மனம் கொய்த மாயவனே – 26
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் - 26
அந்த மருத்துவமனைக்கு வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து தலையைப் பின்னாலிருந்த சுவற்றில் சாய்த்து அமர்ந்திருந்த செழியனின் முகம் இறுக்கத்தைச் சுமந்திருந்தது.
அவனின் அருகில் அமர்ந்திருந்த பவானியின் கண்கள் கட்டுப்பாடின்றிக் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருக்க முந்தானையால் துடைத்துக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் அங்கே ஒரு செவிலி செழியன் முன் வந்து நின்றார்.
“உங்களை டாக்டர் கூப்பிடுறார், வாங்க…” என்று அழைக்க,
செழியனும், பவானியும் வேகமாக இருக்கையை விட்டு எழுந்து மருத்துவரின் அறைக்குச் சென்றனர்.
அறைக்குள் நுழைந்ததும் “கிருதி எப்படி இருக்காள் டாக்டர்?” என்று செழியன் விசாரித்தான்.
“முதலில் உட்காருங்க மிஸ்டர்?” அவன் பெயர் தெரியாமல் அவர் நிறுத்த,
“செழியன்…” என்று சொல்லிய படி இருக்கையில் அமர, பவானியும் அவனின் அருகில் அமர்ந்தார்.
“பேஷண்ட் இப்போ நல்ல உறக்கத்தில் இருக்காங்க. எனக்குப் பேஷண்ட் பத்தி சில டீடைல்ஸ் தெரியணும்…”
“என்ன டீடைல்ஸ் டாக்டர்?”
“கிருதிலயா எப்போ இருந்து ட்ரக்ஸ் எடுத்துக்கிறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் மருத்துவர்.
“இல்லையே டாக்டர்…” என்று செழியன் கையை விரிக்க,
“அட்லீஸ்ட் அவங்க நடவடிக்கையில் ஏதாவது வித்தியாசமா பார்த்துருக்கீங்களா? அப்படிப் பார்த்திருந்தால் எப்ப இருந்துன்னு ஒரு ஐடியா கிடைக்குமே?”
அவர் அப்படிக் கேட்டதும் தயக்கத்துடன் அவரைப் பார்த்தவன் பின் மெல்ல பேச ஆரம்பித்தான்.
“கொஞ்ச நாளா வீட்டில் ஒரு பிரச்சினை டாக்டர்…” என்று ஆரம்பித்து அவள் காதல் சொன்னதையும் அதற்குத் தன் பக்க மனநிலையையும் சொன்னான்.
அவள் சுற்றுலா போன போது தான் அலைபேசியில் பேசியதையும், அதன் பிறகும் அவள் வீட்டில் வந்து பிடிவாதமாக இருந்ததையும் சொன்னவன்,
“டூர் போறதுக்கு முன்னாடி வரை நானும் வீட்டில் இருந்தப்ப அவள் என் மேல கோபமா இருந்தாளே தவிர வேற எதுவும் நான் வித்தியாசமா உணரலை டாக்டர். டூர் போய்ட்டு வந்த பிறகு தான் அவள் வழக்கத்தை விட அதிகமா ரூமுக்குள்ளயே அடைஞ்சு இருந்திருக்காள். அம்மாகிட்டயும் சரியா பேசாம தவிர்த்திருக்காள்.
நானும் இங்கே இல்லாம வெளியூர் போய்ட்டதால் அவளோட நடவடிக்கை என் பார்வைக்கு வராம போயிருச்சு. அம்மா அவள் நடவடிக்கையைச் சொன்னதை வச்சு என் மேல கோபமா இருக்காள்னு நினைச்சேனே தவிர இப்படி ஒரு வேலை செய்வாள்னு நான் நினைச்சே பார்க்கலை…” என்றான் வேதனையுடன்.
சுற்றுலா சென்று வந்த நாளை கேட்டு அறிந்து கொண்ட மருத்துவர், “நீங்க சொன்னதை வச்சு அவங்க சமீபமா தான் ட்ரக்ஸ் எடுக்க ஆரம்பிச்சுருக்காங்கனு உறுதியாகுது. நானும் டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்ததில் ரொம்ப டேஞ்சரஸ் நிலைக்கு அவங்க இன்னும் வரலைனு தெரிஞ்சது. இது ஆரம்ப நிலை தான் என்பதால் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா சீக்கிரமே அவங்களைப் போதை பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரலாம்…” என்றார்.
