மனம் கொய்த மாயவனே – 3
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 3
அன்று காலை கதவைத் திறந்து வெளியே வந்த வெற்றியின் கண்கள் அவனின் அனுமதியின்றியே எதிர் வீட்டை நோக்கிப் பாய்ந்தன.
அல்லியின் வீட்டுக் கதவு திறந்திருந்தாலும் அவள் இருக்கும் அரவமே தெரியாமல் போக, தோளை அலட்சியமாகக் குலுக்கி விட்டுக் குளிக்கச் சென்றான்.
அவனை இரவில் இன்னொரு பெண்ணுடன் அல்லி பார்த்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.
கடந்த இரண்டு நாட்களும் காலையில் வெளியே வேலை செய்பவள் போல அமர்ந்து அவனிடம் பேச முயன்றாள்.
ஆனால் அவளைப் பேசவே விடாமல் நழுவி கொண்டிருந்தான் வெற்றி.
அது சப்தமாகப் பேசும் விஷயம் இல்லை என்பதால் அதற்கு மேல் அவனை அழைத்துப் பேச அவளாலும் முடியாமல் போனது.
இரவிலும் அதே நேரத்தில் மறைவிற்குச் செல்வது போல் வெளியே வந்து, அவனின் வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தாள்.
ஆனால் அங்கே அதன் பிறகு அந்தப் பெண் வந்த அறிகுறியே தெரியாமல் போக, ‘நல்ல வேளை! தினமும் அவன் பொண்ணுங்க கூட இருக்கலை’ என்று அவளின் மனதின் ஓரத்தில் சிறு நிம்மதியும் வந்து போனது.
ஆனாலும் அன்று பார்த்தது அவளை உறங்க விடாமல் துரத்திக்கொண்டு தான் இருந்தது.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அகதிகள் போல் சென்னைக்கு வந்தவர்கள் தான் அல்லிராணியும், அவளின் அன்னை சரோஜாவும்.
அவர்களின் சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம். கடன் வாங்கிக் குடித்தே அழிந்து போனவர் தான் அல்லியின் தந்தை.
அவர் இறந்ததும் கடன்காரர்கள் சரோஜாவை நெருக்க, கணவனையும் இழந்து, குடிசையில் தங்கி கூலி வேலை பார்த்து வயிற்றுப் பிழைப்பை போக்கி கொண்டிருந்தவருக்குக் கையில் காசு இல்லாத நிலை மிரட்ட, உறவுகள் என்று சொல்லிக் கொள்ளும் படி இல்லாத நிலையில் எட்டு வயது பெண்ணாக இருந்த மகளை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாகச் சென்னை வந்து சேர்ந்தார்.
இங்கே எப்படியோ சித்தாள் வேலையைப் பிடித்துக் கொண்டவர், அப்படியே இந்தக் குடிசை பகுதியில் அடைக்கலம் ஆகிவிட்டார்.
இன்னும் சித்தாள் வேலை பார்ப்பவர், அரைகுறையாக மட்டும் படித்திருந்த மகளையும் படிப்பு மேலும் வராத காரணத்தால் தன்னுடன் வேலைக்கு அழைத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
அல்லிராணி பத்தாவது வரை தான் படித்திருந்தாள்.
அதிலும் பத்தாவது தேர்வில் தோல்வி அடைந்து விட, மீண்டும் தேர்வு எழுத விருப்பம் இல்லாமல் படிப்பிற்கு முழுக்குப் போட்டாள்.
சரியாக வராத படிப்பை பார்த்துப் பயந்தவள் அதற்கு மேல் படிக்க ஒரேயடியாக மறுத்து அடம் பிடிக்க, வேறு வழியில்லாமல் தன்னுடன் வேலைக்கு அழைத்துச் சென்றார் சரோஜா.
‘இரண்டு பேரும் சேர்ந்து வேலை பார்த்தால் மகளின் திருமணத்திற்குச் சிறிது பணம் சேர்க்கலாமே’ என்ற அவரின் எண்ணமும், மகளின் படிப்பிற்கு முழுக்குப் போட காரணமாக அமைந்து விட்டது
‘நாலு காசு சேர்த்து மகளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து விட வேண்டும்’ என்பது மட்டுமே இப்போது அவரின் கனவாக இருந்தது.
அன்னை அவளை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கக் காத்திருக்க, மகளோ ஒருவனைப் பிடித்துக் கொள்ளக் காத்திருந்தாள்.
ஆம்! வெற்றியைத் தனியாகப் பிடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவன் தான் அவளுக்குச் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தானே!
வெற்றி குளித்து விட்டு வந்த போது அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள் அல்லிராணி.
அவளின் அம்மா அவளிடம் ஏதோ பேசிக் கொண்டே நடக்க, அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டே நடந்தாலும் பின்னால் திரும்பி அவனைப் பார்க்க மறக்கவில்லை அவள்.
