மனம் கொய்த மாயவனே – 21

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 21

“வேலைக்குப் போயிட்டு அலுத்துப் போய் வந்தவளுக்கு ஒரு காப்பித் தண்ணி கூட வைக்காம இன்னும் அங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” முருகன், அல்லிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மலைத்துப் போய் நின்றிருந்த போதே, வெளியே இருந்து கோபமாகக் கத்தினார் அல்லியின் அன்னை சரோஜா.

“இதோ வர்றேன்மா…” என்று வெளியே திரும்பிக் குரல் மட்டும் கொடுத்த அல்லி, “இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?” வெற்றியையும், முருகனையும் பார்த்துக் கேட்டாள்.

“நீ முதலில் வீட்டுக்குப் போ அல்லி. உனக்குச் சொல்லாம நான் யாருக்குச் சொல்லப் போறேன். நாம அப்புறமா நிதானமா பேசுவோம்…” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைக்க முயன்றான் வெற்றி.

“இல்லை, இப்பவே சொல்லு…” என்று பிடிவாதம் பிடித்தாள் அல்லிராணி.

“அவன் குடும்பத்தை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன் அல்லி. ஏற்கனவே இவன் சாதாரண வேலை தான் பார்க்கிறான். இந்த நிலையில் உன்னை லவ் பண்றேன்னு அவங்க வீட்டில் போய்ச் சொன்னா அவங்க எப்படி எடுத்துப்பாங்களோ? இவன் சம்பாத்தியத்தை நம்பி தான் அவனின் குடும்பமும் இருக்கு.

அதுதான் உன் நிலைமை தெரிஞ்சும் ஏன் காதலிச்சன்னு அவன்கிட்ட கேட்டேன்மா. அவங்க உன்னை விட்டுட்டு வரச் சொன்னால் உன்னையும் எப்படி இவனால் சமாளிக்க முடியும்? அவங்க வீட்டில் உங்க காதலை ஏத்துக்கலைனா உனக்கும் கஷ்டம் தானே?” என்று கேட்டான் முருகன்.

“ஓ, இவ்வளவு தானா? பரவாயில்லை அண்ணே. எங்க மேல உள்ள அக்கறையில் தான் சொல்லியிருக்கீங்க. ஆனா என்னைக் காதலிக்கத் தெரிஞ்ச வெற்றிக்கு அவங்க வீட்டில் சம்மதம் வாங்கவும் தெரியும்ல? என்ன வெற்றி?” என்று முருகனிடம் ஆரம்பித்து நேரடியாக வெற்றியிடம் கேட்டாள்.

“அதைத் தான் நானும் சொன்னேன் அல்லி. நான் பார்த்துக்கிறேன். வீட்டில் எதிர்ப்பு வந்தாலும் நீ என் கூட நிப்ப. அதனால் நான் சமாளிச்சுக்கிறேன்னு இவன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…” என்றான் வெற்றி.

“சமாளிச்சுத்தான் ஆகணும் வெற்றி. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னை அம்போன்னு விட்டுறலாம்னு கனவு மட்டும் காணாதே! அப்படிக் கனவே கண்டாலும் கனவுலயும் உன்னை விடாம துரத்துவேன்…” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அல்லிராணி.

அவளின் மிரட்டலை கேட்டு வெற்றிச் சப்தமாகச் சிரிக்க, முருகன் பெயருக்குச் சிரித்து வைத்தான்.

“நீ இப்போ இங்க வரலைனா வெளக்கமாத்த எடுத்துட்டு வந்து உன்னைத் துரத்தி துரத்தி அடிக்கப் போறேன் பாரு…” என்று வெளியே இருந்து சரோஜாவின் குரல் வர, “அம்மா இங்கே வர்றதுக்குள்ள நான் ஓடிருறேன்…” என்று சிட்டாகப் பறந்து அல்லிராணி அவளின் வீட்டிற்குச் செல்ல, வெற்றியின் சிரிப்புச் சப்தம் அதிகரித்தது.