“அப்போ உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க டாக்டர்…” என்றான் செழியன்.
‘ஆரம்பித்து விடலாம்’ என்ற மருத்துவர் கிருதியைப் பார்க்க அனுமதி கொடுத்தார்.
மருந்துவரிடம் விடைபெற்றுக் கிருதியைப் பார்க்கச் சென்றனர்.
கிருதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்ற போது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
இரவு அவள் அலங்கோலமாகக் கிடந்த நிலையைப் பார்த்து அவளின் அருகில் சென்று எழுப்ப முயன்ற போதே அவள் போதையில் இருப்பது நூறு சதவிகிதம் உறுதியாகிவிட இடிந்து போனான் செழியன்.
அவள் கன்னத்தில் லேசாகத் தட்டிக் ‘கிருதி’ என்று அழைக்க, “நீ என்ன சொல்றது? நான் சொல்றேன். எனக்கு நீ வேணாம்…” என்று உளறியவள் கன்னத்தில் இருந்த அவனின் கையைத் தட்டிவிட்டாள்.
“என்ன காரியம் பண்ணி வச்சுருக்கக் கிருதி. எங்க இருந்து வந்தது இந்தப் பழக்கம்?” என்று பலமாக அவளின் கன்னத்தில் தட்டிக் கேட்டான்.
அதற்கு ஒரு மாதிரியாகச் சிரித்தாளே தவிர, அவளிடமிருந்து எந்த வார்த்தையும் வரவில்லை.
எப்போதும் பாதி உறக்கத்தில் இருந்தால் மனதில் உள்ளதை சொல்லிவிடுபவள், இப்போது போதையில் கூட எதையும் சொல்ல மறுத்தாள்.
“கிருதி…” என்று அதட்டி அழைத்துப் பார்க்க அவள் எதிர்வினை ஆற்றவே இல்லை.
இவனின் உரத்தக் குரல் கேட்டுப் பவானி தான் பதறி அடித்துக் கொண்டு வந்தார்.
வந்தவருக்குக் கிருதியின் நிலை தெரிய வர, அவரின் அழுகையும், அவனின் அதிர்ச்சியுமாகச் சிறிது நேரம் கடந்து சென்றது.
கிருதியை அப்படி ஒரு நிலையில் கண்ட பிறகு அமைதியாக இருக்க முடியாமல் அந்த நள்ளிரவு நேரத்திலேயே அவளை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.
மருத்துவமனை படுக்கையில் அவளைப் பார்த்துச் செழியன் வருத்தத்துடன் அமர்ந்து விட, பவானி வாய்விட்டு அழ ஆரம்பித்தவர் பின் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தவரை வேகமாகத் தடுத்தான் செழியன்.
“அம்மா, என்னம்மா இது? எதுக்கு இப்படி அடிச்சுக்கிறீங்க?” என்று அவரின் கையைப் பற்றிக் கொண்டான்.
“என் கண் முன்னாடியே இவள் இப்படி ஒரு பழக்கத்துக்கு ஆளானது தெரியாமல் அசால்டா இருந்துட்டேனே செழியா. கோபமா இருக்காள். கொஞ்ச நாள் போனா சரியா போயிருவாள்னு தானே அமைதியா இருந்தேன். ஆனா இவள் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணுவாள்னு நான் நினைக்கலையே…” என்று சொல்லி அழுதார்.
