மனதோடு உறவாட வந்தவளே – 12

அத்தியாயம் – 12

தனு அதிர்ந்து நின்றதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அறையை விட்டு வரவேற்பறைக்குச் சென்றவன், தொலைக்காட்சியை போட்டுவிட்டு, இலக்கில்லாமல் அதில் இருந்த அத்தனை சேனல்களையும் வேகவேகமாக மாற்றினான்.

தொலைக்காட்சியின் சத்தத்தில் தெளிந்து விரைவாக வெளியே வந்த தனு, தொலைக்காட்சியை அணைத்து வைத்துவிட்டு அவனின் புறம் திரும்பினாள்.

அவள் தொலைக்காட்சியை அணைக்கவும் எரிச்சல் அடைந்தவன், ரிமோட்டை தூக்கிப் போட்டு உடைத்து “ஏண்டி என் உயிரை வாங்குற?” எனக் கத்தினான்.

அவனின் கத்தலில் அதிர்ந்து ‘இன்னைக்கு என்ன எனக்கு அதிர்ச்சி அடையும் நாளா? எத்தனை அதிர்ச்சி தான் தருவான்’ என எண்ணத்துடன் அப்படியே திகைத்து நின்றாள்.

இப்போதைய அவளின் அதிர்வுக்குக் காரணம் அவன் “டி” போட்டது தான். ஏன்னென்றால் ஜீவாவிற்கு ‘டி’ போட்டு பேசுவதே பிடிக்காது.

ஒரு நாள் இருவருக்குமான தனிமையான நேரத்தில் ‘டி’ போட்டு பேசுவதைப் பற்றிப் பேச்சு வந்த போது “நீ என்ன செல்லப் பேர் வச்சு கூப்பிடனும்னு சொன்ன? இப்ப ‘டி’யா? கண்டிப்பா உன்னைச் செல்லப் பேர் வச்சுக் கூப்பிட்டாலும் கூப்பிடுவேனே தவிற ‘டி’ போட்டு கூப்பிடவே மாட்டேன்” என்றவன் தொடர்ந்து,

“எனக்கு என்னமோ அப்படிக் கூப்பிட்டாலே அதுவும் கெட்ட வார்த்தை போலவே தோணும். அப்பா எங்க அம்மாகிட்ட பேசுறதை கவனிச்சிருக்கீயா? அரசி, அரசிமா தான் அவர் வாயில் இருந்து வரும். அப்படி ஒரு அப்பாவோட பிள்ளை நான் மட்டும் எப்படி மரியாதை இல்லாம கூப்பிடுவேன்? நீ இனி அதைப் பத்தி என்கிட்ட பேசாதே” எனத் தனுவை கண்டிப்பது போலப் பேசியிருக்கின்றான்.

அப்படி அவன் சொன்ன போது காதலுடன் அணைத்து அவனுக்கான பரிசையும் கொடுத்திருக்கிறாள். ஆனால் இன்று அவனே ‘டி’ போடுகிறான் எனவும் திகைக்காமல் என்ன செய்வாள்?

திகைத்து நின்றுக்கொண்டு இருந்தால் தான் பேச எண்ணியது நடக்காது என நினைத்து நடப்புக்கு வந்தவள் “இப்ப எதுக்கு இப்படிக் கத்துறீங்க? நான் பேசும் போது கண்டுக்காம நீங்க இங்க வந்து டிவி பார்த்தா என்ன அர்த்தம்?” எனப் பதிலுக்கு இவளும் கத்திக் கேட்டாள்.

அவளின் கத்தலை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாதவன் போல “ம்ம். பேச விருப்பம் இல்லைனு அர்த்தம்” என்றான் நிதானமாக.

“என்கிட்ட பேச விருப்பம் இல்லைனா வேற யாருக்கிட்ட பேசப்போறீங்க?” என விடாமல் கேட்டாள்.

அவள் கேள்வியில் எரிச்சல் அடைந்தவன் “இப்ப என்னாச்சு உனக்கு? என்னை நிம்மதியா இருக்க விடேன்” எனச் சலிப்பாகச் சொன்னான்.

“அப்படி எல்லாம் விட முடியாது. என் நிம்மதியை கெடுத்துட்டு நீங்க நிம்மதியா இருக்கப் போறீங்களா?”

“என்ன நான் உன் நிம்மதியை கெடுக்குறேனா? அப்படி என்னம்மா உன் நிம்மதியை கெடுத்துட்டேன்?” என அவள் சொல்ல வருவது புரியாமல் வினவினான்.

“நீங்க என்னை முதல் முதல பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு எனக்கு ஆரம்பிச்ச குழப்பம் இன்னைக்கு வர போகலை” என்றவளை கூர்ந்து பார்த்து “என்ன குழப்பம்?” எனக் கேட்டான்.

