மனம் கொய்த மாயவனே – 39
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 39
‘உங்களுக்கும், எனக்கும் சரி வராது’ என்று அல்லி, வெற்றியிடம் சொல்லி விட்டு வந்து, பதினைந்து நாட்கள் கடந்து ஓடியிருந்தன.
வழக்கம் போல வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள் அல்லிராணி.
அவளிடம் முன்பிருந்த கலகலப்போ துறுதுறுப்போ ஏதுமில்லை.
உணர்ச்சிகள் அற்றவள் போல் வேலைக்குச் சென்றாள், வந்தாள். அவ்வளவுதான்.
அவள் அப்படியிருக்க, அவளின் அன்னை சரோஜாவோ யோசனையும், கலக்கமுமாக இருந்தார்.
மகளின் மனநிலை அவருக்கும் புரிந்ததால் அவளை அவள் போக்கில் விட்டுவிட்டார்.
அன்று வெகுநேரம் சென்று வீட்டிற்கு வந்து சேர்ந்த மகளை வாசலில் நின்று எதிர்கொண்ட சரோஜா, அவள் வீட்டிற்குள் நுழைந்ததும் சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தார்.
“எங்கடி போய்த் தொலைஞ்ச? போனையும் வீட்டுல வச்சுட்டுப் போய்ட்ட. இம்புட்டு நேரமும் உன்னைக் காணோமேனு பதறிட்டு இருக்கேன்…” என்று அவர் கேட்டதற்குக் கூடப் பதில் சொல்லாமல் வீட்டின் மூலையில் மடக்கி வைத்திருந்த பாயை எடுத்து விரித்துப் படுத்துக் கொண்டாள்.
“நான் கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லாம படுத்தா என்ன அர்த்தம்?” என்று கத்தியவர், சட்டென்று நிறுத்தி மகளின் அருகில் சென்றார்.
“ஏய் அழுவுறீயாடி? அல்லி என்னடி? இப்ப என்னாத்துக்கு அழுகுறவ?” என்று பதறிய படி கேட்டார்.
அவள் ஒன்றும் சொல்லாமல் அழ, அவரின் பதட்டம் அதிகமானது.
“என்னன்னு சொல்லிட்டு அழுடி. உயிர் போற மாதிரி நெஞ்சு துடிக்குது…” என்று என்னவோ ஏதோ என்று அவர் துடிக்கவும் வெற்றியைப் பற்றிச் சொன்னாள்.
அதைக் கேட்டதும் நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து அமர்ந்து விட்டார் சரோஜா.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“ஏய், ஏமாந்து கீமாந்து போய்ட்டியாடி?” என்று திடீரென்று அவர் பதறிய படி கேட்க,
படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து அன்னையை முறைத்தாள்.
“ஏமாத்துறவன் பின்னாடியா சுத்திட்டு இருந்த? பிராடு பய, அவன் ஏமாத்துறதுக்கு என் பொண்ணுதான் கிடைச்சாளா? வேவு பார்க்க வந்தான்னா அந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போகவேண்டியது தானே. உன் மனசை வேற ஏண்டி கலைச்சு விட்டான்?” என்று வெற்றியை வாய்க்கு வந்த படி திட்ட ஆரம்பித்தார்.
“வாயை மூடுமா…” என்று கோபமாகக் கத்திய அல்லி, “என் வெற்றி ஒன்னும் ஏமாத்துக்காரன் இல்லை. அவன் என் பின்னாடி சுத்தலை.
நான் தான் அவன் பின்னாடி சுத்தி அவன் மனசை கலைச்சேன். நீ திட்டணும்னா என்னைத் திட்டு. என் வெற்றியைத் திட்டாதே!” என்றாள்.
‘அது சரி…’ என்பது போல ஆச்சரியமாக வாயில் கைவைத்தார் சரோஜா.
“ஆனா அவன் உன்னைக் கை விட்டுட்டான்னு இப்ப ஒப்பாரி வைக்கிறது நீ தானேடி…” என்றார்.
“அவன் என்னைக் கை விட்டான்னு நான் எப்ப சொன்னேன்? நான் தான் அவன் வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டே.
“என்னடி சொல்ற? நீ வேண்டாம்னு சொன்னீயா? அப்போ அந்தத் தம்பி உன்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லுச்சா?” என்று வியப்பாகக் கேட்டார்.
“ஆமா… ஆனா நான் தான் சரிவராதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…” என்றவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.
“உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு? ஏண்டி அப்படிச் சொன்ன?”
“அவசரப்படாதேமா! நீயே யோசிச்சுப் பாரு புரியும்…” என்றவள் அதன் பிறகு எதுவும் பேச மறுத்துவிட்டாள்.
சரோஜாவிற்குப் புரிய அதிக நேரம் பிடிக்கவில்லை. மகள் தங்கள் பொருளாதார நிலையையும், அவள் படிக்காததையும் சொல்கிறாள் என்று நன்றாகவே புரிந்து கொண்டார்.
அதன் பிறகு வந்த நாட்கள் அன்னைக்கும், மகளுக்கும் அமைதியாகவே கழிந்தன.
பேச்சில் மட்டுமே அமைதி!
இருவரின் உள்ளத்திற்குள்ளோ பல்வேறு குமுறல்கள், குழப்பங்கள், வருத்தங்கள் என்று மனம் முழுவதும் அலை அடித்துக் கொண்டிருந்தது.
அன்று வேலைக்குச் சென்று விட்டு வந்து, இரவு உணவுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லி.
அப்போது எதிர் வீட்டில் ஏதோ சப்தம் கேட்க, அல்லியின் காதுகள் விடைத்தன.
வேலையை அப்படியே போட்டுவிட்டு வாசலுக்கு ஓடினாள்.
வெற்றிமாறனைப் பிடித்த பிறகு வெற்றி அவனின் குடிசைக்கு வரவேயில்லை.
அவன் விட்டுச் சென்ற பொருட்கள் இன்னும் அங்கே தான் இருந்தன.
அவன் தான் வந்து விட்டானோ என்று ஓடி வந்து பார்த்தவளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
யாரோ ஒருவன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “அப்படியே கூட்டி சுத்தம் பண்ணுங்க…” என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்பட்டுக் குடிசையைச் சுத்தம் செய்தனர்.
‘ஆள் அனுப்பி வீட்டைக் காலி பண்ண சொல்லியிருப்பான் போல’ என்று நினைத்துக் கொண்டே சோர்வுடன் மீண்டும் உள்ளே சென்றாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
‘சரிவராது’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள் தான். ஆனால் அதன் பிறகுதான் அவளின் மனமே நிம்மதியாக இருக்க விடாமல் வாதிட்டு அவளை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தது.
‘அதெல்லாம் சரி வரும். நீயா யோசிச்சுக் குழப்பிக்காதே. உன்னோட குறைகளை அவனே பெருசா எடுத்துக்கலை. நீ ஏன் எடுத்துக்கிற?’ என்று அவளின் மனம் சொல்ல,
‘இப்போ காதல் மயக்கத்தில் பெரியதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பின்னால் மாறி, ‘படிக்காத தற்குறிதானே நீ’ என்று அவன் ஏதாவது கேட்டுவிட்டால்’
‘அப்படிக் கேட்குறவனா இருந்தா உன்னைக் காதலிக்கிறேன்னு ஏன் சொல்லப் போறான்? நீ அவனுக்குச் சரி வரமாட்டன்னு அவன் விலகித் தானே போயிருப்பான்’
‘ஆனா அவன் பெரிய அதிகாரி. அவனுக்குப் பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் பழக்கம் இருக்கும். அவங்க கிட்ட என்னை எப்படி அறிமுகப்படுத்துவான்?
நான் சித்தாளா வேலை பார்த்தேன்னு தெரிஞ்சா அவனைப் பார்த்துக் கேலியா சிரிப்பாங்களே. என்னாலே அவனுக்குத் தானே கேவலம்’
‘நீ இவ்வளவு காரணம் சொன்னாலும் உன்னால் அவனை மறந்துட்டு வாழ முடியுமா?’
‘நான் ஏன் மறக்கணும்? அவன் நினைவுகளோடவே வாழ்ந்துடுவேன். நீ தான் அவனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ற.
ஆனா நான் வேண்டாம்னு சொல்லிட்டு வரவும் அவனும் போனா போகட்டும்னு விட்டுட்டான் பாரு…’ என்று ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டாள்.
அன்று இரவு வெற்றியின் நினைவுகளால் பெரிதும் அலைக்கழிக்கப்பட்டாள் அல்லிராணி.
இரவு முழுவதும் சரியாக உறங்காதலால் விடிந்தும் எழ மனதில்லாமல் படுத்திருந்தாள்.