“இதுல உங்க தப்பு எதுவும் இல்லைமா. தப்பு பண்ணனும்னு நினைக்கிறவங்க கூடவே இருக்கிறவங்க கண்ணில் மண்ணைத் தூவிட்டு எப்படியாவது பண்ணத்தான் செய்வாங்க…”
“இல்ல செழியா, நான் கொஞ்சம் இன்னும் கவனமா இருந்திருந்தால் முன்னாடியே இவள் போதை மருந்து எடுத்துக்கிட்டதைக் கண்டு பிடிச்சிருக்கலாம். தப்புப் பண்ணிட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி சொன்னாள் செழியா, என் அப்பா, அம்மா இப்போ உயிரோடு இல்லையேனு ரொம்ப வருத்தப்படுவதாக… இப்போ எனக்கும் அப்படித்தான் தோணுது. அவங்க உயிரோட இருந்திருந்தால் மகள் என்ன செய்றாள், ஏது செய்றாள்னு உடனே கண்டுபிடிச்சுருப்பாங்க. ஆனா நான்…” என்றார் அழுகையுடன்.
“அம்மா, அப்படி நடந்திருந்தால்… இப்படி நடந்திருந்தால்னு யோசிக்காம இனி என்ன நடக்கணும்னு யோசிப்போம்மா. கிருதி இந்தளவுக்கு இறங்கி இருக்காள்னா அதுக்கு அவள் மட்டும் காரணமா இருக்காது. அவளை யாரோ தூண்டி விட்டுருக்காங்க. அது யாருன்னு முதலில் கண்டுபிடிக்கணும்…” என்றான்.
“என்ன சொல்ற செழியா? அது யாரா இருக்கும்?”
“யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்மா. முதலில் கிருதிக்கிட்ட விசாரிக்கணும். ஆனா இவள் சொல்லுவாள்னு எனக்கு நம்பிக்கை இல்லை. இவள் வாயைத் திறக்கலைனா அவளோட பிரண்ட்ஸ் கிட்ட போய் விசாரிக்கணும். அவளைப் பிரைன் வாஸ் பண்ணியது யாருன்னு கண்டுபிடிச்சே ஆகணும்.
கிருதி நம்ம கிருதியா மட்டும் இருந்திருந்தால் இதுக்கு முன்னாடி நான் ஏதாவது ஒரு விஷயத்துக்கு அவளுக்கு எடுத்துச் சொன்னதைக் கேட்டுக்கிட்டது மாதிரி காதல்னு அவள் உளறினப்பயும் நான் சொன்னதைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்திருப்பாள். ஆனால் அவள் இப்படி நடந்துகிட்டதைப் பார்த்தால் அவளை யோசிக்க விடாம குழப்பி விட்டது யாரு?” என்று அன்னையிடம் பேசுவது போல் தனக்குள்ளேயும் கேட்டுக் கொண்டான் செழியன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்விழித்தாள் கிருதிலயா.
தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை உணர்ந்தவள் “என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க?” என்று எழுந்து கோபமாகக் கத்தினாள்.
அவளின் கத்தலில் அங்கே வந்த செவிலி, “மேடம், இது ஹாஸ்பிட்டல். பக்கத்தில் நிறையப் பேஷண்ட் இருக்காங்க. கத்தாதீங்க!” என்றார்.
“இருக்கட்டுமே, எனக்கென்ன வந்தது? நான் வீட்டுக்குக் கிளம்புறேன்…” என்று வேகமாகப் படுக்கையை விட்டு இறங்கினாள்.
“ஸாரி சிஸ்டர். நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க…” என்று அவரைக் கிளப்பிய செழியன், செவிலி வெளியே சென்றதும் அந்த அறையின் கதவை மூடி தாழிட்டுவிட்டு வெளியே செல்ல துடித்துக் கொண்டிருந்த கிருதியின் எதிரே வந்தான்.
“நீ இங்கிருந்து போக முடியாது கிருதி. போ, போய்க் கட்டிலில் படு!” என்றான்.
“ஏன்? நான் ஏன் இங்கே இருக்கணும்? எனக்கென்ன வியாதியா, இங்கே இருக்க? முடியாது, என்னால் இங்கே இருக்க முடியாது. நான் வீட்டுக்குப் போறேன். உங்களுக்கு நான் உங்க வீட்டில் இருப்பது பிடிக்கலைனா சொல்லிடுங்க. நான் ஹாஸ்டலில் போய்ச் சேர்ந்துக்கிறேன்…” என்று கத்தினாள்.