அவளின் பார்வையைக் கண்டவன், முன்பு போல் ‘பாதையைப் பார்த்துப் போடி’ என்று ஜாடை காட்டாமல் ‘நீ பார்த்தால் எனக்கென்ன?’ என்பது போல் அவளைக் கண்டு கொள்ளாமல் தலையைத் துவட்டிக் கொண்டே குடிசைக்குள் சென்று விட்டான்.
அவன் தன்னை அலட்சியப்படுத்தி விட்டுச் சென்றதைக் கண்டு அல்லியின் முகம் சுருங்கிப் போனது.
‘ரொம்பத் தான் பண்றான். ஆனா சரிதான் போடான்னு என்னால உன்னை விட முடியலையே…’ என்று நினைத்துக் கொண்டவள் பாதையைப் பார்த்து நடந்தாள்.
அதே நேரம் அவர்களுடன் வேலைக்குச் செல்லும் பெண்களும் உடன் சேர்ந்து கொள்ள, அப்போதைக்கு அவனின் நினைவை மனதின் ஓரம் ஒதுக்கி வைத்தாள்.
அந்த ஏரியா முழுவதுமே குடிசைகளும், தகடுகள் வைத்த வீடுகளும் தான் இருந்தன.
வெற்றி அந்தக் குடிசைப் பகுதியில் வசித்தாலும், அங்கிருப்பவர்களிடம் அநாவசிய பேச்சுக்கள் வைத்துக் கொள்வதில்லை.
தன்னிடம் வழிய வந்து பேசுபவர்களை அலட்சியம் செய்வதும் இல்லை.
அல்லியை முதலில் கவர்ந்தது வெற்றியின் தோற்றம் தான்.
எதிர் குடிசையில் ஒரு இளைஞன்!
அதிலும் பெண்கள் ஒரு முறை திரும்பிப் பார்க்கத் துடிக்கும் தோற்றத்துடன் இருக்க, முதலில் சாதாரணமாகத் தான் பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால் போகப் போக அவளின் பார்வையில் மாற்றம் வந்தது. தான் அவனைப் பார்ப்பது போல் அவனும் தன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
ஆனால் அவன் ஒருநாளும் அப்படிப் பார்த்தது இல்லை. அவளாக ஏதாவது வம்பிழுத்தால், நக்கலாகப் பதில் தருவான்.
அதுவும் சில நேரங்களில் இருக்காது.
‘நீ என்னிடமா பேசினாய்?’ என்பது போல் ஒரு அந்நியப் பார்வையை வீசி விட்டுச் செல்வான்.
அப்படி ஒதுங்கிப் போகின்றவன் வீட்டிற்கு ‘நள்ளிரவில் ஒரு பெண் ரகசியமாக வந்து செல்கிறாள்’ என்பதை அல்லியால் ஜீரணிக்க முடியாமல் போனதன் விளைவாக, அவனைத் தனியாகச் சந்திக்க முடிவு செய்தாள்.
அன்று மதியத்துடன் கட்டிட வேலை முடிந்திருந்தது. செங்கல், சிமிண்ட் என்று ஏதாவது ஒரு பற்றாக்குறையால் என்றாவது ஒரு நாள் இது போல் வேலை சீக்கிரம் முடிவதுண்டு.
அது போல் அன்று வேலை முடிய, வெற்றியிடம் எப்படியாவது பேசிவிடும் முடிவுடன், அவனைப் பார்க்கவென்றே அன்னையைச் சமாளித்து விட்டுப் பஜாருக்கு வந்து சேர்ந்தாள்.
அவன் எந்த இடத்தில் நின்று வியாபாரம் செய்வான் என்று அறிந்திருந்தவள், அந்த இடத்திற்குச் சரியாக வந்து நின்று, வெற்றியைத் தேடினாள்.
ஆம்! வெற்றியைத் தேடத்தான் வேண்டியது இருந்தது.
ஏனெனில் வழக்கமாக வியாபாரம் செய்யும் இடத்தில் அவன் இருக்கவில்லை.
அவனின் நண்பர்களான முருகனும், காளியும் மட்டும் அங்கே இருந்தனர்.
“இந்த ஆளு எங்கே போனாரு?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு பார்வையை ஓட்டினாள்.
‘ம்கூம்…’ வெற்றி அவளின் கண்களில் சிக்கவே இல்லை.
“யோவ்! எங்கய்யா போய்த் தொலைஞ்ச? உன்னைப் பார்க்கணும்னு என் அம்மாகிட்ட திட்டு வாங்கி, ரவிக்கை துணி வாங்கிட்டு வர்றேன்னு ஏதோ சொல்லிச் சமாளிச்சுட்டு வந்தா ஆளே காணாம போய்ட்டியே…” என்று புலம்பிக் கொண்டே தேடியவளுக்குப் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
சிறிது நேரம் அங்கேயும் இங்கேயுமாகச் சுற்றி வந்தவள், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், முருகனை நோக்கி வந்தாள்.
