதான் காரணம்…”
“டேய்! என்ன கொழுப்பா? நான் என்ன செய்தேன்?” என்று கடுப்பாகக் கேட்டான்.
“ஒருத்தி உன் தலையில் கலரிங் பண்ணுவது கூடத் தெரியாம அசந்து உறங்கியது, உன் தப்பு தானே?”
“நீ வேற ஏன்டா? நைட் ஒரு முக்கியமான வேலை இருந்ததுன்னு அதை முடித்து விட்டு நான் தூங்கவே மூணு மணியை நெருங்கிடுச்சு. காலையில் கொஞ்சம் கண் அசந்துட்டேன். அதுவும் அவள் தலையில் செய்தது தலை கோதுவது போலச் சுகமா இருந்துச்சு. அதில் அவள் செய்தது ஒன்னும் தெரியல…” என்று ஏற்கனவே தான் அப்படித் தூங்கியதில் எரிச்சலுடன் இருந்தவன், நண்பனும் அதைக் குத்திக் காட்ட கடுப்பானான்.
“சரி, சரி விடு! நீ அவளைச் சீண்டுவதும், அவள் உன்னைச் சீண்டுவதும் புதுசா என்ன?”
“புதுசு இல்லை தான். ஆனா வர வர ரொம்ப ஓவரா தான் போகிறாள்…”
“சின்னப் பொண்ணுதானே… போகப் போகச் சரியாகிடுவாள். இப்ப கூடப் பாரு… நீ சாப்பிடலைனு அக்கறையா போன் போட்டுச் சொல்லி உன்னைச் சாப்பிட வைக்கச் சொன்னாள். அவகிட்ட விளையாட்டுத்தனமும் இருக்கு, பொறுப்பும் இருக்கு. கவலைப்படாதே!”
“என்ன பொறுப்போ போ…” என்று காலையில் அவள் உடை உடுத்தியிருந்த விதத்தை நினைத்துச் சலிப்புடன் சொல்லிக்கொண்டான்.
“சரி, விடுடா! ஆனாலும் அவளுக்குத் திறமை இருக்குடா. உனக்குக் கூட அழகா கலரிங் பண்ணியிருந்தாளே! சூப்பரா இருந்தது…” என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்ல,
“அதை எப்படிடா நீ பார்த்த?” என்று வேகமாகக் கேட்டான்.
அவனின் கேள்விக்குத் தன் கைப்பேசியை எடுத்த ஆனந்த் வாட்ஸ்அப்பை திறந்து காட்ட, அதில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த செழியன் தெரிந்தான்.
சாயத்தைப் பூசி விட்டுப் புகைப்படம் வேறு எடுத்திருக்கிறாள் என்று தெரிய, ‘இந்த வேலையும் அவள் பார்த்து வச்சாளா?’ என்று இன்னும் கடுப்பானான்.
“டேய்! முதலில் அந்தப் போட்டோவை டெலிட் பண்ணுடா…” என்று ஆனந்தைக் விரட்டியவன், அவன் அதனைச் செய்த பிறகே அவனை விட்டான்.
“இன்னும் வேற யார் யாருக்கெல்லாம் அனுப்பிவிட்டு இருக்காளோ?” என்று புலம்பினான்.
“வேற யாருக்கும் அனுப்பிவிட்டு இருக்க மாட்டாள் டா. உன்னைச் சாப்பிட வைக்கச் சொல்லவும், என்ன ஏதுன்னு நான் விசாரிச்சுக் கேட்டதில் இந்தப் போட்டோவை அனுப்பி வச்சாள்…” நண்பனின் கோபத்தைக் குறைக்கச் சமாதானம் சொன்னான் ஆனந்த்.
“அவளை நம்ப முடியாது ஆனந்த். இது தான் பேஷன்னு சொல்லி, போட்டோ எடுத்துப் போட்டு ட்ரெண்ட் ஆக்கி விட்டாலும் விட்டுவிடுவாள்…”
“ச்சே,ச்சே! அந்த அளவுக்கெல்லாம் போக மாட்டாள்…” என்று ஆனந்த் மறுத்தான்.
