மனம் கொய்த மாயவனே – 29

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் ‌- 29

நிஜமாகவே வெற்றி அப்படிப்பட்டவன் தானா? அவனின் தொழில் அதுதானா? என்னிடம் ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏதோ பார்க்கப் போவதாகத் தானே சொன்னான். ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

கேள்விகள், கேள்விகள்… குழப்பத்தை மட்டுமே தந்து கொண்டிருந்த கேள்விகள் அல்லியின் மனதைக் குடைய தவித்துப் போனாள்.

அவன் செய்யும் தொழிலை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அரை வயிற்றுச் சாப்பாடு என்றாலும் நேர்மையாக நல்ல வழியில் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிக்கவள் அவள்.

அப்படியிருக்க அவள் உயிராக நேசிப்பவன் செய்யும் தொழில்?

இன்னும் அந்த மூவரும் பேசிக் கொண்டது காதில் கேட்பது போல் இருந்தது.

“சரக்கை வெற்றி கையில் ஒப்படைக்கும் வரைக்கும் நிம்மதியா இருக்காது. சீக்கிரம் வாங்க. லேட்டானால் வெற்றி கத்தப் போறான்…” என்று துரை சொல்ல,

“இதை வெற்றி கையில் கொடுத்ததும் நம்ம பங்கு சரியா வந்திடும்ல துரை?” என்று கேட்டான் காளி.

“இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் வெற்றி கன் போலக் கரெக்டா இருப்பான்…” என்றான் துரை.

“வெற்றியைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன? இந்தத் தொழிலில் அவன் எப்படி நடந்துக்குவான்னு தெரிஞ்சே என்ன கேள்விக் கேட்குற காளி?” என்று கடிந்து கொண்டான் முருகன்.

“துட்டு மேட்டராச்சே முருகா. அதான் சரியா வந்திடுமானு ஒரு ஆர்வக்கோளாறுல கேட்டுட்டேன்…” என்றான் காளி.

“துட்டு மேட்டரோ, மத்த மேட்டரோ வெற்றி ஒரு வேலையை எடுத்துட்டான்னா அதைச் சரியா முடிக்கணும்னு நினைப்பான். அவனுக்கு நாம உண்மையா இருக்குற வரை நாம கேட்காமயே நமக்குத் தேவையானதை முடிச்சுக் கொடுப்பான். அதே நாம அவனுக்கு ஏதாவது துரோகம் பண்றோம்னு தெரிஞ்சது குழி தோண்டிப் புதைச்சுட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்…” என்றான் முருகன்.

தொழில் தான் அப்படி என்றால், உயிரைக் கொல்லும் அளவிற்குச் செல்பவன் வேறா? என்று அல்லியின் மனம் நடுங்கிக் கொண்டிருந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். எப்படி அன்றைய நாளை கடத்தினாள் என்று அவளுக்கே தெரியாது.

வெற்றியைச் சுற்றியே அவளின் நினைவுகள் வலம் வந்து கொண்டிருந்தன.

முன்பும் வெற்றியையே நினைத்துச் சுற்றிக் கொண்டிருந்தவள் தான். ஆனால் முன்பு காதலுடன் சுற்றினாள் என்றால் இப்பொழுதோ பயத்துடன் சுற்றினாள்.

அன்றைய நாள் அதிர்ச்சியிலும், பயத்திலும் கழிந்தாலும் மறுநாள் காலையில் ஒரு முடிவுக்கு வந்தவள் போல் படுக்கையை விட்டு எழுந்தாள்.

இரவெல்லாம் தூங்காத கண்கள் சிவந்து தீயாக எரிந்தன.

தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவி கண் எரிச்சலை குறைக்க முயன்றாள்.

தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் அன்னை என்ன செய்கிறார் என்று பார்த்தாள்.

சரோஜா காலை உணவு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, கலைந்த தலையை இழுத்துக் கூடிக் கொண்டையாக முடிந்தவள் நேராகச் சென்று வெற்றியின் வீட்டுக் கதவைத் தட்டினாள்.

‘காலங்காத்தாலே யாரது?’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்த குரல் உள்ளிருந்து வந்த சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது.