“உங்களுக்கு என்னைப் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணுனீங்களா இல்லையானு தான்”

இப்போது இவன் அதிர்ந்து போய் “என்ன? என்ன சொல்ற நீ? இப்படி ஒரு சந்தேகம் எப்படி வந்தது? ” எனக் கேட்டான்.

ஜீவாவிற்கு ஒன்றும் புரியவில்லை ‘நைட் முழுவதும் தான் வராமல் போனதற்குக் கேள்வி கேட்டு அதற்காக இப்படி விடாமல் பேசுகிறாளோ?’ என நினைத்து அதனைப் பற்றிப் பேச விருப்பமின்றித் தான் தன் கோபத்தைக் காட்டினான். ஆனால் அவள் பேச்சு வேறு எங்கேயோ போவது அவனுக்குக் குழப்பத்தைத் தந்தது.

தனு ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போலத் தன் ஆதங்கத்தைக் கொட்ட ஆரம்பித்தாள்.

“நீங்க அப்படி நடந்துக்கிட்டா அப்படிதான் சந்தேகம் வரும். எல்லாரும் பொண்ணு பார்க்க போனா பொண்ணை ஆர்வமா பார்ப்பாங்கனு கேள்வி பட்டிருக்கேன். ஆனா நீங்க பார்த்த பார்வைக்கு எனக்கு இன்னைக்கு வரை அர்த்தம் புரியலை”

“சரி கல்யாணத்தன்னைக்கு நீங்க என்னைப் பார்த்தது வைச்சு உங்களுக்குப் பிடிச்சுருக்குன்னு நினைச்சு உங்க கூடச் சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பிச்சா, ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேசுறீங்க. சில சமயம் நீங்க பேசாத போது நான் மட்டும் ஏன் உங்க கிட்ட பேசணும்னு கடுப்பு வருது”

அவள் பேசப் பேச ஜீவாவின் முகம் மாறிக்கொண்டே போனது.

“அது உங்க இயல்புன்னு ஒதுக்கி வைக்கப் பழகினா மூனு மாசம் என் கூட வாழ்ந்தும் உங்களுக்கு அப்படிக் காய்ச்சல் கொதிக்குது ஆனா நீங்க எதுவும் சொல்லாம போய்ப் படுக்குறீங்க. அன்னைக்கு எனக்கு எவ்வளவு வழிச்சுதுன்னு எனக்குத் தான் தெரியும். என்னோட அந்த வலியைக் கூட நீங்க புரிஞ்சிக்கிட்டீங்களா இல்லையான்னு கூட எனக்குத் தெரியல?”

“சரின்னு அதையும் விட்டுட்டு இருந்தா, நடுசாமம் வீட்டுக்கு வர்றதும் போன் போட்டாக் கூடப் பேசாம அவாய்ட் பண்றதும் எதுவும் பேசினா பதில் சொல்லாம ஒதுங்கி போறதும் இன்னும் இன்னும் இப்படிச் சொல்லிக்கிட்டே போகணும் போல இருக்கு. இப்ப கூட நான் பேசுறதில் இருக்குற வலி கூட உங்களுக்குப் புரியுதா இல்லையான்னு என்னால புரிஞ்சிக்க முடியல”

“நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்களுக்கு என்ன பிரச்சனை? என்ன கோபம்? இப்படி எதுவும் புரியாம பல விஷயத்தையும் யோசிச்சு. நீங்க ஏன் இப்படி இருக்கீங்கனு தெரியாம, ஒவ்வொரு நாளும் குழம்பியே எனக்குப் பைத்தியம் பிடிக்குது” என்றவள் மேலும்,

“நீங்கனா எனக்கு உயிர். ஆனா நீங்க என்னை அப்படி நினைக்கிறீங்களானே தெரியலை. ஒருவேளை என் மனதை நீங்க காதலிக்கலையோனு எனக்குச் சந்தேகம் வருது. ஒரு நாள் எனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லவும் இப்படி ஒரு நாள் ராத்திரி முழுவதும் வீட்டுக்கு வராம இருந்தா என்ன அர்த்தம்?என் மனசு உங்களுக்கு முக்கியமே இல்லையானு மட்டும் தான் தோணுது” எனச் சொல்லிவிட்டு தாங்க முடியாமல் தன் கண்ணீரை மறைக்கத் திரும்பி நின்றுக் கொண்டாள்.

இவ்வளவு நேரம் ஒரு ஆதங்கத்தில் இத்தனை நாளும் மனதில் வைத்திருந்த அவன் மீதான தன் எண்ணங்களைக் கொட்டியவள் அவனின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை காணாமல் போனாள்.