முருகன் ஏற்கனவே அவளைக் கவனித்திருந்தான். அவளின் தேடலையும், வெற்றி அங்கே இல்லாததையும் கணக்குப் போட்டவனுக்கு உதட்டோரம் நமட்டுச் சிரிப்பு வந்தது.
ஆனால் அதனைக் காட்டிக் கொள்ளாமல் துணிகளைக் கையில் வைத்துக் கொண்டு கூவி கொண்டிருந்தான்.
இப்போது அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு வியப்புடன் புருவத்தை உயர்த்தினான்.
முருகனின் அருகில் வந்து விட்டாலும் சட்டென்று எதுவும் கேட்க முடியாமல் தடுமாறி நின்றாள் அல்லி.
அவளுக்கு அவகாசம் தருவது போல் அந்த நேரத்தில் ஒருவர் பெர்முடாஸ் வாங்குவதற்குத் துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அங்கேயே ஓரமாகத் தேங்கி நின்றாள்.
சிறிது நேரத்தில் அவர் ஒரு பெர்முடாஸை வாங்கிச் சென்று விட, அந்த நேரத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் முருகன் அருகில் சென்று “க்கும்… க்கும்…” என்று செரும்பினாள்.
“என்னங்க… என்ன வேணும்? டாப்ஸ், லெக்கின்ஸ், நைட்டி…” என்று அவளை அறியாதவன் போலக் கேட்டான் முருகன்.
“வெற்றி வேணும்…” அவனின் அறியா பாவனையில் முறைத்துக் கொண்டே சொன்னாள்.
‘ஆஹா! மேடம் ஒரு மார்க்கமா தான் இருக்காங்க போலயே. வெற்றி வேணுமாம்ல வெற்றி…’ என்று உள்ளுக்குள் கிண்டலாக நினைத்துக் கொண்டவன்,
“வெற்றியா? வெற்றி எல்லாம் இங்கே விற்கிறது இல்லைங்க…” என்று அப்பாவியாகச் சொல்லி வைத்தான்.
“என்ன நக்கலா? நான் யாரைக் கேட்கிறேன்னு நிஜமாவே தெரியாது?” கடுப்புடன் கேட்டாள்.
“என்னங்க இது வம்பா இருக்கு? நானே துணி விக்கிறவன். என்கிட்ட துணி கேட்டா தான் கொடுக்க முடியும்? புதுசா வெற்றி வேணும்னு கேட்டா நான் எங்கே போறது? வெற்றினா எப்படிங்க இருக்கும்? சொல்லுங்க, அடுத்தத் தடவை வாங்கி வைக்கிறேன்…” என்று இன்னும் அறியாதவன் போல் பேசியவனைக் கடுப்புடன் பார்த்தாள்.
“என்னங்க முறைக்கிறீங்க? நிஜமாவே நான் வெற்றி விற்கிறது இல்லைங்க…” என்றான் அழும் பாவனையில்.
“முருகண்ணே, போதும் உன் நடிப்பு, நிறுத்து! நான் உன் தோஸ்த்தை டாவடிக்கிறதைப் பார்த்துக் காளியண்ணனும், நீயும் உன் கூட்டாளியை ஓட்டுறவங்க தானே நீங்க. இப்போ என்னமோ ஒன்னும் தெரியாத பச்சை புள்ள போலப் பம்முற? ஒழுங்கா சொல்லு! அந்த ஆளு வெற்றி எங்க?” என்று கடுகடுவென்று பொறிந்த படி கேட்டாள்.
‘ஆஹா! பிள்ள விவரம் தான். சைட் வாக்கில்(ம்கூம், சைட்டு எல்லாம் இல்லை. நேராவே) என்னையும், காளியையும் அண்ணன் ஆக்கிப்புடுச்சே…’ என்று மனதிற்குள் நினைத்தவன்,
“உன்னை வச்சு வெற்றியை ஓட்டுவோம்னு உனக்கு எப்படிமா தெரியும்?” என்று வியப்பாகக் கேட்டான்.
“அப்போ ஓட்டுவீங்களா?” என்று அவளும் வியந்து அவனையே திருப்பிக் கேட்டாள்.
“என்னமா, என்னையவே திருப்பிக் கேட்குற?” என்று அவளைச் சந்தேகமாகப் பார்த்துக் கேட்க,
“ஹிஹி… சும்மா போட்டு வாங்கினேன். என்னைப் பத்தி உங்களுக்குள்ள பேசுவீங்களானு தெரிஞ்சுக்க… என்னைப் பத்தி உங்களுக்குள்ள பேசிப்பீங்கனு உறுதி ஆகிடுச்சு..” என்றாள் குறும்பாகக் கண்சிமிட்டி.