கதவைத் திறந்தவன் வாசலில் நின்றிருந்தவளை ஏற இறங்க பார்த்தான்.

“என்ன அல்லிராணி காத்து என் வீட்டுப் பக்கம் வீசுது?” என்று புருவத்தை உயர்த்தி நக்கலாகக் கேட்டான்.

அவனின் பேச்சை காதில் வாங்காதவள் போல் அவன் லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் தள்ளிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏய், வெளியே போடி. நீ நினைச்சா வருவதற்கும், நினைச்சா வராம தலையைச் சிலுப்பிக்கிட்டுப் போறதுக்கும் என் வீடு என்ன சத்திரம்னு நினைச்சீயா?” என்று கத்தினான்.

அவனின் கோபத்தைச் சற்றும் சட்டை செய்யாதவள், “நீ என்ன தொழில் செய்ற வெற்றி?” என்று நிதானமாகக் கேட்டாள்.

அவளின் கேள்வியில் திட்ட வாயைத் திறந்தவனின் வாய்த் தன்னால் மூடிக் கொள்ள, அவளைச் சந்தேகமாக அளவிடுவது போல் பார்த்தான்.

“இவளை என்ன சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்காதே வெற்றி. இனி ஏமாத்த நினைச்சாலும் ஏமாற நான் ஒன்னும் கேனை கிறுக்கி இல்லை. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத் தான் வந்துருக்கேன்…”

“ஓஹோ, அல்லிராணிக்கு அனைத்தும் தெரிந்து விட்டதோ?” என்று இன்னும் நக்கலாகக் கேட்டவன், “என்னைப் பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்கன்னு மேடத்தால் சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“என்கிட்ட மழுப்பி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் பண்ண போறேன்னு என்னை நம்ப வச்சா இந்த முட்டாள் அப்படியே நம்பிக்கிட்டுப் போய்டுவாள்னு தானே என்கிட்ட ஒவ்வொரு பொய்யா சொல்லியிருக்க வெற்றி?

ஆனா நான் ஒன்னும் முட்டாள் இல்லை. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிடுச்சு. நீ போதை மருந்து விற்பவன். அதை வித்து அதன் மூலமா வரும் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவன்…” என்றாள்.

“அட! அட! சரியா சொல்லிட்டீங்களே அல்லி மேடம். ஆனா பாருங்க, ஒரே ஒரு திருத்தம். பாவத்தைச் சம்பாதிக்கலை. பணத்தைச் சம்பாதிப்பவன்…” என்று எகத்தாளமாகச் சொன்னான்.

“அந்தப் பணம் பாவப்பணம் வெற்றி. அடுத்தவங்களை அழிச்சு அது மூலமா நாம வாழ நினைக்கிறதை விடப் பாவம் எதுவுமில்லை. வேணாம் வெற்றி உனக்கு இந்தத் தொழில் வேணாம், விட்டுரு. நீ ரோட்டுல துணி வித்தா கூடப் போதும். அதை வச்சு நாம நல்ல வாழ்க்கை வாழ முடியும்…”

“உங்க அறிவுரைக்கு ரொம்ப நன்றிங்க அல்லி. ஆனா பாருங்க உங்க அறிவுரை எல்லாம் எனக்குத் தேவைப்படாது. நான் என்ன செய்யணும், எதைச் செய்யணும் என்று நான் தான் முடிவு பண்ணுவேன். மத்தவங்க என் விஷயத்தில் தலையிட முடியாது…”

“நான் உனக்கு மத்தவளா வெற்றி?” வலியுடன் கேட்டாள்.

“என் விஷயத்தில் தலையிட்டால்…” என்றான்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நீ பாவம் பண்றன்னு தெரிஞ்சும் என்னால அமைதியா போக முடியாது வெற்றி. கேள்வி கேட்கத்தான் செய்வேன். திரும்பவும் சொல்றேன். இந்த வேலை செய்யாதே. நாம கூலி வேலை செய்தே சந்தோஷமா வாழுவோம். சொன்னா கேளு வெற்றி…” என்றாள் இறைஞ்சுதலாக.