அவள் இவ்வளவு நேரம் பேசும் போதெல்லாம் ‘என்ன உணர்வில் இருக்கிறோம்?’ என உணராமலேயே கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் கடைசியாகப் பேசின விஷயத்தில் வெகுண்டு கொதித்துப் போய் முகம் எல்லாம் ரெளத்திரம் பொங்க, அந்தப் பக்கம் திரும்பி இருந்த அவளின் முகத்தைப் பட்டெனத் தன் பக்கம் திருப்பினான்.

வார்த்தையில் அனல் தெரிய “என்ன சொன்ன? என்ன சொன்ன? நான் உன்னைக் காதலிக்கலையா? உன் மனசை பார்க்கலையா? அப்ப உடம்பைத்தான் ஆசைப்பட்டேன்னு சொல்ல வர்றீயா?? என அவள் நாசுக்காகச் சொல்லிய வார்த்தையை இவன் பட்டெனக் கேட்டான்.

அவன் திருப்பிய வேகத்தில் ஒரு சுழன்று சுழன்றவள், “ஆமா! ஆமா! நீங்க என்னைக் காதலிக்கவே இல்லை. உங்களுக்கு என் மனசு முக்கியம் இல்லை” என இவளும் ஆங்காரமாகக் கத்தினாள்.

“என்னடி சொன்ன?” என்றவன் கை வேகமாக அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அதில் பயந்து கன்னத்தில் கை வைத்த படி, ஒரு அடி பின் வாங்கியவள், கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்த போது கோபத்தில் உடல் நடுங்க மூச்சு காற்றுக்குச் சிரமப்பட்ட படி நின்றிருந்தான்.

அவன் சீரற்று மூச்சு விடுவதைக் கவனித்தாலும், அதில் அக்கறை காட்டாமல் “ஆமாம்… ஆமாம்… ஆமாம்… என்னை இன்னும் அடிச்சாலும் ஆமாம் தான் சொல்லுவேன்” என மீண்டும் மீண்டும் கத்தினாள்.

அவளின் கத்தலில் வெறி வந்தவன் போல மீண்டும் தனுவை அறைய போனவன் ஒரு நொடியில் அப்படியே கையைத் திருப்பிப் பக்கத்தில் இருந்த கண்ணாடி டீப்பாயின் மேல் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடித்தான்.

ஜீவாவின் கோபத்துடன் கூடிய பலத்தில் உடைந்த கண்ணாடி அவனின் கையைப் பதம் பார்த்தது.

கையின் வலியைக் கூடப் பொருட்படுத்தாமல் வேகமூச்சுடன் அவள் அருகில் வந்தவன் “இப்படிப் பேசி என்கிட்ட அடி வாங்கிறாதே. போ அந்தப் பக்கம்” என எந்தப் பக்கம் தள்ளுகிறோம் என உணராமலேயே பிடித்துத் தள்ளினான்.

அவன் தள்ளிய பக்கம் தற்போது தான் அவன் உடைத்த கண்ணாடி டீப்பாயின் பக்கம். அதன் மேலேயே ஒரு பக்கமாக அப்படியே சாய்ந்தாள். கையை மடக்கி விழுந்ததால் கைமுட்டியில் இருந்து விரல்கள் வரைக்கும் நன்றாக ஒரு கீறி விட்டது உடைந்த கண்ணாடி.

வேதனை தாங்காமல் “அம்மா” என்ற அவளின் அலறல் கேட்கவும் , இத்தனை நேரம் ‘தான் என்ன செய்கிறோம்?’ எனத் தெரியாமலேயே வெறி பிடித்தவன் போல் நடந்து கொண்டிருந்தவன், அவளின் அலறல் சத்தத்தில் பயந்து போய் வேகமாகத் தனுவின் அருகில் வந்து கையில் ரத்தம் வடிய எழுந்து நின்றிருந்தவளிடம் வந்து ‘ஐயோ என்ன செய்துட்டேன் நான்’ எனப் பதறி துடித்தவன் “ஸ்ரீம்மு என்னாச்சுடா? அய்யோ எவ்வளவு ரத்தம்” என அரற்றிய ஜீவா தன் தலையிலேயே அடித்துக்கொண்டான்.

அவன் அவ்வாறு அடித்துக் கொள்ளவும் தன் வலியை மறைத்து அவனின் கையைப் பிடித்துத் தடுக்கப் பார்த்தாள்.

அப்போது எப்படி அவன் கோபத்தில் இருந்த போது நிதானம் இல்லாமல் நடந்து கொண்டானோ? அதே போல் இப்போது வேறு விதமான மனநிலையில் கட்டுப்பாடு இன்றி நடந்து கொண்டான்.