அப்போது “அல்லி…” என்று யாரோ அழைப்பது போல் இருக்க, ‘யாரது?’ என்று கண்களைத் திறந்து பார்த்தாள்.
அவளின் அன்னை அப்போது தான் எழுந்து அமர்ந்திருந்தார். ஆனால் அவர் அழைத்திருக்கவில்லை.
வெளியே இருந்து தான் சப்தம் வருவது போல் இருந்தது.
மீண்டும், “அல்லி…” என்ற குரல் கேட்க, விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.
அந்தக் குரல் அவளின் வெற்றியின் குரல். திரும்ப வந்து விட்டானா? என்று ஆர்வத்துடன் நினைத்தவளின் முகம் மலர்ந்தது.
ஆனால் அடுத்த நொடியே வாடியும் போயிற்று. அவனுக்கு அவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது இங்கே ஏன் வரப் போகிறான்? அதோடு அவனின் வேலையும் தான் முடிந்து விட்டதே. அவன் இங்கே வர வேண்டிய அவசியம் இல்லையே? என்று நினைத்துக் கொண்டாள்.
‘நைட் முழுசும் அவனையே நினைச்சு தூங்காம இருந்ததால் அவன் கூப்பிடுற மாதிரியே இருக்கு போல’ என்று நினைத்தபடி எழுந்து கதவைத் திறந்து குளியலறைக்குச் சென்று விட்டு வந்தாள். அவள் உள்ளே செல்லும் போது எதிர்வீடு பூட்டியிருந்ததால் தான் நினைத்தது போல் கற்பனை தான் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அவள் வெளியே வந்த போது மீண்டும் அவனின் குரல் கேட்டது.
“ஆள்முழுங்கி, இங்கே வாடி…” என்ற குரல் கேட்க, அந்த வீட்டின் கதவும் திறந்திருக்க, உண்மையிலேயே வெற்றி வந்துவிட்டானா? என்று உள்ளம் குத்தாட்டம் போட, வேகமாக எதிர்வீட்டை நோக்கி ஓடினாள்.
அந்த நேரம் அவனை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டும் என்று அவள் எடுத்த முடிவு எல்லாம் மறந்தே போயிருந்தது.
ஆனால் அவன் வீட்டு வாயிலில் கால் வைத்ததும் ஞாபகம் வர, அவனைப் பார்க்கும் ஆர்வம் அனைத்தும் வடிந்து விட, மீண்டும் தன் வீட்டிற்குச் செல்ல திரும்பினாள்.
அடுத்த நொடி சுண்டி இழுக்கப்பட்டாள் அல்லிராணி.
அவளை வீட்டிற்குள் இழுத்த வேகத்தில் கதவையும் மூடியிருந்தான் அவளின் வெற்றி.
“எம்புட்டு நேரமா என் ஆள்முழுங்கியைக் கூப்பிடுவது? இப்படியாடி நான் கூப்பிட்டதைக் கூடக் காதில் வாங்காம தூங்குவ?” என்று கேட்ட வெற்றி அவளைச் சாற்றிய கதவின் மீதே சாய்த்து நிறுத்தி, அவளை நகர விடாமல் தன் கைகளுக்குள் அணைக்கட்டியிருந்தான்.
அவளோ அவன் பேசியதையே காதில் வாங்காமல் அவனின் முகத்தையே ஆசைப்பொங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்து ஏதோ வெகுகாலம் ஆகிவிட்டது போல் இருந்தது. மீண்டும் அவனின் முகத்தைப் பார்க்கவே முடியாதோ என்று கூட நினைத்திருக்கிறாள்.
“எப்படியிருக்க வெற்றி?” என்று கேட்டுக் கொண்டே அவனின் கன்னத்தில் கைவைக்கப் போனாள்.
ஆனால் சட்டென்று அவனின் நிலையும், தன் நிலையும் ஞாபகம் வர, கையைக் கீழே இறக்கியவள், “நீங்க எப்படி இங்கே?” என்று கேட்டாள்.
அவளின் கையைப் பிடித்துத் தானே தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன், “என் காதலி என்னை வேண்டாம்னு சொல்லிட்டா. அதனால் நான் சரியா சாப்பிடாம இளைச்சுப் போய்ட்டேன்…” என்று சொன்னவன் குரலோ சோகத்தைப் பிரதிபலிக்க, கண்களோ குறும்பில் கூத்தாடியது.