முருகனின் சிரிப்பு அப்படியே அடங்கியது.

“இதெல்லாம் சரி வரும்னு நீ நினைக்கிறயா வெற்றி?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டு, வெற்றியின் சிரிப்பையும் அடங்க வைத்தான் முருகன்.

“சரியா வரும் முருகா…” என்றான் அழுத்தமாக.

“ஆனா…” என்று முருகன் மேலும் ஏதோ சொல்ல வர,

“வேண்டாம் முருகா. இதைப் பற்றி நாம இதுக்கு மேல பேச வேண்டாம். நீ கிளம்பு! நான் சொன்ன வேலையை மட்டும் செய்…” என்றான் வெற்றி.

“ஆனா உனக்கு அடிப்பட்டுருக்கே வெற்றி. எப்படித் தனியா சமாளிப்ப?” என்று தயங்கினான் முருகன்.

“என்னை அல்லி பார்த்துக்குவா…” என்றான்.

“நீயும் என்னமோ சொல்ற. நானும் கேட்டுட்டு அமைதியாகப் போக வேண்டியதா இருக்கு…” என்று சலிப்பாகச் சொன்னான்.

“டேய், புலம்பாதே! போ, போய் வேலையைப் பார். எனக்குக் கால் வலி குறைஞ்சதும் நானும் வந்துருவேன்…” என்றான்.

“சரி, நான் போய்ட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் முருகன்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் உள்ளே வந்தாள் அல்லிராணி.

அவளின் கையில் இரண்டு காஃபி டம்ளர் இருந்தது.

“இந்தா வெற்றி காப்பிக் குடி…” என்று அவனுக்குக் கொடுத்துவிட்டு, அவளும் அவனின் அருகில் அமர்ந்து தன் காஃபியைப் பருகினாள்.

ஒரு கையில் காஃபியை வாங்கிப் பருகியவன், இன்னொரு கையை அருகில் அமர்ந்திருந்தவளின் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டான்.

“அப்புறம் உன் அம்மாகிட்ட வெளக்கமாத்து அடி வாங்காம எப்படித் தப்பிச்சு வந்த?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“அதெல்லாம் நேக்கா தப்பிச்சுடுவேன்…” என்றவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். அவளின் முகம் யோசனையைப் பிரதிபலித்தது.

“என்னோட ஆள் முழுங்கி ராணிக்கு இப்போ என்ன யோசனை?” என்று கேட்டான்.

“ஏன் வெற்றி, என்னை உங்க வீட்டில் வேணாம்னு சொல்லிருவாங்களா? நானும், அம்மாவும் சித்தாள் வேலை பார்த்து எங்க வயித்துப்பாட்டுக்குப் போக, கொஞ்ச கொஞ்சமா பணம் சேர்த்து என் கல்யாணத்துக்கு ஐஞ்சு பவுன் நகை சேர்த்து வச்சுருக்கோம்.

அது போதுமா? இல்லை உன் வீட்டில் இன்னும் எதிர்பார்ப்பாங்களா? கல்யாண செலவுக்கே இனி தான் காசு வேற சேர்க்கணும். எங்ககிட்ட காசு இல்லைனு என்னை வேண்டாம்னு சொல்லிடுவாங்களா?” என்று கேட்டாள்.

எப்போதும் படபடவென்று பேசுகின்றவள், இப்பொழுதோ தயங்கித் தயங்கி அவனிடம் கேட்டாள்.

“அடேயப்பா! ஐஞ்சு பவுன் போட்டு வருவியா? அப்போ எங்க வீட்டில் ஒரு மறுப்பும் சொல்ல மாட்டாங்க. உடனே சம்மதம் சொல்லிடுவாங்க. அதனால் கவலையை விடு. கல்யாண செலவு எல்லாம் என் செலவு தான். அதனால அதைப்பத்தி கவலைப்படாதே!” என்று அவளின் தோளில் இருந்த கையால் இன்னும் ஆறுதலாக அழுத்திப் பிடித்தான்.

