மஞ்சள் மலரே 7

வெகு நாட்களுக்கு பின் தங்கை பேசியதைக் கேட்டு  மனம் குளிர்ந்து போனான் அந்த அண்ணன். தாய் , தந்தை இருக்கும் வரை அண்ணனும் தங்கையும் அடித்த கொட்டம் எல்லாம் எங்கோ நினைவுகளாக மாறிப் போயின. தந்தையின் உயிரற்ற உடலையும் உணர்வற்று கிடக்கும் தாயையும் கண்ட பின் அவள் பேசற்று போனாள். மகிழ்ச்சியைத் துடைத்தெடுத்தது போல  வலம் வந்துக் கொண்டிருந்தாள்.  அவனும் அதே நிலையிலே இருக்க, தன் தங்கையை மாற்றும் பொறுப்பை  மறந்து போனான். ஆறுதல் வார்த்தைகள் கூட கிடைக்காமல் அனாதையாகத் தவிக்கின்றனர் அவ்விரு கூட்டுப் பறவைகள்.

“டின்னர் ரொம்ப டேஸ்ட் இருந்தது தேங்க்ஸ்” என்று முழு சாப்பாட்டையும் சாப்பிட்டு விட்டுப் போகும் தங்கையை பார்த்துக் கொண்டே இருந்தான் யாழ்வளவன். அவள்  சென்றதும்  அவன் கமழியைப் பார்க்க, அவளும் அவனை போல கண்கள் கனிய அக்கறையோடு  யாழினியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையை உணர்ந்தவனுக்கு உள்ளுக்குள் கலவையான உணர்வுகள் ஊற்றெடுத்தன.

தொண்டை சரி செய்தவன், “விஷ்வா “என்று அழைக்க, அவனோ தங்கை செட்டிமென்டில் விழுந்த  பாஸை(அவனை) தான் வெறித்துக் கொண்டிருந்தான். நிச்சயம் பாஸ் கமழியை ‘திட்டி சமைக்கக் கூடாது’ என்று சொல்வார், மறுபடியும்  சமயலறைக்கு நானே ராஜா’ என்று எண்ணியவனுக்கு லாரி லாரியாக வளவன் கொட்டிய  மண்ணைக் கண்டு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஆண்பிள்ளைகள் அழக் கூடாது என்று தன்னைத் தேற்றிக் கொண்டு நின்றவனிடம், ” இனி கமழியே சமைக்கட்டும் நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணு” என்றவன் அவள் புறம் திரும்பி, ” நீ இங்க சமைக்க வரல, அதை நியாபகத்துல வச்சிட்டு வேலய பாரு. சமைக்கறதுக்கும் தனியா அமெளண்ட் கிரிடெட் ஆகும்…” என்று  உண்ண ஆரம்பித்தான். ‘இவன் சமைக்க சொல்றானா? இல்ல வேணாங்கறானா? சரியான குழப்பவாதியா இருப்பான் போல’ என்றெண்ணிக் கொண்டு நின்றாள். அவனும் உண்டு முடித்து  எழுந்து சென்றுவிட, பொன்னியை அமர சொன்னவள், சோகத்தின் உருவமாகஇருக்கும் விஷ்வாவைக் கண்டு  பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள், “வா விஷ்வா வந்து சாப்பிடு !”என்றாள் சப்பாத்தியை தன் தட்டில் போட்ட படி.

“எனக்கு எதுவும் வேணாம்” என்று சிறு பிள்ளையை போல  முகத்தைத் திருப்பியவனைக் கண்டு மலர்ந்தவள், ” என்ன விஷ்வா, ஏன் சாப்பாடு வேணாம், பசிக்களையா? “என  பாவம் போல கேட்டவளை திரும்பி முறைத்தவன் அவள் சப்பாத்தியையும் குருமாவை குழப்பி அடிப்பதைக் கண்டு அவனுக்கு எச்சில் ஊறியது, “பசிக்கிது தான்… ஆனாலும்…” வேண்டாம் என்று சொல்ல அவனுக்கு மனமில்லை அதே  நேரம் தன் வேலை  மாறிப் போனதை  எண்ணிக்  கவலையாக இருந்தது.