‘இளைச்சுட்டானா?’ என்று பதறி வேகமாக அவனின் மீது பார்வையை ஓட்டினாள்.
கையில்லா பனியனும், லுங்கியும் அணிந்திருந்தான். உடை மூடா அவனின் கைகள் உருண்டு, திரண்டு அவனின் வாளிப்பை காட்டிக் கொண்டிருந்தது.
பனியனை மீறி தெரிந்த அவனின் நெஞ்சுரம், அவனைக் கட்டிளம் காளையாகக் காட்டிக் கொண்டிருந்தது.
‘முன்னாடியை விட ரொம்பப் பளபளன்னு தான் வந்திருக்கான். இதில் எங்கே இளைச்சுட்டானாம்?’ என்று சடைத்துக் கொண்டாள்.
“உனக்குப் பிடிச்ச மாதிரி உன் வெற்றி இருக்கானா ஆள்முழுங்கி?” என்று குறும்புடன் கேட்டவன், கன்னத்தில் இருந்த அவளின் கையைத் தன் உதட்டிற்கு நகர்த்தி அதில் மீசை ரோமங்கள் உராய அழுத்தமாக முத்தம் பதித்தான்.
மீசை ஏற்படுத்திய குறுகுறுப்பும், முத்தத்தின் ஆழமும் அவளை ஏதோ செய்யப் பட்டென்று கையை உருவிக் கொண்டாள்.
“என்ன விஷயமா இங்கே வந்திருக்கீங்க? உங்க வேலை தான் முடிஞ்சிருச்சே. அப்புறமும் ஏன்?”
“இங்கே வந்தேன்னு கேட்குறீயா?” என்று அவளின் வாக்கியத்தை முடித்து வைத்தவன், “என் காதலியைச் சமாதானம் செய்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கூட்டிட்டுப் போக வந்தேன்…” என்றான்.
‘என்ன கல்யாணமா?’ என்று அதிர்ந்து அவனை நோக்கியவள், “நான் தான் நமக்கிடையே சரிவராதுன்னு சொன்னேனே? நீங்க உங்களுக்கு ஏத்த நல்ல பொண்ணைப் பார்த்துக் கட்டிக்கோங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்குத் தான் அவமானம்…” என்றாள்.
“இப்படிச் சொல்ற, இந்த வாயிலையே அடிக்கணும் போல இருக்கு. ஆனா நான் கொஞ்சுறதுக்கு அது வேணும்னு விட்டு வைக்கிறேன்…” என்று முத்தமிடுவது போல் காட்டியவன்,
“இப்ப இந்த நிமிஷம் என்னைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது? அதை மட்டும் சொல்லு. வேற எதுவும் உளற கூடாது…” என்றான்.
‘உன் மார்பில் அப்படியே சாய்ந்து கொள்ள வேண்டும்’ என்று சொல்ல தோன்றியது.
‘உன்னைத் தினமும் பார்க்காமல் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு’ என்று சொல்ல தோன்றியது.
‘நீ இங்கேயே இரு. உன்னைப் பார்த்துக் கொண்டே வாழ்ந்து விடுவேன்’ என்று சொல்ல தோன்றியது.
‘நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்’ என்று சொல்ல தோன்றியது.
‘நீ ஏண்டா சாதாரண வெற்றியா இல்லாம போன?’ என்று கேட்க தோன்றியது.
‘உன் கூடவே நான் இருக்கணும்’ என்று சொல்ல தோன்றியது.
அத்தனை தோன்றியும் ஒன்றை கூட அவள் வாய் திறந்து சொல்லவில்லை.
“உன் வாய் சொல்லாததை எல்லாம் உன் கண்ணு சொல்லுது ஆள்முழுங்கி. உன்னோட பரிதவிப்பை உன் கண்ணு படம் பிடிச்சுக் காட்டுது. எனக்குத் தெரியும். உன் வாய் என்னை விலகிப் போகச் சொல்லுது. உன் மனசு நான் தான் வேணும்னு துடிக்குது…” என்றான்.
வேதனையுடன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
“நீ இவ்வளவு கஷ்டப்படவே தேவையில்லை ஆள்முழுங்கி. முதல் முதலா என்கிட்ட உன் காதலை சொன்னப்ப சொன்னீயே, அதையே வார்த்தைகளை உனக்குள்ள நீயே சொல்லிப் பாரு. அதுக்குப் பிறகு வேற எதுவும் உனக்கு நினைப்பு வராது…” என்றான்.