“உங்க வீட்டில் யார் யார் இருக்கா வெற்றி?” என்று விசாரித்தாள்.

“வீடுன்னு இருந்தா அம்மா, அப்பா எல்லாமும் தான் இருப்பாங்க…”

“உனக்குத் தங்கச்சி இருக்கா?”

“ஓ, இருக்காளே…”

“தம்பி?”

“ம்ம், இருக்கான்…” என்று அவள் கேட்க, கேட்க பதில் சொல்லிக் கொண்டே வந்தான்.

“ஓ, அப்போ உன் தங்கை, தம்பி பொறுப்பு எல்லாம் உனக்கு இருக்கும்ல?” என்று தொடர்ந்து கேட்டாள்.

“பின்ன? அவங்களை நான் தானே பார்த்துக்கணும்…” என்றவன், “ஏன் அண்ணியா இருந்து நீயும் அவங்களுக்கு எதுவும் செய்ய மாட்டியா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் செய்வேன். அவங்களுக்கு நீயும், நானும் தானே செய்யணும்…” என்றாள்.

“அப்புறம் என்ன? கவலையை விடு. நாம இரண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கரையேத்தி விட்டுடலாம்…” என்றான்.

இருவரும் அதன் பிறகும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி, திருமணத்தைப் பற்றி என்று பேசிக் கொண்டே போனார்கள்.


ஐந்து நாட்கள் கடந்து சென்றன.

நேரத்திற்கு வெற்றிக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதும், மாத்திரையைச் சரியாகச் சாப்பிட வைப்பதும், நடுவில் ஒரு முறை கட்டு மாற்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுமாக வேலைக்குச் செல்லாமல் அவனின் கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள் அல்லிராணி.

நடுவில் அவளின் அன்னையையும் சமாளித்து வைத்திருந்தாள்.

ஆறாவது நாள் காலையில் அல்லி தனது வீட்டில் இருந்து வெற்றிக்கான காலை உணவை எடுத்து வந்த போது சட்டையை மாற்றிக் கொண்டிருந்தான்.

“யோவ் வெற்றி, எங்க கிளம்பிட்டு இருக்க?” கொண்டு வந்த சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு, அவனின் அருகில் வந்து கொண்டே கேட்டாள்.

“பொழைப்பை பார்க்கத்தான்…” என்றவன் கடைசிப் பொத்தானையும் மாட்டிவிட்டு அவளின் பக்கம் வந்தான்.

“என்ன, வேலைக்கா?” என்று கோபமாகக் கேட்டவள், இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிய படி அவனை முறைத்தாள்.

அவளின் கையைப் பிடித்து அருகில் இழுத்தவன், “இப்போ எதுக்கு இந்த முறைப்பு ஆள் முழுங்கி?” என்று கேட்டு அவளின் நெற்றியில் முட்டினான்.

“பின்ன, என்ன? இப்ப யாரு உன்னைப் பொழப்பை பார்க்க போகச் சொன்னது வெற்றி? அதுவும் இந்தக் கால் வலியோட?” என்று கேட்டாள்.

“கால் இப்போ பரவாயில்லை அல்லி. அப்படியே வலிச்சாலும் இன்னும் எத்தனை நாளைக்குச் சும்மா வீட்டில் உட்கார்ந்து இருக்க முடியும்? கையில் இருந்த காசு எல்லாம் கரைஞ்சுட்டு இருக்கு. இந்த வாரம் நான் ஊருக்கு வேற பணம் அனுப்பி விடணும். அதான் கிளம்பிட்டேன்…” என்றான்.

“என்கிட்ட கொஞ்ச காசு இருக்கு வெற்றி. அதை வேணா இந்த முறை ஊருக்கு அனுப்பி விடு. நீ இன்னும் நாலு நாளைக்கு வீட்டில் இருந்து ரெஸ்டு எடு…” என்றாள்.