“என்னமா சொல்ற நீ?” என்று பவானி பதற,
“அம்மா நீங்க அமைதியா இருங்க. நான் பேசிக்கிறேன்…” என்றவன், கிருதியின் புறம் திரும்பினான்.
“முதலில் கத்துறதை நிறுத்துக் கிருதி. இது நம்ம வீடு இல்லை, ஹாஸ்பிட்டல். அதோட நீ வீட்டுக்கும் இப்போ போக முடியாது, ஹாஸ்டலுக்கும் போக முடியாது. உனக்கு வியாதி எதுவும் இல்லை தான். ஆனா இப்போ நீ ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டிய நிலையில் இருக்க…” என்றான் பொறுமையாக.
“ஏன், அப்படி என்ன நிலை வந்துருச்சு?” இப்போது கத்தவில்லை என்றாலும் சிடுசிடுப்பாகக் கேட்டாள்.
“உனக்கு ட்ரக்ஸ் கொடுத்தது யார் கிருதி?” என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.
அந்தக் கேள்வியில் அவளின் முகம் அப்படியே மாறிப் போக, உதடுகளை இறுக மூடிக் கொண்டாள்.
“சொல்லு கிருதி…”
இப்போதோ முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“சோ, சொல்ல மாட்ட?” என்று கேட்டவன் அழுத்தமாக அவளைப் பார்த்தான்.
“சரி, நீ சொல்லவே வேண்டாம். ஆனா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கோ. போதை மருந்து ஒரு விஷம் மாதிரி கிருதி. அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வரலைனா அது உன்னை மீளவே முடியாம ஆக்கிடும்…” என்றான்.
“என்னைத் தான் வேண்டாம்னு சொல்லிட்டல. அப்புறம் நான் எப்படிப் போனா உனக்கென்ன? ட்ரக்ஸ் எனக்குப் பிடிச்சிருக்கு. அது என் வலியை எல்லாம் மறக்க வைக்குது. என் காதல் தோல்வியை மறக்க அதுதான் உதவி பண்ணுது. அதனால் நான் அப்படித்தான் ட்ரக்ஸ் எடுத்துப்பேன். நீ என்னைக் கண்ட்ரோல் பண்ண நினைக்காதே!” என்று எடுத்தெறிந்து பேசினாள்.
“கிருதி… கிருதி… ஏன் இப்படிப் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற? நீ என் மேல வச்சுருக்கிறது காதலே இல்லைன்னு உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது. நீயா என்னைக் காதலிக்கிறதா கற்பனையும் பண்ணிட்டு, இப்போ அது தோத்துப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டு, வலியை மறக்க ட்ரக்ஸ் யூஸ் பண்றேன்னு சொல்றது முட்டாள்தனமா தெரியலையா?” என்று கேட்டான்.
“வலி எனக்குத் தானே? என் வலி உனக்கு முட்டாள்தனமாத்தான் தெரியும்…” என்று புரிந்து கொள்ளாமல் சிடுசிடுத்தவளை என்ன தான் செய்வது என்பது போல் பார்த்தான் செழியன்.
‘எப்படிப் பேசினாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளே. இவளுக்கு இனி என்ன தான் சொல்லிப் புரிய வைக்க?’ என்று நினைத்தவன் தலையை அழுந்த பிடித்துக் கொண்டான்.
சில நொடிகள் அங்கே அமைதியில் கழிய ஏதோ யோசித்தவன் போல் நிமிர்ந்து அன்னையைப் பார்த்தான்.
“அம்மா, புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறவள்கிட்ட இதுக்கு மேல எடுத்துச் சொல்ல எதுவுமில்லை. இப்போ முதலில் இவளோட ட்ரக்ஸ் பழக்கத்தை நிறுத்த வழி பார்க்கணும். வேற எதைப் பத்தியும் பேசி நாளை வீணாக்க வேண்டாம். கொஞ்ச நாள் போனா அவள் மனசு என்னன்னு அவளுக்கே புரிய வரும். அதுவரைக்கும் நாம பொறுமையா இருப்போம்…” என்றான்.