‘நீ என்னோட வெற்றி! நீ என்னை மட்டும் தான் பார்க்கணும், நேசிக்கணும், ஸ்பரிசிக்கணும்…’ என்று சொன்னவள் ‘இப்போது என்ன தைரியத்தில் இன்னொருத்தியைத் திருமணம் செய்து கொள் என்று சொல்கிறாய்’ எனக் கேட்கிறான் என்று புரிந்தது.
அவள் மட்டும் மனதாரவா சொல்கிறாள்? அவனுக்காகத் தானே சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள்.
இருவருக்கும் இடையே இருக்கும் ஏற்றதாழ்வு அவளைக் குழப்பியது.
“நீ சொன்னது இன்னும் என் மனசில் பசுமரத்தாணி போல இருக்கு ஆள்முழுங்கி. நீ சொல்லலைனாலும் நான் அப்படி இருக்குற ஆள் தான்.
நான் நேசிக்கிற பொண்ணை மட்டும் தான் பார்ப்பேன், நேசிப்பேன், ஸ்பரிசிப்பேன். நான் நேசிக்கிற பொண்ணு நீ மட்டும் தான். உன்கிட்ட மட்டும் தான் அதைச் செய்வேன்.
சோ, இதுக்கு மேல இன்னொரு முறை இன்னொருத்தின்னு ஏதாவது சொன்னன்னு வச்சுக்கோ…” என்றவன் அவளின் உதட்டை அழுத்தமாகப் பிடித்தான்.
அவளின் உதடுகள் வலித்தது. உள்ளம் இனித்தது.
தான் விரும்புகிறவன் தன்னை மட்டும் தான் நேசிப்பான் என்பது அவளின் காதலுக்குக் கிடைத்த வெற்றி அல்லவா!
உதடு வலியிலும், உள்ளம் ஏற்படுத்திய நெகிழ்விலும் அவளின் கண்களில் கண்ணீர் தேங்கிப் பளபளத்தது.
அவளின் வலியை உணர்ந்து, அவள் உதடுகளில் இருந்து கையை எடுத்துவிட்டவன் மீண்டும் அவளின் இதழ்களுக்குத் தண்டனை கொடுக்க ஆரம்பித்தான் தன் அதரங்களால்.
நீண்ட நாட்களுக்குப் பிறகான முத்தம் இருவரையும் திக்குமுக்காட வைத்தது.
சில நொடிகளில் அவளை விடுவித்தவன், “இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கே இருந்தால் என் கன்ட்ரோல் என்னை விட்டுப் போய்டும். நீ போ…” என்று சொன்னவன், கதவைத் திறந்து அவளை வெளியே அனுப்பினான்.
ஏதோ மயக்கத்தில் இருப்பவள் போல் வீடு வந்து சேர்ந்தாள் அல்லிராணி.
வீட்டிற்கு வந்து சிறிது நேரம் சென்று தான் அவளின் காதல் மயக்கம் தெளிந்தது.
‘லூசு… லூசு… என்ன பண்ணிட்டு வந்துருக்க? அவன் இரண்டு வார்த்தைக் காதலா பேசவும் இப்படி மயங்கிட்டியே. எங்களுக்குள்ள எதுவும் மாறாம இந்த ஏற்றதாழ்வுகள் அப்படியே தானே இருக்கு.
அப்புறம் எப்படி நாங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்? நான் அவனை விட்டு விலகுவது தான் அவனுக்கு நல்லது’ என்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள்.
‘திரும்ப முதலில் இருந்தா?’ என்று அவளின் மனசாட்சி அலற ஆரம்பித்தது.
எப்படி இவ்வளவு நேரம் அவனின் கைகளுக்குள் இருந்தோம் என்று யோசித்தாள்.
அவனின் வீட்டில் பார்த்தது போல் இல்லாமல் முன்பு இங்கே பார்த்தது போல இருந்தான். அதனால்தான் தன் பழைய வெற்றியைக் கண்ட மகிழ்வில் மயங்கி விட்டாள் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் அவளுக்குள் புலம்பிக் கொண்டிருந்த மகளின் அருகே வந்த சரோஜா, “அல்லி, இந்தா அந்தத் தம்பிக்குச் சாப்பாடு கொடுத்துட்டு வா…” என்றார்.