அவளைக் காதலுடன் பார்த்தவன், நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “உன் காசு எல்லாம் நீ கல்யாணத்துக்குப் பிறகு தந்தா போதும். இப்போ நான் பார்த்துக்கிறேன். நான் காசுக்காக மட்டும் போறேன்னு சொல்லலை. வீட்டில் சும்மாவே இருக்குறது எரிச்சலா இருக்கு.

வெளியே போய்ட்டு வந்தா நல்லா இருக்கும். நீ என்னைப் பத்தி கவலைப்படாதே! நான் அங்கே போய் ஓரமா உட்கார்ந்து தான் வியாபாரத்தைப் பார்ப்பேன்…” என்றான்.

“க்கும்! நீ எல்லாம் முடிவு பண்ணிட்டு பேசுற. இனி நான் சொன்னாலும் நிக்க மாட்ட. பார்த்துச் சூதானமா போய்ட்டு வா. ரொம்ப நேரம் நிக்காதே!” என்றாள்.

“சரி, சாப்பாட்டைத் தா. சாப்பிட்டு கிளம்புறேன்…”

“வா, வந்து சாப்பிடு…” என்று சாப்பாட்டை எடுத்துக் கொடுத்தாள்.

“நீ சாப்பிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே உண்ண ஆரம்பித்தான்.

“இன்னும் இல்லை. இனி தான் வீட்டில் போய்ச் சாப்பிடணும். அம்மா வேலைக்குப் போயிடுச்சு. நீ இன்னைக்கு வியாபாரத்துக்குப் போவன்னு தெரிஞ்சிருந்தா நானும் வேலைக்குக் கிளம்பிருப்பேன். இனி நான் போக முடியாது…” என்றாள்.

“இப்ப ஒன்னும் கெட்டுப்போகலை. நல்லா படுத்து தூங்கு. நாளைக்கு வேலைக்குப் போனா போதும்…” என்றவன், உணவை எடுத்து அவளின் உதட்டின் அருகே வைத்தான்.

“நீ சாப்பிடு வெற்றி…” என்றாள்.

“நானும் சாப்பிடுறேன். நீயும் சாப்பிடு. இந்தா…” என்று உணவை ஊட்டி விட, வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள்.

சிறிது சாப்பிட்டதும் அவள் போதுமென்று சொல்ல, “இன்னும் இரண்டு வாய் வாங்கு…” என்று மேலும் ஊட்டி விட்டே விட்டான்.

“எந்நேரமும் முறைச்சுக்கிட்டுத் திரியுற உனக்குள்ளேயும் ஏதோ இருக்குய்யா…” என்று கிண்டலாகச் சொன்னாலும் அவன் கையால் உணவு உண்டதில் கிறங்கித்தான் போனாள் அல்லிராணி.

“எனக்குள்ள தானே? அது கிடக்கு நிறைய! தினமும் ஒவ்வொன்னா எடுத்து விடுறேன்…” என்றவன் உதட்டை குவித்துப் பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தான்.

தானும் பதிலுக்கு உதட்டைக் குவித்து, அவன் கொடுத்த முத்தத்தை வாங்கிக் கொண்டதாகப் பாவனைக் காட்டினாள்.

காதலர்களின் பேச்சும், சிரிப்புமாக உணவு நேரம் முடிய, அல்லியிடம் விடைபெற்று துணி மூட்டையை எடுத்துக் கொண்டு வியாபாரத்திற்குக் கிளம்பினான்.

அவன் கிளம்பிச் சென்றதும் தனது வீட்டிற்குச் சென்றவள், காலை உணவை உண்டுவிட்டு வீட்டைச் சுத்தம் செய்தாள்.

அந்த வேலையும் சற்று நேரத்தில் முடிய, அடுத்துச் செய்ய ஒரு வேலையும் இல்லை. மதியத்திற்கு அவளுக்கு மட்டும் உணவு இருந்தது. அதனால் சாப்பாடு செய்யும் வேலையும் இருக்கவில்லை.

