மனதோடு உறவாட வந்தவளே – 9
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
அத்தியாயம் – 9
இன்று…
நன்றாக விடிந்து வெகு நேரம் ஆகியிருந்தது. இருவரும் அவரவர்களின் நினைவுகளில் மூழ்கி இருந்து விட்டு விடிந்ததை உணர்ந்து நடப்புக்கு வந்தார்கள்.
இரவெல்லாம் உறங்காததால் இருவருக்குமே கண்கள் எரிந்தன. ஆனால் அதைப் பெரிதுப்படுத்தாமல் அன்றைய நாளில் தங்களுக்கு இருக்கும் வேலையை மனதில் கொண்டு எழுந்தார்கள்.
தனுஸ்ரீ திரும்பி ஜீவரஞ்சன் என்ன செய்கிறான் எனக் கவனித்தாள். அவன் இவள் பக்கமாகத் திரும்பி படுத்து தனுவை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் பக்கம் திரும்பவும் சோர்வாகப் புன்னகைத்தான்.
ஆனால் தனு அதைக் கவனித்தாலும் கண்டு கொள்ளாதது போல எழுந்து எதுவும் பேசாமல் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து, ஜீவாவை திரும்பியும் பார்க்காமல் அறையை விட்டு சென்றாள்.
அவளின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பார்த்தபடி படுத்திருந்தவன் அவள் வெளியே செல்லவும் தானும் எழுந்து குளிக்கச் சென்றான்.
ஜீவா அலுவலகம் செல்ல தயாராகி வந்த போது காலை உணவு மேஜையில் இருந்தது. அவன் சாப்பிட அமர்ந்தது தெரிந்தாலும் பரிமாற வராமல் சமயலறையிலேயே இருந்தாள் தனு.
‘அவள் வருகிறாளா?’ என்று சிறிது நேரம் பார்த்தான். தனு வராமல் போகவும் ‘ஓ ரொம்பக் கோபம் போல? சரிதான்! இவளை சமாதானம் வேற செய்யனுமா?’ எனச் சலித்துக் கொண்டே மணியைப் பார்த்தான். பின்பு ‘எனக்கு இப்போ என்னனு கேட்க எனக்கு நேரம் இல்ல’ என நினைத்தவன் தானே எடுத்து வைத்து சாப்பிட்டு ‘போய் விட்டு வருகிறேன்’ என்று கூடச் சொல்லாமல் அவசர அவசரமாகக் கிளம்பி சென்று விட்டான்.
உள்ளே இருந்தாலும் அவனையே கவனித்துக் கொண்டிருந்த தனு, அவன் என்னவென்று கூடக் கேட்காமலும், சொல்லிக் கொள்ளாமலும் கிளம்பவும், அவளின் கண்கள் கலங்கின. ஆனால் வேகமாகக் கண்ணீரை துடைத்துக் கொண்டு ‘சும்மா சும்மா அழுதா மட்டும் அவன் மாறப் போகிறானா என்ன? நான் தான் அவனை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்’ என நினைத்து, காலையில் இருந்து கடைபிடித்து வந்த மெளனத்தைத் தொடர முடிவு செய்தாள்.
ஆம்! மௌனம் தான்! அவளின் முதல் ஆயுதம். மௌனத்தின் வலி என்னவென்று அவனும் புரிந்து கொள்ள வேண்டாமா என்ன? அதோடு இந்த மௌனம் தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்னும் பொழுது அதை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். இந்த முடிவை எடுப்பதற்கு முன் தன் தோழி நித்யாவின் மூலம் சில விசயங்களை விசாரித்து அறிந்திருந்தாள். அதோடு ஜீவாவின் நண்பன் மூலமும் அவளுக்கு ஒரு விசயம் தெரிய வந்திருந்தது. அதனால் தான் துணிந்து மெளனத்தைக் கையில் எடுத்துவிட்டாள்.