“நீ வேற… அவ எந்த நேரம் என்ன செய்வாள்னே இப்ப எல்லாம் சொல்ல முடியலை…” என்று பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று தன் பேச்சை நிறுத்தினான்.
செழியன் உணவகத்தின் வாயிலை பார்த்தது போல் அமர்ந்திருக்க, ஆனந்த் உட்புறமாக அமர்ந்திருந்தான்.
அதனால் அவன் பேச்சை நிறுத்தவும் நண்பனின் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தவன் “என்னடா, ரத்னா வந்துட்டு இருக்காளா?” என்று திரும்பிப் பார்க்காமலேயே கேட்டான்.
செழியன் ‘ஆமாம்’ என்று தலையசைக்க, “அவளுக்கு மூக்குல வேர்த்துடுமே…” என்று முனங்கிய ஆனந்த், உணவை உண்பது போல் குனிந்து கொண்டான்.
“ஹாய் செழிப்பானவனே! ஹாய் ஆனந்தமானவனே!” என்று ஆர்ப்பாட்டமாக அழைத்துக் கொண்டே வந்தவள் செழியனின் அருகில் அவனை இடிப்பது போல் அமர்ந்தாள் ஆனந்த் சொன்ன மூக்கில் வேர்த்த ரத்னா.
“ஹாய்…” ஆண்மக்கள் இருவரும் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவே சொன்னது போல் ஒரு ஹாயை உதிர்த்து விட, “ஹேய்! என்னப்பா ரெண்டு பேர்கிட்ட இருந்தும் எனர்ஜி கம்மியா வருது? ஐ வான்ட் மோர் எமோஷனல்!” என்று ஆர்ப்பரித்தாள்.
“ஏன், ஒரு மைக் வாங்கிட்டு வாயேன். இந்த ஊருக்கே கேட்கிற மாதிரி ஹாய் சொல்றோம்…” என்று நக்கலாகச் சொன்னான் ஆனந்த்.
“வாவ்! இது கூடச் சூப்பர் ஐடியா தான் ஆனந்தமானவனே! ஆனா மைக்ல சொன்னா இந்தத் தெருவுக்குள்ள மட்டும்தான் கேட்கும். ஊரெல்லாம் கேட்காது. பேசாம எஃப்.எம் ரேடியோ இல்லைனா டிவிலையோ சொல்றீங்களா?” என்று பதிலுக்குக் கிண்டலுடன் கேட்டாள் ரத்னா.
“என்ன கொழுப்பா?” ஆனந்த் கேட்க,
“என்னைப் பார்த்தால் கொழுப்பு பிடித்தவள் மாதிரியா இருக்கு? பாருங்க, நல்லா பாருங்க…” என்று எழுந்து நின்று ஒடிந்து விழுந்து விடுமோ என்பது போல் ஒல்லியாக இருந்த தன் உடலை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிக் காட்டினாள்.
“ஏய் லூசு! என்ன பண்ற? உட்கார்…” என்று செழியனும், ஆனந்தும் ஒரே நேரத்தில் அதட்டினார்கள்.
“ஹான்! என்னப்பா திட்டுறீங்க?” என்று முகத்தைச் சுருக்கிக்கொண்டு மூக்கால் பேசுவது போல் சிணுங்கிக்கொண்டே அமர்ந்தாள்.
“பின்ன? நீ செய்கிற வேலைக்குத் திட்டாம என்ன செய்வாங்க? இப்படித்தான் எல்லாரும் இருக்குற ஹோட்டலில் எழுந்து நின்னு டான்ஸ் ஆடுவாங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டான் செழியன்.
“ஹோட்டலில் டான்ஸ் ஆட நான் என்ன டான்ஸரா? நான் யாருன்னு தெரியுமா? ஹா… நான் யாருன்னு தெரியுமா?” என்று வீர வசனம் போல அவள் குரலை உயர்த்த,
“ஷ்ஷ்! நீ பெரிய அம்மாடக்கர் தான்…” என்று அதட்டலாகச் சொன்ன ஆனந்த் ‘வாயை மூடு!’ என்பது போல ஜாடை காட்டினான்.