பவானி ‘சரி’ என்று தலையை அசைக்க, “எனக்கு இப்போ கொஞ்சம் வெளியே வேலை இருக்கும்மா. நான் ஆனந்தை வரச் சொல்லியிருக்கேன். அவனை உங்களுக்குத் துணையா இருக்கச் சொல்லிட்டு அந்த வேலையை முடிச்சுட்டு வர்றேன்…” என்றான்.
“நான் இங்க இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன ஆனந்தை வரச் சொல்றேன். ஆட்டுக்குட்டியை வரச் சொல்றேன்னு சொல்லிட்டு இருக்க?” என்று அவனை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினாள்.
அவளைக் கூர்மையாகப் பார்த்தவன், “நாங்க சொன்னதை நீ கேட்க முடியாதுன்னு சொன்ன மாதிரி, நீ சொல்றதை நாங்க கேட்க முடியாது. நான் என்ன செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வேன். ஆனா அது உனக்கு இப்போ புரியலை. ஒரு நாள் புரிய வரும். ட்ரக்ஸ் பழக்கத்தில் இருந்து மீள இப்போ நீ ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிற. அவ்வளவு தான்!” என்று அழுத்தமாக அவன் சொல்லி முடித்த போது அங்கே ஆனந்த் வந்திருந்தான்.
அவனிடம் விவரம் சொல்லி, கிருதியின் தற்போதைய மனநிலையையும் சொல்லி அவனின் பாதுகாப்பில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான் செழியன்.
செழியன் போய் நின்றது கிருதி படிக்கும் கல்லூரி வாசலில்.
அப்போது கல்லூரி விட்டு மாணவர்கள் எல்லாம் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
சற்று நேரம் வெளியேறிக் கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்த வண்ணம் காத்திருந்தவன் அப்போது வெளியே வந்த சரண்யாவையும், சிந்துஜாவையும் பார்த்துக் கொண்டே அவர்களின் எதிரில் போய் நின்றான்.
அவனை ஏற்கனவே அவர்களுக்குத் தெரியும் என்பதால் அப்பெண்களும் நிற்க, “நீங்க கிருதி பிரண்ட்ஸ் தானே? நான் அவள் மாமா…” என்றான்.
“எங்களுக்கு உங்களைத் தெரியும். இன்னைக்குக் கிருதி காலேஜ் வரலையே, என்னாச்சு?” என்று கேட்டாள் சரண்யா.
“அவளுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. ஹாஸ்பிட்டலில் இருக்காள்…” என்றான்.
“அச்சச்சோ! அவளுக்கு உடம்புக்கு என்ன?” என்று தோழிகள் இருவரும் பதறிப் போய்க் கேட்டனர்.
“அதை அப்புறம் சொல்றேன். முதலில் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இப்படிக் கொஞ்சம் வர முடியுமா?” என்று அங்கே ஓரமாக நிறுத்தியிருந்த தன் காரின் அருகில் அழைத்தான்.
அவர்களும் யோசனையுடன் வந்து நிற்க, காரில் சாய்ந்து நின்றவன், “கிருதி கொஞ்ச நாளா காலேஜில் எப்படி நடந்துகிட்டாள்? உங்ககிட்ட எல்லாம் வழக்கம் போலப் பேசிப் பழகினாளா?” என்று கேட்டான்.
“இல்லங்க சார். முன்னாடி எல்லாம் எங்ககிட்ட கலகலப்பா அரட்டை அடிப்பாள். ஆனா கொஞ்ச நாளா அவள்கிட்ட எந்தக் கலகலப்பும் இல்லை. எங்ககிட்டயும் சரியா பேசுறது இல்லை. நாங்களே வழிய வழிய போய்ப் பேசிப் பார்த்தோம். ஆனா எங்களை அவாய்ட் பண்ணிட்டாள்…” என்றாள் சிந்துஜா.
“ஏன் அப்படி நடந்துகிட்டாள்னு உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா?” என்று கேட்டான்.
“இல்லை சார், தெரியாது…” என்றனர் இருவரும்.
சில நொடிகள் மௌனமாக இருந்தவன், “கிருதி கொஞ்ச நாளா ட்ரக்ஸ் யூஸ் பண்ணிருக்காள். அதுபத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான்.