“இப்படி உட்காரு விஷ்வா !”என்றாள். அவனும் அமர, அவனுக்கு உணவை வைத்த படி. “ஒரு வருஷம் உனக்கு சமைக்க நான் கத்துத் தர்றேன். அதுக்கு அப்புறம் நீ தான் இங்க சமையல்காரன் என்ன!”என்றதும் அவளை அதிசயமாக பார்த்தவன், “அப்ப நீ?”
“ஒரு  வருஷம்  நான் இங்க தான் இருப்பேன். இந்த ஒரு வருஷத்தில நான் எப்படியாவது வளர் அம்மா குணப்படுத்திடனும்னு முடிவோட இருக்கேன். அவங்க எழுந்துட்டாங்கன்னா அப்போ எனக்கு என்ன வேலை இருக்கும் இங்க  சொல்லு… ஸோ நான் போயிடுவேன். நீ சமயலறை ராஜா தான்” என்றாள். பொன்னியோ அவளை ஆழமாகப் பார்த்தார்

“நிஜமாவா” என்று கண்கள் மின்ன  கேட்டு, சப்பாத்தியை பிய்த்து ஒரு விள்ளல் உண்டவன்”ப்பா… ! எப்படி  இவ்வளவு டேஸ்ட் சமைக்கற ? எனக்கு மட்டும் வரவே மாட்டிக்கிது, நானெல்லாம் சமையல் வைத்தியோட மகன் சொல்லிக்க ஷேம்மா இருக்கு?” என்றான்.

“யாரு சமையல் வைத்தி?”

“தம்பியோட அப்பா தான். அவர் தான் இங்கச் சமையல்காரரா இருந்தார் அருமையா சமைப்பார். ஆனா அவர் இறந்துட்டார். அவருக்கு  தம்பி மட்டும் தான் உறவு.  அவர் இறந்ததும்  அம்மா தம்பியை கூட்டி வந்து வச்சிக்கிட்டாங்க”

“இன்னொரு மகனா !”என்றான் அவரது(வளர்) நினைவில். வளரை எண்ணி அவள் உள்ளம் குளிர்ந்தாள்.மூவரும் நட்போடு பேசி உண்டு முடித்துவிட்டு உறங்கச் சென்றனர்.

அறையில் தண்ணீர் இல்லாமல்  போக நீர் குடுவையுடன் வெளியே வந்தவள், எதர்ச்சையாக யாழினி வளவனின் அறைக்குள்  செல்வதைப் பார்த்து நின்றாள். பின் தோளை குலுக்கி விட்டு அங்கிருந்து நகற  எண்ணியவள் மீண்டும் நின்றாள்.  சென்ற நொடியே முகத்தை சோர்வாக வைத்துக் கொண்டு வரும் யாழினியைப் பார்த்தாள். அவளைப் பார்க்க அவளுக்கு அவள் மேல் கனிவும்  வளவன் மேல் ஆத்திரமும் வந்தது.

‘தங்கச்சிக்கு கூட பேச நேரம் இல்லையாமா இவனுக்கு, சரியான சேடிஸ்ட்’-என்று முணங்கிக் கொண்டவள்,  யாழினிடம் சென்று பேசு என்று ஊந்திய உள்ளத்தை அடக்கி விட்டு அறைக்குள் நுழைந்தவள், வளரிடமே அவரது மகனைத் திட்டினாள்.