அந்த நேரத்தில் தூங்க பிடிக்காமல் வீட்டிற்குக் கொஞ்சம் மளிகை பொருட்கள் வாங்க வேண்டியது இருக்க அதையாவது சென்று வாங்கிவிட்டு வரலாம் என்று வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

அவள் வழக்கமாக அங்கிருக்கும் பெரிய மார்க்கெட்டில் தான் பொருட்கள் வாங்க செல்வாள். அங்கே விலை சற்றுக் கம்மியாக இருக்கும் என்பதால் அங்கே பொருட்கள் வாங்குவதே வாடிக்கையானது.

அதனால் பேருந்தில் சென்று மார்க்கெட்டில் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றாள்.

அவள் செல்ல வேண்டிய பேருந்து வர நேரமாக, சாலையில் வேடிக்கை பார்த்த படி நின்றிருந்தாள்.

அப்போது எதிர்சாலையில் ஒரு கார் கண்ணில் படத் தற்செயலாக அந்தக் காரை கவனித்தாள்.

காரை விடக் காரில் அப்போது ஏறி அமர்ந்த நபரை தான் கவனித்தாள்.

‘அட! வெற்றி எங்க இங்கே? இது யார் கார்?’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே முன் பக்கம் ட்ரைவர் இருக்கை அருகில் ஏறி அமர்ந்த வெற்றி, பின்னால் திரும்பி யாரிடமோ பேச ஆரம்பித்தான்.

பின்னால் யார் என்று அல்லி பார்க்க முயல, அவளால் பார்க்க முடியவில்லை. முன்பக்கம் மட்டும் கார் கண்ணாடி கீழ் இறங்கியிருக்க, பின் பக்கம் ஏற்றி விடப்பட்டிருந்தது.

கறுப்பு நிற கண்ணாடி அவள் கண்களுக்குக் கண்ணாமூச்சி காட்ட, பின்னால் பார்க்க முடியவில்லை.

அதனால் மீண்டும் வெற்றியைப் பார்த்தாள்.

தீவிரமாக யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

‘வெற்றி யார்கிட்ட பேசிட்டு இருக்கான்? அதுவும் அந்த விலை உயர்ந்த காரில்’ என்று ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதிலும் அந்தக் காரில் அவன் அமர்ந்திருந்த தோரணை, என்னவோ அவனே அந்தக் காருக்கு உரிமையாளன் போல் தெரிந்தது. அதோடு அவனின் கால்சட்டை பையில் இருந்து கையகல தொடுதிரை கைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைத்துப் பேச ஆரம்பித்தான். அதைக் கண்டு கண்களைப் பெரிதாக விரித்துப் பார்த்தாள்.

அவனிடம் சாதாரணப் பட்டன் மாடல் போன் தான் அல்லி பார்த்திருக்கிறாள்.

அதுவும் ஒரு அதரபழைய கைபேசி அது. அப்படியிருக்க, இப்போது மட்டும் எப்படி இவ்வளவு பெரிய போன்? என்று குழம்பிப் போய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்கே நின்று பார்த்துக் குழம்புவதற்குப் பதில் வெற்றியிடமே போய் ‘இங்க என்ன செய்ற வெற்றி? இங்க என்ன நடக்குது? என்று கேட்டு விடுவோம்’ என்ற எண்ணம் வர, பையுடன் பேருந்து நிறுத்த நடைமேடையிலிருந்து கீழே இறங்கினாள்.

அதே நேரத்தில் காரில் இருந்த வெற்றியும் அவளைப் பார்த்துவிட்டான்.

அவளைக் கண்டதும் சட்டென்று ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் தோளில் தட்டி வண்டியை எடுக்கச் சொன்னான் வெற்றி.

அடுத்த நிமிடம் கார் அதிவேகமாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல, கையில் பையுடன் சாலையோரத்தில் அப்படியே விக்கித்து நின்றாள் அல்லிராணி.

தன்னைப் பார்த்ததும் தான் வெற்றி வேகமாக அங்கிருந்து கிளம்பினான் என்பதைக் கண்கூடாகக் கண்டவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

ஏதோ இனம் புரியாத பயமும் அவளின் மனதைக் கவ்வியது.