“வாட்! என்ன சார் சொல்றீங்க?” என்று இருவரும் அதிர்ந்து கேட்டனர்.
“ம்ம், ஆமா. அதுபத்தி உங்களுக்கு எதுவும் தெரிஞ்சா என்கிட்ட மறைக்காம சொல்லுங்க. உங்க ப்ரண்ட் நல்லதுகாகத் தான் கேட்கிறேன்…” என்றான்.
“சார், எங்களுக்கு ஒன்னும் தெரியாது சார். கிருதி ஏன் இப்படி எங்களை விட்டு ஒதுங்கிப் போறாள்னு தெரியாம நாங்களே குழம்பிப் போய் இருக்கோம். அவள் ட்ரக்ஸ் எடுத்துக்கிட்டாள்னு நீங்க சொல்லித்தான் தெரியும்…” என்றாள் சரண்யா.
“உங்க கூட இன்னொரு பொண்ணு இருப்பாளே. நீங்க மூணு பேரு தானே கிருதி ப்ரண்ட்ஸ்னு கேள்வி பட்டேன். அந்தப் பொண்ணும் இன்னைக்கு லீவா?” என்று கேட்டான்.
“மிருதுளா இன்னைக்கு மட்டுமில்லை சார், ஒரு மாசத்துக்கு மேலேயே அவள் காலேஜ் வரலை…”
“ஏன்? என்னாச்சு?”
“அதுவும் தெரியலை சார். திடீர்னு காலேஜ் வர்றதை நிறுத்திட்டாள். என்னன்னு விசாரிச்சதில் அவளோட பேரன்ட்ஸ் அவள் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருக்கிறதா சொன்னாங்க. ஏன், எதுக்குன்னு ஒரு காரணமும் சொல்ல மாட்டோம்னு மறுத்துட்டாங்க…” என்றனர்.
“ஓ, சரி. மிருதுளா, நீங்க தவிர வேற யாரும் புது ப்ரண்ட்ஸ் கிருதிக்கு இருக்காங்களா?”
அவன் அப்படிக் கேட்டதும் சரண்யாவும், சிந்துஜாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன விஷயம்?” என்று கேட்டான் செழியன்.
“அது வந்து சார்…” என்று தயக்கத்துடன் இழுத்தாள் சரண்யா.
“தயங்காம சொல்லுமா…”
“எங்களைத் தவிரக் கிருதி நல்லா பேசுற ஆள்னா அது சந்துரு தான் சார். எங்களைச் சமீபமா அவாய்ட் பண்ணினப்ப கூட அவன்கிட்ட மட்டும் அப்பப்போ பேசிட்டு இருப்பதைப் பார்த்தோம். சந்துருகிட்ட மட்டும் நல்லா பேசுறவ எங்களை ஏன் அவாய்ட் பண்றாள்னு அது வேற எங்களுக்குக் குழப்பம் தான்…” என்றாள்.
“சந்துரு யார், உங்க கிளாஸ்மேட்டா?” என்று தாடையைத் தடவிய படி யோசனையுடன் கேட்டான்.
“இல்லை சார், எங்களுக்குச் சீனியர். அது மட்டுமில்ல சந்துரு மிருதுளாவோட லவ்வர்…” என்றவர்கள் சந்துருவின் பிறந்தநாளுக்குப் போனது, அதன் பிறகும் அவனிடம் கிருதி நன்றாகப் பேசியது என்று அனைத்தும் சொன்னார்கள்.
“டூர் போயிருந்தப்ப சந்துருகிட்ட பேசின அளவுக்குக் கூடக் கிருதி எங்ககிட்ட பேசலை சார்…” என்றாள் சரண்யா.
மேலும் சற்று நேரம் அவர்களிடம் பேசி மிருதுளாவின் வீட்டு முகவரியை வாங்கியவன் ரத்னாவிற்கு அழைத்தான்.
“ரத்னா நான் சொல்ற அட்ரஸுக்குப் போய் மிருதுளா என்ற பொண்ணைப் பத்தி விசாரிச்சுட்டு வா…” என்று சில விவரங்கள் சொல்லிவிட்டு அலைபேசியைத் துண்டித்தவன், “சந்துரு வீட்டு அட்ரஸ் தெரியுமா?” என்று கேட்டான்.