தட்டையும், அன்னையையும் மாறி மாறிப் பார்த்தவள், “யாருக்கு?” என்றாள்.
“ம்ம்… என் மருமவனுக்குத் தான். போ, போய்க் கொடு…”
“என்னமா நடக்குது இங்கே?”
“நீ போய்ச் சாப்பாடு கொடுத்துட்டு வா, சொல்றேன். அந்தத் தம்பி வீட்டில் இருந்ததை எல்லாம் காலி பண்ணிருச்சு. இப்போ அந்த வீட்டில் ஒண்ணுமில்லை. தம்பி இங்கே இருக்குற வரைக்கும் நாம தான் சமைச்சுக் கொடுக்கணும்…” என்றார்.
“என்ன? இங்கே இருக்கிற வரையுமா? ஏன் எதுக்கு இங்கே இருக்கப் போறாங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“அதை எல்லாம் அந்தத் தம்பிக்கிட்டயே போய்க் கேளு…” என்று அவளின் கையில் தட்டைக் கொடுத்து விட்டு வேறு வேலையைப் பார்க்க சென்றார்.
அவனிடம் சாப்பாட்டைக் கொண்டு போய்க் கொடுத்தவள், “இங்கே இருக்கப் போறீங்களாமே, ஏன்?” என்று கேட்டாள்.
“அதுவா? என்னோட ஆள்முழுங்கிக்கு ஒரு மனக்குறை இருக்குன்னு நினைக்கிறேன். அவள் என் பின்னாடி சுத்தின பிறகு தான் நான் அவளை லவ் பண்ணினேன்னு. அதான் அந்த மனக் குறையைத் தீர்க்கப் போறேன்…” என்றவனைக் குழப்பத்துடன் பார்த்தாள்.
“நீ என் பின்னாடி சுத்தி நான் லவ் பண்ணினேன். இப்போ நான் உன் பின்னாடி சுத்தி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வைக்கப் போறேன்…” என்றான்.
“எதுக்குத் தேவையில்லாத வேலை பார்க்கிறீங்க? என்னால் உங்களுக்குத் தான் கஷ்டம் வரும். நீங்க இங்க இருந்து போய்டுங்க…” என்றாள்.
“நான் இங்கே இருக்கணுமா போகணுமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். நீ சாப்பாட்டைக் கொடுத்துட்டுக் கிளம்பு…” என்றான்.
முகத்தைச் சுருக்கியவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள். ஒரு சின்னப் பை மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தது. அவனின் மாற்றுத்துணி பை என்று புரிந்தது.
பாய், தலையணை கூட அங்கே இல்லை.
“வீட்டுல ஒண்ணுமே இல்ல. நேத்து எதுக்கு உங்க சாமானை எல்லாம் காலி பண்ணினீங்க?” என்று கேட்டாள்.
“அதான் என் மாமியார் வீடு இருக்கே. சாப்பாடு அங்கே இருந்து வரும். படுக்கப் பாய் தலையணை எல்லாம் வச்சுப் படுத்தால் உடம்பு சுகம் கண்டு போய்டும்.
உடம்பு வலிச்சாத்தான் என் அல்லியோட அருகாமை வேணும். தலை வச்சுப் படுக்க அவள் மடி வேணும்னு தோணும்…” என்றவனை வினோதமாகப் பார்த்தாள்.
“என்ன பார்வை?”
“உங்க வீட்டில் உங்களைப் பார்க்கும் போது நீங்க வித்தியாசமா தெரிஞ்சீங்க. ஆனா இங்கே ஒரு மாதிரி வித்தியாசமா தெரியுறீங்க…” என்றாள்.
“அங்கே உன்கிட்ட பேச வேண்டியது இருந்தது. அதான் அப்படிக் கொஞ்சம் சீரியஸா இருந்தேன். ஆனா நீ நம்ம வீட்டுக்கு வந்த பிறகு இப்ப மாதிரி தான் அப்பயும் இருப்பேன்.
ஏன்னா உன்கிட்ட மட்டும் தான் நான் இவ்வளவு உரிமையா, கலாட்டாவா, காதலா பேச முடியும். எத்தனை பெரிய மனுசனா இருந்தாலும் தன்னை நேசிக்கிறவள்கிட்ட மட்டும்தான் ஒரு ஆணால் இயல்பாக இருக்க முடியும். அதனால் இனி நீ இருக்கும் இடத்தில் இப்படித்தான் இருப்பேன்…”
“அதோட ‘காதல்னு வந்துட்டால் கண்ணியமானவன் கூடக் கள்ளப்பயதான்!’” என்றவன் கண்களைச் சிமிட்டி சிரித்தான்.