“ம்ப்ச்… இடத்தைக் காலி பண்ணு. எனக்கு வேலை கிடக்கு…” என்றவன் அவளைக் கண்டுகொள்ளாமல் குளிக்கச் செல்லப் போனவன், “அப்புறம் இன்னொரு விஷயம். இனி ஒரு முறை எனக்குத் தெரியாம வீட்டுக்குள் வந்து எதையாவது ஆராய்ச்சி பண்றேன்னு உருட்டின…” என்றவன், கண்களை உருட்டி விரல் நீட்டி எச்சரித்து விட்டுப் போனான்.

தன் பேச்சைக் கேட்காமல் அவன் அலட்சியமாகச் சென்றது மனதை அறுக்க அல்லியின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.

“அல்லி…” என்று அன்னையின் குரல் கேட்க, கண்களைத் துடைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.

அவன் குளித்துக் கிளம்பி வெளியே செல்ல வந்த போது தன் வீட்டு வாசலில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அல்லிராணி.

தன்னைப் பார்ப்பது தெரிந்தாலும் அவளை அலட்சியப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான் வெற்றி.

“வெற்றி…” என்று தயக்கத்துடன் அழைத்தான் அவன்.

“ம்ம்ம்…” அவனின் தயக்கமே ஏதோ அவனுக்குப் பிடிக்காத செய்தியை எதிரில் இருப்பவன் சொல்லப் போகின்றான் என்பதை உணர்ந்த வெற்றியின் கண்கள் செந்தணலாக ஜொலித்தன.

“நம்ம ஆளு ஒ…ஒருத்தன்…” வெற்றியின் கண்களில் இருந்த கனல் எதிரில் இருந்தவனை மேலும் பேச முடியாமல் தயங்க வைத்தது.

“போலீசில் மாட்டிக்கிட்டானா?” என்று கேட்டு அவனின் பேச்சை முடித்து வைத்தான் வெற்றி.

“ஆ…ஆமா…”

“எந்த ஸ்டேஷன்?” என்று வெற்றி கேட்க, அவன் எந்த ஏரியா ஸ்டேஷன் என்று சொன்னான்.

“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் புதுசா?”

“ஆமா வெற்றி…” என்று எதிரில் இருந்தவன் பதில் தர,

“ஹ்ம்ம்…” என்று யோசனையுடன் தாடையைத் தடவிய வெற்றி, “பிடிபட்டு எவ்வளவு நேரமாச்சு?” என்று கேட்டான்.

“ஒரு மணிநேரம் இருக்கும் வெற்றி…”

“நம்ம ஆள் கையில் சரக்கு இருந்துச்சா?”

“ஆமா வெற்றி…” என்றவனின் சுருதி மீண்டும் குறைந்தது.

“இதுவரை அவன் போலீஸ்கிட்ட வாயைத் திறந்திருக்கச் சான்ஸ் இல்லை. ஆனால் அவன் இனியும் வாய் திறக்க கூடாது. போலீஸ் கையில் இருக்கவும் கூடாது. அதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணு…” என்றான் உத்தரவாக.

“போலீஸ் கஸ்டடியிலிருந்து அவனைப் பத்திரமா மீட்டுக் கொண்டு வருவது அவ்வளவு ஈஸி இல்லை வெற்றி. எப்ப எப்பன்னு காத்திருந்த போலீஸுக்கு அவன் தான் இப்போ துருப்புச் சீட்டு. அதனால் அவனுக்குப் பாதுகாப்பு பலமா இருக்கும்…” என்றான் அவன்.

“அது எனக்குத் தெரியாதா? நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. ஒன்னு அவன் போலீஸ் கஸ்டடியில் இருக்கக் கூடாது. இல்லனா இந்த உலகத்துலயே இருக்கக் கூடாது…” என்று கடினமான குரலில் சொன்னவன், ‘போய் வேலையை ஆரம்பி’ என்பது போல் கையை அசைத்தான்.

“போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கு வெற்றி. சரக்கை விநியோகம் பண்றவனைக் குறி வச்சே தூக்குறானுங்க…” என்றான்.