“தெரியாதே சார்…”
“அவனைப் பத்தி வேற டீடைல்ஸ்? போன் நம்பர் எதுவும்?” என்று விசாரித்தான்.
“இல்லை…” என்று சிந்துஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சார், அதோ அந்தப் பைக்கில் வர்றது சந்துருவோட ப்ரண்ட் ரவி…” என்று சொல்லிக் கல்லூரியில் இருந்து அப்போது தான் வெளியே வந்து கொண்டிருந்தவனைப் பார்த்துச் சொன்னாள் சரண்யா.
அதைக் கேட்டதும் சட்டென்று சுறுசுறுப்பான செழியன், தங்களைத் தாண்டிச் செல்ல முயன்ற ரவியின் வண்டியின் குறுக்கே புகுந்து நிறுத்த வைத்தான்.
“யோவ், என்ன இப்படிக் குறுக்க வந்து விழுகுற…” என்று சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய ரவி கத்தினான்.
“டேய், சும்மா கத்தாதே! உன்கிட்ட பேசணும். வண்டியை விட்டு இறங்கு…” என்ற செழியன் ரவியின் வண்டி சாவியை அபகரித்துக் கொண்டான்.
“ஹலோ, யார் நீங்க? எதுக்கு வண்டி சாவியை எடுக்குறீங்க?” என்று துள்ளினான் ரவி.
அவனை மேலும் கத்தவிடாமல் பக்கத்தில் இருந்த கடையின் பின் புறம் தள்ளிக் கொண்டு போன செழியன், “சந்துரு உன் ப்ரண்ட் தானே. அவன் இப்ப எங்கே இருக்கான்? இன்னும் காலேஜில் இருக்கானா? இல்லை வீட்டுக்குப் போய்ட்டானா?” என்று கேட்டான்.
“இதெல்லாம் நீங்க ஏன் கேட்குறீங்க? யார் நீங்க?” என்றவனின் சட்டைக் காலரை பிடித்த செழியன்,
“நான் யார் என்ன என்ற விஷயம் எல்லாம் உனக்குத் தேவையில்லை. சந்துரு இப்போ எங்கே?” என்று கேட்டான்.
“என்ன சார்? திடீர்ன்னு வந்து இப்படி மிரட்டுறீங்க. உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்? எதுக்குச் சொல்லணும்?” என்று துள்ளினான்.
“நான் வாயால் பேசுற வரை பதில் சொல்ல மாட்ட போல…” என்ற செழியன், அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
“எதுக்கு இப்ப காரணமே இல்லாம என்னை அடிக்கிறீங்க?” என்று ரவி எகுற,
“நான் காரணம் இல்லாம யாரையும் அடிக்கிற ஆள் இல்லை. எனக்கு உன்கிட்ட என்னமோ தப்பா தெரியுது. சொல்லு, சந்துரு எங்கே?” என்று கேட்டவன், சில நிமிடங்கள் கடந்த போது அவனிடமிருந்து, சந்துரு முன்பே கல்லூரியிலிருந்து கிளம்பி விட்டதையும், அவனின் வீட்டு முகவரி, போன் முகவரி என்று அனைத்து விவரங்களையும் சேகரித்திருந்தான் செழியன்.
சந்துருவை தேடிச் சென்று கொண்டிருந்த போது ரத்னாவிடமிருந்து அழைப்பு வர, “சொல்லு ரத்னா, அந்தப் பொண்ணு பத்தி என்ன விவரம் கிடைச்சது?” என்று கேட்டான்.
“அந்தச் சந்துரு பலே கேடியா இருப்பான் போலச் செழியா…” என்று ஆரம்பித்த ரத்னா மேலும் விவரம் சொல்ல ஆரம்பித்தாள்.