இந்த மௌனத்திற்கு முதல் காரணம் ஜீவாவின் மூச்சு திணறலும், அதற்கு அவன் சிகிச்சைக்கு வர நேரமில்லை என்றதுமே முக்கியக் காரணமாக இருந்தது. கணவன் சில விஷயத்தை மறைத்தாலும், அவளால் அப்படியே விடமுடியாமல் அவளாகச் சில முயற்சி எடுத்ததின் பலனாகத் தான் இந்த முடிவுக்கு வந்தாள்.
அதன் படி அன்று அவன் அலுவலக நேரத்தில் ஜீவா போன் செய்யாவிட்டாலும் இவளாகத் தினமும் ஒரு முறை அழைப்பவள் இப்போது பேசாமல் தவிர்த்தாள்.
தன் மனதில் உள்ளதை எதையும் அங்கே இருந்த தந்தையிடம் கூடக் காட்டிக் கொள்ளாமல் சூப்பர் மார்கெட்டுக்கு சென்று தன் அன்றாட வேலையை முடித்து வந்தாள். அரசி போன் செய்த போதும் இங்கே உள்ள நிலைமையைக் காட்டிக் கொள்ள வில்லை.
நள்ளிரவு ஆனாலும் அவன் வராமல் இருக்கும் போது போன் செய்து பேச மனது துடிக்கும். ஆனால் தன் மனதை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தாள். இரவில் அவன் வந்த போது தூங்கிவிட்டதாகக் காட்டிக் கொண்டாள்.
இருவருக்கும் இடையே கண்ணாடி திரையைப் போட ஆரம்பித்திருந்தாள் தனுஸ்ரீ.
அந்தத் திரையை ஜீவரஞ்சன் இருந்த நிலையில் முதல் நாள் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டான். அடுத்த நாளும் காலை முதல் அவன் இரவு வீடு வரும் வரை அதுவே தொடர்ந்தது. ஆனால் அவளின் மௌனத்தைப் பெரிதாக நினைக்காத ஜீவா வழக்கம் போல இருந்தான்.
அன்று இரவு அவளை நெருங்கிய போது ‘வேண்டாம்’ எனத் தடுத்தாள். ஏன்? என்பது போலப் பார்த்தவனிடம் மூன்று விரலை காட்டினாள்.
‘ஓ’ என்றவன் அவளைத் தொந்தரவு செய்யாமல் மெதுவாக அணைத்துக் கொண்டு கண் மூடினான். அவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்த தனுஸ்ரீக்கு அவனிடம் பொய் சொன்னது மனதை அறுத்தாலும் மனதை இறுக்கி பிடித்துச் சமாளித்தாள்.
ஜீவாவிடம் பேசாமல் இருப்பது மிகக் கடினமாக இருந்தது அவளுக்கு. அதனால் அவனாக அணைக்கும் இந்த அணைப்பு அவள் மனதிற்கு இதமாக இருக்க அதைத் தவிர்க்க அவளால் முடியவில்லை.
மூன்றாம் நாளும் தொடர்ந்த மெளனத்தை ஜீவா சிறிது உணர்ந்தான். சிறுசிறு உதவிகள் கேட்டு பேச்சுக் கொடுத்தான். அவன் கேட்டதைச் செய்தவள் வாயை மட்டும் திறக்கவில்லை.
‘என்ன கேட்டாலும் பேச மாட்டீங்கிறாளே” என நினைத்தவன் ‘உனக்கு இவ்வளவு வீம்பா? இரு எனக்கென்ன’ எனக் கண்டு கொள்ளாமல் தவிர்க்க தான் அவன் இருந்த மனநிலையில் அவனுக்கும் தோன்றியது.
‘நீ பேசலைனா போ! என் வேலையை நான் பார்க்கிறேன்’ என்பது போல அடுத்த இரண்டு நாட்களும் இவனும் வீம்பு பிடித்து அலைந்தான்.