‘அம்மாடியோவ்! கேடி கில்லாடி தான் இந்தப் பொண்ணு! நான் கூட நாங்க பேசுறதைக் கேட்டுயிருக்குமோனுல ஒரு நிமிஷம் ஜெர்க் ஆனேன். ஆனா தூண்டில் போட்டு என் வாயில் இருந்தே புடுங்கிடுச்சே’ என்று திகைப்பாக வாயைப் பிளந்தான்.
“வாய்க்குள்ள கொசு போய்ட போகுதுண்ணே… வாயை மூடு…” என்று அல்லி சொல்லவும் திறந்திருந்த வாயைக் கப்பென்று மூடினான்.
“இன்னும் வெற்றி எங்கன்னு நீ சொல்லலைண்ணே…” என்று எடுத்துக் கொடுத்தாள்.
“எங்க போனான்னு எனக்கும் தெரியாதுமா…” என்றவனை நம்பாமல் பார்த்தாள் அல்லி.
“உண்மை தான்மா, தெரியாது. ஏதோ வேலை இருக்கு, இதோ வந்துடுறேன்னு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போனவன் இன்னும் வரலை. அவன் வந்து எங்க போனான்னு அவனா சொன்னா தான் எனக்கே தெரியும்…” என்று கைகளை விரித்தான் முருகன்.
“என்ன அண்ணே இப்படிச் சொல்ற? தோஸ்த் நீ… உங்கிட்டயே சொல்லாம அப்படி எங்க போயிருக்கும்?” யோசனையுடன் கேட்டாள்.
“தோஸ்த் எல்லாம் சும்மா கலாட்டாவா பேசிக்கிறதில் மட்டும் தான்மா. அதுக்கும் மேல காளியோ, நானோ அவன்கிட்ட எதுவும் பேச முடியாது…” என்றவனை இப்போது அல்லி திகைத்துப் போய்ப் பார்த்தாள்.
வெற்றி, முருகன், காளி மூவரும் ஒரே ஊரான ராஜபாளையத்தில் இருந்து இங்கே பிழைப்புத் தேடி வந்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றாள்.
அப்படியும் கூட, முருகனும், காளியும் ஒரே குடிசையில் தங்கியிருக்க, வெற்றி மட்டும் தனியாகத் தங்கியதை ‘ஏன் அப்படி?’ என்று நினைத்திருக்கின்றாள்.
ஆனால் இப்போது அவர்கள் இருவரிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டுத் தெரிந்தான் வெற்றி.
“எதுக்குமா வெற்றியைத் தேடி வந்த?” வெற்றியைப் பற்றிய சிந்தனையில் இருந்தவளின் நினைவுகளைக் கலைத்தான் முருகன்.
“ஹான்… சும்மா…மா… தா…தான் அண்ணே…” என்று இழுத்தவளை, கேள்வியுடன் பார்த்தான்.
ஆனாலும், “சும்மா தான்னா, சரிதான்மா…” என்று முடித்துக் கொண்டான்.
“சரிண்ணே, நான் வர்றேன்…” என்று திரும்பி நடக்க ஆரம்பித்தவள், ஏதோ தோன்றியது போல் திரும்பியும் வந்தாள்.
“என்னம்மா?” முருகன் கேட்க,
“அந்த ஆளு, அதான் வெற்றி… எப்படி அண்ணே?” தயங்கித் தயங்கிக் கேட்பவள் போல் கேட்டாள்.
“எப்படினா? என்ன கேட்க வர்றமா?” என்று புரிந்தும், புரியாதவன் போல் கேட்டான்.
“ம்ம்… அதாண்ணே… பழக்க வழக்கம் எல்லாம்?” என்று கேட்டவளைக் கூர்ந்து பார்த்தான் முருகன்.
அவனின் பார்வையைச் சளைக்காமல் எதிர் கொண்டாள் அல்லி.
“சொல்லுண்ணே…”
“என்னமா சொல்ல?”
“அந்த ஆளைப் பத்தி தான்…”
“வெற்றியைப் பத்தி சொல்ல என்கிட்ட எதுவும் இல்லமா…”
“என்னண்ணே இப்படிச் சொல்ற?”
“உண்மையைத்தான் மா சொல்றேன். வெற்றியைப் பத்தி சொல்ல எங்கிட்ட எதுவும் இல்லை. ஆனா உன்கிட்ட சொல்ல ஒன்னு இருக்கு…” என்றான்.
“எங்கிட்டயா? என்னண்ணே சொல்லு…”
“வெற்றியை விட்டு நீ விலகி இருப்பது தான் உனக்கு நல்லதுமா…” என்று முருகன் சொல்ல, அவனைத் திகைப்புடன் பார்த்தாள் அல்லிராணி.