“போலீஸ்காரன் அவன் வேலையைப் பார்க்கத்தான் செய்வான். அவனுங்களுக்கு நம்மை வேட்டையாடி பிடிக்கிறது வேலைனா, நாம அவங்க கையில் இறையாகாம தப்பிக்கிறது மட்டும் இல்லாம, அவனுங்க கண்ணில் எப்படி மண்ணைத் தூவணுமோ அப்படித் தூவணும். போலீஸ் எல்லாம் நமக்கு ஒரு மேட்டரே இல்லை. தூசி மாதிரி தட்டி விட்டுட்டுப் போய்ட்டே இருக்கணும். சரி அதெல்லாம் விடு. இன்னைக்குச் சரக்கை எடுத்துட்டு வா. டெஸ்ட் பண்ணிப் பார்த்துடுவோம்…” என்றான்.

அவன் கேட்டதும் அவன் முன் ஒரு சிறிய அட்டைப்பெட்டி நீட்டப்பட்டது. அதனைக் கையில் வாங்கியவன், திறந்து உள்ளே இருந்த மருந்து குப்பிப் போல் இருந்த சிறிய பாட்டிலையும், அதனுடன் இருந்த ஊசியையும் கையில் எடுத்தான்.

“அவனைக் கூட்டிட்டு வா…” என்று அருகில் இருந்தவனிடம் சொல்ல, அவன் அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று ஒருவனை அழைத்து வந்தான்.

வந்தவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். தேகமோ உணவைக் கண்டு பல நாட்கள் ஆனவன் போல் இருந்தது.

இருபது வயது இருக்கலாம் என்று அவனைப் பார்த்ததுமே சொல்லும் அளவில் இருந்தான். அறைக்குள் இருந்து வெளியே வரும் போது சோர்வுடன் இருந்தவன், வெளியே வந்து வெற்றியின் கையில் இருந்த ஊசியைப் பார்த்ததும் சுறுசுறுப்பானான்.

அவனின் கண்கள் ஆசையுடன் ஜொலித்தன.

“டேய் கண்ணா, இங்கே வா!” என்று வெற்றி அவனை அழைக்க, நடந்து அல்ல… ஓடி வந்தான் அவன்.

“அண்ணா… அண்ணா… தாண்ணா…” என்று ஆர்வமாகக் கையை நீட்டினான்.

“தர்றேன்… தர்றேன்… என்ன அவசரம்? நான் சொன்ன வேலையைச் செய்து முடிச்சியா?” என்று கேட்டான் வெற்றி.

“முடிச்சுட்டேன் அண்ணா… முடிச்சுட்டேன்… அண்ணா நேரமாகுது. கொடுண்ணா…” என்று வேகமாகத் தலையை ஆட்டிச் சொன்னவன் ஊசி கேட்டுக் கையை நீட்டினான்.

“ம்ப்ச்… அவசரப்படாதே கண்ணா. இது உனக்கே தான். கொஞ்சம் பொறுமையா இரு. வேலையை முடிச்சுட்டுப் பணத்தை எல்லாம் சரியா கொண்டு வந்து கொடுத்தியா?” என்று கேட்டான்.

“ஹான்… கொடுத்துட்டேன் ண்ணா கிரி அண்ணா கிட்ட கொடுத்துட்டேன்…” என்று வெற்றியின் அருகில் இருந்தவனைச் சுட்டிக் காட்டினான்.

“என்ன கிரி, பைய சரியா நடந்துகிட்டானா?” என்று கிரியிடம் கேட்டான் வெற்றி.

“சரி பார்த்துட்டேன் வெற்றி. பைய சரியா கொண்டு வந்து கொடுத்துட்டான்…” என்று கிரி சொன்னதும்,

மீண்டும் அந்தப் பையனின் புறம் திரும்பிய வெற்றி, “பணம் சரியா வந்துருச்சு. ஆனா நாங்க கேட்ட ஆள் எங்கே?” என்று கேட்டான்.

“அ…அது… வந்து அண்…ணா…” என்று தயக்கத்துடன் இழுத்தான்.

“ம்ம்… சொல்லு… ஆள் எங்கே?” என்று உறுமலாகக் கேட்டான்.