“என்ன பிள்ளைகளோ உங்க பிள்ளைகள். ஒன்னும் கருப்புப் பொட்டிய தட்டிட்டே  இருக்கு. இன்னொன்னு  ரூமே கதினு கிடக்கு, மனுச மக்கள் பார்த்து சிரிச்சி பேச வேணாமா? என்னவோ ! உங்க பையனுக்கு ஒரு பெண் ரோபோவ  தான் கல்யாணம் பண்ணி வைக்கணும். ரெண்டத்துக்கும்  சரியா ஒத்து போகும்…”என்றவள் அதை எண்ணிப் பார்த்து சிரித்து கொண்டாள்.

மேசையில் கிடந்த தன் தந்தையின் நாட்குறிப்பை எடுத்தவள் திறந்துப் பார்க்க, சிறு வயதிலிருந்து கடைசியாக எடுத்த புகைப்படம் வரைக்கும் அதில் இருக்க, அதைப் பார்த்து வருடியவள், தந்தை எழுதிய பக்கத்தைப் புரட்டி, வளருக்கு கேட்கும் விதமாக  சத்தமாக வாசிக்கத் தொடங்கினாள்.

நாராயணன் லட்சுமிதேவிக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள், வசுந்தரா… அவளுக்கு பின் ஐந்து வருடங்கள் கழித்து பிறந்த இரட்டையர்கள் தான் யாழ்மாறன், வளர்மதி. ஆண் , பெண் என இரட்டையர்கள் பிறந்தார்கள்.

இருவரும் உடன் பிறந்தவர்கள் போலில்லாமல் நண்பர்களைப் போல திரிந்தனர்.  ஊரில் இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள் கணக்கில் அடங்காதவகைகள். அவற்றை எழுதினால் ஒன்றல்ல நூற்றுக்கு  மேற்பட்டுச் செல்லும் நாட்குறிப்புகளின் தேவை என்று மாறனே குறிப்பிட்டு இருந்தார். அவர் அதில் மறக்க முடியாத சம்பவங்களையே நிறைய எழுதி வைத்திருந்தார்.

அன்று தான் வளர்மதி பருவமங்கையாக மாறின நாள், இரத்த கசிவும் வயிற்று வலியிலும் பயந்து போனவள் கத்தி ஊரைக் கூட்டி அவளே அறிவித்து  விட்டாள்.

அவளது தாய் அவளை அதட்டி உருட்டி ஓரமாக அமர வைத்து உலக்கையைப் போட்டு, ‘இதைத் தாண்டா கூடாதென ‘ எச்சரிக்கை விடுத்துச் அப்பட்டாம் பூச்சியை சிறை செய்து வைத்திருக்க, சோகத்தின் வடிவாக அமர்ந்து விட்டாள்.  நாளுக்கு நாள் முட்டை பால் களி என உண்ணக் கொடுத்தாலும் சிறையில் அடைத்து வைத்திருப்பது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது.

தன் தமயனோடு ஆண்பிள்ளை போல சுற்றித் திரிந்தவளுக்கு , இதெல்லாம் சற்று கடுப்பாகவே இருந்தது . தன் தோழி, தங்கை உடன் வாரது அவனும் வீட்லே சிறைப் பறவையாகி விட்டான். என்ன தான் ஆண் மகன் என்றாலும் அவனையும் கூட வளரை நெருங்க விடவில்லை அவளது அன்னை. வீட்டுக்குள்ளே இருவரும் பிரிந்து இருப்பது வேதனையாக இருந்தது.

சடங்கிற்கு சொந்த பந்தங்களை அழைக்கச் சென்றனர் நாராயணனும் லட்சுமி தேவியும்.  தன் மூத்த மகளை காவலுக்கு வைத்து விட்டு தான் சென்றனர் இருவரும். அவர்கள் வீட்டில் இல்லை என்றதும் வசுந்தராவின் காவலை மீறியும் வளரின் அருகே அமர்ந்து கொண்டு, “வா வளரு ! நாம வெளிய போலாம்… நீ இல்லாம நல்லவே இல்ல ! போதும் நீ இங்கனே உட்கார்ந்து இருக்கிறது வா போலாம்” என்று அவள் கை பிடித்து இழுத்தான் மாறன். அவளும் தாவணியை கைலியைப் போல கட்டிக் கொண்டு எழுந்தவளை தடுத்து நிறுத்தினாள் வசுந்தரா, “அடியே  எங்கடி கிளம்பிட்ட?” அதிர்ந்தவள் கேட்டாள்.