அவனின் பேச்சிலும், அவனின் சிரிப்பிலும் அவளின் மனம் உருக ஆரம்பித்தது.
ஆனால் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் “நான் கல்யாணத்துக்குச் சம்மதிக்கவே இல்லைனா என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டாள்.
“சம்மதிக்கலைனா உன்னைக் கடத்திட்டுப் போய்க் கல்யாணம் பண்ண நான் வில்லன் இல்லமா. ஹீரோ…!” என்றவன் சட்டையின் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
அவனை ரசனையுடன் பார்க்க மனம் தூண்டினாலும் தன்னை அடக்கி கொண்டு அவள் நிற்க,
“நீ சம்மதம் சொல்லும் வரை நான் இந்தக் குடிசையில் தான் காத்திருப்பேன்…” என்றான்.
அதன் பிறகு வந்த நாட்களும் வெற்றி அங்கே தான் இருந்தான். காலையும், இரவும் உணவு கொடுப்பது அவள் வேலையாகிற்று. வேலைக்குக் குடிசையில் இருந்தே சென்றதால் மதியம் அலுவலகத்திலேயே உண்டு கொண்டான்.
அவன் உருகிப் பேசும் போது உருகும் அவள் மனம், பின் விறைத்து அவனைத் தள்ளி நிறுத்த முயன்றது.
அவளின் அன்னையும் ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருக்க, “என்னமா இப்படி நீயும் பேசாம இருக்க?” என்று கேட்டாள்.
“நீ அந்தத் தம்பியை வேணாம்னு சொல்லிட்டு வந்த மறுநாளே அந்தத் தம்பி என்னைத் தனியா சந்தித்துப் பேசிச்சு அல்லி.
விவரம் எல்லாம் சொல்லிட்டு அல்லியை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. எனக்குக் கட்டி வைங்கன்னு கேட்டுச்சு. எனக்குப் பொண்ணு கேட்க எங்க வீட்டுப்பக்கம் பெரியவங்க யாரும் இல்ல. அதனால நானே கேட்டு வந்திருக்கேன்.
அல்லியை எனக்குக் கட்டிக் கொடுங்க. நான் அவளை நல்லா பார்த்துப்பேன்னு அந்தத் தம்பி கேட்டதும் எனக்கும் ஆரம்பத்தில் உன்னைப் போலத் தயக்கம்தான்.
அவங்க வசதி எங்க? நம்ம வசதி எங்கன்னு தோணுச்சு. ஆனா கட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு பிடிவாதமா இருக்கு. உனக்கும் அந்தத் தம்பியைத்தான் ரொம்பப் பிடிக்கும். அதனால தம்பி விருப்பத்துக்குச் சரின்னு சொல்லிட்டேன்…” என்றார்.
“இதெல்லாம் சரி வருமாமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“இப்ப எனக்கு ஒன்னே ஒன்னு சொல்லு. அதுலயே சரி வருமா வராதான்னு உனக்குத் தெரிஞ்சிடும்…” என்றவர் “இப்போ அவரை வேணாம்னு சொல்லிட்டு நீ வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்குவியா?” என்று கேட்க,
“அம்மா…” என்று அதட்டினாள்.
“நான் என் வெற்றிக்கு மட்டும்தான் சொந்தம்…” என்றாள்.
“எனக்குத் தெரியும்டி உன் மனசு. அந்தத் தம்பியைக் கல்யாணம் பண்ணலனா நீ காலம் முழுசும் தனிமரமாத்தான் நிப்ப.
நம்மளா போய் அந்தத் தம்பிகிட்ட கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்கலை. நீ வேணும்னு அந்தத் தம்பி தான் வந்திருக்கு. அதனால மனசை போட்டு குழப்பிக்காம ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பாரு…” என்றார்.
அதன்பிறகு அல்லி நிறையவே யோசித்தாள். ஒரு மூலையில் தயக்கம் இருந்தாலும் வெற்றி இல்லாமல் அவளால் வாழமுடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும் பத்து நாட்கள் கடந்த நிலையில் “நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்று வெற்றியிடம் சம்மதம் சொல்லியிருந்தாள் அல்லிராணி.