அவனின் வீம்பும் குறைந்தது. அவளின் அருகாமைக்காக மனம் ஏங்கியது. அவளைப் பேச வைக்க மீண்டும் முயற்சி செய்தான். முயற்சியை எல்லாம் வீணடிக்கச் செய்தாள் அவனின் மனைவி.
ஓரளவுக்கு மேல் அவனுக்கு என்ன செய்து மனைவியைப் பேச வைப்பது எனப் புரியாமல் அவள் போக்கில் விட்டுவிட்டான்.
அடுத்து வந்த நாட்களில் அவளைப் பிரிந்திருக்க முடியாமல் அவளுக்கு அந்த நாட்கள் முடிந்திருக்கும் என்று நினைத்து அவளை நெருங்கினான்.
ஏற்கனவே தான் பேசாமல் இருப்பதைப் பற்றி விசாரிப்பான் என அவள் நினைத்திருந்தாள். ஆனால் அதை ஏன் எனக் கேட்காமல் பேச வைக்க மட்டும் முயற்சி எடுத்துவிட்டு பின்பு அதையும் விட்டுவிட்டவன், தன் மௌனத்தை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அவனும் முறுக்கி கொண்டு திரியவும் ஏக கடுப்பில் இருந்தாள் தனுஸ்ரீ.
இதில் சமாதானப்படுத்த முயற்சி எடுக்காமல் அவன் தேவைக்கு மட்டும் தன்னை அணுகுவதைத் தாங்க முடியாமல் ஜீவாவின் கை தன் மேல் பட்டதும் வேகமாகத் தட்டிவிட்டாள்.
ஜீவா என்னவென்று உணரும் முன்பே கையைத் தட்டிவிட்டு படக்கென்று அந்தப் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள். அவளின் செயலை புரிந்து ஒரு நிமிடம் அதிர்ந்து பார்த்தான். திருமணம் முடிந்த இத்தனை மாதங்களில் ஒரு நாள் கூட இப்படிச் செய்யாதவள். இப்போது முதல் முறையாக அவளிடம் இருந்து வந்த புறக்கணிப்பை ஜீவாவால் தாங்க முடியாமல் சுறுசுறுவெனக் கோபம் பொங்கியது.
அவளின் புறக்கணிப்பில் சட்டென்று கோபம் ஏறியிருந்தவன் அவளின் முகத்திருப்பலில் கடுப்பாகி அந்தப் பக்கம் திரும்பி இருந்தவளை பலம் கொண்ட மட்டும் வேகமாகத் தன் புறம் திருப்பினான்.
அதில் அதிர்ந்து திரும்பியவளிடம் “ஏன் உனக்குத் தான் இப்ப சரி ஆகிருக்கும் இல்ல? அப்புறம் ஏன் வேண்டாம்னு தடுக்குற?” என முகத்தில் கோபம் தெரிய கேட்டான்.
அவனின் கோபத்தை அமைதியாக எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துவிட்டு “எனக்கு விருப்பம் இல்லை” என நிதானமாகச் சொல்லிவிட்டு மீண்டும் அவனுக்கு முதுகுக்காட்டி படுத்தாள்.
அவள் மீண்டும் முகம் திருப்பியது இன்னும் கோபத்தைக் கூட்ட வலுக்கட்டாயமாகத் தன் புறம் திருப்பியவன், எதோ ஒரு வேகத்தில் அவளின் சம்மதம் இல்லாமலேயே அவளை எடுத்துக் கொள்ள முயன்றான்.
அவனின் செயலை கண்டு உள்ளுக்குள் அதிர்ந்தாலும் தடுக்க முயற்சி எதுவும் செய்யாமல் ஜடம் போல் இருந்தவள் அவன் முகத்தையே பார்த்தாள். அவள் மேல் குனிந்த ஜீவா அவளிடம் எந்த உணர்வும் இல்லாததைக் கண்டு அவளின் கண்களைச் சந்தித்தான்.