” போக்கா ! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல நான் யாழ் கூட வெளிய போறேன்”திமிறியவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள், “இந்த நேரத்துல நீ வெளிய போனா காத்து கருப்பு வந்து பிடிக்கும் ஒழுங்கா சடங்கு முடியற வர இங்கனே தான் உட்கார்ந்து இருக்க” என்று மிரட்ட, அதற்கு சலித்துக் கொண்டவள், “இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே உட்கார்ந்து இருக்கிறது.  வீட்டுக்குள்ள கூட சுத்த விட மாட்டிக்கிறீங்க…போங்கடா நீங்களும் உங்க சம்பிரதாயங்களும்”என நொடித்துக் கொள்ள  வசுந்தரா கலகல வென சிரித்தாள்.அதே சமயம் யாழ் ஏதோ யோசனையில் இருக்க வளரும் வசுந்தராவும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவளை உலுக்கினார்கள்.

“என்ன மாறா உனக்கு யோசனை ?”
அவனை தட்டி கேட்டாள் வசுந்தரா.

“இல்லக்கா இவளும் நானும் ஒண்ணாதானே பிறந்தோம்… இவ பெரிய மனுஷி ஆகிட்டானா அப்போ நானும் பெரிய மனுசனா ஆகிட்டேன்னு தானே அர்த்தம் , எனக்கு மட்டும் ஏன் இந்த சடங்கு எல்லாம் வைக்கல?” அதி முக்கிய சந்தேகத்தை கேட்டு விழி பிதுங்க வைத்தான் யாழ்மாறன்..

“அடேய் தம்பி ! இந்த சடங்கெல்லாம் பொண்ணுங்களுக்கு  தான் வைப்பாங்க பசங்களுக்கு வைக்க மாட்டாங்கடா ” என்றிட, “ஏன் பசங்களுக்கு வைக்க மாட்டாங்க?” அவளை விடாது கேட்டு தொந்தரவு செய்ய, ” ஏன்னு எனக்கு தெரியாது நீ அப்பா கிட்ட கேட்டுக்கோ ! ஆனால் பொண்ணுங்களுக்கு தான்  வைப்பாங்க” என்று தந்தையை சொல்லி அக்கேள்வியிலிருந்து தப்பித்தவள் மாறனின் அடுத்த  கேள்வியில்  திணறிப் போனாள்.

“சரி அத விடுக்கா, இவ எப்படி பெரிய மனுஷி ஆனா, எத வச்சி இவ வயசுக்கு வந்துட்டானு சொல்றீங்க?” எனக் கேட்டு வசுந்தரா வை கடுப்படித்தான். வளர் அக்கேள்வியில் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, வசுந்தரா தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். அவனும் விடாது அவளை நச்சரிக்க, ” மாறாறாறா… உனக்கு அறிவியல் பாடம் இருக்குல. உங்க மிஸ்  உனக்கு சொல்லி தரலையா?” எனக் கேட்க,