தன்னையே அடித்துக் கொண்டவன் திடீரெனத் தனுவை இழுத்து அணைத்துக் கொண்டவன் ஏதேதோ அரற்றிக் கொண்டே இருந்தான். அவனின் இது போல நிமிடத்திற்கு நிமிடம் மாறும் செய்கைகளைப் பார்த்து திகைத்து போனாள் தனுஸ்ரீ.

அவனின் அணைப்பு இதமாக இருந்தாலும் அதையும் மீறி இருந்த கை வலியில் அவளையும் அறியாமல் ‘ஆ அம்மா!” என அனத்திவிட்டாள்.

அந்த வலியிலும் ‘அவனுக்கும் தானே அடிப்பட்டது வலிக்கவில்லையா? இப்படி நிற்கிறார்?’ என நினைத்து விலகப் பார்த்தாள்.

அவள் விலக விலக அவனின் அணைப்பின் அழுத்தம் கூடிக் கொண்டே போனது.

“அய்யோ ரஞ்சன் என்னாச்சு உங்களுக்கு? விடுங்க என்னை வலிக்கிது” என விடுபட முயன்று கொண்டே சொன்னாள்.

அவள் வலி எனவும் பட்டென விட்டவன் கையைப் பிடித்துப் பார்த்தான். ரத்தம் வந்து கொண்டே இருக்கவும் “சை முட்டாள்” எனத் தன் தலையில் தட்டிக்கொண்டவன், வேகமாக ஓடிச் சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான்.

பஞ்சை வைத்து ரத்தத்தைத் துடைத்து ரத்தம் வெளியே வராமல் இறுக கட்டுப் போட்டான்.

அவன் செய்வதை எல்லாம் வேதனையுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனு “அப்படியே உங்க கைலேயும் கட்டுங்க” என்றாள்.

“ஹ்ம்ம் எனக்கென்ன?” எனச் சொல்லிக் கொண்டே அப்போது தான் அவனின் கையை கவனித்தான். ஜீவாவின் கையிலும் ஆழமான காயம் தான். அதை கூட இவ்வளவு நேரம் உணராமல் உணர்ச்சி அற்று இருந்திருக்கிறான்.

இவ்வளவு நேரம் இவர்களா அப்படிக் கத்திக் கொண்டிருந்தார்கள் என நினைக்கும் வண்ணம் இருவர் குரலும் அப்படியே மாறி இருந்தது.

சீரற்று வந்து கொண்டியிருந்த அவனின் மூச்சுக்காற்று தனுவிற்கு அடிப்பட்ட அதிர்ச்சியினாலோ என்னவோ இப்பொழுது சீராகியிருந்தது.

“ம்ம் கட்டுங்க” என்றவள் “இல்ல கொண்டாங்க நானே கட்டி விடுறேன்” என ஒரு கையாலேயே அவனின் காயத்தைத் துணிக்கொண்டு கட்டி விட முயற்சி செய்தாள்.

அவளைத் தடுத்து தானே ஒற்றைக் கையால் கட்டு போட்டுவிட்டு “கிளம்பு ஹாஸ்பிடல் போகலாம்” என ஜீவா சொல்லிக்கொண்டு இருக்கும் போது வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது.

‘இந்த நேரத்தில் யார்?’ என்ற கேள்வியுடன் மணியைப் பார்த்தான் மணி எட்டு ஆகியிருந்தது. தன் தம்பிதான் திரும்பி வந்து விட்டானோ? என நினைத்துக் கொண்டே தனுவை பார்த்தான்.

உடனே அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் அடிப்பட்ட கையைப் பார்க்கும் பாவனையைக் காட்டினாள்.

‘என்னயிது முகத்தைக் கூடப் பார்க்க மாட்டீங்கிறா? ஒருவேளை அவளின் அம்மா, அப்பாவிடம் நான் நைட் வராததைச் சொல்லி அவர்கள் வந்திருப்பார்களோ?’ என நினைத்தவன்,

‘இப்படி இரண்டு பேர் கையில் இருக்கும் கட்டையும் வீடு இருக்கும் நிலையையும் பார்த்தால் என்ன சொல்வார்களோ?’ என நினைத்து கதவை திறக்க செல்ல தயங்கினான்.

அதற்குள் மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது. அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே இல்லை தனுஸ்ரீ. அவளை ஒரு பார்வை பார்த்தவன் ‘இதற்கு மேலும் நின்று கொண்டிருப்பது சரியில்லை’ எனப் போய்க் கதவை திறந்தான்.

கதவை திறந்துவிட்டு வந்தவர்களை ‘வாங்க’ எனக் கூட அழைக்க மறந்து வாசலில் நின்றிருந்தவர்களைப் பார்த்து அதிர்ந்து நின்றான் ஜீவரஞ்சன்.