அந்தக் கண்கள் ‘விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகும் தொடுவாயோ?’ எனக் கேள்வி கேட்கும் பாவனையில் அவனையே வெறித்தது. அதைக் கண்டவன் பட்டென்று கட்டிலை விட்டு இறங்கி ‘ச்சே’ எனத் தன் தலையில் சட்டென்று அடித்துக் கொண்டான்.
அவன் தன்னையே அடித்துக் கொண்டதை கண்டும் சற்றும் அசையாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தாள் தனு. உள்ளுக்குள் வலித்தது தனுவிற்கு. ஜீவாவிற்கு எதையும் மறுக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. ஆனால் இது அவளின் சிகிச்சை. இந்தச் சிகிச்சையில் வெற்றி பெற அவனுக்கு இது போதாது என்றே தோன்றியது.
தன் செயலை நினைத்து வெட்கிய ஜீவா, தன்னை நிதானப்படுத்திக் கொள்ள அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான். மனம் ஒரு நிலைக்கு வந்த பிறகு ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டுவிட்டு அவளின் பக்கம் திரும்பி “சரி இது தான் வேண்டாம். ஆனா ஏன் என்கிட்ட பேச மாட்டேன்னு அடம் பிடிக்கிற? அப்படி என்னதான் உனக்குப் பிரச்சனை? நல்லாத்தானே இருந்த? இப்படி என்கிட்ட பேசாம என்னைத் தவிர்க்குற அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்?” எனப் பொரிந்து தள்ளினான்.
நடந்து கொண்டிருந்தவன் நின்று பேச ஆரம்பிக்கவும் என்னவென்று கவனித்தவள் அவனின் கேள்வியில் ‘அடப்பாவி!’ என வாயை திறக்காத குறையாகப் பார்த்தாள் தனுஸ்ரீ. பின்னே அவள் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் அவன் கேட்டால்.
‘இத்தனை நாளும் அவன் என்னிடம் பேசாமல் வேலை, வேலை என ஓடி விட்டு இப்போ என்னைக் குறை சொல்கின்றானே?’ என ஜீவாவை மேலும் கீழும் பார்த்து விட்டு பின்பு பதில் சொல்லாமல் கண்களைத் தூங்க போகும் பாவனையில் இறுக மூடிக் கொண்டாள்.
அதைக் கண்டு இன்னும் கடுப்பானவன் “ஹேய்! என்ன நான் கேட்டுட்டே இருக்கேன். பதில் சொல்லாம நீ பாட்டுக்கு தூங்க போற?” என அவளைப் போட்டு உலுப்பினான்.
‘ஹ்கும்’ எதற்கும் தனு அசைய வில்லை.
அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் “ச்சே! எனக்கு எங்கேயும் நிம்மதி இல்லை” எனப் புலம்பிக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவன் தொப்பென்று சோபாவில் விழுந்தான்.
தனு எதற்கு இப்படி நடந்து கொள்கிறாள் எனத் தெரியாமல் தன் மனதை போட்டுக் குழப்பிக் கொண்டவன் தூக்கத்தைத் தொலைத்தான். அவளும் அங்கே தன் தூக்கம் துறந்து அடுத்து என்ன செய்யலாம்? என்ற சிந்தனைக்குப் போனாள்.
தூக்கம் மறந்தவர்கள் காலையில் தங்கள் பணியைச் செய்ய ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட மறுத்து விலகி போனார்கள்.
காலை சாப்பாட்டைக் கூட வெறுத்து ஒதுக்கிவிட்டுச் சென்றான் ஜீவரஞ்சன். அதற்காக வருத்தப்பட்டாலும் தனு எதுவும் சொல்லாமல் தானும் சாப்பிடாமல் கிளம்பினாள். இருவரும் இருவேறு திசைகளில் சென்றனர்.
இவர்களின் இந்த ஊடல் கண்ணாமூச்சியை முடிவுக்குக் கொண்டு வரவோ, என்னவோ? அன்று இரவு வீடே வந்து சேரவில்லை ஜீவரஞ்சன்.