“எது இவனா, சைன்ஸ் புக் எடுத்தாலே இவ சொர்க்கம் போயிடுவான் இவனா மிஸ் சொல்றத கேட்க போறான் போக்கா !” என்று அவனை வார, ” ஆமா ஆமா, இவ மட்டும் அப்படியே கொட்ட கொட்ட விழிச்சி கண்ணும் கருத்துமா கேட்டுப்பா, நானாவது  அறிவியல் புத்தகம் எடுத்தாதான் தூங்குவேன், இவ  எந்த புத்தகத்தை எடுத்தாலும்  தூங்கி வழிவா ! “இப்போது அவன் அவளை வாரினான். இருவரும் முறைத்து கொள்ள, இருவரது கேலியிலும் வசுந்தரா  வயிற்றை பிடித்துக்  கொண்டு சிரித்தாள்.
அந்த நாள் அப்படியே கழிய வளரின் சடங்கு நாளும் வந்தது.  திருவிழாவை போல இருந்தது அவளது சடங்கு . அந்தச் சடங்கில் தன் தந்தையுடன் வந்த செல்லக்கண்ணுவின் கண்ணுக்குள் விழுந்தாள் வளர். அவனது விழுங்கும் பார்வையில் அசூசை உணர்ந்தவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனால் அவனோ அவள் தான் இந்த ஜென்மத்தில் என் மனைவி என்று தீர்மானித்துக் கொண்டான்.

சடங்குகள் எல்லாம் முடிந்த பின் வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். மாறனின் சந்தேகத்தை அறிவியல் ஆசிரியர் தீர்த்து வைக்க,இருவரும் அசட்டு தனமாக சிரித்து வைத்தனர்.  மாறனின் பாதுகாப்பு வட்டத்துக்குள் வந்து விட்டாள் வளர் பழைய சேட்டைகள் இல்லாவிட்டாலும்   சேட்டைகள்  செய்து கொண்டு  தான் இருந்தனர் இருவரும்.

தந்தை எழுதினதை படித்தவள் கண்களில் நீர் வர சிரித்து மாண்டாள்.
‘ஐயோ ! எங்கப்பாவையும் உங்களையும் நினைச்சி  என்னால சிரிப்ப அடக்க முடியல !  உங்களை போல நானும் சொல்றதுல தப்பே இல்ல .. நானும் பல சேட்டைகள் பண்ணிருக்கேன்… அப்பா தான் வந்து என்னை மிஸ் கிட்ட இருந்து பேசி கூட்டிட்டு போவார். ஆனா மறுநாள் மறுபடியும் சேட்டை செய்ய ஆரம்பிச்சிடுவேன்.. ரொம்ப மிஸ் பண்றேன் என் ஸ்கூல் டேஸ்ஸ” என்றவளின் உதட்டில் தவழ்ந்து சிறு முரல். அவளது கண்கள் 
தூக்கம்  கேட்டு நிற்க, வளரிடம்,” குட் நைட் அத்தை !” என்று கூறிவிட்டு தரையில் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் விடியவே காலை நேரமாக எழுந்த கமழி, குளித்து  முடித்து விட்டு, கீழ இறங்கியவள், பொன்னியின் கையில் தவழ்ந்த  மஞ்சள் ரோஜாக்களையும் கொஞ்சம் மல்லிகையும் கண்டு குதித்த படி வந்தாள்.
பொன்னிக்கு “நன்றி” உரைத்து விட்டு அதை பெற்றுக்கொண்டவள் பூஜை அறைக்கு சென்று  மல்லிகை பூவை கடவுள் படத்திற்கு போட்டு கும்பிட்டவள், மஞ்சள் ரோஜாக்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வளர்  அறைக்கு சென்றாள், அவர் அருகே இருக்கும் பிளவர் வாசில்  வைத்தாள். அத்தனை சாளரங்களை திறந்து வைக்க, சில்லென்ற  அதிகாலை காற்று  அவர்கள்  இருவரையும் தழுவியது. அவள்  தேகம் சிலிர்க்க, தன் அத்தையைக் கண்டாள்..