“ட்…ட்ரை பண்ணி பார்த்தேன்ணா. யா… யாரும் கிடைக்கலைண்ணா…” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும் வெற்றியின் புஜங்கள் கோபத்துடன் இறுகின.

அந்த நேரம் அவனின் கண்களைக் காண்பவர்கள் மிரண்டு தான் போவார்கள்.

அவ்வளவு அழகான முகத்தில் இவ்வளவு உக்கிரத்தையும் காண முடியுமா என்று நினைப்பது போல் தான் இருந்தான்.

“அப்போ உனக்கு இதுவும் கிடையாது. இடத்தைக் காலிப் பண்ணு…” என்று ஊசியை மறுப்பாக ஆட்டிக் காட்டிக் கடுமையாகச் சொன்னவன், “கிரி, இவனை வெளியே அனுப்பு…” என்று உத்தரவிட்டான்.

“முருகன் வந்ததும் என்னைக் கூப்பிடு கிரி…” என்று சொல்லிவிட்டு, “அண்ணா… அண்ணா… ப்ளீஸ் ண்ணா…” என்று கெஞ்சிய படி பின்னால் ஓடி வந்தவனைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்த அறைக்குள் சென்று மறைந்தான்.

“கிரிண்ணா, நீங்களாவது சொல்லுங்கண்ணா. எனக்கு இப்பவே ஊசி வேணும். இங்க பாருண்ணா கையெல்லாம் நடங்க ஆரம்பிச்சிடுச்சு…” என்று தன் நடுங்கிய கையைக் காட்டிக் கெஞ்சினான்.

“இதோ பார் கண்ணா, இங்கே வெற்றிச் சொன்னது தான் முடிவு. போ, போய் ஆளைக் கூட்டிட்டு வா. இங்க இருந்து எங்க நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதே!” என்று அதட்டினான் கிரி.

“நான் நாளைக்கு எப்படியாவது என் ஃபிரண்டை கூட்டிட்டு வர்றேன் ணா. ஆனா, இப்போ ஊசியைப் போட்டு விடுங்க…” என்றான்.

“நீ சரக்கு வாங்க வந்தப்ப நாங்க என்ன சொன்னோம்? அடுத்த ஆளை நீ கூட்டிட்டு வந்தா தான் உனக்குச் சரக்கு கிடைக்கும்னு நாங்க சொன்னோமா இல்லையா? ஆனா நீ திரும்பி வரும்போது வேற ஆளை கூப்பிட்டுக் கொண்டு வராம வந்தேன்னா எப்படி? நாங்க கேட்டபடி செய்! அதுக்குப் பிறகு நீ கேட்காமலேயே நாங்க எல்லாம் செய்வோம்…” என்றான் கிரி.

“அண்ணா… ண்ணா… ப்ளீஸ் ண்ணா. இப்ப மட்டும் கொடுங்க. நாளைக்குக் கண்டிப்பா என் ஃப்ரெண்டை கூட்டிட்டு வர்றேன்…” என்று விடாமல் கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலுக்குக் கொஞ்சமும் செவி சாய்க்காமல் அப்படியே நின்றிருந்தான் கிரி.

கிரியின் காலில் கூட விழுந்தான் கண்ணன். ஆனாலும் சிறிதும் அசைந்து கொடுக்காமல் நின்றான்.

அழுது, கெஞ்சி, கூத்தாடி, பைத்தியம் பிடித்தவன் போல் கண்ணன் கத்தும் நிலைக்கு வந்திருந்தான்.

அவன் இங்கே கத்த கத்த அங்கே உள்ளே ஒருவன் ரசித்துக் கொண்டிருந்தான் .

வெளியில் இருந்த சிசிடிவி கேமிரா வழியாக அறைக்குள் இருந்த கணினியில் அனைத்துக் காட்சிகளும் தெளிவாக நேரடியாகத் தெரிந்த வண்ணம் இருக்க, அதைக் கம்ப்யூட்டர் முன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து மேஜையில் லேசாகத் தாளமிட்ட படி அவனை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தான் வெற்றி.