“மிருதுளா, சந்துருவை லவ் பண்றதா சொல்லி சுத்திட்டு இருந்திருக்காள். அப்போ ஒரு நாள் ஒரு பப்க்கு கூட்டிட்டுப் போயிருக்கான். அங்கே மிருதுவும் ட்ரிங் பண்ணிருக்கா. சந்துரு, மிருது இரண்டு பேருமே ட்ரிங்ஸ் எடுத்துக்கிட்டு அங்கே டான்ஸ் ஆடியிருக்காங்க. அப்போ மிருது போதையில் ஆடிக்கிட்டு இருக்கும் போதே அவள் கையில் ஏதோ ஊசியைப் போட்டு விட்டுருக்கான் சந்துரு.
அது போதை ஊசின்னு அப்புறமா அவனே சொன்னானாம். அந்த ஊசி போடவும் போதையான மிருதுவை தனியா அழைச்சுட்டுப் போய் எல்லா வேலையும் முடிச்சுட்டான்…” என்று ஒரு நொடி நிறுத்தினாள் ரத்னா.
“ம்ம், மேலே சொல்லு…” என்று முகம் இறுக கேட்டான் செழியன்.
“அதோட வீடியோவும் எடுத்து வச்சுருக்கான். அவள் கண் முழிச்சப்ப வீடியோ பத்தி சொல்லி மிரட்டி திரும்ப அவன் எப்ப கூப்பிட்டாலும் வரணும்னு சொல்லியிருக்கான்…”
“ம்ம்ம்…”
“உன்னைக் காதலிச்சேனே என்னை இப்படிப் பண்ணி மிரட்டுறயேனு கேட்டுருக்காள். அதுக்கு அவன் நீ என்ன என்னை மட்டுமா காதலிச்ச? உனக்குச் செலவழிக்க ஒரு ஆள் வேணும்னு அடிக்கடி ஆள் மாத்துறவள் தானே நீ. இது எல்லாம் தெரிஞ்சும் உன்னை என் பின்னாடி சுத்தவிட்டது இதுக்குத் தான்னு சொன்னானாம்…” என்றவள்,
“இந்த மாதிரி இருக்குற பொண்ணுங்களை என்ன சொல்றது செழியா? அவங்க அப்பா, அம்மா பாவம் கூலி வேலை செய்தாலும் புள்ள படிக்கட்டும்னு காலேஜ் அனுப்பினா அவள் பசங்க பின்னாடி அப்படிச் சுத்தியிருக்காள். இப்போ அதுவே அவளுக்கு வினையா வந்து முடிஞ்சிருக்கு…” என்றாள்.
“ஹ்ம்ம்… சில விட்டில் பூச்சிகள் பட்டால் தான் திருந்துது…” என்ற செழியன், “மேலே சொல்லு. இப்போ அந்தப் பொண்ணு எங்கே இருக்காளாம்?” என்று கேட்டான்.
“அவன் கிட்ட ஏமாந்த பிறகு தான் புத்தி வந்திருக்கு. உடனே வீட்டில் வந்து அவளோட அப்பா, அம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுருக்காள். அவங்க இனியும் பொண்ணு மானம் போகக் கூடாதுன்னு யாருக்கும் தெரியாம ஒரு கிராமத்தில் இருக்குற சொந்தக்காரங்க வீட்டுக்குப் பொண்ணை அனுப்பி வச்சுட்டாங்க…” என்றாள் ரத்னா.
“சரி, நீ போனை வை ரத்னா. சந்துரு வீட்டுப் பக்கத்தில் வந்துட்டேன். உன்கிட்ட அப்புறம் பேசுறேன்…” என்று அலைபேசியை வைத்தவன் சந்துருவின் வீடு இருக்கும் தெருவில் வண்டியைத் திருப்பினான்.
அப்போது மீண்டும் அவனின் அலைபேசி அழைக்க, யாரென்று எடுத்துப் பார்க்க ஆனந்த் அழைத்துக் கொண்டிருந்தான்.
யோசனையுடன் அழைப்பை ஏற்றவன் அந்தப் பக்கம் இருந்து வந்த தகவலில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியிருந்தான்.
“செழியா… செழியா… நம்ம கிருதி சூசைட் பண்ணிக்கிட்டாள்டா…” என்று ஆனந்த் பதட்டமாகச் சொன்ன செய்தி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கச் செயலற்றுப் போனான் செழியன்.