“குட் மார்னிங் அத்தை” என்று குதூகலத்தோடு  சொன்னவள், அவர்  நெற்றியில் இதழை பதித்து விட்டு  கீழே சென்றாள்.  விஷ்வா அவளுக்காக காஃபி காப்புடன் நிற்க, சிநேகித புன்னகையுடன் எடுத்துக் கொண்டவள், “தேங்க் யூ விஷ்வா அண்ட் வெறி குட் மார்னிங் ” என்று காபியை ஒரு மிடறு சுவைத்தவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி உதட்டை வளைத்து, ” ம்ம்.. தேறிட்ட மேன் நீ ! நேத்து  சொல்லி கொடுத்தப் படியே போட்டிருக்க, ம்ம். நீ சமத்து பிள்ளை தான் சீக்கிரமா எல்லாத்தையும் கத்துப்ப ! ” என்று பாராட்ட  காலரை தூக்கி விட்டு கொண்டு கெத்தாக நின்றான். தலையில் அடித்து கொண்டவள் அவனை இழுத்துக் கொண்டு போனாள் சமயலறைக்கு. காலை உணவை தயாரித்தவள் , யாழினிக்கும் மட்டும் மதிய உணவை சமைத்தாள். காலை உணவையும் மதிய உணவையும் பேக் பண்ணி வைத்தவள், கையோடு எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சரியாக யாழினியும்  கிளம்பி தயாராகி வந்தாள்.

எப்போதும் உணவு மேசையில் அனாதையாக இருக்கும் லஞ்சு பேக் இன்று இல்லாமல் போக குழப்பத்தோடு உணவு மேசைக்கு அருகில் வந்தாள். அவள் அருகே வந்த கமழி ” குட் மார்னிங் யாழு ! இந்தா உன் லஞ்ச் ” என்று கையில் கொடுக்க, அவளை தன் சிறிய விழிகளை  பெரிதாய் விழித்தவள், வைத்த கண் வாங்காமல் நின்றாள்.

“இந்தா வாங்கிக்கோ !” என்று மீண்டும் நீட்ட வாங்கிக் கொண்டாள்,”மிச்சம் வைக்காமல் சாப்பிடணும் என்ன!” என்றவளின் வார்த்தை  தாயை நினைவூட்ட , கலங்கிய விழிகளை காட்டாமல் சென்றவள் மீண்டும் அவளை திரும்பி பார்க்க “டாட்டா” என்று கையை அசைத்தாள்.அவளும் கையை அசைத்து விட்டு காரில் ஏறினாள். யாழுவிற்கு புது உற்சாகம் கிடைத்து போல இருந்தது.

அடுத்து யாழ்வளவன்  கீழ் இறங்கி வர, யாருமில்லை . உணவு மேசையில் வந்து அமர, வழக்கம் போல அவனுக்கு உணவு பரிமாறும் பெண் மட்டும் வந்து பரிமாற,  முதல் வாய் வைத்தவனுக்கு தங்கை  சொன்னது நினைவில் வந்தது.  கண்கள் அனிச்சையாக கமழியை தேடியது. அதே நேரம் பொன்னியின் அங்கு வந்தார்.

“பாப்பா  ஸ்கூல் போயிட்டாளா க்கா ?” பொன்னுயிடம் கேட்டான் ” ம்ம்… போயிட்டா தம்பி” என்றார்.

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று  இதுவரை கேட்காத கேள்வியை கேட்டு அவருக்கு ஹார்ட் அட்டாக்கையும் வர வைத்தான் வளவன்.

“இல்லத் தம்பி கமழி பாப்பா அம்மாவை பார்த்துகிட்டு இருக்கு அது வந்ததும் சாப்பிடணும் தம்பி” தன் அதிர்ச்சியை மறைத்தபடி கூறினார” ஓ…” என்றவன், 
அன்னை இருக்கும் அறையின் பக்கம் பார்த்து விட்டு மீண்டும்  உண்ண ஆரம்பித்தான்.

பின் அலுவலகம் கிளம்ப எத்தனித்தவனின் மனது பிசைய, அன்னையின் அறையை நோக்கிச்  சென்றவனை மேலும் ஈர்த்தது கமழியின் காந்தக்குரல்.

வெதுவெதுப்பான நீரில் துணியை முக்கி நீரை பிளிந்தவள், வளரின் கைகள் கால் உடம்பு என துடைத்துக் கொண்டிருந்தவளை
விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் யாழ் வளவன்.