“ஓய்! என்ன? ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மிரட்டுறீங்க?” வாயை மூடாமல் சப்தம் கொடுத்தாள்.
“உன்னை மிரட்டிட்டாலும்… அப்படியே மிரண்டு போறவ தான். நீ எதுக்கு இப்ப இங்கே வந்த?” என்று கேட்டான் செழியன்.
“ஹா… என்னை விட்டுட்டு இரண்டு தடி மாடுங்க இந்த ஓட்டல்ல வந்து மொக்க போறதா எனக்கு ஒரு குருவி சொல்லுச்சு. அதுதான் அந்தத் தடிமாடுங்ககிட்ட இருந்து பிடுங்கித் திங்கலாம்னு வந்தேன்…” என்று அலட்சியமாகச் சொன்னவள் செழியன் தட்டிலிருந்து ஒரு வாயும், ஆனந்தின் தட்டிலிருந்து ஒரு வாயும் எடுத்துச் சாப்பிட்டாள்.
“ஏய்… எச்சி… எச்சில்… உனக்கு வேணும்னா ஆர்டர் பண்ணி சாப்பிடு…” என்று அவளின் கையைத் தட்டிவிட்டான் செழியன்.
“நீ ஆர்டர் பண்ணிக் கொடுத்தா நான் சாப்பிடுறேன் செழிப்பானவனே…” என்றாள் கொஞ்சலாக.
“ஏன், உனக்கு வாங்கிக்கத் தெரியாதோ?”
“அது எப்படி? நீ வாங்கித் தர்ற மாதிரி நான் வாங்குவது இருக்குமா? நீயே வாங்கிக் கொடு…” என்று உரிமையுடன் கேட்டாள் ரத்னா.
ஆனந்தின் முன் தன்னை ஒட்டி உரசிக்கொண்டு கொஞ்சலாகப் பேசும் ரத்னாவைக் கடுப்புடன் பார்த்தான் செழியன்.
‘கொஞ்சமாவது கூச்சப்படுறாளானு பாரு’ என்று நினைத்து மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவன் ஆனந்தை ஏறிட்டுப் பார்த்தான்.
ஆனந்த் எதிரில் அவர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பதைக் கூடக் கண்டு கொள்ளாமல் குனிந்து சாப்பிடுவதில் மட்டும் தன் கவனத்தை வைத்தான்.
செழியனின் பார்வை எதிரே செல்வதைக் கண்டு அவனின் தோளில் இடித்த ரத்னா “என்ன அங்க பார்க்குற? நான் கேட்டதை வாங்கிக்கொடு…” என்று அதிகாரமாகச் சொல்ல,
“எல்லாம் என் நேரம்!” என்று தன் தலையிலேயே லேசாகத் தட்டிக் கொண்டவன் சர்வரை அழைத்து அவளுக்குத் தேவையானதை ஆர்டர் செய்தான்.
“ஒரே இடத்தில் படிச்சு ஒரே இடத்தில் வேலை பார்க்கும் இந்தத் துர்ப்பாக்கிய நிலை மட்டும் யாருக்கும் வரக்கூடாதுடா சாமி. சரியான தொல்லை, வருசக்கணக்கா கூடவே ஒட்டிக் கொண்டு வருது…” என்று ரத்னாவிற்கும் கேட்கும்படி முனங்கினான் செழியன்.
அவனின் பேச்சில் ஆனந்த் சப்தமாகச் சிரிக்க, மசாலா தோசையை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த ரத்னாவோ, நிமிர்ந்து ஆனந்தை முறைத்தாள்.
செழியனின் புறம் திரும்பியவள், “யாரைச் சொல்ற செழிப்பானவனே? இட்ஸ் மீ?” என்று தன்னை நோக்கி கையை நீட்டி அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவள்,
பின் அலட்சியமாகக் கையை விசிறி விட்டு, “சொல்லிக்கோ… சொல்லிக்கோ… இந்தத் தொல்லை காலம் முழுவதும் உன்னைத் தொடரும்…” என்றவளின் பேச்சைக் கேட்டு,
“விடாது கருப்பு…” என்று செழியன் கிண்டல் செய்து சிரிக்க, ஆனந்தின் முகம் மாறியது.